Wednesday, January 8, 2014

பகுதி 8 அத்தியாயம் 27: விவசாயக் குடிகளின் நிலவுடைமையைப் பறித்தல்

இங்கிலாந்தில், பண்ணையடிமை முறை (serfdom) 14 ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் அநேகமாய் மறைந்து விட்டது. மக்கள் தொகையில் பெரும்பாலார் சுதந்திர நிலவுடைமை..விவசாயிகளாய் (free peasant proprietors) இருந்தனர். 

15 ஆம் நூற்றாண்டின் கடைசி மூன்றாம் பகுதியும் 16 ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டும் பிரபுத்துவ பரிவாரங்கள் கலைக்கப்பட்டதால், விடுபட்ட சுதந்தரப் பாட்டாளிகள் பெருந்திரளாய் உழைப்புச் சந்தைக்கு வரலாயினர்.

மன்னரோடும் பாராளுமன்றத்தோடும் ஆணவமாய் மோதிய பெரும் பிரபுத்துவ கோமான்கள், விவசாயிகளை நிலத்திலிருந்து வலுவந்தமாக விரட்டியதன் மூலமும், கிராமப் பொது நிலங்களை அபகரித்துக் கொண்டதன் மூலமும் ஒப்பிட்டு சொல்ல முடியாத படி பன்மடங்கு பெரிதான பாட்டாளிப் பெருந்திரளைத் தோற்றுவித்தனர்.

புதிய பிரபுக் குலம் தான் வாழ்ந்த காலத்தின் புதல்வனாய் இருந்தது; பணமே இதற்கு சக்திகளுக்கெல்லாம் சக்தியாய் இருந்தது. சாகுபடி நிலத்தை மேய்ச்சல் வெளியாக மாற்றுவதே இதன் முழக்கமாய் இருந்தது.

ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கம் அதன் பொற்காலத்திலிருந்து இரும்புக் காலத்துக்கு, இடைக் கட்டங்கள் ஏதுமில்லாமலே திடுதிப்பெனப் பெயர்க்கப்பட்டுவிட்டது.

இந்தப் புரட்சியைக் கண்டு சட்ட நெறி திகைத்துப் போய் "நாட்டின் செல்வம்" (அதாவது மூலதனத்தை உண்டாகுவதும், மக்கள் திரளை கண்மூடித்தனமாகச் சுரண்டி வறுமையில் ஆழ்த்துவதும்) அரசுத் திறமனைத்தின் இறுதி இலட்சியமாகக் கொள்ளப்படும் உயர் நாகரிக நிலையை இன்னும் அது எட்டவில்லை.

முதலாளித்துவ அமைப்பு கோரியது என்னவென்றால், பெருந்திரளான மக்கள் சீரழிந்து, கிட்டத்தட்ட அடிமை நிலையை எட்ட வேண்டும். அவர்களைக் கூலிப் பட்டாளங்களாக மாற்ற வேண்டும், அவர்களது உழைப்புச் சாதனங்களை மூலதனமாக மாற்ற வேண்டும். 

இந்த மாற்றக் காலத்தில் விவசாயக் கூலித் தொழிலாளியின் குடிசையை ஒட்டிய 4 ஏக்கர் நிலத்தைப் பாதுகாக்கவும் சட்டம் முயன்றது; அவரது குடிசையில் பிறரைக் குடிவைக்கவும் தடை விதித்தது. 

"புகழார்ந்த புரட்சி" ("Glorious Revolution") ஆரஞ்சு வம்சத்தைச் சேர்ந்த மன்னர் வில்லியத்தோடு கூடவே, உபரி மதிப்பை தமதாக்கும் நிலவுடைமையாளர்களையும் முதலாளிகளையும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியது. இது வரை மிதமான அளவில் நடந்து வந்த அரசுநிலத்திருட்டை இவர்கள் பிரம்மாண்ட அளவில் செய்து, புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்தார்கள். இந்தப் பண்ணைகள் தானமாய்த் தரப்பட்டன; அல்லது, நம்ப முடியாத அளவுக்கு குறைந்த விலைக்கு விற்கப்பட்டன; அல்லது தனியார் பண்ணைகளால் நேரடியாகவே கைப்பற்றிச் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இவையெல்லாம் சட்ட சம்பிரதாயங்களை சிறிதும் அனுசரிக்காமல் நிகழ்ந்தவை. இவ்வாறு மோசடி செய்து வசப்படுத்தப்பட்ட அரசு நிலங்களும், கபளீகரம் செய்யப்பட்ட திருச்சபைப் பண்ணை நிலங்களில் குடியரசுப் புரட்சிக் காலத்தில் இழந்தவை போக எஞ்சியவையும்தான் ஆங்கிலேய ஆதிக்கக் கும்பலைச் சேர்ந்த கோமான்களின் இன்றைய பெருஞ்சொத்துகளுக்கு அடிப்படை ஆகின்றன. தொழில், வணிக முதலாளிகள் இந்த நடவடிக்கையை ஆதரித்தார்கள்.

