சுயேச்சையான சிறு நிலவுடைமையாளர்களும் பண்ணையடிமைகளும் மிகவும் வேறுபட்ட வழிகளில் நிலவுரிமைகள் பெற்றிருந்தனர்; எனவே மிகவும் வேறுபட்ட பொருளாதார நிலைமைகளில் விடுதலைப் பெற்றனர். இங்கிலாந்தில் சாகுபடியாளரின் (capitalist farmer) முதல் வடிவம் கங்காணி (bailiff) என்பதாகும். இந்த கங்காணியே பண்ணையடிமைதான். 14ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இவரது இடத்துக்கு சாகுபடியாளர் வருகிறார். இச்சாகுபடியாளருக்கு நிலவுடைமையாளர் விதையும் கால்நடைகளும் கருவிகளும் தருகிறார். இவரது நிலைமைக்கும் விவசாயியின் (peasant) நிலைமைக்கும் அதிக வேறுபாடு இல்லை. ஆனால் இவர் கூடுதலான அளவில் கூலியுழைப்பைச் சுரண்டுகிறார். விவசாய செலவில் ஒரு பகுதியை இவரும், மறு பகுதியை நிலவுடைமையாளரும் முன்னீடு செய்கிறார்கள். ஒப்பந்தத்தால் நிர்ணயிக்கப்படும் விகிதத்தில் இருவரும் மொத்த விளைபொருளைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள். இங்கிலாந்தில் இந்தக் குத்தகை வடிவம் விரைவில் மறைந்து, முறையான முதலாளித்துவ சாகுபடியாளர் வருகிறார்; இவர் கூலித் தொழிலாளர்களை அமர்த்தி, தனது மூலதனத்தைப் பெருக்கிக் கொள்கிறவர்; உபரி-உற்பத்தியின் ஒரு பகுதியை நில வாடகையாகப் பண வடிவிலோ பண்ட வடிவிலோ நிலவுடைமையாளருக்குச் செலுத்துகிறவர்.
15ஆம் நூற்றாண்டின் கடைசி மூன்றாம் பகுதியில் தொடங்கி அனேகமாக 16ஆம் நூற்றாண்டு முழுவதிலும் நீடித்து நடந்த வேளாண்மைப் புரட்சி உழவர் பெருந்திரளை எவ்வளவு வேகத்தில் வறுமையிலாழ்த்தியதோ, சாகுபடியாளரை அவ்வளவு வேகத்தில் செல்வந்தராக்கியது.
கிராமப் பொது நிலங்களை அபகரித்ததன் மூலம், அவர் அநேகமாய் எவ்வித செலவும் இல்லாமலே தமது கால்நடைச் செல்வத்தைப் பெருமளவு அதிகரித்துக் கொள்ள முடிந்தது. இந்தக் கால்நடைகள் நிலத்தின் செய்நேர்த்திக்கு வேண்டிய எருவைப் பெருக்கின.
உயர் நிலை உலோகங்களின் மதிப்பிலும் எனவே பணத்தின் மதிப்பிலும் ஏற்பட்ட தொடர்ச்சியான வீழ்ச்சி சாகுபடியாளருக்குக் கிடைத்த பொற்கனி ஆயிற்று. மேலே விவரிக்கப்பட்ட நிலைமைகளெல்லாம் ஒருபுறமிருக்க, இது கூலியைக் குறையச் செய்தது. கூலியின் ஒரு பாகம் இப்போது பண்ணையின் இலாபத்தோடு சேர்ந்து கொண்டது. தானியம், கம்பளி, இறைச்சி ஆகியவற்றின் விலையில், சுருங்கச் சொல்லின் வேளாண்மை உற்பத்திப் பொருட்கள் எல்லாவற்றின் விலையிலும் தொடர்ச்சியாக ஏற்பட்ட உயர்வு சாகுபடியாளர் தரப்பில் எந்த முயற்சியுமின்றியே அவரது பண..மூலதனத்தை ஊதிப் பெருகச் செய்தது. அதேபோது, அவர் செலுத்திய நில வாடகை (பணத்தின் பழைய மதிப்பில் கணக்கிடப் படுவதால்) எதார்த்தத்தில் சுருங்கியது. இவ்வாறு சாகுபடியாளர்கள் தொழிலாளர்களை மட்டுமல்லாமல் நிலவுடைமையாளர்களையும் தலையில் தட்டி செல்வந்தராயினர்.
No comments:
Post a Comment