தொழிலாள மக்களை ஆலைத் தொழில் விலக்குவதும், ஈர்ப்பதும். பருத்தித் தொழிலில் நெருக்கடிகள்
இயந்திர சாதனம் புகுத்தப்பட்டு, வளர்ச்சியடைகிற காலத்தின் பயங்கரங்கள் தணிந்து போனபின், நீண்ட கால நோக்கில் அவை உழைப்படிமைகளின் தொகையைக் குறைப்பதற்கு பதில் அதிகமாக்குகின்றன.
முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையின் முத்தாய்ப்பான இயந்திர சாதன வழிப்பட்ட ஆலைத் தொழிலே கூட வளர்ந்து உருப்பெற்ற பிற்பாடு, முன்பு ஆரம்பத்தில் அது வேலையில்லாமல் தெருவில் நிறுத்தியவர்களைக் காட்டிலும் அதிகமான தொழிலாள மக்களைக் கசக்கிப் பிழிகிறது என்ற இந்த தத்துவத்தை சொல்லித்தான் அரசியல் பொருளாதாரம் அகமகிழ்கிறது.
ஆலைத் தொழிலின் அசாதாரண விரிவாக்கம், அதன் வளர்ச்சியின் குறிப்பிட்ட கட்டத்தில், வேலை செய்யும் தொழிலாளர்களின் தொகையில் ஒப்பீட்டுக் குறைவை மட்டுமல்லாமல் அறுதியான குறைவையும் ஏற்படுத்தக் கூடும் என்பது உண்மைதான்.
1852க்கும் 1862க்குமிடையே ஆங்கிலேயக் கம்பளிப் பட்டறைத் தொழிலில் கணிசமான பெருக்கம் நிகழ்ந்தது; ஆனால் அதில் வேலை செய்த ஆட்களின் தொகையோ அநேகமாய் மாறாமலிருந்தது. புதிய இயந்திரங்களைப் புகுத்தியதானது முன்சென்ற காலங்களில் செலவிடப்பட்ட உழைப்பை எந்த அளவுக்கு நீக்கம் செய்து விட்டது என்பதை இது காட்டுகிறது.
1838க்கும் 1856க்கும் இடையில் விசைத்தறிகளிலும் அவற்றால் வேலை வாங்கப்பட்ட ஆட்களிலுமான அதிகரிப்பு, இத்தொழிற் கிளையினது விரிவாக்கத்தின் விளவுதான்.
ஆயின், இயந்திர சாதனம் பெருந்திரளான ஆட்களை உள்ளபடியே அகற்றி விட்டு காரியாம்சத்தில் அவர்களுக்கு பதிலியாகிறது என்றாலும், அகற்றப்பட்ட பட்டறைத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் ஆகியோரை விட ஆலைத் தொழிலாளர்கள் --- குறிப்பிட்டத் தொழிலில் மேலும் ஆலை கட்டுவதன் மூலமும், பழைய ஆலைகளை விரிவாக்குவதன் மூலமும் --- தொகையில் அதிகமாகிவிடலாம்.
இயந்திர சாதனம் அதன் செயற்களத்தை வெற்றி கொள்கிற இந்த முதற்காலகட்டம், அதன் உதவியால் உண்டாகிற அசாதாரண இலாபங்களின் காரணத்தால், தீர்மானகர முக்கியத்துவமுடையதாகும். இந்த இலாபங்கள், விரைவு கூடிய திரட்டலின் ஆதாரமாக அமைவதோடு, ஓயாது படைக்கப்படுவதும், புதிய முதலீடுகளை எதிர்பார்த்து எந்நேரமும் காத்திருப்பதுமான கூடுதல் சமுதாய மூலதனத்தின் பெரியதொரு பகுதியைச் சலுகை பெற்ற நிலையிலுள்ள உற்பத்தித் துறைக்குள் கவரவும் செய்கின்றன.
நவீனத் தொழில் துறையின் பொருளுற்பத்திக்கு வேண்டிய பொதுவான நிலைமைகள் நிறுவப்பெற்றதுமே, இந்த உற்பத்தி முறை நெகிழ்ச்சி பெருகிறது; அதாவது கச்சாப் பொருள் கிடைப்பதிலும், உற்பத்தியான பண்டத்தை விற்பதிலும் ஏற்படக்ககூடியது தவிர வேறு தடையேதுமில்லாமல் மடை திறந்தாற்போல் விரைந்து விரிவுபட வளரும் ஆற்றல் பெறுகிறது.
