Friday, February 28, 2014

பாகம் 2 பகுதி 1 அத்தியாயம் 6: சுற்றோட்டச் செலவுகள். I

I. முறையான சுற்றோட்டச் செலவுகள்

1. வாங்கல்-விற்றலுக்கு ஆகும் காலம்

சரக்குகள்  அவற்றின் மதிப்புகளுக்கே வாங்கவும் விற்கவும் படுவதாக நாம் அனுமானித்துக் கொண்டிருப்பதால், வாங்கல் விற்றல் வாயிலாக நடப்பதெல்லாம் சரக்கு வடிவத்திலிருந்து பண வடிவத்துக்கு அல்லது பண வடிவத்திலிருந்து சரக்கு வடிவத்துக்கு மாறுவதே தவிர வேறல்ல --- அதாவது இருத்தல் நிலையில்தான் மாற்றம் ஏற்படுகிறது. சரக்குகள் அவற்றின் மதிப்புகளுக்கே விற்கப்படும் போது, விற்பவரின் கையிலும் வாங்குபவரின் கையிலும் இருக்கும் மதிப்புப் பருமன்கள்  மாறுவதில்லை, மதிப்பின் நிலவல் மட்டுமே மாறுகிறது. சரக்குகள் அவற்றின் மதிப்புகளுக்கே விற்கப்படாவிட்டாலும், உருமாறிய மதிப்புகளின் கூட்டுத் தொகை மாறுவதில்லை; ஒரு தரப்பில் கூட்டல், மறு தரப்பில் கழித்தல் ஆகிறது. 

C - M, M - C வடிவ மாற்றம் நிகழச் செய்வதற்கு காலமும் உழைப்புச் சக்தியும் செலவாகின்றன; ஆனால் இந்தச் செலவு மதிப்பை ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்துக்கு மாறச் செய்வதற்குத்தானே தவிர, மதிப்பைப் படைப்பதற்கு அல்ல. எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மதிப்பில் கூடுதலான பங்கை தனதாக்கிக் கொள்ள இருதரப்பிலும் செய்யப்படும் முயற்சியால் எந்த மாற்றமும் ஏற்படாது. எத்தரப்பின் துர்நோக்கத்தாலும் கூடுதலாக்கப்படும் இந்த உழைப்பு மதிப்பைப் படைக்காது. நீதிமன்ற நடவடிக்கையில் செலவிடப்படும் உழைப்பு விவகாரத்துக்குரிய பொருளின் மதிப்பைக் கூடுதலாக்கி விடாது அல்லவா, அதேபோலத்தான் இதுவும்.

இந்த உழைப்பு --- உதாரணமாய் --- வெப்பம் உண்டாக்கப் பயன்படும் எரிபொருள் எரிப்பதற்கு வேண்டிய உழைப்பைப் போன்றதாகும். எரிக்கும் நிகழ்முறையின் அவசியக் கூறாக இருந்தாலும், எரிய விடுவதற்கு வேண்டிய உழைப்பு வெப்பத்தை உண்டாக்குவதில்லை. 

மற்றவர்களை வேலை வாங்கும் முதலாளிக்கு, வாங்குவதும் விற்பதும் பிரதானப் பணியாகிறது. அவர் விரிந்த சமுதாய அளவில் பலரது உழைப்பின் பலனைத் தனதாக்கிக் கொள்வதால், அதே போல் விரிந்த அளவில் அதனை விற்கவும், விற்று வரும் பணத்தை உற்பத்தியின் அடிக்கூறுகளாக மாற்றவும் வேண்டும்.

ஒரு வணிகர் தமது நடவடிக்கைகளின் மூலம், பல உற்பத்தியாளர்களுக்கு வாங்கல்-விற்றலுக்கு ஆகும் காலத்தைக் குறையச் செய்து விடலாம்.

எளிமைப் படுத்தும் பொருட்டு வாங்குவதற்கும் விற்பதற்குமான இந்த இயக்கியைத் தமது உழைப்பை விற்பவராகக் கொள்வோம். C - M, M - C ஆகிய நடவடிக்கைகளில் அவர் தனது உழைப்புச் சக்தியையும் உழைப்பு நேரத்தையும் செலவிடுகிறார். அவர் இதைக் கொண்டு ஜீவிக்கிறார்.

ஆனால் அவரது உழைப்பு மதிப்பையோ உற்பத்திப் பொருளையோ படைக்கவில்லை; அதன் இயல்பு அப்படி, உற்பத்தியின் திறனிலாச் செலவினத்தில் அவரும் சேர்ந்து விடுகிறார். திறனிலாப் பணி திறனுடைப் பணியாகவோ, திறனிலா உழைப்பு திறனுடை உழைப்பாகவோ மாறுவது அல்ல அவரால் கிட்டும் பயன்.

சமுதாயத்தின் உழைப்புச் சக்தியிலும் உழைப்பு நேரத்திலும் முன்னிலும் சிறிய பகுதியை இந்தத் திறனிலாப் பணியில் முடக்கப்படுவதுதான் அவரால் கிட்டும் பயன்.

எப்படியானாலும், இதற்காகச் செலவிடப்படும் காலம் சுற்றோட்டச் செலவுகளில் ஒன்றாகிறது; வடிவ மாற்றம் அடையும் மதிப்புகள் இதனால் சிறிதும் கூடுதலாவதில்லை.

2. கணக்குப் பதிவு

வாங்கல்-விற்றல் என்னும் செயல்களோடு கூட, கணக்குப் பதிவுக்காகவும் [book-keeping] உழைப்பு நேரம் செலவாகிறது. இந்தப் பணிக்கு உழைப்புச் சக்தியின் செலவீடு மட்டுமல்லாமல், உழைப்புக் கருவிகளின் செலவீடும் அவசியமாகிறது. வாங்கல்-விற்றலுக்கு ஆகும் காலம் குறித்து எழுகிற அதே நிலைமைகள் இங்கும் எழுகின்றன.

உற்பத்தித் திறனுள்ள பிரதானப் பணிகளோடு ஒட்டிக் கொண்டிருந்த நிலை போய் தனிப் பணியாக பிரிந்து விடுவதாலோ, இதற்கென அமைந்த தனி இயக்கிகளாகச் செயல்படுவோரது சுயேச்சைப் பணியாகி விடுவதாலோ இப்பணியின் தன்மை மாறிவிடுவதில்லை.

எந்தப் பணியும் உழைப்புப் பிரிவினையாலும் சுயேச்சை நிலை பெறுவதாலும் மட்டும் பண்டங்களையும் மதிப்பையும் படைக்கும் பணியாகி விட முடியாது. உள்ளார்ந்த இயல்பினால், ஆகவே சுயேச்சை நிலை எய்துவதற்கு முன்பே இத்தகையதாய் இருந்தாலன்றி இது சாத்தியமன்று.

ஒரு புறம் கணக்குப் பதிவுக்கு ஆகும் செலவுகள் அல்லது திறனிலா உழைப்பு நேரச் செலவுகளுக்கும் மறு புறம் வெறும் வாங்கல்-விற்றலுக்கு ஆகும் செலவுகளுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. பின்சொன்ன செலவுகள், உற்பத்தி நிகழ்முறையின் குறிப்பிட்ட சமூக வடிவிலிருந்து, அதாவது அது சரக்கு-உற்பத்தி நிகழ்முறை ஆகும் என்பதிலிருந்து எழுகிறவை. ஆனால் கணக்குப் பதிவானது இந்த நிகழ்முறை மீதான கட்டுப்பாடும் கருத்தியலான அதன் கூட்டிணைவாகும் என்பதால், எவ்வளவுக்கு எவ்வளவு இந்நிகழ்முறை அதன் தனிப்பட்ட தன்மையை இழந்து சமுதாய அளவினதாகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு இன்றியமையாததாகிறது.

3. பணம்.

சமுதாயச் செல்வத்தில் சரக்குகளாகச் செயல்படும் பகுதியானது ஒயாமல் தொடர்ந்து வளர்ந்து செல்கிறது என்பதாலும, சுற்றொட்டச் சாதனமாகவும் கொடுப்புச் சாதனமாகவும் சேம நிதியாகவும் இன்ன பிறவாகவும் பணி புரியும் தங்கம், வெள்ளியின் அளவு மேலும் மேலும் கூடுதலாகிச் செல்கிறது. பணமாகச் செயல்படும் இந்தச் சரக்குகள் சொந்த நுகர்வுக்கோ திறனுடை நுகர்வுக்கோ பயன்படுவதில்லை. வெறும் சுற்றோட்டப் பொறியாகப் பயன்படுவதற்கு ஏற்ற வடிவில்  நிலை நிறுத்தப் பெற்ற சமுதாய உழைப்பை அவை குறிக்கின்றன. சமுதாய செல்வத்தில் ஒரு பகுதி உற்பத்தித் திறனில்லாத இவ்வடிவில் முடக்கப்படுகிறது.

பணச் சரக்குகளாய் இருக்கும் தங்கமும் வெள்ளியும் சமுதாயத்துக்கு ஆகும் சுற்றோட்டச் செலவுகளைக் குறிக்கின்றன. இச்செலவுகள் முழுக்க முழுக்க பொருளுற்பத்தியின் சமூக வடிவத்திலிருந்து எழுகிறவை. இவை பொதுவாகச் சரக்கு-உற்பத்தியின் திறனிலாச் செலவினம் ஆகும். சரக்கு உற்பத்தியின், குறிப்பாக முதலாளித்துவ சரக்கு உற்பத்தியின் வளர்ச்சியைத் தொடர்ந்து இவையும் அதிகரிக்கின்றன. சுற்றோட்ட நிகழ்முறைக்காக சமுதாயச் செல்வத்திலிருந்து தண்டமாய்ச் செலுத்த வேண்டியிருக்கும் பகுதியாகும் இவை.

Thursday, February 27, 2014

பாகம் 2 பகுதி 1 அத்தியாயம் 5: சுற்றோட்ட காலம்

மூலதனம் உற்பத்தித் துறையில் இருக்கும் காலம் அதன் உற்பத்திக் காலம் [time of production] ஆகும்; சுற்றோட்டத் துறையில் இருக்கும் காலம் அதன் சுற்றோட்டக் காலம் [time of circulation] ஆகும்; ஆகவே, அதன் உற்பத்திக் காலம், சுற்றோட்டக் காலம் ஆகியவற்றின் கூட்டுத் தொகையே அது தனது சுற்றை நிகழ்த்துவதற்கு மொத்தத்தில் ஆகும் காலம்.

பொதுவாக உற்பத்திச் சாதனங்களின் உற்பத்திக் காலம பின் வருவனவற்றால் ஆனது: (1) அவை உற்பத்திச் சாதனங்களாகச் செயல்படுகிற , இவ்விதம் உற்பத்தி நிகழ்முறையில் பயன்படுகிற காலம்; (2) உற்பத்தி நிகழ்முறையும் இவ்விதம் அதற்குரிய உற்பத்திச் சாதனங்களின் பணியும் தடைபடும் இடைநிறுத்தங்கள்; (3) இந்நிகழ்முறையின் இன்றியமையாத் தேவைகள் என்ற முறையில் அவை சேம வைப்பில் இருந்து வரும் காலம். அவை இப்படி இருக்கும் போதே திறனுடை-மூலதனத்தைக் குறிக்கின்றன; ஆனால் இன்னும் உற்பத்தி நிகழ்முறையில் பங்கு பெறவில்லை. 

திறனுடை-மூலதனம் உற்பத்தி நிகழ்முறையில் செயல்படாமல் உற்பத்தித் துறையில் உள்ளுறை நிலையில் இருந்து வருவதிலிருந்தே, அல்லது உழைப்பு நிகழ்முறையில் பங்கேற்காமல் உற்பத்தி நிகழ்முறையில் செயல்படுவதிலிருந்தே எப்போதும் இந்த மிகைப்பாடு எழுகிறது. 

திறனுடை-மூலதனம் உள்ளுறை நிலையில் இருக்கும்போது அது ஓய்ந்திருக்கும் மூலதனமாகும்; ஆயின் இப்படி அது ஒய்ந்திருப்பது உற்பத்தி நிகழ்முறையின் தடையற்ற ஓட்டத்துக்கு இன்றியமையாதது. 

உற்பத்தி நிகழ்முறையின் போது உழைப்பின் இலக்குப் பொருள் சந்திக்க வேண்டியிருக்கும் உழைப்புக் காலத்திலான இடைவேளைகள் மதிப்பையோ உபரி-மதிப்பையோ உண்டாக்கப் பயன்படுபவை அல்ல. ஆனால் அவை உற்பத்திப் பொருளை முன்செல்ல வைப்பவை; அதன் உருவாக்கக் காலத்தின் ஒரு பகுதியாய் இருப்பவை; அது கடந்து சென்றாக வேண்டிய நிகழ்முறை ஆகிறவை.

உள்ளுறை மூலதனத்தின் மற்றொரு பகுதியான இயந்திர சாதனம், கட்டடங்கள் போன்ற உழைப்புச் சாதனங்களின் பணி உற்பத்தி நிகழ்முறையில் முறையாக ஏற்படும் இடைநிறுத்தங்களால் தடைபடுகிறது; இந்தப் பகுதி உற்பத்திப் பொருளை உண்டாக்குவதில் பங்கு கொள்ளாமலே மதிப்பைக் கூடுதலாக்குகிறது.

உற்பத்திக் காலமும் உழைப்புக் காலமும் எவ்வளவுக்கு எவ்வளவு சமமாகின்றனவோ, குறிப்பிட்ட கால எல்லைக்குள் குறிப்பிட்ட திறனுடை-மூலதனத்தின் உற்பத்தித் திறனும் தற்பெருக்கமும் அவளவுக்கு அவ்வளவு அதிகமாகின்றன என்பது தெளிவு. இதனால்தான் உழைப்புக் காலத்தை விட உற்பத்திக் காலத்துக்குள்ள் மிகைப்பாட்டை முதலாளித்துவ பொருளுற்பத்திமுறை முடிந்த வரை குறைக்க முயல்கிறது. உற்பத்திக் காலத்துக்கும் உழைப்புக் காலத்துக்கும் இடையிலான வேறுபாடு மூலதனத்துக்கு மூலதனம் மாறுபடலாம் என்றாலும், உழைப்புக் காலம் எப்போதுமே உற்பத்திக்  காலத்தில் அடக்கம். முன்னதை விட பின்னது மிகையாதல் உற்பத்தி நிகழ்முறைக்கு இன்றியமையாதது. ஆக, எப்போதுமே உற்பத்திக் காலம் என்பது, மூலதனம் உள்ளுறை நிலையில் இருக்கிற அல்லது தன் மதிப்பைப் பெருக்கிக் கொள்ளாமல் உற்பத்தி செய்கிற காலத்தையும் தன்னுள் கொண்டது என்றாலும், அது பயன்-மதிப்புகளை உற்பத்தி செய்து தன் மதிப்பைப் பெருக்கிக் கொள்கிற காலம் ஆகும்; அதாவது  அது திறனுடை-மூலதனமாகச் செயல்படுகிற காலம் ஆகும்.

