Friday, September 20, 2013

பகுதி 4. அத்தியாயம் 14: உழைப்புப் பிரிவினையும் பட்டறைத் தொழிலும. பிரிவு 1 முதல் 3 வரை

பிரிவு 1: பட்டறைத் தொழிலின் இரட்டைத் தோற்றுவாய்.

உழைப்புப் பிரிவினையின் அடிப்படையிலான கூட்டு..வேலை பட்டறைத் தொழிலில் தன் எடுத்துக் காட்டான வடிவத்தை மேற்கொள்கிறது.

பட்டறைத் தொழில் உதிக்கிற முறை, கைத்தொழில்களில் இருந்து அது வளர்கிற விதம் இரட்டைத் தன்மையதாகும்.  ஒரு புறம், சுயேச்சையான பல்வேறு கைத்தொழில்களின் ஐக்கியத்திலிருந்து அது பிறக்கிறது;

மறு புறம்,கைத்தொழிலைச் சேர்ந்த கைத்திறனாளர்களின் கூட்டு வேலையிலிருந்தும் பட்டறைத் தொழில் பிறக்கிறது:

ஒரு புறம், பட்டறைத் தொழில் உற்பத்தி நிகழ்முறையில் உழைப்புப் பிரிவினையைப் புகுத்துகிறது, அல்லது அந்தப் பிரிவினையை மேலும் வளர்க்கிறது; மறு புறம், முன்னதாக தனித்திருந்த கைத்தொழில்களை அது ஒன்றாய்ச் சேர்க்கிறது. ஆனால், அதன் குறிப்பான தொடக்கம் எதுவாயிருந்தாலும், அதன் இறுதி வடிவம் எப்போதும் ஒன்றே ... மனிதப் பிறவிகளைப் பாகங்களாகக் கொண்ட ஓர் உற்பத்திப் பொறியமைவே.

பட்டறைத் தொழிலில் ஓர் உற்பத்தி நிகழ்முறை அதன் பல்வேறு அடுத்தடுத்த படிகளாகப் பிரிபடுவது ஒரு கைத்தொழில் அதன் அடுத்தடுத்த கைவேலைகளாக‌ப் பகுபடுவதுடன் முற்றிலும் ஒத்தமைகிறது. சிக்கலானதானாலும் எளிமையானதானாலும், ஒவ்வொரு வேலையையும் கையால் செய்ய வேண்டியுள்ளது. அது கைத்தொழிலுக்குரிய தன்மையை இழக்காதிருக்கிறது; எனவே, தன் கருவிகளைக் கையாளுவதில் தனியொரு தொழிலாளிக்குள்ள பலத்தையும், தேர்ச்சியையும், விரைவையும், உறுதியையும் பொறுத்தது அது.

இந்த உழைப்புப் பிரிவினை ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த கூட்டு..வேலையாகும்; அதன் குறைகளில் பலவும் கூட்டு..வேலையின் பொதுத்தன்மையிலிருந்து பிறப்பவையே அல்லாமல், அதன் இந்தக் குறிப்பிட்ட வடிவத்திலிருந்து பிறப்பவை அல்ல.

பிரிவு 2: நுணுக்கத் தொழிலாளியும் அவரது கருவிகளும்.
.
பட்டறைத் தொழிலின் உயிருள்ள பொறியமைவாகிற கூட்டுத் தொழிலாளி (collective labourer )  முழுக்க முழுக்க தேர்ச்சி பெற்ற நுணுக்கத் தொழிலாளர்களால் ஆனவரே. எனவேதான் சுயேச்சையான கைத்தொழிலுடன் ஒப்பிட்டால் குறிப்பிட்ட காலத்தில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. அல்லது உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகமாக்கப்படுகிறது.

