Wednesday, August 28, 2013

பகுதி 3: அத்தியாயம் 10: வேலை நாள். பிரிவு 5 முதல் 7 வரை

வேலை நாள் என்றால் என்ன என்ற கேள்விக்கு மூலதனம் என்ன பதில் சொல்கிறது? உழைப்புச் சக்தி மீண்டும் தன் சேவையை வழங்குவதற்கு முற்றிலும் இன்றியமையாததான சில மணி நேர ஓய்வு போக 24 மணி நேர முழுமையும் வேலை நாளில் அடங்கும். எனவே தொழிலாளி என்பவர், தன் வாழ்க்கை பூராவும், உழைப்புச் சக்தியே அன்றி வேறல்லர் என்பதும், எனவே அவரது பயன்படுத்தத்தக்க நேரம் முழுவதுமே, இயற்கையாலும் சட்டத்தாலும், மூலதனத்தின் தற்பெருக்கத்துக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டிய உழைப்பு நேரமே என்பதும் சொல்லாமல் விளங்கும். 

மூலதனம் தார்மிக எல்லைகளை மட்டுமல்லாமல், வெறும் பௌதிக எல்லைகளையும் மீறி உடலின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும், ஆரோக்கியமான பராமரிப்புக்கும் உரிய நேரத்தை அது அபகரித்துக்கொள்கிறது. நல்ல காற்று, சூரிய ஒளி ஆகியவற்றைப் பெறுவதற்கு அவசியமான நேரத்தைக் களவாடுகிறது. சாப்பாட்டு நேரம் குறித்து தகராறு செய்கிறது.

உழைப்புச் சக்க்தியினது ஆயுட் காலத்தின் அளவு பற்றி மூலதனத்துக்கு அக்கறையில்லை; அதன் அக்கறைக்குரியதெல்லாம் ஒரு வேலை..நாளில் இயங்க வைக்கத்தக்க உழைப்புச் சக்தியின் அதிக பட்ச அளவு மட்டும்தான்.

முதலாளித்துவ பொருளுற்பத்தி முறை (சாராம்சத்தில் உபரி..மதிப்பின் உற்பத்தி, உபரி..உழைப்பை உறிஞ்சுதல்) வேலை..நாளின் நீட்டிப்பைக் கொண்டு, மனித உழைப்புச் சக்தியின் வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் வேண்டிய இயல்பான தார்மிக..பௌதிக நிலைமைகள் அதற்குக் கிடைக்காதபடி கொள்ளையிட்டு அச்சக்தியை சீரழிக்கச் செய்வதோடு வற்றிப் போகும்படியும் செய்கிறது.

மூலதனம் தற்பெருக்கத்துக்கான தன் வரம்பற்ற வெறியில் தவிர்க்க முடியாமலே அடைய முனைவதான வேலை..நாளின் இயற்கைக்குப் பொருந்தாத நீட்டிப்பு தனிப்பட்ட தொழிலாளியின் ஆயுட் காலத்தை குறுக்கிவிடுகின்றது. எனவே  பயன்பட்டு தீர்ந்துபோன சக்திகளை இன்னும் துரித கதியில் மாற்றீடு செய்ய, அவரது உழைப்புச் சக்தியின் மறுவுற்பத்திக்கான செலவுகளின் மொத்தத் தொகை இன்னும் அதிகமாகி விடும்.

மனிதன் என்னும் சங்கமப் பொருளிலிருந்து, அது வெளிப்படுத்தவல்ல அதிகபட்ச முயற்சியை மிகக் குறுகிய காலத்தில் கறப்பதே மிகவும் பயனுள்ள சிக்கனமாகும் என்பது அடிமைகளை இறக்குமதி செய்யும் நாடுகளில் அடிமை..மேலாண்மையின் செயல்விதிகளில் ஒன்று

பல சந்தர்ப்பங்களில் வருடாந்திர இலாபங்கள் தோட்டங்களின் முழு மூலதனத்துக்கே சமமாய் இருக்கிற வெப்பப் பிரதேசச் சாகுபடியில்தான் நீக்ரோ உயிர் மிக அலட்சியமாகப் பலியிடப்படுகிறது.

நம்ப முடியாத செல்வச் செழிப்புக்கு பல நூறு ஆண்டுகளாகப் பெயர் பெற்றிருக்கும் மெற்கிந்தியத் தீவுகளின் வேளாண்மைதான் ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்த பல லட்சம் மக்களை விழுங்கியுள்ளது.

வருவாய்கள் கோடிக் கணக்கில் கணக்கிடப்படுகிற, தோட்ட அதிபர்கள் இளவரசர்களாய் இருக்கிற இந்நாளைய கியூபாவில்தான், அடிமை வர்க்கத்திடம் படுமட்டமான உணவையும், சோர்ந்து ஒடுங்கச் செய்யும் ஓயாத உழைப்பையும், ஏன், ஆண்டு தோறும் அவ்வர்க்கத்தில் ஒரு பகுதி முற்றாக அழிவதையும் கூடக் காண்கிறோம்.  

லண்டனில் ரொட்டித் தொழிலாளர்களின் அணிகளை மிகையுழைப்பு எப்படிக் குறுக்கியது என்பதைக் கேட்டறிந்தோம். ஆயினும் ரொட்டித் தொழிலகங்களில் சாவதற்காக லண்டன் உழைப்புச் சந்தையில் எப்போதுமே தேவைக்கதிகமானோர் உள்ளனர்.

மண்பாண்டத் தொழில் ஆயுள் குறுகியோரின் தொழில்களில் ஒன்று என்பதைப் பார்த்தோம். ஆனால் மண்பாண்டத் தொழிலாளர்கள் பற்றாக்குறையாகவா இருக்கிறார்கள்?

பஞ்சுத் தொழில் 90 ஆண்டுகளாக நடைபெறுகிறது. இக்காலத்தில் அது ஆலை தொழிலாளர்களின் ஒன்பது தலைமுறைகளை அழித்துள்ளதென்று துணிந்து சொல்லலாம் என் நம்புகிறேன்.  

1834இல் வேளாண்மை வட்டங்களின் "உபரி..மக்கள் தொகையை" வட பகுதிக்கு அனுப்பவேண்டுமாய் தொழிலதிபர்கள் வறியோர் நல சட்ட ஆணையர்களிடம் யோசனை கூறினார்கள்.

1860இல் பஞ்சுத் தொழில் உச்ச நிலையிலிருந்தது... தொழிலதிபர்கள் மீண்டும் ஆட்கள் பற்றாகுறையாக இருக்கக் கண்டனர். .. அவர்கள் "சதை முகவர்கள்" என்று அழைக்கப் படுவோரிடம் மனு செய்தனர்.

பொதுவாக முதலாளிக்கு அனுபவம் காட்டுவது என்னவெனில் மக்கள் தொகை இடையறாது மிகைப்பட்டுவிடுகிறது என்பதே.

உண்மையில் வரலாற்று வழியில் சொன்னால் நேற்று முளைத்த ஒன்றாகிய முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை மக்களது ஜீவ சக்தியின் அடி வேரையே எவ்வளவு விரைவாகவும் உறுதியாகவும் பற்றியுள்ளது என்பதை மதிநுட்பமுள்ள நோக்கருக்கு அனுபவம் காட்டுகிறது.

சமுதாயத்திடமிருந்து நிர்பந்தம் இருந்தாலன்றி, தொழிலாளியின் ஆரோக்கியம் பற்றியோ ஆயுள் பற்றியோ மூலதனத்துக்குக் கவலையில்லை.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இதெல்லாம் உண்மையில் தனிப்பட்ட முதலாளியின் நல்லெண்ணத்தையோ கெட்டெண்ணத்தையோ பொறுத்ததன்று. தடையில்லாப் போட்டியானது முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் உள்ளார்ந்த விதிகளை, வெளியிலிருந்து வலுவந்தம் செய்து ஒவ்வொரு தனிப்பட்ட முதலாளியின் மீதும் அதிகாரம் செலுத்தும் விதிகளாய் உருவெடுக்கச் செய்கிறது.

முதலாளிக்கும் தொழிலாளிக்குமிடையே நூற்றாண்டுக்கால போராட்டத்தின் விளைவாகவே இயல்பான வேலை..நாள் நிலை நாட்டப்பட்டது. இந்தப் போராட்டத்தின் வரலாற்றில் எதிரெதிரான இரு போக்குகளைக் காண்கிறோம்.

நவீன காலத் தொழிற்சாலைச் சட்டங்கள் வேலை..நாளைக் கட்டாயமாகக் குறைத்தனவென்றால், முந்தைய சட்டங்கள் அதைக் கட்டாயமாக அதிகப்படுத்த முயன்றன.

மூலதனம் போதிய அளவில் உபரி..உழைப்பை உறிஞ்சும் உரிமையை, பொருளாதார உறவுகளின் வலிமைகொண்டு மட்டுமின்றி, அரசின் உதவி கொண்டும் நிலை நாட்டுகிறது.

முதலாவது தொழிலாளர் சட்டம் 1349 அதற்கான சமாதானத்தை மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்திய பிளேக் நோயின் உருவில் கண்டது.

நமக்கு அக்கறைக்குரிய ஒரே அமிசமான வேலை..நாளின் வரம்புகள் என்ற அமிசம் 1496ஆம் ஆண்டு சட்டத்தில் திரும்ப வருகிறது.

1562 ஆம் ஆண்டில் எலிசபெத்தின் சட்டம் ஒன்று "தின அல்லது வாரக் கூலிக்கு அமர்த்தப்படும்" உழைப்பாளர்கள் அனைவருக்குமான வேலை..நாளின் அளவைத் தொடாமல் விடுகிறது.

1833இல் 13 முதல் 18 வரை வயதுடைய குழந்தைகளுக்கான வேலை..நாளை நான்கு தொழிற் கிளைகளில் 12 முழு மணிகளாக ஆங்கிலேயப் பாராளுமன்றம் குறைத்தபோது, ஆங்கிலேய தொழில் துறையின் இறுதித் தீர்ப்பு நாள் வந்து விட்டதாகத் தோன்றியது.

1802க்கும் 1833க்குமிடையே 5 தொழிலாளர் சட்டங்களை பாராளுமன்றம் நிறைவேற்றியது; ஆனால் அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கு சல்லி காசு கூட ஒதுக்காமல் சாமர்த்தியம் புரிந்தது.

ஒழுங்குபடுத்துகிற இந்த நுட்ப விதிகள் எவ்விதத்தும் பாராளுமன்றக் கற்பனையால் விளைந்தவையல்ல. அவை நவீன பொருளுற்பத்தி முறையின் இயற்கை விதிகளாய் நிலைமைகளிலிருந்து சிறிது சிறிதாக உருவாயின. அவற்றை அரசு வகுத்ததும், அதிகாரபூர்வமாக அங்கிகரித்ததும், பிரகடனம் செய்ததும் நீண்ட நெடிய வர்க்கப் போராட்டத்தின் விளைவாகும்.

1844 முதல் 1847 வரையிலான காலத்தில், தொழிற்சாலை சட்டத்தின் படி பொதுவாகவும், சீராகவும் எல்லாத் தொழிற் கிளைகளிலும் 12 மணி நேர வேலை நாள் அமலாயிற்று.

தொழிலதிபர்கள் இந்த "முன்னேற்றத்தை" அதற்கீடான "பின்னடைவு" இல்லாமல் அனுமதிக்கவில்லை. அவர்களின் தூண்டுதலின் பேரில், காமன்ஸ் சபை சுரண்டலுக்குரிய குழந்தைகளுக்கான குறைந்த பட்ச வயதை ஒன்பதிலிருந்து எட்டாகக் குறைத்தது.

1847 புதிய தொழிற்சாலைச் சட்டம் "இளம் வயதினருக்கும் (13 முதல் 18 வயது வரை), எல்லாப் பெண்களுக்கும் வேலை..நாளை 1847 ஜூலை முதைல் 11 மணி நேரமாகவும் 1848 மே 1 முதல் 10 மணி நேரமாகவும் குறைக்க வேண்டும் என்று ஆணையிட்டது.

இச்சட்டம் அமலுக்கு வராமல் தடங்கல் செய்யும் பொருட்டு மூலதனம் இப்போது ஒரு பூர்வாங்க இயக்கத்தை ஆரம்பித்தது.புளுகு, லஞ்சம், மிரட்டல் போன்ற எல்லா உபாயங்களையும் கையாண்டு "இச்சட்டம் தம்மை ஒடுக்குவதாக"  தொழிலாளர்களைப் புகார் செய்ய வைத்தனர். ஆனால் தொழிலதிபர்கள் தாம் விரும்பியதைப் போல் தொழிலாளர்களை பேச வைப்பதில் வெற்றி பெறவில்லை.

1850 ஆம் வருடத்திய சட்டம் அதன் ஆளுகைக்குரிய தொழிற் கிளைகளில் எல்லா தொழிலாளர்களின் வேலை. .நாளையும் முறைப்படுத்தியது. இதனை ஏற்பதில் மூலதனம் காட்டிய அதிருப்தி சட்டத்தின் ஒவ்வொரு வரியிலும் காணக் கிடக்கிறது. ஆயினும், நவீனப் பொருளுற்பத்தி முறைக்கே மிகவும் உரித்தான படைப்பாக அமைந்த பெருந்தொழிற் கிளைகளில் சட்டப்படி வேலை..நாளுக்கு வரம்பிடுவதில் வெற்றி கிட்டியது. அரை நூற்றாண்டு கால உள் நாட்டு போருக்குப் பிறகே தொழிலதிபர்களை சட்டபூர்வ வரம்பிடலுக்கும், ஒழுங்கு முறைக்கும் பையப் பையப் பணிய வைக்க முடிந்தது. இப்போர் தொழில் துறையின் பிறப்பிடமாகிய இங்கிலாந்தில் முதலில் வெடித்தெழுகிறது.

பொருளுற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றங்களும் முதலில் சகல விதத்திலும் வரம்பு கடந்த மட்டு மீறலுக்கு வழி வகுத்தன. பின், இதற்கு எதிரிடையாக, சமுதாயத்திடமிருந்து ஒரு கட்டுப்பாட்டை அவசியமாக்கின. சமுதாயம் வேலை..நாளுக்கும் அதன் இடைநிறுத்தங்களுக்கும் சட்ட வரம்பிட்டு, அவற்றை ஒழுங்குபடுத்தி ஒரே சீரானவை ஆக்குகிறது.

பிரான்ஸில் 12 மணி நேரச் சட்டத்தை பெற்றெடுக்க பிப்ரவரி புரட்சி அவசியமாகிறது.

வட அமெரிக்காவில் உள் நாட்டுப் போரில் விளைந்த முதற் பலன் எட்டு மணி நேரக் கிளர்ச்சி. "எட்டு மணி நேரமே இயல்பான வேலை..நாள் ஆகுமென சட்டம் இயற்றுதல் வேண்டும். சீரும் சிறப்பும் வாய்ந்த இந்த விளைவு கிட்டும் வரை நமது முழு பலத்தையும் கொண்டு முயன்றிட உறுதி  பூண்டுள்ளோம்" என்று 1866இல் பால்டிமரில் நடந்த தொழிலாளர் பொதுப் பேராயம் அறிவித்தது.

அதே நேரத்தில் ஜெனிவாவில் நடந்த சர்வதேச உழைக்கும் மக்கள் சங்கத்தின் பேராயம், லண்டன் பொது மன்றத்தின் பிரேரணையின் பேரில், "எட்டு மணி நேரமே வேலை..நாளுக்குரிய சட்ட வரம்பு என்று பேராயம் முன் மொழிகிறது" என்று தீர்மானம் இயற்றியது.

Saturday, August 10, 2013

பகுதி 3: அத்தியாயம் 10: வேலை நாள். பிரிவு 1 முதல் 4 வரை

பிரிவு 1: வேலை..நாளின் வரம்புகள்

உழைப்புச் சக்தியின் மதிப்பு, மற்றெல்லாச் சரக்குகளின் மதிப்பையும் போலவே, அதன் உற்பத்தியின் அவசியமான வேலை நேரத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.

'உபரி வேலை நேரம் / அவசிய வேலை நேரம்' என்ற விகிதம் உபரி..மதிப்பு விகிதத்தை நிர்ணயிக்கிறது.