சுற்றோட்ட காலமும் உற்பத்திக் காலமும் தனித்தனியானவை, ஒன்றையொன்று விலக்கிக் கொள்பவை. மூலதனம் அதன் சுற்றோட்ட காலத்தில் திறனுடை-மூலதனமாகச் செயல்படுவதில்லை. ஆகவே சரக்குகளையோ உபரி-மதிப்பையோ உற்பத்தி செய்வதில்லை.

மூலதன-மதிப்பின் சுற்றோட்டக் காலம் நீடிக்கும் வரை, அதன் உற்பத்தி நிகழ்முறையும், ஆகவே அதன் தற்பெருக்கமும் கூட தடைபெறுகின்றன என்பதும், உற்பத்தி நிகழ்முறையின் மறுநிகழ்வு சுற்றோட்டக் காலத்தின் அளவைப் பொறுத்து அதிகமான அல்லது குறைவான வேகத்தில் நடைபெறும் என்பதும் கண்கூடாகின்றன.

சுற்றோட்டக் காலத்தின் பெருக்கமும் சுருக்கமும் உற்பத்திக் காலத்தின் ... அல்லது குறிப்பிட்ட பருமனுள்ள மூலதனம் திறனுடை-மூலதனமாகச் செயல்படும் அளவுவீதத்தின் --- சுருக்கம் அல்லது பெருக்கத்துகு எதிர்மறை வரம்புகளாகின்றன.குறிப்பிட்ட மூலதனத்தின் சுற்றோட்ட உருமாற்றங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு கருத்தளவில் மட்டுமே நிகழ்கின்றனவோ, அதாவது சுற்றோட்டக் காலம் எவ்வளவுக்கு எவ்வளவு பூஜ்ஜியத்தை நெருங்குகின்றதோ, மூலதனம் அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாய்ச் செயல்படுகிறது; அதன் உற்பத்தித் திறனும் அதன் மதிப்பின் தற்பெருக்கமும் அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாகின்றன.

பொதுவாக மூலதனம் உபரி-மதிப்பை உண்டாக்கும் நிகழ்முறை மீது சுற்றோட்டக் காலம் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை மட்டும் பார்க்கிறது. விளைவுகள் நேர்நிலையானவை என்பதால், இந்த எதிர்மறைத் தாக்கத்தை நேர் நிலைத் தாக்கமாகக் கொள்கிறது. மூலதன-மதிப்பின் தற்பெருக்கத்துக்கு உற்பத்தி நிகழ்முறையோ, எனவே உழைப்பைச் சுரண்டுவதையோ சாராத மருமமான ஆதாரம் ஒன்று இருப்பதாகவும் இந்த ஆதாரம் சுற்றோட்டத் துறையில் இருப்பதாகவும் நிரூபிப்பதாய் தோன்றுவதால், இந்த வெளித் தோற்றத்தை அரசியல் பொருதாரம் இன்னும் பன்மடங்கு கெட்டியாய்ப் பற்றிக் கொள்கிறது.
               
பல்வேறு நிகழ்வுகள் இந்த மாயையை வலுப்படுத்துவது தெரிய வரும்:

(1) இலாபத்தை முதலாளித்துவ முறையில் கணக்கிடும் போது எதிர்மறைக் காரணம் நேர்நிலைக் காரணமாகத் தோன்றுகிறது; அதாவது சுற்றோட்டக் காலங்கள் மட்டும் வேறுபடக் கூடிய வெவ்வேறு முதலீட்டுத் துறைகளில் செயல்படும் மூலதனங்களைப் பொறுத்த வரை சுறோட்டக் காலத்தின் அதிகரிப்பு விலையுயர்வுக்கு ஏதுவாகிறது; சுருங்கச் சொல்லின் இலாபங்களை சமப்படுத்தும் காரணிகளில் ஒன்றாகிறது.

(2) சுற்றோட்ட காலம் என்பது புரள்வுக் காலத்தின் [time of turnover] ஒரு கட்டம்தான்; புரள்வுக் காலத்தில் உற்பத்தி அல்லது மறுவுற்பத்திக் காலமும் அடங்கும். உண்மையில் உற்பத்தி அல்லது மறுவுற்பத்திக் காலத்தால் விளவது சுற்றோட்டக் காலத்தால் விளைவதாகத் தோன்றுகிறது.

(3) சரக்குகள் மாறும்-மூலதனமாய் (கூலியாக) உருமாறுவதற்கு முன்னால் பணமாய் உருமாறியாக வேண்டும். ஆகவே, மூலதனத் திரட்டலில், சர்க்குகள் கூடுதல் மாறும்-மூலதனமாக உருமாறுவது சுற்றோட்டத் துறையில், அதாவது சுற்றோட்டக் காலத்தின் போது, நடைபெறுகிறது. ஆதலால், இவ்விதம் நடந்தேறும் மூலதனத் திரட்டலுக்கு சுற்றோட்டக் காலமே காரணம் என்பதாகத் தோன்றுகிறது. 

Wednesday, February 26, 2014

பாகம் 2 பகுதி 1 அத்தியாயம் 4 சுற்றின் மூன்று சூத்திரங்கள்

                                                I. M - C ... P ... C' - M'
                                               II. P ... C' - M' - C ... P
                                              III. C' - M' - C ... P ... C'

இந்த மூன்று வகைச் சுற்றுகளையும் சேர்த்துப் பார்த்தால், நிகழ்முறையின் முதனிலைகள் யாவும் நிகழ்முறையின் விளைவாய்த் தெரிகின்றன; நிகழ்முறையே உண்டாக்கிய முதனிலைகளாய்த் தெரிகின்றன. ஒவ்வொரு உறுப்பும் தொடக்க நிலையாகவும், இடை நிலையாகவும், மீள்வு நிலையாகவும் தெரிகிறது. நிகழ்முறை முழுவதும் உற்பத்தி நிகழ்முறை, சுற்றோட்ட நிகழ்முறை ஆகியவற்றின் ஒன்றிப்பாகத் தெரிகிறது. உற்பத்தி நிகழ்முறை சுற்றோட்ட நிகழ்முறையின் இடைக் கண்ணியாகிறது. 

மதிப்பின் தற்பெருக்கமே தீர்மானகரமான நோக்கம், பிராதானக் குறி [compelling motive] என்பது மூன்று சுற்றுகளுக்கும் பொது. 

இடையறாது சுழலும் வட்டத்தில் ஒவ்வொரு புள்ளியும் ஒரே சமயத்தில் புறப்பாட்டு நிலையாகவும் மீள்வு நிலையாகவும் இருக்கிறது. சுழற்சியை இடைமறித்தால், புறப்பாட்டு நிலை ஒவ்வொன்றுமே மீள்வு நிலை ஆகாது. இவ்வாறு, ஒவ்வொரு குறிப்பிட்ட வகைச் சுற்றுக்கும் ஏனைய வகைச் சுற்றுகள் (உட்கிடையாக) தேவைப்படுவது மட்டுமல்லாமல், ஒரு வகைச் சுற்றின் மறு நிகழ்வு ஏனைய வகைச் சுற்றுகளின் நிகழ்வைத் தன்னுள் கொண்டதாய் இருக்கக் கண்டோம். எனவே, வேறுபாடு முழுவதுமே வெறும் வடிவ வேறுபாடாக, பார்க்கிறவருக்கு மட்டுமே ஆன அகவய வேறுபாடாக [subjective distinction] இருக்கிறது.

உண்மையில் ஒவ்வொரு தனிப்பட்ட தொழில் துறை மூலதனமும் ஒரே சமயத்தில் மூன்று வகைச் சுற்றுகளிலும் ஈடுபட்டுள்ளன. மூன்று வகை மூலதனங்களின் மறுவுற்பத்தி வடிவங்களான இந்த மூன்று வகைச் சுற்றுகளும் ஒருங்கே தொடர்ந்து நடைபெறுகின்றன‌.

மூலதனம் சுற்றை நிகழ்த்துவது என்பது ஓயாத இடை மறிப்பு நிகழ்முறை ஆகும்; மூலதனம் ஒரு கட்டத்தை விட்டு அடுத்த கட்டத்துக்குள் புகுவது ஆகும்; ஒரு வடிவத்தைக் களைந்து விட்டு வேறொரு வடிவம் பூணுவது ஆகும்.  இந்த கட்டங்கள் ஒவ்வொன்றும் அடுத்த கட்டத்தை அவசியமாக்குகிறது; ஆனால் இது அதுவாய் இல்லை.

ஆனால் தொடர்ச்சி என்பது முதலாளித்துவப் பொருளுற்பத்திக்கே உரிய தனி இயல்பு; அதன் தொழில் நுட்ப அடிப்படைக்கே அவசியமானது, ஆனால் எப்போதும் முழு அளவுக்கு வரப் பெறுவதில்லை.

உண்மையில் தொழில் துறை மூலதனத்தின் தொடர்ச்சியான சுற்று என்பது சுற்றோட்ட நிகழ்முறை, உற்பத்தி நிகழ்முறை ஆகியவற்றின் ஒன்றிப்பு மட்டுமல்ல, அதன் மூன்று வகைச் சுற்றுகளின் ஒன்றிப்பு ஆகும். ஆனால் இத்தகைய ஒன்றிப்பாக இருக்க வேண்டுமானால், வெவ்வேறு மூலதனப் பகுதிகள் ஒவ்வொன்றும் சுற்றின் வரிசைத் தொடரான கட்டங்களை வரிசைத் தொடராய் கடக்கக் கூடியதாய் இருந்தால்தான் முடியும்.

இந்தப் பல்வேறு மூலதனப் பகுதிகளும் அடுத்தடுத்து வரிசையாக வருதல் அவற்றின் ஏககால நிலவலால், அதாவது மூலதனம் பகுக்கப்பட்டிருக்கிற முறையால் விளைவதாகும்.

உற்பத்தியின் தொடர்ச்சியை நிர்ணயிக்கிற ஏககால நிலவல் என்பது மூலதனப் பகுதியின் பல்வேறு கட்டங்களையும் அடுத்தடுத்து வரிசையாய் கடக்கும் இயக்கத்திலிருந்தே விளைகிறது. அடுத்தடுத்து வரிசையாக வருவதன் விளைவே ஏககால நிலவல்.

ஒவ்வொரு வகைச் சுற்றும் மூலதனத்தின் பணிவழிப்பட்ட வடிவங்களில் ஒன்றைப் புறப்பாட்டு நிலையாகவும் மீள்வு நிலையாகவும் கொண்டுள்ளது. உண்மையில் மொத்த நிகழ்முறை என்பது மூவகைச் சுற்றுகளின் ஒன்றிப்பே. நிகழ்முறை தொடர்ச்சியாக நடைபெறுவதை இச்சுற்றுகள் வெவ்வேறு விதமாய் தெரிவிக்கின்றன. மொத்தச் சுற்றானது மூலதனத்தின் பணிவழிப்பட்ட வடிவம் ஒவ்வொன்றுக்கும் தன் பிரத்தியேகச் சுற்றாக விளங்குகிறது. இந்த ஒவ்வொரு சுற்றும்  மொத்த நிகழ்முறை தொடர்ச்சியகா நடைபெறுவ‌தற்குரிய நிபந்தனை ஆகிறது. மூலதனத்தின் பணி வழிப்பட்ட வடிவம் ஒவ்வொன்றின் சுற்றும் ஏனையவற்றின் சுற்றைச் சார்ந்ததாகும். உற்பத்தி நிகழ்முறை அதே போது மறுவுற்பத்தி நிகழ்முறையாக இருப்பதும், ஆகவே ஒவ்வொரு சுற்றாக இருப்பதும் ஒட்டுமொத்த நிகழ்முறைக்கும், ஆகவே சமுதாய மூலதனத்துக்கும் இன்றியமையாத தேவையாகும். மூலதனத்தின் பல்வேறு பகுதிகள் பல்வேறு கட்டங்களையும் பணிவழிப்பட்ட வடிவங்களையும் ஒன்றன் பின் ஒன்றாய் கடக்கின்றன. ஆகவே, ஒவ்வொரு பணிவழிப்பட்ட வடிவமும் ---- இவ்வடிவம் பூணுகிற மூலதனப் பகுதி தொடர்ந்து மாறிக் கொண்டே இருந்த போதிலும் --- ஏனைய வடிவங்களோடு ஏககாலத்தில் அதன் சுற்றை நிகழ்த்துகிறது.

ஒட்டுமொத்தமாய் மூலதனமானது அதன் வெவ்வேறு கட்டங்களில் ஏக காலத்தில் ஒன்றை அடுத்து ஒன்றாய் நிலவுகிறது. ஆனால் ஒன்றன் பின் ஒன்றாய் ஒவ்வொரு பகுதியும் ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்துக்கு, ஒரு பணிவழிப்பட்ட வடிவத்திலிருந்து அடுத்த பணி வழிப்பட்ட வடிவத்துக்கு இடையறாமல் சென்று கொண்டிருக்கிறது; இவ்விதம் மாறி மாறி எல்லாக் கட்டங்களிலும்  செயல்படுகிறது. ஆகவே, அதன் வடிவங்கள் மாறி கொண்டேயிருப்பவை. அவை அடுத்தடுத்து வரிசையாக வருகின்றன; ஆகவே ஏக காலத்தில் நிலவுகின்றன. ஒவ்வொரு வடிவமும் இன்னொன்றைப் பின்தொடர்வதாகவும், அதே போது அதற்கு முன் செல்வதாகவும் இருக்கிறது; இதனால், ஒரு மூலதனப் பகுதி குறிப்பிட்ட ஒரு வடிவத்துக்குத் திரும்புகையில் இன்னொரு பகுதி வேறு ஒரு வடிவத்துக்கு திரும்புவது அவசியமாகிறது. ஒவ்வொரு பகுதியும் தொடர்ச்சியாக அதனதன் சுற்றை நிகழ்த்துகிறது. ஆனால் எப்போதுமே மூலதனத்தின் இன்னொரு பகுதிதான் இவ்வடிவத்தை வந்தடைகிறது; இந்தத் தனித்தனிச் சுற்றுகள் ஒட்டுமொத்த நிகழ்முறையின் உறுப்புகளே, ஏககாலத்தியவையும், வரிசையாக அடுத்தடுத்து வருபவையுமான உறுப்புகளே ஆகும்.

