Tuesday, July 30, 2013

பகுதி 1: அத்தியாயம் 3: பணம் அல்லது சரக்குகளின் சுற்றோட்டம். பிரிவு 2: சுற்றோட்ட ஊடகம்

சரக்குகளின் பரிவர்த்தனையானது முரண்பாடான, ஒன்றையொன்று விலக்குகிற நிலைமைகளைச் சுட்டுவதாகும். சரக்குகள் சரக்குகளாகவும் பணமாகவும் பிரிவது இந்த முரண்பாடுகளை ஒழித்துவிடுவதில்லை. அவை ஒருங்கே சேர்ந்திருக்க முடிகிற ஒரு வழிமுறையை அது வளர்த்திடுகிறது. பொதுவாக , இதுவே மெய்யான முரண்பாடுகளை இணக்கப்படுத்தும் ஒரு வழி.

சரக்குகள் யாருக்கு அவை பயன்..மதிப்புகள் அல்லவோ அவர்களிடமிருந்து யாருக்குப் பயன்..மதிப்புகளாகின்றனவோ அவர்களுக்கு மாற்றப்படுகின்ற நிகழ்முறையே பரிவர்த்தனை என்பதால் அது ஒரு சமுதாயப் பொருள்வகைச் சுற்றோட்டம்.

சரக்கானது பயன்..மதிப்பாகப் பயன்படக் கூடிய ஓய்விடத்தைக் கண்டுகொண்டதுமே பரிவர்த்தனைத் துறையிலிருந்து நுகர்வுத் துறைக்குள் விழுகிறது.

சரக்குகள் சரக்குகளாகவே பரிவர்த்தனை நிகழ் முறையில் நுழைகின்றன. இந்நிகழ்முறை பிற்பாடு அவற்றைச் சரக்குகளாகவும், பணமாகவும் வேறுபடுத்துகிறது; இவ்வாறு, அவற்றில் உள்ளார்ந்துள்ள அக எதிர்நிலைக்கு .. ஒரே நேரத்தில் பயன்..மதிப்புகளாகவும், மதிப்புகளாகவும் இருத்தல் என்ற அக எதிர் நிலைக்கு ... இணையான புற எதிர் நிலையை அது தோற்றுவிக்கிறது.

சரக்குகளின் இந்தப் பகைமை வடிவங்கள் (antagonistic forms) அவற்றின் பரிவர்த்தனை நிகழ்முறை நடந்தேறுகிற மெய்யான வடிவங்களாகும்.

சரக்குகளின் பரிவர்த்தனையுடன் கூடவே அவற்றின் வடிவத்தில் பின்வரும் மாற்றங்களும் ஏற்படுகின்றன: சரக்கு ... பணம் ... சரக்கு.

சரக்குகளின் உடைமையாளருக்கு தேவைகள் எந்த அளவுக்கு பலதரப்பட்டவையோ அந்த அளவுக்கு அவரது உழைப்பு ஒரு தரப்பட்டதாக இருப்பதற்கு சமுதாய உழைப்புப் பிரிவினை காரணமாகிறது. அவரது உழைப்பின் உற்பத்திப் பொருள் பரிவர்த்தனை..மதிப்பாக மட்டுமே அவருக்கு பயன்படுவதன் காரணம் இதுவேதான்.

மதிப்பைக் கணக்கிடுவதில் தற்செயலாக இழைக்கக் கூடிய தவறு சீக்கிரமே சந்தையில் திருத்தப்பட்டு விடுகிறது. சராசரியாக சமூக வழியில் அவசியமான அளவு உழைப்பு நேரத்தையே தனது உற்பத்திப் பொருளில் அவர் செலவிட்டிருப்பதாக வைத்துக் கொள்கிறோம். விலை என்பது அவரது சரக்கில் எவ்வளவு ஈடேற்றம் பெற்றுள்ளதோ அவ்வளவு சமூக உழைப்பின் பணப்பெயர்தான். ஆனால் ஒரு உற்பத்தியாளரின் அனுமதியின்றியும், அவரது முதுகுக்குப் பின்னாலும், பழைய வழியிலான உற்பத்திமுறை மாற்றத்துக்குட்படுகிறது. அப்பொருளின் உற்பத்திக்குச் சமூக வழியில் நிச்சயமாய் அவசியாமாயிருந்த உழைப்பு நேரம் இன்று அவ்வாறில்லாது போகிறது.

உழைப்புப் பிரிவினை உழைப்பின் உற்பத்திப் பொருளை சரக்காக மாற்றுகிறது. அதே நேரத்தில் அது இந்த மாற்றமைவின் நிறைவேற்றத்தை முற்றிலும் தற்செயலான ஒன்றாக்குகிறது.

தங்கம் பணத்தின் பாத்திரத்தை வகிக்க வேண்டுமானால், ஏதேனுமொரு கட்டத்தில் சந்தையில் அடியெடுத்து வைத்தாக வேண்டும். உழைப்பின் நேரடி உற்பத்திப் பொருள் என்ற முறையில் தங்கம் சம மதிப்புள்ள வேறொரு உற்பத்திப் பொருளுக்காகப் பண்டமாற்று செய்யப்படும் இடமான அவ்வுலோகம் உற்பத்தியாகும் இடத்தில் இது நிகழக் காணலாம். அக்கணமுதற்கொண்டு அது எப்போதுமே ஏதேனுமொரு சரக்கின் ஈடேற்றம் பெற்ற விலையைக் குறிக்கிறது.

ஒரு பொற்காசினைப் பார்ப்பதைக் கொண்டே, அது எந்த குறிப்பிட்ட சரக்குக்காகப் பரிவர்த்தனை செய்து கொள்ளப் பட்டது என்பதைச் சொல்ல முடியாது. எல்லாச் சரக்குகளும் அவற்றின் பண வடிவத்தில் ஒரே மாதிரியாய் இருக்கின்றன. எனவே குப்பை பணமல்ல என்றாலும், பணம் குப்பையாக இருக்கலாம்.

சரக்குகள் பணத்தின் மீது செலுத்தும் ஏக்கப் பார்வைகளான விலைகள் பணத்தின் அளவைச் சுட்டுவதன் மூலம் அதன் மாறுந்தகுதியின் வரம்புகளை வரையறுக்கின்றன.

ஒரு சரக்கின் முழுமையான உருமாற்றம், அதன் மிகவும் சாமானிய வடிவத்தில் நான்கு முனைகளையும், மூன்று கதா பாத்திரங்களையும் கொண்டுள்ளது, முதலில் சரக்கு பணத்தை எதிர்கொள்கிறது; பணம் என்பது சரக்கின் மதிப்பு மேற்கொள்கிற வடிவமாகும்; இப்போது, சரக்கு பணமாக மாற்றப்பட்டதுமே, பணம் அதன் நிலையற்ற சமதை வடிவம் ஆகிறது. இச்சமதை வடிவத்தின் பயன்..மதிப்பு ஏனைய சரக்குகளின் தசையுருக்களில் காணக் கிடக்கிறது. முதல் செய்கையில் விற்பவராய் இருப்பவர் இரண்டாவது செய்கையில் வாங்குபவராகிறார்; இந்த இரண்டாவது செய்கையில் மூன்றாவது சரக்குடைமையாளர் ஒருவர் விற்பவராக அரங்கத்தில் தோன்றுகிறார். சரக்கு உருமாற்றத்தில் அடங்கியுள்ள ஒன்றுகொன்று எதிர் மாறான இவ்விரு கட்டங்களும் சேர்ந்து ஒரு சுழல் இயக்கமாக, ஒரு சுற்றாக அமைகின்றன.

ஒரு சரக்கு தன் உரு மாற்றங்களின் போக்கில் கடக்கிற சுற்று ஏனைய சரக்குகளின் சுற்றுகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது. வெவ்வேறு சுற்றுகள் அனைத்தும்ம் சேர்ந்த மொத்தமே சரக்குகளின் சுற்றோட்டம் ஆகும்.

சரக்குகளின் சுற்றோட்டம் உற்பத்திப் பொருட்களின் நேரடிப் பரிவர்த்தனையிலிருந்து (பண்டமாற்றிலிருந்து) வடிவத்தில் மட்டுமல்லாமல் சாரத்திலும் வேறுபடுகிறது. நேரடிப் பண்டமாற்றால் சுமத்தப்படும் தடைகளான காலம், இடம் மற்றும் தனியாட்கள் தொடர்பான தடைகளை எல்லாம் சுற்றோட்டம் தகர்த்துச் செல்கிறது.

ஒரு சரக்கின் முழுமையான உருமாற்றத்தில் ஒன்றையொன்று பூர்த்தி செய்யும் இரு கட்டங்களுக்கிடையிலான கால இடைவெளி அதிகப்படியாக நீண்டு விட்டால், விற்றலுக்கும் வாங்கலுக்கும் இடையிலான பிளவு அளவுமீறிக் கடுமையாகி விட்டால், அவற்றிடையிலான மிக நெருங்கிய தொடர்பு, அவற்றின் ஓர்மை ஒரு நெருக்கடியைத் தோற்றுவிப்பதன் மூலம் தன்னை நிலை நாட்டிக் கொள்கிறது.

பணத்தின் ஓட்டம் என்பது, ஒரே நிகழ்முறை இடைவிடாமலும் மாறுதலின்றியும் திரும்பத் திரும்ப நிகழ்வதாகும். எப்போதுமே சரக்கு விற்பவரின் கையிலிருக்கிறது; எப்போதுமே பணம் வாங்கற் சாதனமாய் வாங்குபவரின் கையிலிருந்து பணத்தை எடுத்து விற்பவரின் கையில் சேர்க்கிறது. அங்கே இன்னொரு சரக்குடன் மீண்டும் அதே நிகழ்முறைக்கு உட்படுகிறது. பணத்தின் இயக்கத்திற்குள்ள‌ இந்த ஒரு சார்பான தன்மை சரக்கின் இயக்கத்திற்குள்ள இரு சார்பான தன்மையிலிருந்து எழுகிறது.

ஒரு சரக்கை விலக்கி விட்டு அதனிடத்து இன்னொரு சரக்கு வருவது சரக்குகளின் வடிவ மாற்றத்தைக் கொண்டு சாதிக்கப்படாமல், சுற்றோட்ட ஊடகமாக செயல்படுகிற பணத்தாலேயே சாதிக்கபடுவது போன்ற தோற்றம் பெறுகிறது. பணத்தின் இந்த செயல் எப்படிப் பார்த்தாலும் தம்மளவில் அசைவற்றவையாகவே தோன்றுகிற சரக்குகளைச் சுற்றியோடச் செய்வது போலவும், பயன்..மதிப்புகளாய் இல்லாத கரங்களிலிருந்து பயன்..மதிப்புகளாயுள்ள கரங்களுக்கு அவற்றை மாற்றுவது போலவும், எப்போதுமே பணத்தின் திசைக்கு எதிர்த் திசையில் இதைச் செய்வது போலவும் தோன்றுகிறது.

