Saturday, December 21, 2013

பகுதி 7 அத்தியாயம் 25 முதலாளித்துவ திரட்டலின் பொது விதி பிரிவு 4 மற்றும் 5

ஒப்பீட்டு உபரி-மக்கள்தொகையின் பல்வேறு வடிவங்கள். முதலாளித்துவத் திரட்டலின் பொது விதி

ஒப்பீட்டு உபரி-மக்கள்திரள் சாத்தியமான சகல வடிவங்களிலும் தலைகாட்டுகிறது. பகுதி நேரம் மட்டுமே வேலைபெறும் அல்லது எந்நேரமும் வேலையற்றவராய் இருக்கும் ஒவ்வொரு தொழிலாளியும் இத்திரளைச் சேர்ந்தவரே.

உபரி-மக்கள்தொகை மூன்று விதமான வடிவங்களில் --- வந்து போவது, உள்ளுறையானது, தேங்கிநிற்பது --- தலைகாட்டுகிறது.

தொழிலாளர் தொகையில் இயற்கையாக ஏற்படும் அதிகரிப்பு மூலதனத் திரட்டலின் தேவைகளை நிறைவு செய்யப் போதுமானதாய் இல்லை என்றாலும், எச்சமயத்திலும் அத்தேவைகளைக் காட்டிலும் அதிகமாய் இருப்பது மூலதன இயக்கத்துக்குரிய ஓர் உள்ளார்ந்த முரண்பாடு.

முதலாளித்துவப் பொருளுற்பத்தி வேளாண்மைத் துறையில் வியாபிக்கையில், எந்த அளவு வியாபிக்கிறதோ அதற்கேற்ப விவசாயத் தொழிலாள மக்களுக்கான வேண்டல் அறுதியாகக் குறைகிறது; வேளாண்மை அல்லாத தொழிலகளில் நடைபெறுவது போல ஆட்களின் இந்த வெளியேற்றத்துக்கு ஈடாக இன்னும் கூடுதலான அளவில் ஆட்கள் உள்ளிழுக்கப்படாமலே வேளாண்மைத் துறையில் திரட்டல் மேலும் மேலும் நடந்தேறுகிறது.

ஒப்பீட்டு உபரி..மக்கள்தொகைக்கு ஆதாரமான இந்த ஊற்று இவ்வாறு எந்நேரமும் சுரந்து கொண்டே இருக்கிறது. ஆனால், நகரங்கள் நோக்கிய இடையறாத இந்நீரோட்டத்துக்கு கிராமப்புறத்திலேயே உட்கிடையான உபரி-மக்கள்தொகை எந்நேரமும் இருத்தல் அவசியமாகிறது. விவசாயி பெறும் கூலி எப்போதுமே கீழ்மட்டத்துக்கு தாழ்ந்து விடுகிறது. 

ஒப்பீட்டு உபரி-மக்கள்தொகையின் மூன்றாவது வகையான தேங்கி நிற்கும் வகை வேலையிலிருக்கும் உழைப்புப் பட்டாளத்தின் பகுதியாக இருந்த போதிலும், முறையின்றி அரிதாகவே வேலை பெறுகிறது. இவ்வாறு அது, மூலதனம் வேண்டும் போது மட்டும் பயன்படுத்திக் கொள்வதற்கான உழைப்புச் சக்தியின் வற்றாத ஏரி ஆகிறது. 

உண்மையில், பிறப்பு-இறப்பு எண்ணிக்கை மட்டுமல்லாமல் குடும்பங்களின் அறுதி அளவும் கூட கூலி மட்டத்தோடு எதிர் விகித உறவு கொண்டுள்ளது; எனவே தொழிலாளர்களின் வெவ்வேறு வகையினர் பயன்படுத்தும் வாழ்வுச் சாதனங்களின் அளவோடும் எதிர்விகித உறவு கொண்டுள்ளது.

ஒப்பீட்டு உபரி-மக்கள்தொகையின் அடிமட்டப் படிவ முடிவில் வக்கற்ற நிலையினுள் ஆழ்ந்து விடுகிறது. சமுதாயத்தின் இந்த அடுக்கை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலாவது: வேலை செய்யக் கூடியவர்கள். இரண்டாவது: அனாதைக் குழைந்தைகளும், வக்கற்ற குழந்தைகளும். மூன்றாவது: நம்பிக்கையிழந்து நலிவுற்றோர்.

ஒப்பீட்டு உபரி-மக்கள் திரள் தோன்றுகையில் வக்கற்ற நிலையும் அதோடு சேர்ந்து தோன்றுகிறது. பின்னதன் அவசியம் முன்னதன் அவசியத்தில் அடங்குகிறது.

முதலாளித்துவ பொருளுற்பத்திக்குத் தேவையான திறனிலாச் செலவுகளில் இதுவும் ஒன்றாகும். ஆனால் மூலதனம் இச்செலவுகளில் பெரும்பகுதி தன் தலையில் விழாமல் தொழிலாளி வர்க்கத்தின் தலையிலும் நடுத்தர வர்க்கக் கீழ்த்தட்டின் தலையிலும் விழும் படி பார்த்துக் கொள்கிறது.

செலவத்தின் செயல்திறன் அதிகமாவதைத் தொடர்ந்து தொழில் துறை சேமப் பட்டாளத்தின் ஒப்பீட்டுப் பருமனும் அதிகமாகிறது.

தொழிலாளி வர்க்கத்தின் பஞ்சைப் பராரிப் பிரிவுகளும் தொழில் துறை சேமப்பட்டாளமும் எவ்வளவுக்கு எவ்வளவு விரிவடைகின்றனவோ, அதிகாரபூர்வமாக வக்கற்றோராய் ஏற்கப்படுவோர் தொகையும் அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாகிறது.

சமுதாய உழைப்பின் உற்பத்தித் திறன் ஓங்குவதன் பயனாய், மேலும் மேலும் குறைந்த மனித சக்தியைக் கொண்டு மேலும் மேலும் கூடுதலான உற்பத்திச் சாதனங்களை இயங்க வைக்கும் விதியானது முதலாளித்துவச் சமுதாயத்தில் --- தொழிலாளி உற்பத்திச் சாதனங்களை வேலை வாங்குவதற்கு பதில் உற்பத்திச் சாதனங்கள் தொழிலாளியை வேலை வாங்கும் இச்சமுதாயத்தில் --- தலைகீழ் மாற்றமடைந்து, உழைப்பின் உற்பத்தித் திறன் எவ்வளவுக்கு எவ்வளவு உயர்கிறதோ, வேலை வாய்ப்புச் சாதனங்கள் மீது தொழிலாளர்களின் நெருக்குதல் அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாகிறது.

உற்பத்திச் சாதனங்களும் உழைப்பின் உற்பத்தித் திறனும் உற்பத்தித் திறனுள்ள மக்கள் தொகையைக் காட்டிலும் வேகமாக அதிகரிக்கின்றன என்ற உண்மை முதலாளித்துவ சமுதாயத்தில் தலைகீழ் மாற்றமடைந்து, உழைப்பாளி மக்கள்தொகையானது, அதன் அதிகரிப்பை மூலதனம் தன் தற்பெருக்கத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முடிவதைக் காட்டிலும் எப்போதுமே துரிதமாய் அதிகரிக்கிறது.

மூலதனத் திரட்டல் எந்த அளவுக்கு நடைபெறுகிறதோ, அந்த அளவுக்கு தொழிலாளியின் கதி --- அவரது ஊதியம் உயர்வானதென்றாலும் சரி, தாழ்வானதென்றாலும் சரி --- மேலும் மோசமடைந்தே தீரும்.

செல்வமெல்லாம் ஒரு முனையில் திரள, எதிர் முனையில், அதாவது எந்த வர்கத்தின் உற்பத்திப் பொருள் மூலதனமாக வடிவெடுக்கிறதோ அந்த வர்க்கத்தின் முனையில், துன்பதுயரமும், ஓயாமற் பாடுபடுவதன் வேதனையும் அடிமை இயல்பும் அறியாமையும் மிருகத்தனமும் ஒழுக்கச் சீர்கேடும் திரளக் காண்கிறோம்.  

(பிரிவு 5 முழுவதும் முதலாளித்துவத் திரட்டலின் பொது விதிக்கான சில எடுத்துக்காட்டுகள்  தரப்பட்டுள்ளது.)

Thursday, December 19, 2013

பகுதி 7 அத்தியாயம் 25 முதலாளித்துவ திரட்டலின் பொது விதி பிரிவு 3

ஒப்பீட்டு உபரி-மக்கள் தொகை அல்லது தொழில் துறை சேமப் பட்டாளம் மேன்மேலும் அதிகமாதல்

முதலாளித்துவ முறையிலான பொருளுற்பத்தியும், அதோடு கூடவே உழைப்பின் உற்பத்தித் திறனில் ஏற்படும் வளர்ச்சியும், மூலதனத்தின் அங்கக இயைபில் அதனால் உண்டாகும் மாற்றமும் மூலதனத் திரட்டலின் முன்னேற்றத்துக்கு அல்லது சமுதாய செல்வத்தின் வளர்ச்சிக்கு இணையான வேகத்தில் மட்டுமே நடைபெறுவதில்லை. இவையெல்லாம் இன்னும் கூட மிக அதிக வேகத்தில் நடைபெறுகின்றன. ஏனென்றால், மொத்த சமுதாய மூலதனத்தின் அறுதிப் பெருக்கமாகிய வெறும் திரட்டலோடு கூடவே அந்த மொத்தத்தில் உள்ளடங்கிய தனித்தனி மூலதனங்களின் மையப்பாடும் நடந்தேறுகிறது. மேலும் ஏனென்றால் கூடுதல் மூலதனத்தின் தொழில் நுட்ப இயைபில் மாற்றம் ஏற்படுகையில் ஆரம்ப மூலதனத்தின் தொழில் நுட்ப இயைபிலும் இதையொத்த மாற்றம் ஏற்படுகிறது. எனவே, மூலதனத் திரட்டல் முன்னேறிச் செல்லும்போது, மாறும்-மூலதனத்துடன் மாறா-மூலதனத்திற்குள்ள விகிதம் மாறுகிறது.

மாறாப் பகுதியுடன் ஒப்பிடுமிடத்து மாறும் பகுதி வளர்வேகத்தில் குறைந்து செல்கிறது. மூலதனத்தின் மாறும் பகுதியில் வளர்வேகத்தில் ஏற்படும் இந்த ஒப்பீட்டுக் குறைவு --- மொத்த மூலதனத்தின் வளர்வேக அதிகரிப்புடன் கூடவே ஏற்பட்டு இந்த அதிகரிப்பைக் காட்டிலும் எப்போதுமே துரிதமாய் நிகழும் இக்குறைவு --- எதிர் முனையில் தலை கீழ் வடிவம் பெறுகிறது; அதாவது உழைக்கும் மக்கள் தொகையில் ஏற்படும் அறுதி அதிகரிப்பாக, மாறும்-மூலதனம் அல்லது வேலை வாய்ப்புச் சாதனங்களின் அதிகரிப்பைக் காட்டிலும் எப்போதும் துரிதமாய் ஏற்படும் அதிகரிப்பாகத் தோற்றமளிக்கிறது. 

