Sunday, November 17, 2013

பகுதி 6: கூலி. அத்தியாயம் 19: உழைப்புச் சக்தியின் மதிப்பும், அதோடு விலையும் கூலியாக மாற்றமடைதல்

சரக்கின் மதிப்பு என்பதென்ன? அதன் உற்பத்தியில் செலவிடப்பட்ட சமுதாய உழைப்பின் புறவய வடிவமே. இந்த மதிப்பின் அளவினை அளப்பது எப்படி? அதில் அடங்கியுள்ள உழைப்பின் அளவைக் கொண்டே.

நேரடியாகப் பணத்தை, அதாவது ஈடேற்றம் செய்யப்பட்ட உழைப்பை உயிருள்ள உழைப்புக்குப் பரிவர்த்தனை செய்து கொள்வதால் நிகழ்வது என்ன? ஒன்று, முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் அடிப்படையில் மட்டுமே தங்கு தடையின்றி வளர்ச்சி பெறக் கூடிய மதிப்பு விதி ஒழிந்து விடும்; அல்லது, நேரடியாகக் கூலியுழைப்பை ஆதாரமாய்க் கொண்ட முதலாளித்துவப் பொருளுற்பத்தியே ஒழிந்து விடும். 

சமமில்லாத அளவுகளை இப்படிச் சமமாக்குவது மதிப்பு நிர்ணயிப்பை ஒழித்து விடுவது மட்டுமல்ல. தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் இந்த முரண்பாட்டை விதியாக வகுத்துரைப்பதும் முடியாத காரியம்.

சரக்கின் மதிப்பு உள்ளபடியே அதில் ஈடேற்றம் செய்யப்பட்டுள்ள உழைப்பின் அளவால் நிர்ணயிக்கப்படாமல், அதன் உற்பத்திக்கு அவசியமான உயிருள்ள உழைப்பின் அளவால் நிர்ணயிக்கப்படுவதால் இந்த அபத்தம் பேரபத்தமாகிறது.

உழைப்பாளி விற்பது அவரது உழைப்புச் சக்தியையே. உழைப்பானது மதிப்பின் சாரமும், உள்ளார்ந்த அளவையும் ஆகும்; ஆனால் அதற்கென்று மதிப்பேதுமில்லை.

"உழைப்பின் மதிப்பு" என்ற தெரிவிப்பில், மதிப்பென்ற கருத்து அறவே இல்லாதொழிக்கப்படுவது மட்டுமல்ல. உள்ளபடியே நேர்முரணானதாகவும் மாற்றப்படுகிறது. இத்தெரிவிப்பு பூமியின் மதிப்பு என்பது போல் கற்பனையான ஒன்று. ஆயினும், இந்த கற்பனை தெரிவிப்புகள் உற்பத்தி உறவுகளிலிருந்தே உதிக்கின்றன. இந்த சாரம்ச உறவுகளின் புலப்பாட்டு வடிவங்களைக் குறிக்கும் கருத்தினங்கள். பலவும் அவற்றின் தோற்றத்தில் நேர்முரணாய்க் காட்சியளிப்பது அரசியல் பொருளாதாரம் தவிர ஒவ்வொரு விஞ்ஞானத்துக்கும் பிரசித்தமானதே. 

அரசியல் பொருளாதாரம் உழைப்பின் தற்செயலான விலைகளை ஊடகமாகக் கொண்டு உழைப்பின் மதிப்பை வந்தடையலாம் என்று நினைத்தது. வேறு எந்தச் சரக்கின் மதிப்பையும் போலவே, இந்த மதிப்பையும் உற்பத்திச் செலவால் நிர்ணயிக்க வேண்டியிருந்தது. ஆனால் உற்பத்திச் செலவு  ---தொழிலாளியின் உற்பத்திச் செலவு, அதாவது தொழிலாளியையே உற்பத்தி அல்லது மறு உற்பத்தி செய்யும் செலவு --- என்பது என்ன?

உழைப்பின் மதிப்பென்று பொருளாதார அறிஞர்கள் கூறுவது, உண்மையில் தொழிலாளியாக உருக்கொண்டுள்ள உழைப்புச் சக்தியின் மதிப்பே.

உழைப்புச் சக்தியின் ஒரு நாளைய மதிப்பு தொழிலாளியின் ஆயுளில் குறிப்பிட்ட கால அளவை வைத்துக் கணக்கிடப்படுகிறது; இந்தக் கால அளவு வேலை-நாளின் குறிப்பிட்ட கால அளவைப் பொறுத்தமைகிறது.

உழைப்பின் மதிப்பு என்பது உழைப்புச் சக்திக்கான ஒவ்வாத் தெரிவிப்பே ஆகும் என்பதால், உழைப்பின் மதிப்பு எப்போதுமே அது உற்பத்தி செய்கிற மதிப்பை விடக் குறைவாகவே இருக்கும். 

அடிமை உழைப்பில், அடிமையானவர் அவரது வாழ்வுச் சாதனங்களின் மதிப்பை மாற்றீடு செய்யும் ‍ --- ஆகவே உண்மையில் தனக்காக மட்டுமே வேலை செய்யும் --- வேலை-நாட் பகுதியும் கூட அடிமையுடமையாளருக்கான உழைப்பாகத் தோன்றுகிறது. அடிமையின் உழைப்பு முழுவதுமே ஊதியமிலா உழைப்பாகத் தோன்றுகிறது. மாறாக, கூலியுழைப்பில் உபரி..உழைப்பு அல்லது ஊதியமில்லா உழைப்பு என்பதே கூட ஊதிய உழைப்பாகத் தோன்றுகிறது. அங்கே சொத்துறவு அடிமை தனக்காகவே ஆறும் உழைப்பை மறைத்து விடுகிறது; இங்கே பண உறவு கூலித் தொழிலாளி ஊதியம் பெறாமலே ஆற்றும் உழைப்பை மறைத்து விடுகிறது.

எனவே உழைப்புச் சக்தியின் மதிப்பும் விலையும் கூலி வடிவமாக, அல்லது உழைப்பின் மதிப்பும் விலையுமாகவே மாற்றமடைவது எவ்வளவு தீர்மானகர முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்த புறத்தோற்ற வடிவம் உள்ளபடியே நிலவும் உறவை கண்ணிற்படாமல் மறைத்து, அந்த உறவிற்கு நேர்விரோதமான ஒன்றைக் காட்டுகிறது; கொச்சைப் பொருளாதார அறிஞர்களின் சப்பைக்கட்டுவாதத் தகிடுதத்தங்களுக்கெல்லாம் இந்த புறத்தோற்ற வடிவமே அடிப்படை.

தொல்சீர் அரசியல் பொருளாதாரம் தட்டுத் தடுமாறி உண்மை நிலவரத்தை அநேகமாய் வந்தடைந்த போதிலும், அதனை உணர்வு பூர்வமாய் வரையறுக்கவில்லை. முதலாளித்துவத் தோலைக் களைந்தெறியாமல் இருக்கும் வரை அதனால் இதைச் செய்ய முடியாது.

No comments:

Post a Comment