Monday, September 23, 2013

பகுதி 4. அத்தியாயம் 14: உழைப்புப் பிரிவினையும் பட்டறைத் தொழிலும். பிரிவு 4: பட்டறைத் தொழில் உழைப்புப் பிரிவினையும் சமுதாய உழைப்புப் பிரிவினையும்

சமுதாய பொருளுற்பத்தியை அதன் பிரதானப் பிரிவுகளாக அல்லது பேரினங்களாக .... வேளாண்மை, தொழில்கள் முதலானவையாக .... பிரிப்பதை பொதுப்படையான உழைப்புப் பிரிவினை என்றும், இந்தப் பிரிவுகலை இனங்களாகவும் உள்ளினங்களாகவும் பிரிப்பதை குறிப்பான உழைப்புப் பிரிவினை என்றும், பட்டறைக்குட்பட்ட உழைப்புப் பிரிவினைய சிறப்பு உழைப்புப் பிரிவினை அல்லது நுணுக்க உழைப்புப் பிரிவினை என்றும் அழைக்கலாம்.

பால் மற்றும் வயது வேறுபாடுகளின் காரணத்தால் உழைப்புப்பிரிவினை முற்றிலும் உடற்கூறு அடிப்படையிலானதாகும்.

வெவ்வேறு சமுதாயங்களுக்கு அவற்றின் இயற்கைச் சுற்றுச் சூழலில் வெவ்வேறு உற்பத்திச் சாதனங்களும், வெவ்வேறு வாழ்வுச் சாதனங்களும் கிடைக்கின்றன. எனவே அவை உற்பத்திச் செய்யும் முறைகளும், அவற்றின் வாழ்க்கை முறைகளும், உற்பத்திப் பண்டங்களூம் வெவ்வேறாய் உள்ளன. வெவ்வேறு சமுதாயங்கள் தொடர்பு கொள்ளும் போது உற்பத்திப் பண்டங்களின் பரஸ்பரப் பரிவர்த்தனையை நேரிடச் செய்வதும், அதன் மூலம் அந்த உற்பத்திப் பண்டங்களை சரக்குகளாகப் பையப் பைய மாற்றமடையச் செய்வதும் தன்னியல்பாய் வளர்ந்த இவ்வேறுபாடே. உற்பத்தித் துறைகளிலிடையேயான வேறுபாடுகள் பரிவர்த்தனையால் வந்தவையல்ல. பரிவர்த்தனையானது ஏற்கனவே வேறுபட்டிருப்பவற்றைத்தான் உறவுபடுத்துகிறது.

ஆதியில் தனித்தனியாகவும் ஒன்றிலிருந்து ஒன்று சுயேச்சையாகவும் இருந்த உற்பத்தித் துறைகளிடையேயான பரிவர்த்தனையிலிருந்து சமுதாய உழைப்புப் பிரிவினை உதித்தெழுகிறது.

முன்பு சுயேச்சையாயிருந்தது சார்புடையதாக்கப்படுகிறது. மறு நேர்வில், முன்பு சார்புடையதாய் இருந்தது சுயேச்சையானதாக்கப்படுகிறது.

குறிப்பிட்ட மக்கள் தொகையும் ஜனநெருக்கமும் சமுதாய உழைப்புப் பிரிவினைக்கு அவசியமான நிலைமையாகும். இங்கே இவை ஒரே பட்டறையில் ஒன்றுதிரளுவதற்கு ஒப்பானவை.

ஒரு சரக்கின் உற்பத்தியில் குறிப்பிட்ட ஒரு கட்டத்தைப் பற்றிக் கொண்டால், அதன் உற்பத்தியின் இதர கட்டங்கள் எல்லாம் அதனை சுயேச்சைத் தொழிலாகளாக மாற்றிவிடுகின்றன.

உற்பத்தியின் குறிப்பிட்ட கிளைகளை நாட்டின் குறிப்பிட்ட வட்டங்களுக்கு மட்டும் உரியனவாக்கும் பிரதேச உழைப்புப் பிரிவினை, தனிவித அனுகூலம் ஒவ்வொன்றையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பட்டறைத் தொழில் முறையிலிருந்து புது ஊக்கம் பெறுகிறது.