இந்தப் புதிய நிலவுடைமைப் பிரபுக் குலத்தார் இயற்கையாகவே புதிய வங்கியதிபர்களுக்கும், புதிதாய் உருவான நிதி மன்னர்களுக்கும், அப்போது காப்பு வரிகளைச் சார்ந்திருந்த பெரும் பட்டறையதிபர்களுக்கும் கூட்டாளிகளாய் இருந்தனர்.

சமுதாயக் கூட்டுடைமை பிரபுத்துவப் போர்வையில் நீடித்து வந்த பண்டைய டூட்டானிய மரபாகும். இச்சொத்தின் வலுவந்த அபகரிப்பு --- பொதுவாக சாகுபடி நிலத்தை மேய்ச்சல் நிலமாக மாற்றுவதோடு சேர்ந்து நிகழும் இந்த அபகரிப்பு --- எப்படி 15 ஆம் நூற்றாண்டின் முடிவில் தொடங்கி 16 ஆம் நுற்றாண்டில் தொடர்ந்து நடந்தது என்று பார்த்தோம். ஆனால் அந்த காலத்தில் இந்த காரியம் தனிப்பட்ட வன்முறைச் செயல்கள் மூலம் நிறைவேற்றப்பட்டது; இந்த வன்முறைக்கெதிராக நூற்றைம்பது ஆண்டுகளாக சட்டத் துறை நடத்தி வந்த போராட்டம் தோல்வியில் முடிந்தது.

இக்களவின் நாடாளுமன்ற வடிவமே கிராமப் பொது நில அடைப்புச் சட்டங்கள்; வேறுவிதமாகச் சொல்வதானால், நிலவுடைமையாளர்கள் மக்களின் நிலத்தை தனியுடைமையாக்கித் தமக்குத் தாமே வழங்கிக் கொள்ளும் ஆணைகள்.

அரச குடும்ப நிலங்களின் திருட்டுக்கு அடுத்தபடி, 18ஆம் நூற்றாண்டில் முதலாளிப் பண்ணைகள் அல்லது வணிகப் பண்ணைகள் என்றழைக்கப்பட்ட பெரிய பண்ணைகளை ஊதிப் பெருக்கச் செய்வதற்கும், விவசாய குடிகளை "விடுவித்து" பட்டறைத் தொழிலுக்கான பாட்டாளிகள் ஆக்குவதற்கும் சிறப்பாகத் துணைசெய்தது.

ஆயினும், தேச செல்வத்துக்கும் மக்களின் வறுமைக்கும் உள்ள ஒற்றுமைய 19 ஆம் நூற்றாண்டைப் போல் 18 ஆம் நூற்றாண்டு இன்னும் முழுமையாக ஏற்றுக் கொண்டுவிடவில்லை. எனவேதான், "கிராமப் பொது நிலங்களின் அடைப்பு" பற்றி அக்காலத்திய பொருளாதார இலக்கியத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

திருச்சபைச் சொத்தைச் சூறையாடியது, அரசு நிலங்களை வஞ்சகமாய்க் கைப்பற்றியது, கிராமப் பொது நிலங்களைக் களவாடியது, பிரபுத்துவச் சொத்தையும் கணக் குடிகளது சொத்தையும் அபகரித்தது, கண்மூடித்தனமான பயங்கரம் நிறைந்த நிலைமைகளில் அச்சொத்தை நவீனத் தனியார் சொத்தாக மாற்றியது ஆகிய இவையெல்லாம் அன்பும் அமைதியும் வாய்ந்த ஆதித் திரட்டல் வழிமுறைகளே அன்றி வேறல்ல. இந்த வழிமுறைகள் முதலாளித்துவ வேளாண்மைக்காக வயல் வெளிகளைக் கைப்பற்றின; நிலத்தை மூலதனத்தின் பிரிக்க முடியாத பகுதியாக்கின; "சுதந்தரமான" சட்டக் காப்பற்ற பாட்டாளி வர்க்கம் நகரத் தொழில்களுக்கு வேண்டிய அளவு கிடைத்திட வழி செய்தன.

No comments:

Post a Comment