Friday, March 28, 2014

பாகம் 2 பகுதி2 அத்தியாயம் 10: நிலை-மூலதனம், சுழல்-மூலதனம் இவற்றின் தத்துவங்கள். பிசியோகிராட்டுகளும் ஆதாம் ஸ்மித்தும்

நில-மூலதனத்துக்கும் சுழல்-மூலதனத்துக்கும் இடையிலான வேறுபாட்டை ஆரம்ப முன்னீடுகள், வருடாந்திர முன்னீடுகள் அகியவற்றுக்கு இடையிலான வேறுபாடாக கெனே கருதுகிறார். இந்த வேறுபாடு உற்பத்தி நிகழ்முறையில், நேரடியாக ஈடுபடுத்தப்படும் மூலதனமாகிய திறனுடை-மூலதனத்தில் இருப்பதாகவும் அவர் பிழையற்றவாறு சுட்டிக் காட்டுகிறார். 

திறனுடை-மூலதனத்தின் இந்த இரு கூறுகளுக்கும் இடையிலான வேறுபாடு அவை பூர்த்தியான பண்டத்தின் மதிப்பில் சேரும் விதத்திலான வேறுபாடே ஆகுமென  --- ஆகவே அவற்றின் மதிப்பு உற்பத்திப் பொருளின் மதிப்போடு சேர்ந்து சுற்றியோடும் விதத்திலான வேறுபாடே ஆகுமென ---- ஆகவே அவற்றின் மாற்றீடு அல்லது மறுவுற்பத்தி நடைபெறும் விதத்திலான வேறுபாடே ஆகுமெனக் கெனே பிழையற்ற முறையில் விளங்க வைக்கிறார். ஒன்றின் மதிப்பு ஆண்டுக்கு ஒரு முறை முழுமையாக மாற்றீடு செய்யப்படுகிறது. மற்றதின் மதிப்பு இன்னும் அதிக காலத்துக்கு ஒரு முறை மாற்றீடு செய்யப்படுகிறது.

இதன் பின் ஆதாம் ஸ்மித் சாதித்ததெல்லாம் இந்தக் கருத்தினங்களை பொதுமைப்படுத்தியதுதான். 

புரள்வுகளைப் பொதுப்பட வெவ்வேறு கால அளவுகள் கொண்டவையாகப் பாகுபாடு செய்து, சுழல்-மூலதனப் புரள்வுக்கு ஆகும் காலம் எவ்வளவாயினும், ஓராண்டு ஆயினும் அதற்கு அதிகமாயினும் குறைவாயினும், நிலை-மூலதனப் புரள்வு ஒவ்வொன்றும் ஒன்றுக்கு மேற்பட்ட சுழல்-மூலதனப் புரள்வினைக் கொண்டதாகும் என்று காட்டப்படுகிறது.

கொச்சையான அனுபவவாத [empirical] முறையில் ஸ்மித் இந்த ஆராய்ச்சியைத் தொடங்குகிறார்; இதனால் ஆரம்பம் முதற்கொண்டே, அது தெளிவற்றதாய் இருக்கிறது. 

மதிப்பானது திறனுடை-மூலதனமாக முதலீடாகா விட்டாலும், அதன் உடைமையாளருக்கு மூலதனமாக --- உதாரணமாய் வட்டி வருவாய் அளிக்கும் மூலதனமாகவும், வணிக மூலதனமாகவும் இன்ன பிறவாகவும் --- செயல்படுவதற்கான வழி பற்றிய பிரச்சினை எழுகிறது. 

ஆதாம் ஸ்மித் சொல்வதெல்லாம் வேளாண்மை, தொழில், வாணிபம் ஆகியவற்றில் மூலதனத்தை ஈடுபடுத்தலாம் என்பதற்கு மேல் அவர் மூலதனத்தின் வெவ்வேறு முதலீட்டுத் துறைகள் பற்றியே பேசுகிறார்.

முன்பு மூலதன-மதிப்பு திறனுடை-மூலதனத்தின் வடிவில், அதாவது உற்பத்தி நிகழ்முறைக்கு வேண்டிய அந்த விசேஷ வடிவில்,   அமைந்து செயல்பட்டது; இப்போது அது சரக்கு-மூலதனமாகவும் பண-மூலதனமாகவும், அதாவது சுற்றோட்ட நிகழ்முறைக்கு வேண்டிய விசேஷ வடிவங்களில் அமைந்து செயல்படுகிறது. ஆகவே இனி அது நிலை-மூலதனமோ சுழல்-மூலதனமோ அல்ல. கச்சாப் பொருளும் துணைப் பொருளும் அதாவது சுழல்-மூலதனம் சேர்க்கிற மதிப்பு கூறுகளுக்கு இது பொருந்துவது போலவே, உழைப்புச் சாதனங்களின் தேய்மானம், அதாவது நிலை-மூலதனம் சேர்க்கிற மதிப்புக் கூறுகளுக்கும் பொருந்துகிறது. நிலை-மூலதனத்துக்கும் சுழல்-மூலதனத்துக்கும் இடையிலான வேறுபாட்டை நோக்கி இவ்வழியில் நாம் ஓரடி கூட நெருங்கி முன் செல்ல முடியவில்லை.

சுழல்-மூலதனமாய் முன்னீடு செய்யப்படும் மூலதன-மதிப்பைப் போலவே, நிலை-மூலதனமாய் முன்னீடு செய்யப்படும் மூலதன-மதிப்பும் சுற்றியோடுவது உற்பத்திப் பொருள் மூலமாகத்தான். இரண்டுமே சரக்கு-மூலதனத்தின் சுற்றோட்டத்தால்தான் பண-மூலதனமாக மாறுகின்றன. வேறுபாடு எங்கிருந்து உதித்தெழுகிறது என்றால் நிலை-மூலதனத்தின் மதிப்பு சன்னம் சன்னமாக சுற்றியோடுகிறது, ஆகவே குறுகிய அல்லது நீண்டகால இடைவெளிகளில் அதனை சன்னம் சன்னமாகவே மாற்றீடு செய்யவும், தசையுருவில் அதனை மறுவுற்பத்தி செய்யவும் வேண்டும் என்ற உண்மையிலிருந்தே.

சுற்றோட்ட மூலதனத்தைத்தான், அதாவது சுற்றோட்ட நிகழ்முறைக்கு ஏற்ற வடிவங்களில் நிலவும் மூலதன-மதிப்பைத்தான் (சரக்கு-மூலதனம், பண-மூலதனம்) ஆதாம் ஸ்மித் இங்கே சுழல்-மூலதனம் என்கிறார் என்பது சற்றும் பொருத்தமற்ற உதாரணத்தை அவர் தேர்ந்தெடுப்பதிலிருந்தே தெளிவாகி விடுகிறது. அதாவது வணிக மூலதனத்தை அவர் உதாரணமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்.

சிறிது கூட திறனுடை-முலதனமாகச் செயல்படாத ஒரு மூலதன வகையை உதாரணமாகக் கொண்டு ஆய்வினைத் தொடங்குவது எவ்வளவு அபத்தமானது என்பதை அவரே இதற்கு அடுத்தாற்போல் எடுத்துரைக்கிறார்.

ஆனால், பணமும் சரக்கும் ஒன்று மற்றொன்றாய் உருமாறுவதன் மூலமே, மதிப்பு ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்துக்கு மாறுவதாலேயே எப்படி இலாபம் கிடைக்க முடியுமென்பது புரியாப் புதிராகி விடுகிறது. ஸ்மித் சுற்றோட்டத் துறையில் மட்டும் இயங்குவதாகிய வணிக மூலதனத்திலிருந்து தொடங்குவதால் இந்த புதிருக்கு விளக்கம் கூறுவது முடியாத காரியமாகிவிடுகிறது.

ஸ்மித் தமது உதாரணங்களில் "தொழிற்கருவிகளுக்கு" நிலை-மூலதனம் என்றும், கூலிக்காகவும் துணைப்பொருட்கள் உள்ளிட்ட கச்சாப் பொருட்களுக்காகவும் செலவிடப்படும் மூலதனப் பகுதிக்கு ("உற்பத்திப் பண்டத்தின் விலையின் மூலம் இலாபமும் சேர்ந்து திரும்ப வரும்") சுழல்-மூலதனம் என்றும் பெயர் சூட்டுகிறார்.

ஆதாம் ஸ்மித் வகுத்துள்ள இலக்கணப்படி, தாமிரச் சுரங்கத்தில் ஈடுபடுத்தப்படும் மூலதனம் முழுவதும் நிலை-மூலதனம் மட்டுமே ஆகும்.

நூலாகிய உற்பத்திப் பொருள் கைமாறும் போது அதன் கச்சாப் பொருளாகிய பருத்தியும் கைமாறுகிறது; உற்பத்தி நிகழ்முறையிலிருந்து நுகர்வு நிகழ்முறைக்குச் செல்கிறது. ஆனால் பருத்தியானது திறனுடை-மூலதனத்தின் கூறாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வரை, அதன் அதிபர் அதனை விற்பதில்லை; அவர் அதனை உற்பத்தி நிகழ்முறைக்கு உட்படுத்துகிறார்; நூலாக்குகிறார். அது அவரை விட்டு விலகுவதில்லை. ஸ்மித் சொல்லும் அந்த தப்பும் தவறும் வாய்ந்த அந்தக் கேவலச் சொற்களில் சொல்வதானால், பருத்தியின் அதிபர் "அதை விலகிச் செல்ல வைத்தோ, அதிபர் மாற்றம் பெறச் செய்தோ, சுற்றியோட வைத்தோ" இலாபம் பெறவில்லை. அப்படி அவரது இயந்திரங்களை அவர் சுற்றியோட விடுவதில்லையோ, அதே போல் அவரது மூலப் பொருட்களையும் அவர் சுற்றியோட விடுவதில்லை. நூற்பு இயந்திரங்களையும் ஆலைக் கட்டடங்களையும் போலவே அவையும் உற்பத்தி நிகழ் முறையில். நிலைத்திருப்பவைதாம்.

"வருங்காலத்தில் இலாபம் சம்பாதிப்பதற்காக அது" (மூலதனம்) "ஈடுபடுத்தப்படுமானால், அவரிடமே (ஈடுபடுத்துகிறவரிடமே) இருந்து வருவதன் மூலமோ, அவரை விட்டுச் செல்வதன் மூலமோ அது இந்த இலாபத்தை சம்பாதிக்க வேண்டும். முன் சொன்னதில் அது நிலை-மூலதனம்; பின் சொன்னதில் அது சுழல்-மூலதனம்."

இலாபம் பற்றிய கொச்சையான அனுபவவாதப் பார்வைதான் இங்கே யாவற்றுக்கும் முதலாய் நம் கண்ணெதிரே தெரிகிறது; இது ஆதாம் ஸ்மித்தின் மேலான ஆய்வறிவுக்கு முற்றிலும் முரணானது.

ஒரு சரக்கின் உற்பத்திக்காக முன்னீடு செய்யப்படும் மதிப்பு அந்தச் சரக்கை விற்பதன் மூலம் முழுமையாக மாற்றீடு செய்யப்படுகிறதா, சன்னம் சன்னமாக மாற்றீடு செய்யப்படுகிறதா என்பது, ஒரே தடவையில் மாற்றீடு செய்யப்படுகிறதா அல்லது பையப்பைய மாற்றீடு செய்யப்படுகிறதா என்பது மாற்றீடு செய்ய்ப்படும் முறையையும் காலத்தையும் தவிர வேறு எதையும் மாற்ற முடியாது. எப்படிப் பார்த்தாலும் இரண்டுக்கும் பொதுவாக இருப்பது --- அதாவது மதிப்பின் மாற்றீடு என்பதை  --- உபரி-மதிப்பின் படைப்பாக மாற்றி விட முடியாது. உற்பத்திப் பொருள் விற்கப்படும் வரை, அது சுற்றியோடத் தொடங்கும் வரை உபரி-மதிப்பு ஈடேற்றம் செய்யப்படுவதில்லை என்பதால் உபரி-மதிப்பு விற்பனையிலிருந்தே, சுற்றோட்டத்திலிருந்தே பிறப்பதாய்ப் பரவலாக நிலவும் கருத்தே இதற்கெல்லாம் அடிப்படையாகிறது. இங்கே இலாபம் வெவ்வேறு வழிகளில் பிறப்பதாய்ச் சொல்வதே, திறனுடை-மூலதனத்தின் வெவ்வேறு கூறுகள் வெவ்வேறு விதமாகப் பயன்படுகின்றன என்பதை, திறனுடைக் கூறுகளென்ற முறையில் அவை உழைப்பு நிகழ்முறையில் வெவ்வேறு விதமாகச் செயல்படுகின்றன என்பதைத்  தவறான முறையில் தெரிவிப்பதாகும். முடிவில், இந்த வேறுபாடு உழைப்பு நிகழ்முறை அல்லது மதிப்பின் தற்பெருக்க நிகழ்முறையிலிருந்து எழுவதாகக் கொள்ளாமல், திறனுடை-மூலதனத்தின் செயல்பாட்டிலிருந்தே எழுவதாகக் கொள்ளாமல், தனிப்பட்ட முதலாளிக்கு மூலதனத்தின் ஒரு பகுதி ஒரு விதத்திலும் இன்னொரு பகுதி இன்னொரு விதத்திலும் பயன்படுவதாகக் கொள்ளப்படுகிறது.

