Friday, September 6, 2013

பகுதி 3. அத்தியாயம் 11: உபரி..மதிப்பின் வீதமும் திரளும்

உற்பத்தி செய்யப்படும் உபரி..மதிப்பின் திரள் மூன்னீடு செய்யப்படும் மாறும் மூலதனத்தின் அளவை உபரி..மதிப்பின் வீதத்தால் பெருக்கி வரும் தொகைக்குச் சமம்; வேறு விதமாகச் சொன்னால்: அது ஏக காலத்தில் ஒரே முதலாளியால் சுரண்டப்படும் உழைப்புச் சக்திகளின் எண்ணிக்கைக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட உழைப்புச் சக்தியின் மீதான சுரண்டல் கடுமைக்கும் இடையிலான கூட்டு விகிதத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.

உபரி மதிப்பின் திரள்  Sஆகவும், சராசரி நாளில் தனிப்பட்ட தொழிலாளி வழங்குகிற உபரி..மதிப்பு sஆகவும், ஒரு தனிப்பட்ட உழைப்புச் சக்தியை வாங்குவதில் அன்றாடம் முன்னீடு செய்யப்படும் மாறும்..மூலதனம் vஆகவும் மாறும் மூலதனத்தின் மொத்தத் தொகை Vஆகவும், ஒரு சராசரி உழைப்புச் சக்தியின் மதிப்பு Pஆகவும், அதன் மீதான சுரண்டல்..கடுமை a' / a (உபரி..உழைப்பு / அவசிய..உழைப்பு) ஆகவும் வேலையில் ஈடுபடுத்தப்படுகிற தொழிலாளர்களின் எண்ணிக்கை nஆகவும் இருப்பின் பெறப்படுவது: 
S = (s/v) x V ; S = P x (a'/a) x n.

திட்டமான உபரி..மதிப்புத் திரளின் உற்பத்தியில், ஒரு காரணியின் குறைவு மற்றொரு காரணியின் அதிகரிப்பால் ஈடு செய்யப்படலாம். மாறும்..மூலதனம் குறைந்து, அதே போது உபரி..மதிப்பின் வீதம் அதே விகிதத்தில் அதிகரித்தால், உற்பத்தி செய்யப்படும் உபரி..மதிப்பின் திரள் மாறாதுள்ளது.

மாறும் மூலதனத்தின் குறைப்பு, உழைப்புச் சக்தியின் மீதான சுரண்டல்..கடுமை அதற்கேற்ப உயர்வதால் ஈடு செய்யப்படலாம்; அல்லது வேலையில் ஈடுபடுத்துகிற தொழிலாளர்களின் தொகையிலான குறைவு வேலை..நாளை நீட்டிப்பதால் ஈடு செய்யப்படலாம்.

உபரி..மதிப்பு வீதத்தில் ஏற்படும் குறைவைத் தொடர்ந்து, மாறும்..மூலதனத்தின் அளவோ அல்லது வேலையில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கையோ அதே விகிதத்தில் அதிகரித்தால், உற்பத்தி செய்யப்படும் உபரி..மதிப்பின் திரள் மாறாது.

சராசரி வேலை..நாளின் அறுதி வரம்பு (absolute limit)   மாறும் மூலதனத்திலான குறைப்பை உபரி..மதிப்பு வீத உயர்வைக் கொண்டு, அல்லது சுரண்டப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கையிலான குறைவை உழைப்புச் சக்தியின் மீதான சுரண்டல்..கடுமையின் உயர்வைக் கொண்டு ஈடு கட்டுவதற்கு ஓர் அறுதி வரம்பை விதிக்கிறது.

வேலையில் ஈடுபடுத்தப்படுகிற உழைப்புச் சக்தியின் திரள் அல்லது மாறும்..மூலதனத்தின் அளவு அதிகரித்து, ஆனால் அவ்வதிகரிப்பு உபரி..மதிப்பின் வீதத்திலான குறைவின் விகிதத்தில் இல்லாவிட்டால், உற்பத்திச் செய்யப்படும் உபரி..மதிப்பின் திரள் குறைகிறது.

உபரி..மதிப்பின் வீதம் அல்லது உழைப்புச் சக்தியின் மீதான சுரண்டல்..கடுமையும், உழைப்புச் சக்தியின் மதிப்பு அல்லது அவசிய வேலை நேரத்தின் அளவும் குறிப்பிட்டவையாய் இருக்க, மாறும்..மூலதனம் எவ்வளவு அதிகமோ, உற்பத்தி செய்யப்படும் மதிப்பின் திரளும் உபரி..மதிப்பின் திரளும் அவ்வளவு அதிகமாக இருக்கும்.

உபரி..மதிப்பின் வீதமும் உழைப்புச் சக்தியின் மதிப்பும் குறிப்பிட்டதாய் இருக்க, உற்பத்தி செய்யப்படும் உபரி..மதிப்புத் திரள்கள் முன்னீடு செய்யப்படும் மாறும்..மூலதனங்களின் அளவுகளுக்கு நேர் விகிதத்தில் மாறுபடுகின்றன.

