இரும்பு, துணி, தானியம் போன்ற பயன்..மதிப்புகள், பொருட்கள் அல்லது பண்டங்களின் வடிவில் உருவெடுக்கின்றன. இது அவற்றின் வெளிப்படையான தசையுருவமாகும். ஆயினும், அவை இரட்டைத் தன்மையுள்ள ஏதோ ஒன்றாக, உபயோகப் பொருட்கள், அதே நேரத்தில் மதிப்பின் சேமிப்பகங்கள் ஆகிய இரண்டாகவுமே இருப்பதால்தான் சரக்குகளாக இருக்கின்றன.
சரக்குகளின் மதிப்புக்கு முற்றிலும் சமூக வழிப்பட்ட மெய்ம்மை இருக்கிறது என்பதையும், அவை முழுதொத்த சமூக சாரத்தின், அதாவது மனித உழைப்பின் தெரிவிப்புகள் அல்லது உருக்கள் என்ற அளவிலேயே இந்த மெய்ம்மையை ஈட்டுகின்றன என்பதையும் நாம் மனதிலிருத்தினால், சரக்குக்கு சரக்கு என்ற சமூக உறவிலேயே மதிப்பு தன்னைக் காண்பித்துக் கொள்ள முடியும் என்பது தெளிவாகவே தெரிகிறது.
ஒப்பீட்டு வடிவமும், சமதை வடிவமும் மதிப்புத் தெரிவிப்பின் இரு கூறுகளாகும். நெருக்கமாகத் தொடர்புள்ள, பரஸ்பரம் சார்புள்ள, பிரிக்க முடியாத கூறுகளாகும். ஆனால், அதே போது ஒன்றுக்கொன்று பிரத்தியேகமான, பகைமை வாய்ந்த முனைகளாக ... அதாவது ஒரே தெரிவிப்பின் இரு துருவங்களாக... அவை இருக்கின்றன. அந்த தெரிவிப்பால் உறவுபடுத்தப்படும் இரு வேறு சரக்குகளுக்கும் அவை முறையே உரித்தாகின்றன.
ஒன்றுக்கொன்று சமமென கருதப்படுகிற இருவேறு வகைப்பட்ட சரக்குகளின் குறிப்பிட்ட அளவுகளிடையிலான விகிதாசாரம் தவிர வேறெதுவும் மதிப்புறவில் பார்க்கப்படுவதில்லை. வெவ்வேறு பொருட்களின் பருமன்களை ஒரே அலகின் பேரில் தெரிவிக்கும் போதுதான் அப்பருமன்களை அளவு வழியில் ஒப்பு நோக்க முடியும்.
ஒரு சட்டைக்கு இருபது கெஜம் துணியைச் சமதையாக்குவதன் மூலம் சட்டையில் உருக்கொண்ட உழைப்பை துணியில் உருக்கொண்ட உழைப்புக்குச் சமன் செய்கிறோம். வெவ்வேறு வகையான சரக்குகளிடையில் தெரிவிக்கப்படும் சமன்பாடுதான் மதிப்பைப் படைக்கும் உழைப்பின் குறிப்பான தன்மையை எடுப்பாகத் தெரியச் செய்கிறது. வெவ்வேறு வகையான சரக்குகளில் உருக்கொண்ட வெவ்வேறு விதமான உழைப்பை ஸ்தூலமற்ற மனித உழைப்பென்ற அவற்றின் பொதுப் பண்புக்கு உள்ளபடியே பெயர்ப்பதன் மூலம் இதைச் செய்கிறது.
இயங்குகின்ற மனித உழைப்புச் சக்தி, அதாவது மனித உழைப்பு, மதிப்பைப் படைக்கிறது; ஆனால் அதுவே மதிப்பன்று. ஒரு பொருளின் வடிவில் உருக்கொள்ளும் போது, அதன் இறுகிய நிலையிலேயே அது மதிப்பாகிறது.
