Thursday, September 12, 2013

பகுதி 4: அத்தியாயம் 13: கூட்டு வேலை

பெரும் எண்ணிக்கையிலான உழைப்பாளிகள் ஒரு முதலாளியின் மேலாண்மையில் ஒரே வகைச் சரக்கை உற்பத்தி செய்யும் பொருட்டு ஒரே நேரத்தில் ஓர் இடத்தில் ஒருங்கே வேலை செய்வது வரலாற்று வழியிலும் தர்க ஆய்வு வழியிலும் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் தொடக்கமாக அமைகிறது.

குறிப்பிட்ட குறைந்தபட்ச எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் ஒன்றாக வேலைக்கு அமர்த்தப்படும் போதெல்லாம் தனி நபர் வேறுபாடுகள் அல்லது, கணிதத்தில் சொல்வது போல் "பிழைகள்" ஒன்றை ஒன்று ஈடு செய்து மறைந்து போகின்றன.

தனிப்பட்ட உற்பத்தியாளர்கள் முதலாளியாக இருந்து பல ஆட்களை வேலைக்கமர்த்தி உற்பத்தி செய்கையில் அவர்களது உழைப்பு உடனே அதன் கூட்டு இயல்பால் சராசரி சமுதாய உழைப்பாகக் கருதத் தக்கதாகிறது. அந்நிலையில்தான் மதிப்பு..உற்பத்தி விதிகள்  அவருக்கு முழுமையாக நிறைவேற்றம் பெறுகின்றன.

பெரிய அளவில் பொதுவில் பயன்படுத்துவதற்காக ஒன்று குவிக்கப்படும் உற்பத்திச் சாதனங்களின் மதிப்பு அச்சாதனங்களின் பெருக்கத்துக்கும், அதிகரித்த பயன்பாட்டுக்கும் ஒப்ப அதே விகிதத்தில் அதிகரிப்பதில்லை. பொதுவில் நுகரப்படும் போது அவை ஒவ்வொரு தனி உற்பத்திப் பண்டத்துக்கும் தமது மதிப்பில் முன்னிலும் சிறிய பகுதியையே தருகின்றன.

தனித்த தொழிலாளர்கள் செலுத்துகிற யாந்திரிகச் சக்திகளின் மொத்தத் தொகை என்பது கனத்த எடையைத் தூக்குவது, திருகுப் பொறியைத் திருப்புவது, தடைக் கல்லை அகற்றுவது போன்ற முழுமையான ஒரே வேலையில் பல கரங்கள் ஒருங்கே ஈடுபடும் போது உருவாகிற சமுதாயச் சக்தியிலிருந்து வேறுபடுகிறது. இத்தகைய நேர்வுகளில் ஒருங்கிணைந்த உழைப்பின் பலனை தனி ஆளின் உழைப்பால் பெறவே முடியாது.

இங்கு நாம் கூட்டு..வேலையின் மூலம் தனி ஆளின் உற்பத்தித் திறன் அதிகமாவதை மட்டும் காணவில்லை. ஒரு புதிய சக்தி, அதாவது வெகு ஜனங்களது கூட்டுச் சக்தி உதித்தெழுவதையும் காண்கிறோம்.

பல சக்திகளை ஒரே சக்தியாக இணைப்பிலிருந்து பிறக்கிற புதிய ஆற்றல் அன்னியில், சமூக ஒட்டுறவே நேசப் போட்டியையும் ஆர்வத் துடிப்பையும் தோற்றுவித்து பெரும்பாலான தொழில்களில் தனிப்பட்ட ஒவ்வொரு தொழிலாளியின் செய்திறனையும் உயர்த்துகிறது.

அரிஸ்டாட்டில் வாதிடுவதுபோல், மனிதன் அரசியல் பிராணியாக இல்லாவிட்டாலும், எப்படியும் சமுதாயப் பிராணியாவான் என்பதே இதற்கு காரணம்.

ஒத்திசைந்து வேலை செய்கிற மனிதர்களின் குழு முன்னும் பின்னும் கரங்களும் கண்களும் கொண்டுள்ளது, ஓரளவுக்கு சர்வ வியாபியாய் உள்ளது என்பதே காரணம். வேலையின் பல்வேறு பகுதிகள் ஒருங்கே முன்னேறுகின்றன.