உபரி,,மதிப்பு வீதம் மட்டுமே வேலை நாளின் கால அளவை நமக்குத் தந்திடாது; வேலை நாளின் 2 அடக்கக் கூறுகளான அவசிய வேலை நேரமும், உபரி உழைப்பு நேரமும் எவ்வளவு கால அளவு கொண்டது என்பதை காட்டாது.

வேலை நாள் மாறும் அளவே ஒழிய மாறா அளவன்று. வேலை நாள் நிர்ணயிக்கப்படக் கூடியது, ஆனால் தன்னளவில் நிர்ணயமற்றது. 

வேலை நாள் குறிப்பிட்ட வரம்புகளுக்கு உட்பட்டே மாற முடியும். உபரி உழைப்பு = 0 என்று ஆக்கினால், கீழ் வரம்பை, அதாவது தன் சொந்த பராமரிப்புக்காக தொழிலாளி அவசியம் வேலை செய்ய வேண்டிய நாட் பகுதியைப் பெறுகிறோம்.

வேலை நாளுக்கு மேல் வரம்பு உண்டு. குறிப்பிட்ட நிலைக்கப்பால் அதை நீட்ட முடியாது. இந்த மேல் வரம்பை நிர்ணயிப்பவை இரு காரணிகள். முதல் காரணி உழைப்புச் சக்தியின் பௌதிக எல்லைகள் ஆகும். இயற்கையான நாளின் 24 மணி நேரத்துக்குள் மனிதன் தனது ஜீவ ஆற்றலில் குறிப்பிட்ட அளவையே செலவிட முடியும்.

உண்ணவும், குளிக்கவும், உடுக்கவும் வேண்டும். முற்றிலும் பௌதிகத் தன்மை வாய்ந்த இந்த வரையறைகளோடு, தார்மிகத் தன்மை வாய்ந்த வரையறைகளும் வேலை..நாளின் நீட்டிப்புக்குத் தடை ஆகின்றன. அறிவுத் தேவைகளையும், சமூகத் தேவைகளையும் நிறைவு செய்து கொள்வதற்கு உழைப்பாளிக்கு நேரம் தேவைப்படுகிறது; இத்தேவைகளின் அளவும் எண்ணிக்கையும் சமுதாய முன்னேற்றத்தின் பொது நிலையால் நிர்ணயிக்கப்படுகின்றன, எனவே வேலை..நாளின் கால அளவிலான ஏற்ற இறக்கம் பௌதிக, சமுதாய எல்லைகளுக்கு உட்பட்டது.

மூலதனம் உயிரற்ற உழைப்பு ஆகும்; அது உதிரமாகாளியைப் போல உயிருள்ள உழைப்பை உறிஞ்சியே வாழ்கிறது; எவ்வளவு அதிகமாக உழைப்பை உரிஞ்சுகிறதோ, அவ்வளவு அதிகமாக வாழ்கிறது. தொழிலாளி வேலை செய்யும் நேரம் என்பது, முதலாளி அவரிடமிருந்து வாங்கியிருக்கும் உழைப்புச் சக்தியை நுகர்கிற காலம் ஆகும்.

முதலாளியை நோக்கி தொழிலாளியின் குரல்: நான் உம்மிடம் விற்றிருக்கும் சரக்கின் பயன்பாடு மதிப்பைப் படைக்கிறது. சொந்த மதிப்பை விடக் கூடுதலான மதிப்பைப் படைக்கிறது என்பது அதற்கும் ஏனைய எல்லாச் சரக்குகளுகுமுள்ள வேறுபாடு ஆகும். அதனால்தான் நீர் அதனை வாங்கினீர். உமது தரப்பில் தன்னியல்பான மூலதனப் பெருக்கமாய் தோன்றுவது, எனது தரப்பில் உழைப்புச் சக்தியின் கூடுதல் செலவீடாகும். என் அன்றாட உழைப்புச் சக்தியின் பயன்பாடு உமக்கே உரியது. ஆனால் நீர் அதற்காக நாள் தோறும் கொடுக்கிற விலையைக் கொண்டு நான் அதை அன்றாடம் மறுவுற்பத்தி செய்யவும், மீண்டும் விற்கவும் முடிய வேண்டும். நான் இன்று போலவே நாளையும் அதே இயல்பான ஆற்றலுடனும், ஆரோக்கியத்துடனும், புத்துணர்வுடனும் வேலை செய்ய முடிய வேண்டும். எனது ஒரே சொத்தாகிய உழைப்புச் சக்தியைச் கட்டுச் செட்டாக நிர்வகித்து, அதன் அசட்டுத்தனமான விரயத்தை அறவே தவிர்ப்பேன். அதன் இயல்பான ஆயுளுக்கும், ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் ஏற்றது எவ்வளவோ அவ்வளவை மட்டுமே நான் ஒவ்வொரு நாளும் செலவிடுவேன், இயங்கச் செய்வேன், செயல்படுத்துவேன். எனது உழைப்புச் சக்தியை பயன்படுத்திக் கொள்வது வேறு; சூறையாடுவது வேறு.

வேலை நாளை முடிந்த வரை நீட்டவும், முடிந்த போதெல்லாம் ஒரு வேலை..நாளிலிருந்து இரு வேலை நாட்களைப் பெறவும் முதலாளி முயலும்போது, வாங்குபவர் என்ற முறையில் தன் உரிமைகளையே நிலைநாட்டிக் கொள்கிறார்.

தொழிலாளி வேலை நாளை இயல்பான குறிப்பிட்ட காலவரை கொண்ட ஒன்றாகக் குறைக்க விரும்பும் போது, விற்பவர் என்ற முறையில் தன் உரிமைய நிலை நாட்டிக் கொள்கிறார். எனவே, எதிரும் புதிருமான ஒரு நிலை இங்கே எழுகிறது; உரிமைக்கு எதிராய் உரிமை நிற்கிறது.

எனவேதான் முதலாளித்துவ பொருளுற்பத்தியின் வரலாற்றில் வேலை..நாள் என்றால் என்ன என்பது ஒரு போராட்டம் வாயிலாகத் தீர்மானிக்கப்படுகிறது. கூட்டு மூலதனத்துக்கும் கூட்டு உழைப்புக்கும் இடையிலான, அதாவது முதலாளி வர்க்கத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும்  இடையிலான போராட்டம் வாயிலாகத் தீர்மானிக்கப்படுகிறது.

பிரிவு 2: உபரி..உழைப்புக்கான பேராசை.

உபரி..உழைப்பு மூலதனத்தின் கண்டுபிடிப்பன்று. சமுதாய உற்பத்தியின் ஒரு பகுதியினர் உற்பத்திச் சாதனங்களின் ஏகபோகத்தைப் பெற்றுள்ள இடங்களிலெல்லாம், தொழிலாளி சுதந்திரமுடையவராய் இருந்தாலும் சரி, சுதந்திரமற்றவராய் இருந்தாலும் சரி, தன் சொந்த பராமரிப்புக்கு அவசியமான வேலை நேரத்தோடு கூட உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளருக்கான வாழ்வுச் சாதனங்களை உற்பத்தி செய்யும் பொருட்டுக் கூடுதல் வேலை நேரமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உற்பத்திப் பொருளின் பயன்..மதிப்பு ... பரிவர்த்தனை..மதிப்பன்று .... கோலோச்சுகிற சமுதாயத்தின் குறிப்பிட்ட பொருளாதார வடிவமைப்பெதிலும் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கக் கூடிய குறிப்பிட்ட சில தேவைகள் உபரி..உழைப்பிற்கு வரம்பிடும். பரிவர்த்தனை..மதிப்பை அதன் சுயேச்சையான தனி வடிவமாகிய பண வடிவத்தில் அடைவது குறிக்கோளாக இருக்கும்போதுதான் மிகையுழைப்பு கோரத் தாண்டவமாடுகிறது.

உபரி..உழைப்பும் அவசிய..உழைப்பும் ஒன்றோடு ஒன்று கலந்துள்ளன. ஒவ்வொரு நிமிடத்திலும் தொழிலாளி தனக்காக 30 வினாடியும், முதலாளிக்காக 30 வினாடியும் வேலை செய்கிறார்.

வாலேக்கிய விவசாயி கார்வே முறையில் தன் சொந்த பராமரிப்புக்காகச் செய்கிற அவசிய உழைப்பு தன் சொந்த வயலிலும், உபரி உழைப்பை பிரபுவின் பண்ணையிலும் செய்கிறார். உபரி..உழைப்பு அவசிய உழைப்பிலிருந்து தெளிவாக பிரித்துக் காட்டப்படுகிறது. உழைப்பு நேரத்தின் இரு பகுதிகளும் தனித்தனியாக அக்கம்பக்கமாக இருக்கிறது. ஆயினும் அளவு வழிபட்ட உறவில் எந்த வேறுபாடும் எழ முடியாது. உழைப்பு நாட்களுக்கான நேரடி வேட்டை மேலும் அப்பட்டமாக வெளிப்படுகிறது.

ருமேனிய மாகாணங்களில் நிலக் கூட்டுடைமையின் அடிப்படையில், நிலத்தின் ஒரு பகுதியை சமூதாயத்தின் உறுப்பினர்கள் தனியுடைமையாகத் தனித்தனியே சாகுபடி செய்தனர். இன்னொரு பகுதியை பொதுவில் சாகுபடி செய்தனர். இந்த பொது உழைப்பின் விளபொருட்களில் ஒரு பாகம் மோசமான அறுவடைகளையும், ஏனைய விபத்துகளையும் சமாளிப்பதற்கான சேம வைப்பு நிதியமாகவும் ஒரு பாகம் போர், சமயம் ஆகியவற்றின் செலவுகளுக்கும் ஏனைய பொது இருப்பாகவும் பயன்பட்டன. காலப் போக்கில் இராணுவம், சமயம் ஆகியவற்றின் பிரமுகர்கள் பொது நிலத்தையும் அதில் செல்விடப்பட்ட உழைப்பையும் அபகரித்துக் கொண்டனர்.

கார்வே சட்டப்படி ஒவ்வொரு வாலேக்கிய விவசாயியும் நிலப்பிரபு எனப்படுபவருக்கு, பண்ட வடிவில் செலுத்தும் திரளான பல்வேறு கொடுப்புகளன்னியில் 14 நாள் உழைப்பையும் தர வேண்டும். வேலை நாள் என்பது ... அரசியல் பொருளாதாரத்தில் ஆழ்ந்த நுண்ணோக்குடன் ... சராசரி அன்றாட விளைபொருளின் உற்பத்திக்கு அவசியமான வேலை நாள். அப்படியானால் அது மூன்று மடங்கு .. ஒரு நாள் வயல் உழைப்பு என்பதை மூன்று நாள் உடல் உழைப்பின் பலன் என்று கொள்ள வேண்டும். ஆகவே 42 கார்வே நாள். இன்னும அசாதாரண சந்தர்ப்பங்களில் மேலும் 14 நாள்.........

டான்யூபிய மாகாணங்களது ரெக்ளமெண்டின் ஒவ்வொரு பத்தியும் உபரி..உழைப்பை சட்ட சம்மதமாக்குகிறது. உபரி..உழைப்புக்கான பேராசையை இச்சட்டம் நேர்வழியில் தெரிவிக்கிறதென்றால், ஆங்கிலேயத் தொழிற்சாலைச் சட்டங்கள் இப்பேராசையை எதிர் வழியில் தெரிவிக்கின்றன.

நிலத்தைச் சத்திழக்கச் செய்து மலடாக்கிய கண்மூடித்தனமான அதே கொள்ளை வெறி நாட்டின் உயிர்ச் சக்தியை வேரறுக்க முற்பட்டது. காலந்தவறாமல் வரும் தொத்து நோய்கள் ... ஜெர்மனியிலும், பிரான்ஸிலும் இராணுவத்திற்கான உயரத் தகுதி குறைந்து வருவதைப் போலவே .... இவ்வுண்மையைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.

1867ல் அமலில் உள்ள 1850 வருடத் தொழிற் சட்டம் 10 மணி நேர சராசரி வேலை..நாளை விதிக்கிறது. 

தொழிற்சாலை ஆய்வாளரின் கூற்றுப்படி "மோசடிக்கார ஆலை அதிபர் காலையில் வேலை தொடங்கும் போதும், காலை உணவு நேரத்திலும், சாப்பாட்டு நேரத்திலும், வேலை முடிவின் போதும் அதிகமாக வேலை நேரத்தை கூடுதலாக்குவது ஆண்டு ஒன்றுக்கு 13 மாதம் வேலை செயவதற்கு சமமாகிறது.

"ஓய்வெடுக்கவும், இளைப்பாறவும் அனுமதிக்கப்படுவதாக வெளி ஒப்புக்குச் சொல்லப்படுகிற நேரங்களில் நாள் ஒன்றுக்கு அரை அல்லது முக்கால் மணி நேரம் அபகரிக்கப்படுகிறது.

"தண்டிக்கப்பட்டவர்கள் கட்ட வேண்டியிருந்த அபராதமும் செலவுகளும் சொற்பமே என்பதைப் பார்க்கும் போது, தாங்கள் மாட்டிக் கொண்டாலும் கணிசமான ஆதாயம் மிச்சப்படும் என்று அவர்களுக்கு தெரிந்துவிடுகிறது.

மூலதனம் செய்யும் இவ்வகையான திருட்டுகளுக்கு "அற்பத்தனமான நிமிட திருட்டுகள்" என்று தொழிற்சாலை ஆய்வாளர்கள் பெயர் சூட்டுகின்றனர்.

பிரிவு 3: ஆங்கிலத் தொழில் துறையில் சுரண்டலுக்கு சட்ட வரம்புகள் இல்லாத கிளைகள்.

1860ல் நாட்டிங்காம் அசெம்பிளி வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் தலைவர் என்ற முறையில் மாஜிஸ்திரேடின் அறிவிப்பின்படி ஒன்பது அல்லது பத்து வயது குழந்தைகள் காலையில் இரண்டு, மூன்று அல்லது நான்கு மணிக்கு அவர்களது அழுக்குப் படுக்கையிலிருந்து இழுத்து வரப்பட்டு, வயிற்றுப் பாட்டுக்காக இரவு பத்து, பதினொன்று அல்லது பன்னிரண்டு மணி வரை வேலை  செய்யுமாறு கட்டாயப் படுத்தப்படுகின்றனர். அவர்களது கை கால்கள் சூம்பிப் போகின்றன; உடல் கட்டுக் குலைந்து போகிறது; முகம் வெளிறிப் போகிறது; அவர்களது மனிதத்துவம் கல்லாய் இறுகி மரத்துப் போகிறது; அதை நினைத்துப் பார்த்தால் நெஞ்சு பொறுக்கவில்லை.

1863ல் ஆணையர்கள் அளித்த அறிக்கையிலிருந்து: வடக்கு ஸ்த்ஃபோர்டுஷயர் மருத்துவமனை டாக்டர் ஜே.டி.ஆர்லெட்ஜ் கூறுகிறார்: மண்பாண்டத் தொழிலாளர்கள் பௌதிக வழியிலும் தார்மிக வழியிலும் சீரழிந்த மக்கள் சமூகத்தின் சின்னமாவர். அவர்கள் பொதுவாக வளர்ச்சி குன்றியவர்களாகவும், உரு கெட்டவர்களாகவும் உள்ளனர். பலர் மார்புக் கூடுக் குறையுடையவர்களாகவும் உள்ளனர். உரிய காலத்துக்கு முன்பே வயோதிகர் ஆகின்றனர். அற்ப ஆயுள் படைத்தோர் என்று கூறத் தேவையில்லை. சோகை பிடித்தும், இரத்தஞ் செத்தும் உள்ளனர். செரியாமாந்தத்தின் விடாப்பிடியான தாக்குதல்கள். கல்லீரலிலும், சிறு நீரகங்களிலும் கோளாறுகள் ஆகியவற்றில் அவர்களது உடல் தளர்வு வெளிப்படுகிறது. மார்பு நோயால் ... கபவாதம்....

இப்படியாக அவர்களின் ஆரோக்கிய குறைவைப் பற்றி பெரியதொரு அறிக்கையே படிக்கின்றார்.

இந்த பிரிவு  முழுவதும் இப்படியான ஏராளமான‌அறிக்கைகள் தரப்பட்டுள்ளன.