சட்டை துணியின் சமதையாகவுள்ள மதிப்புச் சமன் பாட்டில், மதிப்பின் வடிவமென்ற வேலையை சட்டை செய்கிறது. துணி என்னும் சரக்கின் மதிப்பு சட்டை என்னும் சரக்கின் தசையுருவத்தால் தெரிவிக்கப்படுகிறது. ஒன்றின் மதிப்பு மற்றதன் பயன் மதிப்பால் தெரிவிக்கப்படுகிறது. பயன்..மதிப்பு என்ற விதத்தில், துணி சட்டைக்குக் கண்கூடாய் மாறுபட்ட ஒன்றாகும். மதிப்பு என்ற விதத்தில் அதுவும் சட்டையும் ஒன்றே.
இருபது கெஜம் துணியின் பெறுமானம் ஒரு சட்டை என்ற சமன்பாடானது, ஒரே அளவிலான மதிப்புச் சாரம் (இறுகிய உழைப்பு) இரண்டிலுமே உருக்கொண்டுள்ளது என்பதை, ஒரே அளவிலான உழைப்பு நேரத்திற்குரிய ஒரே அளவிலான உழைப்பு ஒவ்வொன்றுக்கும் செலவாகியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. ஆனால், இருபது கெஜம் துணி அல்லது சட்டையின் உற்பத்திக்கு அவசியமான உழைப்பு நேரம் நெசவு அல்லது தையலின் உற்பத்தித் திறனிலான ஒவ்வொரு மாற்றத்துக்குமேற்ப வேறுபடுகிறது.
எந்தச் சரக்கும் தனக்குத் தானே சமதையுறவில் நிற்கவும், இவ்வாறு தன் சொந்த தசையுருவத்தைத் தன் சொந்த மதிப்பின் தெரிவிப்பாக மாற்றிக்கொள்ளவும் முடியாது என்பதால், ஒவ்வொரு சரக்கும் தன் சமதையாக வேறொரு சரக்கைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது அவசியமாகிறது; அந்த வேறொரு சரக்கின் பயன்.. மதிப்பை, அதாவது தசையுருவைத் தன் சொந்த மதிப்புருவமாக அது ஏற்றுக் கொள்வதும் அவசியமாகிறது.
வெல்லக் கட்டியின் எடைத் தெரிவிப்பில், இரும்பானது இரு உருக்களுக்குமே பொதுவானதோர் இயற்கைக் குணத்தை, அதாவது அவற்றின் எடையைக் குறிக்கிறது. ஆனால் சட்டையோ, துணியின் மதிப்புத் தெரிவிப்பில், இரண்டினுடையவும் இயற்கையல்லாத ஒரு குணத்தை, முற்றிலும் சமூகத் தன்மை வாய்ந்த ஒன்றை, அதாவது அவற்றின் மதிப்பைக் குறிக்கிறது.
ஸ்தூலமான உழைப்பு அதன் எதிர்க் கூறாகிய ஸ்தூலமற்ற மனித உழைப்பின் புலப்பாட்டு வடிவமாகிறது என்பது சமதை வடிவத்தின் இரண்டாவது விசேஷ குணமாகும்.
ஆனால், இந்த ஸ்தூலமான உழைப்பு, நமது உதாரணத்தில் தையல், வேறுபாடற்ற மனித உழைப்பாகக் குறிக்கப் பெறுகிறது. அதனுடன் நேரடியாக ஒன்றென காணப்படுகிறது என்பதால் உழைப்பின் வேறெந்த வகையுடனும் முழுதொத்ததாக அது இடம் பெறுகிறது. அப்படியானால், சமதை வடிவத்தின் மூன்றாவது விசேஷ குணத்தை, அதாவது தனியாட்களின் உழைப்பு, வடிவத்தில் நேரடியாக சமூகத் தன்மையுள்ள உழைப்பென்னும் அதன் எதிர் கூறின் வடிவத்தை மேற்கொள்கிறது என்பதைப் பார்க்கிறோம்.
