உழைப்புச் சக்தியின் ஒரு நாளைய மதிப்பு, ஒரு வாரத்திய மதிப்பு போன்றவற்றின் மாறிய வடிவமே நேரவீதக் கூலி (time-wages) வடிவமாகும்; இவ்விதம் நாட் கூலி வாரக் கூலி என்பது போன்ற வடிவமாகும்.
உழைப்புச் சக்தியின் பரிவர்த்தனை..மதிப்புக்கும், இந்த மதிப்பு உருமாறுவதால் கிடைக்கும் தேவைப் பண்டங்களின் ஒட்டுமொத்தத்துக்கும் இடையிலான வேற்றுமை இப்போது பெயர்க் கூலிக்கும் (nominal wages) உண்மைக் கூலிக்கும் (real wages) இடையிலான வேற்றுமையாக வெளிப்படுகிறது.
தொழிலாளி தனது ஒரு நாளைய அல்லது ஒரு வார உழைப்புக்காகப் பெறுகிற பணத் தொகை அவரது பெயர்க் கூலியின் அல்லது மதிப்பு வழிப்பட்ட கூலியின் அளவாக அமைகிறது. ஆனால், வேலை-நாளின் கால அளவிற்கேற்ப, அதாவது அன்றாடம் உள்ளபடியே ஆற்றப்படுகிற உழைப்பின் அளவுக்கேற்ப, ஒரு நாட் கூலி அல்லது வாரக் கூலி உழைப்பின் வெவ்வேறான விலைகளை, அதாவது ஒரே அளவு உழைப்புக்கான வெவ்வேறான பணத் தொகைகளைக் குறிக்கலாம்.
உழைப்புச் சக்தியின் சராசரி அன்றாட மதிப்பை வேலை..நாளின் மணிகளின் சராசரி எண்ணிக்கையால் வகுத்து, உழைப்பின் சராசரி விலையைக் கணக்கிடுகிறோம். இவ்விதம் பெறப்படும் வேலை-மணியின் விலை உழைப்பின் விலையைக் கணக்கிடுவதற்கான அலகாகப் பயன்படுகிறது.
எனவே, உழைப்பின் விலை இடைவிடாது குறைந்து சென்றாலும், தினக் கூலி, வாரக் கூலி போன்றவை மாறாதிருக்கலாம் என்று தெரிகிறது.
உழைப்பின் அளவு விரிவு தொடர்பாக அதிகரிப்பதற்கு பதில் மும்முரம் தொடர்பாக அதிகரித்தாலும், இதே விளைவு ஏற்படக் கூடும்.
உழைப்பின் விலையோ, ஒன்று, உழைப்புச் சக்தியின் மதிப்புகேற்ப, அல்லது அதன் விலைக்கும் மதிப்புக்கும் இடையிலான வேறுபாட்டுக்கேற்ப மாறுபடுகிறது. மறு புறம், உழைப்பின் விலை குறிப்பிட்டதாய் இருக்க, தினக் கூலி அல்லது வாரக் கூலி ஒரு நாளைய உழைப்பு அல்லது ஒரு வாரத்திய உழைப்பின் அளவைப் பொறுத்தது.
தொழிலாளியின் ஜீவனத்துக்கு அவசியமான உழைப்பு நேரம் அவருக்குக் கிடைக்காமலே, முதலாளி அவரிடமிருந்து குறிப்பிட்ட அளவு உபரி-உழைப்பைக் கறக்கலாம்.
சட்டமியற்றி வேலை-நாளுக்கு வரம்பிடுவது இம்மாதிரியான அக்கிரமத்துக்கு முடிவு..கட்டுகிறது.
உழைப்புச் சக்தியின் தின மதிப்பு / வேலை-நாள் என்ற பின்னத்தில் அடியெண் அதிகரித்தால் மேலெண் இன்னும் கூட அதிக விரைவோடு அதிகரிக்கிறது. உழைப்புச் சக்தியின் மதிப்பு அதன் தேய்வுக்கும் தளர்வுக்கும் ஏற்ப மேலும் மேலும் அதிகமாவதால், உழைப்புச் சக்தி இயங்கும் காலம் அதிகரிக்கையில் அதன் மதிப்பும் அதிகரிக்கிறது. கால அதிகரிப்பைக் காட்டிலும் விரைவாக அதிகரிக்கிறது. வேலை நேரத்துக்குச் சட்ட வரம்புகளின்றி நேரவீதக் கூலி பொது வழக்காயுள்ள பல தொழிற்கிளைகளில், வேல-நாளை குறிப்பிட்ட வரம்பு வரை மட்டுமே இயல்பானதென்று கருதும் பழக்கம் தன்னியல்பாய் வளர்ந்துள்ளது. இந்த வரம்பைக் கடந்ததும் வேலை நேரமானது மிகை-நேரம் (over-time) ஆகிறது.
இயல்பானதெனப்படும் நேரத்தில் உழைப்பின் விலை மிகக் குறைவாயிருப்பதால் தொழிலாளி ஓரளவேனும் போதுமான கூலி பெறும் பொருட்டு மேலான ஊதியதுக்குரிய மிகை-நேரத்தில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. வேலை-நாளுக்குச் சட்டப் படி வரம்பிடுவது இந்த விபரீதத்துக்கு முடிவு கட்டுகிறது.
சரக்கின் விலையில் ஒரு பகுதி உழைப்பின் விலையால் ஆனது. உழைப்பு விலையின் ஊதியமில்லாப் பகுதியைச் சரக்கின் விலையில் சேர்க்கத் தேவையில்லை. வாங்குபவருக்கு இதனை இலவசமாகத் தரலாம். போட்டியினால் ஏற்படுகிற முதல் நிலை இது. இரண்டாவது நிலை என்னவென்றால், வேலை-நாளின் நீட்டிப்பால் படைக்கப்படும் அசாதாரண உபரி-மதிப்பில் குறைந்தது ஒரு பகுதியையும் கூட சரக்கின் விற்பனை விலையில் சேர்க்காமல் விட்டு விடலாம். இவ்விதத்தில் சரக்கின் விற்பனை விலை அசாதாரணமாய் குறைந்து போவதானது முதலில் சிதறலாக எழுந்து, பையப்பைய நிலைத்து விடுகிறது. இந்த குறைந்த விற்பனை விலை அது முதற்கொண்டு அதீதமான வேலை நேரமும் கேவலமான கூலியும் என்ற நிலைமைக்கு மாறா அடிப்படையாகிறது.
அடக்க விலைக்கு குறைவாக ரொட்டி விற்கும் குறைவிலைக்காரர் ஆட்களின் உழைப்பிலிருந்து அதிகமாய்ப் பெறுவதன் மூலம் அதனை ஈடு செய்ய வேண்டும். குறை விலைக்காரரிடம் வேலை செய்வோரில் பெரும் தொகையினர் கொடுத்த கூலியை வாங்கிக் கொள்வது தவிர வேறு வழியில்லாத அந்நியர்களும் இளைஞர்களும் ஆவர்.
வழக்கமான உழைப்பு நேரத்தின் விலையில் போலவே, இந்தக் கூடுதல் ஊதியத்திலும் ஊதியமில்லா உழைப்பு அடங்கியுள்ளது.
No comments:
Post a Comment