Tuesday, January 14, 2014

பகுதி 8 அத்தியாயம் 28: உடைமை பறிக்கப்பட்டோருக்கு எதிரான கொலைகாரச் சட்டங்கள் ... 15 ஆம் நூற்றாண்டின் முடிவில் தொடங்கியவை. பாராளுமன்றச் சட்டங்கள் மூலம் கூலியை வலுவந்தமாய்க் குறைத்தல்.

"சுதந்தர பாட்டாளி வர்க்கத்தை அது படைக்கப்பட்டு உலகில் விடப்பட்ட அதே வேகத்தில் உட்கிரகிப்பது முடியவில்லை. அதேபோது, வழக்கமான தமது வாழக்கை முறையிலிருந்து திடீரென வலிந்திழுக்கப்பட்ட இவர்கள் அவ்வளவு திடீரென புதிய நிலைமையின் கட்டுப்பாட்டுக்குத் தம்மை தகவமைத்துக் கொள்ள முடியவில்லை. ஓரளவு மனப்பாங்காலும், மிகப் பெரிமளவு சூழ்நிலைகளின் நிர்ப்பந்தத்தாலும் இவர்கள் திரள் திரளாய்ப் பிச்சைக்காரர்களாகவும், கொள்ளைக்காரர்களாகவும், வேலையற்ற ஊர்சுற்றிகளாகவும் மாற வேண்டியதாயிற்று. இதனால்தான் 15 ஆம் நூற்றாண்டின் முடிவிலும், 16 ஆம் நூற்றாண்டு முழுவதிலும் மேற்கு ஐரோப்பாவெங்கிலும் வேலையற்ற ஊர்சுற்றிகளுக்கு எதிராகக் கொலைகாரச் சட்டங்கள் அமலாயின.

இல்லாது ஒழிந்து போன பழைய நிலைமைகள் இருப்பது போலவும், அவர்கள் விரும்பினால் அந்தப் பழைய நிலைமைகளில் தொடர்ந்து வேலை செய்திருக்கலாம் என்பது போலவும், இந்தச் சட்டங்கள் அவர்களை "விரும்பிக் குற்றம் புரிந்த" குற்றவாளிகளாய்க் கருதி தண்டித்தன.

எட்டாம் ஹென்றி, 1530: வயோதிகர்களும் வேலை செய்யமுடியாதவர்களுமான பிச்சைக்காரர்கள் பிச்சையெடுக்க உரிமம் பெறுவர். ஆனால் திடகாத்திரமான ஊர்சசுற்றிகளுக்கு கசையடியும், சிறைத் தண்டனையும் கிடைக்கும்.  ஊர்சுற்றியாய் இரண்டாவது முறை கைதானால் மீண்டும் கசையடி கிடைக்கும்; பாதிக் காதும் துண்டிக்கப்படும்; மூன்றாவது முறை இக்குற்றம் புரிந்தால், அவர் திருத்த முடியாத குற்றவாளியாகவும், பொது நலனின் விரோதியாகவும் கருதப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்படும். 

ஆறாம் எட்வர்டு, 1547: ஒருவர் வேலை செய்ய மறுத்தால், அவரை சோம்பேறி என்று எவர் குற்றஞ்சாட்டினாரோ அவருக்கே அடிமையாகும் படி தண்டிக்கப்படுவார். எஜமானர் அடிமைக்கு ரொட்டியும் தண்ணீரும் உணவாகக் கொடுப்பார்; எவ்வளவு அருவருப்பான வேலையானாலும் சரி, சவுக்கையும் சங்கிலியையும் பயன்படுத்தி அடிமையை வலுவந்தமாய் வேலைவாங்கும் உரிமை அவருக்குண்டு. அடிமையானவர் இருவார காலம் வேலைக்கு வராவிட்டால் ஆயுட் காலத்துக்கும் அடிமையாய் இருக்கும் படி தண்டிக்கப்படுவார்; நெற்றியிலோ முதுகிலோ அடிமை என்பதன் முதல் எழுத்து சூடு போட்டுப் பொறிக்கப்படும். மூன்று தடவை ஓடிப் போனால் கடுங்குற்றவாளியாய் கருதப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும். 

ஊர்சுற்றிகளின் குழந்தைகளைக் கொண்டுபோய், ஆண்களை 24 வயது வரைக்கும், பெண்களை 20 வயது வரைக்கும் பழகு தொழிலாளர்களாய் வைத்துக் கொள்ளும் உரிமை எல்லோருக்கும் உண்டு. இடையில் அவர்கள் ஓடிப் போய் விட்டால், மேற்கூறிய வயது வரை தம் எஜமானர்களுக்கு அடிமையாக வேண்டும்; எஜமானர்கள் விரும்பினால் அவர்களை சங்கிலி கொண்டு பிணைக்கவும், சவுக்கால் அடிக்கவும், வேறு வகையில் தண்டிக்கவும் செய்யலாம். 

