Thursday, October 31, 2013

பகுதி 4. அத்தியாயம் 15: இயந்திர சாதனமும் நவீனத் தொழில் துறையும். பிரிவு 8

பட்டறைத் தொழிலிலும், கைத்தொழில்களிலும், வீட்டுத் தொழிலிலும் நவீனத் தொழில் துறை ஏற்படுத்திய புரட்சி 

கைத்தொழிலையும் உழைப்புப் பிரிவினையையும் அடிப்படையாகக் கொண்ட கூட்டு-வேலையின் விழ்ச்சி

தனியொரு இயந்திரம் கூட்டு-வேலையின் அல்லது பட்டறைத் தொழிலின் இடத்தை மேற்கொள்ளும் போது, அதுவே கைவினைத் தன்மையுள்ள தொழில் ஒன்றின் அடிப்படையாகப் பயன்படலாம். ஆயின், இப்படிக் கைத்தொழில்களுக்குத் திரும்பிச் செல்வது ஆலைத் தொழிலுக்கு மாறிச் செல்வதேயாகும். வழக்கமாகவே, மனிதத் தசையாற்றலுக்குப் பதிலாக நீராவி அல்லது நீர் போன்ற யாந்திரிக இயக்குவிசை இயந்திரங்களை ஓட்ட முற்பட்டதும் ஆலைத்தொழில் உதயமாகிறது.

இங்குமங்குமாக, ஆனால் எப்படியும் சிறிது காலத்துக்கு மட்டுமே ஒரு தொழிலை இயந்திரவிசை கொண்டு சிறுவீதத்தில் நடத்திச் செல்லலாம். கவன்ட்ரி பட்டு நெசவுத் தொழிலில் "குடிசைத் தொழிற்சாலைகள்" என்ற பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.

இந்த தொழிற்சாலைகளுக்கும் முறையான தொழிற்சாலைக்கும் இடையிலான போராட்டம் 12 ஆண்டுகளுக்கும் அதிகமாக நீடித்தது. இந்தப் பரிசோதனை 300 குடிசைத் தொழிற்சாலைகளின் அழிவில் போய் முடிந்தது.

பட்டறைத் தொழில்வழிப் பண்ட உற்பத்தி அடுக்கடுக்கான நிகழ்முறைகளின் தொடரால் அன்றி அதிக எண்ணிக்கையிலான தொடர்பில்லாத நிகழ்முறைகளால் ஆனதாக இருக்கும் சந்தர்ப்பங்களில் ஆலைத் தொழிலாகும்  மாற்றம் மிகக் கடினமானது.

ஆயினும் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் 6 தனித்தனிப் பணிகளை ஒரே நேரத்தில் தானியங்கு வழியில் ஆற்றிய ஓர் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.

பட்டறைத் தொழில் மீதும் வீட்டுத் தொழில்கள் மீதும் ஆலைத் தொழிலின் பிரதிபலிப்பு

ஆலைத் தொழிலின் வளர்ச்சியோடும், அதனோடு சேர்ந்து வரும் பயிர்த்தொழிற் புரட்சியோடும் கூட, மற்றெல்லாத் தொழிற் கிளைகளிலும் நடைபெறும் உற்பத்தி விரிவடைவது மட்டுமல்லாமல், தன்மையிலும் மாற்றமடைகிறது.

இயந்திர சாதனம் முதலில் ஒரு நுணுக்க நிகழ்முறைக்கும் அடுத்து இன்னொரு நிகழ்முறைக்கும் பயன்பட்டு, பட்டறைத் தொழிலினுள் நுழைகிறது.  இவ்வாறு, பழைய உழைப்புப் பிரிவினையின் அடிப்படையிலான ஒழுங்கமைப்பாகிய பட்டறைத் தொழில்களின் திண்மையான ஒழுங்கமைப்பு குலைந்து போய் இடையறாத மாற்றங்களுக்கு ஆட்படுகிறது.

நவீன வீட்டுத் தொழில் எனப்படுவதற்கும், பழயை முறையிலான வீட்டுத் தொழிலுக்கும் பெயரைத் தவிரப் பொதுவானது ஒன்றுமில்லை. அந்த பழைய முறையிலான தொழில் இப்போது தொழிற்சாலையின், பட்டறையின், அல்லது பண்டகசாலையின் ஒரு வெளிப் பிரிவாக மாற்றப்பட்டிருக்கிறது. மூலதனத்தால் ஓரிடத்தில்  பெருந்திரளாகக் குவிக்கப்பட்டு, நேரடியாக அதன் கட்டளைக்குட்படுகிற ஆலைத் தொழிலாளர்கள், பட்டறைத் தொழிலாளர்கள், கைத்தொழிலாளர்கள் ஆகியோரன்னியில், கண்ணுக்குத் தெரியா இழைகளின் மூலம் இன்னொரு பட்டாளத்தையும் அது இயக்குகிறது. வீட்டுத் தொழில்களில்  ஈடுபட்டுள்ள தொழிலாளர்களது பட்டாளம் இது.

மலிவான, முதிர்ச்சியுறாத உழைப்புச் சக்தியைச் சுரண்டுவது, முறையான தொழிற்சாலையில் நடப்பதை விட நவீன பட்டறைத் தொழிலில் இன்னும் அதிக வெட்கக்கேடான முறையில் நடைபெறுகிறது.

மாதர்களும் குழந்தைகளும் ஈவிரக்கமற்ற விதத்தில் நச்சுப் பொருட்களின் அல்லது தீங்கிழைக்கும் பொருட்களின் பாதிப்புக்கு ஆளாக்கப்படுகின்றனர். இது வீட்டுத் தொழிலில் இன்னும் அதிகம்.

நவீனத் தொழில் துறையாலும் விவசாயத்தாலும் "தேவையற்றோர்" ஆக்கப்படும் மக்கள் திரள்களின் கடைசிப் புகலிடங்களான இந்த வீட்டுத் தொழில்களில் வேலைக்கான போட்டி உச்சமடைகிறது.

குறிப்பிட்ட தொழிற் கிளையில் உழைப்பின் சமுதாய உற்பத்தித் திறனும் நிகழ்முறைகளின் ஒன்றிணைப்புக்கான தொழில் நுட்ப அடிப்படையும் எந்த அளவுக்குக் குறைவாக வளர்ச்சி அடைந்துள்ளனவோ, அந்த அளவுக்கு அதிகமாக இச்சிக்கனம் இக்கிளையில் தனது பகைநிலையையும் கொலைத் தன்மையையும் வெளிக்காட்டுகிறது.

நவீனப் பட்டறைத் தொழிலும் வீட்டுத் தொழிலும் நவீன இயந்திரத் தொழிலாய் மாறிப் போதல். அதொழில்களுக்குத் தொழிற்சாலைச்  சட்டங்களைப் பிரயோகிப்பதால் இப்புரட்சி துரிதமாதல்

மாதர்கள், குழந்தைகள் ஆகியோரின் உழைப்பை ஒவ்வாத முறையில் பிரயோகித்தும், வேலை செய்வதற்கும் வாழ்வதற்கும் வேண்டிய இயல்பான நிலைமை ஏதுமில்லாத படி சூறையிட்டும், மிகை வேலையையும் இரவு வேலையையும் மிருகத்தனமான அளவுக்கு சுமத்தியும், இப்படி உழைப்புச் சக்தியை மலிவாக்கிச் செல்லும் வழியில் தாண்டிச் செல்ல முடியாத இயற்கைத் தடைகள் இறுதியில் குறுக்கிடுகின்றன. இதே குறுக்கீடுதான் இந்த வழிமுறைகளைக் கொண்டு சரக்குகளை மலிவாக்கிச் செல்வதற்கும், பொதுவாக முதலாளித்துவச் சுரண்டலுக்கும் ஏற்படுகிறது. இப்படியொரு நிலை இறுதியில் ஏற்பட்டதும் -- இது ஏற்பட பல்லாண்டு காலமாகிறது -- இயந்திர சாதனத்தைப் புகுத்த வேண்டிய தருணம் பிறக்கிறது; சிதறிக் கிடக்கும் வீட்டுத் தொழில்களும், மேலும் பட்டறைத் தொழில்களும் கூட இத்தருணம் முதல் அதிவேகமாய் ஆலைத் தொழில்களாக மாற வேண்டியதாகிறது.

இயந்திரத் தொழிலாலும், மேம்பட்ட பயிற் தொழிலாலும் "விடுவிக்கப்பட்ட" ஆட்கள் மலிவான மானுடப் பொருளாய் அமைகின்றனர். வேண்டல் அதிகரிக்கையில் நிறைவு செய்வதற்கு ஓர் உழைப்புப் பட்டாளம் தயார் நிலையில் இருப்பது முதலாளிக்கு அவசியம் என்பதே இவ்வகைப் பட்டறைத் தொழில்கள் தோன்றுவதற்கு முக்கியக் காரணம்.

உபரி-மதிப்பு உற்பத்தியாவதற்கும், உற்பத்திப் பண்டங்கள் மேலும் மேலும் மலிவாவதற்கும் முக்கிய காரணமாய் இருந்ததும் இருப்பதும் என்னவென்றால், உயிர் விடாமல் காலம் தள்ளும் அவல வாழ்வுக்கு வேண்டிய குறைந்த பட்சத்துக்கு மேல் அதிகமாகாத கூலியே தரப்படுவதும், மனித உயிரமைப்பு தாளக் கூடிய உச்ச அளவுக்கு வேலை நேரம் நீட்டிக்கப்படுவதும்தான். சரக்குகளாக மாற்றப்பட்ட மனித வியர்வையும் மனித இரத்தமும் இவ்வளவு மலிவாக இருந்ததால்தான், சந்தைகள் இடையறாது விரிவடைந்தன, தொடர்ந்து நாள்தோறும் விரிவடைகின்றன.

இறுதியாக ஓர் எல்லை வந்தடையப் பெற்றது. பழைய வழிமுறைக்கான அடிப்படை விரிவடைந்து கொண்டிருந்த சந்தைகளுக்கும், இன்னும் அதிவேகமாய் முதலாளிகளிடையே விரிவடைந்து கொண்டிருந்த போட்டிக்கும் இப்போது போதுமானதாயில்லை. இயந்திர சாதனத்தின் பிரவேசத்துக்குரிய தருணம் வந்துவிட்டது.

வீட்டுத் தொழில் உழைப்பாளர்களின் கூலியுடன் ஒப்பிடுமிடத்து இயந்திர உழைப்பாளர்களின் கூலி உயர்கிறது. சற்று மேலான நிலைக்குரிய கைவினைஞர்களின் கூலியும் இயந்திரம் அவர்களோடு போட்டியிடுவதால் சரிந்து விடுகிறது.

லண்டனில் கடந்த பத்தாண்டுகளில் பட்டினிச் சாவின் பயங்கர அதிகரிப்பு இயந்திர தையலின் பெருக்கத்தோடு கைகோத்துச் செல்கிறது.


ஒரு புறம், பெரிய பட்டறைகளில் பல இயந்திரங்கள் ஒன்று குவிக்கப்படுவது நீராவிச் சக்தியை உபயோகிப்பதற்கு வழி செய்கிறதென்றால், மறு புறம் நீராவிக்கும் மனிதத் தசையாற்றலுக்கும் இடையிலான போட்டி பெரிய தொழிற்சாலைகளில் தொழிலாளர்களும் இயந்திரங்களும் ஒன்று குவிவதை விரிவுபடுத்துகிறது.

ஒரு புறம், கால அளவு, நிறுத்தங்கள், ஆரம்பம், முடிவு ஆகியவை தொடர்பாக வேலை-நாளைக் கட்டாயமாக ஒழுங்குபடுத்துவது, குழந்தைகளுக்கான அஞ்சல்முறை கட்டாயமாக ஒழுங்குபடுத்துவது, குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட எந்த குழந்தையையும் சேர்த்துக் கொள்ளாமை முதலானவை கூடுதலான இயந்திர சாதனத்தையும் இயக்குவிசை என்ற விதத்தில் தசையாற்றலின் இடத்துக்கு நீராவியைக் கொணர்வதையும் அவசியமாக்குகின்றன. மறு புறம் பொதுவில் பயன்படுத்தப்படும் உலைகள், கட்டடங்கள் போன்ற உற்பத்திச் சாதனங்கள் கால இழப்பை ஈடு செய்யும் பொருட்டு அதிகமாக்கப்படுகின்றன. கூடுதலாய் மூலதனச் செலவீடு அவசியமாகி விடுகிறது.    

ஆலைத் தொழிலின் நிலவலுக்கான அடிப்படை நிபந்தனை குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அளவு சரக்கின், அல்லது குறிப்பிட்ட விளைபயனின் உற்பத்தியாகும்.

கால அளவு தொடர்பாக வேலை-நாளுக்குக் கட்டுத் திட்டமில்லாத போதெல்லாம், இரவு வேலையால் தங்குதடையின்றி மனித உயிர் நசியும் போதெல்லாம், நிலைமையை மேம்படுத்துவதற்கு வேலையின் இயல்பு ஏற்படுத்துகிற சிறு தடங்கலும் கூட இயற்கையாய் அமைந்த நிரந்தரத் தடையாகக் கருதப்படும் நிலை விரைந்து உருவாகிறது. நச்சுக் கிருமிகளை ஒழித்துக் கட்டும் நஞ்சுபோல, தொழிற்சாலைச் சட்டம் இத்தகைய நிரந்தர தடைகளை நிர்மூலமாக்குகிறது.

தொழிற்சாலைச் சட்டம் (1864) நேரத்தை மிச்சப்படுவதை அவசியமாக்கியது. எனவே புதிய இயந்திரங்கள் கண்டுபிடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படச் செய்தது.