உண்மையில் முதலாளித்துவத் திரட்டல்தான் ஒப்பளவில் தேவைக்கதிகமான உழைப்பாளி மக்கள் தொகையை --- அதாவது மூலதனத் தற்பெருக்கத்தின் சராசரித் தேவைகளுக்குப் போதுமானதை விடவும் அதிகமானது என்பதால் உபரி..மக்கள்தொகை எனப்படுவதை --- ஒய்வு ஒழிச்சலின்றி, அதன் ஆற்றலுக்கும் அளவுக்குமான நேர் விகிதத்தில் உண்டாக்குகிறது.

எல்லாத் துறைகளிலுமே மூலதனத்தின் மாறும் பகுதி அதிகரிப்பதும், ஆகவே அதனால் வேலை பெறும் தொழிலாளர்களின் தொகை அதிகமாவதும் கொந்தளிப்பான தொழில்..வாணிப ஏற்ற இறக்கங்களோடும் தாற்காலிகமாய் உண்டாகிற உபரி-மக்கள்தொகையோடும் எப்போதும் சேர்ந்துதான் ஏற்படுகின்றன.

மூலதனம் கூடுதலான தொழிலாளர்களை ஈர்ப்பதுடனாகவே கூடுதலான தொழிலாளர்களை வெளியே விரட்டும் நிகழ்வின் வீச்சும் மேன்மேலும் விரிவடைகிறது.

உழைக்கும் மக்கள் தாம் படைக்கும் மூலதனத்தின்  திரட்டலை உண்டாக்குவதோடு கூட. தாமே ஒப்பளவில் தேவைக்கதிகமானோராய் ஆக்கப்படுவதற்கான, ஒப்பீட்டு உபரி..மக்கள்தொகையாக மாற்றப்படுவதற்கான சாதனங்களையும் படைக்கிறார்கள்; அதோடு எப்போதுமே மேன்மேலும் அதிகமாகிச் செல்லும் அளவில் இதனைச் செய்கிறார்கள். இது முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறைக்கே உரித்தான மக்கள்தொகை விதியாகும். 

மூலதனத் திரட்டலின் அல்லது முதலாளித்துவ அடிப்படையிலான செல்வப் பெருக்கத்தின் அவசிய விளைவாய் இருக்கும் உபரியான உழைக்கும் மக்கள் தொகை, மறு புறத்தில் முதலாளித்துவ திரட்டலின் நெம்புகோலாகிறது; அது மட்டுமன்று, முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை நிலவிடத் தேவையான நிலைமையும் ஆகிறது. இந்த உபரியான உழைக்கும் மக்கள், மூலதனமே அதன் சொந்தச் செலவில் வளர்த்து ஆளாக்கியது போல் முற்றிலும் அதன் உடைமையாகி, வேண்டும் போது பயன்படுத்திக் கொள்ளத் தயார் நிலையில் உள்ள தொழில் துறை சேமப் பட்டாளம் (Industrial Reserve Army) ஆகி விடுகிறார்கள்.

நவீனத் தொழில் துறைக்கே உரித்தான பாதையாகிய சராசரி முனைப்பு, அதிமும்முர உற்பத்தி, நெருக்கடியும் தேக்கமும் ஆகிய கட்டங்கள் அடங்கிய பத்தாண்டு சகடமானது (இடையிடையே சிறுசிறு அலைவுகளைக் கொண்டது) தொழில் துறை சேமப் பட்டாளம் அல்லது உபரி-மக்கள்தொகை இடையறாது உண்டாவதிலும், மறுபடியும் உண்டாவதிலும் ஆதாரப்பட்டுள்ளது. 

மக்கள் தொகை அறுதியாக உயர்ந்தாலும் உயரா விட்டாலும் உழைப்பாளர் தொகை உயர வேண்டும். தொழிலாளர்களில் ஒரு பகுதியை ஓயாமல் "விடுவிக்கும்" சாமானிய நிகழ்முறையே உழைப்பாளர் தொகையை இவ்விதம் உயரச் செய்கிறது.

நவீனத் தொழில்துறையின் இயக்கப் போக்கு முழுவதுமே உழைக்கும் மக்களில் ஒரு பகுதியினரை வேலையில்லாதவர்களாக அல்லது பகுதி நேரத்துக்கு மேல் வேலையில்லாதவர்களாக ஓயாமல் மாற்றுவதில் ஆதாரப்பட்டுள்ளது.   

ஒரு புறத்தில், மூலதனத் திரட்டல் முன்னேறிச் செல்கையில், முன்னிலும் அதிகமான மாறும்-மூலதனம் முன்னிலும் அதிகமான தொழிலாளர்களை அமர்த்தாமலே முன்னிலும் அதிகமான உழைப்பைக் கறக்கிறது; மறு புறத்தில், ஒரே பருமனுள்ள மாறும்-மூலதனம் ஒரே அளவு உழைப்புச் சக்தியைக் கொண்டு முன்னிலும் அதிகமான உழைப்பைக் கறக்கிறது; இறுதியாக உயர்தர உழைப்புச் சக்திகளை அகற்றி, கூடுதலான தொகையில் மட்டரக உழைப்புச் சக்திகளை செயலில் இறக்குகிறது.

ஆகவே, ஒப்பீட்டு உபரி-மக்கள்தொகையின் (relative surplus population) உருவாக்கம் அல்லது தொழிலாளர்களின் வெளியேற்றம் என்பது, மூலதனத் திரட்டலின் முன்னேற்றத்துடன் சேர்ந்து வருவதும், அம்முன்னேற்றத்தால் முடுக்கி விடப்படுவதுமான பொருளுற்பத்தி நிகழ்முறையின் தொழில் நுட்பப் புரட்சியை விடத் துரிதமாக நடக்கிறது; இப்புரட்சிக்கிணையாய் மூலதனத்தின் மாறாப் பகுதியோடு ஒப்பிடுமிடத்து மாறும் பகுதி குறைந்து செல்வதை விடவும் துரிதமாக நடக்கிறது.     

தொழிலாளி வர்க்கத்தில் வேலை பெற்ற பகுதியின் மிகையுழைப்பு சேமப் பட்டாள அணிகளைப் பெருக்குகிறது. அதே போது சேமப் பட்டாளத்தின் போட்டியானது வேலை பெற்றோரை முன்னிலும் அதிகமாய் நிர்பந்தித்து, மிகையுழைப்புக்கு சம்மதிக்குமாறும், மூலதனத்தின் சொல்லுக்கு அடங்கி நடக்குமாறும் கட்டாயப்படுத்தப்படுகிறது. தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதி மிகையுழைப்புக்கு ஆட்படுவதால் மறு பகுதி வேலையின்றி சும்மாயிருக்கும்படி நிர்பந்திக்கப்படுகிறது. நேர்மாறாக, பின் சொன்ன நிலைமையால் முன்சொன்ன நிலைமையும் ஏற்படுகிறது.

பொதுவாக கூலியின் அலைவுகளை ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து, பிரத்தியேகமாய் தொழில் துறை சேமப் பட்டாளத்தின் பெருக்கத்தாலும் குறுக்கத்தாலுமே அவை இயக்கப்படுகின்றன‌

இந்தப் பெருக்கமும் குறுக்கமும் செயல்படும் பட்டாளமாகவும் சேமப் பட்டாளமாகவும் தொழிலாளி வர்க்கம் பிரிந்துள்ள மாறுபடும் விகிதங்களாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன.

இந்நிலையில், மூலதனத்தின் செயல் மக்கள்தொகையில் ஏற்படும் அறுதி மாற்றத்தைப் பொறுத்ததெனப் பசப்புகிற விதி அதியற்புத விதிதான்.

தொழிலாளர்கள் எவ்வளவு அதிகமாய் வேலை செய்கிறார்களோ, பிறருக்காக எவ்வளவு அதிகமாய் செல்வத்தை உற்பத்தி செய்கிறார்களோ, அவர்களது உற்பத்தித் திறன் எவ்வளவு அதிகரிக்கிறதோ, மூலதனத்தின் தற்பெருக்கச் சாதனம் என்ற அவர்களின் பணி எப்படி அதே அளவுக்கு அவர்களுக்கு மேன்மேலும் ஆபத்து விளைவிப்பதாகி விடுகிறது என்ற இரகசியத்தை அவர்கள் புரிந்து கொள்ளத் தலைப்படுகிறார்கள்; முதலாளித்துவ பொருளுற்பத்தியின் இந்த இயற்கை விகிதங்கள் வர்க்கத்தின் மீது ஏற்படுத்டும் நாச விளைவுகளைப் போக்கிட அல்லது தணித்திட வேலைபெற்றோருக்கும் வேலையற்றறோருக்குமிடையில் முறையான ஒத்துழைப்பை ஏற்படுத்தத் தொழிற் சங்கங்கள் மூலமும் பிறவற்றின் மூலமும் முயற்சி எடுக்கிறார்கள்.

Thursday, December 12, 2013

பகுதி 7 அத்தியாயம் 25 முதலாளித்துவ திரட்டலின் பொது விதி பிரிவு 2

மூலதனத் திரட்டலோடும் அதோடு சேர்ந்து நடைபெறும் மூலதனக் குவிப்போடும் கூடவே மூலதனத்தின் மாறும் பகுதி ஒப்பளவில் குறைந்தும் செல்லுதல்

முதலாளித்துவ அமைப்புக்கான பொது அடிப்படை இருக்குமாயின், மூலதனத் திரட்டலின் போது, சமுதாய உழைப்பினது உற்பத்தித் திறனின் வளர்ச்சி அத்திரட்டலுக்கு மிகவும் சக்திவாய்ந்த உந்துகோல் ஆகி விடும் படியான ஒரு நிலை வருகிறது.

எந்தவொரு சமுதாயத்திலும் உழைப்பினது உற்பத்தித் திறனின் படித்தரமானது, ஓர் உழைப்பாளர் குறிப்பிட்ட கால அளவில் உழைப்புச் சக்தியை ஒரே அளவு விறுவிறுப்புடன் பிரயோகித்து ஒப்பளவில் எவ்வளவு உழைப்புச் சாதனங்களை உற்பத்திப் பொருட்களாக மாற்றுகிறார் என்பதன் வாயிலாகத் தெரிவிக்கப்படுகிறது.