வேலை சிக்கலானதாக இருப்பின், கூட்டாக வேலை செய்கிற ஆட்களின் தொகையே பல்வேறு வேலைகள் வெவ்வேறு கரங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படுவதற்கும், ஆதலால் அவை ஒருங்கே செய்யப்படுவதற்கும் இடமளிக்கிறது. இதனால் வேலை முழுவதும் பூர்த்தியாவதற்கு அவசியமான நேரம் குறைகிறது.

வேலைக்கு அனுமதிக்கப்படும் நேரம் சிறிதாயிருப்பதை, தீர்மானகரமான தருணத்தில் உற்பத்திக் களத்தில் இறக்கப்படும் உழைப்புத் திரள் பெரிதாயிருப்பது ஈடு செய்து விடுகிறது. சரியான நேரத்துக்குள் பணியை முடிப்பது ஏராளமான வேலை..நாட்களை இணைத்து ஒருங்கே பிரயோகிப்பதைப் பொறுத்ததாகும்; பயனுள்ள விளைவின் அளவு உழைப்பாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்ததாகும்; ஆயினும் இந்த எண்ணிக்கை அதே காலத்தில் அதே அளவு வேலைய செய்வதற்கு அவசியமான தனித்த உழைப்பாளிகளின் எண்ணிக்கையை விட‌   எப்போதுமே சிறியதாகும்.

ஒரு புறம் கூட்டு..வேலை விரிவான இடப்பரப்பில் வேலை நடப்பதற்கு வழி செய்கிறது. மறுபுறம், உற்பத்தியின் அளவுவீதத்தை விரிவுபடுத்துகிற அதே நேரத்தில் ஒப்பளவில் அரங்கம் சுருங்கிவிட அது உதவுகிறது. இந்த அரங்கச் சுருக்கம் உற்பத்தியின் அளவுவீத விரிவாக்கத்திலிருந்து பிறந்து, அதுனுடன் ஒருங்கே நடைபெறுகிறது.

ஒன்றிணைந்த வேலை..நாளின் தனிவித உற்பத்தித் திறன் என்பது எல்லா நிலைமைகளிலும் உழைப்பின் சமுதாய உற்பத்தித் திறனாகும், அல்லது சமுதாய உழைப்பின் உற்பத்தித் திறனாகும். இந்த திறனுக்கு காரணம் கூட்டு..வேலையே. உழைப்பாளி மற்றவர்களுடன் முறையாக கூட்டு வேலை செய்யும் போது  தன் தனித்தன்மையின் தளைகளை அறுத்தெறிந்து விட்டு, தன் இன ராசியின் ஆற்றல்களை வளர்க்கிறார்.

ஏராளமான கூலித் தொழிலாளர்களின் கூட்டு..வேலையின் மூலம், மூலதனத்தின் ஆளுகை என்பது உழைப்பு நிகழ்முறையை நடத்திச் செல்வதற்கே ஓர் அவசிய தேவையாக, உற்பத்தியின் மெய்யான அவசிய தேவையாக வளர்கிறது.

பெருவீதத்தில் ஒன்றிணைந்த உழைப்பனைத்துக்கும் இயக்கி ஆளும் அதிகாரம் ஒன்று அதிகமாகவோ குறைவாகவோ அவசியமாகும். அப்போதுதான் தனித்தனி நடவடிக்கைகளின் இசைவான செயற்பாட்டை சாதிக்க முடியும். ஒன்றிணைந்த உயிரமைப்பின் செயலிலிருந்து ... அதன் தனி அங்கங்களின் செயலிலிருந்து அன்று ... பிறக்கிற பொதுவான பணிகளை ஆற்ற முடியும்.

கூட்டு..வேலை செய்கிற தொழிலாளர்களின் தொகை அதிகரிக்க அதிகரிக்க, மூலதனத்தின் ஆளுகைக்கு அவர்கள் காட்டும் எதிர்ப்பும், அதனுடன் கூடவே இந்த எதிர்ப்பை மூலதனம் எதிர் நிர்ப்பந்தத்தின் மூலம் சமாளிக்க வேண்டிய அவசியமும் அதிகரிக்கின்றன.

கூலித் தொழிலாளர்களின் கூட்டு..வேலை முழுக்க முழுக்க அவர்களை வேலைக்கமர்த்தும் மூலதனத்தாலேயே தோற்றுவிக்கப்படுகிறது.

உற்பத்தி நிகழ்முறையே இரட்டைத் தன்மையதாய் உள்ளது; அதாவது ஒரு புறம் பயன்..மதிப்புகளை உற்பத்தி செய்வதற்கான சமுதாய நிகழ்முறையாகவும், மறு புறம் உபரி..மதிப்பைப் படைப்பதற்கான நிகழ்முறையாகவும் உள்ளது.