தொழிற்சாலைச் சட்டங்கள் பட்டறைத் தொழிலை ஆலைத் தொழிலாக மாற்றுவதற்கு வேண்டிய பொருளாயதக் கூறுகளைச் செயற்கை முறையில் கனியச் செய்கின்றன என்றாலும், இச்சட்டங்கள் அதேபோது முதலீட்டை அதிகமாக்க செய்யவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி, சிறு அதிபர்களின் வீழ்ச்சியையும், மூலதனக் குவிப்பையும் (concentration of capital ) துரிதப்படுத்துகின்றன.  

இந்த வேலை நேர முறைப்படுத்தல் அறிவுவழிப்பட்ட முதற்கடிவாளமாயிற்று. கடற் பயணத்தின் வளர்ச்சியும், பொதுவாக தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியும் உண்மையில் வியாபாரப் பருவம் சார்ந்த வேலைக்கு ஆதாரமாய் இருந்த தொழில் நுட்ப அடித்தளத்தை தகர்த்தன. முன்னிலும் சமாளிக்க இயலாதவை என்று சொல்லப்பட்ட ஏனைய இடர்பாடுகள் எல்லாம் பெரிய பெரிய கட்டடங்களாலும், கூடுதலான இயந்திர சாதனங்களாலும் வேலை செய்யும் தொழிலாளர்களின் தொகைப் பெருக்கத்தாலும், இவையெல்லாம் சேர்ந்து மொத்த வர்த்தக முறையில் ஏற்படுத்தும் மாற்றங்களாலும் ஒழிந்து போகின்றன.

உழைப்பு நேரத்தைக் கட்டாயமாக முறைப்படுத்துவதற்கான "பாராளுமன்றப் பொதுச் சட்டத்தின் நெருக்குதலின் விளைவாக அல்லாமல் மூலதனம் இவ்வாறான மாற்றங்களுக்கு இணங்க ஒரு போதும் மனம் ஒப்புவதில்லை; அதன் பிரதிநிதிகளே திரும்பத் திரும்ப ஒப்புக் கொள்ளும் உண்மை இது.

Friday, October 25, 2013

பகுதி 4. அத்தியாயம் 15: இயந்திர சாதனமும் நவீனத் தொழில் துறையும். பிரிவு 7

தொழிலாள மக்களை ஆலைத் தொழில் விலக்குவதும், ஈர்ப்பதும். பருத்தித் தொழிலில் நெருக்கடிகள்

இயந்திர சாதனம் புகுத்தப்பட்டு, வளர்ச்சியடைகிற காலத்தின் பயங்கரங்கள் தணிந்து போனபின், நீண்ட கால நோக்கில் அவை உழைப்படிமைகளின் தொகையைக் குறைப்பதற்கு பதில் அதிகமாக்குகின்றன.

முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையின் முத்தாய்ப்பான இயந்திர சாதன வழிப்பட்ட ஆலைத் தொழிலே கூட வளர்ந்து உருப்பெற்ற பிற்பாடு, முன்பு ஆரம்பத்தில் அது வேலையில்லாமல் தெருவில் நிறுத்தியவர்களைக் காட்டிலும் அதிகமான தொழிலாள மக்களைக் கசக்கிப் பிழிகிறது என்ற இந்த தத்துவத்தை சொல்லித்தான் அரசியல் பொருளாதாரம் அகமகிழ்கிறது.

ஆலைத் தொழிலின் அசாதாரண விரிவாக்கம், அதன் வளர்ச்சியின் குறிப்பிட்ட கட்டத்தில், வேலை செய்யும் தொழிலாளர்களின் தொகையில் ஒப்பீட்டுக் குறைவை மட்டுமல்லாமல் அறுதியான குறைவையும் ஏற்படுத்தக் கூடும் என்பது உண்மைதான்.

1852க்கும் 1862க்குமிடையே ஆங்கிலேயக் கம்பளிப் பட்டறைத் தொழிலில் கணிசமான பெருக்கம் நிகழ்ந்தது; ஆனால் அதில் வேலை செய்த ஆட்களின் தொகையோ அநேகமாய் மாறாமலிருந்தது. புதிய இயந்திரங்களைப் புகுத்தியதானது முன்சென்ற காலங்களில் செலவிடப்பட்ட உழைப்பை எந்த அளவுக்கு நீக்கம் செய்து விட்டது என்பதை இது காட்டுகிறது.

1838க்கும் 1856க்கும் இடையில் விசைத்தறிகளிலும் அவற்றால் வேலை வாங்கப்பட்ட ஆட்களிலுமான அதிகரிப்பு, இத்தொழிற் கிளையினது விரிவாக்கத்தின் விளவுதான்.

ஆயின், இயந்திர சாதனம் பெருந்திரளான ஆட்களை உள்ளபடியே அகற்றி விட்டு காரியாம்சத்தில் அவர்களுக்கு பதிலியாகிறது என்றாலும், அகற்றப்பட்ட பட்டறைத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் ஆகியோரை விட ஆலைத் தொழிலாளர்கள் --- குறிப்பிட்டத் தொழிலில் மேலும் ஆலை கட்டுவதன் மூலமும், பழைய ஆலைகளை விரிவாக்குவதன் மூலமும்  --- தொகையில் அதிகமாகிவிடலாம்.

இயந்திர சாதனம் அதன் செயற்களத்தை வெற்றி கொள்கிற இந்த முதற்காலகட்டம், அதன் உதவியால் உண்டாகிற அசாதாரண இலாபங்களின் காரணத்தால், தீர்மானகர முக்கியத்துவமுடையதாகும். இந்த இலாபங்கள், விரைவு கூடிய திரட்டலின் ஆதாரமாக அமைவதோடு, ஓயாது படைக்கப்படுவதும், புதிய முதலீடுகளை எதிர்பார்த்து எந்நேரமும் காத்திருப்பதுமான கூடுதல் சமுதாய மூலதனத்தின் பெரியதொரு பகுதியைச் சலுகை பெற்ற நிலையிலுள்ள உற்பத்தித் துறைக்குள் கவரவும் செய்கின்றன.

நவீனத் தொழில் துறையின் பொருளுற்பத்திக்கு வேண்டிய பொதுவான நிலைமைகள் நிறுவப்பெற்றதுமே, இந்த உற்பத்தி முறை நெகிழ்ச்சி பெருகிறது; அதாவது கச்சாப் பொருள் கிடைப்பதிலும், உற்பத்தியான பண்டத்தை விற்பதிலும் ஏற்படக்ககூடியது தவிர வேறு தடையேதுமில்லாமல் மடை திறந்தாற்போல் விரைந்து விரிவுபட வளரும் ஆற்றல் பெறுகிறது.

இயந்திர வழி உற்பத்திப் பண்டங்களின் மலிவும், போக்குவரத்து மற்றும் தொடர்புச் சாதனங்களும் அந்நியச் சந்தைகளை வெற்றி கொள்ள வழி செய்தன. இயந்திர சாதனம் இதர நாடுகளில் கைத்தொழில் உற்பத்தியை நாசமாக்குவதன் மூலம், அவற்றை தனக்கு வேண்டிய கச்சாப் பொருளை வழங்குவதற்கான களங்களாக வலுவந்தமாய் மாற்றுகிறது.

ஒரு புதிய உழைப்புப் பிரிவினை, உலகு தழுவிய உழைப்புப் பிரிவினை, நவீனத் தொழில் துறையினது தலையாய கேந்திரங்களின் தேவைகளுக்குப் பொருத்தமான உழைப்புப் பிரிவினை உதித்தெழுகிறது; அது இவ்வுலகின் ஒரு பகுதியை, பிரதானமாக‌ தொழிற் பிரதேசமாய் இருக்கிற மறு பகுதிக்குத் தேவையானவற்றை வழங்கும் பொருட்டு பிரதானமாக விவசாயப் பிரதேசமாய் மாற்றிவிடுகிறது.

தாவித் தாவி விரைந்து விரிவடைகிற ஆலைத்தொழிலில் உள்ளார்ந்துள்ள பேராற்றலும், அது உலகச் சந்தைகளைச் சார்ந்திருப்பதும் தவிர்க்க முடியாமலே ஜூரவேக உற்பத்தியைத் தோற்றுவிக்கின்றன. இதைத் தொடர்ந்து சந்தைகள் மிகையாக நிரம்பி வழியும் நிலை ஏற்படுகிறது; அடுத்து சந்தைகளின் சுருக்கம் உற்பத்தியை முடங்கச் செய்கிறது. நவீனத் தொழில் துறையின் வாழ்வே மிதமான செயற்பாடு, செழிப்பு, மிகையுற்பத்தி, நெருக்கடி, தேக்கம் ஆகிய காலவட்ட வரிசை ஆகி விடுகிறது.

இயந்திர சாதனம் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பிலும், ஆதலால் வாழ்க்கை நிலைமைகளிலும் தோற்றுவிக்கிற நிச்சயமின்மையும் நிலையின்மையும் தொழிற் சகடத்தின் இந்த கால வட்ட மாற்றங்களின் காரணத்தால் சகஜமாகி விடுகின்றன.

செழிப்புக் காலங்களில் தவிர முதலாளிகளிடையே சந்தைகளில் அவரவரின் பங்குக்காக மூர்க்கப் போர் நடைபெறுகிறது. உற்பத்திப் பண்டத்தின் மலிவுக்கு நேர் விகிதத்திலானது இந்த பங்கு. உழைப்புச் சக்திக்கு பதிலியாக அமையும் மேம்பட்ட இயந்திர சாதனத்தைப் பிரயோகிப்பதிலும், புதிய உற்பத்தி வழிமுறைகளைப் பிரயோகிப்பதிலும் இந்தப் போராட்டம் தோற்றுவிக்கும் போட்டாப் போட்டி ஒரு புறமிருக்க, தொழிற் சகடம் ஒவ்வொன்றிலும் சரக்குகளை மலிவாக்கும் பொருட்டு உழைப்புச் சக்தியின் மதிப்புக்கும் கீழே வலுவந்தமாய்க் கூலியை வெட்டிச் செல்ல முயல்கிற நேரமும் வருகிறது.

புதிய தொழிலாளர்களுக்குரிய இடத்தை காரியாம்சத்தில் வழங்குவதும், இன்னொரு நேரத்தில் உள்ளபடியே பழைய தொழிலாளர்களை விலக்குவதுமான தொழில் நுட்ப முன்னேற்றமும் அதில் ஓயாது குறுக்கிடுகிறது.

தொழிலாள மக்கள் தொடர்ச்சியாக விலக்கவும் படுகின்றனர், ஈர்க்கவும் படுகின்றனர்; இவ்விதம் அலைகழிக்கப்படுகின்றனர்; அதேபோது திரட்டப்படுவோரின் பாலிலும், வயதிலும், தேர்ச்சியிலும் இடைவிடாத மாற்றங்கள் நிகழ்கின்றன.

தொழிலாளர்களைப் பலியிட்டு உற்பத்தி நிகழ்முறையில் நடந்த புரட்சி, தவளைகளைப் பலியிட்டு ஆய்வாளர்கள் செய்வதைப் போன்ற experimenta in corpore vili முறைப்படி செய்யப்பட்டன.

Tuesday, October 22, 2013

பகுதி 4. அத்தியாயம் 15: இயந்திர சாதனமும் நவீனத் தொழில் துறையும். பிரிவு 6

இயந்திர சாதனத்தால் நீக்கப்படும் தொழிலாளர்கள் தொடர்பான இழப்பீட்டுத் தத்துவம்.

முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் பலரும், தொழிலாளர்களை நீக்கம் செய்கிற எல்லா இயந்திர சாதனங்களும் அதே நேரத்தில் அதே தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கப் போதுமான மூலதனத் தொகையைக் கட்டாயமாக விடுவிக்கின்றன என்று வலியுறுத்துகின்றனர்.

ஆனால் மூலதனத்தின் ஒரு பகுதி விடுவிக்கப்படுவதற்கு பதில் முடக்கப்பட்டுள்ளது.

இயந்திர சாதனத்தில் மேம்பாடு ஏற்படும் போதெல்லாம், அந்த சாதனத்தில் வேலை செய்வோரின் தொகை குறையவே செய்யும். புதிதாகப் புகுத்தப்பட்ட இயந்திர சாதனத்துக்கான செலவு அதனால் நீக்கப்படும் உழைப்புச் சக்திக்கும் குறைவாயிருந்தால் அந்த அளவுக்கு மூலதனம் விடுவிக்கப்பட்டிருக்கும். அதிலும் ஒரு பகுதி இப்போது மாறா..மூலதனமாக வேண்டும்; இவ்வாறு மீதமுள்ள தொகையே உழைப்புச் சக்திக்காக செலவிடுவதெற்கென்று எஞ்சியுள்ளது.

எப்படியும், அவ்வியந்திர சாதனத்தின் நிர்மாணம் அதனை ஈடுபடுத்துவதால் நீக்கம் செய்யப்படுவோரை விடக் குறைவான ஆட்களுக்கே வேலை கொடுக்கிறது. நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் பெற்று வந்த கூலித் தொகை இப்போது இயந்திர சாதனத்தின் உருவில் பின் வருவனவற்றைக் குறிக்கிறது: (1) அவ்வியந்திர சாதனத்தின் நிர்மாணத்தில் பயன்படுத்தப்பட்ட உற்பத்திச் சாதனங்களின் மதிப்பு, (2) அதன் நிர்மாணத்தில் வேலைக்கமர்த்தப்பட்ட இயந்திர கம்மியர்களின் கூலி, (3) அவர்களது "அதிபர்" வசம் போகிற உபரி..மதிப்பு.