தற்பெருக்கமடையும் மதிப்பு என்ற முறையில் மூலதனம் குறிப்பது வர்க்க உறவுகளை மட்டுமல்ல; உழைப்பு கூலியுழைப்பாய் இருப்பதை அடிப்படையாகக் கொண்ட குறிப்பிட்ட ஒரு சமூகத் தன்மையை மட்டுமல்ல. அது ஓர் இயக்கம், வெவ்வேறு கட்டங்களின் வழியாகச் செல்லும் சுற்று நிகழ்முறை; இந்தச் சுற்று நிகழ்முறையில் வெவ்வேறு வகைப்பட்ட மூன்று சுற்று நிகழ்முறைகள் அடக்கமாகும். எனவே, மூலதனத்தை இயக்கமாகப் புரிந்து கொள்ள முடியுமே தவிர, அசைவற்றதாய்ப் புரிந்து கொள்ள முடியாது. மதிப்பின் சுயேச்சை நிலையை வெறும் சூக்கும நிலையாகக் கொள்வோர் தொழில் துறை மூலதனத்தின் இயக்கமானது சூக்குமத்தின் செயல் நிலைதான் என்பதை மறந்து விடுகிறார்கள்.

தனிப்பட்ட தொழில் துறை முதலாளி ஒருவர் சரக்குகளையும் உழைப்பையும் விலைக்கு வாங்குகிறவராகவும், சரக்குகளை விற்கிறவராகவும், திறனுடை-மூலதனத்தின் உடைமையாளராகவும் செயல்பட்டு, இவ்விதம் மூலதனச் சுற்றை நிகழச் செய்யும் போது, மூலதனத்தின் செயல்கள் அந்த முதலாளி செய்யும் வேலைகளாக காட்சி அளிக்கின்றன. சமுதாய மூலதனத்தின் மதிப்பில் திடீர் மாற்றம் ஏற்படுமானால், இந்த மதிப்பு மாற்ற நிலைமைகளுக்குத் தகவமைய முடியாமல் தனிப்பட்ட முதலாளியின் மூலதனம் அதற்கு பலியாகி மடிந்து போக நேரலாம். மதிப்பிலான இப்படிப்பட்ட திடீர் மாற்றங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு கடுமையாகவும் அடிக்கடியும் நிகழ்கின்றனவோ, சுயேச்சையான மதிப்பின் தன்னியல்பான இயக்கம் அவ்வளவுக்கு அவ்வளவு இயற்கை உற்பாதத்துக்குரிய மூர்க்கதுடன் செயல்பட்டு தனிப்பட்ட முதலாளியின் முன் யோசனைகளையும் கணக்கீடுகளையும் தகர்த்துவிடுகிறது. இயல்பான உற்பத்தி இயல்பு மீறிய ஊக வாணிபத்துக்கு [speculation] அவ்வளவுக்கு அவ்வளவு அடிபணிந்து விடுகிறது. தனிப்பட்ட மூலதனங்கள் அவ்வளவுக்கு அவ்வளவு ஆபத்துக்குள்ளாகின்றன. ஆகவே, காலவட்ட முறையில் மதிப்பில் ஏற்படும் இந்த திடீர் மாற்றங்கள், மதிப்பானது மூலதனமாக சுயேச்சை நிலை பெற்று அதன் இயக்கத்தின் மூலம் இந்நிலையை காப்பாற்றி வலுப்படுத்திச் செல்வதை பொய்யென நிரூபிப்பதற்கு பதில் மெய்யென நிரூபித்துக் காட்டுகின்றன.    

நிகழ்முறையின் போது மூலதனம் அடுத்தடுத்து வரிசையாய் அடையும் உருமாற்றங்கள், சுற்றில் சுற்றி வரும் மூலதனத்தின் மதிப்பில் ஏற்படும் மாற்றத்தை அதன் ஆரம்ப மதிப்போடு ஓயாமல் ஒப்பிடுதலைக் குறிக்கின்றன. மதிப்பைப் படைக்கும் சக்தியான உழைப்புச் சக்தியிடமிருந்து மதிப்பு சுயேச்சை நிலை பெறுதல் M - L (உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குதல்) என்னும் செயலிலிருந்து ஆரம்பமாகி உற்பத்தி நிகழ்முறையின் போது உழைப்புச் சக்தியின் மீதான சுரண்டலாக [exploitation of labour-power] நடந்தேறுகிறது. ஆனால் மதிப்பு இவ்விதம் சுயேச்சை நிலை பெறுதல் மூலதனச் சுற்றில் திரும்பவும் தலைகாட்டுவதில்லை.

முதலாளித்துவ பொருளுற்பத்தியின் வளர்ச்சியைத் தொடர்ந்து, ஒவ்வொரு தனிப்பட்ட உற்பத்தி நிகழ்முறையின் அளவீதம் [scale] அத்துடன் முன்னீடு செய்ய வேண்டிய மூலதனத்தின் குறைந்தபட்ச அளவும் பெருகிச் செல்வதால், தொழில் துறை முதலாளி புரியும் பணியை தனியாகவோ கூட்டாகவோ செயல்படக் கூடிய பெரும் பெரும் பண முதலாளிகளின் ஏகபோகமாக [monopoly] மேலும் மேலும் மாற்றிச் செல்கிற ஏனைய நிலைமைகளோடு இதுவும் சேர்ந்து கொள்கிறது.

முடிந்த வரை பொருளுற்பத்தி முழுவதையும் சரக்கு உற்பத்தியாக மாற்றுவதே முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையின் போக்கு. உற்பத்தி முழுவதையும் முதலாளித்துவச் சுற்றோட்ட நிகழ்முறைக்குள் ஈர்ப்பதே இதைச் செய்திட அது கையாளும் பிரதான வழி. வளர்ச்சியடைந்த சரக்கு உற்பத்தி என்றாலே முதலாளித்துவச் சரக்கு உற்பத்திதான். தொழில் துறை மூலதனத்தின் தலையீடு எங்குமே இந்த மாற்றத்தைத் தூண்டுகிறது. அதோடு, நேரடி உற்பத்தியாளர்கள் எல்லோரும் கூலித் தொழிலாளர்களாவதையும் துரிதப்படுத்துகிறது.

சரக்கு விற்பனை வணிக மூலதனத்தின் [merchant's capital] பணியென்ற முறையில் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் முதனிலகளில் ஒன்று; முதலாளித்துவ பொருளுற்பத்தியின் வளர்ச்சியைத் தொடர்ந்து மேன்மேலும் வளர்ந்து செல்வது.

முதலாளித்துவ பொருளுற்பத்தியின் முதல் சகாப்தத்தில் கடன்-செலாவணி எப்பங்கும் வகிப்பதில்லை, அல்லது சொற்பப் பங்கே வகிக்கிறது.

பணத்தின் ஓட்ட வேகம் [velocity of currency] எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாய் சரக்குகளாகவும் பணமாகவும் வரிசையாய் உருமாற்றம் அடைந்து செல்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமான தொழில் துறை மூலதனங்களை (அல்லது சரக்கு மூலதன வடிவிலான தனிப்பட்ட மூலதனங்களை) சுற்றோட்டத்தில் விடுகிறது.

மூலதனத்தின் சுற்றோட்ட நிகழ்முறை சாதாரண சுற்றோட்டச் செயல்களின் தொடராய் அமையும் போதுதான் பொதுவான சரக்குச் சுற்றோட்டத்தின் விதிகள் அதனை ஆள்கின்றன. தனிப்பட்ட தொழில் துறை மூலதனங்கள் நிகழ்த்தும் சுற்றுகளின் பணி வழிப்பட்ட பிரிவுகளாக இச்சுற்றோட்டச் செயல்கள் அமையும் போது அல்ல.

ஒரு கட்டத்திலுள்ள குறிப்பிட்ட சரக்கின் உருமாற்றம் இன்னொரு கட்டத்திலுள்ள இன்னொரு சரக்கின் உருமாற்றத்தோடு பின்னிப் பிணைந்திருப்பது தொடர்பாக தரப்படும் விளக்கம், முதலாளி சரக்குகளை வாங்குபவராகவும் விற்பவராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வரையில், எனவே அவரது மூலதனம் மற்றொரு முதலாளியின் பணத்துக்கு எதிரான சரக்குகளின் வடிவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வரை மூலதனச் சுற்றோட்டத்துக்கும் பொருந்தும். ஆனால் சரக்கு உருமாற்றங்கள் இப்படி பின்னிப் பிணைவது வேறு; மூலதன உருமாற்றங்கள் பின்னிப் பிணைவது வேறு.

மொத்த சமுதாய மூலதனத்தின்  அடக்கக் கூறுகளாகிய சுயேச்சையான பல்வேறு தனிப்பட்ட மூலதனங்களும் --- மூலதனம் தொடர்பாகவும், அதே போல் உபரி-மதிப்பு தொடர்பாகவும் --- சுற்றோட்ட நிகழ்முறையில் ஒன்றையொன்று மாற்றீடு செய்து கொள்ளும் விதம், சரக்கு சுற்றோட்டத்தில் நிகழும் உருமாற்றங்களின் சாதாரண பின்னிப் பிணைதலிலிருந்து  புலனாவதில்லை; மூலதனச் சுற்றோட்டச் செயல்களுக்கும் இதர அனைத்து வகைச் சரக்குச் சுற்றோட்டச் செயல்களுக்கும் பொதுவானதாகிய இந்தப் பின்னிப் பிணைதலிலிருந்து புலனாவதில்லை.
                                                   ___________________________

தொழில் துறை மூலதனத்தின் சுற்றின், ஆகவே முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் தெளிவாய்ப் புலப்படும் தனித் தன்மைகளில் ஒன்றாய் அமையும் நிலைமை என்னவென்றால், ஒரு புறம் திறனுடை-மூலதனத்தின் அடக்கக் கூறுகள் சரக்குச் சந்தையிலிருந்து பெறப்படுபவை; அச்சந்தையிலிருந்து தொடர்ச்சியாகப் புதுப்பிக்கப்பட வேண்டியவை; சரக்குகளாக விலைக்கு வாங்கப்பட வேண்டியவை. மறு புறம் உழைப்பு நிகழ்முறையின் உற்பத்திப் பொருட்கள் அந்நிகழ்முறையிலிருந்து சரக்குகளாக வெளிவருபவை; ஓயாமல் திரும்பத்திரும்ப சரக்குகளாக விற்கப்பட வேண்டியவை.

கடன்-செலாவணிப் பொருளாதாரம் எனப்படுவது பணப் பொருளாதாரத்தின் வடிவங்களில் ஒன்றுதான். ஏனெனில், இரண்டு பதங்களுமே உற்பத்தியாளர்களுக்குள் நடக்கும் பரிவர்த்தனைப் பணிகள் அல்லது முறைகளைத் தெரிவிக்கின்றன.

இவை, எந்த விதத்திலும், இயற்கைப் பொருளாதாரத்தைப் போல் சுயேச்சையான பரிவர்த்தனை வடிவங்களல்ல.

உண்மையில் முதலாளித்துவ பொருளுற்பத்தி என்பது, சரக்கு உற்பத்தியே பொருளுற்பத்தியின் பொது வடிவமாய் இருப்பதாகும். ஆனால் அது அப்படி இருப்பதற்கும், அதன் வளர்ச்சிப் போக்கில் மேலும் மேலும் இப்படி ஆவதற்கும் ஒரே காரணம், உழைப்பே இங்கு சரக்காகி விடுகிறது என்பதுதான். தொழிலாளி தமது உழைப்பை, அதாவது தமது உழைப்புச் சக்தியின் பணியை விற்கிறார். அதன் மதிப்புக்கே --- அதற்காகும் மறுவுற்பத்திச் செலவினால் நிர்ணயிக்கப்படுவதான அதன் மதிப்புக்கே --- விற்பதாகக் கொள்கிறோம். உழைப்பு எந்த அளவுக்கு கூலி உழைப்பாகிறதோ, உற்பத்தியாளர் அந்த அளவுக்குத்  தொழில் துறை முதலாளியாகிறார். எனவேதான், நேரடி விவசாய உற்பத்தியாளர் கூலித் தொழிலாளியாகும் வரை, முதலாளித்துவப் பொருளுற்பத்தி (எனவே சரக்கு உற்பத்தியும் கூட) அதன் முழு வீச்சை அடைவதில்லை.

எல்லோரும் நேர்மையற்றுத் தொழில் புரிவதில் குறியாய் இருக்கும் முதலாளித்துவ உலகில், உற்பத்தி முறையின் தன்மையை அதற்குரிய பரிவர்த்தனை முறையின் அடிப்படையாகக் காண்பதற்கு பதில், பரிவர்த்தனை முறையை [mode of exchange] உற்பத்தி முறையின் அடிப்படையாகக் காண்பதில் வியப்பில்லைதான்.                                                  
                                               _________________________________

முதலாளி சுற்றோட்டத்திற்குள் செலுத்தும் பண வடிவிலான மதிப்பு, அவர் அதிலிருந்து எடுப்பதைக் காட்டிலும் குறைவாகும். ஏனென்றால் அவர் சரக்குகளின் வடிவில் அதற்குள் செலுத்தும் மதிப்பு, சரக்குகளின் வடிவில் அதிலிருந்து எடுப்பதைக் காட்டிலும் அதிகமாகும்.

முதலாளி என்றாலே, "வாங்கும்போது குறைவாய்க் கொடுக்க வேண்டும்; விற்கும் போது அதிகமாய்ப் பெற வேண்டும்." எப்படி அவரால் இதைச் செய்ய முடிகிறது? குறைந்த விலைக்கு வாங்கிய சரக்கை --- மதிப்பு குறைவென்பதால் விலையும் குறைவு --- அவர் அதிக மதிப்புள்ள, எனவே அதிக விலையுள்ள சரக்காக மாற்றுவதை முதலாளித்துவ பொருளுற்பத்தி நிகழ்முறை சாத்தியமாக்குவதால்தான் இதை செய்ய முடிகிறது. அவர் அதீத விலைக்கு விற்க முடிவதற்குக் காரணம் சரக்கின் மதிப்பு அதன் உற்பத்தி.. அடிக் கூறுகளின் மதிப்பைக் காட்டிலும் அதிகம் என்பதுதானே தவிர, சரக்கை அதன் மதிப்புக்கும் கூடுதலான விலைக்கு விற்கிறார் என்பதல்ல.

அவரது நோக்கம் தமது வழங்கலையும் வேண்டலையும் சமப்படுத்துவது அல்ல. அவற்றுக்கிடையிலான சமமின்மையை, வேண்டலை விட வழங்கலுக்குள்ள மிகைப்பாட்டை முடிந்த வரை அதிகப்படுத்துவதே அவரது நோக்கம். தனிப்பட்ட முதலாளிக்கு மட்டுமல்ல, முதலாளி வர்க்கத்துக்கே இது பொருந்தும்.

உழைப்புச் சக்திக்கான அவரது வேண்டலைப் பொறுத்த வரை, மதிப்பின் நோக்கில் அது அவரது மொத்த மூலதனத்தோடு அவரது மாறும்..மூலதனம் கொண்டுள்ள விகிதத்தால், அவரது v : C என்பதால் நிர்ணயிக்கப்படுகிறது. ஆகவே முதலாளித்துவ பொருளுற்பத்தியில் இந்த வேண்டல் உற்பத்திச் சாதனங்களுக்கான அவரது வேண்டலை விட ஒப்பளவில் சிறிதாகிச் செல்கிறது. அவர் Lஐக் காட்டிலும் mpஐ மேன்மேலும் அதிகமாய் வாங்குகிறார்.