சரக்குகளுக்கு மதிப்பை உரித்தாக்குவது சமமான மனித உழைப்பாக உழைப்பனைத்தையும் தெரிவிக்கிற ஒரு முறைதான் என்பதைப் பார்க்கவிடாமல் அரிஸ்டாட்டிலை ஒரு முக்கிய நிலைமை தடுத்துவிட்டது. கிரேக்க சமுதாயம் அடிமை முறையை அடிப்படையாகக் கொண்டிருந்தது; எனவே மனிதர்களின் சமத்துவமின்மையையும் அவர்களது உழைப்புச் சக்திகளின் சமத்துவமின்மையையும் தன இயற்கை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
ஒரு சரக்கு பயன்..மதிப்பு அல்லது பயனுடைய பொருளாகவும், மதிப்பாகவும் உள்ளது. அதன் மதிப்பு சுயேச்சையான வடிவத்தை .. அதாவது பரிவர்த்தனை..மதிப்பின் வடிவத்தை மேற்கொண்டதுமே இந்த இரட்டைப் பொருளாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. அது தனித்திருக்கையில் ஒரு போதும் இந்த வடிவத்தை மேற்கொள்வதில்லை; ஆனால் வேறு வகையைச் சேர்ந்த இன்னொரு சரக்குடன் மதிப்புறவு அல்லது பரிவர்த்தனையுறவில் வைக்கப்படும் போதுதான் அது இவ்வடிவத்தை மேற்கொள்கிறது.
ஒரு சரக்கின் மதிப்பின் வடிவம் அல்லது தெரிவிப்பு என்பது மதிப்பின் இயல்பில் தோற்றமெடுக்கிறதே தவிர, மதிப்பும் அதன் பருமனும் பரிவர்த்தனை..மதிப்பென்ற அவற்றின் தெரிவிப்பு முறையில் தோற்றமெடுக்கவில்லை என்று நமது பகுப்பாய்வு காட்டுகிறது.
ஒரு பயனுள்ள பொருளின் உற்பத்தியில் செலவிடப்பட்ட உழைப்பு, அந்த பொருளின் புறவயப் பண்புகளில் ஒன்றாக, அதன் மதிப்பாகத் தெரிவிக்கப்படுகிற சகாப்தத்தில்தான், இத்தகையதோர் உற்பத்திப் பொருள் சரக்காகிறது.
ஒரு சரக்கின் ஆரம்ப ஒப்பீட்டு மதிப்பு வடிவத்துக்கு இணையாக மற்றுமொறு சரக்கின் ஒற்றை சமதை வடிவம் உள்ளது. ஆனாலும், மதிப்பின் ஆரம்ப வடிவம், எளியதொரு வளர்ச்சிபோக்கின் மூலம் இன்னும் முழுமையான வடிவத்தை அடைகிறது. வெவ்வேறு ஆரம்ப மதிப்புகள் கிடைக்கின்றன. மதிப்பு தெரிவிப்பை, அந்த மதிப்பினது வெவ்வேறு ஆரம்பத் தெரிவிப்புகளின் தொடராக எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டப்படுகிற தொடராக மாற்றிக் கொள்ளலாம்.
ஒரு சரக்கு தன் மதிப்பினது வடிவத்தின் அடிப்படையில், இனியும் வேறு ஒரே ஒரு வகைச் சரக்குடன் மட்டுமல்லாமல் சரக்குகளின் உலகு முழுவதுடனும் இப்போது ஒரு சமூக உறவு பூண்டு நிற்கிறது. சரக்கு என்ற முறையில் சரக்குலகின் பிரஜையாகும். அதே நேரத்தில், ஒரு சரக்கின் மதிப்பைப் பொறுத்த வரை, அது பயன்..மதிப்பின் எந்த குறிப்பான வடிவம் அல்லது வகையில் தோன்றுகிறது என்பதை இலட்சியம் செய்ய வேண்டியதில்லை என்பதை மதிப்புச் சமன்பாடுகளின் முடிவற்ற தொடர் உணர்த்துகிறது.