மறு புறம் கெனே இந்த வேறுபாடுகள் மறுவுற்பத்தி நிகழ்முறையிலிருந்தும் அதன் அவசியத் தேவைகளிலிருந்தும் எழுவதாகக் கூறினார். இந்த நிகழ்முறை தொடர்ச்சியாய் நடைபெற வேண்டுமானால், வருடாந்திர முதலீடுகளின் மதிப்பை வருடாந்திர உற்பத்தியின் மதிப்பிலிருந்து ஆண்டுதோறும் முழுமையாக மாற்றீடு செய்யவேண்டும். ஆனால் ஆரம்பத்தில் முதலீடாகிற மூலதனத்தின் மதிப்பை சன்னம் சன்னமாகவே மாற்றீடு செய்ய வேண்டும். ஆகவே, அதனை (அதே வகையைச் சேர்ந்த புதிய பொருளைக் கொண்டு) பல்லாண்டு காலத்தில், உதாரணமாகப் பத்தாண்டு காலத்தில் முழுமையாக மாற்றீடு செய்வதும், எனவே முழுமையாக மறுவுற்பத்தி செய்வதும் போதுமானவை. இவ்வாறு கெனேயுடன் ஒப்பிடுகையில் ஆதாம் ஸ்மித் மிகவும் பின் தங்கி விடுகிறார்.

ஸ்மித் சுழல்-மூலதனத்தை நிலை-மூலதனத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டும் போது, திறனுடை-மூலதனத்தின் அடக்கக் கூறுகளில் ஒன்றாகிய சுழல்-மூலதனம் உற்பத்திப் பொருளின் மதிப்பிலிருந்து முழுமையாக மாற்றீடு செய்யப்பட வேண்டியதும், எனவே அந்த உற்பத்திப் பொருளின் உருமாற்றங்களில் முழுமையாகப் பங்கு பெற வேண்டியதும் ஆகும், ஆனால் நிலை-மூலதனம் அப்படியல்ல என்ற உண்மையை அவர் வலியுறுத்தத் தவறி விடுகிறார்.

நிலை-மூலதனம் உற்பத்தி நிகழ்முறையிலிருந்து விலகாதிருப்பதாலும் சுழல்-மூலதனம் இதை விட்டு விலகிச் சுற்றியோடுவதாலும்தான் இலாபம் கிடைக்கப் பெறுகிறது என்ற முற்றிலும் தவறான விளக்கத்தின் காரணத்தாலும், மாறும்-மூலதனத்தின் புரள்வும் மாறா-மூலதனத்தினது சுழல்-பகுதியின் புரள்வும் வடிவத்தில் ஒத்திருக்கும் காரணத்தாலும், மதிப்பின் தற்பெருக்க நிகழ்முறையிலும் உபரி-மதிப்பை உண்டாக்கும் நிகழ்முறையிலும் அவற்றுகிடையே நிலவும் அடிப்படை வேறுபாடு மறைக்கப்பட்டு விடுகிறது; முதலாளித்துவ் பொருளுற்பத்தியின் இரகசியம் வெளிப்படுவது இதனால் மேலும் கடினமாகிவிடுகிறது. "சுழல்-மூலதனம்" என்ற பொதுப் பெயர் இந்த அடிப்படை வேறுபாட்டை மறைத்து விடுகிறது.

நிலை-மூலதனத்தையும் சுழல்-மூலதனத்தையும் ஸ்மித் எவ்வளவு மேம்போக்காக வேறுபடுத்துகிறார் என்பது இங்கே வெளிப்படுகிறது. அவரது கருத்துப்படி "அதிபர் மாற்றம்" இல்லையானால் அதாவது விதை நேரடியாக வருடாந்திர  உற்பத்திப் பண்டத்திலிருந்தே மாற்றீடு செய்யப்படுமானால், அதிலிருந்து கழித்து எடுக்கப்படுமானால், அந்த விதை நிலை-மூலதனமாக இருக்கும். மாறாக, உற்பத்திப் பண்டம் முழுவதையும் விற்று அதன் மதிப்பின் ஒரு பகுதியைக் கொண்டு இன்னொரு உடைமையாளரிடமிருந்து விதை வாங்கப்படுமானால் அந்த விதை சுழல்-மூலதனமாக இருக்கும். முதல் நேர்வில் "அதிபர் மாற்றம்" ஏற்படுகின்றது. இரண்டாவதில் இல்லை. ஸ்மித் திரும்பவும் இங்கே சுழல்-மூலதனத்தையும் சரக்கு-மூலதனத்தையும் போட்டுக் குழப்புகிறார். உற்பத்திப் பண்டமானது சரக்கு மூலதனத்தை ஏற்றிச் செல்லும் ஊர்த்தியாகிறது. உற்பத்திப் பண்டத்தில் ஒரு பகுதி மட்டும்தான் --- உள்ளபடியே சுற்றோட்டத்துள் பிரவேசிப்பதும், விளைபயனாய் அது வெளிப்படுகிற உற்பத்தி நிகழ்முறையினுள் நேரடியாகத் திரும்பவும் பிரவேசிக்காததுமாகிய பகுதி மட்டும்தான் --- இப்படி சரக்கு-மூலதனதை ஏற்றிச் செல்லும் ஊர்தியாகிறதே தவிர உற்பத்திப் பொருள் முழுவதுமல்ல என்பதைக் கூறத் தேவையில்லை.

சில உற்பத்திச் சாதனங்கள் உற்பத்திப் பொருளை சார்ந்திராமல் தமது சொந்த உருவத்தைக் காப்பாற்றிக் கொள்கின்றன; ஏனையவை தமது மூல உருவத்தை முழுமையாக மாற்றிக் கொள்கின்றன அல்லது இழந்து விடுகின்றன. உற்பத்திப் பொருளின் உருவாக்கத்தின் போது உற்பத்திச் சாதனங்கள் இப்படி வெவ்வேறு விதமாய் நுகரப்படுகின்றன. அவை நுகரப்படுவதிலுள்ள் இந்த வேறுபாடு உழைப்பு நிகழ்முறையின் பாற்பட்டதாகும். பரிவர்த்தனைக்காக அல்லாமல், சரக்கு உற்பத்தியாக அமையாமல், ஒருவரது சொந்த தேவைகளை --- உதாரணமாய் தந்தைவழிக் குடும்பம் ஒன்றின் தேவைகளை --- நிறைவு செய்து கொள்வதற்கான உற்பத்தி நிக்ழ்முறைகளின் போதுங் கூட எழுகிற வேறுபாடுதான் இது.

முதலாளித்துவ பொருளுற்பத்தியாளரின் உற்பத்திப் பண்டத்தில் ஒரு பகுதி நேரடியாக உற்பத்திச் சாதனமாய் அவருக்குப் பயன்படுமானால், தமது பண்டத்தை தம்மிடமே விற்றுக் கொள்பவராக அவர் காட்சியளிக்கிறார். உண்மையில் அவரது கணக்கேடுகளில் இப்படித்தான் பதியப்படுகிறது. மறுவுற்பத்தியின் இந்தப் பகுதி நேரடியாக நடைபெறுகிறதே தவிர சுற்றோட்டத்தின் வாயிலாக நடைபெறவில்லை.

மூலதனமாக இருப்பதென்பது பொருட்களுக்குரிய உள்ளார்ந்த தன்மையல்ல, நிலைமைகளுக்கு ஏற்ப பொருட்களுக்கு வரப் பெறுகிற அல்லது வரப்பெற்ற ஒரு பணியே ஆகும் என்று ஆதாம் ஸ்மித் தெளிவாகவே கூறுகிறார். இது பொதுவாகவே மூலதனத்துக்கு மட்டுமல்லாமல் மூலதனத்தின்  உட்பிரிவுகளுக்கும் பொருந்தும் உண்மையாகும்.

ஒரே உழைப்புச் சாதனம் ஒரே நேரத்தில் உற்பத்திச் சாதனமாகவும், பிரிதொரு நேரத்தில் நுகர்வுச் சாதனமாகவும் பயன்படுவதுண்டு.  

பொருட்கள் அவற்றின் உள்ளார்ந்த தன்மையின் காரணமாகவே நிலை-மூலதனமாகவோ சுழல்-மூலதனமாகவோ அமைவதாகக் கொள்வது ஆதாம் ஸ்மித்தின் கருத்திலிருந்து விளைந்த தவறுகளில் ஒன்றாகும்.

நிலை-மூலதனம், நிலையில்லாத மூலதனம் என்ற நிர்ணயிப்புகளும் கூட உழைப்பு நிகழ்முறையிலும், ஆகவே மதிப்பைப் படைக்கும் நிகழ்முறையிலும் இந்த மூலதனக் கூறுகள் வகிக்கும் பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டவையே.

சுழல்-மூலதனத்தின்  கூறுகளைப் பட்டியலிடுகையில், ஆதாம் ஸ்மித் நிலை-மூலதனத்துக்கும், சுழல்-மூலதனத்துக்கும் இடையிலான வேறுபாட்டை --- திறனுடை..மூலதனத்துக்கு மட்டும் பொருந்தக் கூடியதான இந்த வேறுபாட்டை --- அடியோடு மறந்து விடுகிறார். அதற்கு பதில் அவர் சரக்கு-மூலதனத்தையும் பண-மூலதனத்தையும், அதாவது சுற்றோட்ட நிகழ்முறைக்கே உரிய இவ்விரு மூலதன வடிவங்களையும் திறனுடை-மூலதனத்துக்கு எதிராக நிறுத்துகிறார்; தம்மையும் அறியாமலே இதைச் செய்கிறார்.

முடிவில், சுழல்-மூலதனத்தின் அடக்கக் கூறுகளைப் பட்டியலிடும்போது ஆதாம் ஸ்மித் உழைப்புச் சக்தியை மறந்து விடுவது குறிப்பிடத் தக்கதாகும்.

சுழல்-மூலதனத்தையும் சரக்கு-மூலதனத்தையும் போட்டு ஸ்மித் குழப்படி செய்வதால், அவரால் உழைப்புச் சக்தியை சுழல்-மூலதனம் எனும் தலைப்பில் சேர்க்க முடியவில்லை. எனவே மாறும்-மூலதனமானது தொழிலாளி தமது கூலியைக் கொண்டு வாங்குகிற சரக்குகளின் வடிவில், அதாவது வாழ்வுச் சாதனங்களின் வடிவில் இங்கே காட்சியளிக்கிறது, கூலிக்காக முதலீடாகிற மூலதன-மதிப்பு இவ்வடிவில் சுழல்-மூலதனத்தின் ஒரு பகுதியாகக் கொள்ளப்படுகிறது. ஆனால், உற்பத்தி நிகழ்முறையில் உழைப்புச் சக்திதானே தவிர, தொழிலாளி தம்மை பராமரித்துக் கொள்வதற்கு வேண்டிய வாழ்வுச் சாதனங்கள் அல்ல.

கூலித் தொழிலாளி தமது உழைப்பை அதன் "ஆற்றல்களுடன்" சேர்த்தே விலைக்கு விற்கிறார்.

"நிலம், சுரங்கம், மீன் பண்ணை முதலானவற்றின் பயன்பாட்டுக்கு நிலை-மூலதனம், சுழல்-மூலதனம் ஆகிய இரண்டும் அவசியம், இவற்றின் விளைபொருள் இலாபமளித்து, அந்த மூலதனங்களை மட்டுமல்லாமல் சமுதாயத்திலுள்ள ஏனைய எல்லா மூலதனங்களையும் மாற்றீடு செய்கிறது" என்று ஸ்மித் சொல்கிறார். முற்றிலும் தவறு. அவற்றின் விளைபொருள் மற்றெல்லாத் தொழிற் கிளைகளுக்கும் கச்சாப் பொருள், துணைப் பொருள் முதலானவற்றை வழங்குகிறது. ஆனால் அவற்றின் மதிப்பு மற்றெல்லா சமுதாய மூலதனங்களின் மதிப்பையும் மாற்றீடு செய்வதில்லை; சொந்த மூலதன-மதிப்பை மட்டுமே மாற்றீடு செய்கிறது. (அதோடு உபரி-மதிப்பும் அளிக்கிறது.) ஆதாம் ஸ்மித் இங்கே இன்னும் அவரது பிசியோக்கிராட்டிய நினைவுகளிலிருந்து விடுபட்டாகவில்லை.

ஆதாம் ஸ்மித் செய்வதுபோல் தொழிலாளர்களது வாழ்வுச் சாதனங்களுக்காகச் செலவாகிற மதிப்பை இந்த சுழலும் கூறாகக் கொள்வதானால், மாறும்-மூலதனத்துக்கும் மாறா-மூலதனத்துக்குமுள்ள வேறுபாட்டையும் பொதுவாக முதலாளித்துவ பொருளுற்பத்தி நிகழ்முறையையும் புரிந்து கொள்ள முடியாமற் போகிறது. மூலதனத்தின் இந்த கூறு உற்பத்திப் பண்டத்தின் படைப்புக்கான பொருட் கூறுகளாக முதலீடாகியுள்ள மாறா-மூலதனத்துகெதிராய் மாறும்-மூலதனமாகும் என்ற வரையறுப்பு, உழைப்புச் சக்திக்காக முதலீடாகியுள்ள மூலதனக் கூறு புரள்வைப் பொருத்த வரை திறனுடை-மூலதனத்தின் சுழலும் பகுதியைச் சேர்ந்ததாகும் என்ற வரையறுப்புக்கு அடியில் புதைக்கப்பட்டு விடுகிறது. தொழிலாளியின் உழைப்புச் சக்திக்கு பதிலாக அவரது வாழ்வுச் சாதனங்களைத் திறனுடை..மூலதனத்தின் ஒரு கூறாகக் குறிப்பிடுவதன் மூலம் இந்த சவ அடக்கப் பணி பூர்த்தி செய்யப்படுகிறது.