பிரிவு 4: பகல் நேர வேலையும் இரவு நேர வேலையும். அஞ்சல் முறை

மாறா மூலதனமாகிய உற்பத்திச் சாதனங்கள், உபரி மதிப்பின் படைப்பென்ற கண்ணோட்டத்தில் பார்க்கையில், உழைப்பையும், உழைப்பின் ஒவ்வொரு துளியுடனும் அதற்கேற்ற அளவில் உபரி..உழைப்பையும் உட்கிரகிப்பதற்கே உள்ளன. அவை இதைச் செய்யத் தவறுகையில், அவை இருப்பதே முதலாளிக்கு ஒப்பளவில் இழப்புக்குக் காரணமாகிறது; ஏனெனில் அவை வேலையற்றுக் கிடக்கும் காலத்தில் பயனற்ற மூலதன முன்னீட்டைக் குறிக்கின்றன.

நாளின் 24 மணி நேரம் முழுவதிலும் உழைப்பைத் தனதாக்கிக் கொள்வது முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் உள்ளார்ந்த போக்காகும். ஆனால் ஒரே ஆளின் உழைப்புச் சக்தியை இரவு பகலாக இடைவிடாமல் சுரண்ட உடல் இடமளிக்காது என்பதால். உடல் தொடர்பான இந்தத் தடையினைக் கடப்பதற்காக, பகலில் சக்திகளைச் செலவழித்து விடும் தொழிலாளர்களையும், இரவில் பிழியப்படும் தொழிலாளர்களையும் மாறி மாறி ஈடுபடுத்துவது அவசியமாகிறது.

இரவு நேர உழைப்பின் பொதுவான தீமை ஒரு புறமிருக்க, ஒவ்வொரு தொழிலாளிக்கும் அதிகாரபூர்வ வேலை நாள் என்பதன் வழக்கமான அர்த்தம் இரவு நேரத்திலோ பகல் நேரத்திலோ 12 மணி நேரம் என்பதாகும். ஆனால் இந்த அளவைத் தாண்டி மிகையாக வேலை செய்வது பல சந்தர்ப்பங்களில், ஆங்கிலேய அதிகாரபூர்வ அறிக்கையின் சொற்களில் சொல்வதானால், "மெய்யாவே பயங்கரமானது. வேலையளவினை பார்க்கும் போது, 9 முதல் 12 வரை வயதுள்ள பையன்கள் செய்யக் கூடிய வேலையாக அதனை கருத எவருக்கும் மனம் ஒப்பாது. இப்படிப்பட்ட அதிகார துஷ்ப்பிரயோகங்களைப் பெற்றோர்களும் முதலாளிகளும் செய்வதை இனியும் அனுமதிக்கலாகாது."

"அன்றாடப் போக்கில் ஆனாலும், நெருக்குதலான சமயங்களில் ஆனாலும் இரவு, பகல் முறை வைத்து சிறுவர்கள் வேலை செய்வதென்ற பழக்கமே அடிக்கடி மிதமிஞ்சி நீண்ட நேரம் வேலை செய்வதற்குத் தவிர்க்க முடியாமலே வழி திறப்பதாகத் தெரிகிறது.

மூலதனமே இந்த 24 மணி நேர ஏற்பாட்டை எப்படிக் கருதுகிறது என்பதை இப்போது கவனிப்போம். இயல்பாகவே, இவ்வேற்பாட்டின் படுமோசமான வடிவங்களை .... இதைத் தவறான முறையில் பயன்படுத்தி வேலை..நாளைக் "கொடுமையாகவும், ஏன், நம்ப முடியாததாகவும் கூட" நீட்டுவதை ... கண்டு கொள்ளாமல் மூலதனம் மௌனம் சாதிக்கிறது.

ஆலை அதிபர்கள் கூறுவது:

ஆட்களில் சிலருக்கு பகல் நேர வேலையும் இரவு நேர வேலையும் மாறி மாறி வருவதில்லை. அவர்கள் எப்போதும் இரவில் வேலை செய்கின்றனர்....

ஒவ்வொரு துறையிலும் தேர்ச்சி பெற்ற கரங்களும் மூளைகளும் கிடைப்பது சிரமமாயுள்ளது; ஆனால் சிறுவர்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் கிடைப்பார்கள்.....

பையன்களில் சுமார் 1/3 பேர் அல்லது 170 பேர் 13 வயதுக்குட்பட்டவர்கள். 18 வயதுக்குட்பட்டவர் யாரும் 24 மணி நேரத்தில் 12 மணி நேரத்துக்கதிகமாக வேலை செய்யலாகாது என்று கோருவது அவ்வளவாக ஆட்சேபத்துக்குரியதென்று நான் நினைக்கவில்லை. ஆனால் இரவு நேர வேலைக்கு ஆகாதென்று 12 வயதுக்கு மேல் கோடு கிழிக்க முடியுமென்று நான் நினைக்கவில்லை.

இப்போது எங்களிடம் இரவில் வேலை பார்க்கிற சிறுவர்களை தடை செய்வது சரியன்று...

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை இரவில் வேலை செய்யவிடாமல் தடுப்பதால் பெரும் இடர்பாடு உண்டாகும். தலையாய இடர்பாடு சிறுவர்களுக்கு பதில் ஆட்களுக்கு வேலை கொடுப்பதால் செலவு அதிகரிக்கும் என்பதாகும்...

முழு ஆட்களின் கூடுதலான சக்தியால் ஆதாயம் இல்லை. உலோகம் கனமாக இருக்கும் சில் சந்தர்ப்பங்களில் மட்டும் ஆதாயம் இருக்கும். ஆட்கள் சிறுவர்களைப் போல் பணிந்து நடக்கமாட்டார்கள். தமக்கு கீழே சிறுவர்கள் இல்லாமற் போவதையும் அவ்வளவாக விரும்பமாட்டார்கள்..... 

பழகு தொழிலாளர்களான சிறுவர்களுக்கு அளிக்கிற பயிற்சி அச்சிறுவர்களுக்கு அளிக்கப்படுகிற ஊதியத்தில் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.வயது வந்த ஆட்களின் கூலியில் ஒரு பகுதியை சிறுவர்களின் இரவு நேர வேலையைக் கொண்டு கொடுப்பதற்கு பதில் கையை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும்...

ஆனால் பாதி நேரத்துக்கு இவ்வளவு விலையுயர்ந்த இயந்திர சாதனம் சோம்பிக் கிடப்பதால் இழப்பு ஏற்படும்; இப்போதைய ஏற்பாட்டின்படி நாங்கள் பெற முடிகிற அளவு வேலையைப் பெறுவதற்கு கட்டடங்களையும் இயந்திர தளவாடங்களையும் இரு மடங்காக்க வேண்டியிருக்கும்; இது முதலீட்டை இரு மடங்காக்கிவிடும்...

உலைகளைப் பயன்படுத்துவதால் இதனிலும் அதிகமான இழப்பு ஏற்படும். அவை சூடேறிய நிலையிலேயே வைக்கப்படுவதானால் (இப்போது தொழிலாளர்களது உயிர்ச்சத்து வீணாவதற்குப் பதில்) எரிபொருள் வீணாகும்; இல்லையேல் திரும்பவும் தீ மூட்டி சூடேற்றுவதில் நேர இழப்பு ஏற்படும்...

Sunday, August 4, 2013

பகுதி 3: அத்தியாயம் 9: உபரி..மதிப்பு வீதம்

முன்னீடு செய்யப்படும் மூலதனமான C என்பதால் உற்பத்தி நிகழ் முறையில் உண்டாக்கப்படும் உபரி மதிப்பு, அல்லது வேறு விதமாகச் சொன்னால் மூலதனம்   Cஇனது மதிப்பின் தற்பெருக்கம் முதலில் ஓர் உபரியாக ‍‍... உற்பத்திப் பொருளின் மதிப்பில் அதன் ஆக்கக் கூறுகளின் மதிப்புக்கு மேலுள்ள தொகையாக ... பரிசீலனைக்கு வருகிறது.

மூலதனம் C = உற்பத்திச் சாதனங்களில் செலவாகும் பணத்தொகை c  + உற்பத்திக்காக செலவிடப்படும் v. ( c  என்பது மாறா மூலதனம். v என்பது மாறும் மூலதனம்.) உற்பத்தி நிகழ்முறை முடிவடையும் போது, (c+v)+s என்ற மதிப்புடைய சரக்கு நமக்குக் கிடைக்கிறது. s என்பது உபரி..மதிப்பாகும். ஆரம்ப மூலதனம் இப்போது  C என்பதிலிருந்து C' ஆக மாறியிருக்கிறது. வித்தியாசம்  s ஆகும். 

உற்பத்திப் பொருளின் ஆக்கக் கூறுகளது மதிப்பு முன்னீடு செய்யப்பட்ட மூலதனத்தின் மதிப்புக்குச் சமமாகும் என்பதால், உற்பத்திப் பொருளின் ஆக்கக் கூறுகளது மதிப்புக்கு மேலே உற்பத்திப் பொருளின் மதிப்பிலுள்ள மிகையானது முன்னீடு செய்யப்பட்ட மூலதனத்தின் பெருக்கத்துக்கு அல்லது உற்பத்தி செய்யப்பட்ட உபரி..மதிப்புக்குச் சமமாகும்.

மாறா..மூலதனப் பகுதி தன் மதிப்பில் ஒரு துணுக்கையே உற்பத்திப் பொருளுக்குப் பெயர்ப்பதும், அந்த மதிப்பின் மீதம் அந்த சாதனங்களில் தொடர்ந்து உறைவதும், இந்த மீதமானது மதிப்பை உண்டாக்குவதில் எந்த பங்கும் வகிப்பதில்லை என்பதையும் பார்த்தோம். ஆகவே அதனை ஒதுக்கி வைப்பதாலும், சேர்ப்பதாலும் எந்த வேறுபாடும் வராது.

C' = (c+v) + s. மாறா..மூலதனத்தின் மதிப்பு உற்பத்திப் பொருளில் திரும்ப இடம் பெறுவதோடு சரி. நிகழ் முறையில் மெய்யாகவே படைக்கப்படும் புதிய மதிப்பு, உற்பத்தி செய்யப்படும் மதிப்பு, அல்லது மதிப்பு..உற்பத்தி (value product) என்பதும் உற்பத்திப் பொருளின் மதிப்பும் ஒன்றல்ல; எடுத்த எடுப்பில் தோன்றுவது போல், அது (c+v) + s  அல்ல v+s  என்பதுதான். உற்பத்திச் சாதனங்களே இல்லாமல், உழைப்புச் சக்தியையும் இயற்கையால் வழங்கப்படும் மூலப் பொருட்களையும் மட்டுமே ஈடுபடுத்தி முதலாளி காரியமாற்ற இயலக்கூடிய தொழிற் கிளைகள் இருக்கும் பட்சத்தில் ... உற்பத்தி பொருளுக்கு பெயர்க்க மாறா..மூலதனம் ஏதுமிருக்காது.

உபரி மதிப்பு என்பது v இன் மதிப்பில் ... உழைப்புச் சக்தியாக மாற்றப்படும் மூலதனப் பகுதியின் மதிப்பில் ... ஏற்படும் மாறுபாட்டின் விளைவேதான் என்பதை முன் சொன்னதிலிருந்து அறியலாம். ஆதலால் v+s = v+v' (அதாவது v+v இன் கூடுதல்). மூலதனத்தின் மாறும் பகுதி அதிகரிப்பதின் விளைவாக முன்னீட்டு மூலதனத்தின் மொத்தத் தொகையும் அதிகரிக்கிறது என்ற நிலைமைதான் v மட்டுமே மாறுகிறது என்ற உண்மையையும், அந்த மாறுபாட்டுக்குரிய நிலைமைகளையும் கண்ணிற் படாமல் மறைக்கிறது.

உயிரற்ற உழைப்பின் இடத்துக்கு உயிருள்ள உழைப்பு, தேங்கி நிற்கிற ஒன்றின் இடத்துக்குப் பாய்ந்தோடுகிற ஒன்று, மாறாத ஒன்றின் இடத்துக்கு மாறுகிற ஒன்று வருகிறது. இதன் விளைவு v இன் மறுவுற்பத்தி + v இன் கூடுதல்.

உற்பத்திப் பொருளின் மதிப்பில் திரும்ப இடம் பெற மட்டுமே செய்கிற மாறா மூலதனத்தைப் பூஜ்ய‌மெனக் கொள்வோம். ஆதலால் முன்னீடு செய்யப்படும் மூலதனம்  c+v என்பதிலிருந்து v ஆகக் குறைகிறது. (c+v) +s என்ற உற்பத்திப் பண்ட மதிப்புக்கு பதில் இப்போது (v+s) என்ற‌ மதிப்பு உற்பத்தியாவதாகக் கொள்கிறோம். இது நிகழ்முறையின் போது செலவிடப்பட்ட முழு உழைப்பையும் குறிக்கிறது. s என்ற இந்தத் தொகை உற்பத்தி செய்யப்பட்ட உபரி..மதிப்பின் அறுதியான அளவைத் தெரிவிக்கிறது. உற்பத்திச் செய்யப்பட்ட ஒப்பீட்டு அளவு அல்லது மாறும்..மூலதனத்தின் அதிகரிப்புச் சதவீதம் மாறும்..மூலதனத்துடன் உபரி..மதிப்புக்குள்ள விகிதத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. மாறும்..மூலதனத்தின் மதிப்பில் ஏற்படும் இந்த ஒப்பீட்டு அதிகரிப்பை அல்லது உபரி..மதிப்பின் ஒப்பீட்டுப் பருமனை "உபரி..மதிப்பு வீதம் (rate of surplus value) என்று அழைக்கிறேன்.

வேலை நாளில் உழைப்புச் சக்தியின் மதிப்பு மறுவுற்பத்தி நடைபெறும் பகுதியை "அவசிய" உழைப்பு நேரம் என்றும், அதே நேரத்தில் செலவிடப்படும் உழைப்பை "அவசிய" உழைப்பு (necessary labour) என்றும் அழைக்கிறேன்.

உழைப்பு நிகழ்முறையில் தொழிலாளியின் உழைப்பு அவசிய உழைப்பாயிராத போது அவர் உபரி மதிப்பைப் படைக்கிறார். வேலை நாளின் இந்தப் பகுதிக்கு உபரி..உழைப்பு நேரம் என்றும், அந்த நேரத்தில் செலவிடப்படும் உழைப்புக்கு உபரி..உழைப்பு (surplus value) என்றும் பெயர் சூட்டுகிறேன்.

ஒரு புறம், மாறும்..மூலதனத்தின் மதிப்பும் அம்மூலதனத்தால் வாங்கப்படும் உழைப்புச் சக்தியின் மதிப்பும் சமம் என்பதாலும், இந்த உழைப்புச் சக்தியின் மதிப்பு வேலை..நாளின் அவசியப் பகுதியை நிர்ணயிக்கிறது என்பதாலும், மறு புறம், உபரி மதிப்பு வேலை..நாளின் உபரிப் பகுதியால் நிர்ணயிக்கப்படுகிறது என்பதாலும், உபரி..மதிப்பு மாறும் மூலதனத்தோடு கொண்டுள்ள விகிதமும், உபரி உழைப்பு அவசிய உழைப்போடு கொண்டுள்ள விகிதமும் ஒன்றே என்றாகிறது.

உபரி..மதிப்பின் வீதம் உழைப்புச் சக்தி மீதான மூலதனத்தின் சுரண்டல் கடுமையை   , அதாவது தொழிலாளியை முதலாளி சுரண்டும் கடுமையைத் துல்லியமாக வெளிப்படுத்தும் தெரிவிப்பாகும்.

உபரி..மதிப்பு வீதமானது மூலதனத்தின் மொத்தத் தொகையோடு அல்லாமல் அதன் மாறும் பகுதியோடு உபரி..மதிப்பு கொண்டுள்ள உறவால் நிர்ணயிக்கப்படுவது போலவே, உபரி..உற்பத்தியின் ஒப்பீட்டு அளவும் மொத்த உற்பத்திப் பொருளின் எஞ்சிய பகுதியோடு அல்லாமல், அவசிய உழைப்பு சேர்க்கப்பட்டுள்ள உற்பத்திப் பொருட் பகுதியோடு இந்த உபரி..உற்பத்தி கொண்டுள்ள உறவாலேயே நிர்ணயிக்கப்படுகிறது.

ஒரு மனிதனின் அல்லது நாட்டின் செல்வச் சிறப்பை அளவிட்டுக் காட்டுவது மொத்த உற்பத்தியின் அறுதி அளவு அன்று, உபரி..உற்பத்தியின் ஒப்பீட்டுப் பருமனே என்பது தெளிவு.

