முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை நிலவுகிற சமுதாயங்களில் செல்வம் சரக்குகளின் பெருந்திரட்டாகக் காட்சி தருகிறது. தனிச் சரக்குதான் அந்தச் செல்வத்தின் அலகு. எனவே நமது ஆராய்ச்சி சரக்கின் பகுப்பாய்விலிருந்து தொடங்க வேண்டும்.
சரக்கு என்பது, முதலாக நமக்குப் புறத்தேயுள்ள பொருள்; தனது குணங்களைக் கொண்டு ஏதேனும் ஒரு விதமான மனிதத் தேவைகளை நிறைவு செய்கின்ற ஒன்று. இந்தத் தேவைகளின் தன்மை எப்படிப்பட்டதாய் இருந்தாலும் சரிதான்; அவை வயிற்றிலிருந்து உதித்தாலும் சரி, அல்லது கேளிக்கையிலிருந்து உதித்தாலும் சரி; எல்லாம் ஒன்றுதான். இந்தத் தேவைகளை அப்பொருள் எப்படி நிறைவு செய்கிறது - நேரடியாக வாழ்வுச் சாதனங்கள் என்ற முறையிலா, அல்லது உற்பத்திச் சாதனங்கள் என்ற முறையிலா- என்பது குறித்தும் கவலையில்லை.
ஒரு பொருளின் பயன்பாடு அதனைப் பயன் மதிப்பு ஆக்குகிறது. ஆனால் இந்தப் பயன்பாடு மானசீக விஷயமன்று. அது அச்சரக்கின் பெளதிகக் குணங்களால் வரம்பிடப்படுவதால் அச்சரக்கிற்கு அப்பாற்பட்டு அதற்கு வாழ்வில்லை. பொருளாயதமான என்ற அளவில் பயனுள்ள ஒன்று. இந்த குணம் அதன் பயனுள்ள பண்புகளை உபயோகித்துக் கொள்ள தேவையான உழைப்பின் அளவை சார்ந்ததன்று. நுகர்வின் மூலமே பயன் மதிப்புகள் மெய்ம்மையாகின்றன. அவை செல்வம் அனைத்தின் சாரமாகவும் அமைகின்றன. அவை பரிவர்த்தனை மதிப்பின் பொருளாயத சேமிப்பகங்களாகவும் உள்ளன
சரக்குகளின் பரிவர்த்தனை மதிப்புகள் எப்பொருட்களை ஏதேனுமோர் அளவில் அவை குறிக்கின்றனவோ அப்பொருள் அனைத்துக்கும் பொதுவான ஏதோ ஒன்றின் வாயிலாக தெரிவிக்கப்பட வல்லவாய் இருக்கவேண்டும். இந்தப் பொதுவான "ஏதோவொன்று" சரக்குகளின் வடிவ கணித குணமாகவோ, இரசாயன குணமாகவோ அல்லது வேறு ஏதேனும் இயற்கை குணமாகவோ இருக்க முடியாது. இப்படிப்பட்ட குணங்கள் அந்தச் சரக்குகளின் பயன்பாட்டுக்குத் தொடர்புள்ளவையாய் இருந்து, அவற்றைப் பயன் மதிப்புகள் ஆக்குகிற அளவுக்குத்தான் நமது கவனத்துக்குரியவை ஆகின்றன. ஆனால் சரக்குகளின் பரிவர்த்தனை என்ற சொல்லின் சிறப்பியல்பு பயன் மதிப்பை முழுமையாக நீக்கிவிட்டுப் பார்ப்பதாகும் என்பது தெளிவு.
சரக்குகளின் பயன் மதிப்பை பரிசீலனையிலிருந்து விட்டு விட்டுவோமானால், உழைப்பின் உற்பத்தி பொருட்களாக இருத்தல் என்ற ஒரே ஒரு பொதுவான குணமே அவற்றில் எஞ்சி நிற்கிறது. ஆனால் உழைப்பின் உற்பத்திப் பொருளும் கூட நமது கையில் ஒரு மாற்றத்தை அடைந்திருக்கிறது. நாம் உற்பத்திப் பொருளின் பயன் மதிப்பை நீக்கி விட்டுப் பார்ப்பதாகும். அதே நேரத்தில், அதனை பயன் மதிப்பாக்குகிற பொருட் கூறுகள், உருவங்கள் ஆகியவற்றையும் நீக்கி விட்டுப் பார்ப்பதாகும். இனியும் நாம் அதன் உருவில் மேசையை, வீட்டை, நூலை அல்லது வேறு ஏதேனும் பயனுள்ள பொருளைப் பார்ப்பதில்லை. பொருளாயதமான ஒன்று என்ற அதன் நிலை பார்வையிலிருந்து அகற்றப்படுகிறது. தச்சர், கொத்தர், நூற்பாளரது உழைப்பின் அல்லது வேறு திட்டமான வகைப்பட்ட திறனுடை உழைப்பு எதனுடையவும் உற்பத்திப் பொருளாக இனி அதனைக் கருதவும் முடியாது. உற்பத்திப் பொருட்களின் பயனுள்ள பண்புகளோடு கூடவே அவற்றில் உருக்கொண்ட உழைப்பின் பல் வேறு வகைகளது பயனுள்ள தன்மை, அந்த உழைப்பின் ஸ்தூல வடிவங்கள் ஆகிய இரண்டையுமே பார்வையிலிருந்து அகற்றி விடுகிறோம். அவை அனைத்துக்கும் பொதுவானது எதுவோ, அது மட்டுமே எஞ்சி நிற்கிறது; அனைத்துமே ஒரே வகை உழைப்பாக, ஸ்தூலமற்ற மனித உழைப்பாகப் பெயர்க்கப்படுகின்றன. அதாவது ஒரு படித்தான மனித உழைப்பின் (homogeneous human labour) - செலவிடும் வித்தத்தை பொருட்படுத்தாமல் செலவிடப்பட்ட உழைப்புச் சக்தியின் இறுகல் மட்டுமே எஞ்சி நிற்கிறது. அவை அனைத்துக்கும் பொதுவான இந்த சமூக சாரத்தின் படிகங்களாக நோக்குங்கால், அவையே மதிப்புகள்.