ஆதாம் ஸ்மித் அவருக்குப் பின் வந்தோரிடையே உழைப்புச் சக்திக்காகச் செலவாகிற மூலதனக் கூறு மாறும்-மூலதனம் என்ற உணர்வே இல்லாத படி செய்துவிட்டார். பிற இடங்களில் அவர் வளர்த்திடும் ஆழம் மிகுந்த, பிழையற்ற கருத்துக்கள் நீடித்து நிலைக்கவில்லை; ஆனால் இந்த பெருந்தவறு நிலைத்து விட்டது. அவருக்குப் பின் வந்த ஏனைய பலரும் அவரையே விஞ்சிவிட்டனர். நிலை-மூலதனத்துக்கு எதிரான சுழல்-மூலதனமாய் இருத்தலே உழைப்புச் சக்திக்காக முதலீடாகியுள்ள மூலதனக் கூறின் பிரதான இலட்சணம் என்று இலக்கணம் வகுப்பதோடு அவர்கள் நின்றுவிடவில்லை; தொழிலாளர்களது வாழ்வுச் சாதனங்களாய் முதலீடாயிருப்பதுதான் சுழல்-மூலதனத்தின் பிரதான இலட்சணம் என்றும் இலக்கணம் வகுத்துவிட்டனர். இயல்பாக இதோடு இணைந்த கோட்பாடே தொழிலாளர் நுகர்வு..நிதியம் [labour fund] என்னும் கோட்பாடு --- அவசிய வாழ்வுச் சாதனங்களாலான தொழிலாளர் நுகர்வு நிதியமானது குறிப்பிட்ட பருமனுடையதாகும் என்றும், இதனால் சமுதாய உற்பத்திப் பொருட்களில் தொழிலாளர்களுக்குரிய பங்கு வரம்புக்கு உட்பட்டதாகிறது என்றும், ஆனால் இந்நிதி உழைப்புச் சக்தியை வாங்குவதற்காகவே முற்றிலும் செலவழிய வேண்டும் என்றும் கூறுகிறது இந்தக் கோட்பாடு.                        

Friday, March 14, 2014

பாகம் 2 பகுதி 2 அத்தியாயம் 9: முன்னீடு செய்யப்படும் மூலதனத்தின் ஒட்டுமொத்தப் புரள்வு. புரள்வுச் சகடங்கள்

1. முன்னீடு செய்யப்படும் மூலதனத்தின் [advanced capital] ஒட்டுமொத்தப் புரள்வு [aggregate turnover] என்பது அதன் பல்வேறு கூறுகளது சராசரிப் புரள்வாகும். 

2. இங்கே அளவு வேறுபாடுகளை மட்டுமல்லாமல் பண்பு வேறுபாடுகளையும் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. 

உற்பத்தி நிகழ்முறை தடைபடாமல் நடைபெற வேண்டுமானால், உற்பத்திப் பொருளை விற்று அந்த சுழல்-மூலதனத்தைத் தொடர்ந்து பண்ட வகையில் [in kind] மாற்றீடு செய்து வர வேண்டும். 

நிலை-மூலதனத்தின் பல்வேறு பகுதிகளது பிரத்தியேகமான புரள்வுகளை வடிவில் ஒருபடித்தானவையாக்கி, அளவு வழியில் மட்டும், அதாவது புரள்வுக்கு ஆகும் காலத்தில் மட்டும் வேறுபடுகிறவையாக வகுத்திடுவது அவசியமாகிறது. 

M ... M' என்னும் வடிவத்திலிருந்து தொடங்குவோமானால் புரள்வு ஒருபடித்தான தன்மை பெறுகிறது.

பண-மூலதன நிலையிலிருந்து திறனுடை-மூலதனமாகவும் சரக்கு-மூலதனமாகவும் உருமாறி, பிறகு திரும்பவும் பண-மூலதனமாக மாறுகிறது. இதே வடிவில் சுழல்-மூலதனத்தைப் பரிசீலித்தால் அது திரும்பி வருவது போலவே, இம்மூலதனமும் அதன் ஆரம்ப வடிவமாகிய பண வடிவத்துக்கே திரும்பி வருகிறது. இந்தப் பண-மூலதனம் ஆண்டின் முடிவில் அதன் தசையுருவாகிய இயந்திரமாகத் திரும்பவும் உருமாறுகிறதா, இல்லையா என்பது இங்கு முக்கியத்துவம் வாய்ந்ததல்ல.

3. முன்னீடு செய்யப்படும் திறனுடை-முலதனத்தின் மிகப் பெரும் பகுதி நிலை-மூலதனமாய் இருப்பினும் கூட, நிலை மூலதனத்தின் மறுவுற்பத்திக்கும், ஆகவே புரள்வுக்கும் ஆகிற காலம் பல ஆண்டுகளைக் கொண்ட ஒரு சகடமாய் இருந்த போதிலும், ஓர் ஆண்டில் புரள்கிற முலதன-மதிப்பானது --- சுழல்-மூலதனம் அதே ஓர் ஆண்டில் திரும்பத் திரும்ப பல தடவை புரள்வுக்கு உள்ளாகி விடுவதால் --- முன்னீடு செய்யப்பட்ட மூலதனத்தின் மொத்த மதிப்பைக் காட்டிலும் அதிகமாய் இருக்கலாம் என்பது தெரிகிறது.

4. எனவே, முன்னீடு செய்யப்படும் மூலதனத்தின் மதிப்பு புரள்வதற்கு ஆகும் காலம் வேறு; அதன் மறுவுற்பத்திக்கு உள்ள படியே ஆகும் காலம் அல்லது அதன் அடக்கக் கூறுகள் புரள்வதற்கு உள்ளபடியே ஆகும் காலம் வேறு. 

முன்னீடு செய்யப்படும் மூலதன்-மதிப்பு இவ்விதம் பல புரள்வுகளாலான ஒரு சகடத்தை [cycle] நிகழ்த்தியாக வேண்டும்.

ஈடுபடுத்தப்படும் நிலை-மூலதனத்தின் ஆயுளால், அதாவது அதன் மறுவுற்பத்தி அல்லது புரள்வுக் காலத்தால் இச்சகடம் நிர்ணயிக்கப்படுகிறது.

நிலை-மூலதனத்தின் வளர்ச்சி ஒருபுறம் இந்த ஆயுளை நிடிக்க செய்யும் அதே போது, மறு புறம் உற்பத்திச் சாதனங்களில் ஓயாமல் நடைபெறுகிற புரட்சியானது அதனைக் குறுக்கிச் செல்கிறது. 

ஒன்றுக்கொன்று தொடர்புடைய புரள்வுகளாலாகிய சகடமானது பல ஆண்டுகளுக்கு நீடிக்கிறது. அப்போது மூலதனம் அதன் நிலையான உள்ளடக்கக் கூறுகளால் இருத்தி வைக்கப்பட்டிருக்கிறது --- இந்தச் சகடம் காலவட்ட முறையிலான நெருக்கடிகளுக்கான பொருளாயத அடித்தளமாகிறது. இச்சகடத்தின் போது தொழிலும் வாணிபமும் அடுத்து அடுத்து வரும் மந்தம், மிதமான செயற்பாடு, ஆவேச எழுச்சி, நெருக்கடி ஆகிய கட்டங்களுக்கு உள்ளாகின்றன. மூலதனம் முதலீடு செய்யப்படுகிற நிலைமைகள் பெரிதும் வேறுபடுகின்றன என்பதும், இம்முதலீடுகள் காலத்தில் ஒருங்கிணைவதில்லை என்பதும்  மெய்தான். ஆயினும் எப்போதுமே நெருக்கடிதான் பெரிய அளவிலான புதிய முதலீடுகளுக்கான  தொடக்கமாகிறது. எனவே ஒட்டு மொத்தமாய்ச் சமுதாயத்தின் கண்ணோட்டத்தில்  நெருக்கடிதான் அடுத்த புரள்வுச் சகடத்துக்கான புதிய பொருளாயத அடித்தளமாய் பெருமளவுக்கு அமைகிறது.

5. முதலாளி தமது மூலதனம் முழுவதும் தம் கையை விட்டுச் சென்று பிறகு திரும்பி வந்து சேருவதற்கு, அதாவது ஒரு சுற்று சுற்றி வருவதற்கு எவ்வளவு காலமாகிறது என்பதிலிருந்துதான் தமது  இலாபத்தைக் கணக்கிட்டாக வேண்டும். 

6. முதலாவதாக கொடுப்புக் காலத்தின் அளவைப் பொறுத்து, அதாவது தொழிலாளி முதலாளிக்குக் கடன் கொடுத்தாக வேண்டிய கால அளவைப் பொறுத்து, கூலி தொடர்பாகவே கூட சில வேறுபாடுகள் ஏற்படுகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும்.

உற்பத்தி தொடர்ச்சியாக நடைபெற உற்பத்திச் சாதனங்களின் இருப்பு அவசியம்; இந்த இருப்பு தொழிற் கிளைக்கு தொழிற் கிளை வெவ்வேறாக இருக்கும்.     

உழைப்புச் சக்திக்காக முதலீடு செய்யப்படும் மூலதனப் பகுதி மீண்டும் பணமாக மாறுவது கச்சாப் பொருட்களாகவும் துணைப் பொருட்களாகவும் முதலீடு செய்யப்படும் மூலதனப் பகுதி மீண்டும் பணமாக மாறுவதுடன் சேர்ந்தே நிகழ்கிறது. ஆனால் பணமானது ஒரு புறம் உழைப்புச் சக்தியாகவும், மறு புறம் கச்சாப் பொருட்களாகவும் மீண்டும் மாறுவது தனித் தனியே நிகழ்கிறது; இந்த இரு ஆக்கக் கூறுகளையும் வாங்குவதற்கும் அவற்றுக்கு விலை கொடுப்பதற்கும் ஆகும் காலங்கள் மாறுபடுவதே காரணம்; இவற்றில் ஒன்று திறனுடை இருப்பாக [productive supply] நீண்ட காலத்துக்கு ஒரு முறை வாங்கப்படுகிறது; மற்றது, அதாவது உழைப்புச் சக்தி குறுகிய காலத்துக்கே, உதாரணமாய் வாரா வாரம் வாங்கப்படுகிறது.

குறிப்பிட்ட அளவு சர்க்குகளை சரக்காணையின் பேரில் உற்பத்தி செய்தாக வேண்டுமெனக் கொள்வோம். இந்தத் திரளின் கடைசிப் பகுதியை உற்பத்தி செய்து கொண்டிருக்கும் போதே, பூர்த்தியான உருப்படிகள் பண்டக சாலையில் காத்திருக்கின்றன. 

கடன்-செலாவணி முறை வணிக மூலதனத்தைப் போலவே, தனிப்பட்ட முதலாளிக்குப் புரள்வினைத் திருத்துகிறது. ஆனால் சமுதாய அளவில் பார்த்தால் உற்பத்தியை மட்டுமல்லாமல் நுகர்வினையும் முடுக்கி விடும் வரைதான் அது புரள்வினைத் திருத்துகிறது.            

Thursday, March 13, 2014

மானுட விடுதலைக்கு வழிகாட்டிய கார்ல் மார்க்ஸ்



மார்க்ஸ் இறந்து 131 ஆண்டுகளாகின்றன. அவர் பிறந்து 196 ஆண்டுகள் முடியப் போகிறது. இருப்பினும் அவர் முன்வைத்த கருத்துக்கள், அவர் உருவாக்கிய தத்துவம், நடைமுறையிலும், கருத்துத் துறையிலும் இன்றும் உலகம் முழுவதும் செல்வாக்கு பெற்றதாக உள்ளது.மானுடத்தின் எதிர்காலம் சோசலிசம், அதைத் தொடர்ந்து கம்யூனிஸம் என்ற கருத்தை மார்க்ஸ் முன்வைத்தார். ஆனால் இன்றுவரை லட்சோப லட்சக்கணக்கான மக்கள் விரும்பும் சோசலிசம் உலகம் முழுவதிலும் மலரவில்லை.

நெருக்கடி நிறைந்த அமைப்பு என்று மிகச் சரியாக மார்க்ஸ் கணித்த, வரலாற்று வளர்ச்சியில் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்பட வேண்டிய முதலாளித்துவ அமைப்பு இன்றும் உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஏகாதிபத்திய - முதலாளித்துவ ஆதிக்கத்தில் உள்ள இவ்வுலகில், சோசலிச சமூகத்தை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட துவக்க முயற்சிகள் பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. இவையெல்லாம் உண்மையாக இருந்தும், மார்க்ஸின் தத்துவமும் அவரது தீர்க்கதரிசனப் பார்வையும் இன்றும் வலுவானவை, பொருள்மிக்கவை என்றே கணிசமான பகுதி மக்களால் பார்க்கப்படுகிறது. இதன் ரகசியம் என்ன?முதலாவதாக, மானுட சிந்தனை ஓட்டத் தில் ஒரு மிக அடிப்படையான பங்களிப்பின் மூலம் புதிய சிந்தனைக்கு வித்திட்டார் அவர்.

மானுட சமூகங்கள் தங்களை எவ்வாறு உற்பத்தியும் மறுஉற்பத்தியும் செய்து கொள்கின் றன என்பதை ஆய்வதன் மூலம் அறிவியல் பூர்வ அடிப்படையில் மானுட வரலாற்று வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும் என்று வெளிச்சமிட்டு காட்டியதன்மூலம், வரலாற் றை அவர் ஒரு அறிவியலாக உயர்த்தினார். வரலாறு என்பது அரண்மனை சூழ்ச்சிகள், யுத்தங்கள், அரசகுல சந்ததிகள் அவர்களின் வீரதீரச் செயல்கள் ஆகியவற்றின் வர்ணனை அல்ல என்று உணர்த்தி மானுட சிந்தனை வளர்ச்சியில் புதியதடம் பதித்தார். மனிதர்களை, அவர்களது உணர்வுப் பூர்வமான, நோக்கம் சார்ந்த செயல்பாட்டை - மனித உழைப்பை -மானுட வரலாறு பற்றிய தனது ஆய்வில் மையமான இடத்தில் மார்க்ஸ் வைத்தார்.