சர்க்குகளின் மதிப்புக்குப் பணத்தின் உருவில் சுயேச்சையான மெய்ம்மை இருக்கிறது என்பதாலேயே அது சுற்றோட்ட ஊடகமாக செயல்படுகிறது. எனவே, உண்மையில் சுற்றோட்ட ஊடகமென்ற முறையிலான அதன் இயக்கம் சரக்குகள் தமது வடிவங்களை மாற்றிக் கொள்கிற இயக்கமே ஆகும்.

சரக்குகளுடைய விலைகளின் மொத்தத் தொகையால் முன் கூட்டியே கருத்தளவில் தெரிவிக்கப்படும் தங்கத்தின் அளவு அல்லது தொகையையே பணம் மெய்யுருவில் குறிக்கிறது. ஆகவே இவ்விரு தொகைகளின் சமத்துவம் கூறாமலே விளங்கும். ஆயினும், சரக்குகளின் மதிப்புகள் மாறாதிருக்க, அவற்றின் விலைகள் தங்கத்தின் (பணப் பொருளின்) மதிப்புக்கேற்ப மாறுபடுகின்றன. அது குறைகிற விகிதத்தில் உயர்ந்தும், அது உயர்கிற விகிதத்தில் குறைந்தும் விடுகின்றன.

ஒரு சரக்கு இன்னொரு சரக்கை அவற்றின் பொதுவான மதிப்புறவின் மூலம் பாதிக்கிறது; தங்கம் அல்லது வெள்ளியில் தெரிவிக்கப்படும் அச்சரக்குகளின் விலைகள் அவற்றின் ஒப்பீட்டு மதிப்புகளால் நிர்ணயிக்கப்படும் விகிதாசாரங்களாக இவ்விதம் படிப்படியாய் நிலைபெறுகின்றன. இறுதியில் எல்லாச் சரக்குகளின் மதிப்புகளும் பணமாகிய உலோகத்தினது புதிய மதிப்பின் வாயிலாகக் கணிக்கப்படும் வரை இவ்வாறே நடை பெறுகிறது.

சரக்குகளின் திரள் மாறாதிருந்தால், சுற்றோட்டத்தில் ஓடுகிற பணத்தின் அளவு அந்த சரக்குகளின் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுகேற்ப மாறுபடுகிறது. விலை மாற்றத்தின் விளைவாக விலைகளின் மொத்தத் தொகை அதிகரிக்கிறது அல்லது குறைகிறது என்பதால் இச்சரக்குத் திரள் அதிகரிக்கிறது அல்லது குறைகிறது. இந்த விளைவைத் தோற்றுவிப்பதற்கு, எல்லாச் சரக்குகளின் விலைகளும் ஏக காலத்தில் உயர வேண்டும் அல்லது குறைய வேண்டும் என்பது எவ்விதத்திலும் அவசியமில்லை. எல்லாச் சரக்குகளதும் விலைகளின் மொத்தத் தொகையை அதிகரிக்கச் செய்வதற்கோ, குறைப்பதற்கோ, ஆகவே அதிகமாகவோ குறைவாகவோ பணத்தைச் சுற்றோட்டத்தில் விடுவதற்கு முதன்மையான சரக்குகள் பலவற்றின் விலைகளிலான உயர்வோ வீழ்ச்சியோ போதுமானது. விலை மாற்றம் உள்ளபடியே சரக்குகளின் மதிப்பு மாற்றத்தால் ஏற்பட்டதானாலும், அல்லது அது சந்தை விலைகளிலான ஏற்ற இறக்கங்களால் ஏற்பட்டதே ஆனாலும், சுற்றோட்ட ஊடகத்தினது அளவின் மீது அது ஒரே விதமான விளைவையே உண்டாக்குகிறது.

சுற்றோட்ட ஊடகத்தின் அளவே விலைகளை நிர்ணயிக்கிறது என்பதும், சுற்றோட்ட ஊடகத்தின் அளவு நாட்டிலுள்ள உயர்நிலை உலோகங்களின் அளவினைப் பொறுத்தது என்பதும் தவறான கருத்தாகும்.

தங்கமும் வெள்ளியும் நாணயங்கள் என்ற வீதத்தில் உள் நாட்டில் அணிந்து உலக சந்தையில் களைகிற வெவ்வேறு தேசச் சீருடைகள் சரக்குச் சுற்றோட்டத்தின் உள்நாட்டு அல்லது தேச மண்டலங்களுக்கும், அவற்றின் உலக மண்டலத்துக்கும் இடையிலான பிரிவைக் குறிக்கின்றன. எனவே நாணயத்துக்கும், பொற்பாளத்துக்கும் இடையிலான ஒரே வேறுபாடு உருவ வேறுபாடே; தங்கம் எந்த நேரத்திலும் ஒரு உருவத்திலிருந்து இன்னொரு உருவத்துக்கு மாற முடியும்.

அதிகபட்ச அளவு தேய்மானத்துக்குட்படுகிற சுற்றோட்டத் துறைகளில் வெள்ளி, செம்பு அடையாளங்கள் தங்கத்திற்குப் பதிலியாகின்றன. மிகச் சிறு அளவில் விற்றல்களும் வாங்கல்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இடங்களில் இது நிகழ்கிறது. தங்கம் ஒரு புறம் சில்லறை சுற்றோட்டத்துக்குள் இடைவிடாது பாய்ந்து கொண்டும், மறு புறம் அடையாளங்களாக மாற்றப்படுவதால் இடைவிடாது வெளியேற்றப்பட்டுக் கொண்டும் இருக்கிறது.

காகிதப் பணத்தின் வெளியீடானது, அடையாளங்கள் புழங்க விடப்படாவிட்டால் உள்ளபடியே சுற்றோட்டத்தில் இருக்கக் கூடியதான தங்கத்தை தொகையில் விஞ்சக் கூடாது. இப்போது சுற்றோட்டம் உட்கிரகிக்க முடிகிற தங்கத்தின் அளவு ஒரு குறிப்பிட்ட மட்டத்துக்கு மேலாகவும் கீழாகவும் இடையறாது அலைவுறுகிறது.

Sunday, July 28, 2013

பகுதி 1: அத்தியாயம் 3: பணம் அல்லது சரக்குகளின் சுற்றோட்டம். பிரிவு 1: மதிப்புகளின் அளவை

பணத்தின் முதல் முக்கிய பணி மதிப்புகளைப் பண்பு வழியில் சமமான, அளவு வழியில் ஒப்பிடத்தக்க, ஒரே அலகு வகைப்பட்ட பருமன்களாக காட்டுவதாகும். இவ்வாறு அது மதிப்பின் சர்வப் பொது அளவையாக பயன்படுகிறது. இந்தப் பணியின் பயனாகத்தான் தலை சிறந்த சமதைச் சரக்கான தங்கம் பணமாகிறது.

சரக்குகளை பொதுவளவுடையவனாய் ஆக்குவது பணமன்று. நேர்மாறானதே உண்மை.

ஒரு சரக்கின் மதிப்பைத் தங்கத்தின் வாயிலாகத் தெரிவிப்பது அதன் பண வடிவம் அல்லது விலை ஆகும். மற்றெல்லாச் சரக்குகளின் மதிப்புகளையும் தெரிவிக்கும் சமன்பாடுகளின் சங்கிலியில் ஒரு கரணையாக இந்த சமன்பாடு இனியும் இடம் பெறத் தேவையில்லை.

தங்கம், வெள்ளி போன்ற இரு சரக்குகள் ஏக காலத்தில் மதிப்பின் அளவைகளாக இருந்தால் எல்லாச் சரக்குகளும் இரு விலைகளை பெறுகின்றன. தங்கதின் மதிப்புடனான வெள்ளியின் மதிப்பு விகிதத்தில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் சரக்குகளின் தங்க, வெள்ளி  விலைகளின் விகித்தத்தை பாதிக்கிறது. இவ்வாறு மதிப்பின் இரட்டை நியமம் பொருந்தாமல் போகிறது.

மதிப்பின் அளவை என்ற விதத்திலும், விலையின் நியமம் என்ற விதத்திலும் பணம் இரு வேறு பணிகளை ஆற்ற வேண்டியிருக்கின்றது.

தங்கத்தை விலையின் நியமமாக்கும் பொருட்டு, குறிப்பிட்ட ஒர் எடையானது அலகாக நிர்ணயிக்கப்பட வேண்டும். 

தங்கத்தின் மதிப்பிலான மாற்றம் விலையின் நியமம் என்ற அதன் பணியை எவ்வித்ததிலும் பாதிப்பதில்லை. தங்கத்தின் மதிப்பில் ஏற்படும் மாற்றம் மதிப்பின் அளவை என்ற முறையிலான அதன் பணிகளில் குறுக்கிடுவதில்லை. இம்மாற்றம் எல்லாச் சரக்குகளையும் ஏக காலத்தில் பாதிக்கிறது.

எச்சரக்குகளின் மதிப்பு பணத்தின் மதிப்புடன் ஏக காலத்திலும் ஏற்ற விகிதாசாரத்திலும் உயர்கிறதோ, அச்சரக்குகளைப் பொறுத்து விலைமாற்றமேதும் ஏற்படுவதில்லை. அவற்றின் மதிப்பு பணத்தின் மதிப்பை விட மெதுவாகவோ வேகமாகவோ உயர்ந்தால், அவற்றின் விலைகளிலான வீழ்ச்சி அல்லது உயர்வானது அவற்றின் மதிப்பிலான மாற்றத்துக்கும் பணத்தின் மதிப்பிலான மாற்றத்துக்கும் இடையிலான வேறுபாட்டால் நிர்ணயிக்கப்படும்.

செல்வம் அதிகரிக்க அதிகரிக்க, உயர் நிலை உலோகங்களில் உயர்ந்த உலோகம் தாழ்ந்த உலோகத்தை மதிப்பளவை என்ற நிலையிலிருந்து வெளியேற்றுகிறது, வெள்ளி செம்பையும், தங்கம் வெள்ளியையும் வெளியேற்றுகிறது.

பல நூற்றாண்டுகளாக அரசர்களும், கோமகன்களும் கலப்படம் செய்து நாணயங்களைத் தொடர்ச்சியாகக் கொடுத்து வந்தனர். நாணயங்களின் பூர்விக எடைகளின் பெயர்கள் மட்டுமே மிஞ்சுமளவுக்கு இந்தக் கலப்படம் நடந்தேறியது.

எடைப் பெயரிலிருந்து பணப் பெயர் விலகிப் பிரிவது மேற்கூறிய வரலாற்றுக் காரணங்களால் சமுதாயத்தில் நிலைபெற்ற பழக்கமாகிவிடுகிறது. பணத்தின் நியமம் ஒரு புறம் முற்றிலும் மரபொழுங்கு வழிப்பட்டதாகும் என்பதாலும், அது முடிவில் சட்டத்தால் ஒழுங்கு செய்யப்படுகிறது. பவுன், டாலர் போன்ற பெயர்கள் சட்டபூர்வமாகச் சூட்டப்படுகின்றன. ஆனால் உலோகத்தின் ஒரு திட்டமான எடையே உலோகப் பணத்தின் நியமமாக இருக்கக்காண்கிறோம். செய்யப்பட்டதெல்லாம் உட் பிரிவுகளாகப் பகுத்ததும் ஷில்லிங், பென்னி என்று பெயர் சூட்டியதும்தான்.