உற்பத்திச் சாதனங்களில் சிலவற்றின் அதிகரிப்பு உற்பத்தித் திறன் அதிகரிப்பதன் விளைவாகும்; வேறு சிலவற்றின் அதிகரிப்பு அவ்வுற்பத்தித் திறன் அதிகரிப்பதற்கு தேவையான நிலைமையாகும்.

உழைப்பின் உற்பத்தித் திறனில் ஏற்படும் உயர்வு உழைப்பால் இயக்கப்படும் உற்பத்திச் சாதனங்களின் திரளுடன் ஒப்பிடுகையில் உழைப்பின் திரளில் ஏற்படும் குறைவாக, அல்லது உழைப்பு நிகழ்முறையின் இலக்குப் பொருளோடு ஒப்பிடுகையில் காரணப் பொருளில் ஏற்படும் குறைவாகக் காட்சியளிக்கிறது.

மூலதனத்தின் தொழில் நுட்ப இயைபில் ஏற்படும் இந்த மாற்றம், உற்பத்திச் சாதனங்களை உயிர்பெறச் செய்கிற உழைப்புச் சக்தியின் திரளோடு ஒப்பிடுகையில் அச்சாதனங்களின் திரளில் ஏற்படும் இந்தப் பெருக்கம் மூலதனத்தின் மதிப்பு..இயைபில் மாறும் பகுதி குறைந்து மாறாப் பகுதியில் ஏற்படும் அதிகரிப்பாகப் பிரதிபலிக்கிறது.

சரக்கின் விலையில் உற்பத்திச் சாதனங்களின் அல்லது நுகரப்பட்ட மூலதனத்தின் மாறாப் பகுதியின் மதிப்பை மட்டும் குறிக்கிற கூறினது ஒப்பீட்டுப் பருமன், மூலதனத் திரட்டலின் வளர்ச்சிக்கு நேர் விகிதம் கொண்டுள்ளது; உழைப்புக்குத் தரப்படும் ஊதியத்தை (மூலதனத்தின் மாறும் பகுதியை) குறிக்கும் விலைக் கூறினது ஒப்பீட்டுப் பருமன் மூலதனத் திரட்டலின் வளர்ச்சிக்கு எதிர் விகிதம் கொண்டுள்ளது.

மூலதனத்தின் மாறாப் பகுதியோடு ஒப்பிடுகையில் மாறும் பகுதியில் ஏற்படும் இந்த குறைவு, அதாவது மூலதனத்தின் மதிப்பு-இயைபிலான மாற்றம் அதன் பொருட் கூறுகளின் இயைபிலான மாற்றத்தை தோராயமாகவே காட்டுகிறது. 

மாறா-மூலதனத்துக்கும் மாறும்-மூலதனத்துக்கும் இடையிலான வேறுபாட்டின் அதிகரிப்பு, மாறா-மூலதனம் மாற்றப்பட்டு வரும் உற்பத்திச் சாதனங்களின் திரளுக்கும் மாறும்-மூலதனம் மாற்றப்பட்டு வறும் உழைப்புச் சக்தியின் திரளுக்கும் இடையிலான வேறுபாட்டின் அதிகரிப்பை விட மிகக் குறைவு.

சரக்கு உற்பத்தி அடிப்படையாய் இருக்கும் போது, பெருவீதப் பொருளுற்பத்தி முதலாளித்துவ வடிவமுடையதாகவே இருக்க முடியும். எனவே தனித் தனியான சரக்கு உற்பத்தியாளர்களின் கையில் மூலதனம் ஓரளவு திரட்டப்படுவது முதலாளித்துவ முறையிலமைந்த பொருளுற்பத்திக்கு இன்றியமையாத் தேவையாகும். ஆகவே கைத்தொழிலிலிருந்து முதலாளித்துவத் தொழில் துறைக்கு மாறிச் செல்லும் காலத்தில் இது நிகழ்வதாக நாம் அனுமானித்துக் கொள்ள வேண்டியிருந்தது. இதனை ஆதித் திரட்டல் (primitivi accumulation) எனலாம். ஏனென்றால் இத்திரட்டல் முதலாளித்துவ பொருளுற்பத்தியின் வரலாற்று விளைவாக இருப்பதற்கு பதில் அப்பொருளுற்பத்தியின் வரலாற்று அடிப்படையாக இருக்கிறது. 

உழைப்பின் உற்பத்தித் திறனை உயர்த்துவதற்கு உருவாக்கப்படும் எல்லா வழிமுறைகளும் அதே போது உபரி-மதிப்பு அல்லது உபரி-உற்பத்திப் பணடத்தின் உற்பத்தியை அதிகமாக்குவதற்கான வழிமுறைகளும் ஆகும். இந்த உபரி-மதிப்பு அல்லது உபரி-உற்பத்திப் பண்டம்தான் மூலதனத் திரட்டலுக்கு ஆதாரமாகும். ஆகவே, இவ்வழிமுறைகள் மூலதனம் மூலதனத்தை உற்பத்திச் செய்வதற்கான, அதாவது மூலதனத் திரட்டலை முடுக்கிவிடுவதற்கான வழிமுறைகளும் ஆகும்.

இதுவே விரிதிற உற்பத்திக்கும், அதனுடன் கூடவே உழைப்பின் உற்பத்தித் திறனை உயர்த்தும் வழிமுறைகளுக்கும், உபரிமதிப்பின் உற்பத்தியை முடுக்கி விடுவதற்கும் அடிப்படை ஆகிறது.

மூலதனத் திரட்டலும் முதலாளித்துவ முறையிலமைந்த‌ பொருளுற்பத்தியும் --- ஒன்றுக்கொன்று அளித்துக் கொள்ளும் உந்துதல்களின் கூட்டு விகிதத்தில் --- மூலதனத்தின் தொழில் நுட்ப இயைபில் ஏற்படுத்தும் மாற்றம் மூலதனத்தின் மாறாப் பகுதியுடன் ஒப்பிடுகையில் மாறும் பகுதியை மேலும் மேலும் சிறிதாக்கிச் செல்லும் மாற்றமாகும்.

தனிப்பட்ட ஒவ்வொரு மூலதனமும் பெரிதாகவோ சிறிதாகவோ அமைந்த உற்பத்திச் சாதனக் குவிப்பும் அதற்கிசைவாய் பெரிதாகவோ சிறிதாகவோ அமைந்த உழைப்புப் பட்டாளத்தின் (labour-army) மீதான ஆதிபத்தியமும் ஆகும்.

சமுதாய மூலதனத்தின் வளர்ச்சி தனித்தனியான பல மூலதனங்களின் வளர்ச்சியின் வாயிலாய் ஏற்படுகிறது. தனித்தனி மூலதனங்கள் அதிகரிக்கின்றன; உற்பத்திச் சாதனக் குவிப்பும் அதிகரிக்கிறது; மற்றெல்லா நிலைமைகளும் மாறாதிருக்க, இந்த அதிகரிப்பானது அந்தத் தனித்தனி மூலதனங்கள் மொத்த சமுதாய மூலதனத்தின் ஈவுப் பகுதிகளாய் அமையும் அதே விகிதாசாரத்தில் அமைகிறது.

மற்றவை மாறாதிருக்க, சமுதாயத்தின் பொருளுற்பத்திச் சாதனங்கள் தனிப்பட்ட முதலாளிகளின் கையில் மேலும் மேலும் குவிந்து செல்வதற்கு சமுதாய செல்வப் பெருக்கத்தின் அளவு வரம்பிடுகிறது.

குறிப்பிட்ட ஒவ்வொரு உற்பத்தித் துறையிலும் இடம் பெற்றுள்ள சமுதாய மூலதனப் பகுதி எதிரும் புதிருமாய் நின்று போட்டியிடும் சுயேச்சையான சரக்கு உற்பத்தியாளர்களாகிய பல முதலாளிகளுடையே பிரிந்திருக்கிறது. ஆகவே மூலதனத் திரட்டலும் அதன் உடநிகழ்வான மூலதனக் குவிப்பும் (concentration) திட்டுதிட்டாய்ச் சிதறுண்டு நிகழ்வது மட்டுமல்லாமல், செயல்படும் மூலதனம் ஒவ்வொன்றின் பெருக்கமும் புதிய மூலதனங்கள் உருவாவதாலும் பழைய மூலதனங்கள் பிளவுண்டு பிரிவதாலும் தடைபடுகிறது. ஆகவே, மூலதனத் திரட்டலானது ஒரு புறத்தில் உற்பத்திச் சாதனங்களும் உழைப்பின் மீதான ஆதிபத்தியமும் மேன்மேலும் அதிகமாய்க் குவிவதாகவும், மறுபுறத்தில் தனித்தனியான பல மூலதனங்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகியோடுவதாகவும் அமைகிறது.

சமுதாயத்தின் மொத்த மூலதனம் தனித்தனியான பல மூலதனங்களாக இப்படி பிளவுண்டு பிரிவதற்கு, அதாவது அதன் பின்னப் பகுதிகள் ஒன்றிலிருந்து ஒன்று விலகி ஓடுவதற்கு எதிர் வினையாக அவை ஒன்றையொன்று கவர்ந்து விழுங்கும் நிகழ்வு அமைகிறது. இந்நிகழ்வை உற்பத்திச் சாதனங்கள், உழைப்பின் மீதான ஆதிபத்தியம் ஆகியவற்றின் நேரடி குவிப்பாக, திரட்டலே தவிர வேறில்லை என்னும் படியான இந்தக் குவிப்பாக கொள்ளலாகாது. இது ஏற்கனவே உருவான மூலதனங்களின் குவிப்பாகும்; தனித்தனியாக செயல்படும் அவற்றினது சுயேச்சையின் அழிவாகும்; முதலாளியை முதலாளியே விழுங்கிடும் உடைமைப் பறிப்பு (expropriation) ஆகும். மிகப் பலவான சிறு சிறு மூலதனங்கள் மிகச் சிலவான பெரும் பெரும் மூலதனங்கள் ஆகிடும் மாற்றமாகும்.

ஓரிடத்தில் மூலதனம் ஒரே கையில் பெருந்திரளாய் வளர்ந்து பெருகுகிறதென்றால், பிறிதோர் இடத்தில் மிகப் பலரும் அதனைப் பறிகொடுப்பதே இதற்குக் காரணம். மூலதனத் திரட்டலிலிருந்தும் மூலதனக் குவிப்பிலிருந்தும் இது முற்றிலும் வேறானது; முறைப்படி சொல்லுகையில் மூலதன மையப்பாடு (centralisation) என்பது இதுவே.

