தொழிலாளிக்கும் இயந்திரத்துக்கும் இடையிலான போர்
முதலாளிக்கும் கூலித் தொழிலாளிக்கும் இடையிலான போராட்டம் மூலதனத்தின் பிறப்பிலிருந்தே நடப்பதாகும். பட்டறைத் தொழிற் காலம் முழுவதிலும் அது நடந்த வண்ணமிருந்தது. ஆனால் இயந்திர சாதனம் புகுத்தப்பட்ட பின்னர்தான், மூலதனத்தின் பொருளாயத வடிவமாகிய உழைப்புச் சாதனத்துகெதிராகவே தொழிலாளி போராடினார். உற்பத்திச் சாதனங்களின் இந்த குறிப்பிட்ட வடிவமே முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையின் பொருளாயத அடிப்படையாக உள்ளதென்ற விதத்தில் அதற்கெதிராக அவர் கிளர்ந்தெழுந்தார்.
17 ஆம் நூற்றாண்டில் ரிப்பன் தறிக்கு எதிரான தொழிலாளர் கிளர்ச்சிகளை அநேகமாய் ஐரோப்ப முழுவதுமே கண்டது. இந்த இயந்திரங்கள் ஜெர்மனியில் கண்டு பிடிக்கப்பட்டவை.
ஐரோப்பாவையே ஆட்டங்காணச் செய்த இந்த இயந்திரமானது, உண்மையில் மியூல், விசைத்தறி ஆகியவற்றுக்கும் 18ஆம் நூற்றாண்டின் தொழிற் புரட்சிக்கும் முன்னோடியாயிற்று. மேலும் மேம்படுத்தப்பட்ட நிலையில், அது ஒரே நேரத்தில் 40 முதல் 50 உருப்படிகளை உற்பத்தி செய்தது.
1630 வாக்கில் டச்சுக்காரர் ஒருவர் லண்டன் அருகே நிறுவிய காற்றுவிசை அறுவை ஆலை ஒன்று மக்களின் அத்துமீறிய அடாச் செயல்களுக்குப் பலியாயிற்று. 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட, நீர்விசை அறுவை ஆலைகள், பாராளுமன்றத்தின் ஆதரவு இருந்த போதிலும், பெருஞ்சிரமத்துடந்தான் மக்களின் எதிர்ப்பைச் சமாளித்தன. 1758இல் எவரெட், நீர்விசையால் இயங்கும் கம்பளி வெட்டும் இயந்திரத்தை முதன் முதல் நிறுவியதுமே, அதனால் வேலையிலிருந்து துரத்தப்பட்ட ஒரு லட்சம் மக்கள் அதனைத் தீயிட்டுக் கொளுத்தினர்.
இந்நூற்றாண்டின் முதல் 15 ஆண்டுகளில், பிரதானமாக விசைத்தறியின் உபயோகத்தைத் தொடர்ந்து, ஆங்கிலேய ஆலைத் தொழில் வட்டங்களில் இயந்திரங்கள் பெரிய அளவில் அழிக்கப்பட்டன. இது லுட்டைட் இயக்கமென (Luddite movement) பெயர் பெற்றது.
இயந்திர சாதனத்தையும், அதனை மூலதனம் கையாள்வதையும் தொழிலாளர்கள் வேறுபடுத்திப் பார்ப்பதற்கும், தமது தாக்குதல்களைப் பொருளாயத உற்பத்திக் கருவிகளுக்கு எதிராக அல்லாமல் அக்கருவிகள் பயன்படுத்தப்படும் முறைக்கெதிராகத் தொடுப்பதற்கும் கற்றுக் கொள்வதற்கு காலமும் அனுபவமும் தேவைப்பட்டன.