சரக்குகளின் மதிப்புகளையும், அதே நேரத்தில் பணத்தின் நியமமாகவுள்ள உலோக எடையின் ஈவுப் பகுதிகளையும -- ஆக இரண்டையுமே இந்தப் பணப் பெயர்கள் தெரிவிக்கின்றன என்பதால், இந்த மாயமான சின்னங்களுக்கு இரகசிய அர்த்தம் கற்பிப்பதின் மூலம் ஏற்படும் குழப்பம் மேலும் அதிகரிக்கிறது.

சரக்கில் ஈடேற்றம் பெற்றுள்ள உழைப்பின் பணப் பெயரே விலை.

மதிப்பின் பருமன் ஒரு சமூக உற்பத்தியுறவை தெரிவிக்கிறது; குறிப்பிட்ட ஒரு பண்டத்துக்கும் சமுதாயத்தின் மொத்த உழைப்பு நேரத்தில் அதை உற்பத்தி செய்யத் தேவைப்படும் பகுதிக்கும் இடையில் அவசியமாகவே நிலவுகிற தொடர்பை அது தெரிவிக்கிறது.

பணம் என்பது சரக்குகளின் மதிப்பு வடிவமேயன்றி வேறல்ல என்ற போதிலும், விலையானது மதிப்பையே தெரிவிக்காமல் போய் விடுமளவுக்கு ஒரு பண்பு வழிப்பட்ட முரணிலைக்கும் அந்த விலை வடிவம் இடமளிக்கக் கூடும்.

கற்பனையான விலை வடிவம் சில நேரங்களில் ஒரு நேரடியான அல்லது சுற்றடியான உண்மை மதிப்புறவை மறைத்து விடக் கூடும்; எடுத்துக்காட்டாக மனித உழைப்பேதும் உள்ளடங்கியிராத காரணத்தால் தரிசு நிலம் மதிப்பற்றதென்றாலும், அதற்கும் ஒரு விலையுண்டு.

Saturday, July 27, 2013

பகுதி 1:அத்தியாயம் 2: பரிவர்த்தனை

சரக்குகள் தாமாகச் சந்தைக்குச் செல்லவும் பரிவர்த்தனைகளைச் செய்து கொள்ளவும் முடியாது என்பது வெளிப்படை. இந்த பொருட்கள் ஒன்றோடு ஒன்று சரக்குகளாக உறவு கொள்ள வேண்டுமானால், அவற்றின் காப்பாளர்கள் அந்த பொருட்களைத் தமது சித்தத்தின் உறைவிடங்களாய்க் கொண்ட ஆட்களாக ஒருவரோடு ஒருவர் உறவு கொள்ள வேண்டும்; ஒருவர் மற்றவரின் சரக்கைத் தனதாக்கிக் கொள்வதும் தன் சொந்தச் சரக்கை கைவிடுவதும் பரஸ்பர சம்மதத்துடன் செய்யப்படுகிற செயலின் வாயிலாக மட்டுமே நடைபெற வேண்டும். தனியுடைமையாளர்களுக்குரிய உரிமகள் இருவருக்கும் இருப்பதை அவர்கள் பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும். ஆட்கள் சரக்குகளின் பிரதிநிதிகளாகவே, ஆதலால் சரக்குடைமையாளர்களாகவே ஒருவருக்கொருவர் உள்ளனர். 

சரக்குகள் பயன்..மதிப்புகளாக ஈடேற்றம் பெறுமுன் மதிப்புகளாக ஈடேற்றம் பெற வேண்டும். மறு புறம், அவை தம்மைப் பயன்..மதிப்புகளாகக் காட்டிக் கொண்ட பிறகே, மதிப்புகளாக ஈடேற்றம் பெற முடியும்.

ஒரே காரியத் தொகுதி பிரத்தியேகமாகத் தனியாளுக்குரியதாகவும், பிரத்தியேகமாகச் சமுதாய அளவினதாகவும் பொதுவான‌தாகவும் .. ஆக இருவிதமானதாய் ... ஏக காலத்தில் எல்லாச் சரக்குடைமையாளர்களுக்கும் இருக்க முடியாது.

ஒரு சரக்கின் உடைமையாளருக்கு, ஏனைய ஒவ்வொரு சரக்கும், தன் சொந்த சரக்கு தொடர்பாக ஒரு குறிப்பான சமதையாகும். ஆதலால் அவரது சொந்தச் சரக்கு மற்ற அனைவருக்கும் சர்வப் பொதுச் சமதையாகும்.  ஆனால், ஒவ்வொரு சரக்குடைமையாளருக்கும் இது பொருந்தும் என்பதால், உண்மையில் சர்வப் பொதுச் சமதையாக செயல்படுகிற சரக்கு எதுவும் கிடையாது. எந்த சரக்கும் சமுதாயச் செயலின் மூலமாக அன்றி சர்வப் பொது சமதையாக முடியாது.

உழைப்பின் வெவ்வேறு உற்பத்திப் பொருட்கள் நடைமுறையில் ஒன்றோடு ஒன்று சமன் செய்யப்படுவதற்கும், இவ்வாறு சரக்குகளாக நடைமுறையால் மாற்றப்படுவதற்கும் வழி செய்கிற ப‌ரிவர்த்தனைகளின் போது அவசியம் காரணமாய் உருவாகிற படிகமே பணம்.

பரிவர்த்தனைகளின் வரலாற்று முன்னேற்றமும், விரிவாக்கமும் பயன்..மதிப்புக்கும் மதிப்புகுமிடையே சரக்குகளில் மறைந்துள்ள முரணிலையை வளர்க்கின்றன. வாணிபக் காரியங்களுக்காக இம்முரணிலைக்குப் புற தெரிவிப்பை அளிப்பதன் அவசியம் சுயேச்சையான மதிப்பு வடிவம் நிறுவப்படுவதை ஊக்குவிக்கிறது; சரக்குகளாகவும் பணமாகவும் சரக்குகளை வேறுபடுத்துவதன் மூலம் முடிவாகத் திருப்தி காணும் வரை அது ஓய்வதில்லை. அப்படியானால், உற்பத்திப் பொருட்கள் சரக்குகளாக அடைகிற மாற்றம் நிறைவேற்றப்படுகிற அதே வீதத்தில், ஒரு தனிவகைச் சரக்கு பணமாக அடைகிற மாற்றமும் நிறைவேற்றப்படுகிறது.

உற்பத்திப் பொருட்களிம் நேரடிப் பண்டமாற்றில், ஒவ்வொரு சரக்கும் அதன் உடைமையாளருக்கு நேரடியாக ஒரு பரிவர்த்தனைச் சாதனமாகவும் மற்ற அனைவருக்கும் ஒரு சமதையாகவும் உள்ளது; ஆனால் இது, அவர்களுக்கு அது பயன்..மதிப்பைப் பெற்றிருக்கிறது என்ற அளவுக்கே.

பண வடிவத்தை முதலில் வளர்தெடுத்தவை மேய்ச்சல் தொழில் செய்யும் நாடோடி இனங்களே; ஏனெனில் அவர்களது லெளகிக உடைமைகள் அனைத்தும் சங்கமப் பொருட்களாய், என்வே நேரடியாக உடைமை மாற்றம் செய்யத் தக்கவையாய் உள்ளன;

பரிவர்த்தனையானது வட்டார பந்தங்களை உடைத்துக் கிளம்புவதும், சரக்குகளின் மதிப்பு ஸ்தூலமற்ற மனித உழைப்பின் உருவாக மேலும் மேலும் விரிவடைவதும் எவ்விகிதாசாரத்திலோ, அதே விகிதாச்சாரத்தில் ஒரு சர்வப் பொதுச் சமதையின் சமூகப் பணியை ஆற்றிடத் தக்கவையாய் இயற்கை தந்துள்ள சரக்குகளோடு பணம் என்னும் தன்மை ஒட்டிக் கொள்கிறது. உயர் நிலை உலோகங்களே அச்சரக்குகளாகும்.

"தங்கமும் வெள்ளியும் இயற்கையாகவே பணமல்லவென்றாலும், பணம் இயற்கையாகவே தங்கமும் வெள்ளியுமாகும்" என்ற கூற்றின் உண்மை, பணத்தின் பணிகளுக்கு இசைவான இவ்வுலோகங்களின் பெளதிகக் குணங்களால் மெய்பிக்கப்படுகிறது.

பணச் சரக்கின் பயன்..மதிப்பு இரட்டைத் தன்மையதாகிறது. சரக்கு என்ற விகிதத்தில் அதன் தனி வகை பயன்..மதிப்போடு கூடுதலாக அதன் குறிப்பான சமூகப் பணியிலிருந்து தோற்றமெடுக்கிற வடிவ முறையிலான பயன்..மதிப்பு ஒன்றையும் அது பெற்றிருக்கிறது.

எல்லாச் சரக்குகளுமே அவற்றின் சர்வப் பொதுச் சமதையாகிய பணத்தின் குறிப்பான சமதைகள் மட்டுமே என்பதால், அவை சர்வப் பொது சரக்காக இருக்கும் பணம் தொடர்பாகக் குறிப்பான சரக்குகளின் பாத்திரம் வகிக்கின்றன.

பணம் ஒரு சரக்கே என்பது அதைப் பகுப்பாயும் போது அதன் முழு வளர்ச்சியடந்த உருவத்திலிருந்து தொடங்குபவர்களுக்கு மட்டுமே புதிய கண்டுபிடிப்பாயிருக்கும்.

மற்ற ஒவ்வொரு சரக்கையும் போலவே பணமும் தனது மதிப்பின் பருமனை மற்ற சரக்குகளின் வாயிலாக ஒப்பீட்டு முறையில் அன்றி வேறு விதத்தில் வெளியிட முடியாது. இந்த மதிப்பு அதன் உற்பத்திக்கு அவசியமான உழைப்பு நேரத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. அதே அளவு உழைப்பு நேரம் செலவாகிற வேறு எந்த சரக்கின் அளவாலும் அது தெரிவிக்கப்படுகிறது.

பணம் ஒரு சரக்கே என்பதைப் புரிந்து கொள்வதில் சிரமமில்லை. ஒரு சரக்கு பணமாவது எப்படி, ஏன், எவ்வழியில் என்பதைக் கண்டுபிடிப்பதில்தான் சிரமம் உள்ளது.

மற்றெல்லா சரக்குகளும் தமது மதிப்பைத் தங்கத்தில் வெளியிடுவதால் அது பணம் ஆகிவிடுகிறது என்பதல்ல; மாறாக, தங்கம் பணமாகும் என்பதால் மற்றெல்லாச் சரக்குகளும் தமது மதிப்புகளைச் சர்வப் பொதுவாகத் தங்கத்தில் வெளியிடுகின்றன என்பதே. இந்நிகழ்முறையின் இடைநிலைப் படிகள் தடயமேதும் விடாமல் முடிவில் மறைந்து போகின்றன. சரக்குகள், தம் தரப்பில் எம்முயற்சியுமின்றியே, தமது மதிப்பு தம் கூட்டத்திலுள்ள இன்னொரு சரக்கின் உருவில் முழுமையாகக் குறிக்கப்பட்டிருப்பதைக் காண்கின்றன. தங்கம், வெள்ளி என்ற இந்த பொருட்கள் பூமியின் அடிவயிற்றிலிருந்து வெளிவரும் நிலையிலேயே, மனித உழைப்பு அனைத்தின் நேரடி அவதாரமாக உள்ளன. பணத்தின் மாயா ஜாலத்திற்கு இதுவே காரணம். பணம் போடுகிற புதிர் சரக்குகள் பொடுகின்ற புதிரேயன்றி வேறில்லை.