சரக்குகளை மலிவாக்கி போட்டா போட்டி என்னும் போர் நடத்தப்படுகிறது. சரக்குகளை மலிவாக்குதல், மற்றவை மாறாதிருக்க, உழைப்பின் உற்பத்தித் திறனைப் பொறுத்தது. உழைப்பின் உற்பத்தித் திறனோ உற்பத்தியின் அளவு வீதத்தைப் பொறுத்தது. எனவே, பெரிய மூலதனங்கள் சிறிய மூலதனங்களை வீழ்த்துகின்றன. மேலும், முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை வளர்ந்து செல்லும் போது, இயல்பான நிலைமைகளில் தொழிலை நடத்திச் செல்வதற்கு அவசியமான தனிப்பட்ட மூலதனத்தின் குறைந்தபட்சத் தொகை அதிகமாவது தெரிந்ததே. எனவே, சிறிய மூலதனங்கள் ஏதோ இங்குமங்குமாக அல்லது அரை குறையாக மட்டுமே நவீனத் தொழில்துறை (Modern Industry) தன்பிடிக்குள் கொண்டுவந்திருக்கும் உற்பத்தித் துறைகளுக்குள் நெரிசலாய்ப் புகுந்து கொள்கின்றன.

முட்டி மோதுகிற மூலதனங்களுக்கிடையே இத்துறைகளில் அவற்றின் எண்ணிக்கைக்கு நேர் விகிதத்திலும், பருமன்களுக்கு எதிர் விகிதத்திலும் கடும் போட்டி நடக்கிறது. இப்போட்டியால் சிறு முதலாளிகள் பலரும் நாசமாகிப் போகின்றனர். அவர்களது மூலதனங்களில் ஒரு பகுதி அவர்களை வீழ்த்தி வெற்றி கொண்டவர்களின் கைக்குச் செல்கிறது; மறு பகுதி மறைந்து போகிறது. மேலும், முதலாளித்துவ பொருளுற்பத்தியைத் தொடர்ந்து புத்தம்புதியதொரு சக்தி களத்தில் இறங்குகிறது --- அதுதான் கடன்-செலாவணி அமைப்பு (credit system). ஆரம்பக் கட்டங்களில், இவ்வமைப்பு மூலதனத் திரட்டலின் பணிவன்பு மிக்க உதவியாளராய் மெல்ல மெல்ல நுழைகிறது, சமுதாயத்தின் மேற்பரபில் சிதறிக் கிடக்கும் பணச் செல்வாதரங்களைக் கண்ணுக்குப் புலப்படாத இழைகள் கொண்டு இழுத்து, தனித்தனியான அல்லது கூட்டாய்ச் சேர்ந்த முதலாளிகளின் கையில் சேர்ப்பிக்கிறது. ஆனால் சீக்கிரம் அது போட்டாப் போட்டி எனும் போரில் பயங்கரமான புதிய ஆயுதமாகிறது. இறுதியில் மூலதனங்களின் மையப்பாட்டுக்கான பிரம்மாண்டமான சமூகப் பொறியமைவாய் மாற்றமடைகிறது.

முதலாளித்துவ பொருளுற்பத்தியும், மூலதனத் திரட்டலும் வளர்ந்தோங்க ஓங்க மூலதனங்களின் மையப்பாட்டுக்கான சக்தி மிக்க இருபெரும் நெம்புகோலகளாகிய போட்டியும் கடன்..செலாவணியும் வளர்ந்திடுகின்றன.

முதலாளித்துவ பொருளுற்பத்தி விரிவடைந்து, ஒரு புறம் பிரம்மாண்டத் தொழில் முயற்சிகள் எழுவதற்கு வேண்டிய சமூகத் தேவையையும், மறு புறம் அம்முயற்சிகள் ஈடேறுவதற்கான தொழில் நுட்பச் சாதனங்களையும் உண்டாக்குகிறது.

மையப்பாடு நோக்கிய இயக்கத்தின் ஒப்பீட்டுப் பெருக்கமும் ஆற்றலும், ஏற்கனவே அடைந்துள்ள முதலாளித்துவச் செல்வத்தின் பருமனாலும் பொருளாதார பொறியமைவின் மேன்மையாலும் ஓரளவுக்கு நிர்ணயிக்கப்படுகிறது என்றாலும், மையப்பாட்டிலான முன்னேற்றம் சமுதாய மூலதனத்தினது பருமனின் நேர்முக வளர்ச்சியை எவ்விதத்திலும் பொறுத்ததன்று. மையப்பாட்டுக்கும் குவிப்புக்கும் உள்ள பிரத்தியேக வேறுபாடு இதுவே; குவிப்பு என்பது விரிதிற மறுவுற்பத்தியேதான்.

இந்த மையப்பாடு தாக்கிக் கைப்பற்றும் வன்முறை வழியிலும் நடைபெறலாம்; அதாவது சிற்சில மூலதனங்கள் தலையாயக் கவர்ச்சி மையங்களாகி, ஏனையவற்றின் தனிப்பட்ட ஒன்றிப்பைத் தகர்த்து, உடைந்து பிரியும் துண்டுகளைக் கவர்ந்து கொள்ளும் வழியிலும் நடைபெறலாம். அல்லது, உருவாகி வருகிறவையும் ஏற்கனவே உருவாகி விட்டவையுமான பல மூலதனங்கள் கூட்டு பங்கு நிறுமங்களாக (joint-stock companies) அமைதி வழியிலும் ஒன்றாகலாம்.  

மறுவுற்பத்தியானது வட்ட வடிவிலிருந்து சுழலேணி வடிவிற்கு மாறுகையில் மூலதனத்தில் ஏற்படும் படிப்படியான அதிகரிப்பே திரட்டலாகும்.

தனித்தனியான சில மூலதனங்கள் ஓர் இருப்புப் பாதையை நிறுவுவதற்குத் தேவையான அளவுக்குப் பெரிதாகும் வரை மூலதனத் திரட்டல் நடைபெறுவதற்காகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுமேயானால், உலகம் இன்னமும் இருப்புப் பாதைகளற்றதாகவே இருக்கும். ஆனால் மையப்பாடு கூட்டுப் பங்கு நிறுமங்களை அமைத்து, கண் சிமிட்டும் நேரத்துக்குள் இதை செய்து முடித்தது.      

மையப்பாடு இவ்விதம் திரட்டலின் விளைவுகளைத் தீவிரப்படுத்தியும் விரைவுபடுத்தியும் செல்லும் அதே நேரத்தில், மூலதனத்தின் மாறாப் பகுதியை உயர்த்தி, இதன் மூலம் உழைப்புக்கான ஒப்பீட்டு வேண்டலை சுருங்கச் செய்யும் புரட்டசிகளை --- மூலதனத்தின்  தொழில் நுட்ப இயைபிலான புரட்சிகளை --- விரிவுபடுத்தியும்  விரைவுபடுத்தியும் செல்கிறது.

ஒரு புறத்தில், திரட்டலின் போது உருவாகும் கூடுதல் மூலதனம் அதன் பருமனுடன் ஒப்பிடுகையில் மேலும் மேலும் குறைவான தொழிலாளர்களையே அமர்த்திக் கொள்கிறது; மறு புறத்தில், இயைபில் மாற்றம் பெற்று கால வட்ட முறையில் மறுவுற்பத்தி செய்யப்படும் பழைய மூலதனம் முன்பு அதனிடம் வேலை பெற்ற தொழிலாளர்களில் மேலும் மேலும் அதிகமானோரை வேலையற்றவராக்கி விரட்டுகிறது.  

Wednesday, December 11, 2013

பகுதி 7 அத்தியாயம் 25 முதலாளித்துவ திரட்டலின் பொது விதி பிரிவு 1

மூலதனத்தின் இயைபு மாறாதிருக்க, மூலதனத் திரட்டலுடன் கூடவே உழைப்புச் சக்திக்கான வேண்டல் அதிகரித்தல்.

மதிப்பென்ற முறையில் மூலதனம் மாறா-மூலதனமாகவும், மாறும்-மூலதனமாகவும், அதாவது உற்பத்திச் சாதனங்களின் மதிப்பாகவும் உழைப்புச் சக்தியின் மதிப்பாகிய கூலியின் மொத்தத் தொகையாகவும் எவ்விதத்தில் பிரிக்கப்படுகிறது என்பது மூலதனத்தின் இயைபை நிர்ணயிக்கிறது.

பிண்டப் பொருளென்ற முறையில், உற்பத்தி நிகழ்முறையில் செயல்படும் மூலதனம் அனைத்தும் உற்பத்திச் சாதனங்களாகவும், உயிருள்ள உழைப்புச் சக்தியாகவும் பிரிக்கப்படுகிறது. இதனை மூலதனத்தின் மதிப்பு-இயைபு (value..composition) என்று அழைக்கிறேன்.

ஒரு புறம் ஈடுபடுத்தப்படும் உற்பத்திச் சாதனங்களின் திரளுக்கும், மறு புறம் அவற்றை ஈடுபடுத்துவதற்கு தேவையான உழைப்பின் திரளுக்கும் இடயிலான உறவால் நிர்ணயிக்கப்படுகிறது. இதனை தொழில்நுட்ப இயைபு (technical composition) என்று அழைக்கிறேன்.

இவையிரண்டும் கறாரான இடையுறவு (correlation) கொண்டவை. இந்த இடையுறவைப் புலப்படுத்தும் விதத்தில் மூலதனத்தின் மதிப்பு-இயைபை ---அது தொழில்நுட்ப இயைபினால் நிர்ணயிக்கப்பட்டு அதன் மாற்றங்களை படம் பிடித்துக் காட்டுகிற அளவுக்கு --- மூலதன அங்கக இயைபு (organic composition) என்று அழைக்கிறேன்.

கூடுதல் மூலதனமாக மாற்றப்படும் உபரி-மதிப்பில் ஒரு பகுதி, எப்போதுமே, மாறும்-மூலதனமாக அல்லது தொழிலாளர் நுகர்வுக்கான கூடுதல் நிதியமாக மாற்றப்பட வேண்டும். உழைப்புக்கான வேண்டலும் தொழிலாளர்களின் வாழ்வுச் சாதன நிதியமும் மூலதனம் அதிகரிக்கும் அதே விகிதத்தில் அதிகரிக்கின்றன என்பதும். மூலதனம் அதிகரிக்கும் அதே வேகத்தில் அதிகரிக்கின்றன என்பதும் தெளிவு.

புதிதாய் தோன்றிய சமுதாயத் தேவைகள் இன்னபிறவற்றின் விளைவாக மூலதனத்தின் முதலீட்டுக்கான புதிய சந்தைகளோ புதிய மண்டலங்களோ திறக்கப்படுவது போன்ற காரணங்களால் மேலும் மேலும் செல்வம் சேர்ப்பதற்கான தூண்டுதலுக்கு ஆளாகி, உபரி-மதிப்பு அல்லது உபரி-உற்பத்திப் பண்டம் மூலதனமாகவும் வருவாயாகவும் பிரிக்கப்படுவதில் ஏற்படும் மாற்றத்தின் மூலமே திரட்டல் வீதம் திடுமென உயரலாம். திரட்டப்பட்டுக் கொண்டிருக்கும் மூலதனத்தின் தேவைகளிலான அதிகரிப்பு இம்மாதிரியான காரணங்களால் உழைப்புச் சக்தியில் அல்லது தொழிலாளர் தொகையிலான அதிகரிப்பை விஞ்சிவிடலாம்.