பட்டறைத் தொழிலானது பொதுவாக சமுதாயத்தில் தொழில்கள் இயற்கையாகவே வேறுபட்டு வளர்ந்திருக்கக் கண்டு, அந்த வேறுபாட்டை அப்படியே எடுத்தாள்வதோடு, பட்டறைக்குள்ளேயே திட்டமிட்டு அதனைத் தீவிரப்படுத்துவதன் மூலம் நுணுக்கத் தொழிலாளியை தனித்தேர்ச்சி பெறச் செய்கிறது.

தாவரங்களும் மிருகங்களும் இனங்களாகவும் ராசிகளாகவும் வகைபிரிவதை முறைப்படுத்துகிற அதே இயறகை விதியின் செயலிலிருந்தே, சாதிகளும் கைவினை சங்கங்களும் பிறக்கின்றன; ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடைந்ததும் சாதி மூலமான பரம்பரைத் தன்மையும் கைவினைச் சங்கம் மூலமான பிரத்தியேகத் தன்மையும் சமுதாயச் சட்டத்தின் மூலம் நிலைநாட்டப்படுகின்றன என்பதே.

தலைமுறை தலைமுறையாகப் பேணி வளர்க்கப்படுவதும், தந்தை தனயனுக்குத் தருவதுமான தனித் தேர்ச்சி அளிக்கும் செயல் திறமை பட்டறைத் தொழிலாளியின் வேலையோடு ஒப்பிடுமிடத்து மிகவும் சிக்கலானதாகும். 

கைத்திறனாளர் நாள் முழுதுவதிலும் ஒரே வேலையில் பிணைப்புண்டு போனதுமே இடைவெளிகள் மறைந்து போகின்றன. இப்படி வரப்பெறும் கூடுதல் உற்பத்தித் திறன், ஒன்று, குறிப்பிட்ட காலத்தில் உழைப்புச் சக்தியின் செலவீடு அதிகரிப்பதன் ... அதாவது உழைப்பின் மும்முரம் அதிகரிப்பதன் ... விளைவாகவோ, அல்லது திறனில்லா முறையில் நுகரப்படும் உழைப்புச் சக்தியின் அளவு குறைவதன் விளைவாகவோ கிடைக்கலாம்.

உழைப்பின் உற்பத்தித் திறன் தொழிலாளியின் தேர்ச்சியை மட்டும் பொறுத்ததன்று; அவரது கருவிகளின் செம்மையையும் பொறுத்ததாகும்.

முன்பு பல காரியங்களுக்குப் பயன்பட்ட கருவிகளில் மாற்றங்கள் செய்வது அவசியமாகிறது. எப்படிப்பட்ட மாற்றம் என்பது கருவியின் பழைய வடிவத்தால் ஏற்படும் இடர்பாடுகளால் நிர்ணயிக்கப்படுகிறது.

பட்டறைத் தொழிலாளியின் தனிச் சிறப்பு அடங்கியிருப்பது உழைப்புக் கருவிகளின் வகை வேறுபாட்டிலும் ஒவ்வொரு தனிவகைக் கருவியும் குறிப்பிட்ட நுணுக்கத் தொழிலாளியின் கையில் மட்டுமே முழு வீச்சில் பயன்படும் விதத்தில் அந்தக் கருவிகளைத் தனித்திறன் பெறச் செய்வதிலும்தான். 

பட்டறைத் தொழிற் காலம் சாமானியக் கருவிகளின் ஒன்றிணைப்பாலான இயந்திர சாதனம் தோன்றுவதற்கான பொருளாயத நிலைமைகளில் ஒன்றை படைக்கிறது.

பட்டறைத் தொழிலின் மிகவும் சாமானியக் கூறுகளே நுணுக்கத் தொழிலாளியும் அவரது கருவிகளும்.