Thursday, July 25, 2013

பகுதி 1:அத்தியாயம் 1:சரக்கு. பிரிவு 4: சரக்குகளின் மாய்மாலமும் அதன் இரகசியமும்

எடுத்த எடுப்பில் சரக்கு என்பது சர்வ சாதாரணமானதாகவும், எளிதிற் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் தோன்றுகிறது. உண்மையில் அது சூக்கும நுணுக்கங்களும் வேதாந்த நுட்பங்களும் நிறைந்த மிக விந்தையான பொருளாகும் என்பதை அதன் பகுப்பாய்வு காட்டுகிறது.

மனிதன் தனது தொழிலைக் கொண்டு, இயற்கை தந்த பொருட்களின் வடிவங்களை அவை தனக்குப் பயனுள்ளவையாக இருக்கும் விதத்தில் மாற்றுகிறான். எனவே சரக்குகளின் மாயமான தன்மை அவற்றின் பயன் மதிப்பிலிருந்து பிறப்பதன்று.

அவ்வாறெ மதிப்பை நிர்ணயிக்கும் காரணிகளின் இயல்பிலிருந்து வருவதுமன்று. ஏனெனில், உழைப்பின் பயனுள்ள வகைகள் அல்லது உற்பத்தி நடவடிக்கைகள் எவ்வளவுதான் வேறுபட்டவை என்றாலும், அவை மனித உயிரமைப்பின் காரியங்கள் என்பதும், இவ்வாறான ஒவ்வொரு காரியமும், அதன் இயல்பு அல்லது வடிவம் என்னவானாலும், சாராம்சத்தில் மனித மூளை, நரம்புகள், தசைகள் இன்ன பிறவற்றின் செல்வீடே என்பது ஓர் உடலியல் உண்மையாகும்.

எல்லாச் சமுதாய முறைகளிலும் வாழ்வுச் சாதனங்களை உற்பத்தி செய்வதற்கு செலவாகிற உழைப்பு நேரம், வெவ்வேறு வளர்ச்சிக் கட்டங்களிலும் ஒரே விதமான அக்கறைக்குரியதன்று என்றாலும் மனித வர்க்கத்தின் அக்கறைக்குரிய ஒன்றாய்க் கட்டாயம் இருந்தாக வேண்டும். கடைசியாக மனிதர்கள் எவ்விதத்திலேனும் ஒருவர் மற்றவருக்காக உழைக்கிற அக்கணத்திலிருந்தே அவர்களது உழைப்பு ஒரு சமூக வடிவத்தை மேற்கொள்கிறது.

மனித உழைப்பின் அனைத்து வகைகளுக்கும் இடையிலான சமத்துவம், அவற்றின் உற்பத்திப் பொருட்கள் எல்லாம் மதிப்புகளாக இருப்பதன் வாயிலாக எதார்த்தில் தெரிவிக்கப்படுகிறது. உழைப்புச் சக்தியின் செலவீட்டை அச்செலவீடு நீடிக்கும் காலத்தைக் கொண்டு அளவிடுவது உழைப்பின் உற்பத்திப் பொருட்களது மதிப்பின் அளவு என்ற வடிவத்தை எடுக்கிறது.

ஆக, மனிதர்களுடைய உழைப்பின் சமூகத் தன்மை அந்த உழைப்பின் உற்பத்திப் பொருளுக்கு உரித்தான பொருள்வயத்தன்மையாக அவர்களுக்குத் தோற்றமளிக்கிறது; உற்பத்தியாளர்களுக்கு அவர்களுடையே உழைப்பின் ஒட்டுமொத்தத்துடன் உள்ள உறவானது அவர்களிடையே நிலவுகிற சமூக உறவாக அல்லாமல் அவர்களது உழைப்பின் உற்பத்திப் பொருள்களிடையே நிலவுகிற சமூக உறவாக அவர்களை எதிர்கொள்கிறது .. சரக்கின் மாயமான தன்மைக்கு இதுவேதான் காரணம். புலனகளால் உணரக்கூடியவையும் அதேபோது உணர முடியாதவையுமான சமூகப் பொருட்களாவதற்கு இதுவேதான் காரணம்.

பெளதிகப் பொருட்களிடையே ஒரு பெளதிக உறவு உள்ளது. ஆனால் பொருட்கள் சரக்குகளாக இருப்பதும், அவற்றைச் சரக்குகள் என்று முத்திரை குத்துகிற உழைப்பின் உற்பத்திப் பொருட்களிடையிலான மதிப்புறவும் அவற்றின் பெளதிக இயல்புகளோடும், இந்த இயல்புகளிலிருந்து எழும் பொருளாயத உறவுகளோடும் சற்றும் தொடர்பற்றவை. அங்கே அது மனிதர்களிடையே நிலவும் திட்டமான சமூக உறவு ஆகும்.  அது, அவர்களது பார்வையில் பொருட்களிடையே நிலவும் உறவென்ற கற்பனை வடிவத்தை மேற்கொள்கிறது.

சமய உலகில் மனித மூளையின் படைப்புகள் உயிருள்ள சுயேச்சைப் பிறவிகளாகவும், ஒன்றோடு ஒன்றும் மனித இனத்தோடும் உறவு கொள்கிறவையாகவும் தோற்றமளிக்கின்றன. சரக்குலகில், மனிதக் கரங்களின் படைப்பான உற்பத்திப் பொருட்களும் இவ்வாறே தோற்றமளிக்கின்றன. இதனையே சரக்குகளின் மாய்மாலம் என்றழைக்கிறேன். இந்த மாய்மாலம் அவற்றை உற்பத்தி செய்கிற உழைப்பின் தனிவித சமூகத் தன்மையிலிருந்து எழுகிறது.

ஒவ்வொரு உற்பத்தியாளருடையவும் உழைப்பின் குறிப்பான சமூகத் தன்மை பரிவர்த்தனைச் செயலில்தான் தன்னைக் காட்டிக் கொள்கிறது. பரிவர்த்தனைச் செயல் உற்பத்திப் பொருள்களிடையே நேரடியாகவும், அவை மூலமாக உற்பத்தியாளர்களிடையே சுற்றடியாகவும் நிறுவுகிற உறவுகளைக் கொண்டுதான் தனியாளின் உழைப்பு சமுதாய உழைப்பின் ஒரு பகுதியாகத் தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது. எனவே, ஒரு தனியாளின் உழைப்பை ஏனையோரின் உழைப்புடன் பிணக்கிற உறவுகள், வேலை செய்கிற தனியாட்களிடையிலான நேரடிச் சமூக உறவுகளாகத் தோன்றாமல், ஆட்களிடையிலான பொருளாயத உறவுகளாகத் தோன்றாமல், ஆட்களிடையிலான பொருளாயத உறவுகளாக‌வும், பொருட்களிடையிலான சமூக உறவுகளாகவும் .. உண்மையில் அவை இருக்கிற படி ... உற்பத்தியாளர்களுக்கு தோன்றுகின்றன.

தனி உழைப்பாளரின் உழைப்பு சமூக வழியில் இரட்டைத் தன்மை பெறுகிறது. ஒரு புறம், அது உழைப்பின் திட்டமான பயனுள்ளதொரு வகை என்ற வித்ததில், திட்டமானதொரு சமுதாயத் தேவையை நிறைவு செய்யவும், இவ்வாறு அனைவரது கூட்டுழைப்பின் பிரிக்க முடியாத பகுதியாக, தன்னியல்பாய்த் தோன்றிய சமுதாய உழைப்புப் பிரிவினையின் கிளையாகப் பங்காற்றவும் வேண்டும்.

ஒவ்வொரு உற்பத்தியாளரின் பயனுள்ள சொந்த உழைப்பும் மற்ற அனைவரின் உழைப்புடனும் சரிநிகராக இடம் பெறுகிற அளவிலும்தான், அது தனிப்பட்ட உற்பத்தியாளரின் பலதரப்பட்ட தேவைகளை நிறைவு செய்ய முடியும்.

நமது உழைப்பின் உற்பத்திப் பொருட்களை மதிப்புகள் என்ற வித்தத்தில் ஒன்றோடு ஒன்று உறவுப்படுத்துகிறோம் என்றால், இந்தப் பண்டங்களை ஒருபடித்தான மனித உழைப்பின் பொருளாயதக் கலன்களாகப் பார்ப்பது காரணமாய் அப்படிச் செய்யவில்லை. நேர்மாறாக, நமது வெவ்வேறு உற்பத்திப் பொருட்களையும் பரிவர்த்தனையின் மூலம் மதிப்புகளாக நாம் சமன் செய்யும் போதெல்லாம், அவற்றில் செலவிடப்பட்டிருக்கும் வெவ்வேறு உழைப்பு வகைகளையும் அதே செயலின் மூலம் மனித உழைப்பாக சமன் செய்கிறோம். நாம அதை உணர்ந்திருப்பதில்லை, எனினும் இதையே செய்கிறோம்.

உழைப்பின் உற்பத்திப் பொருட்கள் மதிப்புகளென்ற அளவில் அவற்றின் உற்பத்தியில் செலவிடப்பட்ட மனித உழைப்பின் பொருளாயதத் தெரிவிப்புகளே என்ற சமீபத்திய விஞ்ஞான கண்டுபிடிப்பு உண்மையிலேயே மனித குல வளர்ச்சியின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்கிறது; ஆனால் உழைப்பின் சமூகத் தன்மையை உற்பத்திப் பொருட்களுக்கேயுரிய பொருள்வயத் தன்மையாக நமக்கு தோன்றச் செய்கிற மூடுபனியை இது சிறிதும் அகற்றி விடுவதில்லை. காற்றில் அடங்கியுள்ள வாயுக்களை விஞ்ஞானம் கண்டுபிடித்த பின்னரும் காற்றுவெளி மாற்றமடையாமலே நீடிக்கிறது என்ற உண்மையைப் போலவே.

அனைத்துக்கும் முதலாவதாக, தங்களது உற்பத்திப் பொருளுக்குப் பதிலாம வேறு ஒரு உற்பத்திப் பொருள் எவ்வளவு கிடைக்கும்? உற்பத்திப் பொருட்கள் பரிவர்த்தனைகுரியவையாய் இருக்கும் விகிதங்கள் யாவை? இந்த கேள்வியே உற்பத்தியாளர்கள் சரக்குப் பரிவர்த்தனை செய்து கொள்ளும் போது நடைமுறையில் அவர்களது அக்கறைக்குரியதாகும். இந்த விகிதாசாரங்கள் வழக்கால் குறிப்பிட்ட ஸ்திரத் தன்மையை அடைந்திருக்கும்போது அவை உற்பத்திப் பொருட்களின் இயல்பிலிருந்து விளைவதாகத் தோன்றுகிறது.