சாமானிய மறுவுற்பத்தியானது முதலாளித்துவ உறவை, அதாவது முதலாளிகள், கூலித் தொழிலாளர்கள் என்ற உறவை மறுவுற்பதி செய்வது எப்படியோ, அதே போல மேன்மேலும் அதிகமாகிச் செல்லும் அளவு வீதத்திலான மறுவுற்பத்தி --- அதாவது மூலதனத் திரட்டல் --- மேன்மேலும் அதிகமாகிச் செல்லும் அளவுவீதத்திலான மூலதன உறவை மறுவுற்பத்தி செய்கிறது.  திரளான உழைப்புச் சக்தியின் மறுவுற்பத்தி மூலதனத்தின் மறுவுற்பத்திக்கு இன்றியமையாதது. இந்த உழைப்புச் சக்தி மூலதனத்தின் தற்பெருக்கத்துக்காக அம்மூலதனத்தோடு ஓயாமல் மறுபடியும் மறுபடியும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டியதும், மூலதனத்திலிருந்து விடுபட முடியாததும் ஆகும்.

மூலதனத் திரட்டல் என்பது இவ்விதம் பாட்டாளி வர்க்க பெருக்கத்தைக் குறிப்பதாகும்.

உழைப்புச் சக்தியானது எந்த அளவுக்கு உற்பத்திச் சாதனங்களை மூலதனமாக தொடருமாறு பேணிக் காத்திடுகிறதோ, தன் சொந்த மதிப்பை மூலதனமாக மறுவுற்பத்தி செய்கிறதோ, ஊதியமில்லா உழைப்பின் வாயிலாக கூடுதல் மூலதனம் தோன்றுவதற்கான ஆதாரத்தைக் கொடுக்கிறதோ, அந்த அளவுக்குதான் விற்கக் கூடியதாய் இருக்கிறது.

ஊதியமில்லா உழைப்பில் ஏற்படும் குறைவு மூலதனத்தின் ஆட்சி எல்லை விரிவடைவதற்கு எவ்விதத்திலும் தடையாவதில்லை.

உழைப்பின் விலையேற்றத்தால் மூலதனத் திரட்டல் மந்தமாகிறது.

முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிகழ்முறையின் பொறியமைவே அது தாற்காலிகமாகத் தோற்றுவிக்கும் தடங்கல்களை அகற்றி விடுகிறது. உழைப்பின் விலை திரும்பவும் சரிந்து மூலதனத்தின் தற்பெருக்கத் தேவைகளுக்கு ஏற்ற மட்டத்தை அடைகிறது.

முதலாவது நேர்வில், மூலதனம் மிகுதியாக இருப்பதற்கு காரணம் உழைப்புச் சக்தியில்  அல்லது உழைக்கும் மக்கள் தொகுதியில் அறுதியாகவோ விகிதாசார அளவிலோ ஏற்படும் அதிகரிப்பின் குறைந்த வீதமல்ல; மாறாக, மூலதனம் மிகுதியாக இருப்பதுதான் சுரண்டலுக்கு ஆட்படும் உழைப்புச் சக்தியின் போதாமைக்குக் காரணம்.

இரண்டாவது நேர்வில், மூலதனத்தின் போதாமைக்குக் காரணம் உழைப்புச் சக்தியில் அல்லது உழைக்கும் மக்கள் தொகையில் அறுதியாகவோ விகிதாசார அளவிலோ ஏற்படும் அதிகரிப்பின் உயர்ந்த வீதமல்ல; மாறாக, சுரண்டலுக்கு ஆட்படும் உழைப்புச் சக்தி, அல்லது சரியாகச் சொன்னால், அதன் விலை மிகுதியாக இருப்பதற்குக் காரணம் மூலதனத்தின் ஒப்பளவிலான குறுக்கமே.

கணித முறையில் சொல்வதானால்: திரட்டல் வீதம் சாரும் மாறியன்று, சாரா மாறியே. கூலி வீதம் சாரா மாறியன்று, சாரும் மாறியே.

மூலதனத் திரட்டலுக்கும் கூலி விகிதத்துக்கும் இடையிலான உறவு என்பது மூலதனமாக மாற்றப்படும் ஊதியிமிலா உழைப்புக்கும் இந்த கூடுதல் மூலதனத்தை இயக்குவதற்குத் தேவைப்படும் கூடுதலான ஊதிய உழைப்புக்கும் இடையிலான உறவே தவிர வேறில்லை.

கூலியுயர்வு வரம்பு மீறாத படி கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த வரம்பு முதலாளித்துவ அமைப்பின் அடித்தளங்களை சேதமில்லாத படி விட்டுவைப்பதோடு, மேலும் மேலும் விரிவான அளவில் இவ்வமைப்பு மறுவுற்பத்தியாவதையும் உறுதி செய்கிறது.

மனிதனது கரத்தின் படைப்பு மனிதனையே ஆள்கிறது.

Saturday, December 7, 2013

பகுதி 7 அத்தியாயம் 24: உபரி..மதிப்பை மூலதனமாக மாற்றுதல். பிரிவு 4 மறும் 5

உபரி-மதிப்பு மூலதனமாகவும் வருவாயாகவும் பிரிக்கப்படும் விகிதத்தைச் சாராமலே, மூலதனத் திரட்டலின் அளவை நிர்ணயிக்கும் காரணிகள். உழைப்புச் சக்தி மீதான சுரண்டல்-கடுமை. உழைப்பின் உற்பத்தித் திறன். ஈடுபடுத்தப்படும் மூலதனத் தொகைக்கும் நுகரப்படும் மூலதனத் தொகைக்கும் இடையிலான வேறுபாடு அதிகமாதல். முன்னீடு செய்யப்படும் மூலதனத்தின் பருமன்.

முதலாவதாக உபரி-மதிப்பு வீதம் உழைப்புச் சக்தி மீதான சுரண்டல்-கடுமையை பொறுத்தது. உழைப்பின் உற்பத்தித் திறன் கூடுதலாவதால் ஏற்படுகிற திரட்டல் வேக முடுக்கத்தை தொழிலாளியைச் சுரண்டுவது கூடுதலாவ‌தால் ஏற்படுகிற திரட்டல் வேக முடுக்கத்துக்கு முழுதொத்ததாய்க் கொள்ளும் அளவுக்கு சில சந்தர்ப்பங்களில் செல்கிறது. கூலியை உழைப்புச் சக்தியின் மதிப்புக்கும் கீழாக வலுவந்தமாய் குறைப்பது நடைமுறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தொழிலாளியின் அவசிய நுகர்வு நிதியத்தை (necessary consumption fund ) மூலதனத் திரட்டலுக்கான நிதியமாகவே கூட மாற்றி விடுகிறது.

18ஆம் நூற்றாண்டின் முடிவிலும் 19ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளிலும், ஆங்கிலேய சாகுபடியாளர்களும் நிலவுடைமையாளர்களும் விவசாயத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்சத்துக்கும் குறைவானதைக் கூலியாகவும், மீதத்தை மறை வட்டார உதவியாகவும் அளித்து கூலியின் அறுதி குறைந்தபட்சத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தனர்.

தொழிலாளியின் அவசிய நுகர்வு நிதியத்திலிருந்து நேரடியாக அடிக்கப்படும் கொள்ளை இக்காலத்தில் உபரி-மதிப்பை உருவாக்குவதற்கும், எனவே மூலதனத்தின் திரட்டல் நிதியத்தை உருவாக்குவதற்கும் ஆற்றுகிற பங்கை வீட்டுத் தொழில் எனப்படுவது ஏற்கனவே தெளிவாக்கிவிட்டது.

எல்லாத் தொழிற் கிளைகளிலும், மாறா-மூலதனத்தில் உழைப்புச் சாதனங்களாலான பகுதி (தொழில் முயற்சியின் பருமனால் நிர்ணயிக்கப்படுவதான) குறிப்பிட்ட தொகையிலான தொழிலாளர்களுக்குப் போதுமானதாய் இருக்க வேண்டும் என்றாலும் தொழிலாளர்கள் அதிகரிக்கும் அதே விகிதத்தில்தான் எப்போதும் அதிகரிக்க வேண்டும் என்பதில்லை.

உழைப்புச் சக்தியை அதிகத் தாக்கத்துக்குள்ளாக்கி கூடுதலாய் வருத்துவதால் பெறப்படும் கூடுதல் உழைப்பு, மூலதனத்தின் மாறாப் பகுதியை அதிகமாக்காமலே உபர-உற்பத்திப் பண்டத்தையும் உபரி-மதிப்பையும் (அதாவது மூலதனத் திரட்டலின் ஆதாரத்தை) அதிகமாக்க முடியும். 

சுரங்கங்கள் முதலான எடுபொருள் தொழில்களில் (Extractive industries) கச்சாப் பொருட்களானவை முன்னீடு செய்யப்படும் மூலதனத்தின் பகுதியாவதில்லை. இத்தொழில்களில் மாறா-மூலதனம் அநேகமாய் முழு அளவுக்கு உழைப்புச் சாதனங்களாலேயே ஆனதாகும்; இச்சாதனங்களால் முன்னிலும் அதிக அளவு உழைப்பை உட்கிரகிக்க முடியும். மற்றவையெல்லாம் மாறாதிருக்க, உற்பத்திப் பண்டத்தின் திரளும் மதிப்பு செலவிடப்படும் உழைப்புக்கு நேர் விகிதத்தில் உயரும்.

செய்பொருளுற்பத்தித் தொழில் எனப்படுவதில் உழைப்பின் கூடுதல் செலவீடு நேரிடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கச்சாப் பொருட்களில் அதற்கிணையான கூடுதல் செலவீடு தேவைப்படுகிறது.

மூலதனமானது செல்வத்தின் இரு பெரும் படைப்பாளிகளான உழைப்புச் சக்தியையும் நிலத்தையும் தன்னோடு இணைத்துக் கொள்வதன் மூலம், விரிவகற்சித் திறன் பெறுகிறது; இந்தத் திறனின் துணை கொண்டு அது தனது திரட்டலின் கூறுகளைப் பெருக்கிச் செல்ல முடிகிறது.    

மூலதனத் திரட்டலில் இன்னொரு முக்கிய காரணி சமுதாய உழைப்பினது உற்பத்தித் திறனின் படித்தரமாகும். உழைப்பின் உற்பத்தித் திறன் உயரும் போது உற்பத்திப் பண்டத்தின் திரள் அதிகமாகிறது.

