எடுத்த எடுப்பில் சரக்கு என்பது சர்வ சாதாரணமானதாகவும், எளிதிற் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் தோன்றுகிறது. உண்மையில் அது சூக்கும நுணுக்கங்களும் வேதாந்த நுட்பங்களும் நிறைந்த மிக விந்தையான பொருளாகும் என்பதை அதன் பகுப்பாய்வு காட்டுகிறது.
மனிதன் தனது தொழிலைக் கொண்டு, இயற்கை தந்த பொருட்களின் வடிவங்களை அவை தனக்குப் பயனுள்ளவையாக இருக்கும் விதத்தில் மாற்றுகிறான். எனவே சரக்குகளின் மாயமான தன்மை அவற்றின் பயன் மதிப்பிலிருந்து பிறப்பதன்று.
அவ்வாறெ மதிப்பை நிர்ணயிக்கும் காரணிகளின் இயல்பிலிருந்து வருவதுமன்று. ஏனெனில், உழைப்பின் பயனுள்ள வகைகள் அல்லது உற்பத்தி நடவடிக்கைகள் எவ்வளவுதான் வேறுபட்டவை என்றாலும், அவை மனித உயிரமைப்பின் காரியங்கள் என்பதும், இவ்வாறான ஒவ்வொரு காரியமும், அதன் இயல்பு அல்லது வடிவம் என்னவானாலும், சாராம்சத்தில் மனித மூளை, நரம்புகள், தசைகள் இன்ன பிறவற்றின் செல்வீடே என்பது ஓர் உடலியல் உண்மையாகும்.
எல்லாச் சமுதாய முறைகளிலும் வாழ்வுச் சாதனங்களை உற்பத்தி செய்வதற்கு செலவாகிற உழைப்பு நேரம், வெவ்வேறு வளர்ச்சிக் கட்டங்களிலும் ஒரே விதமான அக்கறைக்குரியதன்று என்றாலும் மனித வர்க்கத்தின் அக்கறைக்குரிய ஒன்றாய்க் கட்டாயம் இருந்தாக வேண்டும். கடைசியாக மனிதர்கள் எவ்விதத்திலேனும் ஒருவர் மற்றவருக்காக உழைக்கிற அக்கணத்திலிருந்தே அவர்களது உழைப்பு ஒரு சமூக வடிவத்தை மேற்கொள்கிறது.
மனித உழைப்பின் அனைத்து வகைகளுக்கும் இடையிலான சமத்துவம், அவற்றின் உற்பத்திப் பொருட்கள் எல்லாம் மதிப்புகளாக இருப்பதன் வாயிலாக எதார்த்தில் தெரிவிக்கப்படுகிறது. உழைப்புச் சக்தியின் செலவீட்டை அச்செலவீடு நீடிக்கும் காலத்தைக் கொண்டு அளவிடுவது உழைப்பின் உற்பத்திப் பொருட்களது மதிப்பின் அளவு என்ற வடிவத்தை எடுக்கிறது.
ஆக, மனிதர்களுடைய உழைப்பின் சமூகத் தன்மை அந்த உழைப்பின் உற்பத்திப் பொருளுக்கு உரித்தான பொருள்வயத்தன்மையாக அவர்களுக்குத் தோற்றமளிக்கிறது; உற்பத்தியாளர்களுக்கு அவர்களுடையே உழைப்பின் ஒட்டுமொத்தத்துடன் உள்ள உறவானது அவர்களிடையே நிலவுகிற சமூக உறவாக அல்லாமல் அவர்களது உழைப்பின் உற்பத்திப் பொருள்களிடையே நிலவுகிற சமூக உறவாக அவர்களை எதிர்கொள்கிறது .. சரக்கின் மாயமான தன்மைக்கு இதுவேதான் காரணம். புலனகளால் உணரக்கூடியவையும் அதேபோது உணர முடியாதவையுமான சமூகப் பொருட்களாவதற்கு இதுவேதான் காரணம்.