தொழிலாளி பொதுவாகத் தமது கூலியை வாழ்வுச் சாதனங்களாக மாற்றிக் கொள்கிறார், மிகப் பெரும் பகுதியை அத்தியாவசியப் பண்டங்களாக மாற்றிக் கொள்கிறார் என்பதால், உழைப்புச் சக்திக்கான முதலாளியின் வேண்டல் என்பது ஒரு விதத்தில் தொழிலாளி வர்க்கத்துக்கு அத்தியாவசியமான நுகர்வு பண்டங்களுக்கான வேண்டலாகவும் இருக்கிறது. ஆனால் இந்த வேண்டல் vக்குச் சமம். இம்மியும் அதிகமல்ல.

முதலாளியின் வேண்டலின் மேல் வரம்பு c+vக்குச் சமமான Cஆகும். ஆனால் அவரது வழங்கல் c+v+s ஆகும்.

அவர் உற்பத்தி செய்யும் உபரி-மதிப்புத் திரளின் சதவீதம் (அவரது இலாப வீதம்) அதிகரிக்க அதிகரிக்க, அவரது வழங்கலுடன் ஒப்பிடுகையில் அவரது வேண்டல் மேலும் மேலும் குறைந்து செல்கிறது. உற்பத்தி வளர்ந்து முன்னேறும் போது உழைப்புச் சக்திக்கும், அதன் மூலமாய் அவசிய வாழ்வுச் சாதனங்களுக்குமான முதலாளியின் வேண்டல் உற்பத்திச் சாதனுங்களுக்கான அவரது வேண்டலுடன் ஒப்பிடுமிடத்து, மேலும் மேலும் குறைகிறது.

முதலாளி உபரி-மதிப்பு முழுவதையும் நுகர்ந்து விடுவதாகக் கொள்வது முதலாளித்துவ பொருளுற்பத்தி என்பதே இல்லை என்றும், ஆகவே தொழில் துறை முதலாளி என்பவரே இல்லை என்றும் கொள்வதற்கு ஒப்பானதே. ஏனெனில், பிரதானக் குறி [compelling motive] செல்வஞ்சேர்ப்பது அல்ல, சொந்த நுகர்வுதான் எனக் கொண்ட மாத்திரத்தில் முதலாளித்துவமே இல்லாது போகிறது,

மூலதனம் திரட்டும் பொருட்டு, முதலில் அவர் மூலதனத்திலிருந்து கிடைத்த உபரி-மதிப்பில் ஒரு பகுதியை சுற்றோட்டத்திலிருந்து பண வடிவில் எடுக்க வேண்டும்; பழைய தொழிலை விரிவாக்குவதற்கு அல்லது புதிய தொழில் தொடங்குவதற்குப் போதுமானதாய் வளரும் வரை அதனைப் பணச் சேர்ப்பாகச் சேர்த்து வைக்க வேண்டும். இந்தச் சேர்ப்பு சேர்ந்து கொண்டிருக்கும் வரை, முதலாளியின் வேண்டல் அதனால் பெருகாது. பணம் புழக்கமின்றி முடக்கப்படுகிறது. சரக்குகளை வழங்கி பெறப்பட்ட பணத்துக்குச் சமதையாக சரக்கு சந்தையிலிருந்து சரக்குகளை பெறுவதற்கு இந்தப் பணம் பயன்படுவதில்லை.

Monday, February 24, 2014

பாகம் 2 பகுதி 1 அத்தியாயம் 3 சரக்கு-மூலதனத்தின் சுற்று

சரக்கு..மூலதனத்தின் சுற்றுக்கான பொதுச் சூத்திரம் : C' - M' - C ... P ... C'.

விரிதிற மறுவுற்பத்தி நடைபெற்றால், முடிவில் வரும் C' ஆரம்பத்தில் வரும் C'ஐக்காட்டிலும் பெரியது; ஆகவே இங்கே அதனை C'' என்று குறித்திட வேண்டும்.

சரக்கு-மூலதனச் சுற்று சாமானிய மூலதன-மதிப்பிலிருந்து தொடங்காமல், சரக்கு வடிவில் பெருகி விட்ட மூலதன-மதிப்பிலிருந்து தொடங்குகிறது. இவ்வாறு இந்தச் சுற்று சக்குகளின் வடிவிலான மூலதன-மதிப்பின் சுற்றை மட்டுமல்லாமல் உபரி-மதிப்பின் சுற்றையும் ஆரம்பத்திலிருந்தே தன்னுள் கொண்டதாகும். ஆகவே சாமானிய மறுவுற்பத்தி இந்த வடிவில் நடைபெற்றால், இறுதி முனையான C' ஆனது அளவில் தொடக்க முனையான C'க்குச் சமமாகும். உபரி-மதிப்பின் ஒரு பகுதி மூலதனச் சுற்றில் சேருமானால், சுற்றின் முடிவில் C'க்கு பதில் C'' வருகிறது; C'' என்பது பெருகிய C' ஆகும். ஆனால் இதையடுத்து வரும் சுற்று மீண்டும் C'இலிருந்தே ஆரம்பமாகிறது. இந்த C' இதற்கு முந்தைய சுற்றின் தொடக்கத்தில் வந்த C' ஐ விடப் பெரியது.

C' ஆனது  தனிப்பட்ட ஒரு தொழில் துறை மூலதனத்தின் சுற்றில் C ஆக வரும்போது, அது இந்த மூலதனத்தின் வடிவமாய் அமையாமல் (உற்பத்திச் சாதனங்கள் வேறொரு தொழில் துறை மூலதனத்தின் உற்பத்திப் பொருளாய் இருப்பதால்) அந்த வேறொரு தொழில் துறை மூலதனத்தின்  வடிவமே ஆகிறது.

ஒரு புறம் தொழிலாளர்கள் தம் உழைப்புச் சக்தியை விற்கிறார்கள், மறுபுறம் உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர்கள் தம் உற்பத்திப் பொருளான இச்சாதனங்களை விற்கிறார்கள் --- அவை இங்கே ஒரே மாதிரியான உறவுகளைக் கொண்டுள்ளன.

C' ஆனது வெறும் C ஆக, மூலதன-மதிப்பின் வெறும் சரக்கு வடிவமாக எந்தச் சுற்றையும் தொடக்கி வைக்க முடியாது. சரக்கு-மூலதனம் என்ற முறையில் அது எப்போதுமே இரட்டைத் தன்மை கொண்டது. பயன்-மதிப்பின் கோணத்திலிருந்து பார்த்தால், அது Pஇன் பணியால் விளையும் உற்பத்திப் பொருளாகும். 

இரண்டாவதாக, மதிப்பின் கோணத்திலிருந்து பார்த்தால் அது P என்னும் மூலதன-மதிப்பு, Pஇன் பணியால் விளையும் s என்னும் உபரி-மதிப்பு ஆகியவற்றின் கூட்டுத் தொகையாகும்.

உபரி உற்பத்தியின் சுற்றோட்டமான c - m - c நடைபெறும் முன்னரே முதலாளி C - M - C < L / mp என்பதை நடைபெறச் செய்ய முடியும். C' என்பதை முதலாளி c+v+s என்று கூறு போடுவதற்கு பதில் C' இன் ஈவுப் பகுதி ஒவ்வொன்றையுமே கூறு போட முடியும்.

முதல் வகைச் சுற்றில், அதாவது M ... M' என்பதில் பணமானது மூலதனமாக முன்னீடு செய்யப்பட்டு, முதலில் உற்பத்தி -அடிக்கூறுகளாகவும், இவற்றிலிருந்து சரக்கு உற்பத்தியாகவும் (commodity-product) மாற்றப்படுகிறது; இந்த சரக்கு உற்பத்தி திரும்பவும் பணமாக மாற்றப்படுகிறது. இது முழு நிறைவான தொழிற் சகடம் ஆகும். பணத்தில் தொடங்கி மேலும் கூடுதலான பணத்தில் முடிவடைகிறது.

இரண்டாவது வகைச் சுற்றில், அதாவது P... C' - M' - C ... P (P') என்பதில், P ... P என்னும் சுழல் இயக்கத்தின் பொது வடிவம்தான் மறுவுற்பத்தியின் வடிவம். இது M ... M'  என்பது காட்டுவதுபோல், மதிப்பின் தற்பெருக்கமே இந்நிகழ்முறையின் குறிக்கோள் என்று காட்டவில்லை. அதாவது முடிந்த வரை அதிகமாகவும் முடிந்த வரை மலிவாகவும் உற்பத்தி செய்வதும், ஒரு புறம் திரும்பத் திரும்ப தொடர்ந்து உற்பத்தி செய்வதற்காகவும் (M - C) மறு புறம் நுகர்வதற்காகவும் (m - c) உற்பத்திப் பொருட்களுக்காகப் பரிவர்தனை செய்வதும்தான் நோக்கமெனக் காட்டுவது சுலபமாகி விடுகிறது. பணத்துக்கும் பண-மூலதனத்துக்குமுள்ள தனித் தன்மைகளைக் கவனியாது விலக்குவது இதன் பின் சாத்தியமாகி விடுகிறது. ஏனென்றால், M, m ஆகியவை இங்கே சரக்குச் சுற்றோட்டத்துக்கான தற்காலிக சாதனமாகத்தான் செயல்படுகின்றன.

உற்பதியின் முழு சுற்றையும் விவாதிக்கையில் சரக்கு-மூலதனமானது வெறும் சரக்காகி விடுகிறது. ஆனால் மதிப்பின் அடக்கக் கூறுகளை விவாதிக்க முற்பட்டதும் சரக்கு-மூலதனம் சரக்கு-மூலதனமாகச் செயல்படுவதாய் பாவிக்கப்படுகிறது.

மூன்றாவது வகைச் சுற்றில், அதாவது C' - M' - C ... P ... C' என்பதில் சுற்றோட்ட நிகழ்முறையின் இரு கட்டங்களும் சுற்றினைத் தொடங்கி வைக்கின்றன; இரண்டாவது வகையான P ... P என்பதில் காணப்படும் அதே வரிசை ஒழுங்கில் அவை இதைச் செய்கின்றன. C' ... C' என்பதே மூன்றாவது வகைப்பட்ட முழுச் சுற்று.

திறனுடை நுகர்வில் இயல்பாகவே தொழிலாளியின் சொந்த நுகர்வும் அடங்குகிறது; ஏனென்றால் உழைபுச் சக்தியானது குறிப்பிட்ட சில வரம்புகளுக்குள் தொழிலாளியினது சொந்த நுகர்வினது தொடர்ச்சியாய் விளங்கும் அதன் உற்பத்திப் பொருளே ஆகும். திறனுடை நுகர்வு என்பது தனிப்பட்ட ஒவ்வொரு மூலதனமும் செய்கின்ற காரியமாகும். ஆனால் சொந்த நுகர்வு என்பது --- தனிப்பட்ட முதலாளியின் வாழ்வுக்குத் தேவையானதைத் தவிர்த்து --- இங்கு சமுதாய செயலாகவே அன்றி தனிப்பட்ட முதலாளியின் செயலாகக் கொள்ளப்படவில்லை.

M ... M' என்பதில், புதிய சுற்றில் நுழையும் mஇன் பரிமாணத்தைப் பொறுத்து, சுற்று விரிவடையும் சாத்தியப்பாடு இருக்கிறது.

P ... P என்பதில் P ஆனது புதிய சுற்றினை அதே மதிப்புடன் --- அல்லது இன்னும் சிறிய மதிப்புடனும் கூட --- தொடங்கலாம்; அப்போதும் கூட அது விரிதிற மறுவுற்பத்தியைக் குறிக்கலாம். எடுத்துக்காட்டாக, உழைப்பின் உற்பத்தித் திறன் உயர்வதன் பயனாய் சரக்குகளின் குறிப்பிட்ட சில ஆக்கக் கூறுகள் முன்னிலும் மலிவாகும் போது இப்படி நிகழ்கிறது. இதற்கு நேர்மாறாகவும் நிகழலாம்.

C ... C' என்பதில் C' ஆனது  சுழல் இயக்கத்தின் தொடக்க முனையும் மாறிச் செல்லும் இடை நிலையும் இறுதி முனையும் ஆகிறது. இவ்வாறு அது எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. மறுவுற்பத்தி நிகழ்முறைக்கு அது இன்றியமையாத நிரந்தரத் தேவையாகும்.

எப்போதுமே M. P அல்லது C' என்ற தொடக்க வடிவம்தான் மூலதன-மதிப்பு (மூன்றாவது வகைச் சுற்றில் உபரி-மதிப்பு உண்டாகிப் பெருக்கமடைந்த  மூலதன-மதிப்பு) முன்னீடு செய்யப்படும் வடிவமாகும். அதாவது சுற்றின் ஆரம்ப வடிவமாகும். சுற்றின் முடிவில் வருகிற M, P அல்லது C' என்னும் இறுதி வடிவம் சுற்றில் அதற்கு முன்னதாக வரும் பணிவழிப்பட்ட வடிவத்தின் உருமாற்றமே தவிர, ஆரம்ப வடிவத்தின் உருமாற்றமல்ல.

மூன்றாம் வகைச் சுற்றில் C' ஆனது திறனுடை-மூலதனமான P இன் உருமாற்றமாகும். ஆனால் இங்கே --- மூன்றாம் வகைச் சுற்றில் --- ஏற்படும் உருமாற்றம், முதலாவதாக, மூலதனத்தின் பணி வழிப்பட்ட வடிவில் மட்டுமின்றி, மதிப்பின் பருமனிலும் மாற்றத்தைக் குறிக்கிறது. இரண்டாவதாக, இந்த உரு மாற்றம் திறனுடை-மூலதனத்தின் சரக்கு உள்ளடக்கத்தின் பயன் வடிவத்திலும் மதிப்பிலும் உற்பத்தி நிகழ்முறையின் போது உண்டாகும் மெய்யான மாற்றத்தின் விளைவாகுமே தவிர, சரக்குச் சுற்றோட்ட நிகழ்முறையின் போதான இட மாற்றத்தால் உண்டாகும் வடிவ மாற்றமல்ல.

ஒரு தனிப்பட்ட தொழில் துறை மூலதனத்தினது சுற்றின் இறுதி முனை என்ற முறையில் C'க்குத் தேவைப்படுவதெல்லாம் அதனை உற்பத்தி செய்த தொழில் துறை மூலதனம் சுற்றோட்டத் துறைக்கு வெளியில் ஏற்கும் P என்னும் வடிவமேதான்.