இப்போது முதலாளி தனிப்பட்ட தொழிலாளர்களையும் தொழிலாளர் குழுக்களையும் நேரடியாகவும் இடைவிடாமலும் கண்காணிக்கிற வேலையை ஒரு தனி வகைப்பட்ட கூலித் தொழிலாளியிடம் ஒப்படைக்கிறார்.

அரசியல் பொருளாதார அறிஞர் இந்தக் கண்காணிப்பு உழைப்பை திறனிலா உற்பத்தி செலவு என்ற கணக்கில் சேர்க்கிறார்.

ஒருவர் முதலாளியாக இருப்பது தொழில்..தலைவராக இருப்பதால் அன்று; மாறாக, அவர் தொழில்..தலைவராக இருப்பது முதலாளியாக இருப்பதால்தான்.

தொழிலாளி தனது உழைப்புச் சக்தியின் விற்பனைக்காக முதலாளியுடன் பேரம் செய்து முடிக்கும் வரை அவ்வுழைப்புச் சக்தியின் உடைமையாளர் அவரே; அவரிடம் இருப்பதற்கதிகமாக ... அதாவது அவரது தனிப்பட்ட ஒண்டியான உழைப்புச் சக்திக்கு அதிகமாக ... எதையும் அவர் விற்க முடியாது.

இந்தக் கூட்டு..வேலை ஆரம்பிப்பது உழைப்பு நிகழ்முறையோடுதான். ஆனால் அப்போது அவர்கள் தமக்கே சொந்தமானவர்களாய் இல்லாது போய்விடுகின்றனர். அந்த நிகழ்முறையினுள் நுழைந்ததும், அவர்கள் மூலதனத்துடன் இணைந்துவிடுகின்றனர். கூட்டு..வேலையாளர்கள் என்ற விதத்தில், செயல்படும் உயிரமைப்பு ஒன்றின் உறுப்புகள் என்ற விதத்தில், அவர்கள் மூலதனத்தின் நிலவல் வடிவங்களே ஆவர். எனவே கூட்டாக வேலை செய்யும்போது தொழிலாளி உருவாக்கும் உற்பத்தித் திறன் மூலதனத்தின் உற்பத்தித் திறனாகிறது.

ஆசிய முடியரசு ஒன்றில் பயிர்த் தொழிலில் ஈடுபடாத உழைப்பாளர்களிடம் அவர்களது தனிப்பட்ட உடல் முயற்சி அல்லாமல், பணிக்கு உதவக் கூடியது வேறொன்றுமில்லை. ஆனால் எண்ணிக்கையே அவர்களது பலமாகி விடுகிறது. இந்த மக்கள் திரள்களை ஆட்டிப் படைகிற சக்தி அரண்மணைகளையும் ஆலயங்களையும் பிரமிடுகளையும் திரள் திரளாக பெரும் சிலைகளையும் எழுப்பியது. இந்த உழைப்பாளிகளுக்கு உணவளிக்கிற வருவாய்கள் ஒருவரின் அல்லது ஒரு சிலரின் கையில் அடங்கிப் போவதே இத்தகைய பெரும் பணிகளைச் சாத்தியமாக்குகிறது.

புராதன காலத்திலும், மத்திய காலத்திலும், நவீன காலக் குடியேற்ற நாடுகளிலும், இங்குமங்குமாய் கையாளப்படும் பெருவீதக் கூட்டு வேலை ஆதிக்கமும் தொண்டூழியமும் என்ற உறவு முறையை .. பிரதானமாக அடிமைத்தனத்தை ... சார்ந்துள்ளது. இதற்கு மாறாக, முதலாளித்துவக் கூட்டு..வேலையானது மூலதனத்திடம் உழைப்புச் சக்தியை விற்கிற சுதந்திரமான கூலித் தொழிலாளி இருப்பதை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அவசியமாக்குகிறது.

கூட்டு..வேலை என்றுமே முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறைக்குரிய அடிப்படை வடிவமாகத் திகழ்கிறது; ஆயினும் கூட்டு வேலையின் ஆரம்ப வடிவம் முதலாளித்துவ பொருளுற்பத்திக்குரிய ஒரு குறிப்பான வடிவமாக அந்த உற்பத்தி முறையின் வளர்ச்சி பெற்ற வடிவங்களோடு கூடவே தொடர்ந்து நீடிக்கிறது.

No comments:

Post a Comment