Saturday, January 18, 2014

பகுதி 8 அத்தியாயம் 33: குடியேற்ற முறையின் நவீனத் தத்துவம்

தனிச் சொத்துடைமையின் இரு வேறு வகைகளில் ஒன்று, உற்பத்தியாளரின் சொந்த உழைப்பை ஆதாரமாய்க் கொண்டது; இன்னொன்று, பிறர் உழைப்பைச் சுரண்டுவதை ஆதாரமாய்க் கொண்டது. இரண்டாம் வகை முதலாம் வகையின் நேரடி எதிர்நிலையாய் இருப்பது மட்டுமன்றி, முழுக்க முழுக்க அந்த முதலாம் வகையின் புதைமேட்டின் மீதே வளர்கிறது.

மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ ஆளுகையானது தேசப் பொருளுற்பத்தியின் முழு மண்டலத்தையும் நேரடியாகக் கைப்பற்றி விட்டது; அல்லது, பொருளாதார நிலமைகள் வளர்ச்சி குன்றியுள்ள இடங்களில், பண்டைக் கால பொருளுற்பத்தி முறையைச் சேர்ந்தவை என்றாலும் அதனோடு அக்கம்பக்கமாகத் தொடர்ந்து நிலவி படிப்படியாக நசிந்து கொண்டிருக்கும் சமூக அடுக்குகள் மீது சுற்றடியாகக் கட்டுப்பாடு செலுத்துகிறது.

குடியேற்ற நாடுகளின் நிலைமை முற்றிலும் மாறானது. அங்கே, முதலாளித்துவ ஆட்சியானது சொந்தத்துக்குப் பாடுபடும் உற்பத்தியாளரின் எதிர்ப்புடன் எல்லாவிடங்களிலும் மோதிக் கொள்கிறது. தாம் பயன்படுத்தும் உழைப்புச் சாதனங்களின் உடைமையாளராகிய இந்த உற்பத்தியாளர் உழைப்பது தமது செல்வத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகவே தவிர, முதலாளியின் செல்வத்தைப் பெருக்குவதற்காக அன்று. நேர் முரணான இவ்விரு பொருளாதார அமைப்புகளுக்கும் இடையிலான முரண்பாடு இவ்விருவருக்கும் இடையிலான போராட்டமாய் நடைமுறையில் வெளிப்படுகிறது. முதலாளி தாய் நாட்டின் வலிமையைப் பின்பலமாகக் கொண்டுள்ள இடத்தில் சுயேச்சையான உற்பத்தியாளரது சொந்த உழைப்பின் அடிப்படையிலான பொருளுற்பத்தி முறையையும் தனதாக்க முறையையும் தனது பாதையிலிருந்து வன்முறை மூலம் ஒழித்து கட்டுகிறார்.

முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் பெருஞ்சிறப்பு என்னவென்றால்: அது கூலித் தொழிலாளியைக் கூலித் தொழிலாளியாகவே தொடர்ந்து மறுவுற்பத்தி செய்வதொடு நிற்பதில்லை; மூலதனத் திரட்டலுக்கேற்ற விதத்தில் கூலித் தொழிலாளர்களின் ஒப்பீட்டு உபரி-மக்கள் தொகையையும் எப்போதும் உற்பத்தி செய்கிறது. இவ்வாறு, உழைப்பின் வழங்கல்-வேண்டல் விதி தடம் புரளாமல் பார்ர்துக் கொள்ளப்படுகிறது; கூலியின் ஏற்ற இறக்கம் முதலாளித்துவ சுரண்டலுக்கு திருப்திகரமான வரம்புகளுக்குள் கட்டுப்படுத்தப்படுகிறது; இறுதியாக, முதலாளியைத் தொழிலாளி சமூக வழியில் சார்ந்திருக்குமாறு செய்ய வேண்டிய அந்த இன்றியமியாத நிலைமை உறுதி செய்யப்படுகிறது.