பிரிவு 3: பட்டறைத் தொழிலின் அடிப்படை வடிவங்கள் இரண்டு: பல படித்தான பட்டறைத் தொழில், தொடர் பட்டறைத் தொழில்

பட்டறைத் தொழிலின் ஒழுங்கமைப்புக்கு அடிப்படை வடிவங்கள் இரண்டு. 1. பலபடித்தான பட்டறைத் தொழில். 2. தொடர் பட்டறைத் தொழில். பிற்காலத்தில் இயந்திர சாதனத்தைக் கொண்டு நடத்தப்படும் நவீனத் தொழில் துறையாக (Modern Industry ) மாற்றமடைவதில் இவை இருவேறு பாத்திரம் வகிக்கின்றன.    இந்த இரட்டைத் தன்மை உற்பத்திச் செய்யப்படும் பண்டத்தின் இயல்பிலிருந்து பிறப்பதாகும். இந்தப் பண்டம் தனித்தனியாகச் செய்யப்பட்ட பகுதி..உற்பத்திப் பொருட்களை யாந்திரிகமாய் இணைத்துப் பொருத்துவதன் மூலமே கிடைக்கப் பெறலாம்; அல்லது தொடர்புள்ள நிகழ்முறைகள், செப்ப முறைகள் ஆகியவற்றாலான தொடரின் மூலம் அதன் பூர்த்தியான உருவம் கிடைக்கப் பெறலாம்.

பட்டறைத் தொழிலின் இயங்குமுறை, குறிப்பிட்ட விளைவு குறிப்பிட்ட காலத்தில் அடையப்படும் என்ற அனுமானத்தின் அடிப்படையிலானது. ஒன்றை ஒன்று நிறைவு செய்யும் பல்வேறு துண்டுதுண்டான உழைப்பு நிகழ்முறைகளும்  தடங்கலின்றியும் ஏககாலத்திலும் அக்கம்பக்கமாகவும் தொடர முடிவது இந்த அனுமானத்தின் பேரில்தான். வேலைகள் ஒன்றை ஒன்றும், ஆகவே தொழிலாளர்கள் ஒருவரை ஒருவரும் இப்படி நேரடியாகச் சார்ந்திருப்பது, அவர்கள் ஒவ்வொருவரையும் தம் வேலையில் அவசியமான நேரத்துக்கதிகமாகச் செலவிட முடியாதபடி செய்துவிடுகிறது.

ஒரு சரக்குக்காகச் செலவிடப்படும் உழைப்பு நேரம் அதன் உற்பத்திக்கு சமுதாய வழியில் அவசியமான உழைப்பு நேரத்தை விஞ்சக் கூடாது என்ற விதி, பொதுவான சரக்கு உற்பத்தியில், போட்டியின் தாக்கத்தாலேயே நிலைநாட்டப் பெறுவதாகத் தோன்றுகிறது.

மாறாக பட்டறைத் தொழிலில், குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட அளவில் உற்பத்திப் பொருளைத் தயாரித்தளிப்பது உற்பத்தி நிகழ்முறையின் தொழில் நுட்ப விதியாகிவிடுகிறது.

பட்டறைத் தொழிலில் அமலாக்கப்படும் உழைப்புப் பிரிவினை சமுதாயக் கூட்டுத் தொழிலாளியின் பண்புவழியில் வேறுபட்ட அங்கங்களை எளிமைப்படுத்துவதும் பல்கச் செய்வதும் மட்டுமல்லாமல், அந்த அங்கங்களின் அளவை .. அதாவது ஒவ்வொரு நுணுக்க வேலைக்குமான தொழிலாளர்களின் ஒப்பீட்டு எண்ணிக்கை அல்லது தொழிலாளர் குழுவின் ஒப்பீட்டு அளவை .. ஒழுங்குபடுத்தும் நிலையான கணித உறவு அல்லது விகிதத்தையும் உருவாக்குகிறது. அது, சமுதாய உழைப்பு நிகழ்முறையின் பண்புவழிப்பட்ட உட்பிரிவினையோடு கூட, அந்த நிகழ்முறைக்கு ஓர் அளவு வழிப்பட்ட விதியையும் விகிதாசார உறவையும் வளர்த்தெழச் செய்கிறது.