பெளதிகப் பொருட்களிடையே ஒரு பெளதிக உறவு உள்ளது. ஆனால் பொருட்கள் சரக்குகளாக இருப்பதும், அவற்றைச் சரக்குகள் என்று முத்திரை குத்துகிற உழைப்பின் உற்பத்திப் பொருட்களிடையிலான மதிப்புறவும் அவற்றின் பெளதிக இயல்புகளோடும், இந்த இயல்புகளிலிருந்து எழும் பொருளாயத உறவுகளோடும் சற்றும் தொடர்பற்றவை. அங்கே அது மனிதர்களிடையே நிலவும் திட்டமான சமூக உறவு ஆகும். அது, அவர்களது பார்வையில் பொருட்களிடையே நிலவும் உறவென்ற கற்பனை வடிவத்தை மேற்கொள்கிறது.
சமய உலகில் மனித மூளையின் படைப்புகள் உயிருள்ள சுயேச்சைப் பிறவிகளாகவும், ஒன்றோடு ஒன்றும் மனித இனத்தோடும் உறவு கொள்கிறவையாகவும் தோற்றமளிக்கின்றன. சரக்குலகில், மனிதக் கரங்களின் படைப்பான உற்பத்திப் பொருட்களும் இவ்வாறே தோற்றமளிக்கின்றன. இதனையே சரக்குகளின் மாய்மாலம் என்றழைக்கிறேன். இந்த மாய்மாலம் அவற்றை உற்பத்தி செய்கிற உழைப்பின் தனிவித சமூகத் தன்மையிலிருந்து எழுகிறது.
ஒவ்வொரு உற்பத்தியாளருடையவும் உழைப்பின் குறிப்பான சமூகத் தன்மை பரிவர்த்தனைச் செயலில்தான் தன்னைக் காட்டிக் கொள்கிறது. பரிவர்த்தனைச் செயல் உற்பத்திப் பொருள்களிடையே நேரடியாகவும், அவை மூலமாக உற்பத்தியாளர்களிடையே சுற்றடியாகவும் நிறுவுகிற உறவுகளைக் கொண்டுதான் தனியாளின் உழைப்பு சமுதாய உழைப்பின் ஒரு பகுதியாகத் தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது. எனவே, ஒரு தனியாளின் உழைப்பை ஏனையோரின் உழைப்புடன் பிணக்கிற உறவுகள், வேலை செய்கிற தனியாட்களிடையிலான நேரடிச் சமூக உறவுகளாகத் தோன்றாமல், ஆட்களிடையிலான பொருளாயத உறவுகளாகத் தோன்றாமல், ஆட்களிடையிலான பொருளாயத உறவுகளாகவும், பொருட்களிடையிலான சமூக உறவுகளாகவும் .. உண்மையில் அவை இருக்கிற படி ... உற்பத்தியாளர்களுக்கு தோன்றுகின்றன.
தனி உழைப்பாளரின் உழைப்பு சமூக வழியில் இரட்டைத் தன்மை பெறுகிறது. ஒரு புறம், அது உழைப்பின் திட்டமான பயனுள்ளதொரு வகை என்ற வித்ததில், திட்டமானதொரு சமுதாயத் தேவையை நிறைவு செய்யவும், இவ்வாறு அனைவரது கூட்டுழைப்பின் பிரிக்க முடியாத பகுதியாக, தன்னியல்பாய்த் தோன்றிய சமுதாய உழைப்புப் பிரிவினையின் கிளையாகப் பங்காற்றவும் வேண்டும்.
ஒவ்வொரு உற்பத்தியாளரின் பயனுள்ள சொந்த உழைப்பும் மற்ற அனைவரின் உழைப்புடனும் சரிநிகராக இடம் பெறுகிற அளவிலும்தான், அது தனிப்பட்ட உற்பத்தியாளரின் பலதரப்பட்ட தேவைகளை நிறைவு செய்ய முடியும்.
