Friday, November 22, 2013

பகுதி 7 அத்தியாயம் 23: சாமானிய மறுவுற்பத்தி

எப்படி சமுதாயம் நுகர்வதை நிறுத்த முடியாதோ அதே போல் உற்பத்தி செய்வதையும் நிறுத்த முடியாது. எனவே, தொடர்புள்ள முழுமையாகவும், ஓயாமல் புதுப்பிக்கப்பட்டுச் செல்வதாகவும் நோக்கப்படும் போது, சமுதாய பொருளுற்பத்தி நிகழ்முறை ஒவ்வொன்றும் அதே போது மறுவுற்பத்தி நிகழ்முறையும் (process of reproduction) ஆகும். உற்பத்தி நிலைமைகள் அதே போது மறுவுற்பத்தி நிலைமைகளுமாகும்.

ஒவ்வொரு ஆண்டின் உற்பத்திப் பண்டத்திலும் குறிப்பிட்ட பகுதி உற்பத்தித் துறைக்கு உரியதாகும். திறனுடை நுகர்வுக்கு (productive consumption) உரியதாய் ஆரம்பமுதற்கொண்டே அமைந்த இப்பகுதி, பெரும்பாலும் சொந்த நுகர்வுக்கு சிறிதும் பொருந்தாத பண்டங்களாய் இருப்பதாகும். 

உற்பத்தியானது முதலாளித்துவ வடிவமுடையதாய் இருந்தால் மறுவுற்பத்தியும் அவ்வாறே இருக்கும். உழைப்பு நிகழ்முறையானது எப்படி உற்பத்தியில் மூலதனத்தின் தற்பெருக்கத்துக்கான (self expansion) வழிவகையாகவே இடம் பெறுகிறதோ, அதே போல் மறுவுற்பத்தியில் முன்னீடு செய்யப்படும் மதிப்பை மூலதனமாக  --- அதாவது தற்பெருக்கமடையும் மதிப்பாக --- மறுவுற்பத்தி செய்வதற்கான வழிவகையாகவே இடம் பெறுகிறது. 

மூலதனத்தின் காலவட்டப் பலன் என்ற முறையில் உபரி-மதிப்பு என்பது மூலதனத்திலிருந்து பிறக்கிற வருவாயின் வடிவத்தைப்பெறுகிறது. இந்த வருவாய் கால வட்ட முறையில் செலவிடப்பட்டுவிட்டால், மற்றவை மாறாதிருக்க, சாமானிய மறுவுற்பத்தி --- அதன் பழைய அளவுவீதத்தில் --- நடைபெறும்.

நிர்ணயமான காலத்துக்கு உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குவது உற்பத்தி நிகழ்முறையின் பீடிகை ஆகும். இந்தப் பீடிகை திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படுகிறது. ஆனால், தொழிலாளி அவரது உழைப்புச் சக்தியைச் செலவிட்டு அதன் மதிப்பை மட்டுமல்லாமல் உபரி-மதிப்பையும் சரக்குகளில் ஈடேற்றம் பெறச் செய்யும் வரை அவருக்கு ஊதியம் அளிக்கப்படுவதில்லை. ஆகவே, அவர் உபரி-மதிப்பை மட்டுமல்லாமல் அவருக்கு ஊதியமளிப்பதற்கான நிதியையும், அதாவது மாறும்-மூலதனத்தையும் உற்பத்திச் செய்கிறார். 

இந்த வாரம் அல்லது இந்த வருடம் அவரது உழைப்புச் சக்திக்கு விலையாகப் பெறுவது அவரது சென்ற வாரத்திய அல்லது சென்ற வருடத்திய உழைப்பே. பணத்தின் குறுக்கீட்டால் ஏற்படுகிற மாயத் தோற்றமானது, நாம் தனியொரு முதலாளிக்கும் தனியொரு தொழிலாளிக்கும் பதிலாக முதலாளிகளின் வர்க்கம் முழுவதையும் தொழிலாளி வர்க்கம் முழுவதையும் எடுத்துக் கொண்டதுமே மறைந்து போகிறது. தொழிலாளி வர்க்கத்தால் உற்பத்தி செய்யப்பட்டு முதலாளி வர்க்கத்தால் தனதாக்கப்படும் சரக்குகளில் ஒரு பகுதியைப் பெறுவதற்கான ஆணைச் சீட்டுகளையே முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கத்துக்கு பண வடிவில் தொடர்ச்சியாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. 

மாறும்-மூலதனம் என்பது தொழிலாளிக்கு வேண்டிய அவசிய வாழ்க்கைத் தேவைகளுக்கு வகை செய்வதற்கான நிதியம். இந்நிதியம் அவரது உழைப்புக்கு ஊதியமளிக்கும் பணத்தின் வடிவத்தில் இடையறாது அவரிடம் வருகிறதென்றால் அவர் படைக்கும் உற்பத்திப் பொருள் மூலதனத்தின் வடிவில் இடையறாது அவரை விட்டு விலகிச் செல்வதே இதற்கு காரணம். ஆனால், உற்பத்திப் பண்டத்தில் ஈடேற்றம் பெற்றுள்ள தொழிலாளியின் உழைப்புதான் முதலாளியால் அவரிடம் முன்னீடு செய்யப்படுகிறது என்ற உண்மையை இதெல்லாம் மாற்றிவிடுவதில்லை. 

முதலாளி தாம் பிறரின் ஊதியமிலா உழைப்பின் உற்பத்தியை, அதாவது உபரி-மதிப்பை நுகர்ந்து கொண்டிருப்பதாகவும், தமது ஆரம்ப மூலதனத்தை அப்படியே பாதுகாத்து வைத்திருப்பதாகவும் நினைக்கிறார்; ஆனால் அவர் அப்படி நினைப்பதாலேயே இது உண்மையாகிவிடமுடியாது. சில ஆண்டுகள் கழிந்த பின்னர் அவர் பெற்றிருக்கும் மூலதனத்தின் மதிப்பு அந்த ஆண்டுகளில் அவரால் தனதாக்கப்பட்ட உபரி-மதிப்பின் மொத்தத் தொகைக்குச் சமமாகும்; அவர் நுகர்ந்திருக்கும் மொத்த மதிப்பு அவரது ஆரம்ப மூலதனத்தின் மதிப்புக்குச் சமமாகும். அவரது பழைய மூலதனத்தின் மதிப்பில் ஓரணுவும் இப்போது இல்லை.    

உழைப்பை அதன் உற்பத்திப் பொருளிடமிருந்து --- உழைப்பவரின் உழைப்புச் சக்தியை உழைப்பதற்கு அவசியமான எதார்த்த நிலைமைகளிட்மிருந்து  --- பிரிப்பதுதான் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் மெய்யான அடித்தளமும் தொடக்கமும் ஆகும்.

உற்பத்தி நிகழ்முறையானது பொருட் செல்வத்தை ஓயாமல் மூலதனமாக மாற்றுகிறது; அதாவது மேலும் மேலும் கூடுதலான செல்வத்தைப் படைக்கும் சாதனமாகவும், முதலாளியின் அனுபோகத்துக்கான சாதனமாகவும் மாற்றுகிறது. மறு புறம் தொழிலாளியோ உற்பத்தி நிகழ் முறையில் நுழைந்த போது இருந்த அதே நிலையில்தான் அதை விட்டு வெளியேறும் போதும் இருக்கிறார்; அதாவது செல்வத்தின் தோற்றுவாயாக இருப்பினும் அந்தச் செல்வத்தை தம்முடையதாக்கிக் கொள்வதற்கான எந்த சாதனமும் இல்லாதவராகவே இருக்கிறார், உற்பத்தி நிகழ் முறையில் நுழையுமுன்னரே தொழிலாளி தமது உழைப்புச் சக்தியை விற்று, தமது உழைப்பைத் தமது உடைமையிலிருந்து நீக்கிக் கொண்டுவிடுகிறார்; ஆகவே உற்பத்தி நிகழ்முறையின் போது அவ்வுழைப்பு தொழிலாளிக்குச் சொந்தமில்லாத உற்பத்திப் பண்டத்தில்தான் ஈடேற்றம் பெற வேண்டியிருக்கிறது.  

தொழிலாளி புறவயப் பொருட் செல்வத்தை ஓயாமல் உற்பத்தி செய்கிறார்; ஆனால் மூலதனத்தின் வடிவில்தான். இதே போல் முதலாளியும் உழைப்புச் சக்தியை உற்பத்தி செய்கிறார்; தொழிலாளியை உற்பத்தி செய்கிறார். ஆனால் கூலித் தொழிலாளியாகத்தான்.

தொழிலாளி இரு விதங்களில் நுகர்கிறார். உற்பத்தி செய்யும்போது தமது உழைப்பால் உற்பத்திச் சாதனங்களை நுகர்ந்து முன்னீடு செய்யப்பட்ட மூலதனத்தின் மதிப்பை விட அதிக மதிப்புள்ள உற்பத்திப் பண்டங்களாக அவற்றை மாற்றுகிறார். இது அவருடைய திறனுடை நுகர்வு (productive consumption) ஆகும். அதே நேரத்தில் இது அவரது உழைப்புச் சக்தியை வாங்கிய முதலாளி அதனை நுகர்கிற நுகர்வுமாகும். மறு புறம், தொழிலாளி தனது உழைப்புச் சக்திக்காகத் தரப்பட்ட பணத்தை வாழ்வுச் சாதனங்களாக மாற்றுகிறார். இது அவரது சொந்த நுகர்வு (individual consumption) ஆகும்.

அவர் தமது உழைப்புச் சக்தியைப் பராமரித்து கொள்ளும் பொருட்டு அவசியப் பண்டங்களைத் தமக்கு தாமே கிடைக்கச் செய்து கொள்கிறார். அந்நிலையில் அவரது நுகர்வுச் சாதனங்கள் உற்பத்திச் சாதனங்களில் ஒன்றுக்கு அவசியமான நுகர்வுச் சாதனங்களாகிவிடுகின்றன. அவரது சொந்த நுகர்வு நேரடியாகத் திறனுடை நுகர்வாகி விடுகிறது.

முதலாளி தனது மூலதனத்தின் ஒரு பகுதியை உழைப்புச் சக்தியாக மாற்றுவதன் மூலம், தனது முழு மூலதனத்தின் மதிப்பையும் பெருகச் செய்கிறார். ஒரே கல்லால் இரு மாங்காய் அடிக்கிறார். தொழிலாளியிடமிருந்து தான் பெறுவதைக் கொண்டு மட்டுமல்லாமல், தொழிலாளிக்குத் தான் கொடுப்பதைக் கொண்டும் இலாபமடைகிறார்.

கண்டிப்பான அவசியத்தின் வரம்புகளுக்குள், தொழிலாளி வர்க்கத்தின் சொந்த நுகர்வு என்பது, உழைப்புச் சக்திக்கு விலையாக‌ முலதனம் கொடுத்த வாழ்வுச் சாதனங்களை மூலதனத்தின் சுரண்டலுக்குப் பயன்படவல்ல புதிய  உழைப்புச் சக்தியாக திரும்பவும் மாற்றுவதாகும்.

பட்டறையினுள் நடந்தாலும் சரி, வெளியே நடந்தாலும் சரி, உற்பத்தி நிகழ்முறையைச் சேர்ந்திருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, தொழிலாளியின் சொந்த நுகர்வு என்பது மூலதனத்தின் உற்பத்தியிலும் மறுவுற்பத்தியிலும் ஒரு காரணியாகிறது.

பொதி சுமக்கும் குதிரை தீனி தின்பது உற்பத்தி நிகழ்முறைக்கு அவசியமானது. குதிரை சுவைத்துத் தின்கிறது என்பதால் இந்த அவசியம் சிறிதும் குறைந்து விடுவதில்லை. தொழிலாளி வர்க்கப் பராமரிப்பும் மறுவுற்பத்தியும் மூலதன மறுவுற்பத்திக்கு அவசிய நிபந்தனையாக இருக்கிறது; எக்காலும் இருந்தே தீரும்.