உழைப்புப் பிரிவினை பொருளாதாரத் துறையை மட்டுமல்லாமல், சமுதாயத்தின் ஒவ்வொரு துறையையும் பற்றிக் கொள்ளுகிறது. மனிதர்களைத் தனித்திறனாளராக்கி வகை பிரித்திடும் அந்த அமைப்பிற்கும், மனிதனின் எல்லாச் சக்திகளையும் விழுங்கி ஒரு சக்தியை மட்டும் ஓங்கச் செய்யும்படியான அந்த வளர்ச்சிக்கும் அது எங்கும் அடித்தளமிடுகிறது.

சமுதாயத்திலான உழைப்புப் பிரிவினைக்கும் பட்டறையிலான உழைப்புப் பிரிவினைக்கும் இடையே அவற்றை இணைத்திடும் ஒப்புமைகளும் பிணைப்புகளும் ஏராளமென்றாலும் அவை அளவில் மட்டுமல்லாமல் வகையிலும் வேறுபடுகின்றன.

நுணுக்கத் தொழிலாளி எவ்விதமான சரக்கையும் உற்பத்திச் செய்வதில்லை என்பதே பட்டறைத் தொழில் உழைப்புப் பிரிவினையின் சிறப்பியல்பு. நுணுக்கத் தொழிலாளர்கள் ஐன னைவரதும் பொதுவான உற்பத்திப் பொருள் சரக்காகிறது.

பட்டறையிலான உழைப்புப் பிரிவினை ஒரு முதலாளியின் கையில் உற்பத்திச் சாதனங்கள் ஒன்றுகுவிவதைக் குறிக்கிறது; சமுதாயத்திலான உழைப்புப் பிரிவினை பல சுயேச்சையான சரக்கு உற்பத்தியாளர்கள் மத்தியில் அவை பிரிந்து போவதைக் குறிக்கிறது. பட்டறையினுள்ளே, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக் குறிப்பிட்ட பணிகளுக்கு உட்படுத்துவது கண்டிப்பான உறுதி வாய்ந்த விகிதாசார விதியின்படி நடந்தேறுகிற அதே போழ்தில், பட்டறைக்கு வெளியே சமுதாயத்திலோ, பல்வேறு தொழிற் கிளைகளிடையே உற்பத்தியாளர்களையும், அவர்களது உற்பத்திச் சாதனங்க‌ளையும் பங்கீடு செய்வது முழுக்க முழுக்க சந்தர்ப்ப வசத்தின் படியும் சபல புத்தியின் படியும் நடந்தேருகிறது. 

பட்டறையில் உழைப்பு பிரிவினையும், தொழிலாளியை ஒரு பகுதி..வேலையோடு ஆயுள் பரியந்தம் பிணைத்துவிடுவதும், அவரை மூலதனத்துக்கு முழுமையாக கீழ்ப்படுத்துவதும் உழைப்பை ஒழுங்கமைப்பதாகும் என்றும்,  இந்த ஒழுங்கமைப்பு உழைப்பின் உற்பத்தித் திறனை உயர்த்துகிறது என்றும் முதலாளித்துவ சிந்தனை போற்றிப் புகழ்கிறது. இதே முதலாளித்துவ சிந்தனை, உற்பத்தி நிகழ்முறையைச் சமுதாய வழியில் கட்டுப்படுத்தி ஒழுங்கியக்குவதற்கு உணர்வு பூர்வமாய்ச் செய்யப்படும் ஒவ்வொரு முயற்சியையும், சொத்துரிமைகள், தனிப்பட்ட முதலாளியின் முனைவு தங்கு தடையின்றி சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு போன்ற புனிதங்கள் மீதான தாக்குதல் என்று சொல்லி அதே வேகத்துடன் கண்டிக்கிறது.

முதலாளித்துவ பொருளுற்பத்தியைக் கொண்ட சமுதாயத்தில் சமுதாய உழைப்புப் பிரிவினையில் அராஜகமும், பட்டறை உழைப்புப் பிரிவினையில் கொடுங்கோன்மையும் ஒன்றுக்கொன்று முன் நிபந்தனையாகின்றன.  

இந்திய கிராம சமுதாயங்கள் நிலத்தை பொதுவில் வைத்திருப்பதையும், பயிர்த்தொழில்,கைத்தொழில்கள் ஆகியவற்றின் ஒன்றுகலத்தலையும், மாற்றமில்லாத உழைப்புப் பிரிவினையையும் அடிப்படையாகக் கொண்டவையாகும்.