நமது உழைப்பின் உற்பத்திப் பொருட்களை மதிப்புகள் என்ற வித்தத்தில் ஒன்றோடு ஒன்று உறவுப்படுத்துகிறோம் என்றால், இந்தப் பண்டங்களை ஒருபடித்தான மனித உழைப்பின் பொருளாயதக் கலன்களாகப் பார்ப்பது காரணமாய் அப்படிச் செய்யவில்லை. நேர்மாறாக, நமது வெவ்வேறு உற்பத்திப் பொருட்களையும் பரிவர்த்தனையின் மூலம் மதிப்புகளாக நாம் சமன் செய்யும் போதெல்லாம், அவற்றில் செலவிடப்பட்டிருக்கும் வெவ்வேறு உழைப்பு வகைகளையும் அதே செயலின் மூலம் மனித உழைப்பாக சமன் செய்கிறோம். நாம அதை உணர்ந்திருப்பதில்லை, எனினும் இதையே செய்கிறோம்.
உழைப்பின் உற்பத்திப் பொருட்கள் மதிப்புகளென்ற அளவில் அவற்றின் உற்பத்தியில் செலவிடப்பட்ட மனித உழைப்பின் பொருளாயதத் தெரிவிப்புகளே என்ற சமீபத்திய விஞ்ஞான கண்டுபிடிப்பு உண்மையிலேயே மனித குல வளர்ச்சியின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்கிறது; ஆனால் உழைப்பின் சமூகத் தன்மையை உற்பத்திப் பொருட்களுக்கேயுரிய பொருள்வயத் தன்மையாக நமக்கு தோன்றச் செய்கிற மூடுபனியை இது சிறிதும் அகற்றி விடுவதில்லை. காற்றில் அடங்கியுள்ள வாயுக்களை விஞ்ஞானம் கண்டுபிடித்த பின்னரும் காற்றுவெளி மாற்றமடையாமலே நீடிக்கிறது என்ற உண்மையைப் போலவே.
அனைத்துக்கும் முதலாவதாக, தங்களது உற்பத்திப் பொருளுக்குப் பதிலாம வேறு ஒரு உற்பத்திப் பொருள் எவ்வளவு கிடைக்கும்? உற்பத்திப் பொருட்கள் பரிவர்த்தனைகுரியவையாய் இருக்கும் விகிதங்கள் யாவை? இந்த கேள்வியே உற்பத்தியாளர்கள் சரக்குப் பரிவர்த்தனை செய்து கொள்ளும் போது நடைமுறையில் அவர்களது அக்கறைக்குரியதாகும். இந்த விகிதாசாரங்கள் வழக்கால் குறிப்பிட்ட ஸ்திரத் தன்மையை அடைந்திருக்கும்போது அவை உற்பத்திப் பொருட்களின் இயல்பிலிருந்து விளைவதாகத் தோன்றுகிறது.
மதிப்பின் அளவுகள் என்ற விகிதத்தில் ஒன்றின் மீதொன்று செயலும் பிரதிச் செயலும் புரிகிற காரணத்தால்தான், அது நிலைத்தன்மை பெறுகிறது. இந்த அளவுகள் உற்பத்தியாளர்களின் மன விருப்பம், முன்னுணர்வு, செயல் ஆகியவற்றைச் சாராமல் தொடர்ந்து மாறுபாடுகின்றன. அவர்களே புரியும் சமூகச் செயல் அவர்களுக்கு பொருட்களின் செயலாகத் தோற்றமளிக்கிறது; அப்பொருட்கள் உற்பத்தியாளர்களால் ஆளப்படுவதற்குப் பதில் உற்பத்தியாளர்களை ஆளுகின்றன.
உற்பத்திப் பொருட்களிடையிலான தற்செயலான, ஏறியிறங்கி அலைவுற்ற வண்ணமுள்ள பரிவர்த்தனை உறவுகள் அனைத்திற்குமிடையே, அப்பொருட்களின் உற்பத்திக்குச் சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரமானது ஆட்டிப் படைக்கும் இயறகை விதியைப் போல தன்னை வலுக்கட்டாயமாக நிலைநாட்டிக் கொள்கிறது. ஒரு வீடு தடதடத்து இடிந்து விழுகையில் புவி ஈர்ப்பு விதி தன்னை நிலைநாட்டிக் கொள்வதைப் போன்றதே இது.