இவ்வாறுதான், முதலில் விவசாயக் குடிகளின் நிலைவுடைமையை வலுவந்தாமாய்ப் பறித்து, அவர்களை வீடுவாசலிலிருந்து விரட்டியடித்து, வேலையற்ற ஊர் சுற்றிகளாய் மாற்றி, பின்னர் கசையால் அடித்து, சூட்டுக் குறியிட்டு, அகோரமான பயங்கரச் சட்டங்களால் வதைத்து கூலியுழைப்பு முறைக்கு வேண்டிய கட்டுப்பாட்டுக்குப் பணிய வைத்தார்கள்.

சமுதாயத்தின் ஒரு துருவத்தில் உழைப்பின் இன்றியமையாத் தேவைகள் மூலதன வடிவில் திரளாய்க் குவிந்திருப்பதும் மறு துருவத்தில் தமது உழைப்புச் சக்தி தவிர விற்பதற்கு வேறொன்றுமில்லாத மனிதத் திரள்கள் குழுமியிருப்பதும் மட்டும் போதாது. தாமே விரும்பி இந்த உழைப்புச் சக்தியை விற்குமாறு அவர்களைக் கட்டாயப்படுதுவதும் போதாது. முதலாளித்துவ பொருளுற்பத்தியின் முன்னேற்றமானது அந்த உற்பத்தி முறையின் நிலைமைகளைக் கூறாமலே விளங்கும் இயற்கை விதிகளாய்க் கொள்ளும்படியான தொழிலாளி வர்க்கத்தை கல்வியாலும் மரபுகளாலும், பழக்க வழக்கங்களாலும் வளரச் செய்கிறது. முதலாளித்துவப் பொருளுற்பத்தி நிகழ்முறை முழு அளவுக்கு ஒழுங்கமைந்ததும் சகல வித எதிர்ப்பையும் தகர்த்திடுகிறது. ஒப்பீட்டு உபரி-மக்கள் தொகை இடையறாமல் உருவாகி, உழைப்பின் வழங்கல்-வேண்டல் விதியின் செயலையும், எனவே கூலியின் விகிதத்தையும் மூலதனத்தின் தேவைகளுக்கு இசைவான தடத்தில்  செலுத்திவிடுகிறது. முதலாளிக்கு தொழிலாளி கீழ்படுவது பொருளாதார உறவுகளின் ஓயாத நிர்பந்தத்தால் முழுமையாகிறது. பொருளாதார நிலைமைகளுக்கு அப்பாற்பட்ட நேரடி வன்முறை இன்னமும் பயன்படுத்தப்படுவது உண்டுதான். ஆனால் இது விதிவிலக்காக மட்டுமே நிகழ்கிறது.

வளரும் பருவத்திலுள்ள முதலாளி வர்க்கம் கூலியை "முறைப்படுத்துவதற்கு", அதாவது உபரி..மதிப்பு உண்டாவதற்கேற்ற விகிதத்தில் கூலியை வரம்பிடவும், வேலை-நாளை நீட்டவும் தொழிலாளியை உரிய அளவு சார்புநிலையில் வைத்துக் கொள்ளவும் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்த விரும்புகிறது, பயன்படுத்துகிறது. ஆதித் திரட்டல் என்பதன் இன்றியமையாக் கூறுகளில் இதுவும் ஒன்று.

உழைப்பானது வடிவத்தில் மட்டுமே மூலதனத்துக்குக் கீழ்பட்டிருந்தது ---அதாவது பொருளுற்பத்தி முறை இன்னமும் முதலாளித்துவத்துக்குரிய தனித்தன்மை பெற்றதாகவில்லை. மாறா-மூலதனத்தை விட மாறும்-மூலதனம் பெரிதும் முதன்மை பெற்றிருந்தது.  ஆகவே, மூலதனத் திரட்டல் பெருகப் பெருக, கூலியுழைப்புக்கான வேண்டல் அதிகமாய் அதிகரித்தது. ஆனால் கூலியுழைப்பின் வழங்கல் மெதுவாகவே அதிகரித்தது. நாட்டின் பொருளுற்பத்தியில் பெரியதொரு பகுதி  --- பிற்காலத்தில் முதலாளித்துவ திரட்டல்-நிதியமாக மாறி விடுகிற இப்பகுதி --- இன்னமும் தொழிலாளியின் நுகர்வு-நிதியமாகவே பயன்பட்டு வந்தது.

கூலியுழைப்புப் பற்றிய சட்ட நெறி (தொழிலாளி சுரண்டப்படுவதே ஆரம்பம் முதல் அதன் நோக்கம்; பிறகு வளர்ந்து முன்னேறுகையிலும் தொடர்ந்து தொழிலாளியிடம் இதேபோல் பகைமையே கொண்டிருந்தது) இங்கிலாந்தில் மூன்றாம் எட்வர்டு ஆட்சியில் 1349 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட தொழிலாளர் சட்டத்திலிருந்து ஆரம்பமாகிறது.    