முதலாளியும் அவரது அரசியல் பொருளாதார அறிஞரும் தொழிலாளியின் சொந்த நுகர்வின் எந்த பகுதி தொழிலாளி வர்க்கத்தை நிலைத்து நீடிக்கச் செய்வதற்கு அவசியமானதோ, முதலாளி நுகர்வதற்கு உழைப்புச் சக்தி வேண்டுமானால் எந்தப் பகுதி இன்றியமையாததோ அந்தப் பகுதியை மட்டும் திறனுடை நுகர்வாகக் கருதுகின்றனர். அந்தப் பகுதிக்கும் மேலே தொழிலாளி தனது மனநிறைவுக்காக நுகர்வது திறனிலா நுகர்வு என்கின்றனர்.

எதார்த்தத்தில் தொழிலாளியின் சொந்த நுகர்வு அவரைப் பொறுத்த வரை திறனிலா நுகர்வே; ஏனென்றால், தேவைகளால் வாடும் தனியாளைத்தான் அது மறுவுற்பத்தி செய்கிறது. வேறொன்றையும் அல்ல. ஆனால், முதலாளிக்கும் அரசுக்கும் அது திறனுடை நுகர்வாகும். ஏனென்றால் அவர்களின் செல்வத்தைப் படைக்கும் சக்தியை அது உற்பத்தி செய்கிறது.

ரோமானிய அடிமை சங்கிலிகளால் பூட்டப்பட்டிருந்தான்; கூலித் தொழிலாளி கண்ணுக்குப் புலப்படாத இழைகளால் தனது அதிபரோடு கட்டுண்டிருக்கிறான்.

முதலாளித்துவ பொருளுற்பத்தி நிகழ்முறையே தொழிலாளியைத் தனது உழைப்புச் சக்தியை விற்க வேண்டியவராக ஓயாமல் திரும்பத் திரும்ப சந்தைக்கு அனுப்புகிறது.

அவர் அப்போது தன்னைத் தானே விற்றுக் கொள்வதும், தனது அதிபர்களை மாற்றிக் கொள்வதும், உழைப்புச் சக்தியின் சந்தை விலையில் ஏற்படுகிற அலைவுகளும் அவரது பொருளாதாரக் கொத்தடிமை நிலையை உண்டாக்குவதோடு கண்ணுக்குத் தெரியாமல் அதனை மறைத்திடவும் செய்கின்றன.

முதலாளித்துவப் பொருளுற்பத்தியானது முதலாளித்துவ உறவை --- ஒரு பக்கம் தொழிலாளியையும் மறு பக்கம் கூலித் தொழிலாளியையும் --- அது உற்பத்தியும் மறுவுற்பத்தியும் செய்கிறது.

Thursday, November 21, 2013

பகுதி 7: மூலதனத் திரட்டல்

பணத் தொகை உற்பத்திச் சாதனங்களாகவும் உழைப்புச் சக்தியாகவும் மாற்றம் பெறுவதுதான் மூலதனமாகச் செயல்படப் போகிற  மதிப்புத் தொகை எடுத்து வைக்கும் முதலடி.

முதலாளி தமது சரக்குகளை விற்கவும், விற்றுக் கிடைக்கிற பணத்தில் பெரும் பகுதியை மீண்டும் மூலதனமாக மாற்றவும் முடிந்திடல் வேண்டும் ... இதுவே மூலதனத் திரட்டுலுக்கான முதல் நிபந்தனை.

ஒரு புறம் முதலாளி அவர் உற்பத்தி செய்த சரக்குகளை அவற்றின் மதிப்புக்கே விற்பதாகக் கொள்கிறோம். மறு புறம்,  முதலாளித்துவ் உற்பத்தியாளரை உபரி-மதிப்பு முழுவதன் உடைமையாளாராக அல்லது, இன்னும் சரியாகச் சொன்னால், அவருடன் சேர்ந்து கொள்ளைப் பொருளை பகிர்ந்து கொள்வோர் அனைவருக்கும் பிரதிநிதியாகக் கொள்கிறோம்.

உபரி-மதிப்பு துண்டுகளாகப் பிளவுறுவதால் அதன் இயல்பு மாறிவிடுவதில்லை; எந்நிலைமைகளில் அது திரட்டலின் கூறுகளில் ஒன்றாகிறதோ அந்நிலைமைகளும் மாறி விடுவதில்லை. 

மூலதனத் திரட்டல் நிகழ்முறையின் சாமானிய அடிப்படை வடிவம், அதனை தோற்றுவிக்கிற சுற்றோட்ட நிகழ்ச்சியாலும், உபரி..மதிப்பு பிளவுறுவதாலும் மறைக்கப்படுகிறது.  ஆகவே, இந்நிகழ்முறையை சரிவரப் பகுத்தாய வேண்டுமானால், அதன் உள்ளியக்கச் செயற்பாட்டை மறைக்கிற புறத் தோற்றங்கள் யாவற்றையும் சிறிது நேரத்துக்கு கவனியாது விட்டுவிட வேண்டும்.

Tuesday, November 19, 2013

பாகம் 6. அத்தியாயம் 22: நாடுகளிடையிலான கூலி வேறுபாடுகள்.

நாட்டினுள் கூலியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களில் வெவ்வேறு சேர்க்கைகளது தொடராக எது தோற்றமளிக்கிறதோ, அது வெவ்வேறு நாடுகளிலும் ஒரே காலத்தில் தேசக் கூலி மட்டத்திலான வேறுபாடாக தோற்றமளிக்கக் கூடும். ஆகவே, வெவ்வேறு நாடுகளில் கிடைக்கும் கூலிகளை ஒப்பிடுகையில், உழைப்புச் சக்தியினது மதிப்பின் அளவிலான மாற்றங்களை நிர்ணயிக்கிற எல்லாக் காரணிகளையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். 

அந்தந்தத் தொழிலிலும் வெவ்வேறு நாடுகளிலும் கிடைக்கிற சராசரி தினக் கூலியை முதலில் ஒரேசீரான வேலை-நாளுக்கு உரியதாகப் பெயர்த்திட வேண்டும். பலன்வீதக் கூலி மட்டுமே உழைப்பின் உற்பத்தித் திறன், மும்முரம் இரண்டுக்கும் அளவு கோலாக இருக்க முடியுமென்பதால் நேரவீதக் கூலியையும் பலன்வீதக் கூலியாகப் பெயர்த்திட வேண்டும். 

உழைப்பின் சராசரி மும்முரம் நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. உலக உழைப்பின் சராசரி அலகு இந்த அளவுகோலின் அலகாகிறது.

முதலாளித்துவப் பொருளுற்பத்தி ஒரு நாட்டில் வளர்ச்சியடைந்திருக்கும் அதே விகிதத்தில், அங்கு உழைப்பின் தேச மும்முரமும் உற்பத்தித் திறனும் சர்வதேச மட்டத்துக்கு மேலாக உயர்கின்றன. ஆகவே ஒரே வேலை நேரத்தில் வெவ்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் ஒரே வகைச் சரக்குகளின் வெவ்வேறு அளவுகளது சர்வதேச மதிப்புகள் சமமற்றவை; இம்மதிப்புகள் வெவ்வேறு விலைகளில், அதாவது சர்வதேச மதிப்புகளுக்கேற்ப மாறுபடும் பணத் தொகைகளில் தெரிவிக்கப்படுகின்றன. ஆதலால், பணத்தின் ஒப்பீட்டு மதிப்பானது அதிகம் வளர்ச்சியடைந்த முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையுடன் கூடிய நாட்டில் குறைவாக வளர்ச்சியடைந்த நாட்டிலிருப்பதை விடக் குறைவாய் இருக்கும். அப்படியானால், பணமாகத் தெரிவிக்கப்படும் உழைப்புச் சக்தியின் சமதையான பெயர்க் கூலியும் இரண்டாவது நாட்டிலிருப்பதை விட முதலாவது நாட்டில் அதிகமாய் இருக்கும்; இதிலிருந்து உண்மைக் கூலியும், அதாவது தொழிலாளிக்குக் கிடைக்கக்கூடிய வாழ்வுச் சாதனங்களும் இவ்வாறே அதிகமாய் இருக்கும் எனக் கொள்ளலாகாது.

தினக் கூலி அல்லது வாரக் கூலி போன்ற நேரவீதக் கூலி இரண்டாவது நாடிலிருப்பதை விட முதலாவது நாட்டில் அதிகமாய் இருப்பினும் உழைப்பின் ஒப்பீட்டு விலை --- அதாவது உபரி..மதிப்பும் உற்பத்திப் பொருளின் மதிப்பு ஆகிய இரண்டுடனும் ஒப்பிடுகையிலான உழைப்பின் விலை --- முதலாவதிலிருப்பதை விட இரண்டாவதில் அதிகமாய் இருக்கக் காணலாம். 

பகுதி 6. அத்தியாயம் 21: பலன்வீதக் கூலி

நேரவீதக் கூலி என்பது உழைப்புச் சக்தியின் மதிப்பு அல்லது விலையின் மாறிய வடிவம்தான் என்பது போலவே, பலன்வீதக் கூலியும் நேரவீதக் கூலியின் மாறிய வடிவமே தவிர வேறில்லை.

இந்த உழைப்பின் விலை நேரவீதக் கூலியைப் போல் 'உழைப்புச் சக்தியின் தின மதிப்பு / குறிப்பிட்ட மணிகள் கொண்ட வேலை..நாள்' என்ற பின்னத்தால் அன்றி, உற்பத்தியாளரின் உழைப்புத் திறனாலேயே நிர்ணயிக்க்ப்படுவது போலவும் தோன்றுகிறது.

இவ்விரு கூலி வடிவங்களும் ஒரே வகைத் தொழிற் கிளைகளில் ஒருங்கே நிலவுகின்றன. ஒரு வடிவம் இன்னொரு வடிவத்தை  விட முதலாளித்துவ‌ பொருளுற்பத்தியின் வளர்ச்சிக்கு சாதகமாய் இருக்கக் கூடும் என்றாலும், கூலி கொடுப்பதலான வடிவ வேறுபாட்டால் கூலியின் அடிப்படை இயல்பு எவ்விதத்தும் மாறுவதில்லை.

பலன்வீதக் கூலி எந்த மதிப்புறவுக்கும் நேரடித் தெரிவிப்பாவதில்லை. உருப்படியின் மதிப்பு அதில் அடங்கிய வேலை நேரத்தால் அளவிடப்படுவதில்லை; இதற்கு மாறானதே நடைபெறுகிறது. தொழிலாளி செலவிட்டிருக்கும் வேலை நேரம் அவர் உற்பத்தி செய்திருக்கும் உருப்படிகளின் தொகையால் அளவிடப்படுகிறது. நேர வீதக் கூலியில் உழைப்பு நேரடியாக அதன் கால அளவால் அளவிடப்படுகிறது; பலன்வீதக் கூலியில் உழைப்பு குறிப்பிட்ட கால அளவில் அது உருவாக்கிய உற்பத்திப் பொருட்களின் அளவால் அளவிடப்படுகிறது. 

இங்கே உழைப்பின் தரம் வேலையாலேயே கட்டுப்படுத்தப்படுகிறது; பலன்வீதக் கூலி முழுமையாகக் கிடைக்க வேண்டுமானால் வேலை  சராசரி நிறைவுள்ளதாக இருக்க வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில், பலன்வீதக் கூலியானது கூலிக் குறைப்புகள், முதலாளித்துவ மோசடி ஆகியவற்றுக்கு மிகவும் பயன்படுகிறது. 

