மூலதனமாக மாற்றப்படவுள்ள பணத்தின் மதிப்பில் மாற்றம் ஏற்படுகிறது; ஆனால் இந்த மதிப்பு மாற்றம் அந்தப் பணத்தினாலேயே ஏற்படுவதாக இருக்க முடியாது.
அது போலவே சுற்றோட்டத்தின் இரண்டாவது செயலான சரக்கின் மறுவிற்றலிலும் அது தோற்றமெடுக்க முடியாது
எனவே, மாற்றம் நடைபெற வேண்டியது ப .. ச என்ற முதற் செயலின் மூலம் வாங்கப்படுகிற சரக்கிலேயே தவிர, அதன் மதிப்பில் அன்று.
எனவே மாற்றம் சரக்கின் பயன்..மதிப்பிலேயே, அதாவது அதன் நுகர்வில் தோற்றமெடுக்கிறது. அப்படி ஒரு சரக்கு சுற்றோட்டத் துறைக்குள் சந்தையில் இருக்க வேண்டும். அந்த சரக்கின் பயன்..மதிப்பு மதிப்பின் தோற்றுவாயாக விளங்கும் சிறப்பியல்புடையதாக இருக்க வேண்டும்; அதன் நுகர்வென்னும் செயலே உழைப்பின் பொருளாக்கமாகவும், ஆதலால் மதிப்பின் உருவாக்கமாகவும் பொருளாக்கமாகவும் இருக்க வேண்டும். பணத்தை வைத்திருப்போர் இத்தகைய ஒரு தனிவகைச் சரக்கு உழைக்கும் திறன் அல்லது உழைப்புச் சக்தியின் உருவில் சந்தையில் இருக்கக் காண்கிறார்.
உழைப்புச் சக்தியை பெற்றிருப்போர் அந்த உழைப்புச் சக்தியை ஒரு சரக்காக விற்பனைக்கு முன் வைக்கவோ விற்கவோ செய்தால்தான் உழைப்புச் சக்தி ஒரு சரக்காக சந்தைக்கு வர முடியும். அவர் இதைச் செய்யவேண்டுமானால், அதை தன் இஷ்டத்துக்குப் பயன்படுத்தும் நிலையில் இருக்க வேண்டும், தன் உழைக்கும் திறனின், அதாவது தன் சரீரத்தின் வில்லங்கமற்ற உடைமையாளராக இருக்க வேண்டும். திட்டமான காலத்துக்கு மட்டுமே உழைப்புச் சக்தியின் உடைமையாளர் அதை விற்க வேண்டுமென்பது அவசியமாகிறது.
அந்த உழைப்பாளி உழைப்புச் சக்தியை ஒரு சரக்காக விலைக்கு கொடுக்கும் கட்டாயத்துக்கு ஆளாக வேண்டும்.
சுதந்திர மனிதர் என்ற விதத்தில் தன் உழைப்புச் சக்தியை தன் சொந்தச் சரக்காக விற்கக்கூடிய அவர், மறுபுறம் விற்பதற்கு வேறு சரக்கேதும் இல்லாதவரும் தன் உழைப்புச் சக்தியை ஈடேற்றிக் கொள்வதற்கு அவசியமான எதுவுமே இல்லாதவரும் ஆவார் என்ற விதத்தில் அந்த உழைப்பாளியை சுதந்திர உழைப்பாளி என்கிறோம்.
இயற்கை ஒரு பக்கத்தில் பணம் அல்லது சரக்குகளின் உடைமையாளர்களையும் மறு பக்கத்தில் தம் சொந்த உழைப்புச் சக்தியை தவிர வேறு ஏதும் இல்லாதவர்களையும் படைப்பதில்லை. அது கடந்த கால வரலாற்று வளர்ச்சியின் விளைவு, பல பொருளாதார புரட்சிகளின் பலன் என்பது தெளிவு
மூலதனம் இருப்பதற்கு பணம், சரக்குகள் இவற்றின் சுற்றோட்டம் மட்டுமே எவ்விதத்தும் போதுமான வரலாறு நிலைமைகள் ஆவதில்லை. உற்பத்திச் சாதனங்கள், வாழ்வுச் சாதனங்கள் ஆகியவற்றின் உடைமையாளர் உழைப்புச் சக்தியை விற்கிற உழைப்பாளியைச் சந்தையில் சந்திக்கும் போதே மூலதனம் உதித்தெழமுடியும். இந்த ஒரு வரலாற்று நிலைமையில் ஒரு உலகின் வரலாறே அடங்கியுள்ளது. எனவே மூலதனத்தின் உதயம் சமுதாய பொருளுற்பத்தி நிகழ் முறையில் ஒரு புதிய சகாப்தத்தையே பறைசாற்றுகிறது.