சுற்றின் இறுதி முனையைத் தவிர்த்து, தனிப்பட்ட பண-மூலதனத்தின் சுற்றுக்குப் பண-மூலதனம் இருந்தாக வேண்டுமென்பதில்லை; தனிப்பட்ட திறனுடை-மூலதனத்தின் சுற்றுக்கும் கூட திறனுடை-மூலதனம் இருந்தாக வேண்டுமென்பதில்லை. முதலாம் வகைச் சுற்றில் M ஆனது வரலாற்றில் தோன்றும் முதலாவது பண..மூலதனமாக இருக்கலாம், அதே போல் இரண்டாம் வகைச் சுற்றில் P ஆனது வரலாற்றின் முதலாவது திறனுடை-மூலதனமாக இருக்கலாம்; ஆனால்,

                                        { C --    { M - C < L / mp ... P ... C'
                                   C'  { -- M'   {
                                        { c  --    { m - c

என்பதான முன்றாம் வகைச் சுற்றில், C ஆனது சுற்றுக்கு வெளியிலிருந்து இருமுறை வருவது அவசியமாகிறது. C' - M' - C < L / mp என்னும் சுற்றில் முதல் முறை தேவைப்படுகிறது.;

முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையின் ஆட்சியை அடிப்படையாகக் கொள்ளூம் போது, விற்பவரின் கையிலுள்ள எல்லாச் சரக்குகளும் சரக்கு-மூலதனமாகவே இருந்தாக வேண்டும்.  

திறனுடை-மூலதனமான Pஇன் அடக்கக் கூறுகளாகிய L, mp என்னும் சரக்குகள் அவை வாங்கப்படுகிற பல்வேறு சரக்குச் சந்தைகளில் முன்பு அவை பெற்றிருந்த அதே வடிவத்தை இப்போது Pஇன் நிலவல் வடிவங்கள் என்ற முறையில் பெற்றிருக்கவில்லை. இரண்டும் இப்போது ஒன்றுசேர்ந்து விடுகின்றன, இப்படி இணையும்போது அவற்றால் திறனுடை-மூலதனமாகச் செயல்பட முடிகிறது.

C' ... C' என்ற சுற்றானது அதன் வட்டத்துக்குள் C (=L+mp) என்னும் வடிவில் பிற தொழில் துறை மூலதனங்கள் நிலவுதலை அவசியமாக்குகிறது; mp ஆனது இதர பல வகைப்பட்ட மூலதனங்களையும் கொண்டதாகும். ஆகவேதான் இந்த மூன்றாவது வகைச் சுற்றினை மூலதனச் சுற்றின் பொதுவான வடிவமாகக் கொண்டால் மட்டும் போதாது. அதாவது தனிப்பட்ட ஒவ்வொரு தொழில் துறை மூலதனத்தையும் (முதன் முதலாய் முதலீடு செய்யப்படுவதைத் தவிர்த்து) ஆராய்ந்து அறிவதற்கான சமூக வடிவமைப்பாக, எனவே தனிப்பட்ட எல்லாத் தொழிற்துறை மூலதனங்களுக்கும் பொதுவான இயக்க வடிவமாகக் கொண்டால் மட்டும் போதாது. அதோடு கூட தனிப்பட்ட மூலதனங்களினது ஒட்டுமொத்த்த்தின், எனவே முதலாளி வர்க்கத்தின் ஒட்டு மொத்த மூலதனத்தின் இயக்க வடிவமாகக் கொள்வதும் அவசியமாகிறது. இந்த ஒட்டுமொத்த மூலதனத்தின் இயக்கமும் ஒவ்வொரு தனிப்பட்ட தொழில் துறை மூலதனத்தின் இயக்கமும் ஒரு பகுதியாய் ஏனைய மூலதனங்களது இயக்கங்களுடன் ஒன்று கலப்பதோடு அந்த ஏனைய இயக்கங்களால் அவசியமாக்கப்படவும் செய்கிறது.

சமுதாய மூலதனமானது தனிப்பட்ட மூலதனங்களின் கூட்டுத் தொகைக்குச் சமம் (கூட்டு பங்கு [joint-stock] மூலதனமும், அரசாங்கங்கள் உற்பத்தித் திறனுள்ள கூலியுழைப்பைச் சுரங்கங்களிலும் இருப்புப் பாதைகளிலும் இன்ன பிற வற்றிலும் அமர்த்தி தொழில் துறை முதலாளிகளது பணியைச் செய்து வரும் வரை அரசு மூலதனமும் [state capital] கூட தனிப்பட்ட மூலதனங்களில் சேர்க்கப்பட வேண்டியவையே) என்பதும், சமுதாய மூலதனத்தின் ஒட்டு மொத்த இயக்கமானது தனிப்பட்ட மூலதனங்களது இயக்கங்களின் குறிக்கணிதக் கூட்டுத் தொகைக்கு [algebraic sum] சமம் என்பதும் மெய்தான்.

தனிப்பட்ட மூலதனத்தின் இயக்கத்தைப் பரிசீலிக்கையில் குறிப்பிட்ட சில பிரச்சனைகளின் தீர்வு இந்தப் பரிசீலனையின் விளைவாய் இருப்பதற்குப் பதில் முன்கூட்டியே அனுமானித்துக் கொள்ள வேண்டியதாகிறது. ஆனால் அதே இயக்கத்தை சமுதாய மூலதனத்தினது மொத்த இயக்கத்தின் ஒரு பகுதியாகக் கொண்டு பரிசீலிக்கையில் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கிறது.

முதலாளித்துவ முறையில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு சரக்கும் ---- பயன் வடிவம் காரணமாய் அது திறனுடை நுகர்வுக்கு உரியதானாலும் சரி, சொந்த நுகர்வுக்கு உரியதானாலும் சரி, இரு வகை நுகர்வுக்கும் உரியதானாலும் சரி --- சரக்கு மூலதனம்தான். M ... M' என்ற சுற்றில், மூலதன-மதிப்பின் தற்பெருக்கமாகிய அமிசம் மட்டுமே முழு நிகழ்முறையின் நோக்கம் என்பது புலப்படுகிறது.  

ஒரு வருட உற்பத்தியானது அடுத்த வருட உற்பத்திக்கு முதனிலையாய் இருக்கும் வரை, அல்லது ஓராண்டுக்குட்பட்ட சாமானிய மறுவுற்பத்தி நிகழ்முறையோடு ஒருங்கே நடைபெறக் கூடியதாய் இருக்கும் வரை, உபரி-உற்பத்தியானது கூடுதல் மூலதனமாகவும் செயல்படுவதற்கு ஏற்ற வடிவில் அமைந்து விடுகிறது. உற்பத்தித் திறன் உயர்வதன் மூலம் மூலதனத்தின் அடக்கப் பொருள் கூடுதலாகலாமே தவிர மதிப்பு உயர முடியாது; ஆயினும் உற்பத்தித் திறனிலான உயர்வு மதிப்பின் தற்பெருக்கத்துக்குக் கூடுதலாய் வேண்டியவற்றைக் கிடைக்கச் செய்கிறது.

Thursday, February 13, 2014

பாகம் 2 பகுதி 1 அத்தியாயம் 2 திறனுடை மூலதனத்தின் சுற்று II, III & IV

II திரட்டலும் விரிதிற மறுவுற்பத்தியும்

உற்பத்தி நிகழ் முறையின் விரிவாக்கப் பருமனளவுகள் நிர்ணயமாவது தொழில் நுட்பக் காரணிகளாலேயே தவிர மனவிருப்பத்துக்கு ஏற்ப அல்ல. ஆகவே ஈடேற்றம் பெறும் உபரி-மதிப்பை உடனுக்குடன் மூலதனமாக்க விரும்பினாலும் கூட பல சந்தர்ப்பங்களில் முடிவதில்லை. அது பயனுள்ள முறையில் கூடுதல் மூலதனமாக செயல்படுவதற்கு, அல்லது ஏற்கனவே செயல்பட்டு வரும் மூலதன-மதிப்பின் சுற்றினுள் புகுவதற்குப் போதுமான பருமனுடையதாய் இருப்பதில்லை. தக்க பருமனை வந்தடையும் பொருட்டு அடுத்து அடுத்துப் பல சுற்றுகளிலுருந்தும் உபரி..மதிப்பைத் திரட்டிச் சேர்க்க வேண்டியுள்ளது. இவ்விதம் உபரி-மதிப்பு பணச் சேர்ப்பாக தேங்குகிறது. இவ்வடிவில் அது உள்ளூறை (latent) மூலதனமாகிறது --- உள்ளுறை என்பது எதனால் என்றால், தொடர்ந்து பண வடிவில் இருந்து வரும் அதனால் மூலதனமாகச் செயல்பட முடியாது.

உள்ளுறைப் பண-மூலதனம் உருவாவதால் மறுவுற்பத்தி நிகழ்முறை விரிவாக்கமடைவதில்லை.

முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் தன்மை அனைத்தையுமே நிர்ணயிப்பது முன்னீடு செய்யப்படும் மூலதன-மதிப்பின் தற்பெருக்கம்தான் --- அதாவது, முதலாவதாக, முடிந்த அளவுக்கு அதிகமான உபரி-மதிப்பு உற்பத்தியாதலும், அதே போது இரண்டாவதாக மூலதனம் உற்பத்தியாதலும், ஆகவே உபரி..மதிப்பு மூலதனமாக மாறுதலும்தான். மூலதனத் திரட்டல்தான், அல்லது விரிதிற மறுவுற்பத்திதான் உபரி-மதிப்பின் உற்பத்தியை ஓயாமல் மேலும் மேலும் விரிவாக்கிச் செல்வதற்குரிய வழி.

உபரி-மதிப்பு முழுவதுமே மூலதனத்திரட்டலில் சேர்வதாகக் கொள்வது நல்லது. P ... C' - M' - C' < L / mp ... P' என்பது திறனுடை-மூலதனத்தைக் குறிக்கும் சூத்திரம். திறனுடை-மூலதனம் முன்னிலும் விரிந்த அளவும் அதிக மதிப்பும் கொண்டதாய் மறுவுற்பத்தி செய்யப்பட்டு, கூடுதலாகிவிட்ட ஒன்றாய்த் தனது இரண்டாவது சுற்றைத் தொடங்குகிறது. அதாவது முதலாவது சுற்றைப் புதுப்பிக்கிறது.

இந்தப் பண-மூலதனம் முதலாவது சுழல் இயக்கத்தைத் தொடக்கி வைத்த பண-மூலதனத்தைக் காட்டிலும் பெரியதாகும். ஆனால் உபரி-மதிப்பு மூலதனமாக்கப்பட்டதால்தான் அது இப்படிப் பெரிதாகிறது என்பதற்கான குறி, அது முன்னீடு செய்யப்பட்ட மூலதனமாகச் செயல்பட முற்பட்டதும் இல்லாமற் போய் விடுகிறது. சுற்றினைத் தொடக்கும் பண-மூலதனம் என்ற வடிவம் எஞ்சுகிறதே ஒழிய அதன் பூர்வ கதை மறைந்து விடுகிறது.

P  ... P' என்ற சுற்றை M ... M' என்ற சுற்றுடன் ஒப்புநோக்கினால் இரன்டும் வெவ்வேறு உட்பொருளைக் குறிப்பவை என்று தெரியும். முன்னீடு செய்யப்படும் மதிப்பின் தற்பெருக்கம், அதாவது உபரி-மதிப்பின் உற்பத்தி M ... M' என்பதில் காட்டப்படுகிறது. P ... P' என்பதில், P' ஆனது உபரி-மதிப்பு மூலதனமாக்கப்பட்டு விட்டதையே காட்டுகிறது. அதாவது மூலதனம் திரட்டப்பட்டுள்ளதையும், ஆகவே Pஐப் போல் அல்லாமல் P' ஆனது ஆரம்ப மூலதன..மதிப்பு, மூலதன மதிப்பினது இயக்கத்தின் விளைவாகத் திரட்டப்படும் மூலதன-மதிப்பு ஆகிய இரண்டின் கூட்டுத் தொகையாய் இருப்பதையும்தான் காட்டுகிறது.

திறனுடை-மூலதனத்தின் வடிவிலுள்ள தொழில் துறை மூலதனமும், உற்பத்திப் பொருட்களைப் படைக்கும் வேறெந்த உழைப்பு நிகழ்முறையிலும் அடங்கிய அதே கூறுகளால் ஆனதாகவே இருக்க முடியும்; அதாவது ஒரு புறம், உழைப்பின் பொருட் சாதனங்களாலும் (உற்பத்திச் சாதனங்களாலும்), மறு புறம் உற்பத்தித் திறனுள்ள முறையில் (காரிய நோக்குடன்) செயல்படும் உழைப்புச் சக்தியாலும் ஆனதாகவே இருக்க முடியும். தொழில் துறை மூலதனமானது எப்படி உற்பத்தித் துறையில் பொதுவாக உற்பத்தி நிகழ்முறையின் தேவைப்பாடுகளையும், ஆகவே முதலாளித்துவமல்லாத உற்பத்தி நிகழ்முறையின் தேவைப்பாடுகளையும் கூட நிறைவு செய்வதற்கு உகந்த இயைபில்தான் நிலவ முடிகிறதோ, அதே போல அது சுற்றோட்டத் துறையிலும் அதற்கு உகந்த வடிவங்களில், அதாவது சரக்கு வடிவத்திலும் பண வடிவத்திலும் மட்டுமே நிலவ முடிகிறது.

பணம் என்ற முறையில் பணத்துக்கும், சரக்குகள் என்ற முறையில் சரக்குகளுக்கும் உரிய பிரத்தியேகத் தன்மைகளையும் அவற்றின் மூலதனப் பண்பிலிருந்து பெற முயல்வது தவறு. இதற்கு மாறாக, திறனுடை-மூலதனத்தின் குணங்களை உற்பத்திச் சாதனங்கள் என்ற அதன் நிலவல் வடிவத்திலிருந்து பெறுவதும் தவறுதான்.

அதிகரித்து விட்ட P' ஆனது புதுச் சுற்றைத் தொடக்குகையில் P ஆகவே செயல்படுகிறது --- சாமானிய மறுவுற்பத்தியாகிய P... P என்பதில் எப்படியோ அதே போல்தான் இதிலும் P ஆகவே செயல்படுகிறது.

மூலதனம் வளர்ந்து செல்கையில் அதன் மதிப்பின் இயைபிலும் மாற்றம் ஏற்படுகிறது; இந்த மாற்றம் மேலும் மேலும் ஏற்படுகையில் mpஇன் மதிப்பு அதிகரிக்கிறது. ஆனால் Lஇன் மதிப்பு ஒப்பளவில் எப்போதுமே குறைகிறது; பல சந்தர்ப்பங்களில் அறுதியாகவும் கூடக் குறைகிறது.

