எப்படி சமுதாயம் நுகர்வதை நிறுத்த முடியாதோ அதே போல் உற்பத்தி செய்வதையும் நிறுத்த முடியாது. எனவே, தொடர்புள்ள முழுமையாகவும், ஓயாமல் புதுப்பிக்கப்பட்டுச் செல்வதாகவும் நோக்கப்படும் போது, சமுதாய பொருளுற்பத்தி நிகழ்முறை ஒவ்வொன்றும் அதே போது மறுவுற்பத்தி நிகழ்முறையும் (process of reproduction) ஆகும். உற்பத்தி நிலைமைகள் அதே போது மறுவுற்பத்தி நிலைமைகளுமாகும்.
ஒவ்வொரு ஆண்டின் உற்பத்திப் பண்டத்திலும் குறிப்பிட்ட பகுதி உற்பத்தித் துறைக்கு உரியதாகும். திறனுடை நுகர்வுக்கு (productive consumption) உரியதாய் ஆரம்பமுதற்கொண்டே அமைந்த இப்பகுதி, பெரும்பாலும் சொந்த நுகர்வுக்கு சிறிதும் பொருந்தாத பண்டங்களாய் இருப்பதாகும்.
உற்பத்தியானது முதலாளித்துவ வடிவமுடையதாய் இருந்தால் மறுவுற்பத்தியும் அவ்வாறே இருக்கும். உழைப்பு நிகழ்முறையானது எப்படி உற்பத்தியில் மூலதனத்தின் தற்பெருக்கத்துக்கான (self expansion) வழிவகையாகவே இடம் பெறுகிறதோ, அதே போல் மறுவுற்பத்தியில் முன்னீடு செய்யப்படும் மதிப்பை மூலதனமாக --- அதாவது தற்பெருக்கமடையும் மதிப்பாக --- மறுவுற்பத்தி செய்வதற்கான வழிவகையாகவே இடம் பெறுகிறது.
மூலதனத்தின் காலவட்டப் பலன் என்ற முறையில் உபரி-மதிப்பு என்பது மூலதனத்திலிருந்து பிறக்கிற வருவாயின் வடிவத்தைப்பெறுகிறது. இந்த வருவாய் கால வட்ட முறையில் செலவிடப்பட்டுவிட்டால், மற்றவை மாறாதிருக்க, சாமானிய மறுவுற்பத்தி --- அதன் பழைய அளவுவீதத்தில் --- நடைபெறும்.
நிர்ணயமான காலத்துக்கு உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குவது உற்பத்தி நிகழ்முறையின் பீடிகை ஆகும். இந்தப் பீடிகை திரும்பத் திரும்ப நிகழ்த்தப்படுகிறது. ஆனால், தொழிலாளி அவரது உழைப்புச் சக்தியைச் செலவிட்டு அதன் மதிப்பை மட்டுமல்லாமல் உபரி-மதிப்பையும் சரக்குகளில் ஈடேற்றம் பெறச் செய்யும் வரை அவருக்கு ஊதியம் அளிக்கப்படுவதில்லை. ஆகவே, அவர் உபரி-மதிப்பை மட்டுமல்லாமல் அவருக்கு ஊதியமளிப்பதற்கான நிதியையும், அதாவது மாறும்-மூலதனத்தையும் உற்பத்திச் செய்கிறார்.
இந்த வாரம் அல்லது இந்த வருடம் அவரது உழைப்புச் சக்திக்கு விலையாகப் பெறுவது அவரது சென்ற வாரத்திய அல்லது சென்ற வருடத்திய உழைப்பே. பணத்தின் குறுக்கீட்டால் ஏற்படுகிற மாயத் தோற்றமானது, நாம் தனியொரு முதலாளிக்கும் தனியொரு தொழிலாளிக்கும் பதிலாக முதலாளிகளின் வர்க்கம் முழுவதையும் தொழிலாளி வர்க்கம் முழுவதையும் எடுத்துக் கொண்டதுமே மறைந்து போகிறது. தொழிலாளி வர்க்கத்தால் உற்பத்தி செய்யப்பட்டு முதலாளி வர்க்கத்தால் தனதாக்கப்படும் சரக்குகளில் ஒரு பகுதியைப் பெறுவதற்கான ஆணைச் சீட்டுகளையே முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கத்துக்கு பண வடிவில் தொடர்ச்சியாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
மாறும்-மூலதனம் என்பது தொழிலாளிக்கு வேண்டிய அவசிய வாழ்க்கைத் தேவைகளுக்கு வகை செய்வதற்கான நிதியம். இந்நிதியம் அவரது உழைப்புக்கு ஊதியமளிக்கும் பணத்தின் வடிவத்தில் இடையறாது அவரிடம் வருகிறதென்றால் அவர் படைக்கும் உற்பத்திப் பொருள் மூலதனத்தின் வடிவில் இடையறாது அவரை விட்டு விலகிச் செல்வதே இதற்கு காரணம். ஆனால், உற்பத்திப் பண்டத்தில் ஈடேற்றம் பெற்றுள்ள தொழிலாளியின் உழைப்புதான் முதலாளியால் அவரிடம் முன்னீடு செய்யப்படுகிறது என்ற உண்மையை இதெல்லாம் மாற்றிவிடுவதில்லை.