இரு தனிப்பட்ட சரக்கு உடைமையாளர்களிடையிலான தற்செயல் உறவு மறைந்து விடுகிறது. சரக்குகளது மதிப்பின் பருமனைக் கட்டுப்படுத்துவது அவற்றின் பரிவர்த்தனை அன்று; மாறாக அவற்றின் பரிவர்த்தனை விகிதங்களைக் கட்டுப்படுத்துவது அவற்றினது மதிப்பின் பருமனே என்பது தெளிவாகிறது.
இந்தச் சரக்குகள் ஒவ்வொன்றின் தசையுருவமும் பலவற்றில் ஒன்றான சமதை வடிவமாக, குறிப்பான ஒரு சமதை வடிவமாக இப்போது இடம் பெறுகிறது. அதே விதத்தில், இந்த வெவ்வேறு சரக்குகளில் உருக்கொண்ட உழைப்பின் பலதரப்பட்ட பயனுள்ள ஸ்தூல வகைகளும், வேறுபடுத்தப்படாத மனித உழைப்பின் ஈடேற்றம் அல்லது வெளிப்பாட்டின் வெவ்வேறான அத்தனை வடிவங்களாக இப்போது இடம் பெறுகின்றன.
ஒப்பீட்டு மதிப்புத் தெரிவிப்பு முழுமையற்றதாகும் ஏனெனில் அதைக் குறிக்கிற தொடர் முடிவற்றதாகும். இது தொடர்பும் சார்புமற்ற மதிப்புத் தெரிவிப்புகளின் பல்வண்ணச் சேர்க்கையாகும். ஏகத்தன்மையில் குறைபாடுள்ளதாகவும் இருக்கிறது.
சரக்குகள் மதிப்புகளாக நிலவுவது முற்றிலும் சமூக வழிப்பட்டதென்பதால், இந்தச் சமூக நிலவலை அவற்றின் சமூக உறவுகளில் ஒட்டுமொத்தத்தால் மட்டுமே தெரிவிக்க முடியும் என்பதும், ஆதலால் அவற்றினது மதிப்பின் வடிவம் சமூக வழியில் அங்கீகரிக்கப்பட்ட வடிவமாக இருக்க வேண்டுமென்பதும் தெளிவாகிறது.
சரக்குலகு முழுவதையும் தழுவி நிற்கும் பொதுவான ஒப்பீட்டு மதிப்பு வடிவம், மற்றவற்றிலிருந்து பிரிக்கப்பட்டுச் சமதையின் பாத்திரத்தை வகிக்குமாறு செய்யப்படுகிற தனிச் சரக்கை சர்வப் பொதுச் சமதையாக மாற்றி விடுகிறது.
மதிப்பு வடிவத்தின் இரு துருவங்களான ஒப்பீட்டு மதிப்பு வடிவத்துக்கும் சமதை வடிவத்துக்கும் இடையிலான பகைமை அந்த வடிவத்தோடு கூடவே ஏககாலத்தில் வளர்ச்சி பெறுகிறது.
சர்வப் பொதுச் சமதை வடிவம் பொதுவான மதிப்பு வடிவமாகும். எந்த சரக்கின் தசையுருவமானது சமதை வடிவம் என்று சமூக வழியில் இனங்காட்டப்படுகிறதோ, அந்த குறிப்பிட்ட சரக்கே பணச் சரக்காகிறது.
சரக்குலகிற்கான மதிப்புத் தெரிவிப்பில் இந்த பதவியை அது ஏகபோகமாக்கிக் கொண்டதுமே, பணச் சரக்காகி விடுகிறது. மதிப்பின் பொது வடிவம் பண வடிவமாக மாறி விடுகிறது..
No comments:
Post a Comment