III பணத் திரட்டல்

முதல் தொழில் அல்லாமல் சுயேச்சையான இரண்டாவது ஒன்றில் mஐப் பண-மூலதனமாகப் பயன்படுத்த வேண்டுமானால், m இதற்குத் தேவையான குறைந்த பட்ச அளவுடையதாய் இருந்தாக வேண்டும் என்பது தெளிவு. பழைய தொழிலை விரிவாக்குவதற்கு அதனைப் பயன்படுத்த நினைத்தால், அப்போதும் m ஆனது குறைந்தபட்சப் பருமனுடையதாய் இருந்தாலன்றி Pஇன் பொருட் கூறுகளுக்கு இடையிலான உறவுகளும் இக்கூறுகளது மதிப்புறவுகளும் அதற்கு இடமளிப்பதில்லை. இத்தொழிலில் ஈடுபடுத்தப்படும் எல்லா உற்பத்திச் சாதனங்களும் ஒன்றோடு ஒன்று பண்பு வழி உறவுமட்டுமல்லாமல், திட்டமான அளவுவழி உறவும் கொண்டுள்ளவை. அதாவது அளவு விகிதாசாரமுடையவை. திறனுடை-மூலதனத்தைப் பெருக்கும் வகையில் m ஆனது கூடுதல் உற்பத்திச் சாதனங்களாகவும் கூடுதல் உழைப்புச் சக்தியாகவும் மாறும் பொருட்டு அதற்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச பருமனை மேற்கூறிய இந்தப் பொருட் கூறு உறவுகளும், திறனுடை‍-மூலதனத்தினது ஆக்கக் கூறுகளின் அவசிய மதிப்புறவுகளும்தான் நிர்ணயிக்கின்றன.

mஇன் திரட்டல் m ஆல் நடைபெறவில்லை. P ... P' என்பது திரும்பத் திரும்ப நடைபெறுவதால்தான் இத்திரட்ட்ல் நடைபெறுகிறது. குறைந்தபட்சப் பருமனை வந்தடையும் வரை m ஆனது பண வடிவில் நீடித்தாக வேண்டும். குறைந்தபட்சப் பருமன் என்பது ஆக்க முறையில் பணி புரிவதற்கு அவசியமான பருமன்.

சேர்ப்பு என்பது சுற்றோட்டத்தில் செல்லாத பணத்தின் வடிவமே. சுற்றோட்டத்தில் தடைபட்டுப் போய் பண வடிவிலேயே இருக்கிற வடிவமே. சேர்ப்பு நிகழ்முறையைப் பொறுத்த வரை அது சரக்கு உற்பத்தி அனைத்துக்குமே பொதுவானதுதான். சரக்கு உற்பத்தியின் வளர்ச்சி பெறாத நிலைகளில் மட்டுமே, முதலாளித்துவத்துக்கு முற்பட்ட நிலைகளில் மட்டுமே சேர்ப்பதே ஒரு தனி இலட்சியமாய் இருக்கிறது.

இங்கே சேர்ப்பானது பண-மூலதனத்தின் வடிவில் எழுகிறது; மூலதனத் திரட்டலோடு உடன் வரும் நிகழ்முறையாக நடைபெறுகிறது. பணம் இங்கே உள்ளுறைப் பண-மூலதனமாக இருப்பதாலும், அப்படி இருந்து வரும் வரையிலும் இது நடைபெறுகிறது. பண வடிவம் பெறும் உபரி-மதிப்பு இங்கே சேர்ப்பாக சேரவும் சேர்ப்பின் நிலையில் இருக்கவும் வேண்டியதாயிருக்கிறது.

இந்தச் சேர்ப்பு அதன் இலக்கணப்படி உள்ளூறை (latent) பண-மூலதனம் ஆகும்.

இந்த உள்ளுறைப் பண-மூலதனம் பணம் படைக்கும் பணத்தின் வடிவிலும், அதாவது வட்டி கிடைக்கும் வங்கிச் சேமிப்புகள் (Bank Deposits), உண்டியல்கள் (bills of exchange), வெவ்வேறு வகைப்பட்ட கடன் பத்திரங்கள் (securities) போன்ற பலவற்றின் வடிவிலும் அமையலாம்.

IV சேம நிதி

உபரி-மதிப்பு சேர்ப்பின் வடிவில் பணத்தின் திரட்டலுக்கான நிதியாகிறது; மூலதனத் திரட்டல் தாற்காலிகமாய் ஏற்கும் பண வடிவமாகிறது; அதே அளவுக்கு இத்திரட்டலுக்கு ஒரு முன்னிபந்தனையும் ஆகிறது. அதே போது இந்தத் திரட்டல் தனி வகைப்பட்ட துணைநிலைச் சேவைகளையும் செய்ய முடிகிறது; அதாவது சுற்றுகளிலான மூலதன இயக்கத்துள் புக முடிகிறது. அதும் P ... P' என்னும் வடிவம் பெறாமலே, ஆகவே முதலாளித்துவ மறுவுற்பத்தியை விரிவாக்கமலே இதைச் செய்ய முடிகிறது.

பணத் திரட்டல் நிதியானது சுற்றில் ஏற்படக் கூடிய இன்னல்களைச் சமாளிப்பதற்கான சேம நிதியாக (reserve fund) பயன்படுகிறது.

இடைப்பட்ட காலங்களில் சுழல்..மூலதனத்தில் (circulating capital) ஒரு பகுதி தொடர்ந்து பண வடிவிலேயே இருந்து வருகிறது.

இக்கட்டான நிதி நிலைமையில் இருக்கும் ஒரு முதலாளி தம் கைவசமுள்ள பணம் குறிப்பிட்ட எப்பணிகளுக்காக இருக்கிறது எனக் கவலைப்பட மாட்டார் என்பதைக் கூறத் தேவையில்லை. அவர் தம் கைவசமுள்ள பணம் எதுவாயினும் தமது மூலதனத்தைத் தொடர்ந்து அதன் சுற்றோட்டத்தில் இயங்கச் செய்வதற்காகத் தயங்காமல் அப்பணத்தைப் பயன் படுத்துவார்.

பணத் திரட்டல் நிதி என்பது, உள்ளுறை நிலையில் பண-மூலதனம் இருப்பதைக் குறிக்கிறது; ஆகவே பணம் பண-மூலதனமாக மாறுவதைக் குறிக்கிறது.

Wednesday, February 12, 2014

பாகம் 2 பகுதி 1 அத்தியாயம் 2 திறனுடை மூலதனத்தின் சுற்று I

திறனுடை-மூலதனத்தின் சுற்றுக்கான பொதுச் சூத்திரம்:  P ... C' - M' - C ... P

தொழில் துறை மூலதனமானது உற்பத்தித் திறனுள்ள வடிவம் பூண்டு பணி புரிவதையும் இந்தப் பணி ஒரு தரம் புரியப்படுவதோடு நின்று விடாமல் காலவட்ட முறையில் திரும்பத் திரும்ப புரியப்பட்டு, ஒவ்வொரு தொடக்கமும் இவ்விதம் அதன் அடுத்த தொடக்கத்துக்கு வித்திட்டுச் செல்வதையும் இந்தச் சூத்திரம் குறிக்கிறது.

மதிப்புகள் சுற்றோட்ட நிகழ்முறையில் நுழையாமலே உற்பத்தி நிகழ்முறையில் நுழைவது உண்டு. ஆனால் முதலாளித்துவப் பொருளுற்பத்தியில் மிகச் சொற்பமே என்பதால் இதைக் கருதாமலே ஒதுக்கி விடலாம்.

1. சாமானிய மறுவுற்பத்தி

திறனுடை மூலதனத்தின் சாமானிய மறுவுற்பத்தியில் உபரி-மதிப்பு முழுவதுமே முதலாளியின் சொந்த  நுகர்வுக்குப் போய்விடுகிறது. சரக்கு-முலதனமான C' பணமாக உருமாறியவுடனே அந்தப் பணத்தில் மூலதன-மதிப்பைக் குறிக்கும் பகுதி தொழில் துறை மூலதனத்தின் சுற்றில் தொடர்ந்து ஓடுகிறது. பணமாக உருமாறிய உபரி-மதிப்பான மறு பகுதி பொதுவான சரக்குச் சுற்றோட்டத்தில் நுழைகிறது. இந்தப் பணச் சுற்றோட்டம் முதலாளியிடமிருந்து ஆரம்பமாகிறது. ஆனால் அவரது தனிப்பட்ட மூலதனத்தின் சுற்றோட்டத்துக்கு வெளியே நடைபெறுகிறது.

m - c இல் பணமானது நடப்பு நுகர்வுக்குரிய வழங்கல் அல்லது சேர்ப்பின் (hoard) வடிவில் தாற்காலிகமாக நிலவுகிறது. பண வடிவ மூலதனமாகிய Mஇன் சுற்றோட்டத்தில் நுழைவதில்லை. இந்தப் பணம் செலவிடப்படுகிறதே தவிர முன்னீடு செய்யப்படுவதில்லை.

ஆனால் உற்பத்திப் பண்டமாகிய சரக்கு இயந்திரமாக இருக்குமேயானால், இந்த இயந்திரத்தின் மதிப்பில் ஒரு பகுதி உபரி-மதிப்பாகும்; ஆனால் இயந்திரத்தைத் துண்டு துண்டாக உடைக்காமல் --- இவ்விதம் அதன் பயன் மதிப்போடு கூடவே மதிப்பையும் அழித்திடாமல் ... அதனை மூலதன-மதிப்பாகவும் உபரி-மதிப்பாகவும் பிரிக்கமுடியாது. ஆகவே, இரு மதிப்புக் கூறுகளையும் சரக்கின் கூறுகளாக கருத்தளவில் மட்டுமே காட்ட முடியும். மொத்தச் சரக்கு அல்லது சரக்கு-மூலதனமாகிய இயந்திரம் முழுவதுமாக விற்கப்பட்டால்தான்,  m அதன் பிரத்தியேகச் சுற்றோட்ட்த்தில் நுழைய முடியும். 

C' ஆனது M' உருமாற்றம் அடைந்த பிறகு, மூலதன-மதிப்பும் உபரி-மதிப்புமான C, c ஆகியவற்றின் சுற்றோட்டம் பிளவுண்டு விடுகிறது. ஆக இதிலிருந்து பெறப்படுவது என்னவென்றால்: 

முதலாவதாக, C' - M' = C' - (M+m') என்பதன் மூலம் சரக்கு-மூலதனம் ஈடேற்றம் பெறுகிறது. மூலதன-மதிப்பு, உபரி-மதிப்பு ஆகியவற்றின் அசைவியக்கம், இதுகாறும் ஒன்றிணைந்து C' - M' என்பதில் ஒரே அளவிலான சரக்குத் தொகுதியால் நடைபெற்று வந்த இவ்வியக்கம், இப்போது தனித்தனிப் பணத் தொகைகளாய் சுயேச்சையான வடிவங்கள் பெற்று தனித் தனியே பிரியக் கூடியதாகிறது.

தொர்ந்து அமைந்த, பிரிக்க முடியாத சரக்குகளைப் பொறுத்தவரை, மதிப்புக் கூறுகளை கருத்தியலாகப் பிரித்துத் தனித்தனி ஆக்குவதே நடைமுறை வழக்கம். 

மூலதன-மதிப்பும் உபரி-மதிப்புமாகிய இரண்டின் அசைவியக்கமும் --- இரண்டும் இன்னமும் ஒன்றுசேர்ந்தே Cஇலும் Mஇலும் செயல்படுகின்றன --- பகுதியளவு மட்டுமே பிளவுபட்டுப் பிரிகிறதென்றால் (உபரி-மதிப்பில் ஒரு பகுதி முதலாளியின் வருவாயாகச் செலவிடப்படாத நிலையில்), அல்லது பிரியாமலே நடைபெறுகிறதென்றால், மூலதன-மதிப்பின் சுற்றினுள்ளேயே, அச்சுற்று பூர்த்தியாகும் முன்பே, மூலதன-மதிப்பில் மாற்றம் ஏற்படுகிறது. இந்தப் பெருக்கத்தோடு கூடவே இம்மதிப்பின் இயைபிலும் மாற்றம் ஏற்படலாம்.  

C' என்பது தொடக்கத்திலிருந்தே சரக்கு-மூலதனமாகச் செயல்படுகிறது. இந்நிகழ்முறையின் நோக்கம் எல்லாம் செல்வப் பெருக்கம்தான் (உபரி-மதிப்பின் உற்பத்திதான்). ஆனால் முதலாளியின் உபரி-மதிப்பு (ஆகவே அவரது மூலதனம்) அதிகமாகிச் செல்வதைத் தொடர்ந்து, சொந்த முறையிலான அவரது நுகர்வும் அதிகரித்துச் செல்வதை இந்த நோக்கம் எவ்விதத்திலும் வேண்டாமென விலக்குவதில்லை. மாறாக சந்தேகத்துக்கு இடமின்றி அங்கீகரிக்கவே செய்கிறது.

c என்பது எந்தச் செலவுமில்லாமல் முதலாளிக்குக் கிடைத்த சரக்கு-மதிப்பாகும். உபரி-உழைப்பின் தசையுருவாகும், அதனால்தான் அது சரக்கு-மூலதனமான C'இன் ஓர் அடக்கக் கூறாக முதலில் நம் முன்னால் வரமுடிந்தது என்ற சிறு உண்மையையும் இங்கே நாம் மறக்கலாகாது. இந்த c, அதன் நிலவலின் இயல்பினாலேயே, நிகழ்முறையின் போது மூலதன-மதிப்பின் சுற்றோடு பிணைக்கப் பட்டுள்ளது. இந்த சுற்று தேக்கமுறுமானால், அல்லது வேறு விதமான இடையூறுக்கு ஆளாகுமானால், cஇன் நுகர்வு மட்டுமல்லாமல், cக்குப் பதிலாய் அதன் இடத்துக்கு வரக் கூடிய சரக்குத் தொகுதியின் விற்றலும் தடைபடுகிறது, அல்லது அடியோடு நின்றுவிடுகிறது. C' - M' என்பது நடந்தேறாமல் போகும் போதும் அல்லது C'இல் ஒரு பகுதியை மட்டுமே விற்க முடிகிற போதும் இதே விளைவுதான் ஏற்படுகிறது.

முதலாளியின் வருவாய் m - c என்பதிலும் ஆகவே c - m - c என்பது முழுவதிலுமே தனித்து சுயேச்சையாக இயங்க முற்பட்டவுடன், அந்த வருவாயின் சுற்றோட்டமானது முதலாளி முன்னீடு செய்யும் மூலதனத்தின் சுழல் இயக்கத்துக்குள் சேருவதில்லை; அதிலிருந்தே உதிப்பதாயினும் உதித்த பின் அதில் சேராமல் பிரிந்து சென்று விடுகிறது. இந்த சுற்றோட்டம் முன்னீடு செய்யப்பட்ட மூலதனத்தின் சுழல் இயக்கத்துடன் எப்படித் தொடர்பு கொண்டிருக்கிறது என்றால்: மூலதனம் இருக்க வேண்டுமானால் முதலாளி இருந்தாக வேண்டும்; முதலாளி இருக்க வேண்டுமானால் அம்முதலாளி உபரி-மதிப்பை நுகர்ந்தாக வேண்டும்.