முதலாளி தாம் பிறரின் ஊதியமிலா உழைப்பின் உற்பத்தியை, அதாவது உபரி-மதிப்பை நுகர்ந்து கொண்டிருப்பதாகவும், தமது ஆரம்ப மூலதனத்தை அப்படியே பாதுகாத்து வைத்திருப்பதாகவும் நினைக்கிறார்; ஆனால் அவர் அப்படி நினைப்பதாலேயே இது உண்மையாகிவிடமுடியாது. சில ஆண்டுகள் கழிந்த பின்னர் அவர் பெற்றிருக்கும் மூலதனத்தின் மதிப்பு அந்த ஆண்டுகளில் அவரால் தனதாக்கப்பட்ட உபரி-மதிப்பின் மொத்தத் தொகைக்குச் சமமாகும்; அவர் நுகர்ந்திருக்கும் மொத்த மதிப்பு அவரது ஆரம்ப மூலதனத்தின் மதிப்புக்குச் சமமாகும். அவரது பழைய மூலதனத்தின் மதிப்பில் ஓரணுவும் இப்போது இல்லை.
உழைப்பை அதன் உற்பத்திப் பொருளிடமிருந்து --- உழைப்பவரின் உழைப்புச் சக்தியை உழைப்பதற்கு அவசியமான எதார்த்த நிலைமைகளிட்மிருந்து --- பிரிப்பதுதான் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் மெய்யான அடித்தளமும் தொடக்கமும் ஆகும்.
உற்பத்தி நிகழ்முறையானது பொருட் செல்வத்தை ஓயாமல் மூலதனமாக மாற்றுகிறது; அதாவது மேலும் மேலும் கூடுதலான செல்வத்தைப் படைக்கும் சாதனமாகவும், முதலாளியின் அனுபோகத்துக்கான சாதனமாகவும் மாற்றுகிறது. மறு புறம் தொழிலாளியோ உற்பத்தி நிகழ் முறையில் நுழைந்த போது இருந்த அதே நிலையில்தான் அதை விட்டு வெளியேறும் போதும் இருக்கிறார்; அதாவது செல்வத்தின் தோற்றுவாயாக இருப்பினும் அந்தச் செல்வத்தை தம்முடையதாக்கிக் கொள்வதற்கான எந்த சாதனமும் இல்லாதவராகவே இருக்கிறார், உற்பத்தி நிகழ் முறையில் நுழையுமுன்னரே தொழிலாளி தமது உழைப்புச் சக்தியை விற்று, தமது உழைப்பைத் தமது உடைமையிலிருந்து நீக்கிக் கொண்டுவிடுகிறார்; ஆகவே உற்பத்தி நிகழ்முறையின் போது அவ்வுழைப்பு தொழிலாளிக்குச் சொந்தமில்லாத உற்பத்திப் பண்டத்தில்தான் ஈடேற்றம் பெற வேண்டியிருக்கிறது.
தொழிலாளி புறவயப் பொருட் செல்வத்தை ஓயாமல் உற்பத்தி செய்கிறார்; ஆனால் மூலதனத்தின் வடிவில்தான். இதே போல் முதலாளியும் உழைப்புச் சக்தியை உற்பத்தி செய்கிறார்; தொழிலாளியை உற்பத்தி செய்கிறார். ஆனால் கூலித் தொழிலாளியாகத்தான்.