நகரத்துக்கும் கிராமத்துக்கும், பலன்வீத வேலைக்கும் நாள்வீத வேலைக்கும் கூலி விகிதம் சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்டது. சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்டதைக் காட்டிலும் உயர்ந்த கூலி கொடுப்பது தடை செய்யப்பட்டது; ஆனால் உயர்ந்த கூலி கொடுப்பதற்குரிய தண்டனையை விட பெறுவதற்குரிய தண்டனை கடுமையானதாய் இருந்தது. [இவ்வாறே எலிசபெத்தின் பழகு தொழிலாளர் சட்டத்தின் பிரிவுகள் 18,19 இல், உயர்ந்த கூலி கொடுத்தால் 10 நாள் சிறைத் தண்டனையும், பெற்றால் 21 நாள் சிறை தண்டனையும் விதிக்க ஆணையிடப்பட்டுகிறது]

14 ஆம் நூற்றாண்டு முதல் தொழிற்சங்கங்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்தாகிய ஆண்டான 1825 வரையிலும் தொழிலாளர்கள் சங்கஞ்சேருவது கொடுங்குற்றமாய்க் கருதப்பட்டது. 1349 ஆம் வருடத்திய தொழிலாளர் சட்டம், அதிலிருந்து பிறந்த ஏனைய சட்டங்கள் இவற்றின் தாத்பரியத்தை வெட்டவெளிச்சமாக்கிடும் உண்மை  என்னவென்றால்: அரசானது கூலிக்கு திட்டவட்டமான உச்ச வரம்பு விதிக்கிறதே தவிர, எவ்விதத்திலும் அடி வரம்பு நிர்ணயிக்கவில்லை.

16 ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்களின் நிலைமை இன்னும் படுமோசமாகி விட்டதென்பது தெரிந்ததே. பணக் கூலி உயர்ந்தது; ஆனால் பணத்தின் மதிப்பிறக்கத்துக்கும், அதையொட்டி சரக்குகளின் விலைகளில் நேரிட்ட உயர்வுக்கும் ஏற்ற விதத்தில் உயரவில்லை. எனவே உண்மைக் கூலி குறைந்தது.

பட்டு நெசவாளர்களின் கூலியைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை அமைதி காப்பு நடுவர்களிடம் ஒப்படைத்து மூன்றாம் ஜார்ஜ் ஆட்சியின் 13 ஆவது ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட சட்டம் அப்போதும் அமலில் இருந்தது.

ஸ்காட்லாந்தில் சுரங்கத் தொழிலாளர்களின் கூலியைத் தொடர்ந்து முறைப்படுத்தி வர வேண்டுமென்று 1799இலும் கூட ஒரு பாராளுமன்றச் சட்டம் உத்திரவிட்டது. இடைக்காலத்தில் நிலைமைகள் அடியோடு மாறி விட்டன என்பதை ஆங்கிலேயக் கீழ்ச்சபையில் என்றும் கேட்டிராத வகையில் நடந்த நிகழ்ச்சி நிரூபித்தது. கூலி இதற்கு மேல் உயர்வது கூடவே கூடாது என்று கூலிக்கு உச்ச வரம்பு விதிக்கும் சட்டங்களையே 400 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்றி வந்த அம்மன்றத்தில் , 1796 ஆம் ஆண்டில் விட்பிரெடு என்பவர் விவசாயத் தொழிலாளர்களுக்கு சட்டபூர்வமான குறைந்தபட்சக் கூலி நிர்ணயிக்க வேண்டுமென முன்மொழிந்தார்.

சட்டங்களின் விதிமுறைகள் ஒப்பந்தத்தை மீறும் அதிபருக்கு எதிராய் உரிமையியல் சட்ட நடவடிக்கைக்கு மட்டுமே இடமளிக்கின்றன: இதற்கு மாறாக ஒப்பந்தத்தை மீறும் தொழிலாளிக்கு எதிராய் குற்றவியல் சட்ட நடவடிக்கைக்கு இடமளிக்கின்றன. இவ்விதிமுறைகள் நாளது வரையிலும் (1873) முழுமையாக அமலிலுள்ளன. தொழிற்சங்கங்களுக்கு எதிரான காட்டுமிராண்டிச் சட்டங்கள் 1825இல், அச்சந்தரும் முறையில் போர்க்கோலம் பூண்ட பாட்டாளி வர்க்கத்தை எதிர்கொள்ள முடியாமல் வீழ்ந்துபட்டன. ஆனால் முழுமையாக அல்ல.

No comments:

Post a Comment