மனிதர்கள் தங்களது உணர்வுப்பூர்வமான உற்பத்தி சார் நட வடிக்கை மூலம் இயற்கையை மாற்றி தங்களது வாழ்வுக்கான பொருட்களை உரு வாக்கிக் கொள்கின்றனர். இதுதான் மானுட உயிரினத்தின் தனிச்சிறப்பு என்பதை மார்க்ஸ் தெளிவுபடுத்தினார். இதன்மூலம், மானுடமும் வளர்ந்தது, மாறியது, தொடர்ந்து புதிய அறிவையும், திறன்களையும் பெற்றுக் கொண்டே வந்தது, இயற்கையின் செயல் முறைகளை மேலும் மேலும் ஆழமாகத் தெரிந்து கொண்டது, இந்த அறிவு மானுட சமூகத்தின் உற்பத்தி சக்திகளை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இவ்வாறாக, உற்பத்திசக்திகள் இடையறாது வளர்வது என்பது மானுட வரலாற்று வளர்ச்சியின் மாறாத அம்சமாக உள்ளது.மானுட வரலாற்று வளர்ச்சி பற்றி மார்க்ஸ் முன்வைத்த மிக முக்கியமான இரண்டாவது அம்சம், உற்பத்தி என்பது தனிமனித செயல் அல்ல, எப்பொழுதும் ஒரு சமூக ஏற்பாட்டின் மூலம்தான் அது நிகழ முடியும் என்பதாகும். மனிதர்கள் இணைந்துதான் உற்பத்தியில் ஈடுபட முடியும்.

மானுட வளர்ச்சியின் எல் லாக் கட்டங்களிலும் உற்பத்தி சமூகத்தின் வாயிலாகவே நிகழ்கிறது.மூன்றாவதாக, மானுட சமூகத்தின் உற்பத்தி சக்திகள் தொடர்ந்து வளர்ந்து வருவ தால், அவை நடப்பில் உள்ள சமூக உற்பத்தி ஏற்பாடுகளுடன் ( இவற்றை மார்க்ஸ் சமூக உற்பத்தி உறவுகள் என்று வர்ணித்தார்)முரண்பட வேண்டிய நிலை ஏற்படும் என்று மார்க்ஸ் நிரூபித்தார்.நான்காவதாக, உற்பத்தி சக்திகள் வளர்ச்சி யடையும் பொழுது சமூகத்தில் உபரி உற்பத்தி உருவாகும். இது, மற்ற மக்களை உழைக்க வைத்து அவர்கள் உழைப்பு மூலம் சமூகத்தின் ஒரு சிறு பகுதி வாழ முடியும் என்ற வாய்ப்பை ஏற்படுத்துகிறது. வேறு வகையில் சொன்னால், உபரி, வர்க்க சமூகத்தையும், வர்க்க சுரண்டலையும் சாத்தியமாக்குகிறது. சுரண்டும் வர்க்கம், சுரண்டப்படும் வர்க்கம் என்ற வர்க்கப் பிரிவினை கொண்ட வர்க்க சமூகம் ஏற்படுகிறது. இவ்வாறு ஒரு சிறுபகுதி பெரும்பகுதி மக்களை சுரண்டுவது இச்சிறு பகுதி சமூகத்தின் உற்பத்திக் கருவிகளை தனது ஏகபோகமாக ஆக்கிக் கொண்டு சமூக உற்பத்தியின் மீது ஆதிக்கம் செலுத்துவதன் மூலம்தான் சாத்தியம்.

இத்தகைய, ஏற்றத் தாழ்வான சமூக ஏற்பாட்டை நடைமுறைப் படுத்தவும், சுரண்டப்படும் பெரும்பகுதி மக்களை சுரண்டும் சிறுபகுதியினருக்கு உழைத்திடச் செய்வதற்கு உகந்த கருவியாக அரசு செயல்படுகிறது. ஆளும் வர்க்கம் அரசு அடக்குமுறை மூலம் மட்டுமே ஆள முடியாது. தத்துவமும் தேவை. சுரண்டப்படுவோரையே சுரண்டலை நியாயம் என்று கருத வைக்க, மதம், இலக்கியம், பண்பாடு உள்ளிட்ட பல தத்துவார்த்தக் கருவிகள் பயன்படுகின்றன.உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும், அதற்கான வர்க்க சமூகமும் மானுட வரலாற்று வளர்ச்சியில் தவிர்க்க முடியாதவை என்பதைமட்டும் மார்க்ஸ் கூறி இருந்தால், சுரண்டலையும் வர்க்க ஆட்சியையும் நியாயப்படுத்தஅவரது கருத்துக்களை ஆளும்வர்க்கங்கள் பயன்படுத்தியிருக்கமுடியும். ஆனால் மார்க்ஸ் அத்துடன் நிற்கவில்லை. வர்க்கப் போராட்டங்கள் மூலம், வர்க்கச் சமூக அமைப்புகளை தூக்கி எறிய முடியும், மானுட வரலாற்று வளர்ச்சியில் வர்க்க வேறுபாடு அற்ற சமூகத்தை உரு வாக்க முடியும் என்று காட்டியது மார்க்ஸின் மகத்தான பங்களிப்பாகும்.

மானுட வரலாற்று வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் நிலவும் வர்க்க சமூகத்தை தூக்கி எறிந்து, அடுத்த கட்ட வளர்ச்சிக்கு மானுடத்தை இட்டுச் செல்லும் வர்க்கம் எதுவாக இருக்கும் என்பதைப் பற்றிய வெளிச்சம் அளித்தது மார்க்ஸ்தான். இதையொட்டித்தான், நிலப்பிரபுத்துவ அமைப்பை தூக்கி எறிவதில் முதலாளி வர்க்கம் முக்கியபங்காற்றும் என்பதையும், நவீன உலகில் முதலாளித்துவ அமைப்பை தூக்கி எறிவதில் தொழிலாளி வர்க்கம் தலைமைப் பாத்திரம் வகிக்கும் என்பதையும் மார்க்ஸ் தெளிவாகச் சுட்டிக்காட்டினார். இதன் தொடர்ச்சியாக, மானுட சமூகம் சோசலிசத்தையும் அதற்கு அடுத்து கம்யூனிசத்தையும் நோக்கி பீடுநடை போடும் என்று அவர் நமக்கு திசைவழி காட்டிச் சென்றுள்ளார்.வரலாற்றையும், வரலாற்றுக் கட்டங்களை யும் ஆண்டுகளிலோ, பத்தாண்டுகளிலோ, நூற்றாண்டுகளிலோ கூட, அளவிட முடியாது. முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு தோன்றி அது உலகம் முழுவதும் பரவவும், தனது இன்றைய ஆதிக்க நிலையை அடையவும் பல நூறு ஆண்டுகள் எடுத்துள்ளது என்பது நம்முன் உள்ள அனுபவம்.

வர்க்கச் சுரண்டலற்ற, சுய உணர்வுடன் தன்னை திட்டமிட்டு உருவாக்கிக் கொள்ளும் நியாய மான மானுட சமூகத்தை உருவாக மேற் கொள்ளப்பட்ட ஆரம்ப முயற்சிகள் ஏகாதிபத்திய - முதலாளித்துவ உலக சூழலில் பின்னடைவுகளை எதிர்கொள்ள நேர்ந்தது வியப் பல்ல. இம்முயற்சியின் நிரந்தர தோல்வியும் அல்ல. சோசலிசத்தை கட்டும் முயற்சிகள் இளம்சோசலிச நாடுகளை அழித்தொழிக்க ஏகாதிபத்தியம் செய்த அத்தனை ஈனத்தனமான முயற்சிகளுக்கு மத்தியிலும், மிகவும் பின் தங்கிய சூழலில் இருந்து பாய்ச்சல் வேகத்தில் முன்னேறின என்பது வரலாற்று உண்மை. தொழில்நுட்பம், சந்தைகள், நிதி, ஊடகம் என்று பலதுறைகளில் ஏகாதியபத்தியத்தின் ஏகபோக கிடுக்குப்பிடி இருந்தும் கூட, தொழில்நுட்பம் மறுக்கப்பட்டு, வணிக பகிஷ்கரிப்பையும் எதிர்கொண்டு, காலனிச் சுரண்டலின்றி, உழைக்கும் மக்களை புறக்கணிக் காமல், அனைவருக்கும் கல்வி, வேலை, ஆரோக்கியம், மகத்தான தொழில் வளர்ச்சி, உலக அமைதியையும் ஜனநாயகத்தையும் காக்க மகத்தான பங்களிப்பு இவை அனைத்தும் 20ஆம் நூற்றாண்டு சோசலிச முயற்சிகளின் சாதனைகள்.

இவற்றிற்கு வழிகாட்டியது மார்க்ஸின் தத்துவம், அரசியல் - பொருளாதாரம், சோசலிசப் பார்வை.நாம் இன்று மேற்கொண்டிருப்பது எதிர்மறையான உலகில், வீர மும் விவேகமும் மிக்க முயற்சிகளால் சோசலிசத்தை நிர்மாணிக்கும் வரலாற்றுப் பணியாகும். மானுட சமூகத்தின் சம கால முற்போக்கு சக்திகள் இப்பணியில் களம் இறங்கி உள்ளோம். இது மாபெரும் சவால். நம்முன் நீண்ட கடுமையான பயணம் உள்ளது. ஆனால் அதன் இறுதியில் மானுடம் அடையப் போவது மகத்தான விடுதலை. இந்த உன்னத இலட்சியத்திற்கு எவ்வளவு முயற்சி எடுத்தாலும் அது தேவையே சிறந்ததே. சோசலிசத்தின் இறுதி வெற்றியை சாத்தியம் ஆக்கிட தலைமுறை தலை முறையாய் நாம் பாடுபடுவதே மார்க்சுக்கு நாம்செலுத்தும் சிறந்த அஞ்சலியாகும்.தனது 17வது வயதில் மார்க்ஸ் எழுதினார்:“மானுட முன்னேற்றத்திற்காக நமது வாழ்வைஅர்ப்பணிப்பதே மிகச்சிறந்த வாழ்வாகும்”வாழ்வில் அவ்வாறே வாழ்ந்து காட் டினார் அவர்.

வெங்கடேஷ் ஆத்ரேயா
(கட்டுரையாளர் : பொருளாதார அறிஞர்)
தீக்கதிர் மார்ச்  14, 2014

பாகம் 2 பகுதி 2 அத்தியாயம் 8: நிலை..மூலதனமும் சுழல்.. மூலதனமும் பிரிவு II

நிலை-மூலதனத்தின் அடக்கக் கூறுகளும் மாற்றீடும் மராமத்தும் திரட்டலும்.

மூலதன முதலீடு எதிலும் நிலை-மூலதனத்தின் வெவ்வேறு கூறுகள் வெவ்வேறு ஆயுட் காலமும், எனவே வெவ்வேறு புரள்வுக் காலுமும் கொண்டவை.

பணிக் காலங்களூம் [functional period] மறுவுற்பத்திக் காலங்களும் [times of reproduction] வெவ்வேறானவை. ஆகவே அவற்றுக்காக முன்னீடு செய்யப்படும் மூலதனத்தின்  புரள்வுக் காலங்களும் [times of turnover] வெவ்வேறானவை.

பயன்படுத்துவதன் விளைவாகவே தேய்மானம் ஏற்படுகிறது. இயற்கைச் சக்திகளின் செயலாலும் கூட தேய்மானம் ஏற்படுகிறது.

நவீனத் தொழில் துறையெங்கிலும் கௌரவ மதிப்பிறக்கம் [moral depreciation] ஒரு பங்கு வகிக்கிறது.

ஒரு புறம், நிலை-மூலதனத் திரள் குறிப்பிட்ட தசையுருவில் செய்யப்பட்டு, அந்த வடிவத்தில் குறிப்பிட்ட சராசரி ஆயுளைப் பெற்றிருப்பது காரணமாய், புதிய இயந்திரங்களையும் இன்ன பிறவற்றையும் படிப் படியாகவே புகுத்த முடிகிறது; மேம்பட்ட உழைப்புச் சாதனங்களைத் துரிதமாகவும் பரவலாகவும் புகுத்துவதற்கு இந்நிலைமை தடையாகிறது. மறுபுறம் பழைய உழைப்புச் சாதனங்களின் இயற்கை ஆயுள் முடிவதற்கு முன்பே, போட்டி காரணமாய் அவற்றுக்குப் பதில் புதிய உழைப்புச் சாதனங்களைப் புகுத்த வேண்டியதாகிறது.; குறிப்பாக தீர்மானகரமான மாற்றம் ஏற்படும்போது இப்படிச் செய்ய வேண்டியதாகிறது. திடீர் விபத்துகள் அல்லது நெருக்கடிகளால், சமுதாயந் தழுவிய பரந்த அளவில் ஆலைத் தளவாடங்களை உரிய காலத்துக்கு முன்னதாகவே மாற்றீடு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

நிலை-மூலதனம் பயன்படுத்தப்படும் போது, சராசரியாக அதன் பயன்-மதிப்பில் இழப்புக்கேற்ற விகிதத்தில் அது உற்பத்திப் பொருளுக்கு சிறுகச் சிறுகப் பெயர்த்தளிக்கும் மதிப்பு பகுதியே தேமானம் [wear and tear] எனப்படுகிறது.