எனவே அதிகரித்த இயந்திர கம்மியர்களுக்கு இடையறாது வேலை தர வேண்டுமானால், ஒருவர் பின் ஒருவராக தயாரிப்பாளர்கள் இயந்திர சாதனத்தைக் கொண்டு தொழிலாளர்களை நீக்கம் செய்ய வேண்டும். 

இயந்திர சாதனம் ஆட்களை விடுவித்து, அவர்களை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய நிலையில் வைக்கிறது என்பது மட்டுமல்லாமல் அவர்கள் நுகர்ந்து வந்த வாழ்வுச் சாதனங்களையும் அவர்கள் நுகர்விலிருந்து திரும்ப்பப் பெற்று விடுவிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மைதான். 

நீக்கப்பட்ட தொழிலாளர்களைப் பொறுத்த வரை, இந்த வாழ்வுச் சாதனங்கள் அவர்களுக்கு சரக்குகளாக இருந்தனவே தவிர, மூலதனமாக இருக்கவில்லை. 

அவர்கள் வாங்கற் சாதனங்களிடமிருந்து இயந்திர சாதனத்தால் விடுவிக்கப்பட்டனர் என்ற நிலைமை அவர்களை வாங்குவோர் என்ற நிலையிலிருந்து வாங்க முடியாதோராக மாற்றியது. அந்தச் சரக்குகளுக்கு வேண்டல் குறைந்தது இதனால்தான். இக்குறைவு வேறு திசையிலிருந்து வரும் அதிகரிப்பால் ஈடு செய்யப்படா விட்டால், இச்சரக்குகளின் சந்தை விலை வீழ்கிறது. இந்நிலைமை சிறிது காலத்திற்கு நீடிக்குமானால், இச்சரக்குகளின் உற்பத்தியில் வேலை செய்யும் தொழிலாளர்களை நீக்க வேண்டியதாகிறது. 

அதாவது இயந்திர சாதனம் அது புகுத்தப்படுகிற உற்பத்திக் கிளையில் மட்டுமல்லாமல், புகுத்தப்படாத கிளைகளிலும் தொழிலாளர்களை வேலையிழக்கச் செய்து தெருவில் நிறுத்திகிறது என்பதையே நிரூபிக்கின்றனர்.

எந்தத் தொழிற் கிளையிலும் வேலையிலிருந்து வெளியேற்றப்படும் தொழிலாளர்கள் வேறு ஏதாவது கிளையில் வேலை தேடலாம் என்பது மெய்தான். அவர்களுக்கு அது கிடைத்து, இவ்வாறு அவர்களுக்கும் வாழ்வு சாதனங்களுக்கும் இடையிலான பிணைப்பு புதுப்பிக்கப்பட்டால், முதலீட்டை நாடிக் கொண்டிருக்கும் புதிய கூடுதலான மூலதனத்தைக் கொண்டு இது நிகழ்கிறதே தவிர, முன்னதாக அவர்களுக்கு வேலை கொடுத்து, பின்னர் இயந்திர சாதனமாக மாற்றப்பட்ட மூலதனத்தைக் கொண்டு அல்லவே அல்ல.

இயந்திர சாதனத்தால் நீக்கப்பட்ட ஏழைகள் உழைப்புப் பிரிவினையால் முடமாக்கப்பட்டவர்கள்; தமது பழைய தொழிலுக்கு வெளியே மதிப்பில்லாதவர்கள்; குறையூதியத் தொழிலாளர்கள் மிகையாகக் கிடைக்கிற மட்டரகமான ஒரு சிலவற்றைத் தவிர பிற தொழிற் கிளைகள் எதிலும் சேர முடியாதவர்கள். 

இயந்திர சாதனத்தின் முதலாளித்துவ பிரயோகத்திலிருந்து பிரிக்க முடியாதவையான முரண்பாடுகளும் பகைநிலைகளும் பிறப்பதற்கு இயந்திர சாதனம் அதனளவில் காரணமன்று. அவற்றின் முதலாளித்துவப் பிரயோகமே காரணம் என்பதை வைத்து, அம்முரண்பாடுகளும் பகைநிலைகளூம் நிலவவேயில்லை என்றே அவர்கள் கூறிவிடுகின்றனர்!

இயந்திர சாதனம் அதனளவில் உழைப்பு நேரத்தைக் குறைக்கிறது; ஆனால் மூலதனத்துக்குப் பணி செய்யும் போது உழைப்பு நேரத்தை நீட்டுகிறது.

அதனளவில் உழைப்பை இலகுவாக்குகிறது; ஆனால் மூலதனத்தால் ஈடுபடுத்தப்படும் போது உழைப்பின் மும்முரத்தை உயர்த்துகிறது.

அதனளவில் இயற்கைச் சக்திகள் மீது மனிதன் கண்ட வெற்றியாகத் திகழ்கிறது, ஆனால் மூலதனத்தின் கையில் இருக்கையிலிருக்கையில் மனிதனை அச்சக்திகளின் அடிமையாக்குகிறது.


அதனளவில் உற்பத்தியாளர்களின் செல்வத்தை அதிகமாக்குகிறது, ஆனால் மூலதனத்தின் கையிலிருக்கையில் அவர்களை வக்கற்றவர்கள் ஆக்குகிறது.

இவற்றையும் ஏனைய பல நிலைமைகளையும் வைத்து முதலாளித்துவ பொருளாதார அறிஞர், இந்த முரண்பாடுகளெல்லாம் எதார்த்தத்தின் நிழல்களே தவிர எதார்த்தம் அல்ல, உள்ளபடியாகவோ தத்துவார்த்தமாகவோ நிலவுகிறவை அல்ல என்பது நிதர்சனமாக தெரிவதாக அசங்காமல் சொல்லுகிறார்.

இயந்திர சாதனத்தின் முதலாளித்துவப் பிரயோகம் பற்றிய உண்மை நிலவரங்களை அம்பலப்படுத்துகிறவர் எவரும் எவ்வகையான இயந்திர சாதனப் பிரயோகத்தையும் எதிர்ப்பவராம், சமுதாய முன்னேற்றத்தின் எதிரியாம்.

இயந்திர சாதனம், அது புகுத்தப்படும் தொழில்களில் எல்லாம், கட்டாயமாய் வேலையிலிருந்து ஆட்களை வெளியேற்றிவிடுகிறது என்ற போதிலும், ஏனைய தொழில்களில் இதற்கு மாறாக வேலை வாய்ப்பினைப் பெருகச் செய்யலாம். ஆயினும் இந்த விளைவுக்கும் இழப்பீட்டு தத்துவம் எனப்படுவதற்கும் இடையே பொதுவானதொன்றுமில்லை.

உள்ளபடியே, குறைந்த தொகையிலான தொழிலாளர்களைக் கொண்டு இயந்திர சாதனத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பண்டத்தின் மொத்த அளவு, கையால் செய்த பண்டத்தின் மொத்த அளவுக்குச் சமமாய் இருப்பதற்குப் பதில், பெரிதும் கூடுதலாகவே உள்ளது.

குறிப்பிட்ட தொழிலில் இயந்திர சாதனத்தின் உபயோகம் பெருகும் போது, இத்தொழிலுக்கு உற்பத்திச் சாதனங்களைத் தருகிற ஏனைய தொழில்களில் உற்பத்தியைப் பெருகச் செய்வதே உடனடி விளைவாகும். இதன் மூலம் அதிகரித்த தொகையிலான ஆட்களுக்கு எவ்வளவு தூரம் வேலை கிடைக்கும் என்பது, வேலை-நாளின் கால அளவும் உழைப்பின் மும்முரமும் குறிப்பிட்டதாய் இருக்க, ஈடுபடுத்தப்படும் மூலதனத்தின் இயைபினை (composition), அதாவது அதன் மாறும் அங்கத்துடன் மாறா அங்கம் கொண்டுள்ள விகிதத்தைப் பொறுத்ததாகும். இந்த விகிதமோ அத்தொழில்களை இயந்திர சாதனம் ஏற்கனவே வசப்படுத்தியிருக்கிற, அல்லது வசப்படுத்தி வருகிற அளவிற்கேற்பக் கணிசமாக மாறுபடுகிறது.

நிலக்கரி சுரங்கங்களிலும் உலோகச் சுரங்கங்களிலும் உழைக்க வேண்டியிருந்த ஆட்களின் தொகை ஆங்கிலேய ஆலைத்தொழில் கண்ட முன்னேற்றத்தின் விளைவாக பெருமளவு அதிகரித்தது. ஆனால் சுரங்கத் தொழிலில் புதிய இயந்திர சாதன உபயோகத்தின் விளைவாக இத்தொகையின் பெருக்கம் மட்டுப்பட்டுள்ளது.

கச்சாப் பொருள்களைப் பொறுத்த வரை பஞ்சு நூற்பின் துரித முன்னேற்றமானது அமெரிக்க ஐக்கிய அரசில் பருத்தி சாகுபடியையும், ஆப்பிரிக்க அடிமை வர்த்தகத்தையும் தழைத்தோங்க செய்தது.

ஆங்கிலேய கம்பளித் தொழிற்சாலைகளின் உதயமானது பயிர் நிலத்தைப் பையப்பைய ஆட்டு மேய்ச்சல் நிலமாக மாற்றியதோடு, விவசாயத் தொழிலாளர்களில் ஒரு பகுதியை வேண்டாத உபரியாக்கி, பெருந்திரளாய் அவர்கள் நகரங்களுக்குத் துரத்தப்படுவதற்கு வழிகோலியது.

இயந்திர வழி நூற்பு கைத்தறி நெசவாளர்களுக்கு மிக மலிவாகவும் அபரிமிதமாகவும் நூல் வழங்கியதால், அவர்கள் ஆரம்பத்தில் முதலீட்டை அதிகப்படுத்தமலே முழு நேரம் வேலை செய்யமுடிந்தது. அதற்கேற்ப அவர்களது சம்பாத்தியமும் உயர்ந்தது.

ஜென்னியாலும், திராசிலாலும். மியூலாலும் இவ்விதம் அதிகரித்து வந்த நெசவாளர் தொகை எட்டு லட்சம் ஆயிற்று. இன்னிலையில் விசைத்தறி இதற்கு முடிவு கட்டியது. இதே போல, இயந்திர சாதனம் அபரிமிதமாகத் துணி உற்பத்தி செய்ததால், தையற்காரர்கள், தையர்காரிகள், ஊசிப் பெண்கள் ஆகியோரின் தொகை அதிகரித்துச் சென்றது. தையல் இயந்திரத்தின் வருகை இதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இயந்திர சாதனத்தின் உடனடி விளைவு உபரி-மதிப்பையும், உபரி-மதிப்பு உருக்கொண்டுள்ள உற்பத்திப் பண்டத் திரளையும் பெருகச் செய்வதாகும். முதலாளிகளும், அவர்களைச் சார்ந்திருப்பவர்களும் நுகர்கிற பண்டங்கள் இன்னும் ஏராளமாய் பெருகுகிறது.

சொகுசு பண்டங்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. செப்பஞ்செய்யப்பட்ட பல்வேறு வகை உற்பத்திப் பண்டங்களுக்கு உலகச் சந்தைகளுடனான புதிய உறவுகளும் காரணமாகும். இவ்வுறவுகளை நவீனத் தொழில் துறை தோற்றுவிக்கிறது.  முன்னிலும் பெரிய அளவுகளில் உள் நாட்டு உற்பத்திப் பண்டங்களுக்குப் பிரதியாக அயல் நாட்டு சொகுசு பண்டங்கள் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுவது மட்டுமல்லாமல், அயல் நாட்டுக் கச்சாப் பொருட்கள், பகுதிப் பொருட்கள், இடை நிலை உற்பத்திப் பொருட்கள் முன்னிலும் பெருந்திரளாக உள் நாட்டுத் தொழில்களில் உற்பத்திச் சாதனங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. உலகச் சந்தைகளுடனான இந்த உறவுகளின் விளைவாக, உழைப்புக்கான வேண்டல் போக்குவரத்துத் தொழில்களில் அதிகரிக்கிறது. இத்தொழில்கள் ஏராளமான வகைகளாகப் பிரிந்து போகின்றன.

கால்வாய்கள், கப்பல் துறைகள், குகைப் பாதைகள், பாலங்கள் இன்னபிறவற்றை அமைப்பதில் உழைப்புக்கான வேண்டலை பெருகச் செய்கிறது. இப்பணிகள் தூரத்து எதிர்காலத்தில்தான் பலன் தரக் கூடியவை.

நவீனத் தொழில் துறையின் அசாதாரண உற்பத்தித் திறன், மற்றெல்லா உற்பத்தித் துறைகளிலும் உழைப்புச் சக்தி முன்னிலும் விரிவான அளவிலும் முன்னிலும் மும்முரமான முறையிலும் சுரண்டப்படுவதற்கு வழி செய்கிறது என்பதால், மேலும் மேலும் பெரிய தொழிலாளி வர்க்கப் பகுதியை உற்பத்திக்குதவாத விதத்தில் வேலை வாங்குவதற்கும், ஆதலால் வேலைக்காரர்கள், வேலைக்காரிகள், கையாட்கள் முதலானோர் உள்ளிட்ட ஒரு வேலைக்கார வர்க்கத்தின் பெயரால், புராதன வீட்டு அடிமைகளை --- இடையறாது விரிவடையும் அளவில் --- புனருத்தாரணம் செய்வதற்கும் இடமளிக்கிறது. 