இது உழைப்பின் மும்முரத்தை அளப்பதற்குத் துல்லியமான அளவுகோலை முதலாளிக்கு வழங்குகிறது. முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட பரிசோதனை முறையில்  நிர்ணயிக்கப்பட்ட அளவிலான சரக்குகளில் உருக்கொண்ட வேலை நேரம் மட்டுமே சமுதாய வழியில் அவசியமான வேலை நேரமாகக் கணக்கிடப்பட்டு, அவ்வாறே ஊதியம் பெறுகிறது. 

பலன்வீதக் கூலியானது முன்னர் விவரித்த நவீன "வீட்டு உழைப்புக்கும்," அதே போல் சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைக்கான படிநிலை அமைப்புக்கும் அடிக்கல் நாட்டுகிறது. முதலாளிக்கும் கூலித் தொழிலாளிக்குமிடையே புல்லுருவிகள் ஊடுருவலுக்கும், "உழைப்பின் உள்குத்தகைக்கும்" வழி வகுக்கிறது. இந்த இடைத் தரகர்களின் ஆதாயம் முழுவதும் முதலாளி செலுத்துகிற உழைப்பு..விலைக்கும் அவ்விலையில் அவர்கள் தொழிலாளியிடம் உள்ளபடியே போய்ச்சேர விடுகிற பகுதிக்கும் இடையிலான வேறுபாட்டிலிருந்தே வருகிறது.

தலைமைத் தொழிலாளி தனக்கென ஒரு விலை எடுத்துக் கொண்டு, தன் துணையாட்களை வேலைக்கமர்த்தி அவர்களுக்கு ஊதியமளிக்க பொறுப்பேற்கிறார். தொழிலாளி மீதான முலதனத்தின் சுரண்டல் இங்கே தொழிலாளி மீதான தொழிலாளியின் சுரண்டல் மூலம் நடந்தேறுகிறது. 

பலன்வீதக் கூலி தரப்படுகையில், தன் உழைப்புச் சக்தியை முடிந்த வரை கடுமையாக வருத்திக் கொள்வதில் தொழிலாளிக்குத் தனிப்பட்ட அக்கறை இருப்பது இயல்பே; உழைப்பின் இயல்பான மும்முரத்தை எளிதாகவே மேலும் உயர்த்துவதற்கு இது வகை செய்கிறது. 

வேலை-நாள் நீட்டப்படும் போது --- பலன் வீதக் கூலி மாறாதிருந்தாலும் கூட தவிர்க்க முடியாத படி உழைப்பின் விலை வீழ்ச்சியடையவே செய்கிறது.

நேர வீதக் கூலியில், சில விதிவிலக்குகளோடு கூட, ஒரே வகை வேலைக்கு ஒரே கூலிதான்; பலன்வீதக் கூலியிலோ, வேலை நேரத்தின் விலை உற்பத்திப் பொருளின் குறிப்பிட்ட அளவால் அளவிடப்பட்ட போதிலும், தொழிலாளர்களின் தனி வேறுபாடுகளுக்கேற்ப நாட் கூலி அல்லது வாரக் கூலி மாறுபடும். 

பலன்வீதக் கூலி முறை தனியாளின் கூலியை சராசரிக் கூலிக்கும் கூடுதலாய் உயர்த்தும் அதே போது, இந்த சராசரியை குறைத்திடும் போக்குடையது. 

முதலாளித்துவ பொருளுற்பத்தி முறைக்கு மிகவும் இசைவான கூலி வடிவம் பலன்வீதக் கூலியே என்பது தெளிவாகிறது.       

உழைப்பின் மாறும் உற்பத்தித் திறனுகேற்ப ஒரே அளவு உற்பத்திப் பொருள் வெவ்வேறான வேலை நேரங்களைக் குறிக்கிறது. ஒர் உருப்படியில் செலவிடப்படும் வேலை நேரம் குறைவதற்கேற்ப பலன்வீதக் கூலி குறைந்து போகிறது. இந்த மாற்றம் முதலாளிக்கும் தொழிலாளிக்குமிடையே ஓயாத போராட்டத்துக்கு இட்டுச் செல்கிறது. காரணம் என்னவெண்றால் பலன்வீதக் கூலியிலான மாற்றத்தை ஓர் உபாயமாக்கி முதலாளி உள்ளபடியே உழைப்பின் விலையைக் குறைக்கிறார்; அல்லது உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதோடு கூடவே உழைப்பின் மும்முரமும் அதிகரிக்கிறது. அல்லது, தொழிலாளி பலன்வீதக் கூலியின் புறத்தோற்றத்தையே உண்மையெனக் கொண்டு விடுகிறார். அதாவது ஊதியமளிக்கப்படுவது தமது உழைப்புச் சக்திக்காக அல்ல, உற்பத்திப் பொருளுக்காகவே எனக் கொண்டு விடுக்கிறார்.        

Monday, November 18, 2013

பகுதி 6. அத்தியாயம் 20 நேரவீதக் கூலி

உழைப்புச் சக்தியின் ஒரு நாளைய மதிப்பு, ஒரு வாரத்திய மதிப்பு போன்றவற்றின் மாறிய வடிவமே நேரவீதக் கூலி (time-wages) வடிவமாகும்; இவ்விதம் நாட் கூலி வாரக் கூலி என்பது போன்ற வடிவமாகும். 

உழைப்புச் சக்தியின் பரிவர்த்தனை..மதிப்புக்கும், இந்த மதிப்பு உருமாறுவதால் கிடைக்கும் தேவைப் பண்டங்களின் ஒட்டுமொத்தத்துக்கும் இடையிலான வேற்றுமை இப்போது பெயர்க் கூலிக்கும் (nominal wages) உண்மைக் கூலிக்கும் (real wages) இடையிலான வேற்றுமையாக வெளிப்படுகிறது. 

தொழிலாளி தனது ஒரு நாளைய அல்லது ஒரு வார உழைப்புக்காகப் பெறுகிற பணத் தொகை அவரது பெயர்க் கூலியின் அல்லது மதிப்பு வழிப்பட்ட கூலியின் அளவாக அமைகிறது. ஆனால், வேலை-நாளின் கால அளவிற்கேற்ப, அதாவது அன்றாடம் உள்ளபடியே ஆற்றப்படுகிற உழைப்பின் அளவுக்கேற்ப, ஒரு நாட் கூலி அல்லது வாரக் கூலி உழைப்பின் வெவ்வேறான விலைகளை, அதாவது ஒரே அளவு உழைப்புக்கான வெவ்வேறான பணத் தொகைகளைக் குறிக்கலாம்.

உழைப்புச் சக்தியின் சராசரி அன்றாட மதிப்பை வேலை..நாளின் மணிகளின் சராசரி எண்ணிக்கையால் வகுத்து, உழைப்பின் சராசரி விலையைக் கணக்கிடுகிறோம். இவ்விதம் பெறப்படும் வேலை-மணியின் விலை உழைப்பின் விலையைக் கணக்கிடுவதற்கான அலகாகப் பயன்படுகிறது. 

எனவே, உழைப்பின் விலை இடைவிடாது குறைந்து சென்றாலும், தினக் கூலி, வாரக் கூலி போன்றவை மாறாதிருக்கலாம் என்று தெரிகிறது.

உழைப்பின் அளவு விரிவு தொடர்பாக அதிகரிப்பதற்கு பதில் மும்முரம் தொடர்பாக அதிகரித்தாலும், இதே விளைவு ஏற்படக் கூடும். 

உழைப்பின் விலையோ, ஒன்று, உழைப்புச் சக்தியின் மதிப்புகேற்ப, அல்லது அதன் விலைக்கும் மதிப்புக்கும் இடையிலான வேறுபாட்டுக்கேற்ப மாறுபடுகிறது. மறு புறம், உழைப்பின் விலை குறிப்பிட்டதாய் இருக்க, தினக் கூலி அல்லது வாரக் கூலி ஒரு நாளைய உழைப்பு அல்லது ஒரு வாரத்திய உழைப்பின் அளவைப் பொறுத்தது.

தொழிலாளியின் ஜீவனத்துக்கு அவசியமான உழைப்பு நேரம் அவருக்குக் கிடைக்காமலே, முதலாளி அவரிடமிருந்து குறிப்பிட்ட அளவு உபரி-உழைப்பைக் கறக்கலாம். 

சட்டமியற்றி வேலை-நாளுக்கு வரம்பிடுவது இம்மாதிரியான அக்கிரமத்துக்கு முடிவு..கட்டுகிறது.

உழைப்புச் சக்தியின் தின மதிப்பு / வேலை-நாள் என்ற பின்னத்தில் அடியெண் அதிகரித்தால் மேலெண் இன்னும் கூட அதிக விரைவோடு அதிகரிக்கிறது. உழைப்புச் சக்தியின் மதிப்பு அதன் தேய்வுக்கும் தளர்வுக்கும் ஏற்ப மேலும் மேலும் அதிகமாவதால், உழைப்புச் சக்தி இயங்கும் காலம் அதிகரிக்கையில் அதன் மதிப்பும் அதிகரிக்கிறது. கால அதிகரிப்பைக் காட்டிலும் விரைவாக அதிகரிக்கிறது. வேலை நேரத்துக்குச் சட்ட வரம்புகளின்றி நேரவீதக் கூலி  பொது வழக்காயுள்ள பல தொழிற்கிளைகளில், வேல-நாளை குறிப்பிட்ட வரம்பு வரை மட்டுமே இயல்பானதென்று கருதும் பழக்கம் தன்னியல்பாய் வளர்ந்துள்ளது. இந்த வரம்பைக் கடந்ததும் வேலை நேரமானது மிகை-நேரம் (over-time) ஆகிறது.  

இயல்பானதெனப்படும் நேரத்தில் உழைப்பின் விலை மிகக் குறைவாயிருப்பதால் தொழிலாளி ஓரளவேனும் போதுமான கூலி பெறும் பொருட்டு மேலான ஊதியதுக்குரிய மிகை-நேரத்தில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வேலை-நாளுக்குச் சட்டப் படி வரம்பிடுவது இந்த விபரீதத்துக்கு முடிவு கட்டுகிறது.

சரக்கின் விலையில் ஒரு பகுதி உழைப்பின் விலையால் ஆனது. உழைப்பு விலையின் ஊதியமில்லாப் பகுதியைச் சரக்கின் விலையில் சேர்க்கத் தேவையில்லை. வாங்குபவருக்கு இதனை இலவசமாகத் தரலாம். போட்டியினால் ஏற்படுகிற முதல் நிலை இது.  இரண்டாவது நிலை என்னவென்றால், வேலை-நாளின் நீட்டிப்பால் படைக்கப்படும் அசாதாரண உபரி-மதிப்பில் குறைந்தது ஒரு பகுதியையும் கூட சரக்கின் விற்பனை விலையில் சேர்க்காமல் விட்டு விடலாம். இவ்விதத்தில் சரக்கின் விற்பனை விலை அசாதாரணமாய் குறைந்து போவதானது முதலில் சிதறலாக எழுந்து, பையப்பைய நிலைத்து விடுகிறது. இந்த குறைந்த விற்பனை  விலை அது முதற்கொண்டு அதீதமான வேலை நேரமும் கேவலமான கூலியும் என்ற நிலைமைக்கு மாறா அடிப்படையாகிறது.

அடக்க விலைக்கு குறைவாக ரொட்டி விற்கும் குறைவிலைக்காரர் ஆட்களின் உழைப்பிலிருந்து அதிகமாய்ப் பெறுவதன் மூலம் அதனை ஈடு செய்ய வேண்டும். குறை விலைக்காரரிடம் வேலை செய்வோரில் பெரும் தொகையினர் கொடுத்த கூலியை வாங்கிக் கொள்வது தவிர வேறு வழியில்லாத அந்நியர்களும் இளைஞர்களும் ஆவர்.

வழக்கமான உழைப்பு நேரத்தின் விலையில் போலவே, இந்தக் கூடுதல் ஊதியத்திலும் ஊதியமில்லா உழைப்பு அடங்கியுள்ளது.         