இந்த உபரி-உற்பத்திப் பண்டத்தை வருவாயாகவும் கூடுதல் மூலதனமாகவும் பகிர்ந்திடும் விகிதம் மாறாதிருக்குமாயின், திரட்டல்-நிதியத்தில் குறைவேதும் இல்லாமலே முதலாளியின் நுகர்வு கூடுதலாகலாம். திரட்டல் நிதியத்தின் ஒப்பீட்டுப் பருமன் நுகர்வு-நிதியத்தின் செலவில் அதிகரிக்கும் போதே கூட, சரக்குகளின் விலை குறைவால் முதலாளிக்கு அனுபோகச் சாதனங்கள் முன்னிலும் அதிகமான அளவிலும் கூட கிடைக்கலாம்.

உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகமாவதன் கூடவே, தொழிலாளியின் ஊதியத்துக்காகும் செலவு குறைகிறது; அதனால் உண்மைக் கூலி உயரும்போதே கூட உபரி-மதிப்பு வீதம் உயர்ந்து செல்கிறது. உண்மைக் கூலி ஒருபோதும் உழைப்பின் உற்பத்தித் திறன் உயரும் விகிதாசாரத்தில் உயர்வதில்லை.

கூடுதல் மூலதனத்தின் மதிப்பு மாறாதிருக்கும்போது, அல்லது குறையும் போதே கூட வளர்வேகத் திரட்டல் நடைபெறுகிறது. மறுவுற்பத்தியின் அளவுவீதம் பொருள்வகையில் விரிவடைவதோடு கூட, உபரி-மதிப்பின் உற்பத்தியும் கூடுதல் மூலதனத்தின் மதிப்பைக் காட்டிலும் துரிதமாய் அதிகரிக்கிறது.

உழைப்புச் சாதனங்களின் பயன்பாட்டுக் காலத்தில் உழைப்பின் உற்பத்தித் திறன் உயர்ந்திருக்குமானால், பழையவற்றுக்கு பதிலாய் அதிக செய்திறனுள்ள, மலிவாகிவிட்ட புதிய இயந்திரங்கள், கருவிகள், பொறியமைவுகள் முதலானவை புகுத்தப்படுகின்றன.

மாறா மூலதனத்தின் மற்றொரு பகுதி --- கச்சாப் பொருளும் துணைப் பொருட்களும் --- ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் இடையறாது மறுவுற்பத்தி செய்யப்படுகிறது.

இரசாயத்திலான ஒவ்வொரு முன்னேற்றமும் பயனுள்ள மூலப் பொருட்களின் எண்ணிக்கையையும், ஏற்கனவே தெரிந்த மூலப் பொருட்களின் பயனுள்ள பிரயோகங்களையும் பெருகச் செய்கிறது; இவ்விதம் மூலதன வளர்ச்சியோடு கூடவே அதன் முதலீட்டுத் துறையையும் விரிவாக்குகிறது. இது மட்டுமன்று உற்பத்தி மற்றும் நுகர்வு நிகழ்முறைகளின் கழிவுகளை மறுவுற்பத்தி நிகழ்முறையின் சுற்றோட்டத்தினுள் திரும்பவும் எப்படி செலுத்துவது என்பதையும் அது கற்றுக் கொடுக்கிறது; இவ்விதம் மூலதன முன்னீடு இல்லாமலே புதிய மூலப் பொருளை மூலதனத்துக்குப் படைத்தளிக்கிறது.

விஞ்ஞானமும் தொழில் நுட்பவியலும் உள்ளபடியே இயங்கிச் செயல்படும் மூலதனத்தின் பருமனைச் சார்ந்திராத ஒரு விரிவகற்சித் திறனை மூலதனத்துக்கு கொடுக்கின்றன. அவை அதே போது, ஆரம்ப மூலதனத்தில் புதுப்பிக்கப்பட்டு புது உருவம் பெறுகிற இப்பகுதி தன் பழைய உருவம் பயன்பாட்டிலிருந்த போது அடையப்பட்ட சமூக முன்னேற்றத்தை இலவசமாக சுவீகரித்துக் கொள்கிறது. உற்பத்தித் திறனில் ஏற்படும் இந்த வளர்ச்சியுடன் கூடவே ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் மூலதனத்தில் பகுதியளவு மதிப்பிறக்கம் ஏற்படுவது மெய்தான். இந்த மதிப்பிறக்கத்தால் போட்டியில் கடுமையான பாதிப்பு ஏற்படுமானால், அந்த பாதிப்பின் சுமை தொழிலாளி மீதே விழுகிறது; தொழிலாளியை முன்னிலும் கூடுதலாய்ச் சுரண்டியே முதலாளி இழப்பு ஏற்படாமல் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறார்.

உழைப்பானது, அதன் உற்பத்திச் சாதனங்களின் பயந்திறனிலும் விரிவிலும் மதிப்பிலும் ஏற்படும் அதிகரிப்பைத் தொடர்ந்து, எனவே அதன் உற்பத்தித் திறனது வளர்ச்சியுடன் சேர்ந்து நடைபெறும் மூலதனத் திரட்டலைத் தொடர்ந்து, புத்தம் புது வடிவில் மேன்மேலும் அதிகமாகிச் செல்லும் மூலதன-மதிப்பைப் பாதுகாத்து நிரந்தரமாக்குகிறது. இது உழைப்பின்  இயற்கையான ஆற்றலாகும். எப்படி சமுதாய உழைப்பின் உற்பத்தித் திறன்கள் மூலதனத்தின் உள்ளார்ந்த இயல்புகளாய்த் தோற்றமளிக்கின்றனவோ, எப்படி முதலாளிகள் இடையறாது உபரி-உழைப்பைத் தமதாக்குவது மூலதனத்தின் இடையாறாத தற்பெருக்கமாகத் தோற்றமளிக்கிறதோ, அதே போல் உழைப்பின் இந்த இயற்கையான ஆற்றலும் அது உருக்கொண்ட மூலதனத்தின் உள்ளார்ந்த இயல்பாகத் தோற்றமளிக்கிறது.

உழைப்புச் சாதனங்கள் உற்பத்திப் பொருளுக்கு மதிப்பு சேர்க்காமலே உற்பத்திப் பொருளாக்கிகளாக மட்டும் செயல்படுவதற்கேற்ப, அதாவது முழுமையாக ஈடுபடுத்தப்பட்டு, ஆனால் சிறிதளவு மட்டும் நுகரப்படுவதற்கேற்ப, நாம் முன்னர் பார்த்தது போல, இயற்கைச் சக்திகள், நீர், நீராவி, காற்று, மின்சாரம் போன்றவை புரியும் அதே இலவசச் சேவையைப் புரிகின்றன.

கடந்த கால உழைப்பு எப்போதுமே மூலதனமாக மாறுவேடம் தரிக்கிறது; அதாவது ஏ, பி, சி முதலானோரது கடந்த கால உழைப்புக்குரிய கடன் உழைப்பாளியல்லாத எக்ஸ் என்பவரின் நிகழ் காலக் கையிருப்பாக வடிவெடுக்கிறது..

அடுத்தடுத்த திரட்டல்களைக் கொண்டு மூலதனம் எவ்வளவுக்கு அதிகரிக்கிறதோ, நுகர்வு-நிதியமாகவும் திரட்டல்-நிதியமாகவும் பிரிக்கப்படும் மதிப்புத் தொகை அவ்வளவுக்கு அதிகரிக்கிறது. எனவே முதலாளி முன்னிலும் கூடுதலாய் சுகபோகம் அனுபவிக்கலாம்; அதே போதில் முன்னிலும் கூடுதலாய் "துறவும்" பூணலாம்.

தொழிலாளர் நுகர்வு..நிதியம் எனப்படுவது 

தொல்சீர் பொருளாதார இயலானது சமுதாய மூலதனத்தை நிலையான செய்திறன் கொண்ட நிலையான பருமனாகவே எப்போதும் கொள்ள விரும்பியது. அவர்கள் கோட்பாட்டின்படி பொருளுற்பத்தி நிகழ்முறையின் சர்வ சாதாரணமான நிகழ்வுகளும், உதாரணமாக அதன் திடீர்ப் பெருக்கங்களும் சுருக்கங்களும், ஏன் மூலதனத் திரட்டலும் கூட நினைக்கவே முடியாதவையாகிவிடுகின்றன. இந்தக் கோட்பாட்டை சப்பைக்கட்டுவாத நோக்கத்துக்கு அனுசரணையாகவே பயன்படுத்தினர். முக்கியமாக மூலதனத்தின் ஒரு பகுதியை, அதாவது மாறும்-மூலதனத்தை, அல்லது உழைப்புச் சக்தியாக மாற்றப்படக்கூடிய மூலதனப் பகுதியை மாறாது நிலையாயிருக்கும் பருமனாகக் காட்டும் பொருட்டே பயன்படுத்தினர். மாறும்-மூலதனத்தின் பிண்டப் பொருள், அதாவது தொழிலாளிக்கென அதனால் குறிக்கப்படுகிற வாழ்வுச் சாதனங்களின் திரள், அல்லது தொழிலாளர் நுகர்வு நிதியம் எனப்படுவது சமுதாயச் செல்வத்தில் தனித்த ஒரு பகுதியாகும் என்றும், இயற்கையின் விதிகளால் வரையறுக்கப்பட்டதென்றும், மாற்ற முடியாததென்றும் கதை கட்டினர்.

ஒரு புறம், சமுதாயச் செல்வத்தை தொழிலாளரல்லாதவருக்கான சுகபோகச் சாதனங்களாகவும், உற்பத்திச் சாதனங்களாகவும் பகிர்வதில் தலையிட தொழிலாளிக்கு உரிமை இல்லை. மறுபுறம், அனுகூலமான, விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே, தொழிலாளர் நுகர்வு-நிதியம் எனப்படுவதை செல்வந்தர்களது "வருவாயின்" செலவில் அவரால் அதிகமாக்க முடிகிறது.


தொழிலாளர் நுகர்வு-நிதியத்தின் முதலாளித்துவ வரம்புகளை அதன் இயற்கை வரம்புகளாகவும் சமூக வரம்புகளாகவும் சித்தரிக்க முயல்கின்றனர். அதாவது ஒவ்வொரு தொழிலாளிக்கும் தரப்படும் தனித்தனி கூலிகளை சேர்த்து கூட்ட வேண்டும்; பின்னர், இவ்வாறு வரும் கூட்டுத் தொகையைக் கடவுளும் இயற்கையும் நமக்கு விதித்திட்ட "தொழிலாளர் நுகர்வு..நிதியத்தின்" மொத்த மதிப்பென்று சாதிக்க வேண்டும் என்பதே.