தொழிலாளி இரு விதங்களில் நுகர்கிறார். உற்பத்தி செய்யும்போது தமது உழைப்பால் உற்பத்திச் சாதனங்களை நுகர்ந்து முன்னீடு செய்யப்பட்ட மூலதனத்தின் மதிப்பை விட அதிக மதிப்புள்ள உற்பத்திப் பண்டங்களாக அவற்றை மாற்றுகிறார். இது அவருடைய திறனுடை நுகர்வு (productive consumption) ஆகும். அதே நேரத்தில் இது அவரது உழைப்புச் சக்தியை வாங்கிய முதலாளி அதனை நுகர்கிற நுகர்வுமாகும். மறு புறம், தொழிலாளி தனது உழைப்புச் சக்திக்காகத் தரப்பட்ட பணத்தை வாழ்வுச் சாதனங்களாக மாற்றுகிறார். இது அவரது சொந்த நுகர்வு (individual consumption) ஆகும்.
அவர் தமது உழைப்புச் சக்தியைப் பராமரித்து கொள்ளும் பொருட்டு அவசியப் பண்டங்களைத் தமக்கு தாமே கிடைக்கச் செய்து கொள்கிறார். அந்நிலையில் அவரது நுகர்வுச் சாதனங்கள் உற்பத்திச் சாதனங்களில் ஒன்றுக்கு அவசியமான நுகர்வுச் சாதனங்களாகிவிடுகின்றன. அவரது சொந்த நுகர்வு நேரடியாகத் திறனுடை நுகர்வாகி விடுகிறது.
முதலாளி தனது மூலதனத்தின் ஒரு பகுதியை உழைப்புச் சக்தியாக மாற்றுவதன் மூலம், தனது முழு மூலதனத்தின் மதிப்பையும் பெருகச் செய்கிறார். ஒரே கல்லால் இரு மாங்காய் அடிக்கிறார். தொழிலாளியிடமிருந்து தான் பெறுவதைக் கொண்டு மட்டுமல்லாமல், தொழிலாளிக்குத் தான் கொடுப்பதைக் கொண்டும் இலாபமடைகிறார்.
கண்டிப்பான அவசியத்தின் வரம்புகளுக்குள், தொழிலாளி வர்க்கத்தின் சொந்த நுகர்வு என்பது, உழைப்புச் சக்திக்கு விலையாக முலதனம் கொடுத்த வாழ்வுச் சாதனங்களை மூலதனத்தின் சுரண்டலுக்குப் பயன்படவல்ல புதிய உழைப்புச் சக்தியாக திரும்பவும் மாற்றுவதாகும்.
பட்டறையினுள் நடந்தாலும் சரி, வெளியே நடந்தாலும் சரி, உற்பத்தி நிகழ்முறையைச் சேர்ந்திருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, தொழிலாளியின் சொந்த நுகர்வு என்பது மூலதனத்தின் உற்பத்தியிலும் மறுவுற்பத்தியிலும் ஒரு காரணியாகிறது.
பொதி சுமக்கும் குதிரை தீனி தின்பது உற்பத்தி நிகழ்முறைக்கு அவசியமானது. குதிரை சுவைத்துத் தின்கிறது என்பதால் இந்த அவசியம் சிறிதும் குறைந்து விடுவதில்லை. தொழிலாளி வர்க்கப் பராமரிப்பும் மறுவுற்பத்தியும் மூலதன மறுவுற்பத்திக்கு அவசிய நிபந்தனையாக இருக்கிறது; எக்காலும் இருந்தே தீரும்.
முதலாளியும் அவரது அரசியல் பொருளாதார அறிஞரும் தொழிலாளியின் சொந்த நுகர்வின் எந்த பகுதி தொழிலாளி வர்க்கத்தை நிலைத்து நீடிக்கச் செய்வதற்கு அவசியமானதோ, முதலாளி நுகர்வதற்கு உழைப்புச் சக்தி வேண்டுமானால் எந்தப் பகுதி இன்றியமையாததோ அந்தப் பகுதியை மட்டும் திறனுடை நுகர்வாகக் கருதுகின்றனர். அந்தப் பகுதிக்கும் மேலே தொழிலாளி தனது மனநிறைவுக்காக நுகர்வது திறனிலா நுகர்வு என்கின்றனர்.
