Monday, March 10, 2014

பாகம் 2 பகுதி 2 மூலதனப் புரள்வு அத்தியாயம் 7: புரள்வுக் காலமும் புரள்வுகளின் எண்ணிக்கையும

குறிப்பிட்ட மூலதனத்தின் முழுப் புரள்வுக் காலம் என்பது அதன் சுற்றோட்டக் காலத்தையும் அதன் உற்பத்திக் காலத்தையும் கூட்டி வருவதாகும்.

நாம் M ... M' என்ற சுற்றை எடுத்துக் கொண்டாலும் P ... P என்ற சுற்றை எடுத்துக் கொண்டாலும், தாத்பரியம் இதுதான்; (1) முன்னீடு செய்யப்படும் மதிப்பு மூலதன..மதிப்பாகச் செயல்படுகிறது; (2) நிகழ்முறையைப் பூர்த்தி செய்த பிறகு, நிகழ்முறையின் தொடக்கத்தில் பூண்டிருந்த வடிவத்துக்கு மீள்கிறது.

(I) M ... M' (II) P ... P (III) C' ... C' ஆகிய மூறு வகைச் சுற்றுகளும் பின்வரும் வேறுபாடுகளை வெளிப்படுத்துகின்றன; P ... P என்ற இரண்டாம் வகைச் சுற்றில், நிகழ்முறையின் மறு நிகழ்வு, அதாவது  மறுவுற்பத்தி நிகழ்முறை ஒரு மெய்நடப்பாகத் தெரிவிக்கப்படுகிறது; முதலாம் வகைச் சுற்றில் இது ஒரு சாத்தியப்பாடாகவே தெரிவிக்கப்படுகிறது.

M ... M' என்ற சுற்றில் மீள்வாகிய நிகழ்முறை அதே அளவுவீதத்தில் திரும்ப நடைபெற்றால், மீண்டும் தொடக்க முனையாகிறது.; m அதில் சேருவதில்லை; M ஆனது மூலதனம் என்ற முறையில் தற்பெருக்கமடைந்து இவ்விதம் m என்னும் உபரி-மதிப்பைப் படைத்துள்ள போதிலும், அந்த உபரி-மதிப்பை உதறி விட்டது என்பதையே இது காட்டுகிறது. இதே போல், P ... P என்ற சுற்றிலும், உற்பத்தி அடிக் கூறுகளின் வடிவில் முன்னீடு செய்யப்படும் மூலதன-மதிப்பான P தொடக்க முனையாக விளங்குகிறது. இந்த மூலதன-மதிப்பின் தற்பெருக்கமும் இச்சுற்றில் அடங்கும். சாமானிய மறுவுற்பத்தி நடைபெற்றால், அதே மூலதன-மதிப்பு அதே நிகழ்முறையை P என்னும் அதே வடிவில் திரும்பத் தொடக்குகிறது. மூலதனத் திரட்டல் நடைபெற்றால் பெருக்கமடைந்த மூலதன-மதிப்பு என்ற முறையில் P' ஆனது நிகழ்முறையை மீண்டும் தொடக்குகிறது. 

மூன்றாம் வகைச் சுற்றிலும் நிகழ்முறையைத் தொடக்கும் மூலதன-மதிப்பு முன்னீடு செய்யப்படும் மூலதன-மதிப்பு அல்ல; அது ஏற்கனவே பெருக்கமடைந்த  மூலதன-மதிப்பு ஆகும்; சரக்குகளின் வடிவில் இருக்கிற மொத்தச் செல்வமாகும்; முன்னீடு செய்யப்பட்ட மூலதன-மதிப்பு இச்செல்வத்தின் ஒரு பகுதியே ஆகும்.      

இந்த மூன்றாம் வகைச் சுற்றை மூலதனப் புரள்வுக்குப் பயன்படுத்த முடியாது. ஏனென்றால் எப்போதுமே மூலதனப் புரள்வு என்பது பண வடிவிலோ சரக்கு வடிவிலோ மூலதன-மதிப்பை முன்னீடு செய்வதிலிருந்து ஆரம்பமாவது ஆகும். சுற்றிச் செல்லும் மூலதன.-மதிப்பு முன்னீடு சேய்யப்பட்ட வடிவத்துக்கே மீள்வது எப்போதுமே மூலதனப் புரள்வுக்கு அவசியமாகும். முதலாம் வகைச் சுற்றையும் இரண்டாம் வகைச் சுற்றையும் எடுத்துக் கொள்வோமானால், பிரதானமாக உபரி-மதிப்பின் படைப்பின் மீது புரள்வின் தாக்கத்தை ஆராய்வதில் முதலாவதும், உற்பத்திப் பொருளின் படைப்பின் மீது புரள்வின் தாக்கத்தை ஆராய்வதில் இரண்டாவதும் பயனுள்ளவை.

மூலதனச் சுற்று தனிப்பட்ட செயலாக அல்லாமல் காலவட்ட நிகழ்முறையாகக் கொள்ளப்படும் போது, அதனை மூலதனப் புரள்வு என்கிறோம். இந்தப் புரள்வுக்கு ஆகும் காலம் என்பது உற்பத்திக்கும் சுற்றோட்டத்துக்கும் ஆகும் காலங்களைக் கூட்டி வருவதாகும். இந்த கூட்டுத்தொகையே மூலதனத்தின் புரள்வு காலமாகும். இவ்வாறு இது மொத்த மூலதன-மதிப்பின் ஒரு சுற்றுக் காலத்துக்கும் அடுத்ததற்கும் உள்ள இடைக் காலத்தை அளவிடுகிறது; மூலதனத்தின் வாழ்வில் காணப்படும் கால வட்ட முறைமையை, அல்லது வேறு விதமாகச் சொன்னால், ஒரே மூலதன-மதிப்பின் தற்பெருக்க நிகழ்முறை அல்லது உற்பத்தி நிகழ்முறை மீண்டும் நடைபெறுவதற்கு வேண்டிய காலத்தை அளவிடுகிறது.  

வேலை-நாள் என்பது உழைப்புச் சக்தியின் பணியை அளவிடுவதற்கான இயற்கை அலகாவது போலவே ஆண்டு என்பது செயல்படும் மூலதனத்தின் புரள்வுகளை அளவிடுவதற்கான இயற்கை அலகாகிறது.

புரள்வு காலத்தை அளவிடும் அலகாகிய ஆண்டை T என்றும், குறிப்பிட்ட மூலதனத்தின் புரள்வுக் காலத்தை t என்றும், அதன் புரள்வுகளின் எண்ணிக்கையை n என்றும் குறிப்போமானால், n = T / t. எடுத்துக்காட்டாக புரள்வுக் காலமான t = 3 மாதம் என்றால் மூலதனம் ஆண்டுக்கு நான்கு முறை புரள்கிறது.

முதலாளியைப் பொறுத்த வரை, அவரது மூலதனத்தின் புரள்வுக் காலம் என்பது, அவர் தமது மூலதனத்தை முன்னீடு செய்து, அதைக் கொண்டு உபரி-மதிப்பைப் படைத்து, அம்மூலதனத்தை அதன் ஆரம்ப உருவில் திரும்பப் பெறுவதற்குத் தேவைப்படும் காலம் ஆகும்.      

No comments:

Post a Comment