இயந்திர வழி உற்பத்திப் பண்டங்களின் மலிவும், போக்குவரத்து மற்றும் தொடர்புச் சாதனங்களும் அந்நியச் சந்தைகளை வெற்றி கொள்ள வழி செய்தன. இயந்திர சாதனம் இதர நாடுகளில் கைத்தொழில் உற்பத்தியை நாசமாக்குவதன் மூலம், அவற்றை தனக்கு வேண்டிய கச்சாப் பொருளை வழங்குவதற்கான களங்களாக வலுவந்தமாய் மாற்றுகிறது.
ஒரு புதிய உழைப்புப் பிரிவினை, உலகு தழுவிய உழைப்புப் பிரிவினை, நவீனத் தொழில் துறையினது தலையாய கேந்திரங்களின் தேவைகளுக்குப் பொருத்தமான உழைப்புப் பிரிவினை உதித்தெழுகிறது; அது இவ்வுலகின் ஒரு பகுதியை, பிரதானமாக தொழிற் பிரதேசமாய் இருக்கிற மறு பகுதிக்குத் தேவையானவற்றை வழங்கும் பொருட்டு பிரதானமாக விவசாயப் பிரதேசமாய் மாற்றிவிடுகிறது.
தாவித் தாவி விரைந்து விரிவடைகிற ஆலைத்தொழிலில் உள்ளார்ந்துள்ள பேராற்றலும், அது உலகச் சந்தைகளைச் சார்ந்திருப்பதும் தவிர்க்க முடியாமலே ஜூரவேக உற்பத்தியைத் தோற்றுவிக்கின்றன. இதைத் தொடர்ந்து சந்தைகள் மிகையாக நிரம்பி வழியும் நிலை ஏற்படுகிறது; அடுத்து சந்தைகளின் சுருக்கம் உற்பத்தியை முடங்கச் செய்கிறது. நவீனத் தொழில் துறையின் வாழ்வே மிதமான செயற்பாடு, செழிப்பு, மிகையுற்பத்தி, நெருக்கடி, தேக்கம் ஆகிய காலவட்ட வரிசை ஆகி விடுகிறது.
இயந்திர சாதனம் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பிலும், ஆதலால் வாழ்க்கை நிலைமைகளிலும் தோற்றுவிக்கிற நிச்சயமின்மையும் நிலையின்மையும் தொழிற் சகடத்தின் இந்த கால வட்ட மாற்றங்களின் காரணத்தால் சகஜமாகி விடுகின்றன.
செழிப்புக் காலங்களில் தவிர முதலாளிகளிடையே சந்தைகளில் அவரவரின் பங்குக்காக மூர்க்கப் போர் நடைபெறுகிறது. உற்பத்திப் பண்டத்தின் மலிவுக்கு நேர் விகிதத்திலானது இந்த பங்கு. உழைப்புச் சக்திக்கு பதிலியாக அமையும் மேம்பட்ட இயந்திர சாதனத்தைப் பிரயோகிப்பதிலும், புதிய உற்பத்தி வழிமுறைகளைப் பிரயோகிப்பதிலும் இந்தப் போராட்டம் தோற்றுவிக்கும் போட்டாப் போட்டி ஒரு புறமிருக்க, தொழிற் சகடம் ஒவ்வொன்றிலும் சரக்குகளை மலிவாக்கும் பொருட்டு உழைப்புச் சக்தியின் மதிப்புக்கும் கீழே வலுவந்தமாய்க் கூலியை வெட்டிச் செல்ல முயல்கிற நேரமும் வருகிறது.
புதிய தொழிலாளர்களுக்குரிய இடத்தை காரியாம்சத்தில் வழங்குவதும், இன்னொரு நேரத்தில் உள்ளபடியே பழைய தொழிலாளர்களை விலக்குவதுமான தொழில் நுட்ப முன்னேற்றமும் அதில் ஓயாது குறுக்கிடுகிறது.
தொழிலாள மக்கள் தொடர்ச்சியாக விலக்கவும் படுகின்றனர், ஈர்க்கவும் படுகின்றனர்; இவ்விதம் அலைகழிக்கப்படுகின்றனர்; அதேபோது திரட்டப்படுவோரின் பாலிலும், வயதிலும், தேர்ச்சியிலும் இடைவிடாத மாற்றங்கள் நிகழ்கின்றன.
தொழிலாளர்களைப் பலியிட்டு உற்பத்தி நிகழ்முறையில் நடந்த புரட்சி, தவளைகளைப் பலியிட்டு ஆய்வாளர்கள் செய்வதைப் போன்ற experimenta in corpore vili முறைப்படி செய்யப்பட்டன.
No comments:
Post a Comment