Sunday, October 13, 2013

பகுதி 4. அத்தியாயம் 15: இயந்திர சாதனமும் நவீனத் தொழில் துறையும். பிரிவு 5

தொழிலாளிக்கும் இயந்திரத்துக்கும் இடையிலான போர்

முதலாளிக்கும் கூலித் தொழிலாளிக்கும் இடையிலான போராட்டம் மூலதனத்தின் பிறப்பிலிருந்தே நடப்பதாகும். பட்டறைத் தொழிற் காலம் முழுவதிலும் அது நடந்த வண்ணமிருந்தது. ஆனால் இயந்திர சாதனம் புகுத்தப்பட்ட பின்னர்தான், மூலதனத்தின் பொருளாயத வடிவமாகிய உழைப்புச் சாதனத்துகெதிராகவே தொழிலாளி போராடினார். உற்பத்திச் சாதனங்களின் இந்த குறிப்பிட்ட வடிவமே முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையின் பொருளாயத அடிப்படையாக உள்ளதென்ற விதத்தில் அதற்கெதிராக அவர் கிளர்ந்தெழுந்தார்.

17 ஆம்  நூற்றாண்டில் ரிப்பன் தறிக்கு எதிரான தொழிலாளர் கிளர்ச்சிகளை அநேகமாய் ஐரோப்ப முழுவதுமே கண்டது. இந்த இயந்திரங்கள் ஜெர்மனியில் கண்டு பிடிக்கப்பட்டவை.

ஐரோப்பாவையே ஆட்டங்காணச் செய்த இந்த இயந்திரமானது, உண்மையில் மியூல், விசைத்தறி ஆகியவற்றுக்கும் 18ஆம் நூற்றாண்டின் தொழிற் புரட்சிக்கும் முன்னோடியாயிற்று. மேலும் மேம்படுத்தப்பட்ட நிலையில், அது ஒரே நேரத்தில் 40 முதல் 50 உருப்படிகளை உற்பத்தி செய்தது.

1630 வாக்கில் டச்சுக்காரர் ஒருவர் லண்டன் அருகே நிறுவிய காற்றுவிசை அறுவை ஆலை ஒன்று மக்களின் அத்துமீறிய அடாச் செயல்களுக்குப் பலியாயிற்று. 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட, நீர்விசை அறுவை ஆலைகள், பாராளுமன்றத்தின் ஆதரவு இருந்த போதிலும், பெருஞ்சிரமத்துடந்தான் மக்களின் எதிர்ப்பைச் சமாளித்தன. 1758இல் எவரெட், நீர்விசையால் இயங்கும் கம்பளி வெட்டும் இயந்திரத்தை முதன் முதல் நிறுவியதுமே, அதனால் வேலையிலிருந்து துரத்தப்பட்ட ஒரு லட்சம் மக்கள் அதனைத் தீயிட்டுக் கொளுத்தினர்.

இந்நூற்றாண்டின் முதல் 15 ஆண்டுகளில், பிரதானமாக விசைத்தறியின் உபயோகத்தைத் தொடர்ந்து, ஆங்கிலேய ஆலைத் தொழில் வட்டங்களில் இயந்திரங்கள் பெரிய அளவில் அழிக்கப்பட்டன. இது லுட்டைட் இயக்கமென (Luddite movement) பெயர் பெற்றது. 

இயந்திர சாதனத்தையும், அதனை மூலதனம் கையாள்வதையும் தொழிலாளர்கள் வேறுபடுத்திப் பார்ப்பதற்கும், தமது தாக்குதல்களைப் பொருளாயத உற்பத்திக் கருவிகளுக்கு எதிராக அல்லாமல் அக்கருவிகள் பயன்படுத்தப்படும் முறைக்கெதிராகத் தொடுப்பதற்கும் கற்றுக் கொள்வதற்கு காலமும் அனுபவமும் தேவைப்பட்டன.

பட்டறைத் தொழிலில் கூலி குறித்து எழும் போராட்டங்கள் பட்டறைத் தொழிலை நிராகரிப்பவை அல்ல. புதிய பட்டறைத் தொழில் நிறுவுவதற்கு எதிர்ப்புக் கிளம்புவது கைவினைச் சங்கங்களிடமிருந்தும், தனிச் சலுகைப் பெற்ற நகரங்களிடமிருந்தும்தான்; உழைக்கும் மக்களிடமிருந்தல்ல.

இங்கிலாந்தில் விசைத் தறி எட்டு லட்சம் தொழிலாளர்களைத் தெருவில் நிறுத்தியது என்று நாம் சொல்லும்போது, இப்போதிருக்கிற இயந்திர சாதனத்துக்குப் பதிலாக இத்தனைத் தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள் என்பதல்ல, உள்ளபடியே இத்தறிகள் ஏராளமான நெசவாளர்களை நீக்கின அல்லது வெளியேற்றின என்பதே இதன் அர்த்தம்.

மத்திய காலத்திலிருந்து வந்த நகரத் தொழிலாளர்கள் ஒப்பளவில் சிறு தொகையினராய் இருந்ததால் புதிய குடியேற்றச் சந்தைகளின் (colonial markets) வேண்டல்களை நிறைவு செய்ய முடியவில்லை. அதே நேரத்தில், பட்டறைகளிலான உழைப்புப் பிரிவினையும், கூட்டு..வேலையும் உழைப்போரின் உற்பத்தித் திறனை உயர்த்துகின்றன என்ற முறையில் அனுகூலமே மேலோங்கி இருப்பதாகக் கருதப்பட்டது.

உழைப்புக் கருவி இயந்திர வடிவம் பெற்றதும், உடனடியாக அது தொழிலாளிக்குப் போட்டியாளனாகிறது. இயந்திர சாதனத்தின் விளைவாய் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் வாழ்வுச் சாதனங்களைப் பறிகொடுக்க நேரிடுகிறது; இயந்திர சாதனத்தைக் கொண்டு மூலதனம் அடைகிற தற்பெருக்கம் இப்படி பறிகொடுக்கும் தொழிலாளர் தொகைக்கு நேர் விகிதத்தில் நடைபெறுகிறது.

உழைப்புப் பிரிவினையானது இந்த உழைப்புச் சக்தியை குறிப்பிட்ட ஒரு கருவியைக் கையாள்வதற்கு மட்டுமேயான தேர்ச்சியாக குறுக்கி அதைத் தனித்திறனுடையதாக்குகிறது. இந்தக் கருவியைக் கையாள்வது இயந்திரத்தின் வேலையாகியதுமே தொழிலாளியின் உழைப்புச் சக்தியினது பயன்..மதிப்போடு பரிவர்த்தனை..மதிப்பும் மறைந்து போகிறது.

இயந்திரச் சாதனத்தால் இவ்வாறு தேவைக்கதிகமானதாக்கப்படுகிற, அதாவது மூலதனத்தின் தற்பெருக்கத்துக்கு இனியும் உடனடி அவசியம் இல்லாததாக்கப்படுகிற தொழிலாளி வர்க்கப் பகுதி பழைய கைத்தொழில்களும் பட்டறைத் தொழில்களும் இயந்திர சாதனத்துடன் நடத்தும் அசமத்துவப் போட்டியில் ஒழிந்து போகிறது; அல்லது எளிதில் நுழையக் கூடிய தொழிற் கிளைகள் யாவற்றிலும் பெருக்கெடுத்து, உழைப்புச் சந்தையை மூழ்கடித்து, உழைப்புச் சக்தியின் விலையை அதன மதிப்புக்கும் கீழானதாக வீழ்த்துகிறது.

மாற்றம் துரிதமாக நடைபெறுமிடத்து, விளைவு கடுமையானதாகவும், பெருந்திரளான மக்களைப் பீடிப்பதாகவும் உள்ளது. ஆங்கிலேய கைத்தறி நெசவாளர்கள் சிறுகச் சிறுக நசிந்து போனதை விட பயங்கரமான ஒன்றை வரலாறு கண்டதில்லை; பலர் பட்டினி கிடந்து மடிந்தனர். பலர் குடும்பம் முழுவதற்கும்  நாளொன்றுக்குக் கிடைத்த 2 1/2 பென்னியில் நெடுநாள் வதைந்து நசித்துப் போயினர்.           

உழைப்புச் சாதனம் தொழிலாளியை வீழ்த்துகிறது. நவீனத் தொழில் துறையிலும் கூட இயந்திர சாதனத்தின் தொடர்ச்சியான மேம்பாடும், தானியங்கி முறையின் வளர்ச்சியும் இதையொத்த விளைவை உண்டாக்குகின்றன.

ஒரு குறிப்பிட்ட பலனை உற்பத்தி செய்யும் பொருட்டு முன் போல அதே அளவு வயது வந்தோர் உழைப்பை அமர்த்துவதற்கான அவசியத்தை நீக்குவதில் மட்டுமின்றி, ஒருவித மனித உழைப்புக்குப் பதில் இன்னொரு வித மனித உழைப்பை ... அதிகம் தேர்ச்சி பெற்ற உழைப்புக்கு பதிலாகக் குறைவாக தேர்ச்சி பெற்ற உழைப்பை ...  ஈடுபடுத்துவதிலும் இயந்திர மேம்பாடுகள் ஏற்படுத்தும் விளைவு கூலி வீதத்தில்  புதியதொரு குழப்பத்தை தோற்றுவிக்கிறது.  

சாதாரண மியூலுக்கு பதிலாகத் தன்னியக்க மியூலைக் கொணர்வதன் விளைவு ஆண் நூற்பாளர்களில் பெரும் பகுதியினரை வேலையிலிருந்து வெளியேற்றி விட்டு, இளம் பிராயத்தினரையும் குழந்தைகளையும் மட்டும் வைத்துக் கொள்வதாகும்.

இயந்திர சாதனம் தொழிலாளியை விஞ்சி விடும் போட்டியாளனாகச் செயல்படுகிறது, இடையறாது அவரைத் தேவையற்றவராக்கும் நிலையிலுள்ளது.

நீராவி எஞ்சின் ஆரம்ப முதலே மனித சக்தியின் எதிராளியாக இருந்தது. புதிதாய் பிறந்த ஆலைத் தொழில் நெருக்கடிக்கு ஆளாகும் படி அச்சுருத்திய  தொழிலாளர்களின் வளர்ந்தெழும் கோரிக்கைகளை முதலாளி காலுக்கடியில் மிதிப்பதற்கு உதவிய எதிராளி அது.

நீராவிச் சுத்தியலைக் கண்டுபிடித்தவரான நாஸ்மித் பின் வருமாறு தொழிற்சங்க ஆணையித்தின் முன் சாட்சியம் அளிக்கிறார். "எமது நவீன இயந்திர மேம்பாடுகளின் தனிச்சிறப்பான அமிசம், தன்னியக்கக் கருவி..இயந்திர சாதனம் (self-acting tool machinery) புகுத்தப்படுவதாகும். இப்போது ஒவ்வொரு தொழிலாளியும் செய்ய வேண்டியிருப்பது தானே உழைப்பதன்று. இயந்திரத்தின் அழகிய உழைப்பைக் கண்காணிப்பதே"  

தான் கூலிக்கமர்த்தும் விஞ்ஞானத்தின் துணை கொண்டு மூலதனம் உழைப்பின் முரட்டுக் கரத்தை எப்போதுமே பணிந்து இயங்கச் செய்கிறது. ஏனெனில் "அது (பௌதிக இயந்திர விஞ்ஞானம்) ஏழைகளை வருத்துவதற்கான ஆயுதமாகப் பணக்கார முதலாளிக்கு சேவை புரிவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது"  

Friday, October 11, 2013

பகுதி 4. அத்தியாயம் 15: இயந்திர சாதனமும் நவீனத் தொழில் துறையும். பிரிவு 4

தொழிற்சாலை

கருவியோடு கூட, அதனைக் கையாள்வதில் தொழிலாளி பெற்றுள்ள‌ தேர்ச்சியும் இயந்திரத்துக்குப் போய்ச் சேருகிறது. கருவியின் திறன்கள், மனித உழைப்புச் சக்தியுடன் பிணைந்த தடைக் கட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுகின்றன.

பட்டறைத் தொழிலின் சிறப்பியல்பாய்த் திகழும் தனித் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களின் படிவரிசைக்குப் பதிலாக, தானியங்கித் தொழிற்சாலையில், இயந்திரங்களின் கவனிப்பாள‌ர்கள் செய்ய வேண்டியிருக்கும் ஒவ்வொரு வகை வேலையையும் ஒரே நிலைக்குச் சமப்படுத்திக் குறைக்கும் போக்கு தலைதூக்குகிறது.

ஒவ்வொரு துறையிலும் ஒருசேர அமைந்த ஒரே மாதிரியான அநேக இயந்திரங்களில் அவர்கள் வேலை செய்கின்றனர். எனவே, அவர்களது கூட்டு-வேலை சாமானிய வகைப்பட்டதேயாகும்.

இயந்திரங்களை வைத்து வேலை செய்கிற தொழிலாளர்களாகவும், இந்தத் தொழிலாளர்களின் வெறும் சேவகர்களாகவும் (மிகப் பெரும்பாலும் குழந்தைகள்) பிரிக்கப்படுவதே அடிப்படைப் பிரிவினையாகும்.