பகுதி 3: அத்தியாயம் 8: மாறா..மூலதனமும் மாறும்...மூலதனமும்.

உழைப்பாளி தன் உழைப்பினது இலக்குப் பொருள் மீது குறிப்பிட்ட அளவு கூடுதல் உழைப்பைச் செலவிட்டு -- அந்த உழைப்பின் பிரத்தியேகத் தன்மையும் பயன்பாடும் என்னவாயிருப்பினும் -- அந்த இலக்குப் பொருளுக்குப் புதிய மதிப்பைச் சேர்க்கிறார். மறு புறம் நிகழ்முறையில் பயன்படுத்திக் கொள்ளப்படும் உற்பத்திச் சாதனங்களின் மதிப்புகள் பாதுகாக்கப்பட்டு, உற்பத்திப் பொருளினது மதிப்பின் அடக்கக் கூறுகளாகப் புதுக் கோலம் பூணுகின்றன.

உழைப்பின் இலக்குப் பொருளுக்குப் புதிய மதிப்பைச் சேர்ப்பதும் அதன் முந்தைய மதிப்பைப் பாதுகாப்பதும் ஒரே செயற்பாட்டின் போது உழைப்பாளி ஏக காலத்தில் தோற்றுவிக்கும் இரு வேறு விளைவுகளே என்பதால், விளைவின் இந்த இரட்டைத் தன்மைக்கு அவரது உழைப்பின் இரட்டைத் தன்மையே காரணமாய் கொள்ள முடியும்.

நுகரப்பட்ட உற்பத்திச் சாதனங்களின் மதிப்புகளை உழைப்பாளி பாதுகாப்பது, அல்லது அவற்றை உற்பத்திப் பொருளுக்கு அதன் மதிப்பின் பகுதிகளாகப் பெயர்ப்பது, ஸ்தூலமற்றதாய்க் கொண்ட அவரது கூடுதல் உழைப்பின் மூலமன்று. அந்த உழைப்பின் குறிப்பான பயனுள்ள தன்மையின் மூலமே; உற்பத்தித் திறனுள்ள தனி வடிவத்தின் மூலமே. உழைப்பு உற்பத்திச் சாதனங்களைத் தீண்டுவதன் மூலமே அவற்றை உயிரற்ற நிலையிலிருந்து எழுப்பி, உழைப்பு நிகழ்முறையின் உயிர்த் துடிப்புள்ள காரணிகளாக்கி, அவற்றுடன் இணைந்து புதிய உற்பத்திப் பொருட்களாகிறது.

நூற்பானது ஒரு புறம் பஞ்சு, கதிர் ஆகியவற்றின் மதிப்புகளோடு புதிய மதிப்பைச் சேர்ப்பது ஸ்தூலமற்ற மனித உழைப்புச் சக்தியின் செலவீடாக இருத்தல் என்ற அதன் பொதுத் தன்மையின் மூலமே; நூற்பு என்ற அதே உழைப்பு மறு புறம் உற்பத்திச் சாதனங்களின் மதிப்புகளை உற்பத்திப் பொருளுக்குப் பெயர்ப்பதும் சரி, அவற்றை உற்பத்திப் பொருளில் பாதுகாப்பதும் சரி, ஸ்தூலமான, பயனுள்ள நிகழ்முறையாக இருத்தலென்ற அதன் தனித் தன்மையின் மூலமே. என்வே ஒரே நேரத்தில் இரட்டை விளைவு உண்டாக்கப்படுகிறது.

குறிப்பிட்ட அளவிலான உழைப்பைச் சேர்ப்பதன் மூலம் புதிய மதிப்பு சேர்க்கப்படுகிறது. இப்படிச் சேர்க்கப்பட்ட உழைப்பின் பண்பால், உற்பத்திச் சாதனங்களின் மூல மதிப்புகள் உற்பத்திப் பொருளில் பாதுகாக்கப்படுகின்றன.

முன்னர் 36 மணி நேரத்தில் நூற்ற அதே அளவு பஞ்சை ஏதேனும் புதிய கண்டுபிடிப்பின் பயனாய் நூற்பாளர் இப்போது 6 மணி நேரத்தில் நூற்க முடிவதாகக் கொள்வோம். 6 மணி நேர நூற்பின் மூலம், ஒவ்வொரு இராத்தல் கச்சாப் பொருளுக்கும் நூற்பாளரின் உழைப்பால் சேர்க்கப்படும் புதிய மதிப்பு முன்பிருந்ததில் ஆறில் ஒரு பங்கே என்ற போதிலும், பாதுகாக்கப்பட்டு உற்பத்திப் பொருளுக்கு மாற்றப்படும் கச்சாப் பொருளின் மதிப்பு முன்பிருந்ததைப் போல் ஆறு மடங்கு அதிகமாகும். உழைப்பு ஒரு நிலையில் மதிப்பைப் பாதுகாக்கவும், மறு நிலையில் மதிப்பைப் படைக்கவும் இயலுவதற்குக் காரணமான உழைப்பின் அவ்விரு குணங்களும் அடிப்படையில் வேறுபட்டவை என்பதையே இது காட்டுகிறது.

உற்பத்திச் சாதனங்கள் பயன்-மதிப்பை இழக்கும் போது மதிப்பை இழக்காததற்கான காரணம் என்னவென்றால், அவை உழைப்பு நிகழ்முறையில் தமது பயன்-மதிப்பின் ஆரம்ப வடிவத்தை இழந்த போதிலும் உற்பத்திப் பொருளில் ஒரு புதிய பயன்-மதிப்பின் வடிவத்தை மேற்கொள்ளுகின்றன.

உழைப்பு நிகழ்முறையில் உற்பத்திச் சாதனங்கள் உற்பத்திப் பொருளுக்கு தமது மதிப்பைப் பெயர்ப்பது, தமது பயன்-மதிப்போடு கூடப் பரிவர்த்தனை-மதிப்பையும் இழக்கிற அளவுக்கே என்பது தெளிவாகிறது.

ஒரு நூற்பு இயந்திரம் 10 ஆண்டு காலம் நீடித்தால், அந்த வேலைக் காலத்தில் அதன் மொத்த மதிப்பு 10 ஆண்டு கால உற்பத்திப் பொருட்களுக்கு சன்னம் சன்னமாகப் பெயர்க்கப்படுகிறது.

உற்பத்திச் சாதனங்கள் உழைப்பு நிகழ்முறையின் போது தம் சொந்தப் பயன் மதிப்பின் அழிவால் தாமே இழப்பதை விட அதிக மதிப்பை உற்பத்திப் பொருளுக்குப் பெயர்ப்பதில்லை என்பது தெட்டத் தெளிவாகிறது. இப்படியொரு சாதனம் இழப்பதற்கு மதிப்பேதும் இல்லையென்றால், அதாவது அது மனித உழைப்பின் உற்பத்திப் பொருளாக இல்லையென்றால், உற்பத்திப் பொருளுக்கு அது மதிப்பெதையும் பெயர்ப்பதில்லை. அது பரிவர்த்தனை-மதிப்பைப் படைப்பதற்கு பங்கு செலுத்தாமலே பயன்...மதிப்பைப் படைக்க உதவுகிறது. மனித உதவியில்லாமல் இயற்கையால் வழங்கப்படும் எல்லா உற்பத்திச் சாதனங்களும் இவ்வகையில் அடங்கும்.  நிலம், நீர், காற்று, கனிம நிலையிலுள்ள உலோகங்கள், கன்னிக் காடுகளின் மர வளம் போன்றவற்றை உதாரணமாய்க் கொள்ளலாம்.

உழைப்பு நிகழ்முறையின் காரணிகளில் ஒன்றாகிய ஒர் உற்பத்திச் சாதனம் அந்நிகழ்முறையில் தொடர்ந்து முழுமையாகப் பங்கு பெறுகிற அதே நேரத்தில், மதிப்பைப் படைக்கும் நிகழ்முறைக்குள் பகுதி பகுதியாகவே பங்கு பெறுகிறது. இங்கே இரு நிகழ்முறைகளுக்கும் இடையிலான வேறுபாடு அவற்றின் பொருளாயதக் காரணிகளில் பிரதிபலிக்கிறது; மதிப்பைப் படைக்கும் நிகழ்முறையில் ஒர் ஆக்கக்கூறு என்ற முறையில் பகுதிபகுதியாகவே பங்கு பெறுகிற அதே உற்பத்திச் சாதனம் உழைப்பு நிகழ்முறையில் முழுமையாகப் பங்கு பெறுகிறது என்பதில் பிரதிபலிக்கிறது.

மறுபுறம், மதிப்பைப் படைக்கும் நிகழ்முறையில் முழுமையாகப் பங்கு பெறுகிற உற்பத்திச் சாதனம் உழைப்பு நிகழ்முறையில் சிறிது சிறிதாகவே பங்கு பெறுவதும் உண்டு. பஞ்சை நூலாக நூற்பதில் பயன் படுத்தப்பட்ட ஒவ்வொரு 115 இராத்தல் பஞ்சுக்கும் 15 இராத்தல் கழிவு எனக் கொள்வோம்; 15 இராத்தல் பஞ்சின் பயன்...மதிப்பு மறைந்து போனால்தான் 100 இராத்தல் நூல் நூற்க இயலும். எனவே இந்தப் பஞ்சின் அழிவு நூலின் உற்பத்திக்கு இன்றியமையாதத் தேவையாகும். அது ஒர் அவசிய நிலைமை என்பதால்தான், அந்தப் பஞ்சின் மதிப்பு உற்பத்திப் பொருளுக்குப் பெயர்க்கப்படுகிறது. உழைப்பு நிகழ்முறையிலிருந்து விளைகிற ஒவ்வொரு வகைக் கழிவுக்கும் இது பொருந்தும்--சுயேச்சையான புதிய பயன்-மதிப்புகளின் உற்பத்தியில் ஒரு சாதனமாக அதனை மேற்கொண்டு உபயோகிக்க முடியாத அளவிற்காவது பொருந்தும்.

உழைப்பு நிகழ் முறையில் பங்கு பெறுகிற உற்பத்திச் சாதனம் முன்பிருந்தே தன்னிடமிருப்பதை விட அதிகமான மதிப்பை உற்பத்திப் பொருளுக்குச் சேர்க்க முடியாது. அதன் மதிப்பு நிர்ணயிக்கப்படுவது உற்பத்திச் சாதனமாய் உள்ளே செல்கிற உழைப்பு நிகழ்முறையால் அன்று. உற்பத்திப் பொருளாய் அது வெளியே வருகிற நிகழ்முறையாலேயே.

செயல்படும் உழைப்புச் சக்தி, அதாவது உயிருள்ள உழைப்பு மதிப்பைச் சேர்க்கிற அதே நேரத்தில், மதிப்பை பாதுகாக்கவும் செய்கிற குணத்தைப் பெற்றுள்ளது. இது இயற்கையின் வரப்பிரசாதம். இதனால் தொழிலாளிக்கு இழப்பேதுமில்லை; ஆனால் முதலாளிக்கு நிறைய ஆதாயமுண்டு; எப்படியென்றால் அது அவரது மூலதனத்திற்கு இருக்கும் மதிப்பைக் கேடுறாமல் பாதுகாக்கிறது. தொழில் சுணக்கமின்றி நன்றாய் இருக்கும்வரை, உழைப்பின் இந்த நன்கொடை அவரது கண்ணிற்கு படுவதே இல்லை; அவர் பணம் பண்ணுவதிலேயே குறியாய் இருக்கிறார். உழைப்பு நிகழ்முறையை திடீரெனத் தடைப்படுத்தும் நெருக்கடி அவருக்கு உறைக்கும்படி இதனை உணர்த்துகிறது.

உற்பத்திப் பொருளின் மதிப்பில் உற்பத்திச் சாதனங்களின் மதிப்பு திரும்ப இடம் பெறுகிறதே தவிர, கண்டிப்பாகச் சொன்னால், அந்த மதிப்பு மறுவுற்பத்தியாவதில்லை. உற்பத்தியாவது புதிய பயன் மதிப்பே. பழைய பயன்...மதிப்பு இந்த புதிய பயன்-மதிப்பில் திரும்ப இடம் பெறுகிறது.

உழைப்பு நிகழ்முறையின் அகவயக் காரணியைப் பொறுத்த வரை, செயல்படும் உழைப்புச் சக்தியை பொறுத்த வரை, இப்படிச் சொல்ல முடியாது. உழைப்பாளி தன் உழைப்பு தனிக் குறிகோளுடைய தனி வகையைச் சேர்ந்ததாக இருப்பதன் பயனாய் உற்பத்திச் சாதனங்களின் மதிப்பை பாதுகாத்து உற்பத்திப் பெயர்க்கிற அதே நேரத்தில், உழைப்பென்னும் செயலாலேயே கணம் தோறும் கூடுதலான அல்லது புதிய மதிப்பைப் படைக்கிறார்.

உற்பத்திச் சாதனங்கள், அதாவது கச்சாப் பொருள், துணைப் பொருள், உழைப்புச் சாதனங்கள் ஆகியவை மூலதனத்தின் எந்தப் பகுதியைக் குறிக்கின்றனவோ அந்தப் பகுதி உற்பத்தி நிகழ்முறையில் அளவு வழியிலான மதிப்பு மாறுபாடு எதையும் அடைவதில்லை. எனவே, நான் அதனை முலதனத்தின் மாறாப் பகுதி, அல்லது மாறா மூலதனம் என்று அழைக்கிறேன்.

உழைப்பு நிகழ்முறையில் உழைப்புச் சக்தி குறிக்கிற மூலதனப் பகுதியின் மதிப்பு மாறுபாடு அடையவே செய்கிறது. அது தன் சொந்த மதிப்பின் சமதையை மறுவுற்பத்தி செய்வது மட்டுமல்லாமல் ஒரு மிகை அல்லது உபரி..மதிப்பையும் உற்பத்தி செய்கிறது; இந்த மிகை அல்லது உபரி..மதிப்பு மாறுபடக் கூடியது. நான் அதை மூலதனத்தின் மாறும் பகுதி அல்லது சுருக்கமாக மாறும் மூலதனம் என்று அழைக்கிறேன்.

கச்சாப் பொருள், இயந்திர சாதனம் போன்றவற்றின் மதிப்பு மாறலாம்; ஆதலால் அவற்றிலிருந்து உற்பத்திப் பொருளுக்குப் பெயர்க்கப்படும் மதிப்பு பகுதியும் மாறலாம். ஆனால் மதிப்பு மாற்றம் உருவாவது கச்சாப் பொருளும் இயந்திரமும் உற்பத்தி சாதனமாக செயல்படுகிற நிகழ்முறைக்கு வெளியேதான். இந்த நிகழ்முறையில் ஈடுபடுகிற கச்சாப் பொருளும் இயந்திரமும் நிகழ் முறையைச்  சாராத நிலையில் தனக்கிருப்பதை விடக் கூடுதலான மதிப்பை உற்பத்திப் பொருளுக்கு பெயர்க்க முடியாது.

உற்பத்தி சாதனங்கள் உழைப்பு நிகழ்முறையில் பங்கு வகிக்க தொடங்கிய பின்னரும் கூட அவற்றின் மதிப்பில் ஏற்படும் மாற்றம் மாறா-மூலதனம் என்ற அவற்றின் தன்மையை மாற்றிவிடுவதில்லை.

மாறும்-மூலதனத்துடனான மாறா-மூலதனத்தின் விகிதச்சாரத்தில் ஏற்படும் மாற்றமும் மூலதனத்தின் இந்த இருவகைகளுக்கும் உரிய அதனதன் பணிகளை பாதிப்பதில்லை. உற்பத்திச் சாதனங்களின் மொத்த மதிப்பு குறிக்கிற மாறா-மூலதனத்தில் பிரம்மாண்டமான அதிகரிப்பும், அதே நேரத்தில் உழைப்புச் சக்தியில் முதலீடு செய்யப்படும் மாறும்-மூலதனத்தில் பெரும் குறைப்பும் நிகழும்போதும் இரண்டுக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடு இதனால் சிறிதும் பாதிக்கப்படுவதில்லை.

