உபரி-மதிப்பு இல்லையேல் மூலதனத் திரட்டல் இல்லை; முதலாளித்துவப் பொருளுற்பத்தி இல்லையேல் உபரி-மதிப்பு இல்லை. சரக்கு-உற்பத்தியாளர்களின் கையில் மூலதனம் மற்றும் உழைப்புச் சக்தியின் கணிசமான திரள்கள் இல்லையேல் முதலாளித்துவ பொருளுற்பத்தி இல்லை. எனவே இந்த இயக்கம் முழுவதும் நச்சு வட்டத்தில் சுழல்வதாகத் தோன்றுகிறது; முதலாளித்துவ திரட்டலுக்கு முன் ஓர் ஆதித் திரட்டல் (primitive accumulation) அதாவது முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையின் விளைவாக அல்லாமல் அதன் தொடக்கமாய் அமையும் திரட்டல் நடைபெறுவதாகக் கொண்டால்தான் இந்த நச்சு வட்டத்திலிருந்து விடுபட முடியும்.
எவ்வளவு பாடுபட்டு உழைத்தும் கூட இன்றுவரை தம்மைத் தவிர விற்பதற்கு ஏதுமில்லாத மிகப் பெரும்பாலோர் வறுமையில் உழல்வதும், உழைப்பதை நிறுத்தி நீண்ட காலமாகிவிட்ட போதிலும் ஒரு சிலரது செல்வம் ஓயாது மேலும் மேலும் பெருகிச் செல்வதும் ஆதிப் பாவத்திலிருந்து தொடங்குவதாக சொத்துடைமைக்கு ஆதரவாக உப்புச்சப்பில்லாத இப்படிப் பட்ட சிறுபிள்ளைத் தனம்தான் நாள்தோறும் நமக்கு போதிக்கப்படுகிறது.
உள்ளபடியான வரலாற்றில், நாடு பிடிப்பதும் அடிமைப்படுத்துவதும் கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும் --- சுருங்கச் சொல்லின் பலப்பிரயோகம் --- பெரும் பங்கு வகிப்பது பேர்போன உண்மை. அரசியல் பொருளாதாரத்தின் கனிவு கொண்ட வரலாற்றில் காலகாலமாய் அன்பும் அமைதியும் கோலோச்சுகின்றன. உரிமையும் "உழைப்பும்" செல்வம் சேர்ப்பதற்கு என்றென்றும் ஒரே மார்க்கமாய் இருந்தன; நடப்பு ஆண்டு மட்டும்தான் எப்போதும் இதற்கு விதிவிலக்கு. ஆனால், உண்மை என்னவென்றால் ஆதித் திரட்டல் முறைகளுக்கு அன்புடனோ அமைதியுடனோ ஒட்டுமில்லை, உறவுமில்லை.
தமது உழைப்பை ஈடேற்றம் செய்வதற்குத் தேவையான சாதனங்களின் உடைமையிலிருந்து உழைப்பாளர்களை முழுமையாகப் பிரித்திடுவது முதலாளித்துவ அமைப்பின் முன் தேவையாகும். முதலாளித்துவ பொருளுற்பத்தி சொந்தக் காலில் நிற்கத் தொடங்கியதுமே, இப்பிரிவினையை நிலைநிறுத்துவது மட்டுமல்லாமல், மேலும் மேலும் விரிவான அளவில் தொடர்ந்து உருவாகிச் செல்கிறது. ஆகவே முதலாளித்துவ அமைப்புக்கு வழி திறந்து விடும் நிகழ்முறை தொழிலாளியிடமிருந்து அவரது உற்பத்திச் சாதனங்களின் உடைமையைப் பறிக்கிற நிகழ்முறையாக அல்லாமல் வேறெதுவுமாகவும் இருக்க முடியாது. எனவே ஆதித் திரட்டல் என்பது உற்பத்தியாளரை உற்பத்திச் சாதனங்களிலிருந்து விலக்கிடும் வரலாற்று நிகழ்முறையே தவிர வேறல்ல.