பொதுவான சரக்குச் சுற்றோட்டத்துள் C' ஆனது சரக்காக மட்டுமே செயல்படுகிறது; ஆனால் மூலதனச் சுற்றோட்டத்தில் ஒரு கூறாக இருக்கும்போது அது சரக்கு-மூலதனமாகச் செயல்படுகிறது. மூலதன-மதிப்பு மாறி மாறி ஏற்பதும் களைவதுமான வடிவமே சரக்கு-மூலதனம். வியாபாரியிடம் விற்கப்பட்டதும் அதனை உற்பத்தி செய்த மூலதனத்தின் சுழல் இயக்கத்திலிருந்து வெளியேறிவிடுகிறது.

பொதுவான சுற்றோட்டம் என்பது சந்தையினுள் செலுத்தப்பட்டாமல் தனியாட்களின் சொந்த நுகர்வில் சேர்ந்துவிடும் மதிப்புகளை மட்டுமல்லாமல், சமுதாய மூலதனத்தின் தனிப்பட்ட வெவ்வேறு பின்னப் பகுதிகளது சுற்றுகளாலான பின்னல்களையும், அதாவது தனிப்பட்ட மூலதனங்களின் ஒட்டுமொத்தத்தையும் தன்னுள் கொண்டதாகும்.

முதல் வகைச் சுற்றில் (M ... M' சுற்றில்) பண-மூலதனமாகிய Mஆனது, மூலதன-மதிப்பு முன்னீடு செய்யப்பட்ட அந்த ஆரம்ப வடிவில்தான் தொடக்கத்திலிருந்தே தோற்றமளித்தது. ஆனால், இங்கே அது, சுற்றோட்டத்தின் முதல் கட்டமான  C' - M' என்பதில்   சரக்கு-மூலதனத்தால் வரப்பெறும் பணத் தொகையின் ஒரு பகுதியாகத் தொடக்கத்திலிருந்தே தோற்றமளிக்கிறது. ஆகவே இங்கே அது, திறனுடை-மூலதனமான P ஆனது சரக்குவிற்பனையின் வாயிலாகப் பணமாய் மாறுகிற உருமாற்றமாகத் தோற்றமளிக்கிறது. தொட‌க்கத்திலிருந்தே இங்கே பண-மூலதனமானது மூலதன..மதிப்பின் ஆரம்ப வடிவமோ இறுதி வடிவமோ இல்லாத ஒரு வடிவில் இருக்கிறது.

M - C என்பதில் அதே பொது M - L  ஆகவும் இருக்கிற பகுதியானது, உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குவதன் மூலம் பணம் முன்னீடு செய்யப்படுவதைக் குறிப்பதோடு அல்லாமல், பண வடிவில் உழைப்புச் சக்தி முன்னீடு செய்யப்படுவதையும் குறிக்கிறது.

தொழிலாளி கூலியாகப் பெறும் பணம் அவரது வருங்கால உழைப்பின், அல்லது பிற தொழிலாளர்களது உழைப்பின் மாற்று வடிவமே ஆகும்.  தொழிலாளியினது கடந்த கால உழைப்பில் ஒரு பகுதியைக் கொடுத்து அவரது வருங்கால உழைப்பின் மீது அவருக்கு அச்சாரம் அளிக்கிறார் முதலாளி. ஆகவே தொழிலாளியின்  இப்போதைய அல்லது வருங்கால உழைப்பால் இனிமேல் வரப் போகிற (அதாவது இப்போது இல்லாத) பொருட்களிலிருந்துதான் அவரது கடந்த கால உழைப்புக்கு ஊதியம் கிடைக்கும். இந்த நிலையில் அவர் பணத்தைச் சேர்த்து வைக்கும் பேச்சுக்கே இடமில்லாமல் போகிறது.

மூலதனத்தின் பண வடிவமானது, மூலதனம் பண-மூலதனமாக இருப்பதானது இந்த இயக்கத்தில் தாற்காலிகக் கட்டமே ஆகும். அல்லது இயக்கம் சரளமாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் வரை, பண-மூலதனம் வாங்கற் சாதனமாகப் பயன்படும் போது சுற்றோட்ட ஊடகமாக மட்டுமே இருக்கிறது; முதலாளிகள் ஒருவரிடமிருந்து ஒருவர் வாங்கும்போது --- ஆகவே அவர்கள் கணக்குகளை சரிகட்டிக் கொண்டால் போதும் என்ற நிலையில் --- அது முறையான கொடுப்புச் சாதனமாக செயல்படுகிறது.

சரக்கு வடிவத்தில் இருக்கும் மூலதன-மதிப்பை அச்சரக்கை உற்பத்தி செய்வதற்கு வேண்டிய அடிக்கூறுகளாக மீண்டும் உருமாறச் செய்வதே பண-மூலதனம் செய்கிற பணி. இறுதியாகப் பார்க்குமிடத்து, பண-மூலதனம் செய்கிற பணி எல்லாம் சரக்கு மூலதனத்தைத் திறனுடை-மூலதனமாகத் திரும்பவும் உருமாறச் செய்வதுதான்.  

உற்பத்திச் சாதனங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. மதிப்புறவுகள் ஓயாமல் மாறிக் கொண்டிருப்பதுதான் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் தனி விசேஷம். உழைப்பின் உற்பத்தித் திறன் எந்நேரமும் மாறுவது இந்தப் பொருளுற்பத்தி முறைக்குரிய தனிக் குணமாய் இருப்பதுதான் இதற்குக் காரணம்.

C' என்னும் வடிவம் தரித்துள்ள மூலதனம் பண வடிவம் பெற்று விட வேண்டுமெனத் துடிக்கிறது. ஆனால் அவ்வடிவம்பெற்று M' ஆனதுமே, திரும்பவும் தன்னைத் திறனுடை-மூலதனமாக்கிக் கொள்ளும் பொருட்டு அந்தப் பண வடிவத்தைக் களைத்தெறிய வேண்டுமெனத் துடிக்கிறது. மூலதனமானது பணத்தின் வேடத்தில் இருக்கும் வரை மூலதனமாகச் செயல்படுவதில்லை, ஆகவே அதன் மதிப்பு பெருகுவதில்லை. மூலதனம் அப்போது தரிசு நிலமாய் விளைச்சலற்றதாய் இருக்கிறது. M ஆனது இங்கே சுற்றோட்ட ஊடகமே என்றாலும் மூலதனத்தின் சுற்றோட்ட ஊடகமாகப் பணியாற்றுகிறது. மூலதன-மதிப்பின் பண வடிவமானது முதல் வகைச் சுற்றில் (பண மூலதனச் சுற்றில்) சுயேச்சையுடையதாகக் காட்டும் கோலம் இந்த இரண்டாம் வகைச் சுற்றில் மறைந்து விடுகிறது.

சந்தையில் உற்பத்திச் சாதனங்கள் கிடைக்காமற் போகுமாயின் --- சுற்று, மறுவுற்பத்தி நிகழ்முறை தடைபட்டு விடுகிறது. மூலதனம் அதன் சரக்கு-மூலதன வடிவத்தை களைந்து விட்டு முன் செல்ல முடியாமற் போகும்போது நேர்வது போலவே இப்போதும் இந்நிகழ்முறை தடைபட்டு விடுகிறது. ஒரேயொரு வேறுபாடு என்னவென்றால், மூலதனத்தால் தற்காலிக வடிவான சரக்கு வடிவத்தைக் காட்டிலும் அதிக காலத்துக்குப் பண..வடிவத்தில் நீடிக்க முடியும். மூலதனம் பண-மூலதனத்துக்குரிய பணிகளை செய்யா விட்டாலும் கூட தொடர்ந்து அது பணமாகவேதான் இருந்து வருகிறது. ஆனால் அது சரக்கு-மூலதனத்துக்குரிய பணியைச் செய்யமுடியாதபடி அதிக காலம் தடுக்கப்படுமாயின், அது சரக்காகவோ, பொதுவில் பயன்-மதிப்பாகவோ இருக்க முடிவதில்லை. மேலும் பண-வடிவில் இருக்கையில் மூல வடிவமாகிய திறனுடை-மூலதன வடிவத்துக்குப் பதில் அதனால் பிரிதொன்றை ஏற்க முடியும்; ஆனால் C' என்னும் வடிவில் வைக்கைப்பட்டிருக்கையில் அதனால் அசையவே முடியாது.

M - C ஒரு தனிப்பட்ட மூலதனத்தின் சுற்றோட்டத்திலிருந்தே பிறந்ததென்றாலும், அச்சுற்றோட்டத்தில் உட்படவில்லை. ஆனால், தொழிலாளி வர்க்கம் என்ற ஒன்று தொடர்ந்து இருப்பது முதலாளி வர்க்கத்துக்கு அவசியம் என்பதுதான் இந்த நுகர்வை சாத்தியமாக்குகிறது. தொழிலாளியின் நுகர்வும் அவ்வாறே அவசியம்; M - C என்பதுதான் இந்த நுகர்வை சாத்தியமாக்குகிறது.  

பெருந்திரள் உற்பத்தியை நேரடியாக வாங்குவோர் ஏனைய தொழில் துறை முதலாளிகளைத் தவிர்த்து, மொத்த வர்த்தகர்களே தவிர வேறு யாருமல்ல. சரக்குகளின் நுகர்வு அவற்றை தோற்றுவித்த மூலதனத்தின் சுற்றில் சேருவதில்லை. உற்பத்திப் பொருள் விற்கப்பட்டு விடுமானால் எல்லாம் முறைப்படி ஒழுங்காய் நடைபெறுவதாக முதலாளித்துவ உற்பத்தியாளர் கருதுகிறார்.

இந்நிகழ்முறை மேலும் விரிவடையுமானால் உற்பத்திச் சாதனங்கள் உற்பத்தித் திறனுள்ள முறையில் நுகரப்படுவதின் அதிகரிப்பும் இந்த விரிவாக்கத்தில் அடங்கும்.  மூலதனத்தின் இந்த மறுவுற்பத்தியுடன் கூடவே, தொழிலாளர்களுடைய தனிப்பட்ட சொந்த நுகர்வும் அதிகரித்துச் செல்லும். அதோடு சேர்ந்து முதலாளியின் தனிப்பட்ட சொந்த நுகர்வும் அதிகரித்துக் கொண்டும், மறுவுற்பத்தி நிகழ்முறை முழுவதுமே செழித்து ஓங்கிக் கொண்டும் இருக்கலாம்.

ஆனால் அதே போது   சரக்குகளின் ஒரு பகுதி இன்னமும் விற்கப்படாமல் வியாபாரிகளின் கையிலேயே தங்கிவிடலாம், சந்தையை விட்டு நகராமல் முடங்கி விடலாம்; அதாவது அவை நுகரப்படுவதாகத் தெரிவது வெறும் வெளித் தோற்றமாய் இருக்கலாம். திரள் திரளாகச் சரக்குகள் பெருக்கெடுத்து ஓடி வருகின்றன. முந்தையப் பெருக்குகள் நுகரப்பட்டு விட்டதாகப் புலப்படுவது வெறும் வெளித் தோற்றமே என்று இறுதியில் தெரிய வருகிறது. சரக்கு விற்பதற்காகச் சரக்கு-மூலதனங்கள் ஒன்றோடொன்று போட்டி போடுகின்றன. தாமதமாய் வந்து சேர்வோரால் விற்க முடிவதில்லை. அவர்கள்விலையை குறைத்து விற்க வேண்டியதாகிறது. முந்தைய பெருக்குகளைச் சேர்ந்த சரக்குகள் இன்னமும் விற்கப்பட்டாகவில்லை, அதற்குள் அவற்றுக்குப் பணம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிடுகிறது. இந்நிலையில் இந்தச் சரக்குகளின் உடைமையாளர்கள் போண்டியாக வேண்டும். இல்லையேல் கடனை அடைக்கும் பொருட்டு எந்த விலைக்கு வேண்டுமானாலும் விற்க முற்பட்டாக வேண்டும். உள்ளபடியே சரக்குகளுக்கான வேண்டலின் நிலவரம் காரணமாய் இப்படி விலையைக் குறைத்து விற்க நேர்வதில்லை. பணக் கொடுப்புக்கான வேண்டலின் (demand for payment) காரணமாகவே, சரக்கை பணமாக மாற்ற வேண்டிய அவசியத் தேவையின் காரணமாகவே இப்படி நேர்கிறது. இதைத் தொடர்ந்து நெருக்கடி (crisis) வெடிக்கிறது. இந்த நெருக்கடி கண்கூடாவது எங்கே? --- நுகர்வோரின் வேண்டல் (consumer demand), தனிப்பட்டோரது சொந்த நுகர்வுக்கான வேண்டல் நேரடியாக குறுகிக் குறைந்து விடுவது அல்ல; மூலதனத்துக்கும் மூலதனத்துக்கும் நடைபெறும் பரிவர்த்தனைகள், மூலதனத்தின் மறுவுற்பத்தி நிகழ்முறை குறுகிக் குறைந்து விடுவதில் அது கண் கூடாகிறது.

பணம் இருப்பில் நிற்பது அதன் சுற்றோட்டதுக்காக சுற்றோட்டத்தால் நிர்ணயிக்கப்படும் பணியே ஆகும். ஆக, அது வாங்கலுக்கும், கொடுப்புக்குமான நிதியாக நிலவுதல் என்பது, அதன் இயக்கத்தின் தாற்காலிக நிறுத்தம் என்பது, அதன் சுற்றோட்டம் தடைபடுதல் என்பது, பண-மூலதனமென்ற முறையில் பணம் அதன் பணிகளில் ஒன்றை நிறைவேற்றுவதாகும்.  எப்படியெனில், தாற்காலிகமாக ஒய்வில் இருந்து வரும் பணமானது, பண-மூலதனமான Mஇன் (M' - m = M) ஒரு பகுதியாகும்; Pக்குச் சமமான சரக்கு-மூலதன மதிப்பு பாகத்தில் ஒரு பகுதியாகும்.

மறு புறம், சுற்றோட்டத்திலிருந்து விலக்கப்படும் பணமெல்லாம் சேர்ப்பின் வடிவம் பெறுகிறது.  M - Cஇல் வாங்கற் சாதனம் அல்லது கொடுப்புச் சாதனம் என்ற பணத்தின் பணி பண-மூலதனத்தின் பணியாவது போலவே, இங்கே சேர்ப்பின் வடிவிலுள்ள பணத்தின் பணி பண-மூலதனத்தின் பணியாகிறது.