Wednesday, December 4, 2013

பகுதி 7 அத்தியாயம் 24: உபரி மதிப்பை மூலதனமாக மாற்றுதல் பிரிவு 2 மற்றும் 3

மேன்மேலும் அதிகரிக்கும் அளவுவீதத்தில் நடைபெறும் மறுவுற்பத்தி பற்றி அரசியல் பொருளாதாரத்தின் தவறான கருத்தமைவு

பொதுஜனத் தப்பெண்ணமானது முதலாளித்துவப் பொருளுற்பத்திக்கும் மிச்சப்படுத்தி சேர்த்து வைப்பதற்கும் உள்ள வேறுபாடு விளங்காமல் இரண்டையும் குழப்பிக் கொள்கிறது. அழிந்து விடாமல், அதாவது நுகரப்படாமல், இருக்கிற வடிவத்தில் அப்படியே பாதுகாக்கப்படும் செல்வம்தான் அல்லது சுற்றோட்டத்திலிருந்து விலக்கப்படுகிற செல்வம்தான் திரட்டப்பட்ட செல்வம் என்று அது கற்பிதம் செய்து கொள்கிறது.

கொஞ்சம் கொஞ்சமாய் நுகர்வதற்காக செல்வந்தர் சேமித்து வைக்கும் பண்டத் திரளையும், திரட்டி வைக்கும் சேமிப்புகளையும் பார்க்கையில் பொதுமக்களுக்கு பிரமிப்பாய் இருப்பது மெய்தான்.

மூலதனத் திரட்டல் என்பது திறனுடைத் தொழிலாளர்கள் உபரி-உற்பத்திப் பொருட்களை நுகர்வதுதானே தவிர வேறு ஒன்றும் இல்லை என்கிறார் ஆதாம் ஸ்மித். ரிகார்டோவும் அடுத்து வரும் பொருளாதார அறிஞர்கள் அனைவரும் ஆதாம் ஸ்மித் கூறியதையே திருப்பிச் சொல்கிறார்கள்; அதாவது "மூலதனத்தோடு சேர்க்கப்படுவதாகச் சொல்லப்படும் வருவாய்ப் பகுதி திறனுடைத் தொழிலாளர்களால் நுகரப்படுகிறது" என்கிறார்கள். இக்கருத்தின்படி மூலதனமாக மாற்றப்படும் மதிப்பனைத்தும் மாறும்-மூலதனமாகி விடுகிறது. நடப்பதோ முற்றிலும் வேறு. ஆரம்ப மூலதனத்தைப் போலவே உபரி-மதிப்பும் மாறா-மூலதனமாகவும் உழைப்புச் சக்தியாகவும் பிரிகிறது. உழைப்பு நிகழ்முறையின் போது உழைப்புச் சக்திதான் மாறும்-மூலதனம் என்ற ஒன்று இருப்பதற்கான வடிவமாகும். இந்த நிகழ்முறையின் போது முதலாளி உழைப்புச் சக்தியை நுகர்கிறார். உழைப்புச் சக்தியோ உழைப்பாகிய அதன் பணியைச் செய்து உற்பத்திச் சாதனங்களை நுகர்கிறது.

உபரி-மதிப்பு மூலதனமாகவும் வருவாயாகவும் பிரிதல். துறவுத் தத்துவம்.

உபரி-மதிப்பில் ஒரு பகுதி வருவாயாக முதலாளியால் நுகரப்படுகிறது; மறு பகுதி மூலதனமாக ஈடுபடுத்தப்படுகிறது, திரட்டப்படுகிறது.

முதலாளி மூலதனத்தின் ஆளுருவமாய் இருக்கும் வரை, அவரைச் செயல்படத் தூண்டுவது பரிவர்த்தனை-மதிப்பும் அதன் பெருக்கமும்தானே தவிர, பயன்-மதிப்புகளோ அவற்றை அனுபவித்தலோ அல்ல. மதிப்பைப் பெருகச் செய்திட வேண்டுமென்று வெறி கொண்டுவிடும் அவர் உற்பத்தியின் நிமித்தமே உற்பத்தி செய்யுமாறு இரக்கமற்ற முறையில் மனித இனத்தைக் கட்டாயப்ப்டுத்துகிறார்.  இவ்வாறு, அவர் நெருக்க நிர்ப்பந்தித்து சமுதாயத்தின் உற்பத்தித் திறன்களை வளரச் செய்கிறார்; மேலும் உயர்வான சமுதாயத்துக்கு மெய்யான அடித்தளம் அமைவதற்கு அத்தியாவசியமான பொருளாயத நிலைமைகளை இவ்விதம் தோற்றுவிக்கிறார். இந்த உயர்வான சமுதாயத்தில் தனியாள் ஒவ்வொருவரின் முழுமையான, சுதந்திரமான வளர்ச்சியே ஆளூம் நெறியாய் அமைகிறது; மூலதனத்தின் ஆளுருவம் என்ற முறையில் மட்டுமே முதலாளி மதிக்கத் தக்கவராகிறார்.

முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் வளர்ச்சியானது குறிப்பிட்ட தொழில் நிறுவனத்தில் முதலீடாயிருக்கும் மூலதனத்தின் பரிமாணத்தை ஓயாமல் மேலும் மேலும் அதிகமாக்கிச் செல்லும் படி கட்டாயப்படுத்துகிறது. போட்டியானது முதலாளித்துவ பொருளுற்பத்தியின் உள்ளார்ந்த விதிகளைப் புறத்திலிருந்து கட்டாயப்படுத்தும் விதிகளாக்கி தனிப்பட்ட ஒவ்வொரு முதலாளியையும் அவற்றுக்கு கீழ் படிய வைக்கிறது. தனது மூலதனத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு அதனை இடையறாது விரிந்து பெருகச் செய்யுமாறு அவரைக் கட்டாயப்படுத்துகிறது; ஆனால் மேன்மேலும் அதிகமாக்கிச் செல்லும் திரட்டலின் மூலமாக அல்லாமல் வேறு எவ்விதத்திலும் அவர் தனது மூலதனத்தை விரிந்து பெருகச் செய்ய முடியாது.

முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் முன்னேற்றம் கோடி கோடிக் குதூகலங்களைப் படைப்பது மட்டுமல்லாமல், திடீர் பணக்காரராவதற்கு ஊக வாணிபம், கடன்-செலாவணி வசதி ஆகியவற்றின் உருவில் ஓராயிரம் வழிகளைத் திறந்துவிடுகிறது. குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தை வந்தடைந்த பின், ஓரளவு ஊதாரித்தனம் --- இது செல்வச் செழிப்பை விளம்பரப்படுத்தி, கடன் வசதிக்கு வழி கோலும் மார்க்கமும் ஆகிறது --- முதலாளிக்கு வியாபார அவசியமாகி விடுகிறது.

முதலாளி பணக்காரராவது கருமியைப் போல் சொந்த உழைப்பினாலும், கட்டுத்திட்டமான நுகர்வினாலும் அல்ல. எந்த அளவுக்குப் பிறரது உழைப்புச் சக்தியைக் கசக்கி பிழிகிறாரோ, எந்த அளவுக்கு வாழ்வின் இன்பங்களையெல்லாம் கைவிட்டுத் துறவு பூணுமாறு தொழிலாளியைக் கட்டாயம் செய்கிறாரோ, அந்த அளவுக்கே முதலாளி பணக்காரராகிறார்.

மூலதனத் திரட்டல் வளர வளர முதலாளியின் செலவும் அதனுடன் சேர்ந்து வளர்கிறது. ஒன்றின் வளர்ச்சி மற்றதன் வளர்ச்சிக்குத் தடையாவதில்லை. அதே நேரத்தில் ஒரு மோதல் முதலாளியின் நெஞ்சிலும் மூள்கிறது  --- மூலதனம் திரட்ட வேண்டுமென்ற வேட்கைக்கும் இன்பம் நுகர வேண்டுமென்ற ஆசைக்குமிடையிலான மோதல் இது.

வெவ்வேறு வகைப்பட்ட சமூகப் பொருளாதார அமைப்புகளிலும் சாமானிய மறுவுற்பத்தி மட்டுமல்லாமல், மேன்மேலும் அதிகரிக்கும் அளவுவீதத்திலான மறுவுற்பத்தியும் பல்வேறு படித்தரங்களில் நடைபெறுகிறது. மேன்மேலும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, மேன்மேலும் அதிக அளவில் நுகரப்படுகிறது; இதன் விளவாக, மேன்மேலும் அதிக அளவிலான உற்பத்திப் பொருட்களை உற்பத்திச் சாதனங்களாக மாற்ற வேண்டியுள்ளது. ஆயினும் உழைப்பாளியின் உற்பத்திச் சாதனங்களும், அவற்றுடன் அவரது உற்பத்திப் பண்டமும் வாழ்வுச் சாதனங்களும் மூலதனத்தின் உருவில் அவரெதிரே வராத வரை, இந்த நிகழ்முறை மூலதனத்திரட்டலோ, முதலாளியின் பணியோ ஆவதில்லை.    

Monday, December 2, 2013

பகுதி 7 அத்தியாயம் 24: உபரி..மதிப்பை மூலதனமாக மாற்றுதல். பிரிவு 1

முதலாளித்துவ பொருளுற்பத்தியின் அளவுவீதம் மேன்மேலும் அதிகமாகிச் செல்லுதல். சரக்கு உற்பத்தியைக் குறிக்கும் சொத்துடைமை விதிகள் முதலாளித்துவத் தனதாக்கத்தின் விதிகளாக மாறுதல்

உபரி மதிப்பை மூலதனமாக மாற்றுவது மூலதனத் திரட்டல் (accumulation of capital) என்று அழைக்கப்படுகிறது. 

மூலதன-மதிப்பு ஆரம்பத்தில் பண வடிவில் முன்னீடு செய்யப்பட்டது. மாறாக, உபரி-மதிப்பு மொத்த உற்பத்தியில் குறிப்பிட்ட ஒரு பகுதியின் மதிப்பாகவே ஆரம்பத்தில் இருக்கிறது. இந்த மொத்த உற்பத்தி விற்கப்பட்டு, பணமாக மாற்றப்பட்டால், மூலதன-மதிப்பு அதன் ஆரம்ப வடிவத்தை மீண்டும் பெறுகிறது. அதுமுதல் மூலதன-மதிப்பு, உபரி-மதிப்பு இவையிரண்டுமே பணத் தொகைகள்தாம்; மூலதன-மதிப்பு, உபரி-மதிப்பு இரண்டையும் செலவிட்டு, முதலாளி சரக்குகள் வாங்குகிறார்; இந்த சரக்குகளைக் கொண்டு முன்னிலும் விரிவான அளவில் உற்பத்தி செய்ய முற்படுகிறார்.