மதிப்பின் அளவுகள் என்ற விகிதத்தில் ஒன்றின் மீதொன்று செயலும் பிரதிச் செயலும் புரிகிற காரணத்தால்தான், அது நிலைத்தன்மை பெறுகிறது. இந்த அளவுகள் உற்பத்தியாளர்களின் மன விருப்பம், முன்னுணர்வு, செயல் ஆகியவற்றைச் சாராமல் தொடர்ந்து மாறுபாடுகின்றன. அவர்களே புரியும் சமூகச் செயல் அவர்களுக்கு பொருட்களின் செயலாகத் தோற்றமளிக்கிறது; அப்பொருட்கள் உற்பத்தியாளர்களால் ஆளப்படுவதற்குப் பதில் உற்பத்தியாளர்களை ஆளுகின்றன.

உற்பத்திப் பொருட்களிடையிலான தற்செயலான, ஏறியிறங்கி அலைவுற்ற வண்ணமுள்ள பரிவர்த்தனை உறவுகள் அனைத்திற்குமிடையே, அப்பொருட்களின் உற்பத்திக்குச் சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரமானது ஆட்டிப் படைக்கும் இயறகை விதியைப் போல தன்னை வலுக்கட்டாயமாக நிலைநாட்டிக் கொள்கிறது. ஒரு வீடு தடதடத்து இடிந்து விழுகையில் புவி ஈர்ப்பு விதி தன்னை நிலைநாட்டிக் கொள்வதைப் போன்றதே இது.

மதிப்பினது மருமனின் நிர்ணயிப்புக்கு இட்டுச் சென்றது சரக்குகளின் விலைகள் பற்றிய பகுப்பாய்வுதான்; மதிப்புகள் என்ற அவற்றின் தன்மைகள் நிலைநாட்டப்படுவகற்கு இட்டுச் சென்றது பொதுவில் எல்லாச் சரக்குகளதும் பண வழித் தெரிவிப்புதான். ஆயினும் தனியார் உழைப்பின் சமூகத் தன்மையையும், தனிப்பட்ட உற்பத்தியாளர்களிடையிலான சமூக உறவுகளையும் வெளிப்படுவதற்கு பதில் உள்ளபடியே மறைத்து வைப்பது சரக்குலகின் இந்த பண வடிவமே.

முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் கருத்தினங்கள் இது போன்ற வடிவங்களையே கொண்டுள்ளன. திட்டமான வரலாற்று வழியில் நிர்ணயிக்கப்பட்ட ஓர் உற்பத்தி முறையின், அதாவது சரக்கு உற்பத்தியின் நிலைமைகளையும், உறவுகளையும் சமூகச் செல்லுபடித் தன்மையுடன் தெரிவிக்கிற சிந்தனை வடிவங்களாகும் அவை.

மாற்றத்திற்காக வேண்டி, உற்பத்திச் சாதனங்களை பொதுவில் கொண்டு தங்கள் வேலையைச் செய்கிற, வெவ்வேறு தனியாட்கள் அனைவரின் உழைப்புச் சக்தியும் சமுதாயத்தின் ஒன்று சேர்க்கப்பட்ட உழைப்புச் சக்தியாக உணர்பூர்வமாய்ப் பிரயோகிக்கப்படுகிற சுதந்திர மனிதர்களின் கூட்டுச் சமூகத்தை இப்போது மனத்திரையில் சித்தரித்துக் கொள்வோம். ராபின்சன் குரூசோவினது உழைப்பின் விசேஷத் தன்மைகள் அனைத்தும், அவை தனி மனிதனுடையவை என்பதற்கு பதில் சமுதாயத்தினுடையவை என்ற வேறுபாட்டுடன், இங்கே திரும்பக் காணப்படுகின்றன. அவனால் உற்பத்தி செய்யப்பட்ட ஒவ்வொன்றும் பிரத்தியேகமாக அவனது தனிப்பட்ட உழைப்பின் விளைவே; எனவே அது அவனுக்குப் பயனுள்ள பொருள் என்பது வெளிப்படை. மேற்கூறிய சமுதாயத்தின் மொத்த உற்பத்திப் பொருள் சமுதாய உற்பத்திப் பொருளாகும். ஒரு பகுதி புதிய உற்பத்தி சாதனங்களாகப் பயன்படுகிறது; சமுதாயத்துக்குரியதாய் இருக்கிறது. ஆனால், இன்னொரு பகுதி சமுதாய உறுப்பினர்களால் வாழ்வுச் சாதனங்களாக நுகரப்படுகிறது. ஆதலால் அவர்களிடையே இந்தப் பகுதியை வினியோகிப்பது அவசியமாகும். இந்த வினியோகத்தின் வழி முறை சமுதாயத்தின் உற்பத்தி ஒழுங்குமுறைக்கேற்பவும், உற்பத்தியாளர்கள் அடைந்துள்ள வரலாற்று வளர்ச்சி நிலைக்கேற்பவும் வேறுபடும். வாழ்வுச் சாதனங்களில் ஒவ்வொரு தனிப்பட்ட உற்பத்தியாளரின் பங்கும் அவரது உழைப்பு நேரத்தால் நிர்ண‌யிக்கப்படுவதாக நாம் அனுமானித்துக் கொள்ளப் போவது சரக்கு உற்பத்திக்கான ஒப்புமையின் நிமித்தம் மட்டுமே. அப்போது உழைப்பு நேரம் இரட்டைப் பாத்திரம் வகிக்கும். திட்டவட்டமான ஒரு சமுதாயத் திட்டத்துக்கேற்ப அதை பகிர்வதானது, செய்ய வேண்டிய வேலையின் வெவ்வேறு வகைக்களுக்கும் சமுதாயத்தின் பல்வேறு தேவைகளுக்கும் இடையில் முறையான விகிதாசாரத்தை நிலவச் செய்கிறது. மறு புறம், பொது உழைப்பில் ஒவ்வொரு தனியாளும் ஏற்றுள்ள பகுதிக்கும், மொத்த உற்பத்திப் பண்டத்தில் சொந்த நுகர்வுக்குரிய பகுதியிலான அவரது பங்கிற்கும் ஒர் அளவுகோலாகவும் அது பயன்படுகிறது. தனிப்பட்ட உற்பத்தியாளர்களின் சமூக உறவுகள்...அவர்களது உழைப்பு தொடர்பாகவும், அதன் உற்பத்திப் பொருட்கள் தொடர்பாகவும்... இங்கே முற்றிலும் எளிமையாகவும், புரிந்து கொள்ளத் தக்கவையாகவும் உள்ளன. உற்பத்தி தொடர்பாக மட்டுமின்றி, வினியோகம் தொடர்பாகவும் கூட, இவ்வாறே உள்ளன.

சமய உலகம் எதார்த்த உலகத்தின் பிரதிபிம்பமே. சரக்கு உற்பத்தியின் அடிப்படையிலான சமுதாயத்தில் உற்பத்தியாளர்கள் பொதுவாகத் தங்கள் உற்பத்தி பொருட்களைச் சரக்குகளாகவும் மதிப்புகளாகவும் கருதுகிறார்கள்; இவ்விதம் தங்கள் தனிப்பட்ட தனியார் உழைப்பை ஒரு படித்தான மனித உழைப்பின் நியமமாகப் பெயர்த்துவிடுகிறார்கள்.

பொருளுற்பத்தி நிகழ்முறையின் அடிப்படையிலான சமுதாய வாழ்க்கை நிகழ்முறையானது சுதந்தரமாக ஒன்றுசேர்ந்த மனிதர்கள் நிகழ்த்தும் உற்பத்தியாகக் கருதப்பட்டு, தீர்மானிக்கப்பட்ட திட்டத்துக்கேற்ப அவர்களால் உணர்வுபூர்வமாக இயக்கப்படும் நிலை வரும் வரை தன் மாயத் திரையை நீக்கி விடுவதில்லை.  ஆயினும் சமுதாயம் இந்நிலையை அடைய குறிப்பிட்ட பொருளாயத அடித்தளம் அல்லது வாழ்க்கை நிலைமைகளின் தொகுப்பு தேவைப் படுகிறது. இவையோ ஒரு நீண்ட, வேதனை வாய்ந்த வளர்ச்சி நிகழ்முறையின் தன்னியல்பான விளைவாகும்.

உள்ளபடியே, மதிப்பையும் அதன் பருமனையும் அரசியல் பொருளாதாரம்.. எவ்வளவுதான் அரைகுறையாக என்றாலும்.. பகுத்தாய்ந்திருக்கிறது; இந்த வடிவங்களுள் பொதிந்திருப்பதென்ன என்பதை அது கண்டுபிடித்திருக்கிறது. ஆனால், உழைப்பு அதன் உற்பத்திப் பொருளின் மதிப்பாலும், உழைப்ப்பு நேரம்  அந்த‌ மதிப்பின் பருமனாலும் குறிக்கப்படுவது ஏன் என்ற கேள்வியை அது ஒரு முறை கூடக் கேட்டதில்லை.

சரக்குகள் தாமே பேச முடியுமானால், அவை கூறும்: எங்கள் பயன்..மதிப்பு மனிதர்களுக்கு சிரத்தைக்குரியதாக இருக்கலாம். அது பொருட்கள் என்ற விதத்தில் எங்களின் பகுதியன்று. ஆயின் பொருட்களென்ற விதத்தில் எங்களுக்குச் சொந்தமாயிருப்பது எங்களது மதிப்பே. சரக்குகள் என்ற விதத்தில் எங்களது இயற்கையான உறவாடல் அதை நிரூபிக்கிறது. நாங்கள். ஒன்று மற்றதன் பார்வையில் பரிவர்த்தனை...மதிப்புகளே அன்றி வேறில்லை/

Tuesday, July 23, 2013

பகுதி 1: அத்தியாயம் 1: சரக்கு. பிரிவு 3: மதிப்பின் வடிவம் அல்லது பரிவர்த்தனை மதிப்பு.

இரும்பு, துணி, தானியம் போன்ற பயன்..மதிப்புகள், பொருட்கள் அல்லது பண்டங்களின் வடிவில் உருவெடுக்கின்றன. இது அவற்றின் வெளிப்படையான தசையுருவமாகும். ஆயினும், அவை இரட்டைத் தன்மையுள்ள ஏதோ ஒன்றாக, உபயோகப் பொருட்கள், அதே நேரத்தில் மதிப்பின் சேமிப்பகங்கள் ஆகிய இரண்டாகவுமே இருப்பதால்தான் சரக்குகளாக இருக்கின்றன.

சரக்குகளின் மதிப்புக்கு முற்றிலும் சமூக வழிப்பட்ட மெய்ம்மை இருக்கிறது என்பதையும், அவை முழுதொத்த சமூக சாரத்தின், அதாவது மனித உழைப்பின் தெரிவிப்புகள் அல்லது உருக்கள் என்ற அளவிலேயே இந்த மெய்ம்மையை ஈட்டுகின்றன என்பதையும் நாம் மனதிலிருத்தினால், சரக்குக்கு சரக்கு என்ற சமூக உறவிலேயே மதிப்பு தன்னைக் காண்பித்துக் கொள்ள முடியும் என்பது தெளிவாகவே தெரிகிறது.