இவ்விரண்டு பிரதான பிரிவுகளோடு கூட, பொறியாளர்கள், இயந்திரக் கம்மியர்கள், பொருத்துநர்கள் போன்ற எண்ணிக்கை நோக்கில் முக்கியமற்ற ஆட்களின் பிரிவு ஒன்றும் உள்ளது. மேம்பட்ட தொழிலாளர் பிரிவு இது; இவர்களில் சிலர் விஞ்ஞானக் கல்வி கற்றவர்கள்; மற்றவர்கள் ஒரு தொழிலுக்கென்றே வளர்க்கப்பட்டவர்கள். இந்தப் பிரிவு ஆலைத் தொழிலாளர் வர்க்கத்துடன் சேர்த்து கணக்கிடப்பட்டாலும், அதிலிருந்து வேறுபட்டதாகும். இந்த உழைப்புப் பிரிவு முற்றிலும் தொழில் நுட்ப வழிப்பட்டதே.

பட்டறைத் தொழிலில் நடப்பது போல் குறிப்பிட்ட பணிக்கு எப்போதும் குறிப்பிட்ட ஆளையே ஒதுக்கி இந்த பங்கீட்டை இறுகச் செய்வது, இயந்திர சாதனத்தை ஈடுபடுத்தத் தொடங்கிய பின் அவசியமற்றதாகிவிடுகிறது. அமைப்பு முழுவதன் இயக்கமும் தொழிலாளியிடமிருந்து அல்லாமல் இயந்திர சாதனத்திடமிருந்தே தொடங்குவதால் வேலை இடையே நிற்காமலே எந்த நேரத்திலும் ஆள் மாற்றம் செய்ய முடியும்.

ஒரே கருவியைக் கையாள்வதன் ஆயுட்காலத் தனித்திறன் இப்போது ஒரே இயந்திரத்தில் பணிபுரியும் ஆயுட்காலத் தனித்திறனாகிறது. தொழிலாளியைக் குழந்தைப் பருவம் முதற்கொண்டே நுணுக்க இயந்திரமொன்றின் பகுதியாக மாற்றியமைத்திடும் விதத்தில் இயந்திர சாதனம் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது. இவ்விதத்தில் அவரது மறுவுற்பத்தியின் செலவுகள் கணிசமாகக் குறைக்கப்படுவது மட்டுமல்ல; வேறு வழியின்றி அவர் முதலாளியைச் சார்ந்து வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது.

கைத்தொழில்களிலும், பட்டறைத் தொழிலிலும் தொழிலாளி கருவியைப் பயன்படுத்துகிறார்; தொழிற்சாலையில் இயந்திரம் அவரைப் பயன்படுத்துகிறது. அங்கே உழைப்புக் கருவியின் இயக்கங்கள் அவரிடமிருந்து ஆரம்பிக்கின்றன; இங்கே இயந்திரத்தின் இயக்கங்களை அவர் பின் தொடரவேண்டும். பட்டறைத் தொழிலில் தொழிலாளர்கள் உயிருள்ள இயங்கமைப்பின் அங்கங்களாவர். தொழிற்சாலையில் உயிரற்ற இயங்கமைப்பு தொழிலாளியைச் சாராமல் சுயேச்சையாய் இருப்பதையும், அதற்குத் தொழிலாளி ஒட்டுவால் ஆகி விடுவதையும் காண்கிறோம்.

தொழிற்சாலையில் செய்யும் வேலை, நரம்பு மண்டலத்தை மிக அதிகமாய் சோர்வுறச் செய்து விடுகிறது; அதே போது தசைநார்களின் பல்வகை இயக்கத்தை ஒழித்துவிடுகிறது. உடல் நடவடிக்கை, அறிவு நடவடிக்கை இரண்டிலுமே அணுவளவும் சுதந்திரம் இல்லாமல் செய்துவிடுகிறது. உழைப்பை இலகுவாக்குவதே கூட ஒரு விதமான சித்திரவதையாகிவிடுகிறது; ஏனெனில் இயந்திரம் தொழிலாளியை வேலையிலிருந்து விடுவிப்பதில்லை; மாறாக வேலையை சற்றும் சுவையற்றதாக்கி, சலிப்புறச் செய்கிறது. உழைப்பு நிகழ்முறை மட்டுமன்று, உபரி மதிப்பைப் படைக்கும் நிகழ்முறையும் ஆகும் என்பதால் எல்லா வகை முதலாளித்துவப் பொருளுற்பத்திக்கும் பொதுவான தன்மை ஒன்றுண்டு: தொழிலாளி உழைப்புக் கருவிகளை வேலை வாங்குவதில்ல, உழைப்புக் கருவிகள் தாம் தொழிலாளியை வேலை வாங்குகிறது.

அறிவு தொடர்பான உற்பத்தித் திறன்களை கையுழைப்பிலிருந்து பிரித்து, அத்திறன்களை உழைப்பின் மீதான மூலதனத்தின் சக்தியாக மாற்றும் போக்கு இயந்திர சாதனத்தை அடித்தளமாய் கொண்டு எழுந்துள்ள நவீனத் தொழில் துறையால் இறுதியாக நிறைவு செய்யப்படுகிறது.

தொழிற்சாலை இயங்கமைப்பில் உருக்கொண்டிருப்பதும் அவ்வியங்கமைப்புடன் சேர்ந்து "ஆலையதிபரின்" சக்தியாக அமைவதுமான விஞ்ஞானம், பிரம்மாண்டமான பௌதிகச் சக்திகள், உழைப்பின் பெருந்திரள் ஆகியவற்றின் முன்னால் தனிப்பட்ட சாமானிய ஆலைத் தொழிலாளி ஒவ்வொருவரின் தனித்தேர்ச்சியும் சிறு துகள் அளவினதாய் தேய்ந்து கண்ணிற்படாமல் போயிற்று. 

உழைப்புக் கருவிகளின் சீரான இயக்கத்துக்குத் தொழிலாளியைத் தொழில் நுட்ப வழியில் கீழ்ப்படுத்துவதன் மூலம் உழைப்பாளி மக்களைத் தொழிலாளர்களாகவும், மேற்பார்வையாளர்களாகவும் -- ஒரு தொழில் துறைப் பட்டாளத்தின் சாதாரணச் சிப்பாய்களாகவும், சார்ஜெண்ட்டுகளாகவும் - - பிரிக்கிறது.

தொழில் துறைச் சமரில் கொல்லப்பட்டோர், காயமடைந்தோர் பட்டியலை பருவ கால முறைப்பாட்டுடன் இவியந்திர சாதனங்கள் வெளியிடுகின்றன ... செயற்கை வெப்ப நிலையை உயர்த்துவதாலும், தூசி மண்டிய காற்றாலும், செவிப்பறை கிழியும்படியான ஒலியாலும் சகல புலனுறுப்புகளுமே கேடுறுகின்றன.

வேலையின் போது தொழிலாளியின் உயிருக்கு அவசியமானவையெல்லாம், இடம், ஒளி. காற்று ஆகியவையெல்லாம், உற்பத்தி நிகழ்முறையின் ஆபத்தான, ஆரோக்கியக் கேடான விளைவுகளுக்கெதிராக அவரது சரீரத்துக்குள்ள பாதுகாப்புகள் எல்லம் சூறையாடப்படுகின்றன. 

Wednesday, October 9, 2013

பகுதி 4. அத்தியாயம் 15: இயந்திர சாதனமும் நவீனத் தொழில் துறையும். பிரிவு 3

தொழிலாளி மீது இயந்திர சாதனம் ஏற்படுத்தும் உடனடி விளைவுகள்.

இயந்திர சாதனம் தசைச் சக்தியை அவசியமற்றதாக்குகிறது என்பதால், அது குறைவான தசை வலிமையுடைய தொழிலாளர்களையும், உடல் வளர்ச்சி முழுமையற்று, ஆனால் கைகால்கள் அதிகம் வளைந்து கொடுக்கக் கூடியனவாய் இருப்பவர்களையும் வேலை வாங்கும் சாதனமாகிறது.

பால் அல்லது வயது வேறுபாடின்றி தொழிலாளியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரையும் மூலதனத்தின் நேரடி ஆளுகையில் வேலைக்குப் பதிவு செய்து, குழந்தைகளின் விளையாட்டின் இடத்தையும், வீட்டில் நடக்கும் சுதந்திர உழைப்பின் இடத்தையும் அபகரித்துக் கொண்டது.

இயந்திர சாதனம் அந்த குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரையும் உழைப்புச் சந்தைக்கு இழுத்து விடுவதால், தொழிலாளியினது உழைப்புச் சக்தியின் மதிப்பை அவரது குடும்பத்தார் எல்லாரும் அடங்குமாறு பரவலாய் நிரவுகிறது. இவ்வாறு அது அவரது உழைப்புச் சக்தியை மதிப்பிறங்கச் செய்கிறது.

இயந்திர சாதனம் மூலதனத்தின் சுரண்டும் திறனுக்குப் பிரதான இலக்காகிற மானுடப் பொருளை அதிகமாக்கும் அதே நேரத்தில், சுரண்டலின் கடுமையையும் உயர்த்துகிறது.

முதலாளியும் தொழிலாளியும் சுயேச்சையான சரக்குடைமையாளர்களாக சந்திக்கின்றனர் என்று நாம் முதலில் அனுமானித்துக் கொண்டோம். ஆனால் இப்போது முதலாளி குழந்தைகளையும், வயது வந்தோரையும் விலைக்கு வாங்குகிறார். தொழிலாளி மனைவியையும் குழந்தையையும் விற்கிறார். அவர் அடிமை வியாபாரியாகியிருக்கிறார்.

மாதர்களையும் குழந்தைகளையும் முதலாளித்துவம் சுரண்டுவதால் ஏற்படும் ஒழுக்கச் சீர்கேட்டை "இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை" என்ற நூலில் பிரெடெரிக் எங்கெல்சும் வேறு பல நூல்களில் ஏனைய எழுத்தாளர்களும் விரிவாக விளக்கியுள்ளனர்.

இயந்திர சாதனமானது, தொழிலாளர்தம் அணிகளில் மாதர்களையும் குழந்தைகளையும் அளவுக்கதிகமாகச் சேர்ப்பதன் மூலம், மூலதனத்தின் கொடுங்கொன்மைக்கு ஆண் தொழிலாளர்கள் பட்டறைத் தொழிற் காலத்தில் தொடர்ந்து காட்டி வந்த எதிர்ப்பை இறுதியில் உடைத்திடுகிறது.

இயந்திர சாதனம் புதிய நிலைமைகளை தோற்றுவித்து, ஒரு புறம், மூலதனத்தின் ஓயாத போக்காகிய வேலை-நாளை நீட்டும் போக்கிற்குத் தங்குதடையற்ற வாய்ப்பை வழங்குகிறது. மறு புறம், பிறர் உழைப்பை விழுங்கும் மூலதனத்தின் பசியைத் தூண்டி விடும் புதிய குறிக்கோள்களை எழுப்புகிறது.
     
இயந்திரத்தின் செயல்முனைப்புள்ள ஆயுட் காலமென்பது, வேலை..நாளின் கால அளவை, அல்லது அன்றாட உழைப்பு நிகழ்முறை நீடிக்கும் காலத்தை நிகழ்முறை நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கையால் பெருக்கி வருவதைப் பொறுத்ததாகும்.

இயந்திரத்தின் பொருள்வகைத் தேய்மானம் ஒன்று உபயோகத்தால் ஏற்படுவது. இன்னொன்று உபயோகிக்காமையால் ஏற்படுவது.

இயந்திரமானது கௌரவ மதிப்பிறக்கம் (moral depreciation ) என நாம் அழைக்கக் கூடிய ஒன்றுக்கும் உள்ளாகிறது. அதே ரகமான இயந்திரங்கள் அதை விட மலிவாக உற்பத்திச் செய்யப்படுவதாலோ, அல்லது இன்னும் சிறந்த இயந்திரங்கள் அதனுடன் போட்டிக்கு வருவதாலோ அது பரிவர்த்தனை-மதிப்பை இழக்கிறது. இரு நேர்வுகளிலும் இயந்திரம் எவ்வளவுதான் இளமையோடு உயிர்த் துடிப்புடன் இருப்பினும், அதன் மதிப்பு, இப்போது அதில் உள்ளபடியே பொருள்வடிவாக்கப்பட்டுள்ள உழைப்பால் நிர்ணயிக்கப்படுவதில்லை; அதையோ அல்லது அதனிலும் சிறந்த இயந்திரத்தையோ மறுவுற்பத்தி செய்வதற்கு அவசியமான உழைப்பு நேரத்தாலேயே நிர்ணயிக்கப்படுகிறது. அதன் மொத்த மதிப்பை மறுவுற்பத்தி செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்படும் காலம் எவ்வளவு குறைவானதோ, கௌரவ மதிப்பிறக்கம் நிகழ்ந்திடும் அபாயம் அவ்வளவு குறைவானது.

இயந்திர சாதனம் ஒரு தொழிலில் முதன் முதல் புகுத்தப்படும் போது, அதை இன்னும் மலிவாக மறுவுற்பத்தி செய்யும் புதிய வழிமுறைகள் சரமாரியாகத் தொடர்கின்றன.

இயந்திர சாதனம் ஒப்பீட்டு உபரி-மதிப்பை உற்பத்தி செய்கிறது; நேரடியாய் உழைப்புச் சக்தியின் மதிப்பை குறைப்பதன் மூலமும், உழைப்புச் சக்தியின் மறுவுற்பத்தியில் பங்கு பெறும் சரக்குகளை மலிவாக்கி சுற்றடியாக அவ்வுழைப்புச் சக்தியை மலிவாக்குவதன் மூலமும் இயந்திர சாதனம் இதைச் செய்கிறது.