நிலை-மூலதனத்தின் ஒரு பகுதி ஒருபடித்தான [homogeneous] கூறுகளால் ஆனது; ஆனால் இந்தக் கூறுகள் நீடித்திருக்கும் காலங்கள் சமமானவை அல்ல. வெவ்வேறு அளவிலான காலங்களில் இவை பகுதி பகுதியாக மாற்றீடு செய்யப்படுகின்றன.

நிலை..மூலதனத்தின் பிற பகுதிகள் பலபடித்தான [hetrogeneous] கூறுகளால் ஆனவை. ஒரே காலத்தில்  ஒருங்கே இவை தேய்ந்து போவதில்லை. ஆகவே வெவ்வேறு கலங்களில் இவற்றை மாற்றீடு செய்ய வேண்டியதாகிறது.

நிலை-மூலதனத்தின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு ஆயுட் காலங்களைப் பெற்றிருப்பது போலவே, நிலை-மூலதனத்தின் ஒரு பகுதியாய் இருக்கும் எந்த இயந்திரத்தின் வெவ்வேறு உறுப்புகளும் வெவ்வேறு ஆயுட் காலங்களைப் பெற்றிருப்பதால் மேல நாம் சொன்னது இந்த இயந்திர உறுப்புகளுக்கும் பொருந்தும்.

ஒரு தொழில் படிப்படியாகப் பெருகிச் செல்வது எவ்வளவு தூரம் சாத்தியம், எந்தப் பரிமாணங்களில் இதைச் செய்ய முடியும், இவ்விதம் திரும்ப முதலீடு செய்வதற்கு எந்தப் பருமனில் சேம நிதி திரட்டப்பட வேண்டும், இதற்குத் தேவைப்படும் காலம் எவ்வளவு என்பதெல்லாம் ஓரளவுக்கு அந்தத் தொழிலின் பிரத்தியேக இயல்புகளைப் பொறுத்ததாகும். இப்போதுள்ள இயந்திர சாதனத்தின் நுட்பங்களில் தொடர்ந்து எந்த அளவுக்கு மேம்பாடுகள் செய்ய முடியும் என்பது இந்த மேம்பாடுகளின் தன்மையையும் இயந்திர சாதனத்தின் கட்டமைப்பையும் சார்ந்தது.

எதுவும் சமுதாய அளவில் திட்டமிடப்பட்டு அதற்கேற்ப நடைபெறுவதில்லை; தனிப்பட்ட முதலாளி செயல்பட வேண்டியிருக்கும் எண்ணற்ற விதமான நிலைமைகளையும், பயன்படுத்த வேண்டியிருக்கும் வெவ்வேறு சாதனங்களையும் பிறவற்றையும் பொறுத்தே யாவும் நடைபெறுகின்றன. இதனால் உற்பத்திச் சக்திகள் பெரிய அளவில் விரயமாக நேர்கிறது.  

நிலை-மூலதனத்துக்கு விசேஷப் பராமரிப்புச் செலவுகள் அவசியம். ஒரு பகுதி பராமரிப்புக்கு உழைப்பு நிகழ்முறையே வழி செய்கிறது; உழைப்பு நிகழ்முறையில் ஈடுபடவில்லையானால் நிலை-மூலதனம் கெட்டுப் போகிறது.

உழைப்பு நிகழ்முறையின் போது பயன்படுவதால் விளையும் இந்த பராமரிப்பு உயிருள்ள உழைப்பின் இயல்பிலேயே உள்ளார்ந்திருக்கும் வரப்பிரசாதமாகும். மேலும் கெடாது காப்பதற்கு உழைப்பாளியிடமுள்ள சக்தி இரு விதமாகச் செயல்படுகிறது. ஒரு புறம் உழைப்பின் இலக்குப் பொருட்களின் மதிப்பை உற்பத்திப் பொருளுக்குப் பெயர்த்தளித்து அம்மதிப்பு கெடாது பாதுகாக்கிறது.; மறு புறம் உழைப்புச் சாதனங்களின் மதிப்பை உற்பத்தி பொருளுக்குப் பெயர்த்திடாமலே அம்மதிப்பைப் பாதுகாக்கிறது.; உழைப்பு நிகழ்முறையின் போது அவற்றைச் செயல்பட வைத்து அவற்றின் பயன்-மதிப்பைப் பாதுகாப்பதன் மூலம் இதைச் செய்கிறது.

நிலை-மூலதனத்தைப் பழுதின்றி பராமரிப்பதற்கென்றே குறிப்பிட்ட அளவு உழைப்பைச் செலவிட வேண்டியிருக்கிறது.

இங்கே பரிசீலிக்கப்படுவது இயந்திரத்தைப் பயன்படுத்தும் பொருட்டு ஓயாமல் தேவைப்படுகிற கூடுதல் உழைப்புதானே தவிர இயந்திரத்தில் அடங்கியுள்ள உழப்பீன் மாற்றீடு அல்ல; இயந்திரத்துக்காகச் செலவிடப்படும் உழைப்புதானே தவிர இயந்திரத்தைக் கொண்டு செலவிடப்படும் உழைப்பு அல்ல. இங்கே இயந்திரம் உற்பத்தியின் இயக்கியாக அல்லாமல் கச்சாப் பொருளாகவே அமைகிறது. இந்த உழைப்புக்காகச் செலவிடப்படும் உற்பத்திப் பொருளை உருவாக்குகிற முறையான உழைப்பு நிகழ்முறையில் சேராத போதிலும் அதனை சுழல்-மூலதனமாகவே வகைப்படுத்த வேண்டும்,

இதற்காகச் செலவிடப்படும் மூலதனம் திறனிலாச் செலவுகளுக்கான சுழல்-மூலதனப் பகுதியைச் சேர்ந்தது.

பல சந்தர்ப்பங்களில் உற்பத்தி நிகழ்முறையின் போதும் இந்த வேலை செய்கிறார்கள் என்பதையும் பெரும்பாலான விபத்துகளுக்கு இதுவே காரணம் என்பதையும் முன்பே பார்த்தோம்.

இந்த உழைப்பு உற்பத்திப் பொருளின் விலையில் சேருவதில்லை. அதைப் பொறுத்த வரை நுகர்வாளர் இதனை இலவசமாகப் பெறுகிறார். முதலாளியும் தமது இயந்திரத்துக்கு ஆகும் இந்தப் பராமரிப்புக்காகச் செலவு செய்யவில்லை. இதற்காக தொழிலாளி தம்மையே செலவிட்டுக் கொள்கிறார். இது மூலதனத்தின் சுயகாப்பு மருமங்களில் ஒன்றாகும். உண்மையில் இந்த நிலைமை இயந்திர சாதனத்தின் மீது சட்டப்படி தொழிலாளியை உரிமையுடையவராக்குகிறது. இதன்படி முதலாளித்துவச் சட்டத்தின் படியே கூட தொழிலாளி இயந்திர சாதனத்தின் சகவுடைமையாளர் ஆகிறார்.

மராமத்து வேலைகள் தற்செயலானவையாக இருந்தாலும் நிலை-மூலதனத்தினது ஆயுளின் பல்வேறு கட்டங்களிலும் ஒரே அளவுக்குத் தேவைப்படாமல் ஏற்றத் தாழ்வான அளவுகளில் தேவைப்படுகின்றன.

முதலாவதாக, நிலை, மூலதனத்தின் சராசரி ஆயுளை மதிப்பிடுகையில் வேலைக்கு ஏற்ற நிலையில்தான் எப்போதும் அது வைக்கப்பட்டிருப்பதாகக் கொள்கிறோம். பராமரிப்பு வேலைகளுக்காகக் கூடுதலாகத் தேவைப்படும் மூலதனம் தடங்கலின்றி அவ்வப்போது முன்னீடு செய்யப்படுவதாய் வைத்துதான் இந்த சராசரி ஆயுளைக் கணக்கிடுகிறோம்.

இரண்டாவதாக, மூலதனம் உழைப்பு இவற்றை இப்படிக் கூடுதலாகச் செலவிட்டு சேர்க்கப்படும் மதிப்பு அதே நேரத்தில் அதன் தொடர்பான சரக்குகளின் விலையில் சேர்ந்து விட முடியாது என்பதும் தெளிவு.

தொழில் துறையில் குறிப்ப்ட்ட ஒரு கிளையில் முதலீடு செய்யப்படும் நிலை-மூலதனத்தின் ஆயுட் காலத்தில் விபத்துகள் சராசரி எத்தனை ஏற்படுகின்றன, அப்போது அவசியமாகிற பராமரிப்பு, மராமத்து வேலைகளின் சராசரிப் பரிமாணம் எவ்வளவு என்பதை அனுபவத்தின் வாயிலாக அறிய முடிகிறது. இந்தச் சராசரி செலவு சராசரி ஆயுட்காலம் முழுவதற்கும் நிரவப்பட்டு, ஏற்ற ஈவுகளாக உற்பத்தி பொருளின் விலையோடு சேர்க்கப்படுகின்றன.

இவ்வாறு மாற்றீடு செய்யப்படும் கூடுதல் மூலதனம் கால ஒழுங்கின்றி செலவிடப்பட்ட போதிலும் சுழல்-மூலதனத்தின் ஒரு பகுதியாகும்.

மறுபுறம் உற்பத்திச் சாதனங்களுக்கு ஆகும் செலவுகள் உண்மையில் காலமுறைப்பாடின்றி முன்னீடு செய்யப்பட்டு உற்பத்திப் பொருளில், அதாவது நிலை-மூலதனத்தில் காலமுறைப்பாடின்றி சேருகின்றன என்றாலும் கூட, மேற்குறிப்பிட்ட சராசரியின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு, தொடர்ச்சியாக உற்பத்திச் செய்யப்படுகிற பொருளின் மதிப்பில் ஒரு பகுதியாகின்றன. இம்மூலதனத்தை சுழல்-மூலதன வகைப்பட்டதாகக் கொள்வது அதிக நியாயமுடையதாக இருக்கும்.

தேய்ந்து வீணாவைதைக் கழித்து விட்டு மாற்றீடு செய்தலிலிருந்தும், பராமரிப்பும் மராமத்தும் செய்தலிலிருந்தும் அறவே வேறானதாகும் காப்பீடு [insurance] செய்தல்.

உபரி-மதிப்பிலிருந்தே இந்த நாசத்துக்கு ஈடு செய்தாக வேண்டும், இது உபரி-மதிப்பில் விழுகிற வெட்டு ஆகும்.

தேய்மானத்தையும் மராமத்து செலவுகளையும் சமுதாய சராசரியின் படி நிர்ணயிக்கும் போது தவிர்க்க முடியாமலே பெருத்த ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது.

ஒரே தொழிலைச் சேர்ந்தவர்களாய் இருப்பினும், உழைப்புச் சக்தி மீதான சுரண்டலின் கடுமை ஒரே அளவினதாய் இருப்பினும், வெவ்வேறு முதலாளிகளுக்கும் வெவ்வேறு இலாபங்களை கிடைக்கச் செய்கிற மேற்கண்ட நிலைமையும் இதையொத்த பிற நிலமைகளும் உபரி-மதிப்பின் மெய்யான தன்மையை புரிந்து கொள்வதிலுள்ள சிக்கலை அதிகமாக்கவே உதவுகின்றன.

முறையான மராமத்துகளை மாற்றீட்டிலிருந்து, பராமரிப்புச் செலவுகளை மாற்றீட்டு செலவுகளிலிருந்து பிரித்திடும் எல்லைக் கோடு நெகிழ்வானது. எனவேதான் சர்ச்சை ஓய்வதே இல்லை.

சாமார்த்தியம் வாய்ந்த இயக்குநர் குழுக்கள் தமது இலாப ஈவுகளை உயர்த்திக் கொள்வதற்காக மராமத்து, மாற்றீடு என்னும் பதங்களை வைத்துக் கொண்டு வித்தை புரிய வல்லவர்கள்.

நீடூழிக் காலம் நிலைத்திருக்கக் கூடிய எல்லாக் கட்டமைப்புகளுக்காக முன்னீடு செய்யப்படும் மூலதனத்தைப் படிப்படியாக அவற்றின் தேய்மானத்துக்கேற்ப மாற்றீடு செய்ய வேண்டியதில்லை; பராமரிப்புக்கும் மராமத்துக்குமான வருடாந்திர சராசரிச் செலவுகளை உற்பத்திப் பண்டத்தின் விலையோடு சேர்த்துக் கொண்டால் போதும்.

பல்லாண்டு காலத்துக்குப் பிறகே மறுவுற்பத்தி செய்யப்பட வேண்டியதும், அப்போது முழுமையாக மாற்றீடு செய்யப்பட வேண்டியதுமான நிலை-மூலதனப் பகுதிக்காக தனிப்பட்ட ஒவ்வொரு முதலாளிக்கும் கடன் தீர்வு நிதி [sinking fund] தேவைப்படுகிறது.

இதற்குத் தேவைப்படுவது குறிப்பிட்ட ஒரு தொகையே தவிர ஏதேனும் ஒரு தொகையல்ல.

ஒப்பளவில் பெரிய முதலாளியான ஒருவரின் கையில் பணச் சேர்ப்பாக பெரிய அளவில் திரட்டப் பெறும் பணமானது நிலை-மூலதனத்தை விலைக்கு வாங்க வேண்டிய நேரம் வந்ததும் திடுதிப்பென மொத்தமாய் சுற்றோட்டத்தில் விடப்படுகிறது. பின்னர் சமுதாயத்தில் அது திரும்பவும் சுற்றோட்ட ஊடகமாகவும் பணச் சேர்ப்பாகவும் பிரிகிறது. நிலை-மூலதனத்தின் மதிப்பு அதன் தேய்மானத்துக்கேற்ப அதன் தொடக்க வடிவுக்கே திரும்பி கடன் தீர்வு நிதியாவதால், சுற்றோட்டத்திலிருக்கும் பணத்தில் ஒரு பகுதி இந்த நிதியின் உருவில் மீண்டும் பணச் சேர்ப்பாகி விடுகிறது.