Sunday, November 17, 2013

பகுதி 6: கூலி. அத்தியாயம் 19: உழைப்புச் சக்தியின் மதிப்பும், அதோடு விலையும் கூலியாக மாற்றமடைதல்

சரக்கின் மதிப்பு என்பதென்ன? அதன் உற்பத்தியில் செலவிடப்பட்ட சமுதாய உழைப்பின் புறவய வடிவமே. இந்த மதிப்பின் அளவினை அளப்பது எப்படி? அதில் அடங்கியுள்ள உழைப்பின் அளவைக் கொண்டே.

நேரடியாகப் பணத்தை, அதாவது ஈடேற்றம் செய்யப்பட்ட உழைப்பை உயிருள்ள உழைப்புக்குப் பரிவர்த்தனை செய்து கொள்வதால் நிகழ்வது என்ன? ஒன்று, முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் அடிப்படையில் மட்டுமே தங்கு தடையின்றி வளர்ச்சி பெறக் கூடிய மதிப்பு விதி ஒழிந்து விடும்; அல்லது, நேரடியாகக் கூலியுழைப்பை ஆதாரமாய்க் கொண்ட முதலாளித்துவப் பொருளுற்பத்தியே ஒழிந்து விடும். 

சமமில்லாத அளவுகளை இப்படிச் சமமாக்குவது மதிப்பு நிர்ணயிப்பை ஒழித்து விடுவது மட்டுமல்ல. தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் இந்த முரண்பாட்டை விதியாக வகுத்துரைப்பதும் முடியாத காரியம்.

சரக்கின் மதிப்பு உள்ளபடியே அதில் ஈடேற்றம் செய்யப்பட்டுள்ள உழைப்பின் அளவால் நிர்ணயிக்கப்படாமல், அதன் உற்பத்திக்கு அவசியமான உயிருள்ள உழைப்பின் அளவால் நிர்ணயிக்கப்படுவதால் இந்த அபத்தம் பேரபத்தமாகிறது.

உழைப்பாளி விற்பது அவரது உழைப்புச் சக்தியையே. உழைப்பானது மதிப்பின் சாரமும், உள்ளார்ந்த அளவையும் ஆகும்; ஆனால் அதற்கென்று மதிப்பேதுமில்லை.

"உழைப்பின் மதிப்பு" என்ற தெரிவிப்பில், மதிப்பென்ற கருத்து அறவே இல்லாதொழிக்கப்படுவது மட்டுமல்ல. உள்ளபடியே நேர்முரணானதாகவும் மாற்றப்படுகிறது. இத்தெரிவிப்பு பூமியின் மதிப்பு என்பது போல் கற்பனையான ஒன்று. ஆயினும், இந்த கற்பனை தெரிவிப்புகள் உற்பத்தி உறவுகளிலிருந்தே உதிக்கின்றன. இந்த சாரம்ச உறவுகளின் புலப்பாட்டு வடிவங்களைக் குறிக்கும் கருத்தினங்கள். பலவும் அவற்றின் தோற்றத்தில் நேர்முரணாய்க் காட்சியளிப்பது அரசியல் பொருளாதாரம் தவிர ஒவ்வொரு விஞ்ஞானத்துக்கும் பிரசித்தமானதே. 

அரசியல் பொருளாதாரம் உழைப்பின் தற்செயலான விலைகளை ஊடகமாகக் கொண்டு உழைப்பின் மதிப்பை வந்தடையலாம் என்று நினைத்தது. வேறு எந்தச் சரக்கின் மதிப்பையும் போலவே, இந்த மதிப்பையும் உற்பத்திச் செலவால் நிர்ணயிக்க வேண்டியிருந்தது. ஆனால் உற்பத்திச் செலவு  ---தொழிலாளியின் உற்பத்திச் செலவு, அதாவது தொழிலாளியையே உற்பத்தி அல்லது மறு உற்பத்தி செய்யும் செலவு --- என்பது என்ன?

உழைப்பின் மதிப்பென்று பொருளாதார அறிஞர்கள் கூறுவது, உண்மையில் தொழிலாளியாக உருக்கொண்டுள்ள உழைப்புச் சக்தியின் மதிப்பே.

உழைப்புச் சக்தியின் ஒரு நாளைய மதிப்பு தொழிலாளியின் ஆயுளில் குறிப்பிட்ட கால அளவை வைத்துக் கணக்கிடப்படுகிறது; இந்தக் கால அளவு வேலை-நாளின் குறிப்பிட்ட கால அளவைப் பொறுத்தமைகிறது.

உழைப்பின் மதிப்பு என்பது உழைப்புச் சக்திக்கான ஒவ்வாத் தெரிவிப்பே ஆகும் என்பதால், உழைப்பின் மதிப்பு எப்போதுமே அது உற்பத்தி செய்கிற மதிப்பை விடக் குறைவாகவே இருக்கும். 

அடிமை உழைப்பில், அடிமையானவர் அவரது வாழ்வுச் சாதனங்களின் மதிப்பை மாற்றீடு செய்யும் ‍ --- ஆகவே உண்மையில் தனக்காக மட்டுமே வேலை செய்யும் --- வேலை-நாட் பகுதியும் கூட அடிமையுடமையாளருக்கான உழைப்பாகத் தோன்றுகிறது. அடிமையின் உழைப்பு முழுவதுமே ஊதியமிலா உழைப்பாகத் தோன்றுகிறது. மாறாக, கூலியுழைப்பில் உபரி..உழைப்பு அல்லது ஊதியமில்லா உழைப்பு என்பதே கூட ஊதிய உழைப்பாகத் தோன்றுகிறது. அங்கே சொத்துறவு அடிமை தனக்காகவே ஆறும் உழைப்பை மறைத்து விடுகிறது; இங்கே பண உறவு கூலித் தொழிலாளி ஊதியம் பெறாமலே ஆற்றும் உழைப்பை மறைத்து விடுகிறது.

எனவே உழைப்புச் சக்தியின் மதிப்பும் விலையும் கூலி வடிவமாக, அல்லது உழைப்பின் மதிப்பும் விலையுமாகவே மாற்றமடைவது எவ்வளவு தீர்மானகர முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்த புறத்தோற்ற வடிவம் உள்ளபடியே நிலவும் உறவை கண்ணிற்படாமல் மறைத்து, அந்த உறவிற்கு நேர்விரோதமான ஒன்றைக் காட்டுகிறது; கொச்சைப் பொருளாதார அறிஞர்களின் சப்பைக்கட்டுவாதத் தகிடுதத்தங்களுக்கெல்லாம் இந்த புறத்தோற்ற வடிவமே அடிப்படை.

தொல்சீர் அரசியல் பொருளாதாரம் தட்டுத் தடுமாறி உண்மை நிலவரத்தை அநேகமாய் வந்தடைந்த போதிலும், அதனை உணர்வு பூர்வமாய் வரையறுக்கவில்லை. முதலாளித்துவத் தோலைக் களைந்தெறியாமல் இருக்கும் வரை அதனால் இதைச் செய்ய முடியாது.

Saturday, November 16, 2013

பகுதி 5. அத்தியாயம் 18: பல்வேறு உபரி-மதிப்பு வீத சூத்திரங்கள்

உபரி-மதிப்பு வீதச் சூத்திரங்கள்:

1. உபரி-மதிப்பு / மாறும்-மூலதனம் (s / v) = உபரி-மதிப்பு / உழைப்புச் சக்தியின் மதிப்பு = உபரி-உழைப்பு / அவசிய-உழைப்பு 

2. உபரி-உழைப்பு / வேலை-நாள் = உபரி-மதிப்பு / உற்பத்திப் பொருளின் மதிப்பு = உபரி-உற்பத்திப் பொருள் / மொத்த உற்பத்திப் பொருள்

வேலை-நாள் 12 மணி நேரம், அவசிய உழைப்பு நேரம் 6 மணி நேரம், உழைப்புச் சக்தியின் மதிப்பு 3 ஷில்லிங் எனக் கொள்வோம்.

6 மணி நேர உபரி-உழைப்பு / 6 மணி நேர அவசிய-உழைப்பு = 3 ஷில்லிங் உபரி-மதிப்பு / 3 ஷில்லிங் மாறும் மூலதனம் = 100%

இரண்டாவது சூத்திரத்திலிருந்து பெறப்படுவது முற்றிலும் வேறானது:

6 மணி நேர உபரி-உழைப்பு / 12 மணி நேர வேலை-நாள் = 3 ஷில்லிங் உபரி-மதிப்பு / 6 ஷில்லிங் படைத்த மதிப்பு = 50%

இந்த வழிச் சூத்திரங்கள் மெய்யாகவே வெளியிடுவது, வேலை-நாள் அல்லது வேலை-நாளில் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு முதலாளிக்கும் தொழிலாளிக்குமிடையே பங்கிடப்படும் விதத்தையே. இந்த சூத்திரம் மூலதனம் தற்பெருக்கமடையும் வீதத்தின் நேரடித் தெரிவிப்புகளாகக் கொண்டால் உபரி-உழைப்பு அல்லது உபரி-மதிப்பு ஒரு போதும் 100 சதவீதத்தை எட்ட முடியாது என்ற தவறான விதி செல்லத்தக்கதாகி விடும். 100 சதவிகிதத்தை அடைய வேண்டுமானால் முழு நாளும் (அதாவது ஒரு வாரத்தின் அல்லது ஆண்டின் சராசரி நாளும்) உபரி உழைப்புக்கே போய் விட வேண்டுமானால், அவசிய உழைப்பு பூஜியமாகி விட வேண்டும். ஆனால், உபரி-உழைப்பு அவசிய-உழைப்பையே சார்ந்து இருப்பதால், அவசிய உழைப்பு மறைந்து போனால் உபரி உழைப்பும் மறைந்து போகிறது. 

உபரி-மதிப்பையும் உழைப்புச் சக்தியின் மதிப்பையும் படைக்கப்பட்ட மதிப்பின் பின்னங்களாக காட்டுவது முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையிலிருந்து உதித்தெழுகிற ஒரு பழக்கம். 

மூன்றாவது சூத்திரம் ஒன்று உண்டு.

உபரி-மதிப்பு / உழைப்புச் சக்தியின் மதிப்பு = உபரி-உழைப்பு / அவசிய-உழைப்பு = ஊதியமில்லா உழைப்பு / ஊதிய உழைப்பு 

மூலதனம் என்பது உழைப்பின் மீதான ஆதிக்கம் மட்டுமன்று. சாராம்சத்தில் அதி ஊதியமில்லா உழைப்பின் மீதான ஆதிக்கமாகும். உபரி-மதிப்பு அனைத்துமே சாராம்சத்தில் ஊதியமில்லா உழைப்பின் பொருளாக்கம்தான். 

பகுதி 5அத்தியாயம் 17: உழைப்புச் சக்தியின் விலையிலும் உபரி..மதிப்பிலும் பருமன் மாற்றங்கள்

உழைப்புச் சக்தியின் மதிப்பு சராசரித் தொழிலாளிக்கு வழக்கமாகத் தேவைப்படும் அவசிய வாழ்க்கைத் தேவைகளின் மதிப்பால் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த அவசிய தேவைகளின் அளவு குறிப்பிட்ட சமுதாயத்தில் குறிப்பிட்ட காலத்தில் தெரிந்ததே; எனவே இதனை மாறாப் பருமனாகக் கருதலாம். 

சரக்குகள் அவற்றின் மதிப்புக்கே விற்கப்படுகின்றன என்றும், உழைப்புச் சக்தியின் விலை எப்போதாவது அதன் மதிப்பை விட உயர்ந்தாலும், ஒரு போதும் அம்மதிப்பை விடக் குறைவதில்லை என்றும் அனுமானித்துக் கொள்வோம்.