ஆனால் குடியேற்ற நாடுகளில் இந்தக் கவர்ச்சிமிக்க மாயாஜாலம் பலிக்கவில்லை. அறுதியான மக்கள்தொகை தாய்நாட்டை விட இங்கே மிகத் துரிதமாய் பெருகுகிறது; ஏனெனில் உழைப்பாளிகள் பலர் வயதுவந்தோராகவே இவ்வுலகில் நுழைகிறார்கள்; ஆயின்,  உழைப்புச் சந்தை எப்போதும் தட்டுப்பாடாகவே இருக்கிறது. உழைப்பின் வழங்கல்-வேண்டல் விதி தகர்ந்துவிடுகிறது. 

மூலதனத் திரட்டல் வளர்வதற்கேற்ப வேண்டாத தொழிலாளர்கள் உருவாவது என்னாகிறது? இன்றைய கூலித் தொழிலாளி நாளை சொந்தத்துக்கு வேலை செய்யும் சுயேச்சையான விவசாயி அல்லது கைவினைஞர் ஆகிறார். உழைப்புச் சந்தையிலிருந்து மறைந்து விடுகிறார். மூலதனத்துக்காக உழைப்பதற்கு பதில் சொந்தத்துக்கு உழைப்பவர்களும் முதலாளித்துவ கனவானகளின் செல்வத்தைப் பெருக்குவதற்கு பதில் தமது செல்வத்தைப் பெருக்கிக் கொள்வோருமான சுயேச்சைப் பொருளுற்பத்தியாளர்களாகக் கூலித் தொழிலாளர்கள் இப்படித் தொடர்ந்து மாறுவது உழைப்புச் சந்தையின் நிலைமைகள் மீது விபரீதமான பிரதிபலிப்பை ஏற்படுத்துகிறது. கூலித் தொழிலாளி மீதான சுரண்டல் கடுமை கேவலமான முறையில் குறைவாகவே இருந்து வருகிறது என்பது மட்டுமல்ல. இதற்கும் மேலே, கூலித் தொழிலாளியானவர் எதிலும் அளவோடிருக்கிற முத்லாளியைச் சார்ந்திருக்கும் சார்பு உறவை இழப்பதுடன் கூடவே, சார்பு எண்ணத்தையும் இழக்கிறார்.

அப்படியானால், முதலாளித்துவ எதிர்ப்பு என்னும் இந்த வியாதியை குடியேற்ற நாடுகளிலிருந்து போக்குவது எப்படி? நிலத்தையெல்லாம் பொதுச் சொத்தாய் இல்லாமல் ஒரேயடியில் தனிச் சொத்தாய் மாற்ற தயாராய் இருபார்களானால், இவர்கள் நிச்சயமாய் இந்த வியாதியை பூண்டோடு அழித்துவிடலாம். ஆனால் அத்தோடு குடியேற்ற நாடுகளும் அழிந்துவிடுமே! ஒரே கல்லில் இரு மாங்காய் விழுமாறு சூழ்ச்சி செய்தாக வேண்டும். அரசானது வேண்டல் வழங்கல் விதியைக் கருதாமலே செயற்கையான முறையில் விலை நிர்ணயிக்க வேண்டும். குடியேறிய தொழிலாளி நிலம் வாங்கி சுயேச்சை விவசாயியாக மாறும் அளவுக்குப் போதிய பணம் சம்பாதிக்க வேண்டுமானால், அதற்கு முன்னால் நீண்ட காலம் கூலிக்கு வேலை செய்யுமாறு நிர்பந்திக்கும் படியாக இந்த விலை அதிகமாய் இருக்க வேண்டும். மறு புறம், கூலித் தொழிலாளர்களுக்கு ஒப்பளவில் எட்டாத விலைக்கு நிலம் விற்பதிலிருந்து கிடைக்கும் நிதியம் --- புனிதமான வழங்கல்-வேண்டல் விதியை மீறி தொழிலாளர்களின் கூலியிலிருந்து பறிக்கப்படும் இந்த பண நிதியம் --- வளர்ந்து பெருகுவதற்கேற்ப, ஐரோப்பாவிலிருந்து குடியேற்ற நாடுகளுக்குள்  ஓட்டாண்டிகளை இறக்குமதி செய்யவும், இவ்வாறு முதலாளிகளுக்காக உழைப்புச் சந்தை நிறைந்திருக்குமாறு செய்யவும் அரசாங்கம் அந்த நிதியத்தைப் பயன் படுத்த வேண்டும். இந்த நிலைமைகளில், இவுலகம் யாவும் இனிதே நடைபெறும் இனிய புவனம் ஆகிவிடுகிறது.