பகுதி 3: அத்தியாயம் 7: உழைப்பு நிகழ் முறையும் உபரி..மதிப்பின் உற்பத்தி நிகழ்முறையும். பிரிவு 2: உபரி..மதிப்பின் உற்பத்தி

பயன் மதிப்புகள் பரிவர்த்தனை..மதிப்பின் பொருளாயத ஆதாரமாக, அதன் சேமிப்பகங்களாக இருக்கிற காரணத்தாலும், இருக்கிற அளவிலுமே அவற்றை முதலாளிகள் உற்பத்தி செய்கின்றனர்.  

முதலாளிகள் உற்பத்தி செய்ய நினைப்பது பயன் மதிப்பு மட்டுமன்று, சரக்கும் கூட; பயன் மதிப்பு மட்டுமன்று, மதிப்பும் கூட; மதிப்பு மட்டுமன்று, அதே போன்று உபரி மதிப்பும் கூட.

சரக்குகள் எப்படி ஒருங்கே பயன்..மதிப்புகளாகவும், மதிப்புகளாகவும் இருக்கின்றனவோ, அதே போல் அவற்றை உற்பத்தி செய்யும் நிகழ்முறையும் ஒருங்கே உழைப்பு நிகழ்முறையாகவும், மதிப்பைப் படைக்கும் நிகழ்முறையாகவும் இருத்தல் வேண்டும்.

ஒவ்வொரு சரக்கின் மதிப்பும் அதில் செலவிடப்பட் டு பொருள் வடிவாக்கப்பட்டுள்ள உழைப்பின் அளவால், குறிப்பிட்ட சமூக நிலைமகளில் அதன் உற்பத்திக்கு அவசியமான வேலை நேரத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.  

இந்த உற்பத்திப் பண்டம் 10 ராத்தல் நூல் என்று வைத்துக் கொள்வோம்; நூல் நூற்பதற்குக் கச்சாப் பொருள் 10 ராத்தல் பஞ்சு தேவை.  நமது முதலாளி அதனை 10 ஷில்லிங் என்ற அதன் முழு மதிப்புக்கு வாங்கியிருப்பதாகக் கொள்வோம். கதிரின் தேய்மானம் 2 ஷில்லிங் மதிப்புக்குச் சமம் என்றும் கொள்வோம். கதிர் இப்போதக்குக் கதிராக மட்டுமன்றி, எல்லா உழைப்புச் சாதன்ங்களுக்கும் பிரதிநிதியாகவும் இருப்பதாகக் கொள்ளலாம். ஆக பன்னிரண்டு ஷில்லிங் குறிக்கிற தங்கத்தின் அளவை உற்பத்தி செய்ய 24 மணி நேர உழைப்பு அல்லது இரு வேலை..நாட்கள் அவசியமானால், ஆரம்பத்திலேயே நூலில் இரு நாள் உழைப்பு சேர்க்கப்பட்டுள்ளது என்றாகிறது.

தங்கத்தில் மோகம் கொண்டுள்ள முதலாளி எஃகுக் கதிருக்கு பதில் தங்கக் கதிரைப் பயன்படுத்தினாலும் எஃகு கதிரை உற்பத்தி  செய்வதற்கு தேவையான உழைப்பே நூலின் மதிப்பை நிர்ணயிக்கும்.  ஏனெனில் குறிப்பிட்ட அச்சமூக நிலைமைகளில் அவசியமாயிருப்பது அவ்வளவுதான்.

இங்கே நூற்பாளரின் உழைப்பு மதிப்பை படைப்பது, அதாவது மதிப்பின் தோற்றுவாயாக இருப்பது என்ற அளவில் மட்டும் அவ்வுழைப்பை நோக்குமிடத்து, அது பீரங்கி செய்பவரின் உழைப்பிலிருந்து எவ்விதத்திலும் வேறுபடுவதில்லை; அல்லது உற்பத்திச் சாதனங்களில் சேர்க்கப்பட்டுள்ள பருத்தித் தோட்டக்காரர், கதிர் தயாரிப்பவர் ஆகியோரின் உழைப்பிலிருந்தும் எவ்விதத்திலும் வேறுபடுவதில்லை. இந்த முழுதொத்த தன்மையினால்தான் பருத்தி பயிரிடுதலும், கதிர் தயாரித்தலும், நூல் நூற்றலும் ஒரே முழுமையின், அதாவது நூலினது மதிப்பின் அங்கங்களாக அமைய வல்லவை ஆகின்றன. இங்கே உழைப்பின் பண்பு, இயல்பு, குறிப்பான தன்மை ஆகியவை நம் கவலைக்குரியவையல்ல. அதன் அளவு மட்டுமே கவலைக்குரியது.  நூற்பு சாமானியமான, தேர்ச்சியற்ற உழைப்பாகும் குறிப்பிட்ட சமூக நிலையின் சராசரி உழைப்பாகும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் நாம் மேற் செல்கிறோம். இதற்கு மாறான முறையில் அனுமானித்துக் கொண்டாலும் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.

பஞ்சை நூலாக மாற்றும் வேலையில் குறிப்பிட்ட சமூக நிலைமைகளில் அவசியமானதை விட அதிக நேரம் செலவாகாமல் இருப்பது நாம் இப்போது பரிசீலித்துக் கொண்டிருக்கும் நிகழ் முறையில் அதிமுக்கியத்துவம் உடையதாகும்.

இப்போது கச்சாப் பொருள் குறிப்பிட்ட அளவிலான உழைப்பைக் கிரகிக்கும் பொருளாகவே பயன்படுகிறது. இந்தக் கிரகிப்பின் மூலம் அது உண்மையில் நூலாக மாற்றப்படுகிறது; ஏனெனில் அது நூற்கப்படுகிறது, நூற்பின் வடிவில் உழைப்புச் சக்தி அதனோடு சேர்க்கப்படுகிறது.  10 ராத்தல் நூல் 6 மணி நேர உழைப்பின் கிரகிப்பைத் தெரிவிக்கிறது.

10 ராத்தல் நூல் என்ற உற்பத்திப் பொருளின் மொத்த மதிப்பை இப்போது பரிசீலிப்போம். அதில் இரண்டரை நாள் உழைப்பு உருக்கொண்டுள்ளது;  இதில் இரண்டு நாள் உழைப்பு பஞ்சிலும் தேய்ந்து போன கதிரின் சாரப் பொருளிலும் அடங்கியிருந்தது. அரை நாள் உழைப்பு நூற்கும் நிகழ்முறையின் போது கிரகிக்கப்பட்டது.  இந்த இரண்டரை நாள் உழைப்பை பதினைந்து ஷில்லிங் மதிப்புள்ள பொற்காசும் குறிக்கிறது. எனவே 15 ஷில்லிங் என்பது 10 ராத்தல் நூலுக்கு தக்க விலையாகும். நமது முதலாளி திகைப்படைகிறார். முன்னீடு செய்யப்பட்ட மதிப்பு பெருகவில்லை; உபரி..மதிப்பேதும் ஆக்கப்படவில்லை; ஆதலால் பணம் மூலதனமாக்கப்படவில்லை.

விவகாரத்தை இன்னும் நெருங்கிச் சென்று ஆராய்வோம்.  ஒரு நாள் உழப்புச் சக்தியின் மதிப்பு 3 ஷில்லிங் ஆகிறது.  அதாவது உழைப்புச் சக்தியின் உற்பத்திக்கு அன்றாடம் தேவைப்படும் வாழ்வுச் சாதனங்களுக்கு அரை நாள் உழைப்பு செலவாகிறது. ஆனால் உழைப்புச் சக்தியில் உருக்கொண்டுள்ள கடந்த கால உழைப்பும், அது செயல்பட வைக்கக் கூடிய உயிருள்ள உழைப்பும்.. அதாவது உழைப்புச் சக்தியைப் பராமரிப்பதற்காகும் அன்றாடச் செலவும், வேலையில் அன்றாடம் அது செலவாவதும் இரு வேறு சங்கதிகள் ஆகும். முன்னது உழைப்புச் சக்தியின் பரிவர்த்தனை மதிப்பை நிர்ணயிக்கிறது; பின்னது அதன் பயன்-மதிப்பு ஆகும். 24 மணி நேரத்திற்கு உழைப்பாளியை உயிர் வாழ வைப்பதற்கு அரை நாள் உழைப்பு அவசியம் என்றாலும், இவ்வுண்மை முழு நாளும் அவ்வுழைப்பாளி வேலை செய்வதற்குத் தடையாவதில்லை. ஆகவே உழைப்புச் சக்தியின் மதிப்பும், அந்த உழைப்புச் சக்தி உழைப்பு நிகழ்முறையில் உண்டாக்குகிற மதிப்பும் இரு வேறு பருமன்கள் ஆகும்; இரு மதிப்புகளுக்குமுள்ள இந்த வேறுபாட்டை மனதிற் கொண்டே முதலாளி உழைப்புச் சக்தியை வாங்கினார். உழைப்புச் சக்தியின் பயனுள்ள பண்புகள் நமது முதலாளிக்கு அவசியமானவையே. உழைப்புச் சக்தியாகிய இந்தச் சரக்கு மதிப்பின் தோற்றுவாயாக மட்டுமல்லாமல், தனது மதிப்பை விட அதிகமான மதிப்பின் தோற்றுவாயாகவும் இருக்கிற பிரத்தியேக பயன்..மதிப்பை உடையதாகும என்பதுதான் உண்மையில் அவருக்கு தீர்மானகரமாயிருந்தது.

எனவே 6 மணி நேர நிகழ்முறையின்போது 10 ராத்தல் பஞ்சு 6 மணினேர உழைப்பை கிரகித்து 10 ராத்தல் நூல் ஆனது. இபோது 20 ராத்தல் பஞ்சு 12 மணி நேர உழப்பைக் கிரகித்து 20 ராத்தல் நூலாக மாற்றுகிறது.  ஆனால் நிகழ்முறையில் நுழைந்த சரக்குகளது மதிப்புகளின் மொத்தம் 27 ஷில்லிங் ஆகிறது. நூலின் மதிப்பு 30 ஷில்லிங்.  ஆகவே உற்பத்திப் பொருளின் மதிப்பு அதன் உறபத்திக்காக முன்னீடு செய்யப்பட்ட மதிப்பை விட 1/9 பங்கு அதிகமாகும்;27 ஷில்லிங் 30 ஷில்லிங்காகிவிட்டது. 3 ஷில்லிங் உபரி..மதிப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது; பணம் மூலதனமாக உருமாறிவிட்டது.

மூலதனமாக மாறுகிற இந்த உருமாற்றம் சுற்றோட்டத்துறைக்கு உள்ளேயும் வெளியேயுமாக நடைபெறுகிறது. உழைப்புச் சக்தியை வாங்க வேண்டிய நிபந்தனைக்கு உட்படுவதால், இந்த மாற்றம் சுற்றோட்டத் துறையினுள் நடைபெறுவதாகிறது; என்றாலும் உள்ளே நடைபெறுவதெல்லாம் உபரி..மதிப்பின் உற்பத்தி நிகழ்முறை முற்றிலும் பொருளுற்பத்திக்கு வழியமைப்பது மட்டுமே. உபரி-மதிப்பின் உற்பத்தி நிகழ்முறை முற்றிலும் பொருளுற்பத்தித் துறையிலேயே நிகழ்வது என்பதால் இந்த உருமாற்றம் சுற்றோட்டத் துறைக்கு வெளியே நடைபெறுவதாகிறது.

புதிய உற்பத்திப் பொருளின் பொருட்கூறுகளாகவும், உழைப்பு நிகழ் முறையில் காரணிகளாகவும் பயன்படுகிற சரக்குகளாக தன் பணத்தை மாற்றுவதன் மூலம், முதலாளி அதே நேரத்தில் மதிப்பை மூலதனமாக மாற்றுகிறார். அதாவது கடந்த காலத்துக்கிரியதும், பொருள்வடிவாக்கப்பட்டதும், உயிரற்றதுமான உழைப்பை மூலதனமாக, மதிப்பையே கர்ப்பமாய்க் கொண்ட மதிப்பாக, கருவுற்று இனம் பெருக்கும் உயிருள்ள பூதமாக மாற்றுகிறார். 

மதிப்பு உற்பத்தியை குறிப்பிட்ட நிலைக்கு மேல் நீடிப்பதே உபரி-மதிப்பின் ஆக்கம் என்பதைப் பார்க்கிறோம். உழைப்புச் சக்திக்கு முதலாளி விலையாகக் கொடுக்கும் மதிப்புக்கு பதிலாக சரி நிகரான சமதை வரப்பெறும் நிலைக்கப்பால் நிகழ்முறையை நீடிக்கச் செய்யாவிட்டால், அது மதிப்பை உற்பத்தி செய்யும் நிகழ்முறை மட்டுமேயாகும்; மாறாக, அதனை அந்த நிலைக்கப்பால் நீடிக்கச் செய்தால் அது உபரி..மதிப்பைப் படைக்கும் நிகழ்முறை ஆகி விடுகிறது.

மதிப்பைப் படைக்கும் நிகழ்முறை ஒவ்வொன்றிலும் தேர்ச்சி பெற்ற உழைப்பை சராசரிச் சமுதாய உழைப்பாக, உதாரணமாய் தேர்ச்சி பெற்ற ஒரு நாள் உழைப்பை தேர்ச்சியற்ற ஆறு நாள் உழைப்பாகப் பெயர்ப்பது தவிர்க்க முடியாததாகும்.



பகுதி 3: அறுதி உபரி..மதிப்பின் உற்பத்தி. அத்தியாயம்: 7 உழைப்பு நிகழ்முறையும் உபரி..மதிப்பின் உற்பத்தி நிகழ்முறையும். பிரிவு 1: உழைப்பு நிகழ்முறை அல்லது பயன்..மதிப்புகளின் உற்பத்தி

முதலாளி உழைப்புச் சக்தியை வாங்குவது அதனை பயன்படுத்திக்கொள்வதற்காகவே; பயன்படுத்தப்படும் உழைப்புச் சக்தி உழைப்பே ஆகும். உழைப்புச் சக்தியை வாங்குபவர், விற்பவரை வேலை செய்ய வைப்பதன் முலம் அதனை நுகர்கிறார்.

பயன்..மதிப்புகள் அல்லது சரக்கின் உற்பத்தி முதலாளியின் கட்டுப்பாட்டிலும், அவர் சார்பாகவும் நடத்தப்படுகிறது என்ற உண்மை, அந்த உற்பத்தியின் பொதுவான தன்மையை மாற்றி விடுவதில்லை.

உழைப்பு என்பது, முதலாவதாக, மனிதனும் இயற்கையும் பங்கு பெறுகிற, மனிதன் தனக்கும் இயற்கைக்கும் இடையிலான பொருளாயதப் பிரதிச் செயல்களைத் தானாகவே தொடங்கி, முறைப்படுத்தி கட்டுப்படுத்துகிற நிகழ்முறயாகும்.

தன்னுள் உறங்கும் சக்திகளை வளரச் செய்து, அவற்றை அவன் தனது ஆட்சிக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுமாறு கட்டாயப்படுத்துகிறான்.

மனித உழைப்பு இன்னமும் உள்ளுணர்ச்சியின் பாற்பட்டதாய் அதன் ஆரம்பக் கட்டத்திலிருந்த அந்த நிலையிலிருந்து அளப்பரிய கால இடைவெளியால் பிரிக்கப்பட்டுள்ளது.

உழைப்பு நிகழ்முறை ஒவ்வொன்றின் முடிவிலும் கிடைக்கும் விளைவு அந்நிகழ்முறையின் தொடக்கத்திலேயே உழைப்பாளியின் மனத்தில் இருந்ததுதான். அவர் தாம் வேலை செய்கிற மூலப் பொருளில் வடிவ மாற்றத்தை உண்டாக்குவதோடு தமது குறிக்கோளையும் நிறைவேற்றிக் கொள்கிறார். இக்குறிக்கோள் அவரது வேலை முறையின் நெறியை நிர்ணயிக்கிறது.

உழைப்பு நிகழ்முறையின் மூல காரணிகள் வருமாறு: 1. மனிதனின் நேரடிச் செயற்பாடு, அதாவது வேலை; 2. அந்த வேலைக்கு உள்ளாகிற  இலக்குப் பொருள்; 3. அதற்கான சாதனங்கள்.

