ஒரு முதலாளியின் கட்டுப்பாட்டில் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் இருப்பது, பொதுவாக கூட்டு..வேலைக்கும் குறிப்பாக பட்டறைத் தொழிலுக்கும் இயற்கையான தொடக்க நிலை ஆகும். ஆனால் பட்டறைத் தொழில் உழைப்புப் பிரிவினை தொழிலாளர்களின் எண்ணிக்கையிலான இந்த அதிகரிப்பை ஒரு தொழில் நுட்ப அவசியமாக்கி விடுகிறது.
ஒவ்வொரு முதலாளியின் கையிலும் கட்டாயம் இருக்க வேண்டிய குறைந்தபட்ச மூலதன அளவு மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும்; அதாவது, சமுதாய உற்பத்திச் சாதனங்களும் வாழ்வுச் சாதனங்களும் மூலதனமாக மாற்றமடையும் நிகழ்வு மேலும் மேலும் விரிவடைந்து கொண்டே இருக்க வேண்டும். இது பட்டறைத் தொழிலின் இயல்பிலிருந்தே உதித்தெழும் விதியாகும்.
ஏராளமான தனிப்பட்ட நுணுக்கத் தொழிலாளர்களாலான இந்த இயங்கமைப்பு முதலாளிக்குச் சொந்தமானது. எனவே, உழைப்புகளின் ஒன்றிணைப்பிலிருந்து விளைகிற உற்பத்தித் திறன் மூலதனத்தின் உற்பத்தித் திறனாகத் தோற்றமளிக்கிறது.
சாமனியக் கூட்டு..வேலை தனியாளின் வேலைமுறையைப் பெரும்பாலும் மாற்றமின்றி விட்டு விடுகிறது; ஆனால், பட்டறைத் தொழில் அதை முற்றிலும் புரட்சிகரமான முறையில் மாற்றி, உழைப்புச் சக்தியை அதன் அடி வேருடன் கவர்ந்து கொள்கிறது. அது உற்பத்திக்கான ஆற்றல்களும் ஆர்வங்களுமாகிய ஒர் முழு உலகையே முடக்கி, ஒரே ஒரு நுணுக்க வேலையிலான கைத்திறனை வலுவந்தமாக வளர்த்து, தொழிலாளியை முடமாக்கி விகாரப் படுத்துகிறது.
பொருளுற்பத்தியின் மதிநுட்பம் என்பது பல திசைகளில் மறைந்து விடுவதால் ஒரு திசையில் மட்டும் விரிவடைகிறது. நுணுக்கத் தொழிலாளர்கள் இழப்பவை யாவும் அவர்களை வேலைக்கமர்த்தும் மூலதனத்தில் ஒன்று திரள்கிறது.
விஞ்ஞானத்தை உழைப்பிலிருந்து வேறான உற்பத்திச் சக்தியாக்கி மூலதனச் சேவையில் ஆழ்த்துகிற நவீனத் தொழில் துறையில் இது முழுமை பெறுகிறது.
18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் மெய்யாகவே சிற்சில பட்டறைத் தொழிலதிபர்கள் தொழில் இரகசியங்களை குறிப்பிட்ட சில வேலைகளில் மூடப் பிறவிகளையே அமர்த்த விரும்பினர்/
உடலையும் உள்ளத்தையும் ஓரளவு ஊனப்படுத்துவது சமுதாய முழுமையிலான உழைப்புப் பிரிவினையிலிருந்தும் கூடப் பிரிக்கமுடியாததாகும். ஆயினும் பட்டறைத் தொழிலானது உழைப்புக் கிளைகளின் இந்தச் சமுதாயப் பிரிவினையை இன்னுமதிகமாய் முன்னெடுத்துச் செல்வதாலும், மேலும் அதற்குரிய விசேஷப் பிரிவினையின் மூலம் தனியாளது வாழ்வின் அடிவேர்களையே தாகுவதாலும், தொழில் துறை நோயியலுக்கு இலக்குப் பொருட்களை வழங்குவதிலும், அதனை ஆரம்பித்து வைப்பதிலும் அதுவே முதலாவதாகும்.
பட்டறைத் தொழில் தன்னியல்பாய்த் தோன்றிய ஒன்றாகத் தொடங்குகிறது. சற்றே நிலைபெற்று விரிவடைந்ததும், முதலாளித்துவப் பொருளுற்பத்திக்கென உணர்வு பூர்வமாக ஒழுங்கு செய்து முறைப்படுத்தப்பட்ட வடிவமாகிவிடுகிறது.
இந்த வடிவத்தில் ஏற்படும் எந்த மாற்றமும், அற்ப விவரங்களிலான மாற்றம் நீங்கலாக, முழுக்க முழுக்க உழைப்புக் கருவிகளிலான புரட்சியின் விளைவேயாகும்.