பண-மூலதனமானது பணமாகவே தொடர்ந்து நீடிக்கிறதென்றால் --- இந்நிலை தக்கதாயினும் தகாததாயினும், தானாகவே ஏற்படுவதாயினும் விரும்பி உண்டாக்கப் பெறுவதாயினும், அதன் பணிகளுக்கு இசைவானதாயினும் ஒவ்வாததாயினும் --- இயக்கம் தடைபடுவதே அதற்குக் காரணம். 

Saturday, February 1, 2014

பாகம் 2 பகுதி 1 அத்தியாயம் 1 பண-மூலதனத்தின் சுற்று. 4 : சுற்று அதன் முழு உருவில்

மொத்த இயக்கமானM - C... P ... C' - M'  அல்லது விரிவாக்க வடிவமான M - C < L / mp ... P ... C' (C+c) - M' (M+m) என்பதை இப்போது பரிசீலிப்போம். இதில் மூலதனமானது, ஒன்றோடொன்று தொடர்புள்ள, ஒன்றையொன்று சார்ந்துள்ள மாற்றங்களின் தொடரை, மொத்த நிகழ்முறையின் கட்டங்கள் அல்லது பிரிவுகளாகிய உருமாற்றத் தொடரைக் கடந்து செல்லும் மதிப்பாக விளங்குகிறது.

முன்னீடு செய்யப்பட்ட மதிப்பு இந்த இயக்கத்தின் போது தன்னைக் காப்பாற்றிக் கொள்வதோடு, வளரவும் செய்கிறது. பருமனில் அதிகரிக்கவும் செய்கிறது. முடிவில், இறுதிக் கட்டத்தில் , அம்மதிப்பு நிகழ்முறை முழுவதன் தொடக்கத்தில் பெற்றிருந்த அதே வடிவத்துக்குத் திரும்புகிறது. இவ்வாறு இந்நிகழ்முறையும் சுற்று சுற்றி வரும் நிகழ்முறையாகிறது.

மூலதன-மதிப்பு அதன் சுற்றோட்டத்தின் வெவ்வேறு கட்டங்களில் பண-மூலதனம், சரக்கு-மூலதனம் ஆகிய இரு வடிவங்களை ஏற்கிறது. திறனுடை-மூலதனமே உற்பத்திக் கட்டத்துக்கு உரித்தான வடிவம். இப்படி அதன் முழுச் சுற்றின் போது ஒவ்வொன்றாய் இவ்வடிவங்களை பூண்டு பிறகு அவற்றை களைவதும், இவ்வடிவங்கள் ஒவ்வொன்றையும்  பூண்டிருக்கையில் அந்தந்த வடிவத்துக்கும் உரிய பணியினைப் புரிவதுமாகிய இந்த மூலதனம் தொழில் துறை மூலதனம் (industrial capital) ஆகும்.

மூலதனச் சுற்றின் பல்வேறு கட்டங்களும் ஒன்று மற்றொன்றாகித் தடங்கலின்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் வரைதான் மூலதனம் முறைப்படி ஒழுங்காய் அதன் சுற்றில் செல்கிறது. மூலதனம் முதல் கட்டமான M - C இல் பாதி வழியில் நின்று விட்டால், பண-மூலதனம இயங்காது இறுகிப் போன பணச் சேர்ப்பு (hoard) ஆகிவிடுகிறது. உற்பத்திக் கட்டத்திலேயே அது நின்று விட்டால், ஒரு புறத்தில் உற்பத்திச் சாதனங்கள் செயலற்று முடங்கிப் போகின்றன; மறு புறத்தில் உழைப்புச் சக்தி வேலையில்லாமல் தவிக்க நேர்கிறது. மூலதனம் கடைசிக் கட்டமான C' -M' இல் தடைப்பட்டு நிற்குமானால், சரக்குகள் விலை போகாமல் குவிந்து, சரக்கு சுற்றோட்டம் நடைபெற முடியாமல் பாதையை அடைத்துக் கொள்கின்றன.

பொதுச் சூத்திரத்தில், pஇன் உற்பத்திப் பொருளானது திறனுடை-மூலதனத்தின் கூறுகளிலிருந்து வேறுபட்டப் பொருளாகக் கருதப்படுகிறது; அது உற்பத்தி நிகழ்முறைக்கு வெளியே நிலவுவதாகவும் உற்பத்தி-அடிக்கூறுகளின் பயன் வடிவத்திலிருந்து வேறுபட்ட பயன் வடிவமுடையதாகவும் கருதப்படுகிறது. உற்பத்தி நிகழ்முறையின் விளைவு ஒரு பொருளாக வடிவம் பெறும் போதெல்லாம் இதுவே நிலைமை.

ஆனால் சுயேச்சையான தொழிற் கிளைகள் சிலவற்றில், உற்பத்தி நிகழ்முறையின் விளைவு புதியதொரு உற்பத்திப் பண்டமாவதில்லை. சரக்காவதில்லை.

போக்குவரத்துத் தொழில் விற்பது இடப் பெயற்சியையே. இந்த இடப்பெயற்சி போக்குவரத்துச் சாதனங்களால் செய்து முடிக்கப்படும் உற்பத்தி நிகழ்முறையாகிறது. இந்த உற்பத்தி நிகழ்முறையிலிருந்து வேறான பயன்பாட்டுப் பொருளாக நிலவுவதில்லை. வேறு எந்த சரக்கின் பரிவர்த்தனை-மதிப்பையும் போலவே, இந்த விளைபயனின் பரிவர்த்தனை-மதிப்பும் அதனால் நுகரப்படும் உற்பத்தி அடிக்கூறுகளின் (உழைப்புச் சக்தி, உற்பத்திச் சாதனங்கள் ஆகியவற்றின்) மதிப்பு, போக்குவரத்துத் துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களின் உபரி-உழைப்பினால் படைக்கப்படும் உபரி-மதிப்பு ஆகியவற்றின் கூட்டுத் தொகையினால்தான் நிர்ணயிக்கப்படுகிறது. போக்குவரத்துத் தொழிலுக்கான சூத்திரம் M - C < L / mp ... P - M' என்பதாகும்.

உபரி-மதிப்பு அல்லது உபரி-உற்பத்தியின் தனதாக்கம் (appropriation) மட்டுமல்லாமல், அதன் படைப்பும் மூலதனத்தின் பணியாக இருக்கும் ஒரேயொரு மூலதன நிலவல் வடிவம் தொழில் துறை மூலதனம்தான். ஆகவே, உற்பத்தியானது முதலாளித்துவ தன்மையுடையதாய் இருப்பது அதற்கு அவசியத் தேவையாகும். தொழில் துறை மூலதனம் ஒன்று இருப்பதே முதலாளிக்கும் கூலித் தொழிலாளரகளுக்குமிடையே வர்க்கப் பகைமையைக் குறிக்கிறது. அது சமுதாய பொருளுற்பத்தியில் எந்த அளவுக்கு ஆதிக்கம் பெறுகிறதோ, அந்த அளவுக்கு உழைப்பு நிகழ்முறையின் தொழில் நுட்பமும் சமூக ஒழுங்கமைப்பும் புரட்சிகரமாக மாற்றியமைக்கப்படுகின்றன: அதோடு கூட, பொருளாதார-வரலாற்று வழியில் உருவான சமூக அமைப்பு வகையும் புரட்சிகரமாக மாற்றியமைக்கப்படுகிறது.

M - C ... P ... C' - M' என்பதை மூலதனச் சுற்றின் தனி வகையாய்க் கொண்டு, பின்னர் நாம் பகுத்தாயப் போகிற ஏனைய வகைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். பின் வரும் இயல்புகள் இதனை ஏனையவற்றிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.

1. இது பண-மூலதனத்தின் சுற்றாக விளங்குகிறது. இந்தப் பணத்தையே இது தொடக்க நிலையாகவும் இறுதி நிலையாகவும் கொண்டிருக்கும் M - M'  என்ற சுற்றோட்டம், பணம் பண்ணுவது ஒன்றே முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் குறி என்பதைப் பட்டவர்த்தனமாக்குகிறது. உற்பத்தி நிகழ்முறையானது இங்கே பணம் பண்ணும் பொருட்டு கடக்க வேண்டிய தவிர்க்க முடியாத ஓர் இடைக் கட்டமாகத் தோற்றமளிக்கிறது.

2. P இன் செயலாகிய உற்பத்தி நடைபெறுகிற கட்டம் இந்தச் சுற்றில் இடை நிறுத்தமாகிறது. உற்பத்தி நிகழ் முறையானது சுற்றி வருகிற நிகழ் முறையின் வடிவுடையதாகி, முன்னீடு செய்யப்பட்ட மதிப்பை வளர்த்துப் பெருகச் செய்வதற்கான ஒரு உபாயமாய் அமைந்துள்ளது.

3. கட்டங்களின் வரிசைத் தொடர் M - C  என்பதிலிருந்து ஆரம்பமாவதால், சுற்றோட்டத்தின் இரண்டாவது கண்ணி C' - M' ஆகிறது. பண-மூலதனம் பணத்தைப் பெற்றெடுக்கும் பணமாகத் திகழ்கிறது. மதிப்பை உபரி-மதிப்பு உண்டாக்கச் செய்வதே இந்த நிகழ்முறையின் ஆதியும் அந்தமும் ஆகும்.

4.  M - L ஆனது தொழிலாளியின் தரப்பிலிருந்து நோக்குகையில் L - M  அல்லது C - M ஆகிறது. ஆகவே சுற்றோட்டத்தின் முதல் கட்டம்தான் தொழிலாளியின் சொந்த நுகர்வுக்கு வகை செய்கிறது. இது நடைபெறும் விதம் பின் வருமாறு:  L - M - C (வாழ்வுச் சாதனங்கள்). இதில் இரண்டாவது கட்டமான M - C  இனி தனிப்பட்ட மூலதனத்தின் சுற்றில் சேருவதில்லை.  என்றாலும் இச்சுற்றுதான் அதற்கான தொடக்கமும் முதனிலையும் ஆகிறது. ஏனெனில் முதலாளியின் சுரண்டலுக்குரிய இலக்காக தொழிலாளி எப்போதும் சந்தையில் இருக்க வேண்டுமானால், முதற்கண் அவர் உயிர் வாழ்ந்தாக வேண்டும்; இதன் பொருட்டு சொந்த நுகர்வின் மூலம தம்மைப் பராமரித்துக் கொண்டாக வேண்டும். இந்த நுகர்வும் கூட, மூலதனமானது உற்பத்தித் திறனுள்ள முறையில் உழைப்புச் சக்தியை நுகர்வதற்கு அவசிய நிபந்தனை ஆகும் என்பதால்தான், தொழிலாளி தமது சொந்த நுகர்வினைக் கொண்டு உழைப்புச் சக்தியாகத் தம்மை பராமரித்துக் கொண்டும் மறுவுற்பத்தி செய்து கொண்டும் வருகிற அளவுக்கு மட்டும்தான் இங்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. முதலாளியும் இருக்க வேண்டியவர்தான். முதலாளிக்குரிய வேலைகளைச் செய்யும் பொருட்டு அவரும் உயிர் வாழ்ந்தாக வேண்டும். இதற்காக நுகர்ந்தாக வேண்டும். தொழிலாளி நுகர்கிற அளவுக்கு நுகர்ந்தாலே போதும் இக்காரியங்களை எல்லாம் செய்து விடலாம்.

C' - M' என்பது C' விற்கப்படுதலை நேரடியாகக் குறிக்கிறது. இந்த C' அதன் உற்பத்தியாளர் அல்லாத ஏனையோரால் நுகரப்படுவதற்கென்று திட்டமிட்டு உற்பத்தி செய்யப்படும் சரக்காகும்.

சுற்றுகளாய் நிகழும் மூலதன இயக்கமானது இவ்வாறு சுற்றோட்டம், உற்பத்தி ஆகிய இரண்டின் ஒருங்கிணைவு ஆகிறது. இரண்டும் சேர்ந்ததாகிறது.

பண-மூலதனச் சுற்றுதான் தொழில் துறை மூலதனச் சுற்றுக்கான வடிவங்களில் பெரிதும் ஒருதலைச்சார்பானது. ஆகவே மிகவும் எடுப்பாகத் தெரிவது. இனமாதிரியாகத் திகழ்வது. தொழில் துறை மூலதனத்தை உந்தித் தள்ளும் ஒரே குறியினை .... அதாவது மதிப்பின் தற்பெருக்கத்தை, பணம் பண்ணுதலை, திரட்டலை .... பண மூலதனச் சுற்று கண்கூடாக்கி விடுகிறது (பணம் கொடுத்து  வாங்குவது எல்லாம் அதிகப் பணத்துக்கு விற்பதற்கே என்பதை அப்பட்டமாய்த் தெரிவிக்கிறது.). அதோடு, திறனுடை-மூலதனத்தின் அடக்கக் கூறுகள் யாவும் சரக்குச் சந்தையிலிருந்து வருகிறவை என்பதும், பொதுவாக முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிகழ் முறையானது சுற்றோட்டத்தை, வாணிபத்தைச் சார்ந்தது என்பதும் பண-மூலதனச் சுற்றின் முதல் கட்டம் M - C ஆக இருப்பதிலிருந்தே தெளிவாகிவிடுகிறது.

M ... M' என்பது குறிப்பிட்ட மூலதனத்தின் முதல் சுற்றாகவும் இருக்கலாம்; கடைசிச் சுற்றாகவும் இருக்கலாம்; சமுதாயத்தினது மொத்த மூலதனத்தின் சுற்றாகவும் கூடக் கருதப்படலாம்.

M' = M + m என்பதை விளைவாகக் கொண்ட M - C ... P ... C' - M'  என்னும் சூத்திரம் வடிவத்தில் ஏமாற்றாகவும் தன்மையில் மாயையாகவும் இருக்கிறது. முன்னீடு செய்யப்பட்டு தற்பெருக்கமடைந்த மதிப்பு அதன் சமதை வடிவமாகிய பணமாக இருப்பதுதான் இதற்குக் காரணம்.

M - C ... P ... C' - M' என்னும் வடிவமானது தொடர்ந்து இயங்குவதாகவும் திரும்பத் திரும்ப நிகழ்வதாகவும் கொள்ளப்படாமல் ஒரு முறை மட்டும் நிகழ்வதாகக் கொள்ளப்படுகையில், அதாவது இந்த வடிவம் இச்சுற்றின் வடிவங்களில் ஒன்றாகக் கருதப்படாமல் அதன் பிரத்தியேக வடிவமாகக் கருதப்படுகையில், அதன் மாயையான தன்மையும், அதற்கொப்ப மாயையான விளக்கமும் முன்னுக்கு வருகின்றன.

முதலாளித்துவப் பொருளுற்பத்தியால் நிர்ணயிக்கப்படும் சமூக நிலைமைகள் நிலவும் போது, பண-மூலதனத்தின் சுற்றுதான் தொழில்துறை மூலதனத்தின் பொதுவான சுற்றாகும்.