கன்னி நிலம் (பொருளாதார வழியில் பேசுவதானால் இதில் நீரும் அடங்கும்) அப்படியே பயன்படுத்தத் தக்க தயார் நிலையில் அவசிய பண்டங்கள் அல்லது வாழ்வுச் சாதனங்களை மனிதனுக்கு வழங்குகிறது. அது மனிதனைச் சாராமல் இயற்கையாகவே இருப்பது; மனித உழைப்பின் சர்வப்பொது இலக்குப் பொருளாய் அமைவது. உழைப்பு சில பொருட்களை சுற்றுப்புறத்துடனான நேரடித் தொடர்பிலிருந்து பிரித்தெடுக்க மட்டுமே செய்கிறது. அந்தப் பொருட்களெல்லாம் உழைப்பின் இலக்குப் பொருட்கள். இயற்கை தானாகவே வழங்குபவை.

உழைப்பின் இலக்குப் பொருள் முந்தைய உழைப்பின் மூலம் வடிக்கட்டப்பட்டதென்று சொல்லக் கூடுமானால் அதைக் கச்சாப் பொருள் என்று அழைக்கிறோம். கச்சாப் பொருள் அனைத்தும் உழைப்பின் இலக்குப் பொருளாகும்; ஆனால் உழைப்பின் இலக்குப் பொருள் ஒவ்வொன்றும் கச்சாப் பொருள் அன்று. உழைப்பைக் கொண்டு சிறிது மாற்றத்திற்கு உட்பட்ட பின்னரே அது கச்சாப் பொருளாக முடியும்.

உழைப்புச் சாதனம் என்பது உழைப்பாளி தனக்கும் தன் உழைப்பின் இலக்குப் பொருளுக்கும் இடையே வைப்பதும், அவரது செயற்பாட்டின் கடத்தியாகப் பயன்படுவதுமான பொருள். அல்லது பொருட் தொகுதி ஆகும்.  அவர் சில பொருட்களின் யாந்திரிக, பெளதிக, இரசாயனப் பண்புகளைப் பயன்படுத்தி பிற பொருட்களைத் தமது நோக்கங்களுக்கு சேவகம் புரியச் செய்கிறார். பழங்கள் போன்ற தயார் நிலையிலுள்ள வாழ்வுச் சாதனங்களை சேகரிப்பதில் மனிதனின் கை கால்களே உழைப்புச் சாதனங்களாகப் பயன்படுகின்றன. பூமியே ஒரு உழைப்புச் சாதனம்தான். பழக்கப்பட்ட மிருகங்கள், திருத்திச் செப்பனிட்ட கற்கள், மரம், எலும்புகள் உழைப்புச் சாதனங்களாக முக்கிய பங்கு வகிக்கின்றன. உழைப்புச் சாத்னங்களின் உபயோகமும் புனைவும் மனித உழைப்பு நிகழ்முறைக்கே உரித்தான தனிச் சிறப்புகளாகும். எனவே கருவி செய்யும் மிருகம் என்று மனிதனுக்கு இலக்கணம் வகுக்கிறார் பிராங்க்ளின்.

உழைப்பு நிகழ் முறையை நடத்துவதற்கு அவசியமான எல்லா பொருட்களையும் உழைப்புச் சாதனம் என்ற வகையில் சேர்த்துக் கொள்ளலாம்.  நேரடியாக உழைப்பு நிகழ் முறையில் நுழையாவிட்டாலும் இவையின்றி அது நடை பெறவே முடியாது, அல்லது பகுதியளவே நடை பெற முடியும். பூமி இவ்வகைப்பட்ட சர்வ பொது சாதனம். ஏனெனில் உழைப்பாளி நிற்பதற்கு ஓர் இடத்தையும் அவரது செயற்பாடு ஈடுபடுவதற்கு ஒர் களத்தையும் அது வழங்குகிறது. முந்தைய உழைப்பின் பலனாய் அமைந்து, இவ்வகை உழைப்புச் சாதனங்களாகவும் இருப்பவற்றில் பட்டறைகள், கால்வாய்கள், சாலைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

உழைப்பு அதன் இலக்குப் பொருளுடன் இணைகிறது. உழைப்பு பொருள் வடிவம் ஆகிறது; இலக்குப் பொருள் உருமாறுகிறது. முன்பு உழைப்பாளியிடம் இயங்குவதாய் இருந்தது இப்போது உற்பத்திப் பொருளில் இயங்கா நிலைப் பண்பாகிறது.

உழைப்பு நிகழ்முறை முழுவதையும் அதன் பலனாகிய உற்பத்திப் பொருளின் கோணத்திலிருந்து ஆராய்ந்தால், உழைப்புச் சாதனங்கள், உழைப்பின் இலக்குப் பொருள் இரண்டுமே உற்பத்திச் சாதனங்கள் ஆகும் என்பதும், அந்த உழைப்பு திறனுடை உழைப்பு ஆகும் என்பதும் தெளிவாகும்.

உழைப்புக்கான மூலப் பொருள் நேரடியாக இயற்கையால் வழங்கப்படும் தொழில்களான சுரங்கம் தோண்டுதல், வேட்டை, மீன் பிடித்தல், வேளாண்மை (கன்னி நிலத்தை கொத்துவது என்ற வரம்புக்குள் அடங்குவது) போன்ற எடு பொருள் தொழில்களை விதி விலக்காகக் கொண்டால், எல்லாத் தொழிற் கிளைகளும் முன்பே உழைப்பின் மூலம் வடித்தெடுக்கப்பட்ட பொடுட்களையே, முன்பே உழைப்பின் உற்பத்திப் பொருட்களாயுள்ள கச்சாப்பொருளையே கையாளுகிறது.

மிகப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உழைப்புச் சாதனங்கள் மிகவும் மேலோட்டமாகப் பார்ப்பவருக்கும் கூட கடந்து போன சகாப்தங்களின் உழைப்பினது தடயங்களைக் காட்டுகின்றன.

கச்சாப் பொருள் உற்பத்திப் பொருளின் பிரதான உட்பொருளாகவும் இருக்கலாம். அல்லது துணைப்பொருளாக மட்டும் அதன் ஆக்கத்தில் சேருவதாகவும் இருக்கலாம். துணைப் பொருள் உழைப்புச் சாதனங்களால் உட்கொள்ளப்படலாம்.

ஆக, ஒரு பயன்..மதிப்பைக் கச்சாப் பொருளாய் கொள்வதா, உழைப்புச் சாதனமாகக கொள்வதா, உற்பத்திப் பொருளாகக் கொள்வதா என்பது உழைப்பு நிகழ் முறையில் அது ஆற்றுகிற பணியாலேயே, அங்கு அது வகிக்கிற இடத்தாலேயே நிர்ணயிக்கப்படுகிறது என்பதைப் பார்க்கிறோம்.  இந்த பணி அல்லது இடம் மாறும்போது அதன் தன்மையும் மாறுபடுகிறது.

உழைப்பு அதன் பொருளாயதக் காரணிகளை, அதாவது அதன் இலக்குப் பொருளையும் அதன் சாதனங்களையும் உபயோகித்துக்கொள்கிறது, அவற்றை நுகர்கிறது; ஆகவே அது ஒரு நுகர்வு நிகழ் முறையாகும்.  இப்படி திறனுடை நுகர்வு சொந்த நுகர்விலிருந்து எப்படி வேறுபடுத்திக் காட்டப்படுகிறது என்றால், பின்னது உற்பத்திப் பொருட்களை உயிருள்ள தனி மனிதருக்கான வாழ்வுச் சாதனங்களாக உபயோகித்துக் கொள்கிறது.  முன்னது உழைப்பை, அதாவது உயிருள்ள தனி ஆளின் உழைப்புச் சக்தியைச் செயல்பட வைக்கும் ஒரே சாதனம் என்ற முறையில் உற்பத்திப் பொருட்களை உபயோகித்துக் கொள்கிறது.  ஆகவே நுகர்வாளரே சொந்த நுகர்வின் பலன்.  நுகர்வாளர் அல்ல, உற்பத்திப் பண்டமே திறனுடை நுகர்வின் பலன்.

கூழின் சுவை கேப்பையைப் பயிரிட்டது யார் என்று தெரிவிப்பதில்லை. அதே போல், இந்த சாமானிய உழைப்பு நிகழ் முறையும் அது எத்தகைய சமூக நிலைமைகளில் நடைபெறுகிறது என்பதைத் தானாகவே தெரிவிப்பதில்லை.

தொழிலாளி தனக்காக உழைப்பதற்குப் பதில் முதலாளிக்காக உழைக்கிறார் என்ற உண்மை உழைப்பு நிகழ்முறையின் பொதுவான தன்மையை மாற்றிவிடுவதில்லை என்பது தெளிவு.

உழைப்பை மூலதனத்துக்குக் கீழ்படுத்டுவதன் மூலம் உற்பத்தியின் வினைமுறைகளில் மாற்றங்கள் செய்தல் பிற்காலத்திலேயே சாத்தியம்.

உழைப்பு நிகழ் முறையை முதலாளி உழைப்புச் சக்தியை நுகருகிற நிகழ்முறையாக மாற்றிவிடும்போது, உழைப்பாளி முதலாளியின் கண்காணிப்பில் வேலை செய்கிறார். முதலாளி கருத்துடன் கவனம் செலுத்தி வேலை சரியானபடி நடைபெறுமாறு செய்கிறார். கச்சாப் பொருள் வீண் விரயமும், கருவிகளில் வேலைக்கு அவசியமானதை விடக் கூடுதலான தேய்மானம் ஏற்படாதபடி உற்பத்திச் சாதனங்களை மதி நுட்பத்துடன் பயன்படுத்துமாறு செய்கிறார்.

இரண்டாவதாக உற்பத்திப் பொருள் முதலாளிக்குரிய சொத்தாகுமே தவிர, அதன் நேரடி உற்பத்தியாளராகிய உழைப்பாளருக்குரியதன்று .

பகுதி 2: அத்தியாயம் 6: உழைப்புச் சக்தியை வாங்குவதும் விற்பதும்

மூலதனமாக மாற்றப்படவுள்ள பணத்தின் மதிப்பில் மாற்றம் ஏற்படுகிறது; ஆனால் இந்த மதிப்பு மாற்றம் அந்தப் பணத்தினாலேயே ஏற்படுவதாக இருக்க முடியாது.

அது போலவே சுற்றோட்டத்தின் இரண்டாவது செயலான சரக்கின் மறுவிற்றலிலும் அது தோற்றமெடுக்க முடியாது

எனவே, மாற்றம் நடைபெற வேண்டியது ப .. ச என்ற முதற் செயலின் மூலம் வாங்கப்படுகிற சரக்கிலேயே தவிர, அதன் மதிப்பில் அன்று.

எனவே மாற்றம் சரக்கின் பயன்..மதிப்பிலேயே, அதாவது அதன் நுகர்வில் தோற்றமெடுக்கிறது. அப்படி ஒரு சரக்கு சுற்றோட்டத் துறைக்குள் சந்தையில் இருக்க வேண்டும். அந்த சரக்கின் பயன்..மதிப்பு மதிப்பின் தோற்றுவாயாக விளங்கும் சிறப்பியல்புடையதாக இருக்க வேண்டும்; அதன் நுகர்வென்னும் செயலே உழைப்பின் பொருளாக்கமாகவும், ஆதலால் மதிப்பின் உருவாக்கமாகவும் பொருளாக்கமாகவும் இருக்க வேண்டும். பணத்தை வைத்திருப்போர் இத்தகைய ஒரு தனிவகைச் சரக்கு  உழைக்கும் திறன் அல்லது உழைப்புச் சக்தியின் உருவில் சந்தையில் இருக்கக் காண்கிறார்.

உழைப்புச் சக்தியை பெற்றிருப்போர் அந்த உழைப்புச் சக்தியை ஒரு சரக்காக விற்பனைக்கு முன் வைக்கவோ விற்கவோ செய்தால்தான் உழைப்புச் சக்தி ஒரு சரக்காக சந்தைக்கு வர முடியும். அவர் இதைச் செய்யவேண்டுமானால், அதை தன் இஷ்டத்துக்குப் பயன்படுத்தும் நிலையில் இருக்க வேண்டும், தன் உழைக்கும் திறனின், அதாவது தன் சரீரத்தின் வில்லங்கமற்ற உடைமையாளராக இருக்க வேண்டும். திட்டமான காலத்துக்கு மட்டுமே உழைப்புச் சக்தியின் உடைமையாளர் அதை விற்க வேண்டுமென்பது அவசியமாகிறது.

அந்த உழைப்பாளி உழைப்புச் சக்தியை ஒரு சரக்காக விலைக்கு கொடுக்கும் கட்டாயத்துக்கு ஆளாக வேண்டும்.

சுதந்திர மனிதர் என்ற விதத்தில் தன் உழைப்புச் சக்தியை தன் சொந்தச் சரக்காக விற்கக்கூடிய அவர், மறுபுறம் விற்பதற்கு வேறு சரக்கேதும் இல்லாதவரும் தன் உழைப்புச் சக்தியை ஈடேற்றிக் கொள்வதற்கு அவசியமான எதுவுமே இல்லாதவரும் ஆவார் என்ற விதத்தில் அந்த உழைப்பாளியை சுதந்திர‌ உழைப்பாளி என்கிறோம்.

இயற்கை ஒரு பக்கத்தில் பணம் அல்லது சரக்குகளின் உடைமையாளர்களையும் மறு பக்கத்தில் தம் சொந்த உழைப்புச் சக்தியை தவிர வேறு ஏதும் இல்லாதவர்களையும் படைப்பதில்லை. அது கடந்த கால வரலாற்று வளர்ச்சியின் விளைவு, பல பொருளாதார புரட்சிகளின் பலன் என்பது தெளிவு

மூலதனம் இருப்பதற்கு பணம், சரக்குகள் இவற்றின் சுற்றோட்டம் மட்டுமே எவ்விதத்தும் போதுமான வரலாறு நிலைமைகள் ஆவதில்லை. உற்பத்திச் சாதனங்கள், வாழ்வுச் சாதனங்கள் ஆகியவற்றின் உடைமையாளர் உழைப்புச் சக்தியை விற்கிற உழைப்பாளியைச் சந்தையில் சந்திக்கும் போதே மூலதனம் உதித்தெழமுடியும். இந்த ஒரு வரலாற்று நிலைமையில் ஒரு உலகின் வரலாறே அடங்கியுள்ளது. எனவே மூலதனத்தின் உதயம் சமுதாய பொருளுற்பத்தி நிகழ் முறையில் ஒரு புதிய சகாப்தத்தையே பறைசாற்றுகிறது.

ஒவ்வொரு சரக்கின் மதிப்பையும் போலவே, உழைப்புச் சக்தியின் மதிப்பும் இந்தத் தனிவகைப் பண்டத்தின் உற்பத்திக்கும், ஆகவே மறுவுற்பத்திக்கும் கூட அவசியமான உழைப்பு நேரத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.

உழைப்புச் சக்தியின் மதிப்பு என்பது உழைப்பாளியின் பராமரிப்புக்கு அவசியமான வாழ்வுச் சாதனங்களின் மதிப்பே. உழைப்புச் சக்தியின் உற்பத்திக்கு அவசியமான வாழ்வுச் சாதனங்களின் மொத்த அளவில் உழைப்பாளியின் பதிலிகளுக்கு, அதாவது அவரது குழந்தைகளுக்கு அவசியமான வாழ்வுச் சாதனங்களும் அடங்கியிருத்தல் வேண்டும்.

மனித உயிரமைப்பு ஒரு குறிப்பிட்ட தொழிற் கிளையில் தேர்ச்சியும் கைத்திறனும் பெற்று தனி வகை உழைப்புச் சக்தியாகும்படி  அதனை திருத்தியுமைக்கும் பொருட்டு, தனிவகைக் கல்வி அல்லது பயிற்சி தேவைப்படுகிறது. இதற்கு குறிப்பிட்ட அளவு சரக்குகளாலாகிய ஒரு சமதை செலவாகிறது. இந்த கல்விக்கு ஆகும் செலவுகள் உழைப்புச் சக்தியின் உற்பத்திக்காகச் செலவிடப்படும் மொத்த மதிப்பில் ஒரு பகுதி ஆகின்றன.