குடியேற்ற நாடுகளில் பயன்படுமென்று நியமம் செய்யும் இந்த ஆதித் திரட்டல் முறையே ஆங்கிலேய அரசு பல்லாண்டு காலமாய் கடைப் பிடித்தது என்பது குறிப்பிடத் தக்கது.

ஒருபுறம் ஆண்டுக்காண்டு அமெரிக்காவிற்கு விரட்டப்படும் மனிதர்களின் வற்றாத வெள்ளப் பெருக்கு அமெரிக்க ஐக்கிய அரசின் கிழக்குப் பகுதியில் விட்டுச் செல்லும் வண்டல் படிவு அகலாமல் நிலைத்து விடுகிறது. அங்கே ஐரோப்பாவிலிருந்து வந்த குடியேற்ற அலை உழைப்புச் சந்தைக்கு மிக துரிதமாய் ஆட்களைக் கொண்டுவந்து சேர்தது. மறுபுறம் அமெரிக்க உள்நாட்டுப் போரின் விளைவாக தேசக் கடன் பூதாகாரமாய் பெருகியது; இதைத் தொடர்ந்து வரிச்சுமை அதிகரித்தது; கேடு கெட்ட நிதியாதிக்கப் பிரபுமார் தலையெடுத்தனர்; இரயில்வேக்கள், சுரங்கங்கள் முதலானவற்றில் ஊக வாணிப நிறுமங்கள் ஆதாயம் பெறுவதற்காகப் பொது நிலத்தில் பெரியதொரு பகுதி தாரை வார்க்கப்பட்டது; சுருங்கச் சொல்லின் மூலதன மையப்பாடு அதி வேகமாய் நடைபெற்றது. ஆகவே, மாபெரும் குடியரசு குடியேறும் தொழிலாளர்களின் சொர்க்க பூமியாய் இருந்த நிலை மறைந்தொழிந்தது. அங்கே, கூலிக்குறைப்பும் கூலித் தொழிலாளியின் சார்பு நிலையும் இன்றும் இயல்பான ஐரோப்பியத் தரத்தை நெருங்கி வரவில்லை என்றபோதிலும், முதலாளித்துவப் பொருளுற்பத்தி அசுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. பிரபுக் குலத்தோருக்கும், முதலாளிமார்களுக்கும் குடியேற்ற நாடுகளின் தரிசு நிலங்களை அரசாங்கம் வெட்கமின்றி தாரை வார்ர்கிறது.

நமது கருத்துகுரியதெல்லாம், பழைய உலகின் அரசியல் பொருளாதாரம் புதிய உலகத்தில்  கண்டுபிடித்து, கூரை மீதேறிக் கூவியறிவிக்கிறது அல்லவா, அந்த இரகசியமதான் --- முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறைக்கும் திரட்டல் முறைக்கும், ஆகவே முதலாளித்துவ தனியுடைமைக்கும் அடிப்படை முன் தேவையாய் அமைவது தனியாள் சுயமாய் சம்பாதித்த தனிச் சொத்தை ஒழிப்பதே, வேறு விதமாய்ச் சொன்னால் உழைப்பாளியின் உடைமையைப் பறிப்பதே ஆகும் என்ற இரகசியம்தான்.          

No comments:

Post a Comment