உழைப்பு நிகழ் முறையில் ஈடுபடுத்தக் கூடிய பண்டங்களையும் (அதாவது உற்பத்திச் சாதனங்களையும்), மேலும் தொழிலாளியின் வாழ்வுக்கு வேண்டிய பண்டங்களையும் (அதாவது வாழ்வுச் சாதனங்களையும்) தவிர வேறெதையும் மூலதனமாக மாற்ற முடியவே முடியாது. ஆதலால், வருடாந்திர உபரி-உழைப்பில் ஒரு பகுதி, முன்னீடு செய்யப்பட்ட மூலதனத்தை மாற்றீடு செய்ய தேவைப்படுவதற்கும் கூடுதலான உற்பத்திச் சாதனங்களையும் வாழ்வுச் சாதனங்களையும் உற்பத்திச் செய்வதற்குப் பிரயோகிக்கப்பட்டிருக்க வேண்டும். சுருங்கச் சொல்லின், உபரி-உற்பத்திப் பொருளில் புதிய மூலதனத்தின் பொருட் கூறுகளும் சேர்ந்திருப்பதால்தான் இந்த உபரி-உற்பத்திப் பொருளின் மதிப்பாகிய உபரி-மதிப்பு மூலதனமாய் மாற்றத்தக்கதாகிறது.

ஏற்கனவே வேலையில் உள்ள தொழிலாளர்களைச் சுரண்டுவது அளவிலோ மும்முரத்திலோ அதிகரிக்காவிட்டால், கூடுதல் உழைப்புச் சக்தி தேவைப்படும். முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் இயங்கமைப்பு ஏற்கனவே இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கூடுதல் உழைப்புச் சக்தியை வருடாந்திர உற்பத்தியிலடங்கிய உபரி-உற்பத்திச் சாதனங்களோடு மூலதனம் இணைத்து விட்டாலே போதும். உபரி-மதிப்பு மூலதனமாக மாற்றப்பட்டு விடுகிறது. சாமானிய மறுவுற்பத்திக்குரியதான வட்டப் பாதை அதன் வடிவத்தை மாற்றிக் கொண்டு சுழலேணியாய் மாறுகிறது.

ஆரம்ப மூலதனம் அதன் முதலீட்டாளருக்கு எப்படிக் கிடைத்தது? "தன் சொந்த உழைப்பாலும் தன் மூதாதையர்களின் உழைப்பாலுமே" என்று அரசியல் பொருளாதாரத்தின் சொல்விளம்பிகள் ஏகோபித்த குரலில் பதிலளிக்கிறார்கள். ஆனால், கூடுதல் மூலதனம் இப்படிப்பட்டதன்று. அதன் மதிப்பில் ஊதியமில்லா உழைப்பிலிருந்து வராதது ஓரணுக்கூட இல்லை. கூடுதல் உழைப்புச் சக்தி சேர்ந்து கொள்கிற உற்பத்திச் சாதனங்களும், மற்ற தொழிலாளர்கள் உயிர் வாழ்வதற்கான அவசிய பண்டங்களும் உபரி-உற்பத்திப் பொருளின் கூறுகளே தவிர வேறல்ல.

கூடுதல் தொழிலாளர்கள் ஏற்கனவே வேலை செய்யும் தொழிலாளர்களின் ஊதியமில்லா உழைப்பைக் கொண்டு வேலைக்கமர்த்தப்படுகிறார்கள் என்பதால் எந்த மாறுபாடும் ஏற்படுவதில்லை. 

முன்னரே பொருள் வடிவாக்கப்பட்ட பிறர் உழைப்பில் ஒரு பகுதியைத் திரும்பத் திரும்ப முதலாளி சமதையேதும் தராமல் தனது உடைமையாக்கி, அதனை மேலும் அதிக அளவிலான உயிருள்ள உழைப்புக்குப் பரிவர்த்தனை செய்கிறார். சொத்துரிமைகள் அவரது சொந்த உழைப்பை ஆதாரமாய் கொண்டவை என்றுதான் முதலில் நினைத்தோம். எப்படியும், இப்படி ஒரு அனுமானம் அவசியமாய் இருந்தது; ஏனென்றால், சரிசமமான உரிமை படைத்த சரக்குடைமையாளர்கள் மட்டுமே ஒருவரையொருவர் எதிர்கொண்டனர்; அவரவரும் தன் சொந்த சரக்கினை உடைமை மாற்றம் செய்துதான் பிறரது சரக்கினைத் தனது உடைமையாக்கிக் கொள்ள முடிந்தது. இந்த சரக்குகள் யாவும் உழைப்பால் படைக்கப்படுகிறவைதாம். ஆனால், இப்போது, சொத்து என்பது பிறரது ஊதியமிலா உழைப்பை அல்லது அவ்வுழைப்பின் உற்பத்திப் பொருளைத் தனதாக்கிட முதலாளிக்குள்ள உரிமை என்றும், தான் உற்பத்தி செய்யும் பொருளை தனதாக்கிட தொழிலாளிக்குள்ள முடியாமை என்றும் ஆகி விடுகிறது. உழைப்பிலிருந்து சொத்து இப்படி பிரிக்கப்படுவதானது இவையிரண்டின் முழுதொத்த தன்மையிலிருந்து வந்ததாகத் தோன்றிய விதியின் தவிர்க்க முடியாத விளைவாகிறது.

முதலாளித்துவத் தனதாக்க முறை சரக்கு உற்பத்தியின் மூல விதிகளை எவ்வளவுதான் மதியாததாய்த் தோன்றினாலும், இவ்விதிகளைப் பிரயோகிப்பதால் வருவதே தவிர அவற்றை மீறுவதால் அல்ல. 

புதிய உற்பத்திப் பொருளின் மதிப்பில் மேலும் அடங்கியிருப்பது; உழைப்புச் சக்தியினது மதிப்பின் சமதையும், அத்துடன் கூட ஓர் உபரி-மதிப்பும். திட்டமான காலத்துக்கு, உதாரணமாக ஒரு நாள் அல்லது ஒரு வாரத்துக்கு விற்கப்படும் உழைப்புச் சக்தியின் மதிப்பு --- அந்த காலத்தில் அதனை உபயோகித்துப் படைக்கப்படும் மதிப்பை விடக் குறைவு.  ஆனால் தொழிலாளி அவரது உழைப்புச் சக்தியை விற்று பயன்-மதிப்பை உடைமை மாற்றம் செய்திருக்கிறார். விற்றல் வாங்கல் ஒவ்வொன்றிலும் நடப்பது இதுவே.

உழப்புச் சக்தி என்னும் இந்த குறிப்பிட்ட சரக்கு உழைப்பை வழங்கி, மதிப்பைப் படைக்கும் தனிவிதப் பயன்-மதிப்பைக் கொண்டதாகும். 

விற்பவரை ஏமாற்றி இது நடைபெறவில்லை, அவருக்கு அவரது சரக்கின் மதிப்பு கிடைத்து விடுகிறது. 

ஒன்றுக்கொன்று பரிவர்த்தனை செய்து கொள்ளப்படும் சரக்குகளின் பரிவர்த்தனை விதி சமத்துவத்தைக் கோருகிறது. ஆனால், அவற்றின் பயன்..மதிப்புகளைப் பொறுத்த வரை, ஆரம்பத்திலிருந்தே, இரண்டுக்குமிடையில் வேறுபாடு இருப்பது இந்த விதிக்கு முன் தேவையாகிறது. பேரம் முடிந்து நிறைவேற்றப்பட்ட பின்னரே தொடங்குவதான அவற்றின் நுகர்வுக்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

பணம் மூலதனமாகிற ஆரம்ப மாற்றம் சரக்கு உற்பத்தியின் பொருளாதார விதிகளையும், அவற்றிலிருந்து பெறப்படும் சொத்துரிமையையும் சற்றேனும் மீறாமலேதான் நடந்தேறுகிறது. ஆயினும் அதன் விளைவு என்னவென்றால்;

1. உற்பத்திப் பொருள் முதலாளிக்குச் சொந்தம், தொழிலாளிக்கு அல்ல.
2. உற்பத்திப் பொருளின் மதிப்பில் முன்னீடு செய்யப்பட்ட மூலதனத்தின் மதிப்போடு கூட உபரி-மதிப்பும் அடங்கியுள்ளது; இந்த உபரி-மதிப்புக்காகத் தொழிலாளி உழைப்பைச் செலவிடுகிறார், முதலாளி ஏதும் செலவிடுவதில்லை என்றாலும் இது சட்டப்படி முதலாளிக்குச் சொந்தமான சொத்தாகிறது.
3. தொழிலாளி அவரது உழைப்புச் சக்தியை இழந்துவிடவில்லை; வாங்குகிறவர் கிடைப்பாராயின் மீண்டும் அவர் இதனை விற்கலாம்.

சாமானிய மறுவுற்பத்திக்கு பதில் விரிதிற மறுவுற்பத்தி (reproduction on an extended scale), அதாவது மூலதனத் திரட்டல் நடைபெறுவதாயினும் நிலைமையில் மாற்றம் ஏதுமில்லை. 

தனியொரு முதலாளிக்கும் தனியொரு தொழிலாளிக்கும் பதிலாக எதிரும் புதிருமாக நிற்கும் முதலாளி வர்க்கத்தையும் தொழிலாளி வர்க்கத்தையும் முழுமொத்தமாகப் பார்க்கையில், நிச்சயமாக நிலைமை முற்றிலும் மாறி விடுகிறது.

விற்றலும் வாங்கலும் குறிப்பிட்ட தனியாட்களிடையே பேசி முடிக்கப்படுவதால், முழு சமுதாய வர்க்கங்களிடையிலான உறவுகளை இங்கே தேடக் கூடாது.                          

இன்று செயல்படுகிற மூலதனம் காலவட்ட மறுவுற்பத்திகளும் முன்சென்ற திரட்டல்களுமான நீண்ட நெடிய தொடரைக் கடந்து வந்திருப்பினும், அதன் ஆரம்பக் கன்னிமையை ஒரு போதும் இழப்பதில்லை. பரிவர்த்தனை விதிகளை ஒவ்வொரு தனிப் பரிவர்த்தனைச் செயலிலும் கடைபிடித்துக் கொண்டிருக்கும்வரை, சரக்கு உற்பத்திக்குரியவையான சொத்துரிமைகளை எவ்விதத்திலும் பாதிக்காமலே தனதாக்க முறையில் முற்றிலும் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

இந்த புரட்சிகரமான மாற்றம், உழைப்பாளியே உழைப்புச் சக்தியை ஒரு சரக்காகச் சுதந்திரமாய் விற்கத் தொடங்கும் தருணம் முதற்கொண்டு தவிர்க்க முடியாததாகிறது.          

அரசியல் பொருளாதாரம் மூலதனத்தைப் பொதுவாக "உபரி-மதிப்பின் உற்பத்தியில் திரும்பத் திரும்ப ஈடுபடுத்தப்படும் திரட்டப்பட்ட செல்வம்" (மாற்றப்பட்ட உபரி-மதிப்பு அல்லது வருவாய்) என்றும், முதலாளியை "உபரி-மதிப்பின் உடைமையாளர்" என்றும் வர்ணிக்கிறது.