நவீனத் தொழில் துறையும் முதலாளித்துவப் பொருளுற்பத்தியும் வளரும்போது தவிர்க்க முடியாதவாறு அவ்வளர்ச்சிக்கு இணையாய் கடன்-செலாவணி முறையும் [credit system] வளர்ந்தோங்கியுள்ளது. கடன்-செலாவணி முறையின் வளர்ச்சியைத் தொடர்ந்து, முதலாளியின் பணச் சேர்ப்பு வெறும் சேர்ப்பாக இருக்கும் நிலையை விட்டொழிந்து மூலதனமாகச் செயல்பட முற்படுகிறது. ஆனால் அந்தப் பணம் அதன் உடைமையாளரின் வசமிருந்து பிற முதலாளிகளின் கைக்கு மாறி இப்படி செயல்பட முற்படுகிறது.   

Wednesday, March 12, 2014

பாகம்2 பகுதி 2 அத்தியாயம் 8 நிலை..மூலதனமும் சுழல் மூலதனமும் பிரிவு I

வடிவ வேறுபாடுகள்

மாறா-மூலதனத்தின் ஒரு பகுதி அதன் துணை கொண்டு உற்பத்தி செய்யப்படும் பண்டங்களின் வடிவத்தை அடைந்து விடாமல் உற்பத்தி நிகழ்முறையின் தொடக்கத்தில் பெற்றிருந்த அதே பயன் வடிவத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. எனவே, ஓயாமல் திரும்பத் திரும்ப நடைபெறும் உழைப்பு நிகழ்முறைகளில் நீண்ட காலமோ குறுகிய காலமோ அது தனக்குரிய அதே பணிகளை மீண்டும் மீண்டும் புரிகிறது. 

உழைப்புச் சாதனம் [Instrument of labour] --- மாறா மூலதனத்தின் இந்தப் பகுதி அதன் பயன்-மதிப்போடு கூடவே இழக்கிற பரிவர்த்தனை-மதிப்புக்கேற்ற விகிதத்தில் உற்பத்திப் பொருளுக்கு மதிப்பைக்  கொடுக்கிறது. மதிப்பின் இந்த ஒப்படைப்பு, அதாவது இத்தகையதோர் உற்பத்திச் சாதனத்தின் மதிப்பு அதன் துணைகொண்டு படைக்கப்படும் உற்பத்திப் பொருளுக்கு இவ்விதம் பெயர்க்கப்படுகிற அளவானது சராசரிகளைக் கணக்கிடுவதன் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது.

ஓர் உழைப்புச் சாதனம் எவ்வளவு அதிக காலம் நீடித்திருக்கிறதோ, எவ்வளவு மெதுவாகத் தேய்மானமுறுகிறதோ, அவ்வளவு அதிக காலம் அதன் மாறா-மூலதன மதிப்பு இந்தப் பயன் வடிவத்தில் நிலைத்திருக்கிறது. ஆனால் அது எவ்வளவுதான் நீடித்திருக்கக் கூடியதாய் இருந்தாலும், அது மதிப்பைப் பெயர்க்கும் விகிதாசாரம் அது பணி புரியும் ஒட்டுமொத்தக் கால அளவுக்கு எப்போதுமே எதிர் விகிதத்தில் இருக்கிறது.

மூலதன-மதிப்பின் ஒரு பகுதி உழைப்புச் சாதனத்தில் நிலைத்திருக்கிறது அல்லவா, இந்தப் பகுதியும் மூலதன-மதிப்பின் வேறு எந்தப் பகுதியையும் போலவே சுற்றியோடுகிறது. அனைத்து மூலதன-மதிப்பும் ஓயாமல் சுற்றியோடுகிறது என்றும், இந்த அர்தத்தில் அனைத்து மூலதனம்  சுழல் மூலதனமே என்றும் பொதுவாகப் பார்த்தோம்.

முதலாவதாக, அதன் பயன் வடிவிலேயே அது சுற்றியோடவில்லை; அதன் மதிப்புதான் சுற்றியோடுகிறது; சரக்காகச் சுற்றியோடும் உற்பத்திப் பொருளுக்கு அதன் மதிப்பு போய் சேருவதற்கு ஏற்ப சன்னம் சன்னமாக, பையப் பைய இது நடைபெறுகிறது. உழைப்புச் சாதனத்தின் செயற் காலம் முழுவதிலும் அது அதன் துணை கொண்டு உற்பத்தி செய்யப்படும் சரக்குகளிலிருந்து வேறாக இருந்து வரும் வரை, எப்போதுமே அதன் மதிப்பின் ஒரு பகுதி அதில் நிலைத்திருக்கிறது. இந்த விசேஷத் தன்மைதான் மாறா..மூலதனத்தின் இந்தப் பகுதியை நிலை-மூலதனம் [fixed capital] என்னும் வடிவம் பெறச் செய்கிறது. உற்பத்தி நிகழ்முறையில் முன்னீடு செய்யப்படும் மூலதனத்தின் ஏனையப் பொருட் கூறுகள் எல்லாம், இந்த நிலை-மூலதனத்துக்கு மாறாக, சுற்றியோடும் மூலதனம் அல்லது சுழல்-மூலதனம் [circulating or fluid capital] ஆகின்றன. 

உழைப்புச் சாதனம்  எந்த அளவுக்கு நீடித்திருக்கக் கூடியது என்பதுதான் அதில் நிலைத்திருக்கும் மூலதன-மதிப்புக்கும் திரும்பத் திரும்ப நடைபெறும் உழைப்பு நிகழ்முறையின் போது உற்பத்திப் பொருளிடம் அது விட்டு விடும் மதிப்புப் பகுதிக்கும் இடையிலுள்ள வேறு பாட்டின் பருமனை நிர்ணயிக்கிறது. 

இந்த வேறுபாடு இல்லாது மறையும் போது உழைப்புச் சாதனம் அதன் பயன்பாட்டுக் காலத்தைக் கடந்து விடுகிறது. அது மதிப்பின் உறைவிடமாய் இருக்கும் நிலை முடிவடைந்து விடுகிறது.

சரியான அர்த்தத்தில் உழைப்புச் சாதனமெனச் சொல்ல முடியாத ஒரு உற்பத்திச் சாதனம் --- அதாவது துணைப் பொருள், கச்சாப் பொருள், இன்னும் பூர்த்தியாகாத பண்டம் போன்ற ஒன்று --- எம்முறையில் அது தன் மதிப்பை உற்பத்திப் பொருளுக்குப் பெயர்த்திடுகிறது, ஆகவே அதன் மதிப்பு எவ்விதம் சுற்றியோடுகிறது என்பதைக் கருதுமிடத்து, முற்றிலும் உழைப்புச் சாதனத்தைப் போன்றதாகவே செயல்படுமாயின், அப்போது அதுவும் நிலை..மூலதனத்தின் இயங்குபொருளே, நிலவல் வடிவமே ஆகும்.

திரும்பத் திரும்ப நடைபெறுகிற உழைப்பு நிகழ்முறைகளில் ஒன்றொடொன்று இணைந்து தொடர்ச்சியாக ஓர் உற்பத்திக் காலமாகும்படியான --- அதாவது உற்பத்திப் பொருளை முடிப்பதற்கு வேண்டிய உற்பத்திக் காலம் பூராவும் ஆகும் படியான --- உழைப்பு நிகழ்முறைகளில் ஓர் உற்பத்திச் சாதனம் கணிச காலம் நிலைத்திருக்க நேரும் போது கூட, நிலை-மூலதனத்தைப் போல் ஓரளவு அதிக காலத்துக்கு முதலாளி தமது மூலதன முன்னீடுகளைச் செய்ய வேண்டியதாகிறது. ஆயினும் இக்காரணத்தால் அவரது மூலதனம் நிலை-மூலதனமாகி விடுவதில்லை.

நிலை-மூலதனத்தையும் சுழல்-மூலதனத்தையும் ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்திக் காட்டுவது இந்த கால அளவல்ல.

இடம்பெயராமையானது உழைப்புச் சாதனங்களுக்கு நிலை-மூலதனத் தன்மையை அளிக்கவும் இல்லை; இடம்பெயர்தலானது அச்சாதனங்களிடமிருந்து இத்தன்மையைப் பறிக்கவுமில்லை.

நிலை-மூலதனத்தின் தனி விதமான சுற்றோட்டம் தனி விதமான புரள்வுக்கு வழி செய்கிறது.

உழைப்புச் சாதனம் மதிப்பின் உறைவிடமாய் இருக்கும் நிலைக்கு உற்பத்தி நிகழ்முறையின் போது முடிவு ஏற்படும் அதே விகிதத்தில், அதன் மதிப்பு பகுதியும், சுற்றோட்ட நிகழ்முறையின் போது பண வடிவில் சிறுகச் சிறுகக் கசிந்து வெளிவருகிறது. உற்பத்தி சாசனத்தின் மதிப்பு இவ்வாறு இரு விதமாய் நிலவுகிறது. அதன் ஒரு பகுதி அதன் பயன் வடிவம் அல்லது தசையுருவை விட்டு விலகாமல் உற்பத்தி நிகழ்முறையைச் சேர்ந்ததாகிறது. மற்றொரு பகுதி அவ்வடிவை விட்டுப் பிரிந்து பண வடிவம் பெறுகிறது.

அதன் மதிப்பு பணமாகிற உருமாற்றம், அம்மதிப்பைத் தன்னுள் கொண்டு செல்கிற சரக்கு பணமாகிற பரிணமிப்புடன் ஒருங்கிணைந்து நடைபெறுகிறது. ஆனால் அம்மதிப்பு பண வடிவிலிருந்து திரும்பவும் பயன் வடிவுக்கு அடையும் மாற்றம், சரக்குகள் திரும்பவும் அவற்றின் உற்பத்திக்கு வேண்டிய ஏனைய அடிக்கூறுகளாக மாற்றமுறுவதிலிருந்து பிரிந்து தனியே நடைபெறுகிறது. இந்த மாற்றம் அதன் மறுவுற்பத்திக்கு தேவைப்படும் கால அளவால் நிர்ணயிக்கப்படுகிறது --- அதாவது உழைப்புச் சாதனம் தேய்மானத்தால் அழிந்து போய், அதே வகைப்பட்ட இன்னோரு உழைப்புச் சாதனத்தால் அது மாற்றீடு செய்யப்படுவதற்கு ஆகும் கால அளவால் நிர்ணயிக்கப்படுகிறது.

அதன் புரள்வு பூரணமாய் நிகழ்ந்து முடிவுறுகிறது. மறுவுற்பத்திக்கான இத்தருணம் வரும் வரை அதன் மதிப்பு பண வடிவிலான சேம-நிதியாக பையப் பைய திரட்டப் பெற்று வருகிறது.

திறனுடை-மூலதனத்தின் எஞ்சிய கூறுகளில் ஒரு பகுதி மாறா-மூலதனக் கூறுகளாகும்; கச்சாப் பொருட்களும் துணைப் பொருட்களும் ஆகும். மறு பகுதி உழைப்புச் சக்திக்காக முதலீடு செய்யப்படும் மாறும்-மூலதனம் ஆகும்.

உழைப்புச் சாதனங்களாய் அமைந்த மாறா-மூலதனப் பகுதியின் மதிப்பைப் போலவே, கச்சாப் பொருட்களாயும் துணைப் பொருட்களாயும் அமைந்த மாறா-மூலதனப் பகுதியின் மதிப்பும் பெயர்க்கப்பட்ட மதிப்பாகவே உற்பத்திப் பொருளின் மதிப்பில் இடம்பெறுகிறது. ஆனால் உழைப்புச் சக்தியானது இவ்வாறன்றி அதன் மதிப்புக்குச் சமதையான மதிப்பை உற்பத்தி நிகழ்முறையின் போது உற்பத்திப் பொருளுக்குச் செலுத்துகிறது. வேறுவிதமாகச் சொன்னால், தனது மதிப்பை உள்ளபடியே மறுவுற்பத்தி செய்கிறது.

உழைப்புச் சக்திக்கும் நிலை-மூலதனமாக அமையாத மாறா-மூலதனக் கூறுகளுக்கும் இடையே மதிப்பின் படைப்பைப் பொறுத்த வரை எவ்வளவுதான் வேறுபாடுகள் இருப்பினும், மதிப்பின் புரள்வைப் பொறுத்த வரை எந்த வேறுபாடும் இல்லை. இவ்வகைப் புரள்வு இவையிரண்டுக்கும் பொதுவானது; ஆனால் நிலை-மூலதனத்தின் புரள்வு இதற்கு நேர்மாறானது. திறனுடை-மூலதனத்தின் இந்த அடக்கக் கூறுகள் --- உழைப்புச் சக்திக்காகவும் நிலை-மூலதனமாக அமையாத உற்பத்திச் சாதனங்களுக்காகவும் முதலீடு செய்யப்படும் அதன் மதிப்புப் பகுதிகள் --- அவற்றின் புரள்வில் காணப்படும் இந்தப் பொதுத் தன்மை காரணமாய் சுற்றியோடும் மூலதனம் அல்லது சுழல்-மூலதனமாக நிலை-மூலதனத்துக்கு நேர் எதிராகின்றன.

சாரம்சத்தில் மாறும்-மூலதனத்தில்  அடங்கியிருப்பவை வாழ்வுச் சாதனங்களே ஆகும்.