ஒப்பீட்டு வடிவமும், சமதை வடிவமும் மதிப்புத் தெரிவிப்பின் இரு கூறுகளாகும். நெருக்கமாகத் தொடர்புள்ள, பரஸ்பரம் சார்புள்ள, பிரிக்க முடியாத கூறுகளாகும். ஆனால், அதே போது ஒன்றுக்கொன்று பிரத்தியேகமான, பகைமை வாய்ந்த முனைகளாக ... அதாவது ஒரே தெரிவிப்பின் இரு துருவங்களாக... அவை இருக்கின்றன. அந்த தெரிவிப்பால் உறவுபடுத்தப்படும் இரு வேறு சரக்குகளுக்கும் அவை முறையே உரித்தாகின்றன.

ஒன்றுக்கொன்று சமமென கருதப்படுகிற இருவேறு வகைப்பட்ட சரக்குகளின் குறிப்பிட்ட அளவுகளிடையிலான விகிதாசாரம் தவிர வேறெதுவும் மதிப்புறவில் பார்க்கப்படுவதில்லை. வெவ்வேறு பொருட்களின் பருமன்களை ஒரே அலகின் பேரில் தெரிவிக்கும் போதுதான் அப்பருமன்களை அளவு வழியில் ஒப்பு நோக்க முடியும். 

ஒரு சட்டைக்கு  இருபது கெஜம் துணியைச் சமதையாக்குவதன் மூலம் ச‌ட்டையில் உருக்கொண்ட உழைப்பை துணியில் உருக்கொண்ட உழைப்புக்குச் சமன் செய்கிறோம். வெவ்வேறு வகையான சரக்குகளிடையில் தெரிவிக்கப்படும் சமன்பாடுதான் மதிப்பைப் படைக்கும் உழைப்பின் குறிப்பான தன்மையை எடுப்பாகத் தெரியச் செய்கிறது. வெவ்வேறு வகையான சரக்குகளில் உருக்கொண்ட வெவ்வேறு விதமான உழைப்பை ஸ்தூலமற்ற மனித உழைப்பென்ற அவற்றின் பொதுப் பண்புக்கு உள்ளபடியே பெயர்ப்பதன் மூலம் இதைச் செய்கிறது.  

இயங்குகின்ற மனித உழைப்புச் சக்தி, அதாவது மனித உழைப்பு, மதிப்பைப் படைக்கிறது; ஆனால் அதுவே மதிப்பன்று. ஒரு பொருளின் வடிவில் உருக்கொள்ளும் போது, அதன் இறுகிய நிலையிலேயே அது மதிப்பாகிறது.

சட்டை துணியின் சமதையாகவுள்ள மதிப்புச் சமன் பாட்டில், மதிப்பின் வடிவமென்ற வேலையை சட்டை செய்கிறது. துணி என்னும் சரக்கின் மதிப்பு சட்டை என்னும் சரக்கின் தசையுருவத்தால் தெரிவிக்கப்படுகிறது. ஒன்றின் மதிப்பு மற்றதன் பயன் மதிப்பால் தெரிவிக்கப்படுகிறது.  பயன்..மதிப்பு என்ற விதத்தில், துணி சட்டைக்குக் கண்கூடாய் மாறுபட்ட ஒன்றாகும். மதிப்பு என்ற விதத்தில் அதுவும் சட்டையும் ஒன்றே.

இருபது கெஜம் துணியின் பெறுமானம் ஒரு சட்டை என்ற சமன்பாடானது, ஒரே அளவிலான மதிப்புச் சாரம் (இறுகிய உழைப்பு) இரண்டிலுமே உருக்கொண்டுள்ளது என்பதை, ஒரே அளவிலான உழைப்பு நேரத்திற்குரிய ஒரே அளவிலான உழைப்பு ஒவ்வொன்றுக்கும் செலவாகியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. ஆனால், இருபது கெஜம் துணி அல்லது சட்டையின் உற்பத்திக்கு அவசியமான உழைப்பு நேரம் நெசவு அல்லது தையலின் உற்பத்தித் திறனிலான ஒவ்வொரு மாற்றத்துக்குமேற்ப வேறுபடுகிறது.

எந்தச் சரக்கும் தனக்குத் தானே சமதையுறவில் நிற்கவும், இவ்வாறு தன் சொந்த தசையுருவத்தைத் தன் சொந்த மதிப்பின் தெரிவிப்பாக மாற்றிக்கொள்ளவும் முடியாது என்பதால், ஒவ்வொரு சரக்கும் தன் சமதையாக வேறொரு சரக்கைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது அவசியமாகிறது; அந்த வேறொரு சரக்கின் பயன்.. மதிப்பை, அதாவது தசையுருவைத் தன் சொந்த மதிப்புருவமாக அது ஏற்றுக் கொள்வதும் அவசியமாகிறது.

வெல்லக் கட்டியின் எடைத் தெரிவிப்பில், இரும்பானது இரு உருக்களுக்குமே பொதுவானதோர் இயற்கைக் குணத்தை, அதாவது அவற்றின் எடையைக் குறிக்கிறது. ஆனால் சட்டையோ, துணியின் மதிப்புத் தெரிவிப்பில், இரண்டினுடையவும் இயற்கையல்லாத ஒரு குணத்தை, முற்றிலும் சமூகத் தன்மை வாய்ந்த ஒன்றை, அதாவது அவற்றின் மதிப்பைக் குறிக்கிறது.

ஸ்தூலமான உழைப்பு அதன் எதிர்க் கூறாகிய ஸ்தூலமற்ற மனித உழைப்பின் புலப்பாட்டு வடிவமாகிறது என்பது சமதை வடிவத்தின் இரண்டாவது விசேஷ குணமாகும்.

ஆனால், இந்த ஸ்தூலமான உழைப்பு, நமது உதாரணத்தில் தையல், வேறுபாடற்ற மனித உழைப்பாகக் குறிக்கப் பெறுகிறது. அதனுடன் நேரடியாக ஒன்றென காணப்படுகிறது என்பதால் உழைப்பின் வேறெந்த வகையுடனும் முழுதொத்ததாக அது இடம் பெறுகிறது. அப்படியானால், சமதை வடிவத்தின் மூன்றாவது விசேஷ குணத்தை, அதாவது தனியாட்களின் உழைப்பு, வடிவத்தில் நேரடியாக சமூகத் தன்மையுள்ள உழைப்பென்னும் அதன் எதிர் கூறின் வடிவத்தை மேற்கொள்கிறது என்பதைப் பார்க்கிறோம்.

சரக்குகளுக்கு மதிப்பை உரித்தாக்குவது சமமான மனித உழைப்பாக உழைப்பனைத்தையும் தெரிவிக்கிற ஒரு முறைதான் என்பதைப் பார்க்கவிடாமல் அரிஸ்டாட்டிலை ஒரு முக்கிய நிலைமை தடுத்துவிட்டது. கிரேக்க சமுதாயம் அடிமை முறையை அடிப்படையாகக் கொண்டிருந்தது; எனவே மனிதர்களின் சமத்துவமின்மையையும் அவர்களது உழைப்புச் சக்திகளின் சமத்துவமின்மையையும் தன இயற்கை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

ஒரு சரக்கு பயன்..மதிப்பு அல்லது பயனுடைய பொருளாகவும், மதிப்பாகவும் உள்ளது. அதன் மதிப்பு சுயேச்சையான வடிவத்தை ..  அதாவது பரிவர்த்தனை..மதிப்பின் வடிவத்தை மேற்கொண்டதுமே இந்த இரட்டைப் பொருளாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. அது தனித்திருக்கையில் ஒரு போதும் இந்த வடிவத்தை மேற்கொள்வதில்லை; ஆனால் வேறு வகையைச் சேர்ந்த இன்னொரு சரக்குடன் மதிப்புறவு அல்லது பரிவர்த்தனையுறவில் வைக்கப்படும் போதுதான் அது இவ்வடிவத்தை மேற்கொள்கிறது.

ஒரு சரக்கின் மதிப்பின் வடிவம் அல்லது தெரிவிப்பு என்பது மதிப்பின் இயல்பில் தோற்றமெடுக்கிறதே தவிர, மதிப்பும் அதன் பருமனும் பரிவர்த்தனை..மதிப்பென்ற அவற்றின் தெரிவிப்பு முறையில் தோற்றமெடுக்கவில்லை என்று நமது பகுப்பாய்வு காட்டுகிறது.

ஒரு பயனுள்ள பொருளின் உற்பத்தியில் செலவிடப்பட்ட உழைப்பு, அந்த பொருளின் புறவயப் பண்புகளில் ஒன்றாக, அதன் மதிப்பாகத் தெரிவிக்கப்படுகிற சகாப்தத்தில்தான், இத்தகையதோர் உற்பத்திப் பொருள் சரக்காகிறது.

ஒரு சரக்கின் ஆரம்ப ஒப்பீட்டு மதிப்பு வடிவத்துக்கு இணையாக மற்றுமொறு சரக்கின் ஒற்றை சமதை வடிவம் உள்ளது. ஆனாலும், மதிப்பின் ஆரம்ப வடிவம், எளியதொரு வளர்ச்சிபோக்கின் மூலம் இன்னும் முழுமையான வடிவத்தை அடைகிறது. வெவ்வேறு ஆரம்ப மதிப்புகள் கிடைக்கின்றன. மதிப்பு தெரிவிப்பை, அந்த மதிப்பினது வெவ்வேறு ஆரம்பத் தெரிவிப்புகளின் தொடராக எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டப்படுகிற தொடராக மாற்றிக் கொள்ளலாம்.

ஒரு சரக்கு தன் மதிப்பினது வடிவத்தின் அடிப்படையில், இனியும் வேறு ஒரே ஒரு வகைச் சரக்குடன் மட்டுமல்லாமல் சரக்குகளின் உலகு முழுவதுடனும் இப்போது ஒரு சமூக உறவு பூண்டு நிற்கிறது. சரக்கு என்ற முறையில் சரக்குலகின் பிரஜையாகும். அதே நேரத்தில், ஒரு சரக்கின் மதிப்பைப் பொறுத்த வரை, அது பயன்..மதிப்பின் எந்த குறிப்பான வடிவம் அல்லது வகையில் தோன்றுகிறது என்பதை இலட்சியம் செய்ய வேண்டியதில்லை என்பதை மதிப்புச் சமன்பாடுகளின் முடிவற்ற தொடர் உணர்த்துகிறது.

இரு தனிப்பட்ட சரக்கு உடைமையாளர்களிடையிலான தற்செயல் உறவு மறைந்து விடுகிறது. சரக்குகளது மதிப்பின் பருமனைக் கட்டுப்படுத்துவது அவற்றின் பரிவர்த்தனை அன்று; மாறாக அவற்றின் பரிவர்த்தனை விகிதங்களைக் கட்டுப்படுத்துவது அவற்றினது மதிப்பின் பருமனே என்பது தெளிவாகிறது.