ஒவ்வொரு சரக்கின் மதிப்பையும் போலவே, உழைப்புச் சக்தியின் மதிப்பும் இந்தத் தனிவகைப் பண்டத்தின் உற்பத்திக்கும், ஆகவே மறுவுற்பத்திக்கும் கூட அவசியமான உழைப்பு நேரத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.
உழைப்புச் சக்தியின் மதிப்பு என்பது உழைப்பாளியின் பராமரிப்புக்கு அவசியமான வாழ்வுச் சாதனங்களின் மதிப்பே. உழைப்புச் சக்தியின் உற்பத்திக்கு அவசியமான வாழ்வுச் சாதனங்களின் மொத்த அளவில் உழைப்பாளியின் பதிலிகளுக்கு, அதாவது அவரது குழந்தைகளுக்கு அவசியமான வாழ்வுச் சாதனங்களும் அடங்கியிருத்தல் வேண்டும்.
மனித உயிரமைப்பு ஒரு குறிப்பிட்ட தொழிற் கிளையில் தேர்ச்சியும் கைத்திறனும் பெற்று தனி வகை உழைப்புச் சக்தியாகும்படி அதனை திருத்தியுமைக்கும் பொருட்டு, தனிவகைக் கல்வி அல்லது பயிற்சி தேவைப்படுகிறது. இதற்கு குறிப்பிட்ட அளவு சரக்குகளாலாகிய ஒரு சமதை செலவாகிறது. இந்த கல்விக்கு ஆகும் செலவுகள் உழைப்புச் சக்தியின் உற்பத்திக்காகச் செலவிடப்படும் மொத்த மதிப்பில் ஒரு பகுதி ஆகின்றன.
ஆக, உழைப்புச் சக்தியின் மதிப்பு என்பது குறிப்பிட்ட அளவிலான வாழ்வுச் சாதனங்களின் திட்டமான மதிப்பாகிவிடுகிறது. உழைப்புச் சக்தியின் உற்பத்திக்கு நாள்தோறும் தேவைப்படும் சரக்குகளின் திரளில் 6 மணி நேர சமுதாய உழைப்பு உருக்கொண்டிருப்பதாகக் கொண்டால், ஒரு நாளைய உழைப்புச் சக்தியில் அரை நாள் சராசரி சமுதாய உழைப்பு அடங்கும் என்றாகிறது, உழைப்பின் இந்த அளவு ஒரு நாள் உழைப்புச் சக்தியின் மதிப்பாக அல்லது அன்றாடம் மறு உற்பத்தி செய்யப்படும் உழைப்புச் சக்தியின் மதிப்பாக அமைகிறது.
உழைப்புச் சக்தி என்ற இந்தத் தனிவகைச் சரக்கினை வாங்குபவர் பரிவர்த்தனையில் பெறுகிற பயன்..மதிப்பு உழைப்புச் சக்தியின் நடைமுறை அனுபோகத்திலேயே, நுகர்விலேயே வெளிப்படுகிறது. உழைப்புச் சக்தியின் நுகர்வு என்பது ஒருங்கே சரக்குகளின் உற்பத்தியும், உபரி..மதிப்பின் உற்பத்தியும் ஆகும். எந்தவொரு சரக்கின் நுகர்வையும் போலவே, உழைப்புச் சக்தியின் நுகர்வும் சந்தையின் அல்லது சுற்றோட்டத் துறையின் எல்லைகளுக்கு வெளியே பூர்த்தியாகிறது.
No comments:
Post a Comment