முதலாளி தொழிலாளியின் உழைப்புச் சக்தியை வாங்குகிறாரே தவிர, தொழிலாளியின் வாழ்வுச் சாதனங்களை அல்ல.

முதலாளி பணத்திற்கு விற்கும் சரக்குகள் அடங்கிய உபரி-மதிப்பின் ஒரு பகுதியைத் தனக்கு வேண்டிய வாழ்வுச் சாதனங்களாக மாற்றிக் கொள்கிறார்.

நிலை-மூலதனத்துக்கு மாறாக, சுழல்..மூலதனத்துக்குரிய அந்தத் தனித் தன்மையை அடைகிறவை தொழிலாளியின் வாழ்வுச் சாதனங்களும் அல்ல, தொழிலாளியின் உழைப்புச் சக்தியும் அல்ல. திறனுடை..மூலதனத்தின்  மதிப்பில் உழைப்புச் சக்தியை வாங்குவதற்காக முன்னீடு செய்யப்பட்டிருக்கிறதே அந்தப் பகுதிதான் அதன் புரள்வின் வடிவம் காரணமாய் அத்தன்மையை அடைகிறது --- மாறா-மூலதனத்தின் சிற்சில உள்ளடக்கக் கூறுகள் அடைவதும், ஏனைய கூறுகள்  அடையாததுமான அத்தன்மையை அது அடைகிறது.

சுழல்-மூலதனத்தின் நிலவல் வடிவங்களாய் அமையும் உழைப்புச் சக்தியும் உற்பத்திச் சாதனங்களும், பூர்த்தியான உற்பத்திப் பொருளின் படைப்புக்கும் விற்பனைக்கும் அவசியமான அளவுக்குச் சுற்றோட்டத்திலிருந்து விலக்கி எடுக்கப்படுகின்றன.  

1. நிலை-மூலதனம், சுழல்-மூலதனம் ஆகிய வடிவங்களின் வெவ்வேறான தன்மைகள் உற்பத்தி நிகழ்முறையில் செயல் புரியும் மூலதன-மதிப்பின் --- அதாவது திறனுடை-மூலதனத்தின் --- வெவ்வேறு விதமான புரள்வுகளிலிருந்தே எழுகின்றன.

உற்பத்திப் பொருள் இந்த மதிப்பை சுற்றியோட வைத்து, தனது உருமாற்றங்களின் மூலம் அதை ஆரம்பத் தசையுருவுக்கு மீளச் செய்வதிலான வேறுபாடு --- திறனுடை-மூலதனமாக நிலவும் பொருள் வடிவங்களிலான வேறுபாட்டிலிருந்து எழுகிறது; இந்த மூலதனத்தின் ஒரு பகுதி தனிப்பட்ட உற்பத்திப் பொருளின் படைப்பின் பொது முழுதும் நுகரப்படுகிறது; மறு பகுதி சன்னம் சன்னமாகவே நுகரப்படுகிறது. எனவே திறனுடை-மூலதனத்தைத்தான்  நிலை-மூலதனமாகவும் சுழல்-மூலதனமாகவும் பிரிக்க முடியும். ஆனால் தொழில் துறை மூலதனத்தின் ஏனைய இரு நிலவல் வடிவங்கள், அதாவது சரக்கு-முலதனமும் பண-மூலதனமும் இந்த முரண் நிலைக்கு [antithesis] ஆளாவதில்லை. திறனுடை-மூலதனத்துக்கும் ஏனைய இரு நிலவல் வடிவங்களுக்கும் இடையிலான முரண் நிலையாகவும் இது அமைவதில்லை. திறனுடை-மூலதனத்தில் மட்டும், அதன் அரங்கில் மட்டும் நிலவும் ஒன்று இது.

இவை திறனுடை-மூலதனத்துக்கு மாறான சுற்றோட்ட மூலதனமே [circulation capital] தவிர நிலை மூலதனத்துக்கு மாறான சுழல்-மூலதன‌ம் [circulating capital] அல்ல.

2. மூலதனத்தின் நிலைப் பகுதியின் புரள்வும், ஆகவே அதற்கு ஆகிற புரள்வுக் காலமும், மூலதனத்தின் சுழலும் கூறுகளின் அநேகப் புரள்வுகளுக்குச் சமமாகும். நிலை-மூலதனம் ஒரு தரம் புரள்வதற்குள் சுழல்-மூலதனம் எத்தனையோ தரம் புரண்டு விடுகிறது.    

பூர்த்தியான உற்பத்திப் பொருள் சுற்றியோடச் செய்கிற அதே நேரத்தில் இந்தச் சுற்றோட்டம் மூலதனத்தின் சுழலும் கூறுகளது முழு மதிப்பையும் சுற்றியாட வைக்கிறது.

3. நிலை மூலதனத்துக்காக‌   முதலீடு செய்யப்படும் மூலதன-மதிப்பு அதன் நிலவல் வடிவமான உற்பத்திச் சாதனங்கள் செயல்படும் காலம் முழுமையிலும் அதன் வடிவங்களாலான சுற்றினை தசையுருவில் கடப்பதில்லை; அதன் மதிப்பு மட்டும்தான் கடக்கிறது.

இம்மதிப்பில் ஒரு பகுதிதான் தொடர்ச்சியாகச் சுற்றியோடி சரக்குகளது மதிப்பின் ஒரு பகுதியாகி, பணமாக மாற்றமடைகிறது அதன் ஆதி வடிவமான தசையுருவிற்கு அது மாற்றப்படுவதில்லை. உற்பத்திச் சாதனம [means of production] முழுமையாக நுகரப்பட்டு அதன் பணிக் காலம் முடியும் வரை, பணம் திரும்பவும் உற்பத்திச் சாதனத்தின் தசையுருவத்துக்கு [bodily form] மாற்றமடைவதில்லை.

4. உற்பத்தி நிகழ்முறையின் போது உழைப்புச் சக்தியும் எப்போதும் இருந்து வருகிறது; புதிதாகத் திரும்பத் திரும்ப விலைக்கு வாங்கப்படுவதால்தான் இது சாத்தியமாகிறது; இப்படி வாங்குகையில் அடிக்கடி ஆட்களை மாற்றிவிடுவது உண்டு. ஆனால் சுழல்-மூலதனப் புரள்வுகள் இப்படித் திரும்பத் திரும்ப நடைபெற்றும் ஒரே விதமான உற்பத்தி நிகழ்முறைகளில், ஈடுபட்டுத் தொடர்ந்து செயல் புரிகின்றன.

Monday, March 10, 2014

பாகம் 2 பகுதி 2 மூலதனப் புரள்வு அத்தியாயம் 7: புரள்வுக் காலமும் புரள்வுகளின் எண்ணிக்கையும

குறிப்பிட்ட மூலதனத்தின் முழுப் புரள்வுக் காலம் என்பது அதன் சுற்றோட்டக் காலத்தையும் அதன் உற்பத்திக் காலத்தையும் கூட்டி வருவதாகும்.

நாம் M ... M' என்ற சுற்றை எடுத்துக் கொண்டாலும் P ... P என்ற சுற்றை எடுத்துக் கொண்டாலும், தாத்பரியம் இதுதான்; (1) முன்னீடு செய்யப்படும் மதிப்பு மூலதன..மதிப்பாகச் செயல்படுகிறது; (2) நிகழ்முறையைப் பூர்த்தி செய்த பிறகு, நிகழ்முறையின் தொடக்கத்தில் பூண்டிருந்த வடிவத்துக்கு மீள்கிறது.

(I) M ... M' (II) P ... P (III) C' ... C' ஆகிய மூறு வகைச் சுற்றுகளும் பின்வரும் வேறுபாடுகளை வெளிப்படுத்துகின்றன; P ... P என்ற இரண்டாம் வகைச் சுற்றில், நிகழ்முறையின் மறு நிகழ்வு, அதாவது  மறுவுற்பத்தி நிகழ்முறை ஒரு மெய்நடப்பாகத் தெரிவிக்கப்படுகிறது; முதலாம் வகைச் சுற்றில் இது ஒரு சாத்தியப்பாடாகவே தெரிவிக்கப்படுகிறது.

M ... M' என்ற சுற்றில் மீள்வாகிய நிகழ்முறை அதே அளவுவீதத்தில் திரும்ப நடைபெற்றால், மீண்டும் தொடக்க முனையாகிறது.; m அதில் சேருவதில்லை; M ஆனது மூலதனம் என்ற முறையில் தற்பெருக்கமடைந்து இவ்விதம் m என்னும் உபரி-மதிப்பைப் படைத்துள்ள போதிலும், அந்த உபரி-மதிப்பை உதறி விட்டது என்பதையே இது காட்டுகிறது. இதே போல், P ... P என்ற சுற்றிலும், உற்பத்தி அடிக் கூறுகளின் வடிவில் முன்னீடு செய்யப்படும் மூலதன-மதிப்பான P தொடக்க முனையாக விளங்குகிறது. இந்த மூலதன-மதிப்பின் தற்பெருக்கமும் இச்சுற்றில் அடங்கும். சாமானிய மறுவுற்பத்தி நடைபெற்றால், அதே மூலதன-மதிப்பு அதே நிகழ்முறையை P என்னும் அதே வடிவில் திரும்பத் தொடக்குகிறது. மூலதனத் திரட்டல் நடைபெற்றால் பெருக்கமடைந்த மூலதன-மதிப்பு என்ற முறையில் P' ஆனது நிகழ்முறையை மீண்டும் தொடக்குகிறது. 

மூன்றாம் வகைச் சுற்றிலும் நிகழ்முறையைத் தொடக்கும் மூலதன-மதிப்பு முன்னீடு செய்யப்படும் மூலதன-மதிப்பு அல்ல; அது ஏற்கனவே பெருக்கமடைந்த  மூலதன-மதிப்பு ஆகும்; சரக்குகளின் வடிவில் இருக்கிற மொத்தச் செல்வமாகும்; முன்னீடு செய்யப்பட்ட மூலதன-மதிப்பு இச்செல்வத்தின் ஒரு பகுதியே ஆகும்.      

இந்த மூன்றாம் வகைச் சுற்றை மூலதனப் புரள்வுக்குப் பயன்படுத்த முடியாது. ஏனென்றால் எப்போதுமே மூலதனப் புரள்வு என்பது பண வடிவிலோ சரக்கு வடிவிலோ மூலதன-மதிப்பை முன்னீடு செய்வதிலிருந்து ஆரம்பமாவது ஆகும். சுற்றிச் செல்லும் மூலதன.-மதிப்பு முன்னீடு சேய்யப்பட்ட வடிவத்துக்கே மீள்வது எப்போதுமே மூலதனப் புரள்வுக்கு அவசியமாகும். முதலாம் வகைச் சுற்றையும் இரண்டாம் வகைச் சுற்றையும் எடுத்துக் கொள்வோமானால், பிரதானமாக உபரி-மதிப்பின் படைப்பின் மீது புரள்வின் தாக்கத்தை ஆராய்வதில் முதலாவதும், உற்பத்திப் பொருளின் படைப்பின் மீது புரள்வின் தாக்கத்தை ஆராய்வதில் இரண்டாவதும் பயனுள்ளவை.

மூலதனச் சுற்று தனிப்பட்ட செயலாக அல்லாமல் காலவட்ட நிகழ்முறையாகக் கொள்ளப்படும் போது, அதனை மூலதனப் புரள்வு என்கிறோம். இந்தப் புரள்வுக்கு ஆகும் காலம் என்பது உற்பத்திக்கும் சுற்றோட்டத்துக்கும் ஆகும் காலங்களைக் கூட்டி வருவதாகும். இந்த கூட்டுத்தொகையே மூலதனத்தின் புரள்வு காலமாகும். இவ்வாறு இது மொத்த மூலதன-மதிப்பின் ஒரு சுற்றுக் காலத்துக்கும் அடுத்ததற்கும் உள்ள இடைக் காலத்தை அளவிடுகிறது; மூலதனத்தின் வாழ்வில் காணப்படும் கால வட்ட முறைமையை, அல்லது வேறு விதமாகச் சொன்னால், ஒரே மூலதன-மதிப்பின் தற்பெருக்க நிகழ்முறை அல்லது உற்பத்தி நிகழ்முறை மீண்டும் நடைபெறுவதற்கு வேண்டிய காலத்தை அளவிடுகிறது.  

வேலை-நாள் என்பது உழைப்புச் சக்தியின் பணியை அளவிடுவதற்கான இயற்கை அலகாவது போலவே ஆண்டு என்பது செயல்படும் மூலதனத்தின் புரள்வுகளை அளவிடுவதற்கான இயற்கை அலகாகிறது.

புரள்வு காலத்தை அளவிடும் அலகாகிய ஆண்டை T என்றும், குறிப்பிட்ட மூலதனத்தின் புரள்வுக் காலத்தை t என்றும், அதன் புரள்வுகளின் எண்ணிக்கையை n என்றும் குறிப்போமானால், n = T / t. எடுத்துக்காட்டாக புரள்வுக் காலமான t = 3 மாதம் என்றால் மூலதனம் ஆண்டுக்கு நான்கு முறை புரள்கிறது.

முதலாளியைப் பொறுத்த வரை, அவரது மூலதனத்தின் புரள்வுக் காலம் என்பது, அவர் தமது மூலதனத்தை முன்னீடு செய்து, அதைக் கொண்டு உபரி-மதிப்பைப் படைத்து, அம்மூலதனத்தை அதன் ஆரம்ப உருவில் திரும்பப் பெறுவதற்குத் தேவைப்படும் காலம் ஆகும்.      

