Monday, January 27, 2014

பாகம்: 2 பகுதி: 1 அத்தியாயம் 1: பண-மூலதனத்தின் சுற்று. இரண்டாம் கட்டம்

திறனுடை-மூலதனத்தின் பணி

உழைப்புச் சக்தியின் பயனாகிய உழைப்பை உழைப்பு நிகழுமுறையில்தான் பொருள் வடிவாக்கிட முடியும். முதலாளி தொழிலாளியை சரக்காக மறு விற்பனை செய்ய முடியாது; ஏனென்றால் தொழிலாளி அவருக்கு அசையுஞ் சொத்தாகிய அடிமையல்ல; குறிப்பிட்ட காலத்துக்கு அவரது உழைப்புச் சக்தியைப் பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமையைத்தான் முதலாளி வாங்குகிறாரே தவிர வேறு எதையுமல்ல. உற்பத்திச் சாதனங்களைப் பயன்படுத்தி உழைப்புச் சக்தியின் துணை கொண்டு சரக்குகளை உற்பத்தி செய்வதன்றி வேறு எவ்விதத்திலும் முதலாளி இந்த உழைப்புச் சக்தியை உபயோகிக்க முடியாது. 

மூலதனம் உற்பத்தித் திறனுள்ளதாகச் செயல்படுகிற கட்டமான இரண்டாவது கட்டம் ஆரம்பமாகிறது. இதுவே முதல் கட்டத்தால் ஏற்படும் விளைவு.

இந்த இயக்கத்தை M - C < L / mp என்று குறிக்கிறோம். M - C < L / mp  என்பது நடைபெற வேண்டுமானல், அவர் சரக்கு உற்பத்தியாளராக இருப்பது அவசியமாகிறது.  

முதலாளி எப்போதுமே பண முதலாளியாக, தமது மூலதனத்தைப் பண மூலதனமாக வைத்துக் கொண்டு தொழிலாளியை எதிர்நோக்க வேண்டியுள்ளது. மறு புறம், நேரடி உற்பத்தியாளராகிய திரள் திரளான கூலித் தொழிலாளர்கள்  என்னும் செயலை நிறைவேற்ற வேண்டுமானால், அவசிய வாழ்வுச் சாதனங்கள் விலைக்கு வாங்கிக் கொள்ளக் கூடிய வடிவில், அதாவது சரக்குகளின் வடிவில், எப்போதும் அவருக்கு கிடைத்து வர வேண்டும். இந்நிலவரம் ஏற்படுவதற்கு, சரக்கு வடிவிலான உற்பத்திப் பொருட்களது சுற்றோட்டமும், ஆகவே உற்பத்தி செய்யப்படும் சரக்குகளின் அளவும் பரிமாணமும் உயர் வளர்ச்சி கண்டிருப்பதும் அவசியமாகிறது. கூலியுழைப்பைக் கொண்டு நடைபெறும் பொருளுற்பத்தி சர்வவியாபகமாகும் போது, சரக்கு உற்பத்திதான் பொருளுற்பத்திக்கான மிகப் பரவலான வடிவமாகத் திகழும். 

முதலாளித்துவ பொருளுற்பத்திக்கு இன்றியமையாத தேவையான கூலித் தொழிலாளி வர்க்கம் நிலவுவதற்கு வழி செய்யும் நிலைமைகள் சரக்கு உற்பத்தி முழுவதும் முதலாளித்துவச் சரக்கு உற்பத்தியாக மாறுவதற்கும் ஊக்கமளிக்கின்றன.

முதலாளித்துவ பொருளுற்பத்தி எங்கே வேரூன்றினாலும் அங்கே நாளடைவில் அது உற்பத்தியாளர்களது சுய வேலையின் அடிப்படையிலோ, மிகை உற்பத்திப் பொருளை மட்டும் சரக்காக விற்பதன் அடிப்படையிலோ அமைந்த பழைய சரக்கு-உற்பத்தி வடிவங்கள் யாவற்றையும் அழிக்கவே செய்கிறது.