ஒரே சமூகப் பொருளுற்பத்தி முறையின் அடிப்படையில், மாறா..மூலதனம், மாறும் மூலதனம் என்ற மூலதனப் பிரிவினை வெவ்வேறு உற்பத்திக் கிளைகளில் வெவ்வேறு விதமாயிருக்கிறது. ஒரே உற்பத்தி கிளைக்குள்ளேயும் கூட, தொழில் நுட்ப நிலைமகளிலும் உற்பத்தி நிகழ் முறைகளின் சமுதாய இணவுகளிலும் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப இந்த உறவு மாறுகிறது.

மாறா..மூலதனத்தின் மதிப்பு உற்பத்திப் பொருளின் மதிப்பில் அப்படியே திரும்பவும் இடம் பெறுகிறது. புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட மதிப்பில், புதிதாகப் படைக்கப்பட்ட மதிப்பு..உற்பத்தியில் அது சேருவதில்லை.

வெவ்வேறு மூலதனங்களால் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு, உபரி..மதிப்பு இவற்றின் திரள்கள் ... உழைப்புச் சக்தியின் மதிப்பு குறிப்பிட்டதாகவும், அதன் மீதான சுரண்டல்..கடுமை சமமாகவும் இருக்க ... இந்த மூலதனங்களது மாறும் அங்கங்களின் அளவுகளுக்கு, அதாவது உயிருள்ள உழைப்புச் சக்தியாக மாற்றப்படுகிற அங்கங்களின் அளவுகளுக்கு நேர் விகிதத்தில் மாறுபடுகின்றன.

தோற்றத்தை அடிப்படையாகக் கொண்ட அனுபவம் அனைத்துடனும் இவ்விதி தெளிவாகவே முரண்படுகிறது.

கொச்சைப் பொருளாதாரம் எப்போதுமே "உண்மையில் எதையும் கற்றறிவதில்லை;" தோற்றங்களுக்குக் காரணமாய் அமைந்து அவற்றை ஆளுகிற விதியை விட்டு விட்டு, எங்கும் போலவே இங்கும் தோற்றங்களையே கட்டித் தழுவிக் கொள்கிறது.

மாறும் மூலதனத்தின் குறைந்தபட்ச அளவென்பது உபரி மதிப்பின் உற்பத்திக்காக ஆண்டு பூராவிலும் நாள் முழுவதும் ஈடுபடுத்தப்படும் தனியொரு உழைப்புச் சக்தியின் அடக்க விலையாகும்.

செல்வப் பெருக்கம் என்பது முதலாளித்துவப் பொருள் உற்பத்தியின் உள்ளார்ந்த அவசியமாகும்.

முதலாளி தான் ஒரு முதலாளியாக, அதாவது மூலதனத்தின் ஆளுருவமாகச் செயல்படுகிற நேரம் முழுவதையும், பிறர் உழைப்பைத் தனதாக்கவும் எனவே அதன் மீது ஆதிக்கம் செலுத்தவும், இந்த உழைப்பின் பலன்களை விற்பதற்கும் செலவிட இயல வேண்டுமென்பது முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில் அவசியமாகிறது.

உற்பத்திக்காக முன்னீடு செய்யப்படும் குறைந்தபட்ச தொகை மத்திய காலத்தின் அதிகபட்சத்தைத் தாண்டி வெகுவாக அதிகரித்துவிடும்போதுதான் பணம் அல்லது சரக்குகளின் உடமையாளர் உள்ளபடியே முதலாளியாக மாறுகிறார். ஒரு குறிப்பிட்ட நிலைக்கப்பால் வெறும் அளவு வேறுபாடுகள் பண்பு வேறுபாடுகளாக மாறுகின்றன என்று ஹெகல் கண்டுபிடித்த விதி பிழையற்றதென்பது இயற்கை விஞ்ஞானத்தைப் போலவே இங்கும் மெய்ப்பித்துக் காட்டப்படுகிறது.

சாமானிய உழைப்பு நிகழ்முறை என்ற கோணத்திலிருந்து உற்பத்தி நிகழ்முறையை நோக்கினால், உற்பத்திச் சாதனங்களுடன் தொழிலாளி உறவு கொண்டிருப்பது, உற்பத்திச் செயற்பாட்டுக்கு வகை செய்யும் சாதனமும் பொருளும் ஆகும் என்பதால்தானே தவிர அவை மூலதனம் என்கிற பண்புடைத்திருப்பதால் அன்று. ஆனால் உபரி..மதிப்பை படைக்கும் நிகழ்முறையென்ற கோணத்திலிருந்து நாம் ஆராயத் தொடங்கியதுமே உற்பத்திச் சாதனங்கள் பிறர் உழைப்பை உறிஞ்சும் சாதனங்களாக மாறிப் போகின்றன.

No comments:

Post a Comment