குறிப்பிட்ட தொழிலில் இயந்திர சாதன உபயோகம் மேலும் பரவலானதாய் மாற மாற, உற்பத்திப் பொருளின் சமுதாய மதிப்பு குறைந்து அதன் தனிப்பட்ட மதிப்புக்குச் சமமாகிறது. உபரி-மதிப்பு இயந்திர சாதனத்தால் மாற்றீடு செய்யப்படும் உழைப்புச் சக்தியிலிருந்து பிறப்பதன்று, இயந்திர சாதனத்தைக் கொண்டு வேலை செய்வதில் மெய்யாகவே ஈடுபடுத்தப்படும் உழைப்புச் சக்தியிலிருந்து பிறப்பதே என்ற விதி தன்னை நிலை நாட்டிக் கொள்கிறது.

உபரி-மதிப்பு மாறும் மூலதனத்திலிருந்து மட்டுமே பிறக்கிறது. உபரி-மதிப்பின் அளவு இரு காரணிகளை, அதாவது உபரி-மதிப்பின் வீதத்தையும் ஒருங்கே வேலை வாங்கப்படும் தொழிலாளர்களின் தொகையையும் பொறுத்தது.

உபரி-மதிப்பின் உற்பத்திக்கு இயந்திர சாதனதைப் பிரயோகிப்பது அதில் உள்ளார்ந்திருக்கும் ஒரு முரண்பாட்டைக் குறிக்கிறது. ஏனெனில் குறிப்பிட்ட அளவு மூலதனத்தால் படைக்கப்படும் உபரி-மதிப்பின் இரு காரணிகளில் ஒன்றாகிய உபரி-மதிப்பு வீதத்தை உயர்த்த வேண்டுமானால், இன்னொரு காரணியாகிய தொழிலாளர்களின் எண்ணிக்கையை சுருக்கியாக வேண்டும்.

சுரண்டப்படும் தொழிலாளர்களின் ஒப்பீட்டு எண்ணிக்கைக் குறைவை, ஒப்பீட்டு உபரி-உழைப்பை மட்டுமல்லாமல் அறுதி உபரி-உழைப்பையும் அதிகமாக்குவதன் மூலம் ஈடு செய்யும் பொருட்டு, வேலை..நாளை அளவுக்கதிகமாக நீட்டும் நிலைக்கு முதலாளி நெருக்கித் தள்ளப்படுவது இந்த முரண்பாட்டினால்தான்.

உழைப்பு நேரத்தைக் குறைப்பதற்கு மிகவும் சக்தி வாய்ந்த வழிவகையாய் இருக்க வேண்டிய இயந்திர சாதனம், தொழிலாளியின் நேரத்தையும் அவரது குடும்பத்தாரின் நேரத்தையும் கணப் பொழுதும் விடாமல் முதலாளியினது மூலதனத்தின் மதிப்பைப் பெருக்கும் பொருட்டு அவரது பிடிக்குள் சிக்கவைக்கும் வச்சிராயுதமாக மாறி விடுகிறது,

உழைப்பை மும்முரமாக்குதல்.

மூலதனத்தின் கையிலிருக்கும் இயந்திர சாதனம் வேலை நாளை மித மிஞ்சி நீட்டிப்பதைத் தொடர்ந்து, சமுதாயத்தின் வாழ்வாதாரங்களே ஆபத்துக்குள்ளாகி, சமுதாயத்தின் தரப்பிலிருந்து எதிர்வினை பிறக்கிறது. அதன் விளைவே சட்டத்தால் கால நிர்ணயம் செய்யப்பட்ட இயல்பான வேலை..நாள் (normal working day).

இயந்திர சாதனத்தின் உபயோகம் பரவுவதற்கேற்பவும், இயந்திர சாதனத்தோடு பழக்கப்பட்ட தனிவகைத் தொழிலாளர்களின் அனுபவத்திற்கேற்பவும், இவற்றின் இயற்கை விளைவாக, உழைப்பின் விரைவும் மும்முரமும் அதிகரிக்கிறது.

வேலை..நாளின் நீட்டிப்பு ஆலை உழைப்பின் மும்முரம் அதிகரிப்பதுடன் கைகோத்துச் சென்றது. ஆயினும் உழைப்பானது விட்டு விட்டு நடை பெறாமல், மாறாத சீரொழுங்குடன் நாள்தோறும் திரும்பத் திரும்ப நடைபெறுகையில் வேலை-நாளின் நீட்டிப்பு மும்முரத்தின் குறைந்த கடுமையுடனும், மும்முரத்தின் உயர்ந்த கடுமை வேலை-நாளின் குறைப்புடனும்தான் ஒத்து போக முடிந்தது.

வேலை-நாளை நீட்டித்து உபரி-மதிப்பு உற்பத்தியை அதிகமாக்குவதற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டதுமே மூலதனம் இயந்திர சாதனத்தை மேலும் மேம்படுத்தி ஒப்பீட்டு உபரி-மதிப்பை (relative surplus value ) உற்பத்தி செய்வதில் முழு மூச்சுடன் இறங்கியது.

தொழிலாளி முன்னிலும் அதிக உழைப்பைச் செலவிடவும் உழைப்புச் சக்தியின் இறுக்கத்தை உயர்த்தவும் வேலை-நாளின் இண்டுஇடுக்களையெல்லாம் முன்னிலும் கெட்டியாக அடைக்கவும், அதாவது குறுக்கப்பட்ட வேலை..நாளின் வரம்புகளுக்குள் மட்டுமே சாத்தியமான அளவுக்கு உழைப்பை நெருக்கி திணிக்கவும் வேண்டியதாயிற்று

உழைப்பின் உற்பத்தித் திறனை உயர்த்தியதன் மூலம் ஒப்பீட்டு உபரி-மதிப்பு அதிகமாய் கிடைப்பதன்னியில் முன்னர் நான்கு மணி நேர உபரி-உழைப்பும் எட்டு மணி நேர அவசிய உழைப்பும் முதலாளிக்கு உற்பத்தி செய்து கொடுத்த அதே அளவு மதிப்பை இப்போது மூன்றுடன் மூன்றில் ஒரு மணி நேர உபரி-உழைப்பும் ஆறுடன் மூன்றில் இரண்டு மணி நேர அவசிய-உழைப்பும் உற்பத்தி செய்து கொடுக்கின்றன.

உழைப்புச் சக்தியின் செய்திறன் அதன் செலவழிப்பின் கால நீட்டிப்புக்கு எதிர் விகிதத்தில் உள்ளது. கால நீட்டிப்பை சுருக்குவதால் இழக்கப்படுவது, உழைப்புச் சக்தியின் அதிகரிக்கும் இறுக்கத்தால் ஈட்டப்படுகிறது.

இயந்திர சாதனம் இடம் பெறாத அல்லது சொற்பமாகவே இடம் பெறுகிற மண்பாண்ட உற்பத்தி போன்ற தொழில்களில் தொழிற்சாலை சட்டங்கள் புகுத்தப்பட்டதானது, வேலை நாளைச் சுருக்குவதே உழைப்பின் முறைப்பாட்டையும், சீர்மையையும், ஒழுங்கையும், தொடர்ச்சியையும், ஆற்றலையும் வியக்கத் தக்க அளவுக்கு உயர்த்துகிறது.

உழைப்பு நேரத்தைக் குறுக்குவது, ஆரம்பத்தில், தொழிலாளி குறிப்பிட்ட காலத்தில் அதிக பலத்தை ஈடுபடுத்த முடியுமாறு செய்வதன் மூலம் உழைப்பை அடர்த்தியாகுவதற்கான அகவய நிலைமைகளைத் தோற்றுவிக்கிறது. இப்படி குறுக்குவது கட்டாயம் ஆனதுமே, இயந்திர சாதனமானது - மூலதனத்தின் கையில் - குறிப்பிட்ட நேரத்தில் அதிக உழைப்பைக் கறப்பதற்காகத் திட்டமிட்டு ஈடுபடுத்தப்படும் புற வயச் சாதனம் ஆகி விடுகிறது. இது இரு வழிகளில் சாதிக்கப்படுகிறது: ஒன்று, இயந்திர சாதனத்தின் வேகத்தை அதிகமாக்குதல்; இரண்டு, தொழிலாளி கூடுதலான இயந்திர சாதனத்தை கவனித்துக் கொள்ளுமாறு செய்தல்.

தொழிற்சாலைகளில் இப்போது நடந்தேறும் உழைப்பு அப்போது இருந்ததை விட மிக அதிகமாகும்.

உழைப்புச் சக்தி மேலும் கடுமையாக சுரண்டப்பட்டதோடு, தொழிலதிபர்களின் செல்வம் பெரிதாய் அதிகரித்தது.

தொழிற்சாலை ஆய்வாளர்கள் 1844, 1850 ஆம் வருடச் சட்டங்களின் பலனை ஒய்வு ஒழிவின்றியும் நியாயமாகவும் போற்றிப் புகழ்கின்றனர் என்ற போதிலும், வேலை நேரத்தைக் குறைத்ததானது தொழிலாளியின் ஆரோக்கியத்துக்கும் அவரது உழைப்புத் திறனுக்கும் கேடு செய்யக் கூடிய விதத்தில் உழைப்பு மும்முரமாக்கப்படுவதற்கு ஏற்கனவே வழி செய்துள்ளது என்பதை அவர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

இயக்க வேகம் பெரிதும் அதிகரிக்கப்படுள்ள இயந்திர சாதனத்தைத் தொழிலாளர்கள் சரிவர கவனித்துக் கொள்ளும் பொருட்டு உடல் ஓய்ந்து விடும் படியான பரபரப்புநிலை தேவைப் படுகிறது.

உழைப்பு நேரத்தை நீட்டிப்பது முடிவாகத் தடை செய்யப்பட்டதுமே, உழைப்பின் மும்முரத்தைத் திட்டமிட்டு உயர்த்துவதன் மூலம் ஈடு தேடிக் கொள்வதற்கும, இயந்திர சாதனத்திலான ஒவ்வொரு மேம்பாட்டையும் தொழிலாளியை ஒட்டப் பிழிவதற்கான இன்னும் செம்மையான வழிவகையாக மாற்றுவதற்கும் மூலதனத்தைத் தூண்டுகிற போக்கானது, உழைப்பு நேரத்தின் குறைப்பு மீண்டும் தவிர்க்க முடியாததாகும் நிலைமைக்குச் சீக்கிரமே இட்டுச் சென்றாக வேண்டும் என்பதில் துளியும் சந்தேகமிருக்க முடியாது. 

Tuesday, October 8, 2013

பகுதி 4. அத்தியாயம் 15: இயந்திர சாதனமும் நவீனத் தொழில் துறையும். பிரிவு 2

உற்பத்திப் பொருளுக்கு இயந்திர சாதனம் பெயர்த்தளிக்கும் மதிப்பு

இயந்திரம் கருவியை இல்லாதொழித்து விடுவதில்லை. கைக்கருவியைக் கொண்டு அல்லாமல், கருவிகளைத் தானே கையாள்கிற இயந்திரத்தைக் கொண்டே தொழிலாளியை இப்போது மூலதனம் வேலை செய்ய வைக்கிறது. எனவே, மிகப் பெரும் பௌதிகச் சக்திகள், இயற்கை விஞ்ஞானங்கள் இரண்டையும் உற்பத்தி நிகழ்முறையுடன் இணைப்பதன் மூலம், நவீனத் தொழில் துறையானது உழைப்பின் உற்பத்தித் திறனை அசாதாரண அளவுக்கு உயர்த்துகிறது என்று எடுத்த எடுப்பிலேயே தெளிவாகிறது. ஆனால், மறு புறம், உற்பத்தித் திறனிலான இந்த அதிகரிப்புக்காக உழைப்பின் செலவீடு அதிகரிப்பதில்லை என்று அந்த அளவுக்கு தெளிவாவதில்லை.

மாறா..மூலதனத்தின் ஏனைய ஒவ்வொரு கூறையும் போலவே, இயந்திர சாதனமும் புதிய மதிப்பெதையும் படைப்பதில்லை.

இயந்திர சாதனம் எப்போதுமே உழைப்பு நிகழ்முறையில் முழுமொத்தமாக நுழைகிறது என்னும் அதே நேரத்தில், மதிப்பை உண்டாக்கும் நிக்ழ்முறையில் கொஞ்சம் கொஞ்சமாகவே நுழைகிறது. அது சராசரியாகத் தேய்மானத்தின் மூலம் இழப்பதை விட அதிகமான மதிப்பை ஒரு போதும் சேர்ப்பத்தில்லை.

முழுமொத்தமான கருவிக்கும் அதன் தினசரித் தேய்மானத்திற்கும் இடையிலான இந்த வேறுபாடு கைக்கருவியில்  இருப்பதை விட இயந்திரத்தில் மிகப் பெரியதாகும்; ஏனெனில், அதிகம் நீடித்திருக்கக் கூடிய பொருளிலிருந்து தயாரிக்கப்ப்டும் இயந்திரத்துக்கு ஆயுள் அதிகம்; மேலும் அதன் பிரயோகம் கண்டிப்பான விஞ்ஞான விதிகளால் ஒழுங்கியக்கப்படுவதால், அதன் உறுப்புகளின் தேய்மானத்திலும், அது உட்கொள்கிற பொருட்களிலும் அதிக சிக்கனத்துக்கு வழி செய்யப்படுகிறது.

இயந்திரமானாலும் கைக்கருவியானாலும், அவை ஒவ்வொன்றும் தம் வேலையை, மனிதன் உதவியில்லாமல் இயற்கையால் அருளப்பட்ட சக்திகளைப் போலவே, இலவசமாகச் செய்கின்றன.

நவீன தொழில் துறையில்தான், மனிதன் தன் கடந்த கால உழைப்பின் உற்பத்திப் பொருளை இயற்கைச் சக்திகளைப் போல் இலவசமாக பெருவீதத்தில்  வேலை செய்ய வைப்பதில் முதன் முதலாக வெற்றி கண்டான்.