Saturday, March 1, 2014

பாகம் 2 பகுதி 1 அத்தியாயம் 6: சுற்றோட்டச் செலவுகள். II & III

II. சேமிப்புச் செலவுகள்

இந்தச் செலவுகள் உற்பத்தி நிகழ்முறைகளிலிருந்தே எழுந்து சுற்றோட்டத் துறையிலும் தொடர்கிறவையாக இருக்கலாம். இவை உற்பத்தித் திறனுள்ளவையே என்பது சுற்றோட்ட வடிவத்தால் மறைக்கப்பட்டு விடுகிறது. இதற்கு மாறாக சமுதாயத்தின் கண் கொண்டு நோக்குகையில், இவை செலவுகளாக மட்டும் இருக்கலாம்; உயிருள்ள உழைப்பு அல்லது பொருள் வடிவிலான உழைப்பை உற்பத்தித் திறனில்லாத முறையில் செலவிடுவதாக இருக்கலாம்; ஆனால் இதே காரணத்தால் இவை தனிப்பட்ட முதலாளிக்கு மதிப்பை உற்பத்தி செய்கிறவையாக இருக்கலாம். 

மதிப்பை கூடுதலாக்கும் உழைப்பு அனைத்தும்  உபரி மதிப்பையும் கூடுதலாக்க முடியும்.; முதலாளித்துவ பொருளுற்பத்தி எப்போதுமே இப்படி கூடுதலாக்கவே செய்யும். 

ஒரு சரக்கின் பயன்-மதிப்பை உயர்த்தாமலே அதன் விலையை உயர்த்துகிற செலவுகள், ஆகவே சமுதாயத்தைப் பொறுத்த வரை உற்பத்தித் திறனற்ற செலவுகளாய் வகைப்படுத்த வேண்டிய செலவுகள் தனிப்பட்ட முதலாளியைப் பொறுத்த வரை செல்வப்  பெருக்கத்துக்கான ஒர் ஆதாரமாகிவிடலாம்.

காப்பீட்டு நிறுமங்கள் தனிப்பட்ட முதலாளிக்கு ஏற்படும் இழப்புகளை முதலாளி வர்க்கத்தாரிடையே பகிர்ந்தளிக்கின்றன. இழப்புகள் இவ்விதம் பகிர்ந்து பரவலாக்கப் படுவதால், மொத்தச் சமுதாய மூலதனத்தைப் பொறுத்த வரை இவை இழப்புகளாகவே இருப்பது தடுக்கப்பட்டு விடுவதில்லை.

1. பொதுவாய்ச் சரக்கிருப்பு உருவாதல்

சுற்றை நிகழ்த்திக் கொண்டிருக்கும் நிலையில், இப்போது அதனை விற்க வேண்டும். அதாவது மீண்டும் பணமாக மாற்ற வேண்டும் என்ற நிலையில், ஆகவே தற்போதைக்கு அது சந்தையில் சரக்கு மூலதனமாகச் செயல்படுகிற நிலையில், அது இருப்பதாக அமைவதை சந்தையில் வேறு வழியின்றியும் எவர் விருப்பத்தையும் சாராமலும் நிகழ்கிற ஒன்றாகவே குறிப்பிட வேண்டும். விற்பனை எவ்வளவு துரிதமாக நடைபெறுகிறதோ மறுவுற்பத்தி நிகழ்முறை அவ்வளவு சரளமாய் நடைபெறுகிறது.

மூலதனம் இவ்விதம் அதன் சரக்கு-மூலதன வடிவில், ஆகவே சரக்கிருப்பின் வடிவில் இருப்பதால் செலவுகள் ஏற்படுகின்றன. உற்பத்தித் துறைக்குரிய செலவுகள் அல்லாததால் இவற்றை சுற்றோட்டச் செலவுகள் என்ற வகையில் சேர்க்க வேண்டும். இந்த சுற்றோட்டச் செலவுகள் சரக்குகளின் மதிப்பில் ஓரளவு சேர்ந்து சரக்குகளின் விலையை அதிகரிக்கச் செய்கிறவை.

ஆகவே, இந்தச் செலவுகளின் விளைவாக உழைப்பின் உற்பத்தித் திறன் குறைகிறது; குறிப்பிட்ட பயன் விளைவை பெறுவதற்குத் தேவையான மூலதனமும் உழைப்பும் அதிகமாகிவிடுகின்றன. ஆக இச்செலவுகள் திறனிலாச் செலவுகள் [unproductive costs] ஆகும்.

தொழிலதிபர், தேவைக்கேற்பவும் தேவைப்படும் போதும், ஒப்பளவில் சிறிது சிறிதாகவே தமது இருப்பைப் புதுப்பித்துக் கொண்டால் போதும் என்றாகிறது.

சமுதாய மூலதனத்தைப் பார்போமானால் இரு நேர்வுகளிலுமே ஒரே அளவு உற்பத்திப் பொருட்கள்தாம் இருப்பாய் அமைகின்றன.

ஓராண்டு காலத்துக்குத் தேவைப்படும் இருப்பின் அளவானது போக்குவரத்தின் வளர்ச்சிக்கேற்ப குறைகிறது.

2. முறையான சரக்கிருப்பு

ஒவ்வொரு சரக்கும், எனவே ஒவ்வொரு சரக்கு..மூலதனமும் ---- இதுவும் சரக்குதான், ஆனால் மூலதன-மதிப்பின் நிலவல் வடிவமாய் இருக்கும் சரக்கு ----- அதன் உற்பத்தித் துறையை விட்டு வெளிப்பட்டதும் திறனுடை நுகர்வுக்கோ சொந்த நுகர்வுக்கோ உடனடியாகச் செல்லாமல் இடையில் சந்தையில் காத்திருக்க நேருமாயின், அது சரக்கிருப்பைச் சேர்ந்த கூறாகி விடுகிறது. ஆகவே, உற்பத்தியின் பரிமாணம் மாறாதிருந்தால், சரக்கிருப்பானது (உற்பத்திப் பொருளின் சரக்கு வடிவத்தை இப்படி தனியாகப் பிரிந்து நிலைப்படுத்துவது) முதலாளித்துவ பொருளுற்பத்தியோடு கூட தானும் சேர்ந்து வளர்கிறது. இது இருப்பின் வடிவ மாற்றம்தான்; அதாவது உற்பத்தியையோ நுகர்வையோ நேரடி நோக்கமாகக் கொண்ட இருப்பு குறைவதால்தான் சரக்குகளின் வடிவிலான இருப்பு அதிகரிக்கிறது.

சமுதாயத்தின் மொத்த உற்பத்திப் பண்டத்துடன் ஒப்பிடுகையில் சரக்கிருப்பின் ஒப்பீட்டுப் பருமன் அதிகமாவதோடு, அதன் அறுதிப் பருமனும் அதிகமாகிறது என்றால், முதலாளித்துவப் பொருளுற்பத்தியோடு சேர்ந்து உற்பத்திப் பண்டத்தின் மொத்த அளவும் அதிகமாவதே காரணம்.

உற்பத்திப் பொருட்களாகிய இருப்பின் சமூக வடிவம் எதுவானாலும், இதனைக் கெடாது காக்கும் பொருட்டு செலவு செய்தாக வேண்டும். உற்பத்திப் பொருளை சேமித்து வைப்பதற்கு வேண்டிய கட்டிடங்கள், கலன்கள் முதலானவற்றுக்கு முதலீடுகள் அவசியமாகின்றன. மற்றும் சேதம் ஏற்படாமல் காப்பதற்காக உற்பத்திப் பொருளின் தன்மையைப் பொறுத்து அதிகமாகவோ குறைவாகவோ உற்பத்திச் சாதனங்களும் உழைப்பும் தேவைப்படுவதால் அவற்றுக்காகவும் முதலீடுகள் அவசியமாகின்றன. இருப்பானது சமுதாய வழியில்  எந்த அளவுக்கு குவிப்படைந்திருக்கிறதோ, ஒப்பளவில் இச்செலவுகள்  அந்த அளவுக்கு குறைகின்றன. இப்படி இந்த முதலீடுகளாகச் செலவாவது எப்போதுமே சமூக உழைப்பின் ஒரு பகுதியே ஆகும்.

இவை உற்பத்திப் பண்டத்தின் ஆக்கத்தில் சேருகிறவை அல்ல என்பதால், உற்பத்திப் பண்டத்திலான குறைப்புகள் ஆகின்றன. சமுதாயச் செல்வத்தின் திறனிலாச் செலவுகள் என்றாலும் இவை அவசியச் செலவுகள் ஆகும்.

பண வைப்பு ஒன்று உருவாகாமல் எப்படி பணம் சுற்றோட்டத்தில் செல்ல முடியாதோ, அதேபோல் சுற்றோட்டத்தில் ஒரு தேக்கம் ஏற்படாமல் இருப்பு என்பதாய் ஒன்று இருக்க முடியாது.

விற்பனையாளர் தமது சரக்கை சீக்கிரமாய் விற்பதில்தான் குறியாய் இருக்கிறார். விற்பனையிலிருந்து அதை அவர் விலக்கி வைப்பாராயின், அது சரக்கிருப்பின் உள்ளியல் கூறாகுமே தவிர உள்ளபடியான கூறாக முடியாது. சரக்கானது அவருக்கு எப்போதுமே பரிவர்த்தனை மதிப்பின்  உறைவிடமே அன்றி வேறல்ல. ஆகவே அது தனது சரக்கு வடிவத்தைக் களைந்து விட்டு பண வடிவம் பூணுவதன் மூலமும் அப்படிச் செய்த பிற்பாடும்தான் இத்தகைய உறைவிடமாகச் செயல்பட முடியும்.                

சரக்கைப் பொறுத்த வரை, அதனை  நாம் தனிப்பட்ட சர்க்காகக் கருதினாலும் சரி, சமுதாய மூலதனத்தின் அடக்கக் கூறாக கருதினாலும் சரி, இருப்பாக அமைவதற்கு ஆகும் செலவுகளை அதன் உற்பத்தியாளர் ஏற்றாலும் ஒன்றுதான், வரிசையாக பல வணிகர்கள் ஏற்றாலும் சரிதான்.

இயல்பான இருப்பும் இயல்பற்ற இருப்பும் வடிவத்தில் வேறுபடாததாலும், இரண்டுமே சுற்றோட்டத்தில் ஏற்படும் அடைப்புகளாய் இருப்பதாலும் குழப்படியை உண்டாக்குகின்றன. உற்பத்தியின் இயக்கிகளே ஏமாற நேர்கிறது.

கடன்..செலாவணியின் வளர்ச்சியானது மெய்யான இயக்கம் புலனாகாத படி மருமத் திரையிடுவதால் இப்படித் தவறாக கருத மேலும் அதிக வாய்ப்புள்ளது.

III. போக்குவரத்துச் செலவுகள்

சரக்குச் சுற்றோட்டம் இல்லாமலே, ஏன். உற்பத்திப் பொருட்களின் நேரடிப் பரிவர்த்தனை இல்லாமலும் கூட, உற்பத்திப் பொருட்களின் போக்கு வரத்து நடைபெற முடியும். இடம் விற்கிற வீடு சரக்காக சுற்றோட்டத்தில் சென்ற போதிலும், இடம் பெயர்ந்து செல்வதில்லை.

இங்கு இடம் விட்டு இடம் செல்வது சரக்குகளின் உடைமையிலான உரிமைப் பத்திரமே தவிர சரக்குகள் அல்ல.

போக்குவரத்தால் உற்பத்திப் பொருட்கள் அளவில் அதிகமாவதில்லை. அவற்றின் இயற்கையான இயல்புகளில் ஏற்படக்கூடிய மற்றம் எதுவும், ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, போக்குவரத்தால் ஏற்படுவதில்லை. விரும்பத்தக்க பயனை அது விளவிப்பதாகவும் இல்லை. தவிர்ப்பதற்கு வழி ஏதும் இல்லாத தீமையாய் அதை ஏற்க வேண்டி வருகிறது.

போக்குவரத்தானது சரக்குகளுக்கு சேர்த்திடும் மதிப்பின் அறுதிப் பருமன். மற்ற நிலைமைகள் மாறாதிருக்க, போக்குவரத்துத் தொழிலின் உற்பத்தித் திறனுக்கு எதிர் விகிதத்திலும், பயணம் செய்யும் தூரத்துக்கு நேர் விகிதத்திலும் உள்ளது.

மற்ற நிலைமைகள் மாறாதிருக்க, போக்க்குவரத்துச் செலவுகள் சரக்குகளின் விலைகளோடு சேர்ந்திடும் மதிப்பின் மதிப்புப் பகுதி, அவற்றின் பரிமாணத்துக்கும் எடைக்கும் நேர் விகிதத்திலும், அவற்றின் மதிப்புக்கு எதிர் விகிதத்திலும் இருப்பதாகும். ஆனால் பல்வேறு நிலைமைகளாலும் இதில் திருத்தம் ஏற்படலாம். எடுத்துக் காட்டாக, பண்டங்கள் எந்த அளவுக்கு உடையவும், அழியவும், வெடிக்கவும் கூடியனவாய் இருக்கின்றன என்பதைப் பொறுத்து, போக்குவரத்தின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளூம் எனவே உழைப்பு, உழைப்புச் சாதனங்கள் செலவீடும் அதிகமாகவோ குறைவாகவோ தேவைப் படுகின்றன.

முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையானது போக்குவரத்து மற்றும் தொடர்புச் சாதனங்களை வளர்ச்சி பெறச் செய்வதன் மூலமும், அதே போல் போக்குவரத்து ஒன்று குவியச் செய்வதன் மூலமும் --- அதாவது  அதன் அளவு வீதத்தை அதிகமாக்குவதன் மூலமும் ---- தனிப்பட்ட சரக்கிற்கான போக்குவரத்துச் செலவுகளைக் குறைக்கிறது.