உபரி-மதிப்பினதும் உழைப்புச் சக்தியின் விலையினதுமான ஒப்பீட்டு பருமன்கள் (1) வேலை..நாளின் கால அளவு (2) உழைப்பின் இயல்பான மும்முரம் அல்லது உழைப்பின் மும்முரப் பருமன் (3) உழைப்பின் உற்பத்தித் திறன் ஆகிய மூன்று காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன.

I வேலை-நாளின் கால அளவும் உழைப்பின் மும்முரமும் மாறாதவை. உழைப்பின் உற்பத்தித் திறன் மாறுவது.

1.உழைப்பின் உற்பத்தித் திறனும், அத்துடன் உற்பத்திப் பண்டத் திரளும், உற்பத்தி செய்யப்பட்ட தனிப்பட்ட சரக்கு ஒவ்வொன்றின் விலையும் எப்படி மாறுபட்டாலும், குறிப்பிட்ட கால அளவுள்ள வேலை-நாள் எப்போதுமே ஒரே அளவு மதிப்பைப் படைக்கிறது.

2. உபரி-மதிப்பும் உழைப்புச் சக்தியின் மதிப்பும் எதிரெதிர் திசைகளில் மாறுபடுகின்றன. உழைப்பின் உற்பத்தித் திறனிலான மாறுபாடு -- அதன் பெருக்கம் அல்லது சுருக்கம் -- உழைப்புச் சக்தியின் மதிப்பில் எதிர்த் திசையிலும், உபரி-மதிப்பில் அதே திசையிலும் மாறுபாட்டைத் தோற்றுவிக்கிறது. 

உபரி-மதிப்பு, உழைப்புச் சக்தியின் மதிப்பு ஆகியவற்றின் கூட்டுத் தொகை வேலை-நாள் படைக்கிற மதிப்பாகும். உபரி-மதிப்பின் அறுதிப் பருமனிலோ, அல்லது உழைப்புச் சக்தியினது மதிப்பின் அறுதிப் பருமனிலோ மாற்றம் ஏதும் ஏற்பட வேண்டுமானால், அதே போது அவற்றின் ஒப்பீட்டுப் பருமன்களிலும் -- அதாவது ஒன்றுக்கொன்று உள்ள ஒப்பளவிலும் -- மாற்றம் ஏற்பட்டாக வேண்டும்.  அவை ஒருங்கே உயர்வதோ குறைவதோ சாத்தியமில்லை. 

உழைப்பின் உற்பத்தித் திறன் உயராமல் உழைப்புச் சக்தியின் மதிப்பு குறைய முடியாது; ஆதலால் உபரி-மதிப்பு உயர முடியாது. உழைப்பின் உற்பத்தித் திறனிலான அதிகரிப்பு உழைப்புச் சக்தியின் மதிப்பில் வீழ்ச்சியையும், அதன் விளைவாக உபரி-மதிப்பில் உயர்வையும் தோற்றுவிக்கிறது. மறு புறம் இவ்வுற்பத்தித் திறனிலான குறைவோ உழைப்புச் சக்தியின் மதிப்பில் உயர்வையும், உபரி-மதிப்பில் வீழ்ச்சியையும் தோறுவிக்கிறது.

உழைப்பின் உற்பத்தித் திறனில் குறிப்பிட்ட மாற்றத்தின் விளைவாக உபரி-மதிப்பில் ஏற்படும் அதிகரிப்பு அல்லது குறைவின் விகிதம் வேலை-நாளில் உபரி-மதிப்பாக உருப்பெறும் பகுதியின் ஆரம்பப் பருமனைப் பொறுத்ததாகும்; அந்த நாட்பகுதி எந்த அளவுக்குச் சிறியதோ, மாற்றத்தின் விகிதம் அந்த அளவுக்குப் பெரியது; அந்த நாட்பகுதி எந்த அளவுக்குப் பெரியதோ, மாற்றத்தின் விகிதம் அந்த அளவுக்குச் சிறியது.

3. உபரி-மதிப்பில் ஏற்படும் அதிகரிப்பு அல்லது குறைவு, எப்போதுமே, இதற்கிணையாய் உழைப்புச் சக்தியின் மதிப்பில் ஏற்படும் குறைவு அல்லது அதிகரிப்பின் விளைவாகுமே தவிர, காரணமாகாது. 

கீழ் வரம்பாகக் கொண்டு உழைப்புச் சக்தியின் விலையில் ஏற்படும் வீழ்ச்சியின் அளவானது, ஒரு புறத்தில் மூலதனத்தின் நெருக்குதலுக்கும் மறு புறத்தில் தொழிலாளி காட்டும் எதிர்ப்புக்கும் உள்ள ஒப்பீட்டு வலுவைப் பொறுத்ததே. 

உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரித்துக் கொண்டிருக்கும்போது, உழைப்புச் சக்தியின் விலை மேலும் மேலும் சரிந்து செல்வதும், ஆயினும் இதனுடன் கூடவே தொழிலாளியின் வாழ்வுச் சாதனங்களது திரள் இடைவிடாது பெருகிச் செல்வதும் சாத்தியமாகிறது. ஆனால் இந்நிலையிலும் கூட, உழைப்புச் சக்தியின் மதிப்பு குறைவதன் விளைவாய் உபரி-மதிப்பு அதற்கிணையாக உயரும். இவ்வாறு தொழிலாளியின் நிலைக்கும் முதலாளியின் நிலைக்கும் இடையிலான பெரும் பிளவு விரிந்த வண்ணமிருக்கும். 

இலாப வீதம் என்பது முன்னீடு செய்யப்பட்ட மொத்த மூலதனத்தோடு உபரி-மதிப்புக்குள்ள விகிதமாகும்; உபரி-மதிப்பு வீதம் என்பது அந்த மூலதனத்தின் மாறும் பகுதியோடு உபரி-மதிப்பிற்குள்ள விகிதமாகும். 

II வேலை-நாள் மாறாதது. உழைப்பின் உற்பத்தித் திறன் மாறாதது. உழைப்பின் மும்முரம் மாறுவது.

ஒரே கால அளவு கொண்ட இரு வேலை-நாட்களில் அதிக மும்முரமான உழைப்புடைய வேலை-நாள் அவ்வளவு அதிக மும்முரமில்லாத உழைப்புடைய வேலை-நாளை விட அதிக உற்பத்திப் பொருட்களில் உருக் கொள்கிறது. 

உழைப்பின் மும்முரம் அதிகமாகும் போது, அந்த மதிப்பு மாறாதிருக்கிறது; ஏனென்றால் ஒவ்வொரு பண்டத்துக்கும் முன் போல் அதே அளவு உழைப்பு செலவாகிறது. இங்கே உற்பத்திப் பண்டங்கள் ஒவ்வொன்றினதும் விலைகள் குறையாமல் உற்பத்திப் பண்டங்களின் தொகை அதிகமாவதைக் காண்கிறோம்.

ஆனால் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்போது குறிப்பிட்ட மதிப்பு முன்னிலும் அதிகமான உற்பத்திப் பண்ட திரளில் நிரவப்படுகிறது.

படைக்கப்படும் மதிப்பானது, உழைப்பின் மும்முரம் சமுதாயத்தில் அதன் இயல்பான மும்முரத்திலிருந்து விலகிச் செல்லும் அளவுக்கேற்ப மாறுபடுகிறது. எனவே குறிப்பிட்ட வேலை-நாள் முன் போல் மாறா மதிப்பைப் படைப்பதில்லை, மாறும் மதிப்பையே படைக்கிறது. 

இந்த மதிப்பு பிரிக்கப்பட்டு வருகிற இரு பகுதிகள் --- அதாவது உழைப்புச் சக்தியின் விலை, உபரி..மதிப்பு இரண்டுமே --- ஏககாலத்தில் சமமாகவோ சமமின்றியோ அதிகமாகலாம் என்பது தெளிவு.

உழைப்புச் சக்தியின் விலையிலான உயர்வு உழைப்புச் சக்தியின் மதிப்புக்கு மேல் விலை உயர்ந்திருப்பதைக் குறிக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. மாறாக, விலை உயர்வானது மதிப்பு வீழ்ச்சியோடு சேர்ந்து வரலாம். உழைப்புச் சக்தியின் விலையிலான உயர்வு அதன் அதிகரித்த தேய்மானத்துக்கு ஈடாகாத போதெல்லாம் இவ்வாறு நிகழ்கிறது. 

உழைப்பின் மும்முரம் ஒவ்வொரு தொழிற் கிளையிலும் ஏக காலத்திலும் சரிநிகராகவும் அதிகரித்தால், புதிய, உயர்ந்த மும்முர நிலை சமுதாயத்துக்குரிய இயல்பான நிலையாக மாறி விடும்; ஆகவே அது கணக்கில் கொள்ளப்படாது. ஆனால், அப்போதும் கூட உழைப்பின் மும்முரம் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறாக இருக்கும்; மதிப்பு விதியை சர்வதேச அளவில் பிரயோகிக்கையில் விளைவுகள் வெவ்வேறாகவே இருக்கும். ஒரு நாட்டின் கூடுதலான மும்முரமுள்ள வேலை-நாள் இன்னொரு நாட்டின் குறைவான மும்முரமுள்ள வேலை-நாளை விட அதிகப் பணத்தொகையால் குறிக்கப்படும்.

 III உழைப்பின் உற்பத்தித் திறனும் மும்முரமும் மாறாதவை. வேலை-நாளின் கால அளவு மாறுவது.

1. வேலை-நாள் அதன் கால அளவுக்கேற்ற விகிதத்தில் அதிகமான அல்லது குறைவான அளவு மதிப்பைப் படைக்கிறது. இவ்வாறு அது படைப்பது மதிப்பின் மாறுபடும் அளவே தவிர, மாறா அளவன்று.

2. உபரி-மதிப்பின் பருமனுக்கும் உழைப்புச் சக்தியினது மதிப்பின் பருமனுக்கும் இடையிலான உறவில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் உபரி-உழைப்பின், ஆதலால் உபரி-மதிப்பின் அறுதிப் பருமனிலான மாற்றத்திலிருந்து பிறக்கிறது. 

3. உபரி-உழைப்பின் நீட்டிப்பு உழைப்புச் சக்தியினது தேய்மானத்தின் மீது ஏற்படுத்தும் பிரதிபலிப்பின் விளைவாக மட்டுமே உழைப்புச் சக்தியின் அறுதி மதிப்பு மாற முடியும். இந்த அறுதி மதிப்பில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் உபரி-மதிப்பின் பருமலினான மாற்றத்தின் விளைவே தவிர, ஒருபோதும் அதன் காரணமன்று. 

வேலை..நாளை குறுக்குவதால் உழைப்புச் சக்தியின் மதிப்பிலோ, அவசிய..உழைப்பு நேரத்திலோ மாற்றம் ஏற்படுவதில்லை. உபரி..உழைப்பும் உபரி..மதிப்புமே குறைகின்றன. உபரி..மதிப்பின் அறுதிப் பருமனோடு கூடவே, அதன் ஒப்பீட்டுப் பருமனும் அதாவது மாறாதிருக்கும் பருமனையுடைய உழைப்புச் சக்தியின் மதிப்போடு ஒப்பளவிலான அதன் பருமனும் வீழ்கிறது. 

வேலை..நாளை நீட்டுவதால் உபரி..மதிப்பு அறுதியாகவும் ஒப்பளவிலும் அதிகரிக்கிறது. உழைப்புச் சக்தியின் மதிப்பில் அறுதி மாற்றம் ஏதும் இல்லையென்றபோதிலும் ஒப்பளவிலான வீழ்ச்சி ஏற்படுகிறது.  ஒரு நாள் உழைப்பு உருக்கொண்டிருக்கும் மதிப்பு அந்த நாளின் கால அளவுக்கேற்ப அதிகரிக்கிறது என்பதால், உபரி..மதிப்பும் உழைப்புச் சக்தியின் விலையும் சம அளவுகளிலோ சமமில்லா அளவுகளிலோ ஏககாலத்தில் அதிகரிக்கலாம் என்பது தெளிவு. 