இந்தச் சரக்குகள் ஒவ்வொன்றின் தசையுருவமும் பலவற்றில் ஒன்றான சமதை வடிவமாக, குறிப்பான ஒரு சமதை வடிவமாக இப்போது இடம் பெறுகிறது. அதே விதத்தில், இந்த வெவ்வேறு சரக்குகளில் உருக்கொண்ட உழைப்பின் பலதரப்பட்ட பயனுள்ள ஸ்தூல வகைகளும், வேறுபடுத்தப்படாத மனித உழைப்பின் ஈடேற்றம் அல்லது வெளிப்பாட்டின் வெவ்வேறான அத்தனை வடிவங்களாக இப்போது இடம் பெறுகின்றன.

ஒப்பீட்டு மதிப்புத் தெரிவிப்பு முழுமையற்றதாகும் ஏனெனில் அதைக் குறிக்கிற தொடர் முடிவற்றதாகும்.  இது தொடர்பும் சார்புமற்ற மதிப்புத் தெரிவிப்புகளின் பல்வண்ணச் சேர்க்கையாகும். ஏகத்தன்மையில் குறைபாடுள்ளதாகவும் இருக்கிறது.

சரக்குகள் மதிப்புகளாக நிலவுவது முற்றிலும் சமூக வழிப்பட்டதென்பதால், இந்தச் சமூக நிலவலை அவற்றின் சமூக உறவுகளில் ஒட்டுமொத்தத்தால் மட்டுமே தெரிவிக்க முடியும் என்பதும், ஆதலால் அவற்றினது மதிப்பின் வடிவம் சமூக வழியில் அங்கீகரிக்கப்பட்ட வடிவமாக இருக்க வேண்டுமென்பதும் தெளிவாகிறது.

சரக்குலகு முழுவதையும் தழுவி நிற்கும் பொதுவான ஒப்பீட்டு மதிப்பு வடிவம், மற்றவற்றிலிருந்து பிரிக்கப்பட்டுச் சமதையின் பாத்திரத்தை வகிக்குமாறு செய்யப்படுகிற தனிச் சரக்கை சர்வப் பொதுச் சமதையாக மாற்றி விடுகிறது.

மதிப்பு வடிவத்தின் இரு துருவங்களான ஒப்பீட்டு மதிப்பு வடிவத்துக்கும் சமதை வடிவத்துக்கும் இடையிலான பகைமை அந்த வடிவத்தோடு கூடவே ஏககாலத்தில் வளர்ச்சி பெறுகிறது.

சர்வப் பொதுச் சமதை வடிவம் பொதுவான மதிப்பு வடிவமாகும். எந்த சரக்கின் தசையுருவமானது சமதை வடிவம் என்று சமூக வழியில் இனங்காட்டப்படுகிறதோ, அந்த குறிப்பிட்ட சரக்கே பணச் சரக்காகிறது.

சரக்குலகிற்கான மதிப்புத் தெரிவிப்பில் இந்த பதவியை அது ஏகபோகமாக்கிக் கொண்டதுமே, பணச் சரக்காகி விடுகிறது.  மதிப்பின் பொது வடிவம் பண வடிவமாக மாறி விடுகிறது..

Monday, July 22, 2013

பகுதி 1: அத்தியாயம் 1: சரக்கு. பிரிவு 2: சரக்குகளில் உருக்கொண்டுள்ள உழைப்பின் இரட்டை தன்மை.

எடுத்த எடுப்பில் சரக்கானது இரு விஷயங்களின் -- பயன்-மதிப்பு, பரிவர்த்தனை-மதிப்பு இவற்றின் பின்னலாக நம்மிடம் தன்னை காட்டிக் கொண்டது. அதே இரட்டை இயல்பை உழைப்புப் பெற்றிருக்கிறது. பயன்-மதிப்புகளின் படைப்பாளி என்ற முறையில் அதற்குள்ள சிறப்பியல்புகள் வேறு, மதிப்பு வாயிலாகத் தெரிவிக்கபெறுகிறது என்ற அளவில் அதற்கு உள்ள சிறப்பியல்புகள் வேறு. சரக்குகளில் அடங்கிய உழைப்பின் இரட்டை இயல்பை முதன் முதலில் சுட்டிக்காட்டியதும் விமர்சன வழியில் ஆராய்ந்ததும் நானே. அரசியல் பொருளாதாரத்திலான தெள்ளிய ஞானத்துக்கு அச்சாணியாக திகழ்வது இதுவே என்பதால் இதனை மேலும் நுணுக்கமாகப் பார்க்கவேண்டும்.

எதன் உபயோகம் அதன் உற்பத்திப் பொருளின் பயன்-மதிப்பால் குறிக்கப்படுகிறதோ, அல்லது எது அதன் உற்பத்திப் பொருளை பயன்-மதிப்பாக்குவதன் மூலம் வெளிப்படுகிறதோ, அந்த உழைப்பைப் பயனுள்ள உழைப்பு என்று அழைக்கிறோம்.

ஒரு பயன்-மதிப்பை அதே வகையைச் சேர்ந்த இன்னொரு பயன்-மதிப்புக்கே பரிவர்த்தனை செய்வதில்லை.

உழைப்புப் பிரிவினை சரக்கு-உற்பத்திக்கு இன்றியமையாத் தேவையாகும்; ஆனால், மறுதலையாக சரக்கு உற்பத்தி உழைப்புப் பிரிவினைக்கு இன்றியமையாத் தேவை என்று இதிலிருந்து பெறப்படுவதில்லை. புராதன பொதுவுடைமை சமுதாயத்தில் சரக்கு உற்பத்தி இல்லாமலே சமுதாய உழைப்புப் பிரிவினை உள்ளது.

பயன்-மதிப்புகள், அவற்றில் உருக்கொண்டுள்ள பயனுள்ள உழைப்பு அவை ஒவ்வொன்றிலும் பண்பு வழியில் வேறுபட்டதாக இல்லையேல், சரக்குகளாக ஒன்றையொன்று எதிர் கொள்ள முடியாது.

உழைப்பு பயன் மதிப்பின் படைப்பாளியாக இருக்கிறது. பயனுள்ள உழைப்பாக இருக்கிறது என்ற அளவில், மனித இனம் உயிர் வாழ்வதற்கு இன்றியமையா தேவையாகும். அது இயற்கை விதித்திடும் சாசுவத அவசியமாகும். அது இல்லாமல் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே பொருளாதார பரிமாற்றம் எதுவும் நடக்க முடியாது; எனவே உயிர் எதுவும் இருக்க முடியாது.

உழைப்பானது பொருட் செல்வத்தின், உழைப்பினால் உற்பத்தி செய்யப்படும் பயன்-மதிப்புகளின் ஏக ஆதாரமன்று. வில்லியம் பெட்டியின் சொற்களில் கூறுவதானால் உழைப்பு அதன் தந்தை, பூமி அதன் தாய்.

தையலும் நெசவும் பண்பு வழியில் வேறுபட்ட உற்பத்தி நடவடிக்கைகள் என்ற போதிலும், அவை ஒவ்வொன்றும் மனிதனின் மூளை, நரம்பு, தசை இவற்றின் திறனுடைச் செலவீடே, இந்த அர்த்தத்தில் மனித உழைப்பே. மனித உழைப்புச் சக்தியை செலவிடுகிற இரு வேறு முறைகளே அவை. 

சரக்கின் மதிப்பு ஸ்தூலமற்ற மனித உழைப்பை, பொதுவான மனித உழைப்பின் செலவீட்டைக் குறிக்கிறது.

தேர்ச்சி பெற்ற உழைப்பு என்பது மும்முரமாக்கப்பட்ட சாமானிய உழைப்பாகவே, அல்லது இன்னும் சரியாக சொன்னால், பன்மடங்காக்கபட்ட  சாமானிய உழைப்பாகவே கணக்கிடப்படுகிறது. குறிப்பிட்ட அளவிலான தேர்ச்சி பெற்ற உழைப்பு அதை விடப் பெரிய அளவிலான சாமானிய உழைப்புக்கு சமமானதாகக் கருதப்படுகிறது. 

எளிமையின் நிமித்தம், இனிமேல் சகல வகைப்பட்ட உழைப்பையும் தேர்ச்சியற்ற சாமானிய உழைப்பாகவே கணக்கில் கொள்வோம்; இதன் மூலம் பெயர்ப்பு செய்கிற தொந்தரவைத் தவிர்க்கிறோம், அதற்கு மேல் ஒன்றுமில்லை.

சரக்கில் அடங்கியுள்ள உழைப்பானது பயன்-மதிப்பைப் பொறுத்த வரை பண்பு வழியிலேயே கணக்கிடப்படுகிறது என்னும் அதே போது, மதிப்பைப் பொறுத்த வரை அளவு வழியிலேயே கணக்கிடப்படுகிறது. 

பயன் மதிப்பைப் பொறுத்த வரை கேட்க வேண்டிய கேள்வி: எப்படி? என்ன? மதிப்பைப் பொறுத்தவரை கேட்க வேண்டிய கேள்வி எவ்வளவு? எவ்வளவு காலத்துக்கு?

பயன்-மதிப்புகளின் அளவிலான அதிகரிப்பு பொருட்செல்வத்திலான அதிகரிப்பாகும். இரு சட்டைகள் இருவருக்கு உடையாகும். ஆனாலும் பொருட்செல்வத்தின் அளவு அதிகமாகும் போதே, அதன் மதிப்பின் பருமன்  குறையலாம். இந்தப் பகை இயக்கத்தின் தோற்றுவாய் உழைப்பின் இரட்டைத் தன்மையில் பொதிந்துள்ளது.

உற்பத்தித் திறன் உழைப்பின் ஸ்தூலமான வடிவங்களுக்கே உரித்தானதொரு தன்மைஎன்பதால், அந்த ஸ்தூலமான பயனுள்ள வடிவங்களிலிருந்து நாம் பறித்தெடுத்த மாத்திரமே, அது இனியும் அந்த உழைப்பில் எவ்விளைவையும் தோற்றுவிக்க முடியாது என்பது மெய்தான். இந்நிலையில் உற்பத்தித் திறன் எப்படித்தான் மாறலாமென்றாலும், சம கால அளவுகளில் பிரயோகிக்கப்படும் ஒரே உழைப்பு எப்போதும் சம மதிப்புகளையே கொடுக்கிறது. ஆனால் சம கால அளவுகளில் அது பயன் மதிப்புகளில் வேறுபட்ட அளவுகளைக் கொடுக்கும்; உற்பத்தித் திறன் உயர்ந்தால் அதிகமாகவும், வீழ்ந்தால் குறைவாகவும் கொடுக்கும்.

உடலியல் நோக்கில் பேசுவதானால், ஒரு புறம், உழைப்பு அனைத்தும் மனித உழைப்புச் சக்தியின் செல்வீடே; முழுதொத்த ஸ்தூலமற்ற  மனித உழைப்பு என்ற தன்மையில் அது சரக்குகளின் மதிப்பைப் படைக்கிறது, அம்மதிப்பாக அமைகிறது. மறு புறம் உழைப்பு அனைத்தும் ஒரு விசெஷமான வடிவத்திலும், ஒரு திட்டமான நோக்கத்துடனும் மனித உழைப்புச் சக்தியை செலவிடுதலே ஆகும். ஸ்தூலமான பயனுள்ள உழைப்பு என்ற இந்தத் தன்மையில் அது பயன்-மதிப்புகளை  உற்பத்தி செய்கிறது.