உற்பத்திப் பண்டங்களின் ஆகப் பெரும்பகுதி சமுதாயத்தின் நேரடி உபயோகத்துக்கு உரியதாகும். அது சரக்காக வடிவம் பெறுவதில்லை. ஆகவே இங்கே உற்பத்தியானது, இந்திய சமுதாயம் முழுமையிலும், சரக்குப் பரிவர்த்தனையால் ஏற்படும்  உழைப்புப் பிரிவினையைச் சார்ந்ததல்ல. உபரி மட்டுமே சரக்காகிறது.

நினைவுக்கெட்டாத காலம் தொட்டு இவ்வுற்பத்திப் பண்டங்களின் ஒரு குறிப்பிட்ட அளவு பண்ட வடிவ நில வாரமாக அரசின் கைக்குப் போய்ச் செர்ந்துள்ளது.

ஒவ்வொரு தனிப்பட்ட கைத்திறனாளரும் தத்தம் கைத்தொழிலின் வேலைகள் அனைத்தையும் தம் பட்டறையில் பரம்பரை வழியில், ஆனால் சுயேச்சையாகவும் தம் மீது எந்த அதிகாரத்தையும் ஒப்புக்கொள்ளாமலும், நடத்துகிற அதே நேரத்தில், சமுதாயத்தில் உழைப்புப் பிரிவினையை முறைப்படுத்துகிற விதி இயறகை விதிக்குரிய தடுத்து நிறுத்த முடியாத அதிகாரத்துடன் செயல்படுகிறது. இந்தத் தன்னிறைவுச் சமுதாயங்கள் அதே வடிவில் தம்மை ஓயாது படைத்துக் கொள்கின்றன. தற்செயலாக அழிக்கப்பட்டு விடும் போது அதே இடத்தில் அதே பெயருடன் மீண்டும் துளிர்த்தெழுகின்றன.

ஆசிய அரசுகள் இடையறாது சிதைவதற்கும், மீண்டும் நிறுவப்படுவதற்கும், ஓயாத அரசவம்ச மாற்றங்களுக்கும் நேர் எதிராக கண்ணிற்படுகிறது இந்த மாற்றமின்மை. சமுதாயத்தின் பொருளாதாரக் கூறுகளது வடிவமைப்பு அரசியல் வானத்தில் சீறியெழும் புயல் மேகங்களால் பாதிப்புறாமல் அப்படியே இருந்து வருகிறது.

கைவினைச் சங்கங்களின் விதிகள், தனியொரு ஆண்டான் வேலை வாங்கக்கூடிய பழகு தொழிலாளர்கள், பணியாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கைக்கு வரம்பிட்டதன் மூலம் அந்த ஆண்டானை முதலாளியாக மாற விடாமல் தடுத்தன. மேலும் தான் ஆண்டானாக உள்ள கைத்தொழில் தவிர வேறெந்த கைத்தொழிலிலும் தன் பணியாளர்களை அவர் வேலையில் ஈடுபடுத்த முடியாது.

வியாபாரி எந்த வகைச் சரக்கையும் வாங்கலாம்; ஆனால் உழைப்பை சரக்காக வாங்க முடியாது.

கைவினைச் சங்க ஒழுங்கமைப்பு கைத்தொழிலகளைப் பிரித்து, தனித்தனியாக்கி, செம்மைப்படுத்தியதன் மூலம் பட்டறைத் தொழில் நடப்பதற்கான பொருளாயத நிலைமைகளைத் தோற்றுவிப்பதற்குப் பெரிய அளவில் பங்காற்றியதென்றாலும் பட்டறையில் உழைப்புப் பிரிவினைக்கு இடம் தரவேயில்லை. நத்தை அதன் கூட்டுடன் இறுகப் பிணைக்கப்பட்டிருப்பதைப் போல தொழிலாளி மொத்தத்தில் அவரது உற்பத்திச் சாதனங்களுடன் இறுகப் பிணைக்கப்பட்டிருப்பது போல தொழிலாளி மொத்தத்தில் அவரது உற்பத்திச் சாதனங்களுடன் இறுகப் பிணைக்கப்பட்டவராகவே இருந்தார். இவ்வாறு தொழிலாளியை அவரது உற்பத்திச் சாதனங்களிடமிருந்து பிரிந்து அச்சாதனங்களை மூலதனமாக மாற்ற முடியாததால், பட்டறைத் தொழிலுக்கான பிரதான அடித்தளம் இல்லாது போயிற்று.  

No comments:

Post a Comment