அடிமைகளையும் பண்ணையடிமைகளையும் நேரடியாகக் கூலித் தொழிலாளர்களாய் மாற்றாதவரை, எனவே அது வடிவ மாற்றமாக மட்டுமே உள்ள வரை, மூலதனத்தின் ஆதித் திரட்டல் குறிப்பதெல்லாம் நேரடி உற்பத்தியாளர்களின் உடைமைப் பறிப்பையே; அதாவது உடைமையாளரது உழைப்பின் அடிபடையிலான தனிச் சொத்தின் சிதைவையே. சமுதாய உடைமை அல்லது கூட்டு உடைமைக்கு எதிர் நிலையான தனியுடைமை, உழைப்புச் சாதனங்களும் உழைப்பின் புற நிலைமைகளும் தனியார்களுக்குச் சொந்தமாகயிருக்கும் போது மட்டுமே நிலவுகிறது. ஆனால், இந்த தனியார்கள் உழைப்பாளிகளா இல்லையா என்பதைப் பொறுத்து, தனியுடைமை தன்மை வேறுபடுகிறது.
உழைப்பாளி தாமே தமது உழைப்புச் சாதனங்களின் தனியுடைமையாளராய் இருந்து, தாமே அவற்றை இயக்கும் போதுதான், தாம் சாகுபடி செய்யும் நிலத்துக்குரிய விவசாயியாக, தாம் திறம்பட கையாளும் கருவிக்குரிய கைவினைஞராக இருக்கும் போதுதான், சிறு வீத பொருளுற்பத்தி முறை பூத்துக் குலுங்குகிறது; அதன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்துகி'றது; குறைவற்ற முழு வடிவம் அடைகிறது. இந்த உற்பத்தி முறைக்கு நிலம் துண்டாடப்பட்டிருப்பதும், ஏனைய உற்பத்திச் சாதனங்கள் சிதறுண்டிருப்பதும் அவசியம். இந்த உற்பத்தி சாதனங்களின் குவிப்புக்கு எப்படி இதில் இடமில்லையோ அதே போல் கூட்டு-வேலை, தனித்தனி உற்பத்தி நிகழ் முறை ஒவ்வொன்றுக்குள்ளேயும் உழைப்புப் பிரிவினை, இயற்கை சக்திகள் மீது சமுதாய கட்டுப்பாடு, இச்சக்திகளை சமுதாயம் உற்பத்தித் திறனுள்ள விதத்தில் பிரயோகிப்பது; சமுதாய உற்பத்தித் திறன்களின் தடையற்ற வளர்ச்சி ஆகியவற்றுக்கும் இதில் இடமில்லை. குறுகிய, ஓரளவு ஆதிகாலத்தில் வரம்புகளுக்குள் இயங்கும் உற்பத்தியமைப்புக்கும், சமுதாயத்துக்கும் மட்டுமே இது ஒத்துவரும்.
குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில், இது தன் சிதைவுக்கான பொருளாயதக் காரணிகளைத் தோற்றுவிக்கிறது. அதுமுதல் சமுதாயத்தினுள் புதிய சக்திகளும் புதிய வேட்கைகளும் ஊற்றெடுக்கின்றன; ஆனால் சமுதாயத்தின் பழைய ஒழுங்கமைப்பு தடையாய் அமைந்து, அவற்றை அடக்கி வைக்கிறது. அது ஒழிக்கப்பட்டாக வேண்டும்; ஒழிக்கப்படுகிறது. அதன் ஒழிப்பு --- தனியாட்களுக்குரியவையாய் சிதறுண்டு கிடக்கிற உற்பத்திச் சாதனங்களைச் சமுதாய வழியில் குவியச் செய்து, பலரது சிறு சொத்துடைமையை சிலரது பெருஞ் சொத்துடைமையாக மாற்றி, பெருந்திரளான மக்களிடமிருந்து நிலத்தையும் வாழ்வுச் சாதனங்களையும் உழைப்புச் சாதனங்களையும் பறித்து இவ்வாறு பெருந்திரளான மக்களை அச்சத்துக்கும் வேதனைக்கும் உரிய விதத்தில் உடைமையற்றோராக்குவது --- மூலதனத்தின் வரலாற்று பீடிகை ஆகிறது. தொடர்ச்சியான பல வலுவந்த வழிமுறைகள் இதிலடங்கும்; இவற்றில், மூலதனத்தின் ஆதித் திரட்டல் வழிமுறைகள் என்ற விதத்தில் சகாப்தகரமானவற்றை மட்டுமே பரிசீலித்தோம்.
சுயேச்சையான தனித்த உழைப்பாளி அவரது உழைப்புச் சாதனங்களுடன் ஒன்றிக் கலப்பதன் அடிப்படையிலானதென்று சொல்லத்தக்க சுயசம்பாத்தியத் தனியுடைமை போய், முதலாளித்துவ தனியுடைமை வருகிறது; இது பிறர் உழைப்பின் --- பெயரளவில் சுதந்திரமான உழைப்பின் --- சுரண்டலை, அதாவது கூலியுழைப்பை ஆதாரமாய்க் கொண்டுள்ளது.