மதிப்பினது மருமனின் நிர்ணயிப்புக்கு இட்டுச் சென்றது சரக்குகளின் விலைகள் பற்றிய பகுப்பாய்வுதான்; மதிப்புகள் என்ற அவற்றின் தன்மைகள் நிலைநாட்டப்படுவகற்கு இட்டுச் சென்றது பொதுவில் எல்லாச் சரக்குகளதும் பண வழித் தெரிவிப்புதான். ஆயினும் தனியார் உழைப்பின் சமூகத் தன்மையையும், தனிப்பட்ட உற்பத்தியாளர்களிடையிலான சமூக உறவுகளையும் வெளிப்படுவதற்கு பதில் உள்ளபடியே மறைத்து வைப்பது சரக்குலகின் இந்த பண வடிவமே.
முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் கருத்தினங்கள் இது போன்ற வடிவங்களையே கொண்டுள்ளன. திட்டமான வரலாற்று வழியில் நிர்ணயிக்கப்பட்ட ஓர் உற்பத்தி முறையின், அதாவது சரக்கு உற்பத்தியின் நிலைமைகளையும், உறவுகளையும் சமூகச் செல்லுபடித் தன்மையுடன் தெரிவிக்கிற சிந்தனை வடிவங்களாகும் அவை.
மாற்றத்திற்காக வேண்டி, உற்பத்திச் சாதனங்களை பொதுவில் கொண்டு தங்கள் வேலையைச் செய்கிற, வெவ்வேறு தனியாட்கள் அனைவரின் உழைப்புச் சக்தியும் சமுதாயத்தின் ஒன்று சேர்க்கப்பட்ட உழைப்புச் சக்தியாக உணர்பூர்வமாய்ப் பிரயோகிக்கப்படுகிற சுதந்திர மனிதர்களின் கூட்டுச் சமூகத்தை இப்போது மனத்திரையில் சித்தரித்துக் கொள்வோம். ராபின்சன் குரூசோவினது உழைப்பின் விசேஷத் தன்மைகள் அனைத்தும், அவை தனி மனிதனுடையவை என்பதற்கு பதில் சமுதாயத்தினுடையவை என்ற வேறுபாட்டுடன், இங்கே திரும்பக் காணப்படுகின்றன. அவனால் உற்பத்தி செய்யப்பட்ட ஒவ்வொன்றும் பிரத்தியேகமாக அவனது தனிப்பட்ட உழைப்பின் விளைவே; எனவே அது அவனுக்குப் பயனுள்ள பொருள் என்பது வெளிப்படை. மேற்கூறிய சமுதாயத்தின் மொத்த உற்பத்திப் பொருள் சமுதாய உற்பத்திப் பொருளாகும். ஒரு பகுதி புதிய உற்பத்தி சாதனங்களாகப் பயன்படுகிறது; சமுதாயத்துக்குரியதாய் இருக்கிறது. ஆனால், இன்னொரு பகுதி சமுதாய உறுப்பினர்களால் வாழ்வுச் சாதனங்களாக நுகரப்படுகிறது. ஆதலால் அவர்களிடையே இந்தப் பகுதியை வினியோகிப்பது அவசியமாகும். இந்த வினியோகத்தின் வழி முறை சமுதாயத்தின் உற்பத்தி ஒழுங்குமுறைக்கேற்பவும், உற்பத்தியாளர்கள் அடைந்துள்ள வரலாற்று வளர்ச்சி நிலைக்கேற்பவும் வேறுபடும். வாழ்வுச் சாதனங்களில் ஒவ்வொரு தனிப்பட்ட உற்பத்தியாளரின் பங்கும் அவரது உழைப்பு நேரத்தால் நிர்ணயிக்கப்படுவதாக நாம் அனுமானித்துக் கொள்ளப் போவது சரக்கு உற்பத்திக்கான ஒப்புமையின் நிமித்தம் மட்டுமே. அப்போது உழைப்பு நேரம் இரட்டைப் பாத்திரம் வகிக்கும். திட்டவட்டமான ஒரு சமுதாயத் திட்டத்துக்கேற்ப அதை பகிர்வதானது, செய்ய வேண்டிய வேலையின் வெவ்வேறு வகைக்களுக்கும் சமுதாயத்தின் பல்வேறு தேவைகளுக்கும் இடையில் முறையான விகிதாசாரத்தை நிலவச் செய்கிறது. மறு புறம், பொது உழைப்பில் ஒவ்வொரு தனியாளும் ஏற்றுள்ள பகுதிக்கும், மொத்த உற்பத்திப் பண்டத்தில் சொந்த நுகர்வுக்குரிய பகுதியிலான அவரது பங்கிற்கும் ஒர் அளவுகோலாகவும் அது பயன்படுகிறது. தனிப்பட்ட உற்பத்தியாளர்களின் சமூக உறவுகள்...அவர்களது உழைப்பு தொடர்பாகவும், அதன் உற்பத்திப் பொருட்கள் தொடர்பாகவும்... இங்கே முற்றிலும் எளிமையாகவும், புரிந்து கொள்ளத் தக்கவையாகவும் உள்ளன. உற்பத்தி தொடர்பாக மட்டுமின்றி, வினியோகம் தொடர்பாகவும் கூட, இவ்வாறே உள்ளன.