Saturday, July 6, 2013

முதலாளித்துவப் பொருளுற்பத்தி பகுதி - 1 சரக்கும் பணமும்.அத்தியாயம் 1 சரக்கு: பிரிவு 1 ‍ சரக்கின் இரு காரணிகள்: பயன்-மதிப்பும் மதிப்பும் (மதிப்பின் சாரமும் மதிப்பின் பருமனும்)

முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை நிலவுகிற சமுதாயங்களில் செல்வம் சரக்குகளின் பெருந்திரட்டாகக் காட்சி தருகிறது. தனிச் சரக்குதான் அந்தச் செல்வத்தின் அலகு. எனவே நமது ஆராய்ச்சி சரக்கின் பகுப்பாய்விலிருந்து தொடங்க வேண்டும்.

சரக்கு என்பது, முதலாக நமக்குப் புறத்தேயுள்ள பொருள்; தனது குணங்களைக் கொண்டு ஏதேனும் ஒரு விதமான மனிதத் தேவைகளை நிறைவு செய்கின்ற ஒன்று. இந்தத் தேவைகளின் தன்மை எப்படிப்பட்டதாய் இருந்தாலும் சரிதான்; அவை வயிற்றிலிருந்து உதித்தாலும் சரி, அல்லது கேளிக்கையிலிருந்து உதித்தாலும் சரி; எல்லாம் ஒன்றுதான். இந்தத் தேவைகளை அப்பொருள் எப்படி நிறைவு செய்கிறது ‍- நேரடியாக வாழ்வுச் சாதனங்கள் என்ற முறையிலா, அல்லது உற்பத்திச் சாதனங்கள் என்ற முறையிலா- என்பது குறித்தும் கவலையில்லை.

ஒரு பொருளின் பயன்பாடு அதனைப் பயன் மதிப்பு ஆக்குகிறது. ஆனால் இந்தப் பயன்பாடு மானசீக விஷயமன்று. அது அச்சரக்கின் பெளதிகக் குணங்களால் வரம்பிடப்படுவதால் அச்சரக்கிற்கு அப்பாற்பட்டு அதற்கு வாழ்வில்லை. பொருளாயதமான என்ற அளவில் பயனுள்ள ஒன்று.  இந்த‌ குணம் அதன் பயனுள்ள பண்புகளை உபயோகித்துக் கொள்ள தேவையான உழைப்பின் அளவை சார்ந்ததன்று. நுகர்வின் மூலமே பயன் மதிப்புகள் மெய்ம்மையாகின்றன. அவை செல்வம் அனைத்தின் சாரமாகவும் அமைகின்றன. அவை பரிவர்த்தனை மதிப்பின் பொருளாயத சேமிப்பகங்களாகவும் உள்ளன

சரக்குகளின் பரிவர்த்தனை மதிப்புகள் எப்பொருட்களை ஏதேனுமோர் அளவில் அவை குறிக்கின்றனவோ அப்பொருள் அனைத்துக்கும் பொதுவான ஏதோ ஒன்றின் வாயிலாக தெரிவிக்கப்பட வல்லவாய் இருக்கவேண்டும். இந்தப் பொதுவான "ஏதோவொன்று" சரக்குகளின் வடிவ கணித குணமாகவோ, இரசாயன குணமாகவோ அல்லது வேறு ஏதேனும் இயற்கை குணமாகவோ இருக்க முடியாது. இப்படிப்பட்ட குணங்கள் அந்தச் சரக்குகளின் பயன்பாட்டுக்குத் தொடர்புள்ளவையாய் இருந்து, அவற்றைப் பயன் மதிப்புகள் ஆக்குகிற அளவுக்குத்தான் நமது கவனத்துக்குரியவை ஆகின்றன. ஆனால் சரக்குகளின் பரிவர்த்தனை என்ற சொல்லின் சிறப்பியல்பு பயன் மதிப்பை முழுமையாக நீக்கிவிட்டுப் பார்ப்பதாகும் என்பது தெளிவு.

சரக்குகளின் பயன் மதிப்பை பரிசீலனையிலிருந்து விட்டு விட்டுவோமானால், உழைப்பின் உற்பத்தி பொருட்களாக இருத்தல் என்ற ஒரே ஒரு பொதுவான குணமே அவற்றில் எஞ்சி நிற்கிறது. ஆனால் உழைப்பின் உற்பத்திப் பொருளும் கூட நமது கையில் ஒரு மாற்றத்தை அடைந்திருக்கிறது. நாம் உற்பத்திப் பொருளின் பயன் மதிப்பை நீக்கி விட்டுப் பார்ப்பதாகும். அதே நேரத்தில், அதனை பயன் மதிப்பாக்குகிற பொருட் கூறுகள், உருவங்கள் ஆகியவற்றையும் நீக்கி விட்டுப் பார்ப்பதாகும். இனியும் நாம் அதன் உருவில் மேசையை, வீட்டை, நூலை அல்லது வேறு ஏதேனும் பயனுள்ள பொருளைப் பார்ப்பதில்லை. பொருளாயதமான ஒன்று என்ற அதன் நிலை பார்வையிலிருந்து அகற்றப்படுகிறது. தச்சர், கொத்தர், நூற்பாளரது உழைப்பின் அல்லது வேறு திட்டமான வகைப்பட்ட திறனுடை உழைப்பு எதனுடையவும் உற்பத்திப் பொருளாக இனி அதனைக் கருதவும் முடியாது. உற்பத்திப் பொருட்களின் பயனுள்ள பண்புகளோடு கூடவே அவற்றில் உருக்கொண்ட உழைப்பின் பல் வேறு வகைகளது பயனுள்ள தன்மை, அந்த உழைப்பின் ஸ்தூல வடிவங்கள் ஆகிய இரண்டையுமே பார்வையிலிருந்து அகற்றி விடுகிறோம். அவை அனைத்துக்கும் பொதுவானது எதுவோ, அது மட்டுமே எஞ்சி நிற்கிறது; அனைத்துமே ஒரே வகை உழைப்பாக, ஸ்தூலமற்ற மனித உழைப்பாகப் பெயர்க்கப்படுகின்றன. அதாவது ஒரு படித்தான மனித உழைப்பின் (homogeneous human labour) - செலவிடும் வித்தத்தை பொருட்படுத்தாமல் செலவிடப்பட்ட உழைப்புச் சக்தியின் இறுகல் மட்டுமே எஞ்சி நிற்கிறது.  அவை அனைத்துக்கும் பொதுவான இந்த சமூக சாரத்தின் படிகங்களாக நோக்குங்கால், அவையே மதிப்புகள்.  

எனவே ஒரு பயன் மதிப்பு, அல்லது பயனுள்ள பண்டம் ஸ்தூலமற்ற மனித உழைப்பு அதில் உருக்கொண்டுள்ளது அல்லது பொருள் வடிவாகியுள்ளது என்பதாலேயே மதிப்பைப் பெற்றிருக்கிறது.

ஒரு சரக்கின் மதிப்பு அதற்காக செலவிடப்படும் உழைப்பின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகின்றது. அதாவது ஒரு சரக்கை உற்பத்தி செய்வதற்கு தேவைப்படுகிற ஒரு படித்தான மனித உழைப்பு ஆகும்; ஒரே சீரான உழைப்புச் சக்தியின் செலவீடாகும். சமுதாயத்தால் உற்பத்தி செய்யப்படுகிற அனைத்தினதும் மதிப்புகளின் ஒட்டுமொத்தத்தில் உருக்கொண்டுள்ள சமுதாயத்தின் மொத்த உழைப்புச் சக்தி, அது தனித்தனி அலகுகளால் ஆனதென்றாலும், இங்கே மனித உழைப்புச் சக்தியின் ஒரு படித்தான திரளாகவே கணக்கிடப்படுகிறது. அதாவது ஒரு சரக்கை உற்பத்தி செய்வதற்கு தேவைப்படுகிற நேரம் சராசரியாகத் தேவைப்படுகிற நேரம்தான் என்ற அளவில் இவ்வலகுகள் அனைத்தும் ஒன்றே.

சமுதாய வழியில் அவசியமான நேரம்தான் என்பது, இயல்பான உற்பத்தி நிலைமைகளிலும், அந்நேரத்தில் வழக்கிலுள்ள சராசரியான தேர்ச்சி, மும்முரம் இவற்றைக் கொண்டும் ஒரு பண்டத்தை உற்பத்தி செய்ய தேவைப்படுகிற நேரமாகும். மதிப்புகள் என்ற விதத்தில், எல்லா சரக்குகளுமே இறுகிய உழைப்பு நேரத்தின் திட்டமான திரள்கள்தாம். ஆனால் உழைப்பின் உற்பத்தித் திறனில் ஏற்படும் ஒவ்வொரு மாறுபாட்டுக்கும் ஏற்ப உழைப்பு நேரம் மாறுகிறது. வேலை செய்வோரது தேர்ச்சியின் சராசரி அளவு, விஞ்ஞானத்தின் வளர்ச்சி நிலை, அதன் நடைமுறைப் பிரயோகத்தின் வீச்சு, உற்பத்தியின் சமுதாய ஒழுங்கமைப்பு, உற்பத்திச் சாதனங்களின் விரிவும் ஆற்றல்களும், பெளதிக நிலைமைகள் ஆகியவை உட்பட பல்வேறு காரணிகளால் இந்த உற்பத்தி திறன் நிர்ணயிக்கப்படுகிறது.

எனவே சரக்கின் மதிப்பு, அதில் சேர்க்கப்பட்டுள்ள உழைப்பின் அளவுக்கு நேர் விகிதத்திலும், அவ்வுழைப்பின் உற்பத்தி திறனுக்கு எதிர் விகித்தத்திலும் மாறுகிறது.

ஒரு பொருள், மதிப்பை பெற்றிராமலே, பயன் மதிப்பாக இருக்க முடியும். ஒரு பொருள் சரக்காக இல்லாமலே பயனுள்ளதாகவும், மனித உழைப்பின் உற்பத்தி பொருளாகவும் இருக்க முடியும். உற்பத்தி செய்வது சரக்குகளாக வேண்டுமானால் அவை பயன் மதிப்புகளாய் இருந்தால் போதாது; மற்றவர்களுக்கான பயன் மதிப்புகளாக, அதாவது சமுதாயப் பயன் மதிப்புகளாக இருத்தல் வேண்டும். அது பயன் மதிப்பாக பயன்படத்தக்க இன்னொருவருக்கு பரிவர்த்தனை மூலமாக கை மாற வேண்டும்.

பயன்பாட்டுப் பொருளாகாத எதுவுமே மதிப்புடையதாக இருக்க முடியாது. பொருள் பயனற்றதானால் அதில் அடங்கியுள்ள உழைப்பும் பயனற்றதே. அவ்வுழைப்பு உழைப்பாவதில்லை. எனவே மதிப்பெதுவும் படைப்பதில்லை.