பட்டறைத் தொழிலில் கட்டடங்கள் போன்ற சில பொதுப்படையான உற்பத்திக் காரணிகள் பொதுவில் நுகரப்படுவதன் மூலம் சிக்கனமாக்கப்படுகின்றன. எனவே உற்பத்திப் பொருளை இன்னும் மலிவாக்குகின்றன.

இயந்திர பொறிச் சட்ட அமைப்பு ஏராளமான பணிசெய் கருவிகளால் பொதுவில் நுகரப்படுகிறது மட்டுமல்லாமல், பிரதம இயக்கியும், விசைச் செலுத்தும் இயங்கமைப்பின் ஒரு பகுதியும் ஏராளமான பணிசெய் இயந்திரங்களால் பொதுவில் நுகரப்படுகின்றன.

இயந்திர சாதனத்தில் அடங்கியுள்ள உழைப்பு எவ்வளவு குறைவோ அவ்வளவு குறைவான மதிப்பை அது உற்பத்திப் பொருளுக்கு மாற்றுகிறது. அது எவ்வளவு குறைவான மதிப்பை இழக்கிறதோ அவ்வளவு அதிகமான உற்பத்தித் திறனுடையதாய் இருக்கிறது; அவ்வளவு அதிகமான அதன் சேவைகள் இயற்கைச் சக்திகளின் சேவைகளுக்கு ஒத்தவை ஆகின்றன. ஆனால் இயந்திர சாதனத்தால் இயந்திர சாதனத்தை உற்பத்தி செய்வது எவ்வளவுக்கு எவ்வளவு விரிவாகவும், பயன் திறனோடும் நடக்கிறதோ, இயந்திர சாதனத்தின் மதிப்பு அவ்வளவுக்கு அவ்வளவு குறைகிறது.

இயந்திர சாதனங்களின் உற்பத்திப் பொருளில் உழைப்புச் சாதனங்களால் விளையும் மதிப்பு ஒப்பளவில் அதிகரிக்கிறது; ஆனால் அறுதியாகக் குறைகிறது. அதன் அறுதி அளவு குறைகிறது.

ஓர் இயந்திரத்தை உற்பத்தி செய்வதற்குச் செலவாகிற உழைப்பின் அளவும், அந்த இயந்திரத்தின் பிரயோகத்தால் மிச்சப்படுத்தப்படும் உழைப்பின் அளவும் ஒன்றாக இருக்கும் போதெல்லாம், நிகழ்வது உழைப்பின் நிலை மாற்றமே தவிர வேறில்லை என்பதும், ஆதலால் சரக்கை உற்பத்தி செய்வதற்கு அவசியமாகும் மொத்த உழைப்பு குறைந்து விடவில்லை, அல்லது உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகமாகிவிடவில்லை என்பதும் தெளிவு.

ஓர் இயந்திரத்தில் செலவிடப்படும் உழைப்பும், ஆதலால உற்பத்திப் பொருளோடு சேர்க்கப்படுகிற அதன் மதிப்பின்  பகுதியும் தொழிலாளி தன் கருவியைக் கொண்டு உற்பத்திப் பொருளோடு சேர்க்கிற மதிப்பை விட சிறியதாக இருக்கும் வரை, மிச்சப்படுத்தப்படும் உழைப்பில் இயந்திரத்துக்கு சாதகமான வேறுபாடு எப்பொதுமே உள்ளது. எனவே ஓர் இயந்திரத்தின் உற்பத்தித் திறன் அது நீக்கி விடுகிற மனித உழைப்புச் சக்தியைக் கொண்டு அளவிடப்படுகிறது.

ஓர் இயந்திரம் அதனால் நீக்கப்படும் உழைப்புச் சக்தியின் அளவுக்கே விலையுடையதாக இருந்தாலும், அதில் பொருள்வடிவாக்கப் பட்டுள்ள உழைப்பு, அப்போதும் கூட, அதனால் நீக்கப்படும் உயிருள்ள உழைப்பை விட மிகக் குறைவானதே.

நாள் வேலையை அவசிய..உழைப்பாகவும், உபரி-உழைப்பாகவும் பங்கிடும் பிரிவினை, வெவ்வேறு நாடுகளிலும், ஏன், ஒரே நாட்டிலேயே கூட வெவ்வேறு காலங்களிலும், வெவ்வேறு தொழிற் கிளைகளிலும் வேறுபடுகிறது.      

தொழிலாளிக்குத் தரப்படும் கூலி ஒரு நேரத்தில் அவரது உழைப்புச் சக்தியின் மதிப்புக்குக் கீழாக வீழ்கிறது, இன்னொரு நேரத்தில் அதற்கு மேலாக உயர்கிறது. இக்காரணங்களால், இயந்திர சாதனத்தின் விலைக்கும் அந்த இயந்திர சாதனத்தால் நீக்கப்படும் உழைப்புச் சக்தியின் விலைக்கும் இடையிலான வேறுபாடு மிக அதிகமாக மாறுபடுவது சாத்தியமே. 

முதலாளித்துவ உற்பத்தி. பகுதி 4. அத்தியாயம் 15: இயந்திர சாதனமும் நவீனத் தொழில் உற்பத்தியும். பிரிவு 1

இயந்திர சாதனத்தின் வளர்ச்சி

இயந்திர சாதனத்தை (machinery) முதலாளித்துவ வழியில் பிரயோகிப்பதன் நோக்கம் மனித உழைப்பை இலகுவாக்குவதன்று. சரக்குகளை மலிவாக்கும் நோக்கத்துக்காகவும், தொழிலாளி தனக்காக செய்கிற வேலை..நாட் பகுதியை குறுக்கி, அவர் ஒரு சமதையில்லாமலே முதலாளிக்கு விட்டுக் கொடுக்கிற எஞ்சிய பகுதியை நீளச் செய்யும் நோக்கத்துக்காகவுமே பயன்படுத்தப்படுகின்றன. சுருங்கச் சொல்லின், அவை உபரி..மதிப்பை உற்பத்தி செய்வதற்கான சாதனமாகும்.

உள்ளபடியே ஒவ்வொரு இயந்திரமும் சாமானியத் திறன்களின் ஒன்றிணைப்பேயாகும்.

முழு வளர்ச்சி பெற்ற இயந்திர சாதனங்கள் அனைத்தும் விசையூட்டும் இயங்கமைப்பு (motor mechanism),  விசை செலுத்தும் இயங்கமைப்பு (transmitting mechanism )     இறுதியாக கருவி அல்லது வேலைப் பொறி ( tool or working machine) ஆகிய அடிப்படையில் வேறுபட்ட மூன்று பாகங்களால் ஆனவை. விசையூட்டும் இயங்கமைப்பு என்பது இயந்திரம் முழுவதையும் இயக்கி விடுவதாகும். அவை தன் இயக்கு விசையைத் தானே உற்பத்தி செய்து கொள்கிறது. அல்லது ஏற்கனவே இருந்து வரும் ஏதேனுமொரு இயற்கைச் சக்தியிடமிருந்து தன் உந்துசக்தியைப் பெறுகிறது.

இயங்கமைப்பு முழுமையின் இந்த முதலிரு பாகங்களும் இருப்பது வேலைப் பொறிகளை இயக்கி விடுவதற்காகவே. இவ்வாறு இயங்கும் வேலைப் பொறிகள் உழைப்பின் இலக்குப் பொருளைப் பற்றிக் கொண்டு, வேண்டியவாறு திருத்தியமைக்கின்றன. கருவி அல்லது வேலைப் பொறி என்னும் இயந்திர சாதனப் பாகத்திலிருந்துதான் 18 ஆம் நூற்றாண்டின் தொழிற் புரட்சி தொடங்கியது. நாளது வரை, ஒரு கைத்தொழிலோ ஒரு பட்டறைத் தொழிலோ இயந்திர சாதனங்களால் நடத்தப்படும் தொழில் துறையாக மாற்றப்படும் போதெல்லாம், இம்மாற்றத்துக்கான தொடக்க நிலையாக அமைவது இந்தப் பாகம்தான்.

முறையான கைக்கருவி எனப்படுவதை மனிதனிடமிருந்து எடுத்து ஓர் இயங்கமைப்பில் பொருத்தும் கண முதற்கொண்டே வெறும் கருவி என்பது இயந்திரமாகி விடுகிறது.

கைவினைஞர் உப்யோகிக்கும் கருவிகளின் தொகைக்கு அவரின் அங்கங்கள் வரம்பிடுகின்றன; ஆனால் ஒர் இயந்திரம் ஏககாலத்தில் இயக்கக் கூடிய கருவிகளின் தொகை ஆரம்பமுதலே மேற்சொன்ன வரம்பிலிருந்து விடுதலை பெற்று விடுகிறது.

இயக்கு விசையாகவுள்ள மனிதனுக்கும், இயக்கியாக உள்ள மனிதனுக்கும் இடையிலான வேறுபாடு: காலானது நூற்புச் சக்கரத்தில் பிரதம இயக்கியாக மட்டுமே இருக்க, கையோ கதிரைக் கொண்டு செயல்பட்டும், இழுத்தும் திரித்தும் உண்மையான நூற்பு வேலையை நிறைவேற்றுகிறது. தொழில் புரட்சி முதலில் பற்றுவது நுற்புச் சக்கரத்தின் இந்த இரண்டாவது பாகத்தையே.

சிற்சில இடங்களில் பட்டறைத் தொழிற் காலத்துக்கு நெடுங்காலம் முன்னரே, ஓரளவுக்குப் பட்டறைத் தொழிற் காலத்திலும் கூட, இக்கருவிகள் இயந்திரங்களாக மாற்றமடைகின்றன; ஆனால் உற்பத்தி முறையில் புரட்சி எதையும் ஏற்படுத்தாமலே இம்மாற்றம் நிகழ்கிறது.

நீராவி எஞ்சினே கூட, 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பட்டறைத் தொழிற் காலத்தில் அது கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் இருந்த நிலையிலும், 1780 வரை அது தொடர்ந்து இருந்து வந்த நிலையிலும் தொழிற் புரட்சி எதையும் உண்டாக்கி விடவில்லை. மாறாக இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதுதான் நீராவி எஞ்சின்களின் வடிவத்தில் ஒரு புரட்சியை அவசியமாக்கியது. மனிதன் தனது உழைப்பின் இலக்குப் பொருள் மீது ஒரு கருவியைக் கொண்டு வேலை செய்வதற்குப் பதில் ஒரு இயந்திர சாதனத்தின் வெறும் இயக்குவிசையான பின், இயக்குவிசை மனிதத் தசையாக வடிவம் தரிப்பது முற்றிலும் தற்செயலானதே. இத்தகைய வடிவ மாற்றம், மனிதனால் மட்டுமே இயக்கப்படக் கூடிய முறையில் ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட இயங்கமைப்பில் பெரும் தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்படுத்துவதற்குத் தடை ஏதுமில்லை.

தொழிற் புரட்சியின் தொடக்க நிலையாக அமைகிற இயந்திரம் ஒரே ஒரு கருவியை மட்டும் கையாள்கிற தொழிலாளிக்குப் பதிலாக அது போன்ற அநேகக் கருவிகளை வைத்து வேலை செய்கிற, ஒரே இயக்கு விசையால் இயக்கி விடப்படுகிற இயங்கமைப்பைக் கொண்டு வருகிறது. இங்கே நாம் இயந்திரத்தைக் காண்கிறோம்;  ஆனால் இயந்திர சாதன வழிப் பொருளுற்பத்தியின் ஆரம்ப காரணியாக மட்டுமே காண்கிறோம்.

இயந்திரத்தின் பருமனும், அதன் வேலைக் கருவிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கையில், அதை ஓட்டுவதற்குப் பெரும் பருமனுள்ள இயங்கமைப்பு அவசியமாகிறது. இந்த இயங்கமைப்பின் நிலைம எதிர்வை (resistanace ) சமாளிக்கும் பொருட்டு, மனிதனிடமிருப்பதை விட வலுவான இயக்கு விசை அவசியமாகிறது; இதன்னியில் ஒரே சீரான தொடர்ச்சிய்யான இயக்கத்தை உண்டாக்க மனிதன் செப்பமற்ற சாதனமே ஆவான் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

அவனுக்கு பதில் இயற்கைச் சக்திகள் இச்செயலைச் செய்ய முடியும் என்பது தெளிவாகிறது.

காற்று மிகவும் நிலையற்றதாகவும், கட்டுப்படுத்த முடியாததாகவும் இருந்தது.

17 ஆம் நூற்றாண்டிலேயே, இரு ஜோடி ஏந்திரக் கற்களை ஒரே ஒரு நீர் விசைச் சக்கரத்தைக் கொண்டு இயக்குவதற்கு முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால் சக்கர பல்லிணையின் கூடுதலான பருமனை இப்போது பற்றாக்குறையாகிவிட்ட நீர்ச்சக்தியால் சமாளிக்க முடியவில்லை.

இரட்டைச் செயல் நீராவி எஞ்சின் என்றழைக்கப்பட்ட வாட்டின் இரண்டாவது நீராவி எஞ்சின் கண்டுபிடிகப்பட்டப்பட்ட பிறகே ஒரு பிரதம இயக்கி (prime mover) கிடைத்தது. இவ்வியக்கி நிலக்கரியையும் நீரையும் உட்கொண்டு தன் சொந்த சக்தியை உண்டாக்கிக் கொள்ளக் கூடியது; இதன் விசை முழுக்க முழுக்க மனிதனின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது; இது இடம் பெயரக்கூடியது மட்டுமன்று; இடப் பெயற்சிக்கு சாதனமாகவும் அமையக் கூடியது; நீர் விசைச் சக்கரத்தைப் போல் கிராமவாசியாய் இராமல் நகரவாசியாய் இருக்கக் கூடியது.