ஆக, உழைப்புச் சக்தியின் மதிப்பு என்பது குறிப்பிட்ட அளவிலான வாழ்வுச் சாதனங்களின் திட்டமான மதிப்பாகிவிடுகிறது.  உழைப்புச் சக்தியின் உற்பத்திக்கு நாள்தோறும் தேவைப்படும் சரக்குகளின் திரளில் 6 மணி நேர சமுதாய உழைப்பு உருக்கொண்டிருப்பதாகக் கொண்டால், ஒரு நாளைய உழைப்புச் சக்தியில் அரை நாள் சராசரி சமுதாய உழைப்பு அடங்கும் என்றாகிறது, உழைப்பின் இந்த அளவு ஒரு நாள் உழைப்புச் சக்தியின் மதிப்பாக அல்லது அன்றாடம் மறு உற்பத்தி செய்யப்படும் உழைப்புச் சக்தியின் மதிப்பாக அமைகிறது.

உழைப்புச் சக்தி என்ற இந்தத் தனிவகைச் சரக்கினை வாங்குபவர் பரிவர்த்தனையில் பெறுகிற பயன்..மதிப்பு உழைப்புச் சக்தியின் நடைமுறை அனுபோகத்திலேயே, நுகர்விலேயே வெளிப்படுகிறது. உழைப்புச் சக்தியின் நுகர்வு என்பது ஒருங்கே சரக்குகளின் உற்பத்தியும், உபரி..மதிப்பின் உற்பத்தியும் ஆகும். எந்தவொரு சரக்கின் நுகர்வையும் போலவே, உழைப்புச் சக்தியின் நுகர்வும் சந்தையின் அல்லது சுற்றோட்டத் துறையின் எல்லைகளுக்கு வெளியே பூர்த்தியாகிறது.

பகுதி 2: அத்தியாயம் 5: மூலதனத்தின் பொதுச் சூத்திரத்தில் உள்ள முரண்பாடுகள்.

நான் முதலாளி என்ற முறையில் சரக்குகளை ஏ இடம் வாங்கி பி இடம் விற்கிறேன்; ஆனால் சாதாரண சரக்குடைமையாளர் என்ற முறையில் நான் அவற்றை பி இடம் விற்று விட்டு, பின் ஏ இடமிருந்து புதிய சரக்குகளை வாங்குகினறேன். ஏ, பி ஆகியோர் இவ்விரு வகைக் கொடுக்கல் வாங்கல்களிடையே வேறுபாடு எதையும் பார்ப்பதில்லை. பி உடனான என் பரிமாற்றம் பற்றி ஏ அலட்டிக் கொள்வதில்லை; ஏ உடனான என் வியாபாரம் பற்றி பி யும் அலட்டிக் கொள்வதில்லை.  வரிசையமைப்பை நேர்மாறாக்குவதான என் செயலின் சிறப்பு குறித்து அவர்களிடம் சொல்ல முற்படுவேனேயானால், வரிசையமைப்பென நான் சொல்வது தவறு என்றும், கொடுக்கல் வாங்கல் முழுவதுமே வாங்கலிடம் தொடங்கி விற்றலுடன் முடிவதற்கு பதில் விற்றலுடன் தொடங்கி வாங்கலுடன் முடிக்கப்பட்டது என்றும் அவர்கள் என்னிடம் சுட்டிக் காட்டக் கூடும். உண்மையில், என் முதல் செயலான வாங்கல் ஏ யின் நோக்கில் விற்றல்தானாம்; என் இரண்டாவது செயலான விற்றல் பி இன் நோக்கில்  வாங்கல் தானாம்.

மதுவை விற்று தானியம் வாங்குகிற ஏ ஆனவர் குறிப்பிட்ட உழைப்பு நேரத்தில் விவசாயியான பி ஆல் முடிந்ததை விட  அதிக மதுவை உற்பத்தி செய்பவராய் இருக்கலாம்.  மறு புறம் பி ஆனவர் மது தயாரிப்பாளராகிய ஏ ஆல் முடிந்ததை விட அதிக தானியத்தை உற்பத்தி செய்பவராய் இருக்கலாம். ஆகவே இருவரும் அவரவருக்கு வேண்டிய தானியம் அல்லது மதுவைப் பரிவர்த்தனையில்லாமல் அவரவரே உற்பத்தி செய்வதைக் காட்டிலும், ஏ அதிக‌    தானியத்தையும் பி அதிக மதுவையும்  அதே பரிவர்த்தனை.. மதிப்புக்கு வாங்க முடிகிறது.  எனவே பயன் மதிப்பைப் பொறுத்தவரை "பரிவர்த்தனை என்பது இரு தரப்பினரும் ஆதாயம் அடைகிற கொடுக்கல் வாங்கலாகும்" என்று கூற நியாயமுண்டு. 

ஸ்தூலமற்ற நோக்கில் பார்த்தால், அதாவது சாமானிய சர்க்குச் சுற்றோட்டத்தின் விதிகளிலிருந்து நேரடியாக வெளிப்பட்டாத சூழ்நிலைகளை விலக்கி விட்டுப் பார்த்தால், ஒரு பரிவர்த்தனையில் நிகழ்வது (ஒரு பயன்.. மதிப்பின்  
இடத்துக்கு இன்னொரு பயன்..மதிப்பு வருவதைக் கவனியாது விடுவோமேயானால்) உரு மாற்றமே, சரக்கின் வடிவத்தில் ஒரு மாற்றமே, வேறொன்றுமில்லை. அதே பரிவர்த்தனை.. மதிப்பு தான், அதாவது பொருள் வடிவாக்கப்பட்ட அதே அளவு சமுதாய உழைப்புதான் ஆரம்ப முதல் கடைசி வரை சரக்குடைமையாளரின் கையில் இருக்கிறது; அது முதலில் அவரது சொந்த சரக்கின் வடிவிலும், பின் அவர் கடைசியாக, அந்த பணத்தைக் கொண்டு அவர் வாங்குகிற சரக்கின் வடிவத்திலும் இருக்கிறது. இந்த வடிவ மாற்றத்தால் மதிப்பின் பருமன் மாறுவதில்லை. ஆனால் இந்த நிகழ்முறையில் சரக்கின் மதிப்பு அடைகிற மாற்றம் அதன் பண வடிவத்திலான மாற்றத்தோடு நின்று விடுகிறது. சரக்குகளின் சுற்றோட்டம் அவற்றின் மதிப்புகளது வடிவத்தில் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

சரக்கு சுற்றோட்டத்தை உபரி..மதிப்பின் தோற்றுவாயாக வர்ணிக்கும் முயற்சிகள் அனைத்தின் பின்னேயும் ஒரு மாறாட்டப் பிழை, பயன்.. மதிப்பையும் பரிவர்த்தனை.. மதிப்பையும் குழப்படி செய்யும் பிழை மறைந்துள்ளது.  

சரக்கு உற்பத்தி நன்கு வளர்ந்த சமுதாயத்தில் ஒவ்வொரு உற்பத்தியாளரும் தனக்கு வேண்டிய வாழ்வு சாதனங்களைத் தானே உற்பத்தி செய்து கொண்டு, தனது தேவைகள் போக எஞ்சியவற்றை மட்டும் சுற்றோட்டத்தில் விடுகிறார் என்றும் சிறு பிள்ளைத்தனமான முறையில் கற்பிதம் செய்து கொள்ளப்படுகிறது.

சரக்குடமையாளர்களே சரக்குச் சந்தைக்கு அடிக்கடி போய் வருகின்றனர்; இந்த ஆட்கள் ஒருவர் மீது ஒருவர் செலுத்துகிற சக்தி அவர்களது சரக்குகளின் சக்தியே அன்றி வேறில்லை. இந்த சரக்குகள் பல்வகைப்பட்ட பொருட்களாய் இருப்பது பரிவர்த்தனைச் செயலுக்குப் பொருளாயத ஊக்கமாக அமைகிறது, வாங்குவோரையும் விற்போரையும் பரஸ்பரம் சார்புள்ளவர்கள் ஆக்குகிறது; ஏனெனில் அவர்கள் யாரிடமும் தம் சொந்த தேவைகளுக்குரிய பொருள் இல்லை. ஒவ்வொருவரும் இன்னொருவரின் தேவைக்குரிய பொருளை வைத்திருக்கிறார். ஆதலால் சரக்குகளை வைத்திருக்கும் விற்போராகவும், பணத்தை வைத்திருக்கும் வாங்குவோராகவும் மட்டுமே சரக்குடைமையாளர்களை வேறுபடுத்தலாம்.

உபரி மதிப்பின் உருவாக்கத்துக்கும், எனவே பணம் மூலதனமாக மாற்றப்படுவதற்கும், சரக்குகள் அவற்றின் மதிப்புக்கும் கூடுதலாக விற்கப்படுகின்றன என்று வைத்துக்கொள்வதன் மூலமோ, அவை அவற்றின் மதிப்புக்கும் குறைவாக வாங்கப்படுகின்றன என்று வைத்துக்கொள்வதன் மூலமோ விளக்கமளித்துவிட முடியாது.

சமதைகளின் பரிவர்த்தனையால் உபரி..மதிப்பு விளையவில்லை. சுற்றோட்டம் அல்லது சர்க்கு பரிவர்த்தனை எவ்வித மதிப்பையும் ஈன்றெடுப்பதில்லை.

ஆகவே நவீன காலச் சமுதாயத்தின் பொருளாதார ஒழுங்கமைப்பை நிர்ணயிக்கிற மூலதன வடிவத்தை .. மூலதனத்தின் இந்த முதன்மையான வடிவத்தை... பகுத்தாய்கையில் நாம் அதன் நன்கு அறிமுகமான வடிவங்களை (பழமைப்பட்ட வடிவங்களை என்றும் சொல்லலாம்), அதாவது வணிக மூலதனத்தையும் (merchant's capital)     வட்டி மூலதனத்தையும் (money..lender's capital)    பரிசீலனையிலிருந்துஅறவே விட்டு விடுகிறோம்

வணிக மூலதனத்தில், சந்தையில் விடப்படும் பணம், பெருகிய அளவில் சந்தையிலிருந்து விலக்கியெடுக்கப்படும் பணம் என்ற இரு முனைகளும் குறைந்ததுஒரு வாங்கலாலும் ஒரு விற்றலாலும், வேறு விதமாகச் சொன்னால் சுற்றோட்டத்தின் இயக்கத்தால் இணக்கப்பட்டாவது இருக்கின்றன. வட்டி மூலதனத்தில் ப..ச..ப' இடைநிலையின்றி ப..ப' என்ற இரு முனைகளாகச் சுருக்கப்படுகிறது. பணம் இன்னும் அதிகப் பணத்துக்காகப் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. பணத்தின் தன்மைக்கு ஒவ்வாத, எனவே சரக்கு சுற்றோட்டத்தின் நோக்கு நிலையிலிருந்து விளக்க முடியாத வடிவமாகும் இது.

வணிக மூலதனம், வட்டி மூலதனம் இரண்டுமே வருவிக்கப்பட்ட வடிவங்கள் என்பது நமது ஆராய்ச்சியின் வாயிலாகத் தெரிய வரும்; அதே நேரத்தில், இந்த இரு வடிவங்களும் வரலாற்றுப் போக்கில் மூலதனத்தின் நவீன கால முதன்மை வடிவத்துக்கு முன்னதாகத் தோன்றுவது ஏன் என்பது தெளிவாகும்.

உபரி..மதிப்பைச் சுற்றோட்டத்தால் படைக்க முடியாது என்பதையும், ஆகவே, அதனைப் படைக்கும் பொருட்டு, சுற்றோட்டத்திலேயே கண்கூடாகத் தெரியாத ஏதோ ஒன்று பின்னணியில் நடக்க வேண்டும் என்பதையும் காட்டியிருக்கிறோம்.

ஆக, மூலதனம் சுற்றோட்டத்தால் உண்டாக்கப்படுவது முடியாத காரியம்; அது சுற்றோட்டமில்லாமல் தோற்றவாய் சுற்றோட்டத்தினுள் இருப்பதாகவும், அதே போது சுற்றோட்டத்தினுள் இல்லாததாகவும் அமைதல் வேண்டும்.  

ஆக ஒர் இரட்டை முடிவு நமக்குக் கிடைக்கிறது.

பணம் எப்படி மூலதனமாக மாற்றப்படுகிறது என்பதை சரக்குப் பரிவர்த்தனையை ஒழுங்கியக்கும் விதிகளின் அடிப்படையில், சமதைகளின் பரிவர்த்தனை தொடக்கமாக அமையும் விதத்தில் விளக்கியாக வேண்டும்.  இன்னும் கருநிலை முதலாளியாகவே இருக்கிற நமது பணாதிபதி சரக்குகளை அவற்றின் மதிப்புக்கே வாங்க வேண்டும், அவற்றின் மதிப்புக்கே விற்க வேண்டும். ஆனால் நிகழ் முறையின் தொடக்கத்தில் தான் சுற்றோட்டத்தில் விட்டதை விட அதிகமான மதிப்பை முடிவில் அதிலிருந்து எடுக்க வேண்டும்.  முழு வளர்ச்சியடைந்த முதலாளியாக அவர் வளர்வது சுற்றோட்ட துறைக்குள்ளேயும், வெளியேயும் நடக்க வேண்டும். இவையே பிரச்சினையின் வரையறைகள்.

பகுதி 2 பணம் மூலதனமாக மாற்றமடைதல். அத்தியாயம் 4: மூலதனத்துக்கான பொது சூத்திரம்.

மூலதனத்தின் நவீன கால வரலாறு 16வது நூற்றாண்டில் உலகந்தழுவிய வாணிபமும், உலகந்தழுவிய சந்தையும் தோற்றுவிக்கப் பட்டதிலிருந்து ஆரம்பிக்கிறது.

சரக்கு சுற்றோட்டத்தின் பொருளாயதச் சாரத்தை, அதாவது பல்வேறு பயன்..மதிப்புகளின் பரிவர்த்தனையை ஒதுக்கி விட்டு, இந்த சுற்றோட்ட நிகழ்முறையால் தோற்றுவிக்கப்பட்ட பொருளாதார வடிவங்களை மட்டுமே கவனித்தால், அதன் இறுதி விளைவு பணமாக இருக்கக் காண்கிறோம். சரக்குச் சுற்றோட்டத்தின் இந்த இறுதிப் பலனே மூலதனம் தோன்றுகின்ற முதல் வடிவம் ஆகும்.

வரலாற்று வழியில் பார்த்தால், மூலதனமானது, நிலச் சொத்துக்கு மாறாக, எப்போதுமே முதலில் பணத்தின் வடிவத்தை மேற்கொள்கிறது.

பணமாக மட்டுமே உள்ள பணத்துக்கும், மூலதனமாக உள்ள பணத்துக்கும் இடையில் நாம் காண்கிற முதல் வேறுபாடு அவற்றின் சுற்றோட்ட வடிவத்திலான மாறுபாட்டுக்கு மேல் ஒன்றும் இல்லை.

சரக்கு சுற்றோட்டத்தின் மிகவும் சாதாரண வடிவம் சரக்கு..பணம்..சரக்கு (ச..ப..ச‌)ஆகும். அதாவது வாங்கும் பொருட்டு விற்பதாகும்.  இதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வடிவம் பணம்..சரக்கு..பணம் (ப..ச..ப) ஆகும். அதாவது விற்கும் பொருட்டு வாங்குவதாகும்.  பின் சொன்ன சுற்றோட்டத்தில் செல்கிற பணம் மூலதனமாகிறது. உள்ளாற்றலில் ஏற்கனவே மூலதனமாகவும் இருக்கிறது. 

ப..ச..ப சுற்றோட்டதில் $100ஐ $100க்குப் பரிவர்த்தனை செய்வது நோக்கமானால், இச்சுற்று அபத்தமானதாகவும், அர்த்தமற்றதாகவும் இருக்குமென்பது தெளிவு . கருமியின் திட்டம் இதைக்காட்டிலும் எவ்வளவோ எளிதாகவும் பத்திரமானதாகவும்  இருக்கும் .

பருத்திக்காக $100 கொடுத்த வணிகர் $110க்கு விற்றலும் சரி, அல்லது $100க்கு, அல்லது $50க்கே கூட கைகழுவினாலும் சரி, எப்படியும் அவரது பணம் தனிச்சிறப்பு வாய்ந்த ஓர் இயக்கத்தை நிகழ்த்தியுள்ளது.