எனவே ஒரு பயன் மதிப்பு, அல்லது பயனுள்ள பண்டம் ஸ்தூலமற்ற மனித உழைப்பு அதில் உருக்கொண்டுள்ளது அல்லது பொருள் வடிவாகியுள்ளது என்பதாலேயே மதிப்பைப் பெற்றிருக்கிறது.
ஒரு சரக்கின் மதிப்பு அதற்காக செலவிடப்படும் உழைப்பின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகின்றது. அதாவது ஒரு சரக்கை உற்பத்தி செய்வதற்கு தேவைப்படுகிற ஒரு படித்தான மனித உழைப்பு ஆகும்; ஒரே சீரான உழைப்புச் சக்தியின் செலவீடாகும். சமுதாயத்தால் உற்பத்தி செய்யப்படுகிற அனைத்தினதும் மதிப்புகளின் ஒட்டுமொத்தத்தில் உருக்கொண்டுள்ள சமுதாயத்தின் மொத்த உழைப்புச் சக்தி, அது தனித்தனி அலகுகளால் ஆனதென்றாலும், இங்கே மனித உழைப்புச் சக்தியின் ஒரு படித்தான திரளாகவே கணக்கிடப்படுகிறது. அதாவது ஒரு சரக்கை உற்பத்தி செய்வதற்கு தேவைப்படுகிற நேரம் சராசரியாகத் தேவைப்படுகிற நேரம்தான் என்ற அளவில் இவ்வலகுகள் அனைத்தும் ஒன்றே.
சமுதாய வழியில் அவசியமான நேரம்தான் என்பது, இயல்பான உற்பத்தி நிலைமைகளிலும், அந்நேரத்தில் வழக்கிலுள்ள சராசரியான தேர்ச்சி, மும்முரம் இவற்றைக் கொண்டும் ஒரு பண்டத்தை உற்பத்தி செய்ய தேவைப்படுகிற நேரமாகும். மதிப்புகள் என்ற விதத்தில், எல்லா சரக்குகளுமே இறுகிய உழைப்பு நேரத்தின் திட்டமான திரள்கள்தாம். ஆனால் உழைப்பின் உற்பத்தித் திறனில் ஏற்படும் ஒவ்வொரு மாறுபாட்டுக்கும் ஏற்ப உழைப்பு நேரம் மாறுகிறது. வேலை செய்வோரது தேர்ச்சியின் சராசரி அளவு, விஞ்ஞானத்தின் வளர்ச்சி நிலை, அதன் நடைமுறைப் பிரயோகத்தின் வீச்சு, உற்பத்தியின் சமுதாய ஒழுங்கமைப்பு, உற்பத்திச் சாதனங்களின் விரிவும் ஆற்றல்களும், பெளதிக நிலைமைகள் ஆகியவை உட்பட பல்வேறு காரணிகளால் இந்த உற்பத்தி திறன் நிர்ணயிக்கப்படுகிறது.
எனவே சரக்கின் மதிப்பு, அதில் சேர்க்கப்பட்டுள்ள உழைப்பின் அளவுக்கு நேர் விகிதத்திலும், அவ்வுழைப்பின் உற்பத்தி திறனுக்கு எதிர் விகித்தத்திலும் மாறுகிறது.
ஒரு பொருள், மதிப்பை பெற்றிராமலே, பயன் மதிப்பாக இருக்க முடியும். ஒரு பொருள் சரக்காக இல்லாமலே பயனுள்ளதாகவும், மனித உழைப்பின் உற்பத்தி பொருளாகவும் இருக்க முடியும். உற்பத்தி செய்வது சரக்குகளாக வேண்டுமானால் அவை பயன் மதிப்புகளாய் இருந்தால் போதாது; மற்றவர்களுக்கான பயன் மதிப்புகளாக, அதாவது சமுதாயப் பயன் மதிப்புகளாக இருத்தல் வேண்டும். அது பயன் மதிப்பாக பயன்படத்தக்க இன்னொருவருக்கு பரிவர்த்தனை மூலமாக கை மாற வேண்டும்.
பயன்பாட்டுப் பொருளாகாத எதுவுமே மதிப்புடையதாக இருக்க முடியாது. பொருள் பயனற்றதானால் அதில் அடங்கியுள்ள உழைப்பும் பயனற்றதே. அவ்வுழைப்பு உழைப்பாவதில்லை. எனவே மதிப்பெதுவும் படைப்பதில்லை.
No comments:
Post a Comment