உற்பத்தியின் சமூக வடிவம் எதுவானாலும், எப்போதுமே உழைப்பாளர்களும் உற்பத்திச் சாதனங்களும்தான் அதன் காரணிகள். ஆனால் ஒன்றிடமிருந்து ஒன்று பிரிந்துள்ள நிலையில், இவ்விரு காரணிகளில் எந்தவொன்றும் உள்ளுறையாக (potentiallly) மட்டுமே உற்பத்தி காரணி ஆகிறது. இரண்டும் ஒருசேர இணைந்தாலன்றி உற்பத்தி நடைபெற முடியாது. இந்த இணைப்பு பல  விதத்திலும் ஏற்படலாம். சமூக அமைப்பின் வெவ்வேறு பொருளாதார சகாப்தங்களையும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்திக் காட்டுவது இந்த இணைப்பு எந்த விதத்தில் ஏற்படுகிறது என்பதுதான்.

எந்த தொழில் முனைவாய் (enterprise) இருப்பினும் உழைப்புச் சக்தியைச் சுரண்டாமல் அதனால் சரக்கு உற்பத்தி செய்ய முடியாதுதான். ஆயினும் முதலாளித்துவ சரக்கு உற்பத்தி முறையினால் மட்டுமே சகாப்தகர முக்கியத்துவம் வாய்ந்த சுரண்டல் முறையாக (mode of exploitation) முடிந்திருக்கிறது. வரலாற்று வழியிலான அதன் வளர்ச்சியின் போது, உழைப்பின் நிகழ்முறையை ஒழுங்கமைத்தும், தொழில் நுட்பத்தைப் பிரமாதமாய் மேம்படுத்தியும், இதற்கு முந்தைய சகாப்தங்களை எல்லாம் விஞ்சி வானுற உயர்ந்து விடும் விதத்தில் அது சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு அனைத்தையும் புரட்சிகரமான முறையில் அடியோடு மாற்றியமைத்திருக்கிறது.

உற்பத்திச் சாதனங்களும் உழைப்புச் சக்தியும் முன்னீடு செய்யப்படும் மூலதன-மதிப்பின் நிலவல் வடிவங்களாய் (forms of existence) உள்ள வரை, மதிப்பின் படைப்பில் --- ஆதலால் உபரி..மதிப்பின் படைப்பிலும் ---  உற்பத்தி நிகழ்முறையின் போது அவை வகிக்கும் வெவ்வேறு பாத்திரங்களினால் மாறா-மூலதனமாகவும், மாறும்-மூலதனமாகவும் வேறுபடுத்திக் காட்டப்படுகின்றன. திறனுடை-மூலதனத்தின் வெவ்வேறு அங்கங்களான இவற்றைமேலும் வேறுபடுத்திக் காட்டுவது என்னவென்றால்: முதலாளியின் வசமுள்ள உற்பத்திச் சாதனங்கள் உற்பத்தி நிகழ்முறைக்கு வெளியேயும் கூட அவரது மூலதனமாகவே இருந்து வருகின்றன; ஆனால் உழைப்புச் சக்தியோ இந்நிகழ்முறைக்குள் மட்டுமே ஒரு தனிப்பட்ட மூலதனத்தின் நிலவல் வடிவமாகிறது.

திறனுடை-மூலதனம் தனக்குரிய பணிகளைச் செய்கையில் தனது அடக்கக்கூறுகளையே நுகர்ந்து, அவற்றினும் அதிக மதிப்புள்ள திரளான உற்பத்திப் பொருள்களாக அவற்றை மாற்றுகிறது. உழைப்புச் சக்தியானது இம்முலதனத்தின் உறுப்புகளில் ஒன்றாகவே செயல்படுவதால், அதனுடைய உபரி-உழைப்பால் திறனுடை மூலதன அடக்கக் கூறுகளின் மதிப்புக்கும் கூடுதலாக உண்டக்கப் பெறும் மதிப்பும் கூட மூலதனதுக்கு உரித்தான விளைபயனாகிறது. உழைப்புச் சக்தியின் இந்த உபரி-உழைப்பு இலவசமாய் மூலதனத்துக்குக் கிடைக்கும் உழைப்பாகும். இவ்விதம் அது முதலாளிக்குக் கிடைக்கும் உபரி-மதிப்பாகிறது. இந்தச் சரக்கின் மதிப்பு P+s ஆகும்.

No comments:

Post a Comment