முன்னதாக கைவினைஞர் தன் கருவியைக் கொண்டு செய்து வந்த, அல்லது தனித்தனியாகவோ ஒரு தொழில் அமைப்பின் உறுப்பினர்களாகவோ அநேகக் கைவினைஞர்கள் வரிசைப் படியாக செய்து வந்த பல்வேறு பணிகளையும் ஒரே இயந்திரம் செய்து, முழுமையான உற்பத்திப் பொருளைத் தயாரித்தளிக்கிறது.

பட்டறைத் தொழிலாக நடத்தப்பட்டபோது வரிசை தொடரான பணிகளாகப் பிரித்துச் செய்யப்பட்ட முழு நிகழ்முறையும், ஒன்றிணைந்த பல்வேறு கருவிகளை இயக்கும் ஒரே இயந்திரத்தால் நிறைவேற்றப்படுகிறது.

இங்கே அமைப்பு முழுவதிலும் ஒரு தொழில் நுட்ப ஓர்மை நிலவுகிறது; ஏனென்றால், எல்லா இயந்திரங்களுமே இடை நின்று செயலாற்றுகிற விசை செலுத்தும் இயங்கமைப்பின் வாயிலாகப் பொதுவான பிரதம இயக்கியின் துடிப்புகளிலிருந்து தமக்கு வேண்டிய உந்து விசையை ஏககாலத்திலும் சம அளவிலும் பெறுவனவாகும்.

பல கருவிகள் ஓர் இயந்திரத்தின் உறுப்புகளாக அமைவது போலவே, ஒரே வகைப்பட்ட பல இயந்திரங்கள் விசையூட்டும் இயங்கமைப்பின் உறுப்புகளாக அமைகின்றன.

இங்கே நாம் பட்டறைத் தொழிலின் சிறப்பியல்பான உழைப்புப் பிரிவினையின்மூலமான கூட்டு..வேலையை மீண்டும் காண்கிறோம்; ஆனால் இப்போது அது நுணுக்க இயந்திரங்களின் ஒன்றிணைப்பாக உள்ளது.

இப்போது தொழிலாளி நிகழ்முறைக்கேற்றவராய்த் தன்னை மாற்றிக் கொள்கிறார். முன்பெல்லாம் நிகழ்முறைதான் தொழிலாளர்களுக்கு ஏற்றதாகப் பட்டது. இந்த அகவய உழைப்புப் பிரிவினைத் தத்துவம் இயந்திர சாதன வழி உற்பத்தியில் மறைந்து போகிறது. இங்கே மொத்த நிகழ்முறையும், அதனளவிலேயே, அதாவது மனிதக் கரங்கள் அதனை நிறைவேற்றி வைக்கும் பிரச்சினையோடு தொடர்பில்லாமலே, புறவயமாக ஆராயப்படுகிறது.

கச்சாப் பொருள் முதல் கட்டத்திலிருந்து கடைசிக் கட்டத்துக்குச் செல்கையில் எந்த அளவுக்குக் குறைவாக இடைமறிக்கப் படுகிறதோ, அது ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்துக்குச் செல்வதைச் சாதிப்பது மனிதரின் கையாக இல்லாமல் இயந்திரங்களாகவே இருப்பது எந்த அளவுக்கு அதிகமோ, அந்த அளவுக்கு கூட்டு இயந்திரம் மேலும் மேலும் செப்பமடைகிறது.

பட்டறைத் தொழில் உற்பத்தி செய்து கொடுத்த இயந்திரங்களைக் கொண்டுதான் நவீனத் தொழில் துறை, அது ஆரம்பத்தில் பற்றிக் கொண்ட உற்பத்தித் துறைகளில் கைத்தொழில், பட்டறைத் தொழில் அமைப்புகளை ஒழித்துக் கட்டியது. எனவே, ஆலைத் தொழிலானது இயற்கைப் போக்கில் ஒரு போதாக் குறையான அடித்தளத்தின் மீது எழுந்தது. இவ்வமைப்பு  குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடைந்த போது தயார் நிலையிலிருக்கிற இந்த அடித்தளத்தை பெயர்த்தெடுக்கவும், தனக்கெனத் தன் உற்பத்தி முறைகளுக்கு ஏற்றதோர் அடிப்படையைக் கட்டிக் கொள்ளவும் வேண்டியிருந்தது.

நவீன நீர்விசை அழுத்தி, நவீன விசைத்தறி, நவீன இழைச் சுத்திகரிப்புப் பொறி போன்ற இயந்திரங்களைப் பட்டறைத் தொழிலால் ஒருகாலும் வழங்கியிருக்கமுடியாது.

பஞ்சு நூற்பிலான புரட்சி பருத்தி இழையிலிருந்து கொட்டைகளை நீக்குவதற்கு ஜின் பொறியின் கண்டுபிடிப்பை அவசியமாக்கியது.

தொழில் துறை, வேளாண்மைத் துறை ஆகியவற்றின் உற்பத்தி முறைகளில் ஏற்பட்ட புரட்சி சமூகப் பொருளுற்பத்தி நிகழ்முறையின் பொது நிலைமகளில், அதாவது தொடர்பு மற்றும் போக்குவரத்துச் சாதனங்களில் ஒரு புரட்சியை அவசியமாக்கியது.

நவீனத் தொழில் துறை அதற்கே உரித்தான உற்பத்திக் கருவியாகிய இயந்திரத்துக்குத் தானே பொறுப்பேற்று, இயந்திரங்களைக் கொண்டே இயந்திரங்களை நிர்மாணிக்க வேண்டியிருந்தது. இதற்கு அத்தியாவசியத் தேவையாய் இருப்பது சிறிதும் குறைபாடின்றிக் கட்டுப்பாட்டுக்குட்பட்டு, அதே போது எவ்வளவு வேண்டுமானாலும் பலத்தைப் பிரயோகிக்க வல்லதாகிய பிரதம இயக்கிதான். இத்தேவையை நிறைவு செய்யக் கூடியதாய் ஏற்கனவே இருந்தது நீராவி எஞ்சின்.

இயந்திரங்களின் நுணுக்க உறுப்புகளுக்கு தேவையானவற்றை வடிவமைப்பதற்கு வழுக்குளிதாங்கி என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டது. இக்கருவி சீக்கிரமே தானியங்கி ஆக்கப்பட்டதுடன் திருத்தியமைக்கப்பட்டு பிற கட்டுமான இயந்திரங்களுக்கும் பிரயோகிக்கப்படலாயிற்று. இது வெட்டுங்கருவியைப் பிடித்து, வேலைக்குரிய இரும்பு அல்லது வேறு பொருளின் மீது வழிப்படுத்திச் செல்லுவதன் மூலம், குறிப்பிட்ட வடிவத்தை வடிக்கிற மனிதக் கரத்துக்கே பதிலியாகிவிடுகிறது.

இப்போது இயந்திரங்களின் கட்டுமானத்தில் ஈடுபடுத்தப்படும் வேலைக் கருவியாக அமைகிற பகுதி இராட்சத உருவிலான கைக்கருவிகளே. துளையிடும் இயந்திரத்தின் வேலைப் பாகம் நீராவி எஞ்சினால் ஓட்டப்படும் இராட்சத துரப்பணமே. இயந்திரக் கடைசற் பொறி, சாதாரண கால்..கடைசற் பொறியின் இராட்சதப் பிரதியே. இழைப்பு இயந்திரம் இரும்பை இழைக்கும் தச்சரே. மெல்லொட்டுப் பலகைகளைச் சீவுகிற கருவி பகாசுர சவரக் கத்தியே.சுலபமாக இரும்பை வெட்டும் கத்தரிப்பு இயந்திரத்தின் கத்தரிக்கோலே. நீராவிச் சம்மட்டி சாதாரண சம்மட்டியைப் போன்றதே.

இயந்திர சாதன வடிவிலான உழைப்புக் கருவிகள் மனிதச் சக்திக்குப் பதிலாக இயற்கைச் சக்திகளை பிரயோகிப்பதையும், மாமூல் வழிமுறைக்குப் பதிலாக விஞ்ஞானத்தை உணர்வு பூர்வமாகப் பிரயோகிப்பதையும் அவசியமாக்குகின்றன.

பட்டறைத் தொழிலில் சமூக உழைப்பு நிகழ்முறையின் ஒழுங்கமைப்பு முற்றிலும் அகவயமானதே; இயந்திர சாதன அமைப்பின் உருவில், நவீனத் தொழில் துறை முற்றிலும் புறவயமான உற்பத்தி உயிரமைப்பைப் பெற்றுள்ளது; இதில், தொழிலாளி ஏற்கனவே இருந்து வரும் பொருளாயத அமைப்பின் ஒட்டுவாலாகி விடுகிறார்.

நவீனத் தொழில் துறையில், உழைப்பு நிகழ்முறையின் கூட்டு..வேலைத் தன்மையானது உழைப்புக் கருவியின் இயல்பினாலேயே விதிக்கப்படும் தொழில் நுட்ப அவசியமாகிவிடுகிறது.  

Tuesday, October 1, 2013

மூலதனம் கற்றல் அரங்கு





ஓராண்டிற்கு முன் நடந்த ‘மூலதனம்’ கற்றலுக்கான துவக்க விழா அழைப்பிதழ் மேலே உள்ளது. 150 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட நூலுக்கு ஒரு கற்றல் அரங்கு; அதற்கு ஒரு துவக்க விழா. இதெல்லாம் இந்த காப்சூலில் சர்வரோக நிவாரணம் தேடும் நாளில் யாரையாவது ஈர்க்குமா? என பலரும் கேட்க அரங்கு நிரம்பிய நிகழ்வாக நடந்து இன்றோடு ஓராண்டு. ஒரு நாள் கூத்து எதிலும் சாத்தியம். தொடருமா என அடுத்த சந்தேகம் வந்தது. பேராசிரியர்.வெங்கடேஷ் ஆத்ரேயா 15 அமர்வுகளில் (15 நாளுக்கு ஒருமுறை - 3 மணிநேரம்) என நடத்திய வகுப்புகள் முடிந்தன. தொடர் சொற்பொழிவு சரி, கற்பது? பேரா. ஆத்ரேயா வழிகாட்டியபடி ஒவ்வொரு அமர்விலும் ஒரு அத்தியாயம் என இன்று 14 ஆவது அமர்வில் 14 ஆவது அத்தியாயம் நடந்து முடிந்தது. இது காட்டிய வழியில் இரண்டாம் குழு துவங்கி அதுவும் இன்று 5 ஆவது அமர்வில் நான்காம் அத்தியாயத்தை முடித்துள்ளது. ஆசிரியர் இல்லாத இந்த வகுப்புகளில் பங்கேற்போரே படித்து வந்து ஒவ்வொருமுறையும் யாராவது ஒருவர் அத்தியாயத்தை விளக்க பின் பிறர் பங்கேற்கும் விவாதத்துடன் முடியும்.

150 ஆண்டுகளுக்கு முன் மார்க்ஸ் முதலாளித்துவம் ஆங்காங்கே தீவுகளாக ஆரம்ப நிலையில் இருந்தபோது எழுதிய ‘மூலதனம்’ என்ற இந்த செவ்வியல் பனுவல், அவர் காலத்தைவிட இன்றைக்கு அதிகப் பொருத்தப்பாடு உடையதாக இருப்பதை சொந்த வாசிப்பில் உணர்வது ஒரு கிடைத்தற்கறிய அனுபவம். பொருளாதாரம், வரலாறு, சமூகவியல், தத்துவம் என பலதுறையைத் தொட்டுத் துலக்கிச் செல்லும் மார்க்சின் எழுத்து அவரது மெல்லிய நகைச்சுவை, அவரது இலக்கிய வாசிப்பின் ஆழம், ஒரு காத்திரமான அறிவியல் நூலில் அதைப் பயன்படுத்தும் அழகு என்பதெல்லாம் வாசித்தால் மட்டுமே அறிய முடியும் ரசவாத வித்தகம். முதல் மூன்று அத்தியாயம் தாண்டிவிட்டால் ‘மூலதனம்’ நூலை வாசிப்பு இன்பத்திற்காகவே வாசிக்கலாம். முதல் மூன்று அத்தியாயம் சிரமம்தான். ஆனால் மார்க்சே சொல்லியபடி ‘அறிவியலில் ராஜபாட்டை ஏதுமில்லை; வழுக்கக் கூடிய அதன் செங்குத்துப் பாதையில் மனம் தளராது ஏறத் துணிபவர்களே அதன் ஒளி மிகு சிகரங்களை காணமுடியும்’ என்பதையும் உணர்ந்த போது இதற்கு செலவழித்த ஆற்றலும் நேரமும் பயனுள்ளதே எனும் உணர்வுதான். 

ஒரே ஒரு சிரமம்தான்.. ‘தத்துவவாதிகள் இந்த உலகைப் பலவாறாக விளக்கினார்கள்; நமது பணி மாற்றத்தைக் கொண்டு வருவது’ என்கிறார் மார்க்ஸ். என்ன செய்யப் போகின்றோம்? இந்த நல்ல கேள்வியை வீட்டுக்கு எடுத்து வந்துள்ளோம். இருக்கட்டும்... நல்ல கேள்வி பதிலுக்கான பயணத்தில் பாதித் தொலைவிற்கு இட்டு வந்துவிடுமல்லவா?