எதார்த்தத்தில் தொழிலாளியின் சொந்த நுகர்வு அவரைப் பொறுத்த வரை திறனிலா நுகர்வே; ஏனென்றால், தேவைகளால் வாடும் தனியாளைத்தான் அது மறுவுற்பத்தி செய்கிறது. வேறொன்றையும் அல்ல. ஆனால், முதலாளிக்கும் அரசுக்கும் அது திறனுடை நுகர்வாகும். ஏனென்றால் அவர்களின் செல்வத்தைப் படைக்கும் சக்தியை அது உற்பத்தி செய்கிறது.
ரோமானிய அடிமை சங்கிலிகளால் பூட்டப்பட்டிருந்தான்; கூலித் தொழிலாளி கண்ணுக்குப் புலப்படாத இழைகளால் தனது அதிபரோடு கட்டுண்டிருக்கிறான்.
முதலாளித்துவ பொருளுற்பத்தி நிகழ்முறையே தொழிலாளியைத் தனது உழைப்புச் சக்தியை விற்க வேண்டியவராக ஓயாமல் திரும்பத் திரும்ப சந்தைக்கு அனுப்புகிறது.
அவர் அப்போது தன்னைத் தானே விற்றுக் கொள்வதும், தனது அதிபர்களை மாற்றிக் கொள்வதும், உழைப்புச் சக்தியின் சந்தை விலையில் ஏற்படுகிற அலைவுகளும் அவரது பொருளாதாரக் கொத்தடிமை நிலையை உண்டாக்குவதோடு கண்ணுக்குத் தெரியாமல் அதனை மறைத்திடவும் செய்கின்றன.
முதலாளித்துவப் பொருளுற்பத்தியானது முதலாளித்துவ உறவை --- ஒரு பக்கம் தொழிலாளியையும் மறு பக்கம் கூலித் தொழிலாளியையும் --- அது உற்பத்தியும் மறுவுற்பத்தியும் செய்கிறது.
//உற்பத்தி நிகழ்முறையானது பொருட் செல்வத்தை ஓயாமல் மூலதனமாக மாற்றுகிறது; அதாவது மேலும் மேலும் கூடுதலான செல்வத்தைப் படைக்கும் சாதனமாகவும், முதலாளியின் அனுபோகத்துக்கான சாதனமாகவும் மாற்றுகிறது. மறு புறம் தொழிலாளியோ உற்பத்தி நிகழ் முறையில் நுழைந்த போது இருந்த அதே நிலையில்தான் அதை விட்டு வெளியேறும் போதும் இருக்கிறார்; அதாவது செல்வத்தின் தோற்றுவாயாக இருப்பினும் அந்தச் செல்வத்தை தம்முடையதாக்கிக் கொள்வதற்கான எந்த சாதனமும் இல்லாதவராகவே இருக்கிறார், உற்பத்தி நிகழ் முறையில் நுழையுமுன்னரே தொழிலாளி தமது உழைப்புச் சக்தியை விற்று, தமது உழைப்பைத் தமது உடைமையிலிருந்து நீக்கிக் கொண்டுவிடுகிறார்; //
ReplyDeleteவண்ணக்கதிர் 26/02/3014 ல் வெளியாகியுள்ள மன்னை செந்திலின் கவிதை இந்த வரிகளுக்கு பொருத்தமாக இருக்கிறது.
எந்த மரம்..
தருகிறதென்று தெரியவில்லை
எனக்கான மூச்சுக் காற்றை
யார் நெய்வார்கள்
எனக்கான சட்டையை..
யார் நட்ட மரமோ
என்னுள் போன பழத்திற்கு..
விதைத்தவனையும்..
அறுத்தவனையும் தெரிவிக்கவில்லை
நான் கொண்ட நெல் மணிகள்..
பிடித்தவனின்
பெயர் பொறிக்கப்படவில்லை
பதப்படுத்திய மீனில்..
மூச்சடக்கியவனின்
பெயர் தெரியாது
முத்து மாலையில்..
வீணையின் ஸ்வரமும்..
மீட்டுபவரும் அறியவில்லை
செய்தவன் பெயரை..
இசைகள் சொல்லப்போவதில்லை
புல்லாங்குழல் தந்திட்ட
மூங்கிலைப் பற்றியும்
செய்திட்ட கைகள் பற்றியும்..
பியானோ
வாசிக்கின்ற விரல்களுக்கு மரியாதை
செய்திட்ட கரங்களுக்கு இல்லை
நிழல்கள் நேசிக்கப்படும்
நிஜங்கள் நசுக்கப்படும்..
உருவாக்கும் விரல்களுக்கு
தேவையெல்லாம்
ஒரு கவளம்தானா?