சமய உலகம் எதார்த்த உலகத்தின் பிரதிபிம்பமே. சரக்கு உற்பத்தியின் அடிப்படையிலான சமுதாயத்தில் உற்பத்தியாளர்கள் பொதுவாகத் தங்கள் உற்பத்தி பொருட்களைச் சரக்குகளாகவும் மதிப்புகளாகவும் கருதுகிறார்கள்; இவ்விதம் தங்கள் தனிப்பட்ட தனியார் உழைப்பை ஒரு படித்தான மனித உழைப்பின் நியமமாகப் பெயர்த்துவிடுகிறார்கள்.
பொருளுற்பத்தி நிகழ்முறையின் அடிப்படையிலான சமுதாய வாழ்க்கை நிகழ்முறையானது சுதந்தரமாக ஒன்றுசேர்ந்த மனிதர்கள் நிகழ்த்தும் உற்பத்தியாகக் கருதப்பட்டு, தீர்மானிக்கப்பட்ட திட்டத்துக்கேற்ப அவர்களால் உணர்வுபூர்வமாக இயக்கப்படும் நிலை வரும் வரை தன் மாயத் திரையை நீக்கி விடுவதில்லை. ஆயினும் சமுதாயம் இந்நிலையை அடைய குறிப்பிட்ட பொருளாயத அடித்தளம் அல்லது வாழ்க்கை நிலைமைகளின் தொகுப்பு தேவைப் படுகிறது. இவையோ ஒரு நீண்ட, வேதனை வாய்ந்த வளர்ச்சி நிகழ்முறையின் தன்னியல்பான விளைவாகும்.
உள்ளபடியே, மதிப்பையும் அதன் பருமனையும் அரசியல் பொருளாதாரம்.. எவ்வளவுதான் அரைகுறையாக என்றாலும்.. பகுத்தாய்ந்திருக்கிறது; இந்த வடிவங்களுள் பொதிந்திருப்பதென்ன என்பதை அது கண்டுபிடித்திருக்கிறது. ஆனால், உழைப்பு அதன் உற்பத்திப் பொருளின் மதிப்பாலும், உழைப்ப்பு நேரம் அந்த மதிப்பின் பருமனாலும் குறிக்கப்படுவது ஏன் என்ற கேள்வியை அது ஒரு முறை கூடக் கேட்டதில்லை.
சரக்குகள் தாமே பேச முடியுமானால், அவை கூறும்: எங்கள் பயன்..மதிப்பு மனிதர்களுக்கு சிரத்தைக்குரியதாக இருக்கலாம். அது பொருட்கள் என்ற விதத்தில் எங்களின் பகுதியன்று. ஆயின் பொருட்களென்ற விதத்தில் எங்களுக்குச் சொந்தமாயிருப்பது எங்களது மதிப்பே. சரக்குகள் என்ற விதத்தில் எங்களது இயற்கையான உறவாடல் அதை நிரூபிக்கிறது. நாங்கள். ஒன்று மற்றதன் பார்வையில் பரிவர்த்தனை...மதிப்புகளே அன்றி வேறில்லை/
No comments:
Post a Comment