IV ஒரே நேரத்தில் உழைப்பின் கால அளவிலும் உற்பத்தித் திறனிலும், மும்முரத்திலும் மாறுபாடுகள்.

உழைப்பின் உற்பத்தித் திறன் குறைகிற அதி நேரத்தில் வேலை-நாளை நீட்டுதல் :

உழைப்பின் உற்பத்தித் திறன் குறைகிற அதே நேரத்தில் வேலை..நாளை நீட்டும் போது, உபரி-மதிப்பின் ஒப்பீட்டுப் பருமன் குறைந்தாலும் அதன் அறுதிப் பருமன் மாறாது இருக்கலாம்; அதன் அறுதிப் பருமன் அதிகரித்தாலும் ஒப்பீட்டுப் பருமன் மாறாது இருக்கலாம்; போதுமான அளவு வேலை..நாளை நீட்டினால், இரண்டுமே அதிகரிக்கலாம்.

உழைப்பின் மும்முரமும் உற்பத்தித் திறனும் அதிகரிக்கிற அதே நேரத்தில் வேலை..நாளைக் குறுக்குதல்:

உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரித்தாலும், மும்முரம் அதிகரித்தாலும், விளைவு ஒரே மாதிரியானதே. இரண்டில் எது அதிகரித்தாலும், குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்களின் திரள் அதிகமாகிறது. எனவே, தொழிலாளிக்கு அவரது வாழ்வு சாதனங்களையோ அவற்றின் சமதையையோ உற்பத்தி செய்ய தேவைப்படும் வேலை-நாட்பகுதி குறுகிப் போகிறது. வேலை-நாளின் குறைந்தபட்ச கால அளவு இந்த அவசியமான, ஆனால் சுருங்கத்தக்க வேலை-நாட்பகுதியால் நிர்ணயிக்கப்படுகிறது. வேலை-நாள் முழுவதுமே இந்தப் பகுதியின் கால அளவாகச் சுருங்குவதானால், உபரி-உழைப்பு மறைந்து போய்விடும்; மூலதனத்தின் ஆளுகையில் இப்படி நிகழ வாய்ப்பே இல்லை. முதலாளித்துவப் பொருளுற்பத்தி வடிவத்தை இல்லாதொழிப்பதன் முலம் மட்டுமே, வேலை..நாளின் கால அளவை அவசிய-உழைப்பு நேரமாகக் குறைக்கலாம். ஆனால் அந்நிலையிலும் கூட அவசிய-உழைப்பு நேரத்தின் வரம்புகள் விரிந்து செல்லும். ஒரு புறம் ஏனெனில், "வாழ்வுச் சாதனங்கள்" என்ற கருத்து கணிசமாக விரிவடையும்; தொழிலாளி முற்றிலும் வேறுவிதமான வாழ்க்கைத் தரத்தை கோருவார். மறுபுறம் ஏனெனில், இப்போது உபரி- உழைப்பாக இருப்பதன் ஒரு பகுதி -- அதாவது சேம வைப்புக்கும் திரட்டலுக்குமான நிதியை உண்டாக்கும் உழைப்பு -- அப்போது அவசிய..உழைப்பாகக் கணக்கிடப்படும்.

உழைப்பின் உற்பத்தித் திறன் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகரிக்கிறதோ, வேலை-நாளை அவ்வளவுக்கு அவ்வளவு குறைக்கலாம். வேலை-நாள் எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கப்படுகிறதோ, உழைப்பின் மும்முரத்தை அவ்வளவுக்கு அவ்வளவு அதிகரிக்கலாம். சமூகக் கண்ணோட்டத்தில், உழைப்புச் சிக்கனம் அதிகரிக்கும் அதே விகிதத்தில் உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது; உற்பத்திச் சாதனங்களின் சிக்கனம் மட்டுமல்ல, பயனற்ற உழைப்பை முற்றாகத் தவிர்ப்பதும் கூட உழைப்புச் சிக்கனம் என்பதில் அடங்கும். முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை ஒரு புறம் ஒவ்வொரு தனித்தொழிலிலும் சிக்கனத்தை அமலாக்கும் அதே நேரத்தில் மறுபுறம், தன் அராஜகப் போட்டி முறையால், உழைப்புச் சக்தியும் சமுதாய உற்பத்திச் சாதனங்களும் அக்கிரமமான விதத்தில் விரயம் செய்யப்படும் நிலையைத் தோற்றுவிக்கிறது. இப்போது இன்றியமையாதவை என்றாலும், தம்மளவில் தேவையில்லாத உத்தியோகங்கள் ஏராளமாய் தொற்றுவிக்கப்படுவது பற்றி சொல்லவே வேண்டாம்,.

உழைப்பின் மும்முரமும், உற்பத்தித் திறனும் குறிப்பிட்டதாய் இருக்கையில், வேலையானது சமுதாயத்தின் உடல்திறனுள்ள உறுப்பினர்கள் அனைவரிடையிலும் மேலும் மேலும் சமமாய்ப் பிரிக்கப்படுவதற்கேற்ப, இயற்கையால் அவசியமாக்கப்படும் உழைப்பின் சுமையை சமுதாயத்தின் குறிப்பிட்ட ஒரு அடுக்கு தன் தோளிலிருந்து பிறிதொரு அடுக்கின் தோளுக்கு மாற்ற மேலும் மேலும் சக்தியற்றதாக்கப்படுவதற்கேற்ப, பொருளுற்பத்திக்காக சமுதாயம் செலவிடவேண்டிய நேரம் மேலும் மேலும் குறைந்து செல்லும்; ஆதலால் தனியாள் அறிவுத் துறையிலும் சமூகத் துறையிலும் தடையின்றி வளர்ச்சி பெறுவதற்குக் கிடைக்கும் நேரம் மேலும் மேலும் கூடிச் செல்லும். ஆனால், வேலை..நாள் இப்படிக் குறுக்கப்படுவதற்கு ஓர் இறுதி வரம்பு உண்டு; உழைப்பு சகலருக்குமான ஒன்றாகும் போது இந்த வரம்பு வரப்பெறுகிறது. முதலாளித்துவ சமுதாயத்தில், பெருந்திரளான மக்களின் ஆயுட்காலம் முழுவதையும் உழைப்பு நேரமாக மாற்றுவதன் மூலம், ஒரு வர்க்கத்துக்கு வெட்டிப் பொழுது கிடைக்க வழி செய்யப்படுகிறது. 

Friday, November 15, 2013

பகுதி 5: அறுதி உபரி..மதிப்பின் உற்பத்தியும் ஒப்பீட்டு உபரி..மதிப்பின் உற்பத்தியும். அத்தியாயம் 16: அறுதி உபரி..மதிப்பும் ஒப்பீட்டு உபரி..மதிப்பும்

உழைப்பு நிகழ் முறை முற்றிலும் தனிப்பட்ட முறையிலானதாய் உள்ள வரை, தனியொரு உழைப்பாளி -- பிற்பாடு தனித்தனியாகிற -- எல்லாப் பணிகளையும் தன்னில் ஒன்றுபடுத்துகிறார்.

இயற்கையான உடம்பில் மூளையும் கையும் ஒன்றுக்கொன்று பணிவிடை செய்வது போல, உழைப்பு நிகழ்முறை கையுழைப்பை மூளையுழைப்புடன் ஒன்றுபடுத்துகிறது. 

உற்பத்திப் பண்டமானது தனியாளின் நேரடி உற்பத்தியாக இல்லாது போய், கூட்டுத் தொழிலாளியால் பொதுவில் உற்பத்தி செய்யப்படும் போது சமுதாய உற்பத்தியாகி விடுகிறது. உற்பத்தி திறனுள்ள விதத்தில் உழைத்திட வேண்டுமானால், நேரிடையாகக் கையுழைப்பில் ஈடுபட இனியும் அவசியமில்லை; கூட்டுத் தொழிலாளியின் அங்கமாய் அமைந்து, அந்த கூட்டின் சார்நிலைப் பணிகளில் ஒன்றை நிறைவேற்றினாலே போதும். முழு மொத்தமாய் பரிசீலிக்கும்போது கூட்டுத் தொழிலாளிக்கு பொருந்தும் இந்த விளக்கம் இந்தக் கூட்டின் ஒவ்வொரு உறுப்பினரையும் தனித்தனியாக எடுத்துக் கொள்ளும் போது பொருந்துவதில்லை. 

முதலாளித்துவப் பொருளுற்பத்தி என்பது சரக்குகளின் உற்பத்தி மட்டுமல்ல; சாராம்சத்தில் அது உபரி-மதிப்பின் உற்பத்தியாகும். முதலாளிக்காக உபரி-மதிப்பை உற்பத்தி செய்து, மூலதனத்தின் தற்பெருக்கத்துக்காக இவ்விதம் வேலை செய்கிற தொழிலாளி மட்டுமே திறனுடைத் தொழிலாளி ஆவார்.

திறனுடைத் தொழிலாளி என்ற கருத்து, வேலைக்கும் பயனுள்ள விளைவுக்கும் இடையிலான, உழைப்பாளிக்கும் உழைப்பின் உற்பத்திப் பொருளுக்கும் இடையிலான உறவை மட்டுமின்றி, ஒரு குறிப்பான, சமூக வழிப்பட்ட உற்பத்தி உறவையும் -- வரலாற்று வழியில் பிறந்திருப்பதும், உழைப்பாளியை உபரி-மதிப்பை படைக்கும் நேரிடைச் சாதனமாக முத்திரையிடுவதுமான உறவை -- குறிக்கிறது.  

தொழிலாளி தனது உழைப்புச் சக்தியின் மதிப்புக்கு ஈடான சமதையை மட்டும் உற்பத்தி செய்வதற்கும் அப்பால் வேலை-நாளை நீட்டி, அந்த உபரி-உழைப்பை மூலதனம் தனதாக்கிக் கொள்வதுதான் அறுதி உபரி..மதிப்பின் உற்பத்தி. அது முதலாளித்துவ அமைப்பின் பொதுவான அடிநிலையாகவும், ஒப்பீட்டு..உபரி மதிப்பின் உற்பத்திக்கான தொடக்க நிலையாகவும் அமைகிறது.  

ஒப்பீட்டு உபரி-மதிப்பின் உற்பத்தி உழைப்பின் தொழில்நுட்ப நிகழ்முறைகளையும், சமுதாயத்தின் இயைபையும் அடியோடு புரட்சிகரமாக மாற்றியமைக்கிறது. உழைப்பு மூலதனத்துக்கு வடிவ அளவில் கீழ்ப்படுவதன் (formal subjection of labour to capital ) அடிப்படையில் தன்னியல்பாய் உருவாகி வளர்கிறது. இந்த வளர்ச்சியின் போது, உழைப்பு மூலதனத்துக்கு வடிவ அளவில் மட்டும் கீழ்ப்படுவதற்கு பதிலாய் மெய்யாகவே கீழ்ப்படலாகிறது.

இதற்கு முன்பான இடைநிலையில் கடுவட்டி மூலதனம் அல்லது வணிக மூலதனம் ஒட்டுண்ணி போல் உற்பத்தியாளர்களை உறிஞ்சுகிறது. சில இடைநிலை வடிவங்கள் நவீனத் தொழில் துறையின் பின்னணியில் -- முற்றிலும் மாறிப்போன முக லட்சணத்துடன்தான் என்றாலும் -- இங்குமங்குமாய் தலைத் தூக்குகின்றன.

திட்டவட்டமான முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை ஓர் உற்பத்திக் கிளை முழுவதையும் வெற்றி கொண்டதுமே, ஒப்பீட்டு உபரி-மதிப்பை உற்பத்தி செய்வதற்கான சாதனமாக மட்டும் இருந்த நிலை மறைகிறது; எல்லா முக்கிய கிளைகளையும் அது வெற்றி கொள்ளும் போது, இந்நிலை மறைந்தே போகிறது. இப்போது அது பொதுவானதும், சமுதாயத்தில் மேலோங்கியதுமான பொருளுற்பத்தி வடிவமாகி விடுகிறது.

