விவசாயக் குடிகளின் நிலவுடைமைப் பறிப்பும் நிலவெளியேற்றமும் தொடர்ச்சியாக அல்லவென்றாலும் மீண்டும் மீண்டும் நடைப் பெற்றதன் காரணமாய் நகரத் தொழில்களுக்கு, கைவினைச் சங்கங்களுடன் சிறிதும் தொடர்பில்லாதவர்களும் அச்சங்கங்களால் விலங்கிடப்படாதவர்களுமான திரள் திரளான பாட்டாளிகள் கிடைத்தார்கள்.
சொந்தக் காலில் நிற்கும் சுயேச்சை விவசாயிகள் தொகை வரவர குறைந்து போனதால், தொழில் துறைப் பாட்டாளி வர்க்கம் திரண்டு குவிந்தது.
நிலவுடைமைப் புரட்சியுடனாகவே சாகுபடி முறைகள் மேம்பாடுற்றன; கூட்டு-வேலை அதிகமாயிற்று, உற்பத்திச் சாதனங்களின் குவிப்பு கூடுதலாயிற்று. விவசாயக் கூலித் தொழிலாளர்கள் இன்னும் கடுமையாய் வேலை வாங்கப்பட்டனர். எனவே, விவசாயக் குடிகளின் ஒரு பகுதியினர் விடுவிக்கப்பட்டதோடு, அவர்களது முந்தைய ஊட்டச் சாதனங்களும் விடுவிக்கப்பட்டன. இப்போது அவை மாறும் மூலதனத்தின் பொருட் கூறுகளாக மாறின.
வாழ்வுச் சாதனங்களுக்கு நேர்ந்த அதே கதிதான் உள்நாட்டு வேளாண்மையை நம்பியிருக்கும் தொழில் துறைக் கச்சாப் பொருட்களுக்கும் நேர்ந்தது. அவை மாறா-முலதனத்தின் கூறுகளில் ஒன்றாய் மாற்றப்பட்டன.
வெண் சணல் முன்பிருந்தது போலவே இருக்கிறது; ஓர் இழை கூட மாறவில்லை; ஆனால் புதியதொரு சமூக ஆன்மா அதனுள் புகுந்துவிட்டது. இப்போது அது பட்டறைத் தொழில் அதிபருடைய மாறா-மூலதனத்தின் பகுதி ஆகிறது.
வெண் சணல் நூற்பில் செலவிடப்படும் கூடுதல் உழைப்பு முன்பெல்லாம் ஏராளமான விவசாயக் குடும்பங்களுக்குக் கூடுதல் வருமானமாக மாறியது; இரண்டாம் பிரெடெரிக் ஆட்சிக் காலத்தில் பிரஷ்ய அரச குடும்பத்துக்கான வரி வருவாயாக மாறியது எனலாம். இப்போது அது ஒரு சில முதலாளிகளுக்குக் கிடைக்கும் இலாபமாக மாறுகிறது.
நூற்பாளர்களும் நெசவாளர்களும் சுயேச்சையாய் வாழ்வதற்கான சாதனங்களாயிருந்த கதிர்களும் தறிகளும் இப்போது அவர்களை அடக்கி ஆள்வதற்கும் அவர்களிடமிருந்து ஊதியமிலா உழைப்பைக் கறப்பதற்குமான சாதனங்களாய் மாறி விட்டன.
பெரும் பட்டறைகள் --- ஒருசேரப் பிணைக்கப்பட்ட வயல்களைக் குறிப்பிடுவது போல --- manufactures reunies, அதாவது பட்டறைக் குழுமங்கள் என்றே அழைக்கப்பட்டன.
விவசாயக் குடிகளில் ஒரு பகுதியினரின் நிலவுடைமைப் பறிப்பும் நிலவெளியேற்றமும் தொழிலாளர்களையும், அவர்களது வாழ்வுச் சாதனங்களையும், உழைப்புக்கான மூலப் பொருளையும் தொழில் துறை மூலதனத்துக்கென விடுவித்தது மட்டுமல்லாமல் உள்நாட்டுச் சந்தையை உருவாக்கவும் செய்தன.
நூல், துணி, மோட்டாக் கம்பளிப் பண்டங்கள் --- இப்பண்டங்களின் கச்சாப் பொருட்கள் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் எட்டக்கூடியவையாய் இருந்தன; ஒவ்வொரு விவசாயக் குடும்பத்தாலும் அதன் சொந்த உபயோகத்துக்காக நூற்கப்பட்டு வந்தன --- இப்போது பட்டறைத் தொழிலின் உற்பத்திப் பண்டங்களாக மாறிவிட்டன.
நிலத்தில் சாகுபடி செய்வதை துணைத் தொழிலாய் வைத்துக் கொண்டே தொழில் துறை உழைப்பை பிரதான வேலையாய் கொள்ளும் சிறுவுடைமைக் கிராமவாசிகளது புதிய வர்க்கத்தை அது உண்டாக்குகிறது.
முடிவில் நவீனத் தொழில் துறைதான் இயந்திர சாதனங்களின் மூலம் முதலாளித்துவ வேளாண்மைக்கு நிலையான அடித்தளம் இடுகிறது. விவசாயக் குடிகளில் மிகப் பெரும்பாலானவர்களின் நிலவுடைமையை அடியோடு பறிக்கிறது. வேளாண்மையும் கிராமப்புற வீட்டுத் தொழிலும் பிரிந்து தனித்தனியாவதைப் பூர்த்தி செய்கிறது; இந்த வீட்டுத் தொழிலின் வேர்களான நூற்பையும் நெசவையும் கெல்லியெறிகிறது. அதோடு இவ்விதம் அது உள்நாட்டுச் சந்தை முழுவதையும் முதன்முதலாகத் தொழில் துறை மூலதனம் வெற்றி கொள்ளச் செய்கிறது.
No comments:
Post a Comment