பட்டறைத் தொழிலில் கூலி குறித்து எழும் போராட்டங்கள் பட்டறைத் தொழிலை நிராகரிப்பவை அல்ல. புதிய பட்டறைத் தொழில் நிறுவுவதற்கு எதிர்ப்புக் கிளம்புவது கைவினைச் சங்கங்களிடமிருந்தும், தனிச் சலுகைப் பெற்ற நகரங்களிடமிருந்தும்தான்; உழைக்கும் மக்களிடமிருந்தல்ல.
இங்கிலாந்தில் விசைத் தறி எட்டு லட்சம் தொழிலாளர்களைத் தெருவில் நிறுத்தியது என்று நாம் சொல்லும்போது, இப்போதிருக்கிற இயந்திர சாதனத்துக்குப் பதிலாக இத்தனைத் தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள் என்பதல்ல, உள்ளபடியே இத்தறிகள் ஏராளமான நெசவாளர்களை நீக்கின அல்லது வெளியேற்றின என்பதே இதன் அர்த்தம்.
மத்திய காலத்திலிருந்து வந்த நகரத் தொழிலாளர்கள் ஒப்பளவில் சிறு தொகையினராய் இருந்ததால் புதிய குடியேற்றச் சந்தைகளின் (colonial markets) வேண்டல்களை நிறைவு செய்ய முடியவில்லை. அதே நேரத்தில், பட்டறைகளிலான உழைப்புப் பிரிவினையும், கூட்டு..வேலையும் உழைப்போரின் உற்பத்தித் திறனை உயர்த்துகின்றன என்ற முறையில் அனுகூலமே மேலோங்கி இருப்பதாகக் கருதப்பட்டது.
உழைப்புக் கருவி இயந்திர வடிவம் பெற்றதும், உடனடியாக அது தொழிலாளிக்குப் போட்டியாளனாகிறது. இயந்திர சாதனத்தின் விளைவாய் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் வாழ்வுச் சாதனங்களைப் பறிகொடுக்க நேரிடுகிறது; இயந்திர சாதனத்தைக் கொண்டு மூலதனம் அடைகிற தற்பெருக்கம் இப்படி பறிகொடுக்கும் தொழிலாளர் தொகைக்கு நேர் விகிதத்தில் நடைபெறுகிறது.
உழைப்புப் பிரிவினையானது இந்த உழைப்புச் சக்தியை குறிப்பிட்ட ஒரு கருவியைக் கையாள்வதற்கு மட்டுமேயான தேர்ச்சியாக குறுக்கி அதைத் தனித்திறனுடையதாக்குகிறது. இந்தக் கருவியைக் கையாள்வது இயந்திரத்தின் வேலையாகியதுமே தொழிலாளியின் உழைப்புச் சக்தியினது பயன்..மதிப்போடு பரிவர்த்தனை..மதிப்பும் மறைந்து போகிறது.
இயந்திரச் சாதனத்தால் இவ்வாறு தேவைக்கதிகமானதாக்கப்படுகிற, அதாவது மூலதனத்தின் தற்பெருக்கத்துக்கு இனியும் உடனடி அவசியம் இல்லாததாக்கப்படுகிற தொழிலாளி வர்க்கப் பகுதி பழைய கைத்தொழில்களும் பட்டறைத் தொழில்களும் இயந்திர சாதனத்துடன் நடத்தும் அசமத்துவப் போட்டியில் ஒழிந்து போகிறது; அல்லது எளிதில் நுழையக் கூடிய தொழிற் கிளைகள் யாவற்றிலும் பெருக்கெடுத்து, உழைப்புச் சந்தையை மூழ்கடித்து, உழைப்புச் சக்தியின் விலையை அதன மதிப்புக்கும் கீழானதாக வீழ்த்துகிறது.