ஒரு நோக்கு நிலையில், அறுதி உபரி-மதிப்புக்கும் ஒப்பீட்டு உபரி..மதிப்புக்கும் இடையிலான வேறுபாடு என்பது வெறும் மாயத் தோற்றமே எனலாம்.

உழைப்பின் உற்பத்தித் திறனும், அதன் இயல்பான மும்முரமும் குறிப்பிட்டதாய் இருக்க, வேலை..நாளை உள்ளபடியே நீட்டுவதன் மூலம் மட்டுமே உபரி-மதிப்பு விகிதத்தை உயர்த்தமுடியும்; மறுபுறம், வேலை..நாளின் கால அளவு குறிப்பிட்டதாய் இருக்க, வேலை..நாளின் கூறுகளது -- அதாவது அவசிய உழைப்பினதும், உபரி..உழைப்பினதும் -- ஒப்பீட்டு பருமன்களிலான மாற்றத்தின் மூலம் மட்டுமே உபரி-மதிப்பு வீதத்தை உயர்த்த முடியும்; கூலியானது உழைப்புச் சக்தியின் மதிப்புக்கும் கீழே வீழாதிருக்க வேண்டுமானால், உழைப்பின் உற்பத்தித் திறனிலோ மும்முரத்திலோ மாற்றம் செய்தால்தான் இந்த ஒப்பீட்டு பருமன்களை மாற்ற முடியும்.

தொழிலாளிக்கு அவரது நேரம் முழுவதும் அவருக்கென்றும் அவரது இனத்துக்கென்றும் அவசிய வாழ்வுச் சாதனங்களை உற்பத்தி செய்து கொள்வதற்குத் தேவைப்படுமானால், மற்றவர்களுக்கு இலவசமாக வேலை செய்ய அவருக்கு நேரம் இருக்காது. பெரும் சொத்துடையாளர் வர்க்கமே இருக்காது.

ஒருவனின் உபரி-உழைப்பு பிறிதொருவனின் வாழ்க்கைத் தேவையாகிற நிலைமை பிறப்பது, மனிதர்கள் மிருகங்களின் தரத்துக்கு மேலாக உயர்ந்த பிறகுதான்; எனவே, அவர்களது உழைப்பு ஓரளவுக்கு சமுதாய உழைப்பான பிறகுதான்.

தேவைகள் அவற்றை நிறைவு செய்யும் சாதனங்களோடும் அச்சாதனங்களைக் கொண்டும் வளர்கிறவை. ஆரம்பகாலத்தில், சமுதாயத்தில் பிறரது உழைப்பை கொண்டு வாழும் பிரிவு, நேரடி உற்பத்தியாளரின் பெருந்திரளோடு ஒப்பிடுமிடத்து, மிகச் சிறியதே. உழைப்பின் உற்பத்தித் திறனிலான முன்னேற்றத்தோடு கூடவே, சமுதாயத்தின் அந்த சிறு பிரிவு அறுதியாகவும், ஒப்பளவிலும் அதிகமாகிறது.

கட்டாயம் நிறைவு செய்தாக வேண்டிய இயற்கைத் தேவைகளின் தொகை எவ்வளவுக்கு எவ்வளவு சொற்பமோ, இயற்கையான மண் வளமும்சாதகமான தட்பவெப்ப நிலைமைகளும் எவ்வள்வுக்கெவ்வளவு அதிகமோ, உற்பத்தியாளரின் பராமரிப்புக்கும் மறுவுற்பத்திக்கும் அவசியமான உழைப்பு நேரம் அவ்வளவுக்கு அவ்வளவு குறைவாகும். எனவே அவரது உழைப்பில் அவருக்கானது போக பிறருக்கென எஞ்சுவது அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாயிருக்க முடியும்.

புராதன எகிப்தின் பிரம்மாண்டமான வடிவமைப்புகள், அதன் மக்கள் தொகையினது அளவின் விளைவு என்பதைக் காட்டிலும், அந்த மக்கள் தொகையில் இலவசமாக இவ்வேலைக்கு தங்குதடையின்றிக் கிடைத்த பெரும் விகிதத்தின் விளைவென்றே சொல்ல வேண்டும். அவசிய..உழைப்பு நேரம் குறைவதற்கேற்ப உபரி..உழைப்பில் அதிகமாய் ஈடுபடமுடிவது எப்படி தனிப்பட்ட உழைப்பாளிக்குப் பொருந்துமோ, அவ்வாறே உழைக்கும் மக்கள் திரளுக்கும் பொருந்தும்.  அவர்களில் அவசிய வாழ்வுச் சாதனங்களிம் உற்பத்திக்குத் தேவைப்படும் பகுதியினர் எவ்வளவு குறைவோ அவ்வளவு அதிகமான மற்றொரு பகுதியினரை வேறு வேலையில் ஈடுபடச் செய்யலாம்.

முதலாளித்துவப் பொருளுற்பத்தி கோலோச்சுகையில் மற்றெல்லா நிலைமைகளும் மாறாதிருக்க, வேலை நாளின் கால அளவு குறிப்பிட்டதாய் இருக்க உபரி-உழைப்பின் அளவு உழைப்பின் பௌதிக நிலைமைகளுக்கேற்ப, குறிப்பாக மண் வளத்துக்கு ஏற்ப மாறுபடும்.

இந்த பொருளுற்பத்தி முறை இயற்கையை மனிதன் ஆள்வதை அடிப்படையாகக் கொண்டதாகும்.

மூலதனத்தின் தாய் நாடாக இருப்பது மித வெப்ப மண்டலமே அன்றி பூத்துக் குலுங்கும் வெப்பமண்டலங்கள் அல்ல.

இந்தியாவிலும் பாரசீகத்திலும் செயற்கையாய் அமைக்கப்பட்ட பாசனக் கால்வாய்கள் நிலத்துக்கு அவசியமான நீரை அளிப்பதுடன், மலைகளிலிருந்து கிடைக்கும் வண்டல் மண் உருவில் தாது உரங்களையும் அந்நீருடன் சேர்த்துக் கொண்டுவந்து கொடுக்கின்றன.

சாதகமான இயற்கை நிலைமைகளால் மட்டும் எதார்த்தத்தில் உபரி-உழைப்பும் ஆதலால் உபரி-மதிப்பு மற்றும் உபரி-உற்பத்திப் பொருளும் கிடைத்து விடுவதில்லை; இவை கிடைப்பதற்கான சாத்தியப்பாடுதான் உண்டாகிறது. உழைப்பின் இயற்கை நிலைமைகளிலான வேறுபாட்டின் பயனாய், ஒரே அளவிலான உழைப்பு வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறான தேவைகளின் திரளகளை நிறைவு செய்கிறது. ஆதலால் ஏனைய அமிசங்கள் ஒத்திருக்கும் நிலைமைகளில் அவசிய..உழைப்பு நேரம் வேறுபடுகிறது.

தொழிலாளி உபரி-உழைப்பின் வடிவில் விலை கொடுத்தே தனது ஜீவனத்துக்காக உழைக்கிற உரிமையை வாங்க வேண்டியிருக்கும்.

தொழிலாளி வாரந்தோறும் ஆறு நாள் வேலை செய்ய வேண்டியிருப்பதற்கும், ஐந்து நாள் உபரி..உழைப்பைத் தர வேண்டியிருப்பதற்கும் இயற்கையின் வண்மை விளக்கமாவதில்லை. அவரது அவசிய..உழைப்பு நேரம் வாரத்துக்கு ஒரு  நாளாக வரம்புக்குட்படுவதற்கே அது விளக்கமாகும்.

உழைப்பின் சமூக உற்பத்தித் திறன் -- வரலாற்று வழியில் வளர்ச்சியடைந்த இந்த சமூக உற்பத்தித் திறன் -- மட்டுமல்லாமல், அதன் இயற்கையான உற்பத்தித் திறனும் அந்த உழைப்பு இணைக்கப் பெறும் மூலதனத்தின் உற்பத்தித் திறனாய்ப் பார்வைக்குத் தெரிகிறது.

ரிகார்டோ ஒருபோதும் உபரி..மதிப்பின் மூலாதாரம் (origin of surplus-value ) குறித்துக் கவலைப்படவில்லை. அவர் அதை முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையில் உள்ளார்ந்த ஒன்றெனக் கருதுகிறார்; அவரது பார்வையில் இவ்வுற்பத்தி முறையே சமுதாயப் பொறுளுற்பத்தியின் இயற்கை வடிவமாகும்.

உழைப்பின் உற்பத்தித் திறனே இலாபத்தின் (உபரி-மதிப்பின் எனக் கொள்க) மூலகாரணமென்று அவரது மரபினர் வெளிப்படையாகவே பறைசாற்றினர். எப்படியும் இது, வணிக ஊக்கவாதிகளோடு ஒப்பிடுங்கால் முன்னேற்றமே.

உபரி-மதிப்பின் மூலாதாரம் பற்றிய பிரச்சினையை ஆழக் கிளறுவது ஆபத்தாகவே முடியும் என்பதை இந்த முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்கள் சரியாகவே உள்ளூர உணர்ந்திருக்கிறார்கள். 

Friday, November 8, 2013

பகுதி 4. அத்தியாயம் 15: இயந்திர சாதனமும் நவீனத் தொழில் துறையும். பிரிவு 9 மற்றும் 10

தொழிற்சாலைச் சட்டங்கள். துப்புரவு, கல்வி பற்றிய அவற்றின் சரத்துக்கள். இங்கிலாந்தில் அவற்றின் பொதுவான விரிவாக்கம்.

இச்சட்டங்களில் துப்புரவு தொடர்பான சரத்துகள் மிகவும் சொற்பமே --- இந்த சரத்துக்களின் சொல்லாட்சியும் கூட முதலாளிகள் அவற்றைக் கடைபிடிக்காமல் ஏய்ப்பதற்கே தோதாய் உள்ளன.

இந்த சரத்துக்களின்படி, தொழிலதிபர்கள் தங்களது தொழிலாளர்களின் கைகால்களைக் காத்திடும் சாதனங்களுக்கென சிறிதளவே செலவு செய்தாக வேண்டும் என்றாலும், இவற்றை வெறித்தனமாக எதிர்த்தது தடையில்லா வாணிபக் கொள்கையினரது கோட்பாட்டின் லட்சணத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறது. இந்த கோட்பாடு என்ன சொல்கிறது என்றால், முரண்பட்டு மோதுகிற நலன்களைக் கொண்ட சமுதாயத்தில் ஒவ்வொரு தனியாளும் தனது தனிப்பட்ட நன்மை ஒன்றையே நாடுவதன் மூலம் தவிர்க்க முடியாமலே பொது நலத்தை முனேற்றுகிறாராம்.

இயந்திர சாதன வரலாறு இதுவரை கண்டிராத அளவுக்கு எத்தனையோ விபத்துக்கள் எத்தனையோ வழிகளில் ஏற்படுகின்றன. 

இவை ஒவ்வொன்றையும், சில ஷில்லிங் செலவிட்டு மிகவும் சாமானிய ஏற்பாடுகளைச் செய்திருந்தால், தடுத்திருக்கலாம்.

சுத்தத்தையும் சுகாரத்தையும் பராமரிப்பதற்கான சாமானிய ஏற்பாடுகளையும் கூட பாராளுமன்றச் சட்டங்களின் மூலமே திணிக்க வேண்டி இருக்கிறதென்றால், முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையின் தன்மை பட்டவர்த்தனமாகிறதல்லவா? 