கைத்தொழில்களைக் கூறுகளாகச் சிதைப்பதன் மூலமும் உழைப்புக் கருவிகளை தனித்திறன் பெறச் செய்வதன் மூலமும், நுணுக்கத்தொழிலாளர்களை உருவாக்குவதன் மூலமும், அவர்களை ஒற்றை இயங்கமைப்பாகத் தொகுத்து ஒன்றிணைப்பதன் மூலமும், பட்டறைத் தொழில் உழைப்புப் பிரிவினையானது சமுதாய உற்பத்தி நிகழ்முறையில் பண்புவழியில் தரவரிசையையும், அளவு வழியில் விகித ஒழுங்கையும் உண்டாக்குகிறது.
பட்டறைத் தொழில், அதன் பிரத்தியேக முதலாளித்துவ வடிவத்தில் ஒப்பீட்டு உபரி..மதிப்பைப் பெறுவதற்கான, அதாவது தொழிலாளியின் செலவில் மூலக்தனத்தின் தற்பெருக்கத்தை அதிகப்படுத்துவதறகான ஒரு குறிப்பிட்ட வழிமுறையே. அது உழைப்பின் சமுதாய உற்பத்தித் திறனை, தொழிலாளியின் நன்மைக்காக அல்லாமல், முதலாளியின் நன்மைக்காக அதிகப்படுதுவது மட்டுமல்லாமல், தனிப்பட்ட தொழிலாளர்களை முடமாக்கியே இதைச் செய்கிறது. உழைப்பின் மீது கோலோச்சுவதறகான புதிய நிலைமைகளை அது தோற்றுவிக்கிறது. எனவே ஒரு புறம் வரலாற்றில் ஒரு முன்னேற்றமாகவும், சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சியில் ஒர் அவசியக் கட்டமாகவும் திகழ்கிறது. மறு புறம், அது ஒரு நாசூக்கான நாகரிகச் சுரண்டல் முறையாகும்.
பட்டறைத் தொழிற் காலத்தின் அரசியல் பொருளாதரம், சமுதாய உழைப்புப் பிரிவினை குறிப்பிட்ட அளவு உழைபைக் கொண்டு கூடுதலான சரக்குகளை உற்பத்தி செய்வதற்கும், இவ்வாறு சரக்குகளை மலிவாக்கி மூலதனத் திரட்டலை விரைவு படுத்துவதற்கும் வாய்த்த சாதனம் என்று மட்டுமே பார்க்கிறது. அளவுக்கும் பரிவர்த்தனை..மதிப்புக்கும் இப்படி உயர் சிறப்பு அளிப்பதற்கு நேர்மாறாக உள்ளது தொல்சீர் பண்டைக்காலத்திய நூலாசிரியர்கள் போக்கு. அவர்கள் முழுக்க முழுக்க பண்பையும் பயன்..மதிப்பையுமே உயர்த்திப் போற்றுகிறார்கள்.
16 ஆம் நூற்றாண்டுக்கும் நவீன தொழில் துறையின் சகாப்த்தத்துக்கும் இடையிலான காலத்தில் மூலதனம் பட்டறைத் தொழிலாளர்களின் பயன்படத்தக்க வேலை நேரம் முழுவதற்கும் அதிபதியாக முடியவில்லை. மேலும் பட்டறைத் தொழிலகள் அற்பாயுள் படைத்தவையாகவே இருந்தன. குடிபெயர்கிற அல்லது குடிவருகிற தொழிலாளர்களுடன் சேர்ந்து இவை தமது இருப்பிடத்தை நாடு விட்டு நாடு மாற்றிக் கொண்டன.
சமுதாயத்தின் பொருளுற்பத்தியை முழு அளவுக்கு கைப்பற்றவோ, அந்த உற்பத்தி முழுவதையும் புரட்சிகரமாக மாற்றவோ பட்டறைத் தொழிலால் முடியவில்லை.
அதன் மிகப் பூர்தியான படைப்புகளில் ஒன்று, உழைப்புக் கருவிகளையே உற்பத்தி செய்வதற்கான பட்டறையாகும். பட்டறைத் தொழில் உழைப்புப் பிரிவினையிலிருந்து விளைந்தது இந்தப் பட்டறை. இப்பட்டறையிலிருந்து பிறந்தன இயந்திரங்கள். இந்த இயந்திரங்கள்தாம் சமூகப் பொருளுற்பத்தியை ஒழுங்கியக்குகிற கோட்பாடாயிருக்கும் கைவினைஞனின் பணியை அகற்றுகின்றன. இந்த கோட்பாட்டினால் மூலதனத்தின் ஆதிக்கத்துக்கு இடப்பட்ட விலங்குகள் முறிந்து விழுகின்றன.