மாற்றம் துரிதமாக நடைபெறுமிடத்து, விளைவு கடுமையானதாகவும், பெருந்திரளான மக்களைப் பீடிப்பதாகவும் உள்ளது. ஆங்கிலேய கைத்தறி நெசவாளர்கள் சிறுகச் சிறுக நசிந்து போனதை விட பயங்கரமான ஒன்றை வரலாறு கண்டதில்லை; பலர் பட்டினி கிடந்து மடிந்தனர். பலர் குடும்பம் முழுவதற்கும் நாளொன்றுக்குக் கிடைத்த 2 1/2 பென்னியில் நெடுநாள் வதைந்து நசித்துப் போயினர்.
உழைப்புச் சாதனம் தொழிலாளியை வீழ்த்துகிறது. நவீனத் தொழில் துறையிலும் கூட இயந்திர சாதனத்தின் தொடர்ச்சியான மேம்பாடும், தானியங்கி முறையின் வளர்ச்சியும் இதையொத்த விளைவை உண்டாக்குகின்றன.
ஒரு குறிப்பிட்ட பலனை உற்பத்தி செய்யும் பொருட்டு முன் போல அதே அளவு வயது வந்தோர் உழைப்பை அமர்த்துவதற்கான அவசியத்தை நீக்குவதில் மட்டுமின்றி, ஒருவித மனித உழைப்புக்குப் பதில் இன்னொரு வித மனித உழைப்பை ... அதிகம் தேர்ச்சி பெற்ற உழைப்புக்கு பதிலாகக் குறைவாக தேர்ச்சி பெற்ற உழைப்பை ... ஈடுபடுத்துவதிலும் இயந்திர மேம்பாடுகள் ஏற்படுத்தும் விளைவு கூலி வீதத்தில் புதியதொரு குழப்பத்தை தோற்றுவிக்கிறது.
சாதாரண மியூலுக்கு பதிலாகத் தன்னியக்க மியூலைக் கொணர்வதன் விளைவு ஆண் நூற்பாளர்களில் பெரும் பகுதியினரை வேலையிலிருந்து வெளியேற்றி விட்டு, இளம் பிராயத்தினரையும் குழந்தைகளையும் மட்டும் வைத்துக் கொள்வதாகும்.
இயந்திர சாதனம் தொழிலாளியை விஞ்சி விடும் போட்டியாளனாகச் செயல்படுகிறது, இடையறாது அவரைத் தேவையற்றவராக்கும் நிலையிலுள்ளது.
நீராவி எஞ்சின் ஆரம்ப முதலே மனித சக்தியின் எதிராளியாக இருந்தது. புதிதாய் பிறந்த ஆலைத் தொழில் நெருக்கடிக்கு ஆளாகும் படி அச்சுருத்திய தொழிலாளர்களின் வளர்ந்தெழும் கோரிக்கைகளை முதலாளி காலுக்கடியில் மிதிப்பதற்கு உதவிய எதிராளி அது.
நீராவிச் சுத்தியலைக் கண்டுபிடித்தவரான நாஸ்மித் பின் வருமாறு தொழிற்சங்க ஆணையித்தின் முன் சாட்சியம் அளிக்கிறார். "எமது நவீன இயந்திர மேம்பாடுகளின் தனிச்சிறப்பான அமிசம், தன்னியக்கக் கருவி..இயந்திர சாதனம் (self-acting tool machinery) புகுத்தப்படுவதாகும். இப்போது ஒவ்வொரு தொழிலாளியும் செய்ய வேண்டியிருப்பது தானே உழைப்பதன்று. இயந்திரத்தின் அழகிய உழைப்பைக் கண்காணிப்பதே"
தான் கூலிக்கமர்த்தும் விஞ்ஞானத்தின் துணை கொண்டு மூலதனம் உழைப்பின் முரட்டுக் கரத்தை எப்போதுமே பணிந்து இயங்கச் செய்கிறது. ஏனெனில் "அது (பௌதிக இயந்திர விஞ்ஞானம்) ஏழைகளை வருத்துவதற்கான ஆயுதமாகப் பணக்கார முதலாளிக்கு சேவை புரிவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது"
No comments:
Post a Comment