பட்டறைத் தொழில் பகுதியளவுக்கு எப்படிப் பல்வேறு கைத்தொழில்களின் ஒன்றிணைப்பிலிருந்து பிறக்கிறதோ, அதேபோல் பல்வேறு பட்டறைத் தொழில்களின் ஒன்றிணைப்பாகவும் வளர்கிறது.

பட்டறைத் தொழிலில் பெருவீதத்திலும், பெரும் சக்திப் பிரயோகத்தைக் கொண்டும் நடத்தப்பட வேண்டிய சில சாமானிய ஆரம்ப நிகழ்முறைகளுக்காக இங்குமங்குமாய் யந்திரங்கள் உபயோகப் படலாயின.

கைதொழிற் காலம் திசைகாட்டி, வெடிமருந்து, அச்சிடும் இயந்திரம், இயந்திர கடிகாரம் ஆகிய பெரும் கண்டுபிடிப்புகளை நம்க்கு வழங்கிச் சென்றது.

பல நுணுக்கத் தொழிலாளர்களின் ஒன்றிணைவால் உருவாகும் கூட்டுத்தொழிலாளிதான் பட்டறைத் தொழிற் காலத்துக்குரிய தனிவித இயந்திர சாதனம் ஆவான்.

ஒரு வேலையில் அதிக பலத்தையும், இன்னொன்றில் அதிகத் தேர்ச்சியும், மற்றொன்றில் அதிகக் கவனத்தையும் இந்தக் கூட்டுத் தொழிலாளி செலுத்த வேண்டியிருக்கிறது.

திரும்பத் திரும்ப ஒன்றையே செய்கிற பழக்கம் ஒருபோதும் பிசகாதக் கருவியாக அவரை மாற்றி விடுகிறது. அதே நேரத்தில், இயங்கமைப்பு முழுவதுடனும் அவருக்குள்ள தொடர்பு அவர் இயந்திரத்தின் பாகங்களுக்குரிய முறைப்பாட்டுடன் வேலை செய்யும்படி நிர்பந்திக்கிறது.

ஒரு புறம், தனிப்பட்ட தொழிலாளர்கள் வரம்பிடப்பட்ட ஒரே பணிக்கு உரித்தாக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் அப்பணியில் பிணைக்கப்படுகின்றனர்; மறுபுறம், படிவரிசைக்குரிய பல்வேறு வேலகளும், தொழிலாளர்கள் மத்தியில், அவர்களது இயற்கை ஆற்றல், ஈட்டிய ஆற்றல் இரண்டுக்கும் ஏற்பப் பிரித்தளிக்கப்படுகின்றன.

பட்டறைத் தொழிலானது மனிதனின் ஒட்டுமொத்தமான வேலைத் திறனுக்குப் பதிலாக, ஒரு தரப்பான தனித்திறனை மட்டும் வளர்த்து நிறைவு பெறச் செய்வதோடல்லாமல், வளர்ச்சி என்பதே இல்லாத நிலையையும் ஒரு தனித்திறனாக மாற்றத் தொடங்குகிறது. தர வரிசையோடு கூடவே, தொழிலாளர்களைத் தேர்ச்சி பெற்றோராகவும், தேர்ச்சியற்றோராகவும் பிரிக்கிற சாமனியப் பிரிவினை அடியெடுத்து வைக்கிறது. தேர்ச்சியற்றோருக்கு தொழில் பழகும் செலவு இல்லாமற் போகிறது; தேர்ச்சி பெற்றோருக்கு அவர்களது பணிகள் எளிமையாக்கப்படுவதால் இச்செலவு கைத்திறனாளர்களோடு ஒப்பிடுமிடத்து குறைந்து போகிறது. இரு நேர்வுகளிலுமே உழைப்புச் சக்தியின் மதிப்பு குறைகிறது.    

No comments:

Post a Comment