ச..ப..ச.. என்ற சுற்றோட்டத்தில் பணம் பயன்..மதிப்பாகப் பயன்படுகிற சரக்காய் முடிவில் மாற்றப்படுகிறது; அதாவது அது மீளாதவாறு செலவழிக்கப்படுகிறது. மாறாக ப..ச..ப.. என்ற நேர்மாறான வடிவத்தில், வாங்குபவர் பணத்தை செலவிடுவது விற்பவர் என்ற முறையில் அதனை மீட்டு விடும் பொருட்டே; சரக்கை வாங்குவதன் மூலம் அவர் பணத்தை சுற்றோட்டத்தில் விடுவது, அதே சரக்கை விற்பதன் மூலம் அதைத் திரும்பப் பெறும் பொருட்டே, அவர் பணத்தை கையை விட்டுப் போக விடுகிறார். அதைத் திரும்பப் பெறும் கபட நோக்குடனேயே இப்படிச் செய்கிறார். எனவே, பணம் செலவழிக்கப்படுவதில்லை, முன்னீடுதான் செய்யப்படுகிறது.

ச..ப..ச.. என்ற சுற்று தேவைகளை நிறைவு செய்வதான நுகர்வு. பயன்..மதிப்பு இச்சுற்றின் முடிவும் நோக்கமும் ஆகும். மாறாக ப..ச..ப என்ற சுற்றின் தலையாய நோக்கமும், அதை வசீகரிக்கிற இலக்கும் வெறும் பரிவர்த்தனை.. மதிப்பே  .

சாமானிய சரக்குச் சுற்றோட்டத்தில் சுற்றின் இரு முனைகளும் சம மதிப்புள்ள சரக்குகளாகும். வேறுபட்ட பண்புகளக் கொண்ட பயன் மதிப்புகளும் ஆகும். உற்பத்திப் பொருட்களின் சமுதாய உழைப்பு உருக்கொண்டுள்ள வெவ்வேறு பொருட்களின் பரிவர்த்தனை இங்கே இயக்கத்தின் அடிப்படையாக அமைகிறது.

ப..ச..ப சுற்றோட்டம் மேலோட்டமான பார்வையில் காரிய நோக்கற்றதாகத் தோன்றுகிறது. இரு முனைகளும் ஒரே பொருளாதார வடிவத்தைப் பெற்றுள்ளன. அவை இரண்டுமே பணமாகு. எனவே பண்பு வழியில் வேறு பட்ட பயன்கள் அல்ல. இந்நிகழ்முறையின் சரியான வடிவம் ப..ச..ப' ; இதில் ப' = ப + ^ப = ஆரம்பத்தில் முன்னீடு செய்யப்பட்ட தொகை +  ஒரு கூடுதல்.  ஆரம்ப மதிப்பின் மீதான இந்தக் கூடுதல் அல்லது மிகையை நான் "உபரி..மதிப்பு" (surplus value)   என்றழைக்கிறேன்.

ச..ப..ச என்பதில் ச..ச என்ற இரு முனைகளும் .. உதாரணமாக தானியமும் உடைகளும்.. மதிப்பின் வெவ்வேறு அளவுகளைக் குறித்தாலும் குறிக்கலாம். இவ்வாறான மதிப்பு வேறுபாடுகள் முற்றிலும் தற்செயலானவையாகும். பார்க்கப்போனால், அவற்றின் மதிப்புகள் சம்மாயிருத்தல் அதன் முறையான போக்கிற்கு அவசிய நிபந்தனையாகும்.

வாங்கும் பொருட்டு விற்பதென்ற செயலின் மறு நிகழ்வு அல்லது புத்தாக்கம், அதன் நோக்கத்தாலேயே.. அதாவது முற்றிலும் சுற்றோட்டத் துறைக்குப் புறத்தேயுள்ள நோக்கமான நுகர்வு, அல்லது திட்டமான தேவைகளை நிறைவு செய்தல் என்ற நோக்கத்தாலேயே .. வரம்புக்குட்பட்டதாக வைத்துக் கொள்ளப்படுகிறது.

சாமானிய சரக்குச் சுற்றோட்டம் என்பது .. வாங்கும் பொருட்டு விற்பது .. சுற்றோட்டத்துடன் தொடர்பில்லாத ஒரு காரியத்தை, அதாவது பயன் மதிப்புகளின் தனதாக்கத்தை, தேவைகளை நிறைவு செய்வதை நிகழ்த்தும் வழியாகும். மூலதனமென்ற முறையிலான பணத்தின் சுற்றோட்டம் இப்படிப்பட்டதன்று; அதுவே ஒரு நோக்கமாகும்; ஏ னெனில் இடவிடாமல் திரும்ப திரும்ப நடைபெறும் இந்த இயக்கதுக்குள்தா ன் மதிப்பின் பெருக்கம் நடைபெறுகிறது. எனவே மூலதனத்தின் சுற்றோட்டம் வரம்பின்றி நடப்பதாகும்.

பணவுடமயாளர் இந்த இயக்கத்தின் உணர்வுபூர்வமான பிரதிநிதி என்ற முறையில் முதலாளி ஆகிறார். பணம் புறப்படுகிற இடமும் அது திரும்பி வந்து சேர்கிற இடமும் அவரேதான். அவர் முதலாளியாக அதாவது மனித உருக் கொண்ட உணர்வும் மன விருப்பமும் வாய்க்கப்பெற்ற மூலதனமாகச் செயல்படுவது எந்த அளவுக்கு அவரது செயற்பாடுகளின் ஒரே நோக்கமாகிறதோ அந்த அளவுக்குக்குத்தான் அவர் முதலாளியாக செயல்படுகிறார்; அதாவது மனித உருக்கொண்டு உணர்வும் சித்தமும் வாய்க்கப் பெற்ற மூலதனம் ஆகிறார்.

செல்வத்தை நாடும் இந்த வரம்பு கடந்த ஆசை, பரிவர்த்தனை..மதிப்பைத் தேடும் இந்த வெறி கொண்ட வேட்டை முதலாளிக்கும் கருமிக்கும் பொதுவானது; ஆனால் கருமி பித்துக் கொண்ட முதலாளியாக இருக்க, முதலாளி பகுத்தறிவு கொண்ட கருமியாக இருக்கிறார்.

ப..ச..ப என்ற சுற்றோட்டத்தில் பணம், சரக்கு இரண்டுமே மதிப்பின் இருவேறு நிலைகளையே குறிக்கின்றன; பணம் அதன் பொதுவான நிலையையும், சரக்கு அதன் குறிப்பான, அல்லது ஒரு விதத்தில் மாறுவேடம் பூண்ட நிலையையும் குறிக்கின்றன. மதிப்பு இடைவிடாமல் ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்துக்கு மாறிக் கொண்டிருக்கிறது; ஆனால் இதன் மூலம் ஒழிந்து விடுவதில்லை; இவ்வாறு அது தானாகவே இயங்கும் தன் முனைப்புள்ள தன்மை பெறுகிறது.

விற்கும் பொருட்டு வாங்குவது, அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், விலை கூட்டி விற்கும் பொருட்டு வாங்குவது, ப..ச..ப' எனபது, ஒரு வகை மூலதனத்துக்கு மட்டுமே. அதாவது வணிக மூலதனத்துக்கு மட்டுமே உரித்தான வடிவமாகத் தோன்றுவது மெய்தான்.  ஆனால், தொழில்துறை மூலதனமும் (industrial capital)   பணமே; சரக்குகளாக மாற்றப்படுகிற, இந்த சரக்கு விற்றலின் மூலம் மேலும் கூடுதலான பணமாக மாற்றம் செய்யப்படுகிற பணமே.

பகுதி 1: அத்தியாயம் 3: பணம் அல்லது சரக்குகளின் சுற்றோட்டம். பிரிவு 3: பணம்

மதிப்பளவையாகவும், ஆதலால், தானே நேராகவோ தன்னை குறிக்கிற அடையாளத்தின் மூலமோ சுற்றோட்ட ஊடகமாகவும் பணி புரிகிற சரக்கே பணம் ஆகும்.

சரக்குகள் விற்கப்படுவதன் நோக்கம் ஏனைய சரக்குகளை வாங்குவதன்று, அவற்றின் சரக்கு வடிவத்துக்கு பதில் பண வடிவத்தைப் பெறுவதே.  

பணம் ஒரு சேர்ப்பாக ஒய்ந்து விடுகிறது; விற்பவர் பணத்தை சேர்ப்பவராகிறார். எந்த நேரமும் எடுத்துப் பயன் படுத்திக் கொள்ளத்தக்கதாய் சமுதாய அளவில் வியாபகமுள்ள செல்வ வடிவமாகிய பணத்தின் சக்தியும் அதிகரிக்கிறது. தங்கமாக மாற்றப்பட்டிருப்பது எது என்பதைத் தங்கம் வெளிப்படுதுவதில்லை என்பதால் ஒவ்வொரு பொருளும், சரக்காக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தங்கமாக மாற்றக் கூடியதாகும்.

சுற்றோட்டம், பெரிய சமுதாயக் கொதிகலனாகிறது; யாவும் அதனுள் இடப்பட்டு பொற்படிகமாக்கப்படுகின்றன.

பணம் தானே ஒரு சரக்காகவும், எந்தத் தனியாளின் தனிச் சொத்தும் ஆகக் கூடிய புறப் பொருளாகவும், இவ்வாறு சமுதாயச் சக்தி தனியாட்களின் தனிச் சக்தியாகிறது. எனவே பழங்காலத்தவர்கள் பொருளாதார ஒழுங்கிற்கும் நன்னெறிக்கும் குழி பறிக்கக் கூடியதென பணத்தைச் சாடினர்.

பிடித்துச் சேர்க்கிற ஒவ்வொரு புதிய நாட்டையும் ஒரு புதிய எல்லையாக மட்டுமே கொள்கிற நாடு பிடிப்பாளரின் நிலையே பணஞ் சேர்ப்பவரின் நிலை. கடுமையாக உழை, மிச்சப்படுத்து, அளவின்றி ஆசைப் படு. விற்பதை கூட்டு, வாங்குவதைக் குறை எனபதே அவரின் அரசியல் பொருளாதரத்தின் சாரமாகும்.

ஒரு நாட்டிலுள்ள தங்கம், வெள்ளியின் அளவு நாணயமாகச் செயல்படத் தேவைப்படும் அளவைக் காட்டிலும் அதிகமாக இருப்பது அவசியமாகும். பணம் சேர்ப்புகளின் வடிவத்தை மேற்கொள்வதன் மூலம் இந்த நிபந்தனை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த சேம வைப்புகள் சுற்றோட்டத்துக்குப் பணத்தை வழங்குவதற்கான, அல்லது சுற்றோட்டத்திலிருந்து பணத்தை விலக்கியெடுப்பதற்கான கால்வாய்களாகப் பயன்படுகின்றன; இந்த விதத்தில் சுற்றோட்டம் ஒரு போதும் கரைபுரளாமல் செல்வதற்கு வழி செய்கின்றன.

ஒரு சரக்கின் உபயோகம், எடுத்துக்காட்டாக வீட்டின் உபயோகம் திட்டமான காலத்திற்கு விற்கப்படுகிறது அதாவது வாடகைக்கு விடப்படுகிறது.  வாங்குபவர் வருங்கால பணத்தின் பிரதிநிதியென்ற முறையிலே அதை வாங்குகிறார். விற்பவர் கடன் கொடுதவர் ஆகிறார். வாங்குபவர் கடன்பட்டவர் ஆகிறார். சரக்குகளின் உரு மாற்றம், அல்லது அவற்றின் மதிப்பு வடிவத்தின் வளர்ச்சி, இங்கே ஒரு புதிய முறையில் நடந்தேருகிறது என்பதால் பணமும் கொடுப்புச் சாதனம் என்ற புதியதொரு பணியை செய்கிறது.

விற்றல் நிகழ்முறையின் இரு துருவங்களிலும் சரக்கு, பணம் என்ற இரு சமதைகளும் ஏக காலத்தில் தோன்றி வந்த நிலை இப்போது இல்லை. 

பணம் சுற்றோட்டத்திலிருந்து விலக்கியெடுக்கப்படுவது காரணமாய் சுற்றோட்ட ஊடகம் பணம் சேர்ப்பாக மாற்றப்படுகிறது. சுற்றோட்டத்தினுள் கொடுப்புச் சாதனம் நுழைகிறதென்றாலும், சுற்றோட்டத்தை விட்டு சரக்கு வெளியேறிய பிறகே இது நிகழ்கிறது.

வாங்குபவர் சரக்குகளை பணமாக மாற்றும் முன்னரே பணத்தைச் சரக்குகளாக மாற்றுகிறார்; வேறு விதமாகச் சொன்னால், அவர் சரக்குகளின் முதல் உருமாற்றத்துக்கு முன்னரே இரண்டாவது உருமாற்றத்தை நடந்தேரச் செய்கிறார்.

A தன்னிடம் கடன்பட்ட B இடமிருந்து பணத்தைப் பெறும் போது, தனக்குக் கடன் கொடுத்த C இடம் அதை உடனே ஒப்படைக்கிறார்.A  க்கு  B இடமிருந்தும்,  B க்கு  C இடமிருந்தும்,  C க்கு  A இடமிருந்தும் (இவ்வாறே இன்னும் சொல்லலாம்) வரவேண்டிய கடன்கள் ஒன்றை ஒன்று எதிர்கொள்ளச் செய்யப்பட்டாலே போதும், அந்த அளவுக்குச் சுற்றோட்டத்திலுள்ள கொடுப்புச் சாதனத் திரள் குறையும்.

கொடுப்புச் சாதனம் என்ற பணத்தின் பணி ஒர் உள்ளார்ந்த முரண்பாட்டைக் குறிக்கிறது. மெய்யான கொடுப்புகளை நிறைவேற வேண்டியுள்ள அளவில் பணம் சுற்றோட்ட ஊடகமாக, உற்பத்திப் பண்டங்களின் பரிமாற்றத்தில் ஓடி மறையும் செயலியாக பயன்படுவதில்லை; சமுதாய உழைப்பின் தனிப்பட்ட அவதாரமாகவே, பரிவர்த்தனை..மதிப்பின் சுயேச்சையான நிலவல் வடிவமாகவே, சர்வப் பொதுச் சரக்காகவே அது பயன்படுகிறது. தொழில் வாணிப நெருக்கடிகளின்போது பண நெருக்கடிகள் எனப்படும் கட்டங்களில் இந்த முரண்பாடு உச்சமடகிறது.

குறிப்பிட்ட காலத்தில் ஓட்டத்திலுள்ள பணத்தின் மொத்தத் தொகையை இப்போது நோக்கினால், சுற்றோட்ட ஊடகம், கொடுப்புச் சாதனம் இவற்றின் ஓட்ட வேகம் குறிப்பிட்டதாயிருக்க, ஈடேற்றம் செய்ய வேண்டிய விலைகளின் மொத்தத்துடன் தீர்க்க வேண்டிய கொடுப்புகளின் மொத்தத்தைக் கூட்டி, ஒன்றை ஒன்று சரிகட்டிக் கொள்ளும் கொடுப்புகளைக் கழித்து, இறுதியாக, ஒரே நாணயம் சுற்றோட்டச் சாதனமாகவும், கொடுப்புச் சாதனமாகவும் மாறி மாறிப் பயன்படுகிற சுற்றுகளின் எண்ணிக்கையைக் கழித்து வரும் தொகைக்கு அது சமம்.

காலவட்டக் கொடுப்புகள் அனைத்துக்கும் தேவைப்படுகிற கொடுப்புச் சாதனத்தின் அளவு அவற்றினது காலங்களின் அளவுக்கு எதிர் விகிதத்தில் உள்ளது.

உலகச் சந்தைகளிடையிலான வர்த்தகத்தில் சரக்குகளின் மதிப்பு உலக அளவில் ஒப்புதல் பெறும் விதத்தில் தெரிவிப்பு பெறுகிறது. எனவே இந்த நேர்வுகளில் அவற்றின் சுயேச்சையான மதிப்பு வடிவமும் உலகப் பொதுப் பணத்தின் உருவில் அவற்றை எதிர் கொள்கிறது. எந்த சரக்கின் தசையுருவம் ஸ்தூலமற்ற மனித உழைப்பின் நேரடிச் சமுதாய அவதாரமாகவும் திகழ்கிறதோ அந்த சரக்கின் தன்மையை பணம் உலகச் சந்தைகளில்தான் முழு அளவுக்கு அடைகிறது.

ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் உள்நாட்டுச் சுற்றோட்டத்துக்காக பணச் சேமவைப்பு ஒன்று தேவைப்படுவது போலவே, உலகச் சந்தைகளில் வெளிச் சுற்றோட்டத்துக்காகவும் பண சேமவைப்பு ஒன்று தேவைப்படுகிறது.