சுவாசிப்பதற்கு 500 கன அடி இடவசதி அவசியம். இதனை மூலதனத்திடமிருந்து பெறமுடியவில்லை என்று துப்புரவு அதிகாரிகள், தொழில் துறை விசாரணை ஆணையர்கள், தொழிற்சாலை ஆய்வாளர்கள் எல்லோருமே ஓயாமல் திரும்ப திரும்ப சொல்கிறார்கள். மூலதனம் என்று ஒன்று இருப்பதற்கு தொழிலாளர்களிடையே காச நோயும், ஏனைய நுரையீரல் நோய்களும் நிலவுவது அத்தியாவசிய நிலைமையாகும் என்று இவர்களெல்லாம் பறைசாற்றுகிறார்கள் என்பதே இதன் பொருள்.

தொழிற்சாலைச் சட்டத்தில் கல்வி சம்பந்தமான சரத்துக்கள் மொத்தத்தில் போதாக்குறையானவை என்றாலும் குழந்தைகளை வேலைக்கமர்த்துவதற்கான இன்றியமையா நிபந்தனையாக ஆரம்பக் கல்வியைக் குறிப்பிடுகின்றன. 

முறையாகப் பள்ளி சென்று படிக்கும் குழந்தைகளின் கல்வியில் பாதியளவே கிடைத்தது என்றாலும், தொழிற்சாலைக் குழந்தைகள் அதே அளவும் பல சந்தர்ப்பங்களில் இன்னும் அதிகமாகவும் கற்றுக் கொண்டார்கள் என்று தொழிற்சாலை ஆய்வாளர்கள் பள்ளி ஆசிரியர்களை விசாரித்து சீக்கிரமே கண்டறிந்தார்கள்.   

ஆங்கிலேய எழுத்தச்சுத் தொழிலில் பழகு தொழிலாளர்களை முழு திறனுள்ள அச்சிடுவோராக மலர பயிற்சி அளிக்கப்பட்டது. படிக்கவும் எழுதவும் தெரிந்திருப்பது அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் தொழிலின் தேவையாக இருந்தது. அச்சு இயந்திரம் வந்ததும் இதெல்லாம் மாறிப் போயிற்று. அதில் வேலை செய்வோர் இருவகைப்பட்டவர்கள்; வயது வந்த இயந்திரப் பொறுப்பாளர்கள் ஒரு வகை; இயந்திரத்தின் அடியில் காகிதத் தாள்களைப் பரப்புவது, அல்லது அச்சிடப்பட்ட தாள்களை அதிலிருந்து எடுக்கும் அலுப்பு தட்டும் வேலையைச் செய்யும் சிறுவர்கள் இன்னொரு வகை. 

அவர்களது கூலி  சிறுவர்களுக்கு சற்று அதிகமே என்றாலும், அவர்கள் வளர வளர அதற்கேற்ற விகிதத்தில் அதிகமாவதில்லை. குழந்தைக்குரிய இந்த வேலைக்கு லாயக்கில்லாத அளவுக்கு வயதானதுமே அச்சிடும் நிறுவனங்களிலிருந்து அவர்கள் நீக்கப்படுகிறார்கள்.

கைத்தொழிலும் பட்டறைத் தொழிலும் சமுதாயப் பொருளுற்பத்தியின் பொதுவான அடிப்படையாக இருக்கும் வரை, உற்பத்தியாளரைப் பிரத்தியேகமாக ஒரு கிளைக்குக் கீழ்பட்டவராக்குவது, அவரது வேலையின் பன்முகத் தன்மையைச் சிதைப்பது வளர்ச்சி ஏணியில் அவசியமான ஒரு படியாகும். 

மாற்றத்துக்கு இங்குமங்கும் காரணமாகிற ஒன்றே ஒன்று உழைப்புக் கருவிகளில் படிப்படியாக ஏற்படும் மாறுதலே. ஆனால் இந்த உழைப்புக் கருவிகளின் வடிவமும் கூட, அனுபவம் வாயிலாய் திட்டவட்டமாக நிலைப் படுத்தப்பட்ட பின், மாறுதலுக்கு வாய்ப்பின்றி கெட்டிப்பட்டு விடுகிறது.

மனிதர்களிடமிருந்து அவர்களது சமுதாயப் பொருளுற்பத்தி நிகழ்முறையை மறைத்த மூடுதிரையை, தன்னியல்பாய்ப் பிரிந்த பல்வேறு உற்பத்திக் கிளைகளையும் வெளியாருக்கு மட்டுமல்லாமல், தீட்சை பெற்றவர்களுக்கும் கூட புரியா புதிர்களாக்கிய மூடுதிரையை நவீனத் தொழில் துறை கிழித்தெறிந்தது. அது கடைப்பிடித்த கோட்பாடு (ஒவ்வொரு நிகழ்முறையையும் அதிலடங்கிய இயக்கங்களாக --- அவற்றை மனிதக் கரத்தால் நிறைவேற்றும் சாத்தியப்பாட்டைக் கருதாமலே --- பகுப்பதென்ற கோட்பாடு) தொழில் நுட்பவியல் என்ற நவீன கால விஞ்ஞானத்தைத் தோற்றுவித்தது.

ஒரு நிகழ்முறையின் நடப்பு வடிவத்தை நவீனத் தொழில் துறை இறுதியான ஒன்றாகக் கருதிச் செயல்படுவதில்லை. எனவே சென்ற உற்பத்தி முறைகளெல்லாம் சாராம்சத்தில் மாற்றத்துக்கு எதிரானவையாய் இருக்க, நவீனத் தொழில் துறையின் தொழில் நுட்ப அடித்தளம் புரட்சிகரமானதாய் இருக்கிறது.  இயந்திர சாதனத்தின் மூலமும் இரசாயன நிகழ்முறைகளின் மூலமும், இதர பல வழிகளிலும் அது உற்பத்தியின் தொழில் நுட்ப அடித்தளத்தில் மட்டுமல்லாமல், தொழிலாளியின் செயற்பாடுகளிலும் உழைப்பு நிகழ்முறையின் சமூக இணைவுகளிலும் கூட ஓயாமல் மாற்றங்களை உண்டாக்கிய வண்ணமுள்ளது. இவ்வழியில் அது சமுதாயத்தில் நிகழும் உழைப்புப் பிரிவினையையும் புரட்சிகரமான முறையில் மாற்றுகிறது.

ஆயினும் அதன் முதலாளித்துவ வடிவத்தில், பழைய உழைப்புப் பிரிவினையை அதன் கெட்டிப்பட்ட தனித் திறப்பாட்டுகளுடன் கூட அப்படியே வார்ப்பிடுகிறது.

மறுபுறம் வேலை மாறுபாட்டை உற்பத்தியின் ஓர் அடிப்படை விதியாக ஏற்க நவீன தொழில் துறை கட்டாயப்படுத்துகிறது. மாறுபட்ட வேலைக்கு தொழிலாளி தகுதி பெற்றிருப்பதையும், அவரது மாறுபட்ட திறப்பாடுகள் கூடுமான அளவுக்கு வளர்ச்சியடைவதையும் அவ்வாறே அடிப்படை விதியாக ஏற்க வேண்டியதாகிறது. இந்த விதியின் முறையான செயல்பாட்டுக்கு உற்பத்தி முறையைத் தகவமைப்பதென்ற பிரச்சினை சமுதாயத்துக்கு ஜீவ மரணப் பிரச்சினையாகிறது. இன்றைய நுணுக்கத் தொழிலாளிக்கு பதிலாய், நவீனத் தொழில் துறையானது முழு வளர்ச்சி பெற்ற தனி மனிதனை தோற்றுவிக்குமாறு சமுதாயத்தை மெய்யாகவே கட்டாயப்படுத்துகிறது.

தொழிலாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்துக்கு வரும் போது ... தவிர்க்க முடியாமல் வந்தே திரும் .... தத்துவம், நடைமுறை இரு விதத்திலுமான தொழில் நுட்ப போதனை தொழிலாளி வர்க்கப் பள்ளிகளில் அதற்குரிய இடத்தைப் பெறும் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது. பழைய உழைப்புப் பிரிவினையை ஒழிப்பதே நுரைத்தெழுகிற இத்தகைய புரட்சிகர செயற்பாடுகளின் இறுதி இலக்கு.

குறிப்பிட்ட உற்பத்தி வடிவத்தில் உள்ளார்ந்துள்ள பகைமைகளின் வரலாற்று வளர்ச்சியே அந்த உற்பத்தி வடிவம் கலைக்கப்பட்டு புதிய வடிவம் நிறுவப்படுவதற்குள்ள ஒரே வழியாகும் என்பது கைவினை உலகின் மணிவாசகம்.           

நவீன தொழில் துறையானது உற்பத்தி நிகழ்முறையில் ஒரு முக்கிய பங்கை வீட்டு வட்டத்துக்கு வெளியே மாதர்களுக்கும், இளம் வயதினருக்கும், இரு பாலான குழந்தைகளுக்கும் ஒதுக்குவதன் மூலம், குடும்பம் மற்றும் ஆண்‍-பெண்  உறவுகளின் இன்னுமுயர்ந்த வடிவத்துக்கான புதிய பொருளாதார அடித்தளத்தைப் படைக்கிறது.

1987 ஆம் வருட சட்ட நெறியில் நமக்கு எடுப்பாய்த் தெரிவது என்னவென்றால்: ஒரு புறம், முதலாளித்துவச் சுரண்டலின் அத்துமீறல்களுக்கு எதிராக இவ்வளவு அசாதாரண நடவடிக்கைகளை இவ்வளவு விரிவான முறையில், கோட்பாட்டளவில் ஏற்க வேண்டிய அவசியத்துக்கு ஆளும் வர்க்கங்களின் பாராளுமன்றம் உள்ளாகிறது; மறு புறம், அந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துகையில், அதனிடம் தயக்கமும், காழ்ப்புணர்ச்சியும், கெடுமதியும் காணப்படுகின்றன.  

1842 ஆம் வருட சுரங்க வேலைச் சட்டம் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும், பெண்களையும் சுரங்கங்களில் தரைக்கட்டியில் வேலை வாங்குவதற்கு தடை விதிப்பதுடன் நின்று கொண்டது

1866 "சுரங்கங்கள் பற்றிய பொறுக்குக் குழுவின் அறிக்கை ஐந்தே வரிகளில் முடித்து விடுகிறது. அது கூறுவதெல்லாம் இதுதான்: குழு சொல்வதற்கு ஒன்றுமில்லையாம்! மேலும் சில சாட்சிகளை விசாரிக்க வேண்டுமாம்.

(இப்படியாக பல்வேறு சட்டங்கள் பற்றி பல்வேறு விவரங்கள் தரப்பட்டுள்ளன)

நவீனத் தொழில் துறையும் விவசாயமும்

இயந்திர சாதனத்தின் உபயோகத்தால், ஆலைத் தொழிலாளிக்கு ஏற்படுவது போல் விவசாயத்தில் அவ்வளவாக உடலுக்குத் தீங்கு விளவதில்லை; ஆனால் உழைப்பாளர்களை நீக்கி விட்டு அவர்களுக்கு பதிலியாவதில் இயந்திர சாதனத்தின் செயல் அதிகம் தீவிரமாய் உள்ளது. குறைந்த எதிர்ப்பையே சந்திக்கிறது.

குறிப்பிட்ட காலத்துக்கு மண்ணின் வளத்தை அதிகமாக்குவதிலான முன்னேற்றம் எல்லாமே அந்த வளத்துக்குரிய நிலையான ஆதாரங்களைக் கெட்டழியச் செய்யும் வழியிலான முன்னேற்றம்தான். ஒரு நாடு எவ்வளவுகெவ்வளவு நவீனத் தொழில் துறையை அடிப்படையாகக் கொண்டு ---- உதாரணமாக அமெரிக்க ஐக்கிய நாட்டைப் போல் --- தன் வளர்ச்சியைத் தொடங்குகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அதிவேகமாய் இந்த அழிவு நிகழ்கிறது.