முதலாளித்துவச் சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டுமானம் பிரபுத்துவச் சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டுமானத்திலிருந்து முளைத்தெழுந்தது. பின்னதன் சிதைவினால் முன்னதன் கூறுகள் விடுபட்டு இயங்கலாயின.
உற்பத்தியாளர்களைக் கூலித் தொழிலாளர்களாக மாற்றும் வரலாற்று இயக்கம், ஒரு பக்கத்தில் பண்ணையடிமைத்தனத்திலிருந்தும் கைவினைச் சங்கங்களின் தளைகளிலிருந்தும் அவர்கள் பெற்ற விடுதலையாகத் தோன்றுகிறது; மறுபக்கத்தில், தமக்குச் சொந்தமாயிருந்த உற்பத்திச் சாதனங்களனைத்தையும், பழைய பிரபுத்துவ ஏற்பாடுகளால் கிடைத்த வாழ்க்கை உத்தரவாதங்கள் அனைத்தையும் பறிகொடுத்த பிறகுதான், இந்த புதிய சுதந்திர மாந்தர்கள் தம்மைத்த் தாம் விற்பவர்களாயினர். அவர்களது உடைமைப் பறிப்பின் (expropriation) வரலாறு மனித இனத்தின் சரித்திர ஏடுகளில் இரத்தமும் நெருப்புமான எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது.
தொழில் துறை முதலாளிகள் --- இந்தப் புதிய கோமான்கள் --- கைத்தொழில்களின் கைவினைச் சங்க ஆண்டான்களை (guild masters) மட்டுமல்லாமல், செல்வாதாரங்களின் உடைமையாளர்களான பிரபுத்துவக் கோமான்களையும் அகற்ற வேண்டியிருந்தது.
தொழில் துறையின் தீரர்களான இவர்கள் தாம் எவ்வகையிலும் பங்கு வகிக்காத நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தியே வாளேந்திய தீரர்களின் இடத்தைப் பிடிப்பதில் வெற்றி பெற முடிந்தது. இழிவான உபாயங்களைக் கையாண்டே இந்தத் தொழில் துறைத் தீரர்கள் மேனிலை அடைந்தார்கள்.
கூலித் தொழிலாளியும், அதே போல் முதலாளியும் உருவாவதற்கு வழிகோலிய வளர்ச்சியின் தொடக்க நிலை தொழிலாளியின் அடிமைநிலை ஆகும். முன்னேற்றமென்பது இந்த அடிமைநிலையின் வடிவத்தில் ஏற்பட்ட மாற்றமே. பிரபுத்துவ சுரண்டல் போய் முதலாளித்துவ சுரண்டல் வந்த உருமாற்றமே.
முதலாளித்துவ சுரண்டல் என்பது 16 ஆவது நூற்றாண்டிலிருந்துதான் தொடங்குகிறது. ஆதித் திரட்டலின் வரலாற்றில், முதலாளி வர்க்கத்தின் உருவாக்கத்துக்கு நெம்புகோலாகச் செயல் புரியும் எல்லாப் புரட்சிகளுமே சகாப்தகரமானவை. ஆனால், பெருந்திரளானோர் திடீர் என்றும் வலுவந்தமாகவும் அவர்களது வாழ்வுச் சாதனங்களிலிருந்து துண்டிக்கப்பட்டு, "பிணைப்புகளற்ற," சுதந்தரமான பாட்டாளிகளாக உழைப்புச் சந்தையிலிருந்து விடப்படும் தருணங்களே யாவற்றுக்கும் முதலாய் சகாப்தகரமானவை.
இந்த உடைமைப் பறிப்பின் வரலாறு வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு கோலம் பூணுகிறது; வெவ்வேறு வரிசைமுறைகளில், வெவ்வேறு வரலாற்றுக் காலங்களில் அதன் பல்வேறு வளர்ச்சிப் படிகளைக் கடக்கிறது. இங்கிலாந்தில் மட்டும்தான் அதன் முழுப் பொலிவைக் காட்டும் வடிவில் நடந்தேறுகிறது.
No comments:
Post a Comment