நேரவீதக் கூலி என்பது உழைப்புச் சக்தியின் மதிப்பு அல்லது விலையின் மாறிய வடிவம்தான் என்பது போலவே, பலன்வீதக் கூலியும் நேரவீதக் கூலியின் மாறிய வடிவமே தவிர வேறில்லை.
இந்த உழைப்பின் விலை நேரவீதக் கூலியைப் போல் 'உழைப்புச் சக்தியின் தின மதிப்பு / குறிப்பிட்ட மணிகள் கொண்ட வேலை..நாள்' என்ற பின்னத்தால் அன்றி, உற்பத்தியாளரின் உழைப்புத் திறனாலேயே நிர்ணயிக்க்ப்படுவது போலவும் தோன்றுகிறது.
இவ்விரு கூலி வடிவங்களும் ஒரே வகைத் தொழிற் கிளைகளில் ஒருங்கே நிலவுகின்றன. ஒரு வடிவம் இன்னொரு வடிவத்தை விட முதலாளித்துவ பொருளுற்பத்தியின் வளர்ச்சிக்கு சாதகமாய் இருக்கக் கூடும் என்றாலும், கூலி கொடுப்பதலான வடிவ வேறுபாட்டால் கூலியின் அடிப்படை இயல்பு எவ்விதத்தும் மாறுவதில்லை.
பலன்வீதக் கூலி எந்த மதிப்புறவுக்கும் நேரடித் தெரிவிப்பாவதில்லை. உருப்படியின் மதிப்பு அதில் அடங்கிய வேலை நேரத்தால் அளவிடப்படுவதில்லை; இதற்கு மாறானதே நடைபெறுகிறது. தொழிலாளி செலவிட்டிருக்கும் வேலை நேரம் அவர் உற்பத்தி செய்திருக்கும் உருப்படிகளின் தொகையால் அளவிடப்படுகிறது. நேர வீதக் கூலியில் உழைப்பு நேரடியாக அதன் கால அளவால் அளவிடப்படுகிறது; பலன்வீதக் கூலியில் உழைப்பு குறிப்பிட்ட கால அளவில் அது உருவாக்கிய உற்பத்திப் பொருட்களின் அளவால் அளவிடப்படுகிறது.
இங்கே உழைப்பின் தரம் வேலையாலேயே கட்டுப்படுத்தப்படுகிறது; பலன்வீதக் கூலி முழுமையாகக் கிடைக்க வேண்டுமானால் வேலை சராசரி நிறைவுள்ளதாக இருக்க வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில், பலன்வீதக் கூலியானது கூலிக் குறைப்புகள், முதலாளித்துவ மோசடி ஆகியவற்றுக்கு மிகவும் பயன்படுகிறது.
இது உழைப்பின் மும்முரத்தை அளப்பதற்குத் துல்லியமான அளவுகோலை முதலாளிக்கு வழங்குகிறது. முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட பரிசோதனை முறையில் நிர்ணயிக்கப்பட்ட அளவிலான சரக்குகளில் உருக்கொண்ட வேலை நேரம் மட்டுமே சமுதாய வழியில் அவசியமான வேலை நேரமாகக் கணக்கிடப்பட்டு, அவ்வாறே ஊதியம் பெறுகிறது.
பலன்வீதக் கூலியானது முன்னர் விவரித்த நவீன "வீட்டு உழைப்புக்கும்," அதே போல் சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைக்கான படிநிலை அமைப்புக்கும் அடிக்கல் நாட்டுகிறது. முதலாளிக்கும் கூலித் தொழிலாளிக்குமிடையே புல்லுருவிகள் ஊடுருவலுக்கும், "உழைப்பின் உள்குத்தகைக்கும்" வழி வகுக்கிறது. இந்த இடைத் தரகர்களின் ஆதாயம் முழுவதும் முதலாளி செலுத்துகிற உழைப்பு..விலைக்கும் அவ்விலையில் அவர்கள் தொழிலாளியிடம் உள்ளபடியே போய்ச்சேர விடுகிற பகுதிக்கும் இடையிலான வேறுபாட்டிலிருந்தே வருகிறது.
தலைமைத் தொழிலாளி தனக்கென ஒரு விலை எடுத்துக் கொண்டு, தன் துணையாட்களை வேலைக்கமர்த்தி அவர்களுக்கு ஊதியமளிக்க பொறுப்பேற்கிறார். தொழிலாளி மீதான முலதனத்தின் சுரண்டல் இங்கே தொழிலாளி மீதான தொழிலாளியின் சுரண்டல் மூலம் நடந்தேறுகிறது.
பலன்வீதக் கூலி தரப்படுகையில், தன் உழைப்புச் சக்தியை முடிந்த வரை கடுமையாக வருத்திக் கொள்வதில் தொழிலாளிக்குத் தனிப்பட்ட அக்கறை இருப்பது இயல்பே; உழைப்பின் இயல்பான மும்முரத்தை எளிதாகவே மேலும் உயர்த்துவதற்கு இது வகை செய்கிறது.
வேலை-நாள் நீட்டப்படும் போது --- பலன் வீதக் கூலி மாறாதிருந்தாலும் கூட தவிர்க்க முடியாத படி உழைப்பின் விலை வீழ்ச்சியடையவே செய்கிறது.
நேர வீதக் கூலியில், சில விதிவிலக்குகளோடு கூட, ஒரே வகை வேலைக்கு ஒரே கூலிதான்; பலன்வீதக் கூலியிலோ, வேலை நேரத்தின் விலை உற்பத்திப் பொருளின் குறிப்பிட்ட அளவால் அளவிடப்பட்ட போதிலும், தொழிலாளர்களின் தனி வேறுபாடுகளுக்கேற்ப நாட் கூலி அல்லது வாரக் கூலி மாறுபடும்.
பலன்வீதக் கூலி முறை தனியாளின் கூலியை சராசரிக் கூலிக்கும் கூடுதலாய் உயர்த்தும் அதே போது, இந்த சராசரியை குறைத்திடும் போக்குடையது.
முதலாளித்துவ பொருளுற்பத்தி முறைக்கு மிகவும் இசைவான கூலி வடிவம் பலன்வீதக் கூலியே என்பது தெளிவாகிறது.
உழைப்பின் மாறும் உற்பத்தித் திறனுகேற்ப ஒரே அளவு உற்பத்திப் பொருள் வெவ்வேறான வேலை நேரங்களைக் குறிக்கிறது. ஒர் உருப்படியில் செலவிடப்படும் வேலை நேரம் குறைவதற்கேற்ப பலன்வீதக் கூலி குறைந்து போகிறது. இந்த மாற்றம் முதலாளிக்கும் தொழிலாளிக்குமிடையே ஓயாத போராட்டத்துக்கு இட்டுச் செல்கிறது. காரணம் என்னவெண்றால் பலன்வீதக் கூலியிலான மாற்றத்தை ஓர் உபாயமாக்கி முதலாளி உள்ளபடியே உழைப்பின் விலையைக் குறைக்கிறார்; அல்லது உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதோடு கூடவே உழைப்பின் மும்முரமும் அதிகரிக்கிறது. அல்லது, தொழிலாளி பலன்வீதக் கூலியின் புறத்தோற்றத்தையே உண்மையெனக் கொண்டு விடுகிறார். அதாவது ஊதியமளிக்கப்படுவது தமது உழைப்புச் சக்திக்காக அல்ல, உற்பத்திப் பொருளுக்காகவே எனக் கொண்டு விடுக்கிறார்.
No comments:
Post a Comment