இந்த மாற்ற நிகழ்முறை பழைய சமூகத்தை அடி முதல் நுனி வரை போதுமான அளவு சிதைத்தும், உழைப்பாளிகள் பாட்டாளிகளாகவும் அவரகளது உழைப்புச் சாதனங்கள் மூலதனமாகவும் மாறியதும், முதலாளித்துவ பொருளுற்பத்தி முறை சொந்தக்காலில் நிற்கத் தொடங்கியதும், உழைப்பை மேலும் சமூகமயமாக்குதல் நிலத்தையும் ஏனைய உற்பத்திச் சாதனங்களையும் சமுதாய அளவில் பயன்படக்கூடிய, எனவே பொதுவிலான உற்பத்திச் சாதனங்களாக மேலும் மாற்றுதல், அதே போல் தனிச் சொதுடைமையாளர்களின் உடைமையை மேலும் பறித்தல் ஆகியவை புது வடிவெடுக்கின்றன.
இப்போது உடைமைப் பறிப்புக்கு ஆளாக வேண்டியது சொந்தத்துக்குப் பாடுபடும் உழைப்பாளியல்ல; பல உழைப்பாளிகளை சுரண்டும் முதலாளியே. இந்த உடைமைப் பறிப்பை முதலாளித்துவ பொருளுற்பத்தியினது உள்ளார்ந்த விதிகளின் செயல்பாடே, மூலதனத்தின் மையப்பாடே நிறைவேற்றுகிறது. எப்போதுமே ஒரு முதலாளி பல முதலாளிகளை விழுங்கிவிடுகிறார். இந்த மையப்பாட்டுடன் கூடவே, அதாவது சில முதலாளிகள் பல முதலாளிகளை இவ்வாறு உடைமைப் பறிப்புக்கு ஆளாக்குவதன் கூடவே, உழைப்பு நிகழ்முறையின் கூட்டு..வேலை வடிவமும், விஞ்ஞானத்தின் உணர்வுபூர்வமான தொழில் நுட்பப் பிரயோகமும், நிலத்தின் முறைவழிச் சாகுபடியும், உழைப்புக் கருவிகளைப் பொதுவில் மட்டுமே பயன்படுத்தக்கூடியவையாய் மாற்றுவதும், எல்லா உற்பத்திச் சாதனங்களையும் ஒன்றிணைந்த, சமூகமயாமான உழைப்பின் உற்பத்திச் சாதனங்களாக உபயோகிப்பதன் மூலம் அவற்றைச் சிக்கனப்படுத்துவதும், உலகச் சந்தை என்னும் வலையில் எல்லா மக்கள் சமூகங்களையும் சிக்க வைப்பதும், இத்துடன் முதலாளித்துவ ஆளுகையின் சர்வதேசத் தன்மையும் மேன்மேலும் அதிக அளவில் வளர்கின்றன.
இந்த மாற்ற நிகழ்முறையின் அனுகூலங்களையெல்லாம் அபகரித்து ஏகபோகமாக்கிக் கொள்ளும் முதலாளித்துவத் திமிங்கலங்களின் தொகை தொடர்ந்து குறைந்து செல்வதோடு கூடவே, துன்ப துயரமும் ஒடுக்குமுறையும் அடிமைத்தனமும் சீரழிவும் சுரண்டலும் பெருகிச் செல்கின்றன. ஆனால். தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்பும் வளர்ந்து செல்கிறது; இவ்வர்க்கம் தொகையில் தொடர்ந்து பெருகுகிறது. முதலாளித்துவ பொருளுற்பத்தி நிகழ்முறையின் இயங்கமைப்பே இவ்வர்கத்தைக் கட்டுப்பாடு மிக்கதாக்கி, ஒன்றுபடுத்தி, அமைப்பு வழியில் திரளச் செய்கிறது. மூலதனத்தின் ஏகபோகம், அதனோடு சேர்ந்தும் அதன் ஆளுகையிலும் பிறந்து வளர்ந்த பொருளுற்பத்தி முறைக்குப் பூட்டிய விலங்காகி விடுகிறது. முடிவில் உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில், அவற்றின் மூதலாளித்துவ மேலோடு அவற்றுக்கு ஒவ்வாததாகி விடும் நிலை வருகிறது. ஆகவே அந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது.
முதலாளித்துவப் பொருளுற்பத்தி இயற்கை விதிக்குரிய உறுதிப்பாட்டுடன் அதன் மறுப்பையே ஈன்றெடுக்கிறது. இது மறுப்பின் மறுப்பு.
தனியாள் உழைப்பிலிருந்து பிறக்கும் சிதறலான தனியுடைமையை முதலாளித்துவ தனியுடைமையாக மாற்றுவது, ஏற்கெனவே நடைமுறையில் சமூகமயாமாகி விட்ட பொருளுற்பத்தியை ஆதாரமாய்க் கொண்ட முதலாளித்துவ தனியுடைமையை சமுதாயப் பொதுவுடைமையாக மாற்றுவதை விடவும் ஒப்பிடமுடியாத அளவுக்கு நீண்ட நெடிய நிகழ்முறையாகும்; வன்முறை மலிந்த கடினமான நிகழ்முறையாகும்; இது இயற்கைதான். முதலாவது மாற்றம் உடைமை பறிப்பாளர் ஒரு சிலர் மக்கட் பெருந்திரளின் உடைமையைப் பறிப்பதாகும். இரண்டாவது மாற்றம் மக்கட் பெருந்திரள் உடைமையாளர் ஒரு சிலரின் உடைமையைப் பறிப்பதாகும்.
No comments:
Post a Comment